ராஸ் சார்கினின் நியுயார்க் டைம்ஸ் டீல் புக் என்கிற தினசரி நியுஸ்லெட்டர் மகா பிரசித்தம். அதன் வாசகன் என்கிற முறையிலும், ராஸ் சார்க்கினை தொடர்ச்சியாக வாசிப்பவன் என்கிற முறையிலும் இந்த புத்தகத்தில் முக்காலே முழுவாசி ராஸ் சார்க்கினின் தினசரி வேலை. நியுயார்க்கின் பெரிய உணவுவிடுதிகளில், பார்களில் ராஸ்கினை பெரு நிறுவனங்கள், இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர்கள் போன்றவர்களோடு பார்க்க முடியும். அங்கே இருந்து தான் இந்த புத்தகம் வந்திருக்கக்கூடும்.
அடுத்தவாரம் அமெரிக்காவில் "WallStreet:Money Never Sleeps" ரிலீஸாக போகிறது. இது 1984ல் வந்த பிரசத்தி பெற்ற "Wall Street" படத்தின் இரண்டாம் பாகம். மைக்கேல் டக்ளஸ் கார்டன் கெகோவாக வந்து சொல்லும் "Greed is Good" என்பது ஒரு பிரபலமான வசனம். விஷயம் என்னவெனில், ஆலிவர் ஸ்டோன் இந்த படத்தின் இயக்குநர் ராஸ் சார்க்கினோடு அமர்ந்து விஷயங்களை கேட்டுக் கொண்டு தான் இந்த படத்தினை இயக்கி இருக்கிறார்.
இத்தனைக்கும் ராஸ் சர்க்கின் 30களில் இருக்ககூடிய கொஞ்சம் ஸ்மார்ட்டான ஒரு பையன் ;)
பிற்சேர்க்கை: இந்த புத்தகத்தினை விட அமெரிக்க நிதி சீர்குலைவு வீழ்ச்சியினை தெள்ளத் தெளிவாக சொல்லும் இன்னொரு புத்தகம் Bailout Nation: How Greed and Easy Money Corrupted Wall Street and shook the world economy - எழுதியவர்: Barry Riholtz.
எத்தனையோ புத்தகங்கள் படித்திருப்போம். சினிமாக்கள் பார்த்திருப்போம். சிலருக்கு மன்னர் கால கதைகள் என்றால் கொள்ளைப் பிரியமாய் இருக்கும். அதிலும் திருப்பங்கள் நிறைந்து, சஸ்பென்ஸ் வேறு இருந்துவிட்டால்.. கேட்கவே வேண்டாம். இன்றும் கூட பொன்னியின் செல்வன் சக்கை போடு போடுவதற்காக அடிப்படையே நமக்குள் புதைந்து கிடக்கும் பழங்கால கதைக்கான ஏக்கங்களின் வெளிப்பாடு என்று தான் நான் கூறுவேன்.
புகைப்படங்களே இல்லாத அந்த பழங்காலத்திற்கு நாம் செல்ல முடியாத ஏக்கம் ஒரு புறம் என்றால்.. பண்டைய மக்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் இன்னொரு புறம். இவை தான் இப்படியான படைப்புகளின் வெற்றி என்றும் நம்புகிறேன்.
தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் நமக்கு முழுமையாக கிடைத்திருப்பவை மூன்று மட்டுமே. இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், சீத்தலைச் சாத்தானார் எழுதிய மணிமேகலை, திருத்தக்க தேவர் எழுதிய சீவக சிந்தாமணி. இதில் மணிமேகலை சிலப்பதிகாரத்தின் கதைத் தொடர்ச்சி.
இவை எல்லாம் செய்யுள் வடிவில் வடிக்கப்பட்ட இலக்கியங்கள். அருகில் ஒரு வாத்தியார் இருந்து நமக்கு சொல்லிக்கொடுக்காமல் எளிதில் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம். ஏனெனில் நமக்கான தமிழறிவும் அப்படித்தான் இருக்கிறது. பாடங்களை மொட்டை உறு செய்தால் தேர்வில் வெற்று பெற்றுவிடக்கூடிய கல்வி முறையில் வேறு என்ன எதிர் பாக்க முடியும்.
சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார்? திருத்தக்க தேவர் என்கின்ற சமணமுனிவர். இவரின் காலம் எது? கி.பி 2ம் நூற்றாண்டிலிருந்து 7ம் நூற்றாண்டுக்குள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.- என்ற ரீதியில் ஒருவரியில் விடையளிக்கும் அளவுக்கே எனக்கு இக்காப்பியங்கள் பற்றி தெரிந்திருந்தது.
எண்பதுகளின் மத்தியில் நூலகத்தில் சேர்ந்து வாசிப்பு பழக்கத்திற்கு வந்துவிட்டாலும், வாசிப்பு வசப்பட்டதென்னவோ தொண்ணூறுகளின் மத்தியில் தான். நூலகம் தவிர்த்து வெளியேவும் புத்தகங்களை தேடத்தொடங்கி இருந்த சமயம் அது. சென்னையில் அநுராகம் என்ற பெயரில் இயங்கிவந்த(இப்போதும் உள்ளது என நினைக்கிறேன்) பதிப்பகம் ஒன்று ரு.4.50க்கு நூல்கள் வெளியிட்டு வந்தது.
சோதிடம், சமையல் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள் வரை சகல விதமானவைகளையும் சிறு பிரசுரங்களாக, உரைநடை வடிவில் அவ்விலைக்கே கிடைக்க வழிசெய்தது. அப்படி அநுராகம் வெளிட்ட நூல்கள் வழிதான்.. தமிழின் தொன்மையான இலக்கியங்களை கதைவடிவில் அறிந்துகொண்டேன் நான். ஆனால்.. அவை முழுமையானதாக இருக்கவில்லை. பள்ளி பாடநூலில் சொல்லப்படும் கதை போலவே இருந்தது. அதுவும் 32 பக்கங்களுக்குள் எல்லாவற்றையும் சுருங்கச்சொல்லவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கிருந்தது. எனக்கோ செய்யுள் வழி இக்காப்பியங்களின் அடிப்படை கதைகளை தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தது. அந்த வகையில் அப்புத்தகங்கள் என் ஆரம்பகால வாசிப்புக்கு விதையாக இருந்தன என்றால் மறுப்பதற்கில்லை.
அதன் பின் மூல உரையை தேடி பயணப்பட்டபோதும் என்னால் முழுமையாக அவற்றை வாசிக்க முடியாமல் என் தமிழறிவு தடுத்தது. உரையாசிரியர்களின் உரையும் கூட துண்டு துண்டாகவே நின்றன. சரி இது சரிப்படாது என்று ஓடி வந்துவிட்டேன். சமீபத்தில் பழங்காப்பியங்களை உரைநடைவடிவில் கிழக்கு வெளியிட்டு இருந்தது. அவற்றை வாங்கிவிட்டேன். நான் முதலில் வாசிக்க எடுத்தது சீவக சிந்தமணி.
முதலில் கதை சுருக்கத்தை கூறிவிடுகிறேன். சச்சந்தன் என்றும் மன்னனுக்கு நெருக்கடியான காலகட்டத்தில் மகனாக பிறக்கிறான் சீவகன். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். சமண குருவான அச்சணந்தி என்பவரிடம் குருகுல கல்வி பயில்கிறான். சீவகன் அழகும் அறிவும் வீரமும் ஒருங்கே பெற்ற யுவனாக வளர்கிறான். தந்தையை ஏமாற்றிக் கொலை செய்து ஆட்சியை பிடித்த கட்டியங்காரனை பழிவாங்குவது தான் மீதிக் கதை. இடையிடையே சீவகன் எட்டு பெண்களை மணந்து கொள்கிறான். இப்படி பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், உறவுகளையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். முப்பது ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்யும் சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் மேற்கொள்கிறான். அவனோடு அவனது எட்டு மனைவியரும் துறவறம் மேற்கொள்கின்றனர். எட்டு திருமணங்களை சீவகன் செய்தாலும் காமக்களியாட்டங்களில் கதை பயணிக்காமலும் சீவகனை காமுகனாக காட்டாமலும் இப்படைப்பு இயற்றப்பட்டிருப்பதை இன்றைய நவீன எழுத்தாளர்கள் அறிந்துகொள்வது நல்லது என்று தோன்றுகிறது.
நாவல் வடிவ இந்நூலில் தொடக்கமே சுஜாதா கையாளும் பாணியான அதிர்ச்சியை கொடுக்கும் வரிகளில் தொடங்குகிறது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் நடை. படிக்க படிக்க சோர்வு ஏற்படுத்திவிடாத மொழி.
சீவகனின் பிறப்பில் தொடங்கி, அவனது வாலிப பருவம் என எல்லாமும் படுவேகமாக நகர்கிறது. இக்காலத்தில் அதிகம் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைப் பிரயோகங்களும் இடையிடையே இருக்கிறது. பழங்கால இலக்கியமென்பதால் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனாலும் கல்கி மாதிரியானவர்களின் எழுத்துக்களை அதிகம் படித்தறியாத வாசகவட்டம் இன்னும் இங்கே இருக்கிறது. அதனால்.. முன் பின் வார்த்தைகளை வைத்து சில இடங்களில் சொற்களுக்கு பொருள் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு சிறு குறிப்புகள் கொடுத்திருக்கலாம்.
உதா:
”மாலுமி! இன்னும் எவ்வளவு தூரம் நாம் போகவேண்டும்? என்ன நாம் கிளம்பி ஒரு மாதம் ஆகி இருக்குமா” சீதத்தன் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் மாலுமி முகத்தில் இருந்த கலவரம் அவரை பயமுறுத்தியது.
‘என்ன ஆயிற்று? ஏன் இந்த கலக்கம்?’
‘ஐநூறு காத தூரத்தைக் கடந்துவிட்டோம். ஏமாங்கத்தை அடைய இன்னும் ஒரு யோசனை தூரம் தான் இருக்கிறது. இப்போது பார்த்துத்தானா இப்படி ஆகவேண்டும்?’(பக்கம்.63)
இதில் காத தூரம், யோசனை தூரம் என்பது எவ்வளவு என்று எத்தனை பேரால் உணர்ந்துகொள்ள முடியும்? குத்துமதிப்பாக கணக்கு பண்ணிக்கொள்ள வேண்டியது தான் போல. அதுபோலவே சமணசமய கதையான இதில் அருகர் என்று ஒரு தெய்வத்தை பற்றிய செய்திகள் வருகின்றன. இந்த அருகர் குறித்து எங்கும் குறிப்பு படித்தது போல நினைவு இல்லை. இத்தெய்வம் குறித்து விவரணைகளோ, குறிப்போ இல்லாதது நூலின் குறையென எனக்கு படுகிறது.
மேலும் மூல ஆசிரியரான திருத்தக்கத்தேவர் பற்றிய குறிப்பு இல்லாததும், நாவலாசிரியரின் அனுபவக் குறிப்பு இல்லாததும் பெரிதும் வருத்தமே. அவை வாசகனை இன்னும் நூலோடு ஒன்றச்செய்யும் விசயமாக இருந்திருக்குமென்பது என் எண்ணம்.
நூலாசிரியர் ராம்சுரேஷின் உழைப்பும், எழுத்தாற்றலும் பல இடங்களில் பளிச்சிடுகிறது. காட்சியின் விவரிப்புகள் அப்படியே நம்மையும் அக்களத்திற்குள் அழைத்துச்செல்லுகின்றன. சினிமா பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. (சீவகன் கேரக்டரில் எனக்கு மனதிற்குள் ஓடிய உருவம் கருப்பு வெள்ளை காலத்து ஜெமினி )
செய்யுள் விருத்தங்களாக உள்ள எழுத்துக்கள் விரிவான உரைநடையாக மாறும்போது என் போன்ற பாமரர்களும் இது போன்ற இலக்கியங்களைச் சுவைக்க முடிகிறது. இது போன்ற புது முயற்சிகளுக்காக நன்றி பத்ரி & பாரா!
பழந்தமிழ் காப்பியங்களை படிக்க விரும்புகின்றவர்களுக்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும். உரைநடையில் படிக்கும் போதே இவ்வளவு சுவையாக இருக்கும் நூல், செய்யுள் வடிவில் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் இதைப் படிக்கும் பத்தில் ஒருவருக்காவது வரும் என்பது நிச்சயம்.
–
நூல்: சீவக சிந்தாமணி- (நாவல்)
நாவல் வடிவ ஆசிரியர்- ராம் சுரேஷ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம். பக்கம்: 256
விலை: ரூபாய்.125/-
–
இணையச்சுட்டி:- https://www.nhm.in/shop/978-81-8493-448-9.html
–
ஆசிரியர் குறிப்பு: ராம் சுரேஷ் 2004ல் இருந்து இணையத்தில் பினாத்தல் சுரேஷ் என்ற பெயரில் எழுதி வருகிறார். )
|
இத்தொடரின் பிற பகுதிகளைப் படிக்க: ‘பனுவல் போற்றுதும்’
நெருக்கமான நண்பர்களிடம் இருந்தும் கூட சிலசமயம் தொலைபேசி அழைப்புகள் வரும்.
“ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, பொ, பெள லே ஆரம்பிக்கப்பட்ட நல்ல பேராச் சொல்லுங்க!”
“ஆம்பிளைப் பிள்ளையா? பொம்பளைப் பிள்ளையா?”
“பொம்பளைப் பிள்ளைதான்” அதில் ஒரு அலட்சியத் தொனியும் அங்கலாய்ப்பும்.
“உங்களுக்கு ஆரு?”
“தம்பிக்க மக… சோசியரு இங்கிலீசு பி-யிலே தொடங்கப்பட்ட பேரா வய்க்கச் சொல்லுதாரு!”
“ ‘பி’ண்ணா பூனாவா, பாம்பேயா?”
“பி ஃபார் பொட்டேட்டோ”
“ஓ அது சரி. பிள்ளை என்ன நச்சத்திரம்?”
“அது தெரியாதுல்லா!”
“அதும் அப்பிடியா? நீங்கோ பிள்ளைக்கு அப்பனைப் பெத்த ஆத்தா பேரு, அம்மையைப் பெத்த ஆத்தா பேர் வய்க்க மாட்டேளா?”
“அது வளக்கமில்லே பாத்த்துக்கிடுங்க”
“எத்தனை எளுத்திலே வேணும்?”
“ரெண்டு அல்லது மூணு எளுத்து. கூடிப்போனா நாலு எளுத்து”
“ஒரு எளுத்து ஆகாது?”
“அது வேண்டாம்” ஒரு வேளை “பூ” என்று வைத்துவிடுவேனோ என்று அஞ்சியிருக்கலாம்.
“ம்… சரி… விஜயா பதிப்பகத்திலே கேட்டா, ஆண்-பெண், இந்து - இஸ்லாம் - கிறிஸ்துவம், முற்போக்கு, தனித்தமிழ் பெயரு வைக்க நல்லா தடிப் பொஸ்தகமா தருவாங்க…”
“அதெல்லாம் வேண்டாம்… நீரே சொன்னாப் போரும்”
நெருங்கிய இலக்கிய நண்பராக இருப்பார். பகைத்துக்கொள்ள இயலாது. நான் பாட்டுக்குத் திண்டுக்கு முண்டு ஏதும் சொன்னால் வெள்ளாளத் திமிர் எனக் கட்டுரை எழுதவும் ஆகும்.
“சரி கொஞ்சம் சமயம் கொடுங்க… யோசிச்சுச் சொல்லுகேன்”
“சரி அண்ணாச்சி, காலம்பற கூப்பிடுகேன்”
இந்த உரையாடல் நடக்கும்போது இரவு பத்தரை மணியாக இருக்கும். இனி விடிவதற்குள் ‘P’யில் தொடங்கும் பெண்பாற் பெயர், 2 முதல் 4 எழுத்துக்குள் யோசிக்க வேண்டும். அதுவும் நண்பர் பகுத்தறிவு, முற்போக்கு, தனித்தமிழ்ப் பாசறை எனில் சாமிப்பெயர், மரபுப்பெயர் ஆகாது. பரமேஸ்வரி, பகவதி, பச்சை நாயகி என யோசிக்க இயலாது. உச்சரிப்பில் Bயும் வரலாகாது. நாமே விஜயா பதிப்பகத்துச் சிதம்பரத்துக்கு ஃபோன் செய்யலாம் எனில் கடை சாத்தி இருப்பார்கள். இனி காலை ஒன்பது மணிதான். வேலாயுத அண்ணாச்சி ஊரில் இருந்தால் ஒரு புத்தகமே ஆனாலும் காலை ஏழுமணிக்குத் திறந்து எடுத்துத் தருவார். சிதம்பரத்திடம் அதுவும் நடக்காது. ஒரு எழுத்தாளனாக இருப்பதில் எத்தனை துன்பம் பார்த்தீர்களா? பிறந்து, வளர்ந்து, உண்டு, படித்து, வேலைபார்த்து, தாம்பத்யம் நடத்தி, சீரியல் - சினிமா பார்த்து கொடுங்கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் ஓர் அற்ப மானுட சீவனுக்கு - விபத்தில் மாண்டால் இரண்டு இலட்ச ரூபாய் நஷ்ட ஈட்டுக்குத் தகுதியானவருக்கு - பெயர் வைக்க, எய்ட்ஸுக்கு மருந்து காணும் முயற்சி போல் தம்பதியர் உழைக்கும்போது, பல நூறு ஆண்டுகள் சீவித்திருக்கப் போகிற - சீவித்திருக்குமா என்பதோர் உப கேள்வி - புத்தகத்துப் பெயரிட எத்தனை சிரமப்பட வேண்டும்?
நீளமாக இருந்தாலும் மலையாளத்தில் அற்புதமாய்த் தலைப்பு வைப்பார்கள், சிறுகதை, நாவல், நாடகத்துக்கு. பி.கெ.பாலகிருஷ்ண பிள்ளை எழுதிய ‘இனி ஞான் உறங்கட்டெ?’ எனும் நாவலை சாகித்ய அகாதமிக்காகத் தமிழாக்கம் செய்த, தமிழின் அற்புதமான சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான ஆ.மாதவன் பட்டபாடு எனக்குத் தெரியும். பாரதப்போர் முடிந்த பிறகு, வெஞ்சினம் ஈடேறி வெற்றிக் கனிக்குப் பிந்தைய விரக்தி, உபபாண்டவர் மரணம் ஈந்த சோகம், அலுப்பு, களைப்பு, சோர்வு யாவும் தொனிக்க திரெளபதி கேட்பதானது அந்தத் தலைப்பு. கெஞ்சல் தொனியுடனும் விடுபட முயன்றும், ‘இனி ஞான் உறங்கட்டெ?’. திரெளபதியின் உறக்கம் எனத் தொடங்கி, தொடர்ந்து பல தலைப்புகள் பரிசீலித்து, ‘இனி ஞான் உறங்கட்டும்’ என்று நிலைத்தார் ஆ.மாதவன். எனக்கும் அதில் கொஞ்சம் பங்குண்டு. ஆனால் இருவருக்குமே நிறைவில்லாத தலைப்பு. யோசித்து, மேலும் பொருத்தமாக ஒரு தலைப்புச் சொல்லுங்கள், ஒரு சவால் எனக்கொண்டு.
உலகத்து நாடகங்களில் பல, கருத்தாழம் மிக்க தலைப்புகள் கொண்டவை. உங்களுக்கு நினைவிருக்கும் மலையாளத்து தோப்பில் பாசி நாடகத் தலைப்பு ‘நிங்ஙள் என்ன கம்மூனிஸ்ட் ஆக்கி’. வேறொரு மலையாள நாடகத் தலைப்பு ‘கிறிஸ்துவின்ட ஆறாம் திருமுறிவு’. கிறிஸ்துவை சிலுவையில் அறையும்போது ஆணியடித்து ஆழமான காயங்கள் ஏற்படுத்திய இடங்கள் ஐந்து. அந்த நாடகம் ஆறாவது ஆணி பற்றிக் குறிப்புணர்த்துவது. முறிவு எனில் காயம், திரு என்பது சிறப்பு அடைமொழி.
பரபரப்பாக அந்தக் காலத்தில் பேசப்பட்ட பஞ்சாபி நாடகங்களின் தலைப்புகளே நகைச்சுவையுடன் இருந்தன. ‘சடீ புட்டேனு ஜவானி’ எனும் நாடகத் தலைப்பின் தமிழ்ப் பெயர்ப்பு என்றால் ‘கிழவனுக்கு வாலிபம் ஏறிவிட்டது’ எனலாம். இன்னொரு தலைப்பு, ‘ஸாலி ஆதே கர்வாலி’. தமிழில், ‘மைத்துனி பாதி வீட்டுகாரி’ எனலாம். எங்கள் ஊரில் ஒரு சொலவம் உண்டு. ‘அண்ணன் பொண்டாட்டி அரைப் பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி’ என்று. அதுபோல.
ஆங்கில நாடகத் தலைப்பு, ‘Waiting for Godart’ஐ மறந்திருக்க மாட்டீர்கள். பாதல் சர்க்கார் எனும் வங்காள நாடகத் தலைப்பு ‘ஜுலுஸ்’. எனில் ‘ஊர்வலம்’. பரீக்ஷா ஞாநி, அதிலிருந்துதான் தனது நாடகத் தலைப்பான ‘பலூன் ஊர்வலம்’ பெற்றிருப்பார். சுரேஷ்வர்மாவின் இந்தி நாடகம் ‘சூரஜ் கா அந்திம் கிரண் சே சூரஜ் கா பஃஹ்லே கிரண் தக்’ என்பது தமிழில் மொழிபெயர்ப்பாகி வந்தது ‘சூரியனின் கடைசிக் கிரணத்தில் இருந்து சூரியனின் முதல் கிரணம் வரை’. நாடகத்தைப் பார்த்தவன், வாசித்தவன் எனும் ரீதியில் எனக்கு அந்தத் தலைப்பு என்றுமோர் மயக்கம். ‘சாந்த்ததா, கோர்ட் சாலு ஆஹே’ என்பது மராத்திய நாடகத் தலைப்பு. ‘அமைதி காக்க. நீதிமன்றம் நடக்கிறது’ என்று உத்தேசமாகச் சொல்லலாம். இன்னொரு மராத்தி நாடகம், ‘மோகன் ஜோஷி ஹாஸிர் ஹோ?’ பொருள், ‘மோகன் ஜோஷி ஆஜராகி இருக்கிறீரா?’
முன்பு அமோல் பாலேகர், அவர் மனைவி சித்ரா பாலேகர் கிராமத்து நிலப்பிரபுத்துவக் கணவன் - மனைவியாகவும் ஸ்மிதா பாட்டில் குழந்தைப் பேறில்லாத வைப்பாட்டியாகவும் நடித்த மராத்தி சினிமா ஒன்று வந்தது. முப்பது ஆண்டுகள் இருக்கும். மும்பாயில் ஞான.ராஜசேகரனுடன் சேர்ந்து பார்த்த அபூர்வமான படங்களில் ஒன்று. மக்கட்பேறு வேண்டி கிராமத்து உக்கிர தேவதைக்கு பத்து வயதுச் சிறுமியைப் பலி கொடுக்கும் படம். புணே பக்கத்துக் கிராமம் ஒன்றில் நடந்த சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டது. பலி செய்து கிண்ணத்தில் ஏந்திய சிறுமியின் ரத்தத்தைப் பெண் தெய்வத்துக்கு தெளிக்கும் காட்சியில் வாந்தியைக் கட்டுப்படுத்தப் பிராயாசைப்பட வேண்டியிருந்தது. பின்னொரு நாளில், வொர்லி NFDC அலுவலகத்தில், தமிழ்ச் சிறுகதை, நாவல்களில் முக்கியமானவரான பூமணியின் சினிமாத் தயாரிப்புக்கான உதவித் தொகை பற்றி விசாரிக்க NFDC தலைவராக இருந்த அமோல் பாலேகரைச் சந்தித்து உரையாடியபோது, அந்த மராத்தி சினிமா பற்றி பாராட்டிச் சொன்னேன். படத்தின் தலைப்பு ‘அக்ரீத்’. எனக்குத் தெரிந்த தமிழில் அதை ஒற்றைச் சொல்லில் பெயர்க்க இயலாது. வேண்டுமானால் ‘எது நடந்திருக்கக் கூடாதோ அது நடந்து விட்டது’ எனலாம்.
பால்சக்கரியாவின் சிறுகதை ஒன்றின் தலைப்பு, தமிழில் ‘ஏசுபுரம் பப்ளிக் லைப்ரரியைப் பற்றியதோர் குற்றச்சாட்டு’. காக்கநாடனின் சிறுகதை என்று நினைவு, தலைப்பு ‘சொர்க்கத்துக்கு ஒரு அடியீடு மட்டும்’. இந்த சந்தர்ப்பத்தில் சா.கந்தசாமியின் சிறுகதைத் தலைப்பை என்னால் நினைக்காமல் இருக்க இயலாது. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’. பின்னர் அஃதோர் குறும்படமாக வந்தது.
எனக்குப் பிடித்த சில மொழிபெயர்ப்பு நாவல்களின் தலைப்புகள், ‘நீலகண்டப் பறவையைத் தேடி’, ‘கங்கைப் பருந்தின் சிறகுகள்’ போன்றவை. நேஷனல் புக் டிரஸ்ட் மொழிபெயர்த்து வெளியிட்டவை.
ஒரு புத்தகத்தின் முகம் தலைப்பு. புத்தகத்தின் பாடுபொருளைத் தலைப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, பூடகமாகவோ கோடி காட்ட வேண்டும். வாசக மனத்தைக் கவர்வதாக, யோசிக்க வைப்பதாக, கற்பனைக்கு இடமளிப்பதாக, கவித்துவத்துடன் இருக்க வேண்டும். நேரடியான தலைப்புகள் கவர்ச்சி அற்றன, வாசக வரவேற்பைப் பெறாமற் போயின எனக் கூறவரவில்லை ஈண்டு.
‘Old Man And The Sea’ எனும் எளிமையான தலைப்பைத் தனது நாவலுக்குச் சூட்டுமுன் எர்னஸ்ட் ஹெமிங்வே நூற்றுக்கும் மேற்பட்ட தலைப்புகளை யோசித்ததாகச் சொல்வார்கள்.
ச.து.சு.யோகியார் அதைத் தமிழில் பெயர்த்தபோது ‘கடலும், கிழவனும்’ எனப் பெயர் சூட்டினார். சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்த எம்.எஸ் மொழிபெயர்ப்பு ‘கிழவனும் கடலும்’ எனத் தலைப்பிட்டது. இரண்டுக்கும் உள்ள நுட்பமான தொனி வேறுபாட்டை நாம் கருத்தில் கொள்ளலாம்.
சா.கந்தசாமியின் நாவல் தலைப்புகளில் சிறப்பானது ‘அவன் ஆனது’. இந்தத் தலைப்பை ஆங்கிலத்தில் பெயர்க்க யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். இந்தத் தலைப்பைச் சூட்டியவர் ஞானக்கூத்தன் என்று எனக்கு யாரோ சொன்னார்கள். அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக்கோடு’, நகுலனின் ‘நினைவுப் பாதை’, எஸ்.செந்தில்குமாரின் ‘முறி மருந்து’ எனும் தலைப்புகள் என்னை வசீகரித்தவை.
கவிதைத் தொகுப்புகள் சிலவற்றின் தலைப்புகள் சில பிரமிக்க வைப்பவை. எனது முதல் மதிப்பெண் யூமா வாசுகியின் ‘அமுத பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’. தலைப்பே ஒரு கவிதை.
பிரான்சிஸ் கிருபாவின் ‘நிழலன்றி ஏதுமற்றவன்’, தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’, சமயவேலின் ‘காற்றின் பாடல்’, சக்தி ஜோதியின் ‘நிழல் புகும் சொற்கள்’, தாணு பிச்சையாவின் ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ உடனடியாக நினைவுக்கு வரும் சில.
ஜெயமோகனின் சிறுகதைத் தலைப்பு ‘திசைகளின் நடுவே’, பா.திருச்செந்தாழையின் ‘ஆண்கள் விடுதி: அறை எண் 12’, அழகிய பெரியவனின் ‘திசையெல்லாம் அவர்கள் கொண்ட கிராமம்’, ஜே.பி.சாணக்கியாவின் ‘உடைந்த புல்லாங்குழல்’ வேறுபட்ட தலைப்புகள்.
நின்று நிதானமாக யோசிக்க வைத்து, கற்பனையின் வெளியை விரித்து, நல்ல கவிதை ஒன்றினை வாசித்த அனுபவத்தை ஒரு தலைப்பே தந்துவிடுவதுண்டு.
கோவையைச் சேர்ந்த இளம் படைப்பாளி கனகலட்சுமி, கால்செண்டர் ஒன்றில் வேலை பார்ப்பவர். மேடைப் பேச்சாளர், அவ்வப்போது எழுதுகிறவர். கிராமத்துச் சூழலில் பிறந்து வளர்ந்து, கால் செண்டர்களில் வேலை பார்க்கும் இளம்பெண்களின் தொழில் ஒவ்வாமை பற்றி எழுதிய நாவல் விரைவில் வெளியாக உள்ளது. என்னிடம் சில தலைப்புகள் சொன்னார். அவற்றுள் ஒன்று ‘பேச்சரவம் கேட்டிலையோ?’. அந்தத் தலைப்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனின் நூலொன்று உண்டு என்றேன். ‘நடுநிசி’ என்றார். சுந்தர ராமசாமியின் கவிதைத் தலைப்பொன்று ‘நடுநிசி நாய்கள்’ என்றேன்.
‘காசும் பிறப்பும்’ என்றொரு தலைப்பு ஓடியது என் மனதில். ஆனால் அதற்கொரு தெளிவுரை எழுத வேண்டும் கையோடு.
‘என்பிலதனை வெயில் காயும்’ என்று என் இரண்டாவது நாவலுக்குத் தலைப்பு வைத்தபோது வண்ணதாசன் எனக்கு எழுதினார் - ‘இந்தத் தமிழ் மீது யாருக்கும் கோபமில்லை. எளிமையாக வெயில் என்றே வைத்திருக்கலாம்’ என. அந்த நாவல் மூன்றாம் பதிப்பு வந்தபோது, அட்டை வடிவமைத்தபோது, பிழையாகத் தலைப்பு ‘என்பிதலனை வெயில் காயும்’ என மாறிவிட்டது. என் மனைவிதான் கண்டு சொன்னாள். வேறு எவருமே கவனிக்கவில்லை என்பதோர் வாழ்நாள் சோகம். வண்ணதாசனின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு அவர் வைத்த பெயர் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’. அந்தப் புத்தகத்தின் தலைப்பும், பரந்தாமனின் தயாரிப்பும் என்றும் நினைவில் நிற்பவை.
எனது ஆறாவது நாவலின் தலைப்பு ‘எட்டுத்திக்கும் மதயானை’. சமீபத்தில் ‘Against All Odds’ ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு வந்தது, கிழக்குப் பதிப்பகம் வெளியீடு. அந்தத் தலைப்பை நான் இந்தியத் தொன்மங்களில் இருந்து எடுத்துக் கொண்டேன். திசையானைகள் எட்டும் பூமியைத் தாங்குகின்றன என்பது தொன்மம். ‘திசையானை மருப்பொசித்துச் செருச் செய்து’ என்றொரு பாடல்வரி உண்டு. ஆண்டாள், ‘மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக்’ கேட்டவள் ஆழி வெண் சங்கிடம். திசையானைகள் எட்டும் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம், சார்வ பெளமம், சுப்ர தீபம் எனும் நாமங்கொண்ட களிறுகள். அவற்றின் பிடி யானைகளுக்கு அப்பிரமை, கபிலை, பிங்களை, அனுபை, தாம்ரபரணி, சுப தந்தி, அங்கனை, அஞ்சனாவதி என்பன நாமங்கள்.
திசையானைகளைப் போரிட்டு, அவற்றின் தந்தங்கள் மார்பிலே பாய்ந்து முறிந்ததைப் பிடுங்கி வீசாமல், அவற்றில் நவமணிகள் பதித்து ஆபரணம் போலக் கொண்டு நடந்தான் இராவணன் என்றொரு தொன்மம் உண்டு. கம்பன் இராவணனை, ‘வாரணம் பொருத மார்பும் வரையினை எடுத்த தோளும் நாரத முனிவர்க்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்’ என்பான். வாரணம் எனில் யானை, வரை எனில் மலை, ஈண்டு கைலாயம்.
பூமி உருண்டையைத் திசை எட்டில் நின்று சுமக்கும் அட்ட திக்கயங்களுக்கும் மதம் பிடித்தால் எனும் கற்பனையே நாவலின் தலைப்பு ‘எட்டுத் திக்கும் மதயானை’.
சமீபத்தில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுத் திசையில் நான் தலைவைத்துப் படுக்கவில்லை. ‘அழையாத வீட்டில் நாய் நுழைந்தாற்போல’ எனும் பழமொழிதான் காரணம்.
ஆனால் தினமும் தொலைக்காட்சிச் சேனல்களில் கொண்டாட்டங்கள், கவியரங்குகள், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் எனப் பார்த்தேன். செம்மொழி செல்லும் திசையறிய வேண்டாமா?
பார்க்கும்போது, பக்கத்தில், சின்னத் தட்டத்தில் நறுக்கிய எலுமிச்சம்பழத்தின் பாதியும், உப்பும் வைத்திருந்தேன். வாந்தி வரும் சமயம் நாக்கில் தடவிக்கொள்ள.
செம்மொழி மாநாடு முடிந்த பிறகு தினமும் புத்தகக் கண்காட்சி போனேன். அங்கு நான் வாங்கிய பல நூல்களில் ஒன்று கவிஞர் விக்ரமாதித்யனின் ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’.
கவிதைகள் குறித்த, தன் வரலாற்றுக் கட்டுரைகளும் நேர்காணல்களும். சந்தியா பதிப்பகம் நேர்த்தியாகத் தயாரித்தது. இருநூறு பக்கங்கள், தொண்ணூறு ரூபாய் விலை. இந்தத் தரத்தில், அளவில் தயாரிக்கப்படும் புத்தகங்கள் 200 பக்கம் என்றால் நூற்றெண்பது ரூபாய் விலை வைப்பதையும் நாம் பார்க்கிறோம். கவிஞர்கள் உரைநடை எழுத வரும்போது, அதற்கெனத் தனியான வாசனை உண்டு. விக்ரமாதித்யன், தேவதேவன் சிறுகதைகள், ராஜசுந்தர ராஜன் கட்டுரைகள் சில எடுத்துக்காட்டுகள். மொழியைக் கூர்மையாகக் கையாளத் தெரியாதவன் கவி எழுதுவதற்கு தகுதியற்றவன். கவிஞர்களின் உரைநடைக்கு என மொழி வசீகரம் உண்டு.
கவிஞர்கள் சிறப்பாகச் சிறுகதை எழுதுகிறார்கள் என்று சொல்வது அவர்தம் கவிதை பற்றிய திறனாய்வு அல்ல.
இந்தத் தொகுப்பில் விக்ரமாதித்யன் தனது வாழ்க்கைச் சூழல், கவிதைகள் பிறந்த சூழல், தனது கவிதைகள் பற்றிய மதிப்பீடுகள் எனப் பலவற்றையும் பாசாங்கு இல்லாமல் பதிவு செய்கிறார். தனது கவிதைகளையே விலகி நின்று அவதானிக்கும் அவரது பார்வை நேர்மையானது. தனது கவிதைகளில் குறைந்தது முப்பதாவது சிறந்த கவிதைகளாக நிற்கும் என்பது அவரது கோரிக்கையல்ல, எதிர்பார்ப்பல்ல, ஏக்கமும் அல்ல, அவதானிப்பு.
நான் எழுதும் இந்தக் கட்டுரை, இந்தப் புத்தகத்தை அறிமுகம் செய்ய அல்ல. அதன் தலைப்பை அறிமுகம் செய்ய. என்ன நுட்பமான தலைப்பு பாருங்கள். ‘எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு’.
கவிஞனின் மொத்த வாழ்க்கையை, கவிதைகளின் மொத்தப் போக்கை இந்தத் தலைப்பு குன்றேறி நின்று கூவுகிறது. அந்த வரியே ஒரு முழுக்கவிதை. ஒரு கவிஞனால் மட்டுமே இவ்விதமானதோர் தலைப்பை சிந்திக்க முடியும்.
கவனியுங்கள் - எனக்கும் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு அல்ல. எனக்கு என் தெய்வத்துக்கும் இடையேயான வழக்கு. இங்கு என் எனும் சொல் விரிக்கும் பொருள் அனந்தம்.
தெய்வத்தை diswon செய்வதல்ல. முன்னிறுத்தி சட்டையைப் பிடித்து உலுக்கி கேள்வி கேட்பது. இதில் வாதி கவிஞன், பிரதி தெய்வம். தீர்ப்பெழுதும் நீதிபதி யார்? அதுவும் பிரதியான தெய்வம்தான். பிரதியும், நீதிபதியும், சாட்சியும் ஆன தெய்வம்.
இன்றைய அரசியல் சூழலுக்கு இதைச் சற்று மாற்றுப் போட்டு யோசித்தால் சுவாரசியமாக இருக்கும். வாதி மக்கள். பிரதியும், சாட்சியும், தீர்ப்பு எழுதுகிறவனும் ஆள்கிற வர்க்கம். இது சமகாலத் தேய்வு. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கைப் பேசுகிறார் கவிஞர்.
மொத்த வழக்கின் போக்கே, என் தெய்வம் எனும் பிரயோகத்தில் இருக்கிறது. என் தெய்வம் எனும்போது, அந்தத் தெய்வம் கலாப்ரியாவின் தெய்வம் இல்லை, தேவதேவனின் தெய்வம் இல்லை, சுகுமாரனின் தெய்வம் இல்லை, மனுஷ்யபுத்திரனின் தெய்வம் இல்லை, கல்யாண்ஜியின் தெய்வம் இல்லை, யவனிகா ஸ்ரீராம் தெய்வம் இல்லை, விக்ரமாதித்யனின் தெய்வம்.
அதெப்படி, ஆளுக்கொரு தெய்வமா என்று கேட்பீர்கள். ஆமென்பேன் நான். தெய்வம் தேவைக்கு, சூழலுக்கு, முறையீட்டுக்குத் தகுந்தாற் போன்றது. ஆதிமலைவாசியின் தெய்வமும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் பொது மேலாளர் தெய்வமும் ஒன்றல்ல. சிவனை, திருமாலை, விநாயகனை, முருகனைப் பொருட்படுத்தாத கிராமத்தான் காடனையும் மாடனையும் துணைக்கு அழைத்துப் பேசுகிறான்.
விக்ரமாதித்யன் கட்டுரைகளிலேயே நெறிப்படுத்தப்பட்ட பெருந்தெய்வங்கள் பற்றியும் சுடலைக்கார மாடனைப் பொன்ற தெய்வங்கள் பற்றியும் குறிப்புகள் உண்டு.
மற்றெந்தக் கலைஞனை விடவும் ஒரு கவிஞன்தான் இந்த வழக்கைப் பேச முடியும். எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நிர்மால்யம்’ சினிமாவின் வெளிச்சப்பாடு போல. ஒரு வகையில் கவிஞன் என்பவன் உபாசகன். வெளிச்சப்பாடு. உபாசனா தெய்வத்தின் அருட்கனம் தாங்காமல் துவண்டு உழல்பவன்.
விக்ரமாதித்யன் எனும் கவிஞனின் வாழ்நாள் சாதனைக்குத் தலைப்பாக வாய்த்த இந்தக் கவிதை வரி ஒன்றே போதுமானது என்றெனக்குத் தோன்றுகிறது.