Home / Books List 1

Books List 1


அரசூர் வம்சம்!

நூலின் பெயர் : அரசூர் வம்சம்!

நூல் ஆசிரியர் : இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

* - * - * - * - * - * - * - * -

சாதாரணமாக ஐநூறு பக்கப் புத்தகத்தை என்னால் இரண்டு நாட்களில் வாசித்து விட முடியும். வேலை வெட்டி எதுவுமில்லையென்றால் தூங்காமல் கொள்ளாமல் கசாப்புக்கடை ஆடுகளின் தலையை எண்ணாமல் வெட்டுவது மாதிரி ஒரே நாளில் ஆயிரம் பக்கங்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க முடியும். இரா.முருகனின் அரசூர் வம்சத்தை முடிக்க இருபது நாட்கள் ஆகிவிட்டது. முருகனின் மொழி மிக எளியது, இக்காலக்கட்டத்திற்கு புதியது அல்லது ரொம்பவும் பழையது என்றாலும் புதினத்தில் ஏற்றியிருக்கும் கனத்தின் மீதான புரிதலுக்காக ஒவ்வொரு பக்கத்தையும் இருமுறையாவது மீள்வாசிப்பு செய்ய தூண்டுகிறது. எத்தனை முறை வாசித்தாலும் சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை என்பதால் முருகனுக்கு அரோகரா.

காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிச்செல்ல கால இயந்திரம் விஞ்ஞானிகளால் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு இது மாந்திரிக யதார்த்தவாதம் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் பனியன் சகோதரர்கள் அவ்வப்போது முன்னும் பின்னுமாக வினோத நாலுசக்கர கருப்பு வண்டியில் போய்வருகிறார்கள்.

என்றோ மரித்துப்போன அழகுப் பெண்களை மந்திரத்தால் வரவழைத்து கதாபாத்திரங்களை கூட விடுவதும், சுகிக்க விடுவதும் எழுத்தாளனுக்கு ஆகாத காரியமல்ல. தொங்கிப்போன ராணியோடு வம்சவிருத்திக்காக மட்டுமே கூடும் ராஜா, செத்துப்போன புஷ்டிமீசைக் கிழவன் சேடிப்பெண்ணை வாய் உபச்சாரத்துக்கு வற்புறுத்துதல், குருக்கள் பெண்ணோடு சாமிநாதனின் சம்போகம், அம்பலப்பழை சகோதரர்கள் அர்த்த ராத்திரியில் தத்தம் மனைவிகளை சரியாக கண்டறிந்து எழுப்பி தனியறைக்கு அழைத்துச்சென்று புணர்தல், கப்பலில் துரைசானிகள் மதுமயக்கத்தில் சாமிநாதனை கூட்டாக வன்புணர்தல் என்று இந்நவீனம் முழுக்க ஊடே தொடர்ந்து பரவியிருக்கிறது புணர்ச்சி வாசனை.. புகையிலை வாசனையையும், ஏலம் கிராம்பு வாசனையையும் தாண்டி.

நினைவுகளோடே நிம்மதியாய் பயணிக்கும் வேளையில் நனவு யதார்த்தத்தையும், இருத்தலுக்கான சமரசங்களையும் கடமையாக சுட்டிக்காட்டுகிறது நாவல். இறந்த காலத்தின் எச்சமாய் நிகழ்காலம் இருப்பதுபோல நிகழ்காலத்தின் எச்சமாய் எதிர்காலம் அமையும். ‘அந்த காலம் மாதிரி வருமா?’ என்று எந்த நூற்றாண்டிலும் எவனாவது ஒரு கிழவன் முனகிக் கொண்டிருக்கத்தான் போகிறான்.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணர்களையும், அவர்களது அச்சுப்பிச்சு அசட்டு நடைமுறைகளையும் கேலியும், கிண்டலுமாக அணுகுகிறார் நூலாசிரியர். இருத்தலைக் காத்துக்கொள்ள செய்துகொண்ட சமரசங்களான புகையிலை வியாபாரம், மதம் மாறுதல் ஆகியவற்றை ஆசிரியர் ஆதரிக்கிறாரா, மறுதலிக்கிறாரா, கேலி செய்கிறாரா என்பதை அவரது தொனியில் அறிய கடினமாவும் இருக்கிறது.

இத்தனைக்கும் சங்கரனும், சாமிநாதனும் அவருடைய கொள்ளுத் தாத்தாக்களாக கூட இருக்கலாம் என்பதை அவரது முன்னுரையில் அறியமுடிகிறது. காரைக்குடிக்கு ரொம்ப பக்கம் என்பதாலும், நூலாசிரியர் கொடுக்கும் சுலப க்ளூக்கள் சிலவற்றாலும் சிவகங்கைச்சீமை தான் அரசூர் என்று சுலபமாக கணிக்க தோன்றுகிறது. சாமிநாதனை தீவைத்து யாராவது கொன்றார்களா (ராணியின் வேலையா) அல்லது யதேச்சையாக பிடித்த தீயா என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் முருகன். ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளியது யாரென்றே இன்னமும் யூகிக்க சோம்பேறித்தனம் படும் என்னை மாதிரி வாசகர்களுக்கு இது பெருத்த சோதனை. கருடகர்வ பங்கம்.

இந்நூலை வாசித்தபிறகு தான் தன்னுடைய இடத்தை தமிழில் நிரப்பப் போகும் எழுத்தாளராக இரா.முருகனை சுஜாதா கணித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் தமிழின் அதிமுக்கிய நாவல்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், அப்பட்டியலில் இடம்பெறத் தகுதியானதே ‘அரசூர் வம்சம்’. தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள் மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம். இந்நாவலின் கனமும், நடையும், லாஜிக்கும் புரிபடாதவர்களுக்கு இது மொக்கையாகவும் தோன்றக்கூடும்.

நாவல் முடியும்போது எல்லாம் சுபம் தான். ஆனாலும் எங்கோ ஏதோ நிரப்பப்படாமல் வெறுமை சூழ்கிறது. நாவலாசிரியர் தன் வாசகனுக்கு முன்வைக்க விரும்பியது இந்த வெறுமை தானென்றால் அரசூர் வம்சத்தின் மன்னனாக அவருக்கே க்ரீடம் சூட்டி விடலாம்.

அரசூர் வம்சம் - அமானுஷ்ய அனுபவம்!

நினைவிற்கு எட்டியவரை  ஓர் அரசியல் சுயசரிதை   ஜோதிபாசு; தமிழில்: வீ.பா. கணேசன்

தொடர்ந்து ஐந்து முறை வெற்றிபெற்று 23 ஆண்டுகள் மேற்குவங்கத்தில் முதலமைச்சராக  இருந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவின்  சுயசரிதை. வெளியீடு: பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, தேனாம் பேட்டை, சென்னை-21. விலை ரூ.200.

 நான் வித்யா  லிவிங் ஸ்மைல் வித்யா
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒரு திருநங்கையின் பகிரங்க வாக்குமூலம்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை-18. விலை ரூ.100.

கனவு மெய்ப்பட வேண்டும்    தமிழருவி மணியன்

பாரதி மீது வைக்கப்படும் பல்வேறு விமர்சனங்களுக்கு தனக்கேயுரிய எளிமையான நடையில் பதில் சொல்கிறார் தமிழருவி மணியன்.

வெளியீடு: தென்திசை பதிப்பகம், 52 தென்மேற்கு போக் ரோடு, தி. நகர், சென்னை-17. விலை ரூ.100.

மேயோ கிளினிக் உடல்நலக் கையேடு - பதிப்பாசிரியர்: சிவசுப்ரமணிய ஜெயசேகர்

கிட்டத்தட்ட எல்லா நோய்களைப் பற்றியும் சுருக்கமான குறிப்புகளைத் தருவதுடன் எப்பொழுது டாக்டரை பார்க்க வேண்டும், என்னென்ன சுய தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விவரிக்கும் மருத்துவ நூல்.

வெளியீடு: அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம்_ 621310. விலை ரூ.250.

ஒபாமா -  செ.ச. செந்தில்நாதன்

பராக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறு. ஒபாமாவின் அரசியல் நிலைப்பாடுகளை விவரிப்பதுடன், உலக அரசியல் குறித்து அவர் எழுதிய நூலில் இருந்து சில பகுதிகள் மொழிபெயர்த்தும் தரப்பட்டுள்ளன.

வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ், 12 முதல் பிரதான சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. விலை ரூ.60.

கதை நேரக் கதைகள் -  பாலு மகேந்திரா

பாலுமகேந்திராவின் கதை நேரக் கதைகள் தொடரில் வந்த ஆறு சிறுகதைகள், அதன் திரைக்கதை வடிவங்கள், ஆறு குறும்படங்களின் டி.வி.டி. மூன்றும் கலந்த ஒரு `பேக்' இந்தப் புத்தகம். 

வெளியீடு: வம்சி புக்ஸ், 19 டி.எம்.சரோன், திருவண்ணாமலை-1. விலை ரூ.150.

நடந்தாய் வாழி காவேரி தி.ஜானகிராமன், சிட்டி

தமிழில் எழுதப்பட்ட பயண அனுபவங்களிலேயே மிகச் சிறந்தது எனக் குறிப்பிடப்படும்  புத்தகம்.  தலைக்காவிரி தொட்டு பூம்புகார் வரைக்கும் காவிரிக் கரையோரமாக பயணம் செய்து எழுத்தாளர்கள் சிட்டியும் தி.ஜாவும்  எழுதியிருக்கிறார்கள்.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில்.விலை ரூ.225.

யாமம் எஸ். ராமகிருஷ்ணன்

சென்னையின் நூற்றைம்பது வருடத்துக்கு முந்தைய சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நாவல்.  குறிப்பிடும்படியாக வேறு இலக்கிய நாவல்கள் எதுவும் இந்த வருடம் வராததால் தனிக்காட்டு ராஜாவானது யாமம்.

வெளியீடு: உயிர்மை, 11/29 சுப்ரமணியன் தெரு, அபிராமபுரம், சென்னை-18. விலை ரூ.225.

குற்றமும் தண்டனையும் தஸ்தயேவ்ஸ்கி; தமிழில்: எம்.ஏ. சுசிலா
உலகின் முதல் ஐந்து சிறந்த நாவல்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி நாவலின் மொழிபெயர்ப்பு. வெளியாகி நூறு வருடங்களைக் கடந்துவிட்ட பிறகும், இன்றும் படிக்க புதிதாக இருப்பதே இதன் சிறப்பம்சம்.

வெளியீடு: பாரதி புக் ஹவுஸ், டி-28 மாநகராட்சி வணிக வளாகம், பெரியார் பேருந்து நிலையம், மதுரை-1. விலை ரூ.500.

சிலப்பதிகாரம்: எல்லோர்க்குமான எளிய உரையுடன்  ப. சரவணன்பண்டிதர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் போன்றோரால்தான் படித்து புரிந்துகொள்ள முடியும் என்பதில்லாமல்  சாமான்யர்களும் படித்து ரசிக்கத்தக்க வகையில் எழுதப்பட்ட சிலப்பதிகார உரை.

வெளியீடு: சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை ரூ.250. 

 -தளவாய் சுந்தரம்

பல நேரங்களில் பல மனிதர்கள்- பாரதி மணி

பல நேரங்களில் பல மனிதர்கள்

R.P. ராஜநாயஹம்: குழும நண்பர்களுக்கு ஒரு செய்தியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த வருடத்தில், நான் உயிர்மையில் எழுதிய 13 கட்டுரைகள், தீராநதியில் எழுதிய ஒரு கட்டுரை, அமுத சுரபியில் எழுதிய 4கட்டுரைகள் – மொத்தம் 18 கட்டுரைகள் கொண்ட ஒரு தொகுப்பு பல நேரங்களில் பல மனிதர்கள் என்ற தலைப்பில் உயிர்மை பதிப்பகம் வெளியீடாக சென்னை புத்தகவிழாவுக்கு முன்பாக வெளிவர இருக்கிறது..புத்தகத்தலைப்பு உபயம் என் நண்பர் வ.ஸ்ரீநிவாஸன். ஜெயகாந்தன் சண்டைக்கு வருவாரா என்று தெரியவில்லை. எனது முதலும் கடைசியுமான இந்த புத்தகத்துக்கு கனம் சேர்ப்பது பல துறைகளிலும் நான் சேர்த்த ஒரே சொத்தான என் நண்பர்களில் பலர் என்னைப்பற்றி உயர்வாக எழுதியிருக்கும் ‘பொய்கள்’. சுமார் 25 பிரபலங்கள் பொய் சொல்லியிருக்கிறார்கள். இதில் பாவண்ணன், அ. முத்துலிங்கம், ஜெயமோகன், நாஞ்சில் நாடன் அடக்கம்.

தவிர இலக்கியத்துறையிலிருந்து அசோக மித்திரன், இ.பா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், கடுகு, வாஸந்தி, எஸ். ராமகிருஷ்ணன், நாடகத்துறையிலிருந்து கூத்துப்பட்டறை ந. முத்துசாமி, வெளி ரங்கராஜன், பேரா. எஸ். ராமானுஜம், வேலு சரவணன், இசைத்துறையிலிருந்து லால்குடி ஜெயராமன், T.V.G., சினிமாத்துறையிலிருந்து பி. லெனின், சத்யராஜ், டெல்லி கணேஷ், அம்ஷன் குமார் போன்றோர் என்னைப்பற்றிய உண்மைகளைத்தவிர்த்து நிறையவே புகழ்ந்திருக்கிறார்கள். நாஞ்சில் நாடன் முன்னுரை எழுதுகிறார். எத்தனை பொய்களை அள்ளி வீசுவாரென்று தெரியவில்லை!இத்தனை பிரபலங்களை ஒன்றுசேர்த்து ஆயிரம் பொய்களை சொல்ல வைத்த என்னை எத்தனை பாராட்டினாலும் தகும்! நாஞ்சிலிடம் இந்த புகழாரங்களை உயிருடன் இருக்கும்போதே என் Obituary-யாகத்தான் பார்க்கிறேன் என்று தமாஷாக சொல்லப்போக, அவரிடமிருந்து செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டேன். நான் இருந்து அவருக்கு வழி நடத்தவேண்டுமாம்! செய்துட்டா போச்சு!போனவருடம் யாராவது என்னிடம் என் புத்தகம் வெளிவரும் என்று சொல்லியிருந்தால், அவனை பரிதாபமாக பார்த்திருப்பேன். ஆக்ராவுக்கு இல்லை கீழ்ப்பாக்கத்துக்கு – திருவனந்தபுரமென்றால் ஊளம்பாறை – போகவேண்டியன் என்று தான் நினைத்திருப்பேன். விதி யாரை விட்டது?இதைப்படித்து விட்டு, எல்லோரும், ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்’ என்று எழுத வேண்டுகிறேன்.

பாரதி மணி


விதுரநீதி - AN INTERESTING BOOK!

பிறர் செய்வதைக் காரணமாகக் காட்டி செயல்படுபவர் இருவர்.

1) மற்ற பெண்கள் நாடியவற்றிலேயே தாமும் நாட்டம் கொள்ளும் பெண்கள்.
2) பிறரால் வழிபட்டவர்களையே வழிபடுகிற மூடர்கள்.

இவர்கள் சுய அறிவுடன் சிந்திக்கமாட்டார்கள். அவர்கள் நாடுகிறார்களே, அது நல்லதாகத்தான் இருக்கும் என்று மூட நம்பிக்கையுடன் செயல்படுபவர்கள் இவர்கள்.

***********

இந்த இருவரும் கல்லைக் கட்டி நீர்த்தேக்கத்தில் போட வேண்டியவர்கள்.

1) செல்வமிருந்தும் வேண்டுவோர்க்கு உதவி செய்யாத செல்வந்தன்
2) உடலை வருத்தி உழைக்க விரும்பாத ஏழை.

**********
இந்த மூவரையும் எந்த நிலையிலும், எந்த நெருக்கடியிலும் கைவிடக்கூடாது.

1) உங்களிடம் மனத்தால் ஒன்றியவர்.
2) உங்களுக்கு அன்புடன் பணிபுரிபவர்
3) தன்னைக் காப்பான் என்று நம்பி உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்.

***********

இதுபோல நிறைய ஒன்று, இரண்டு என்று பத்துவரை இந்தப் புத்தகத்தில் உண்டு.

விதுரநீதி.

பத்துவருடங்களுக்கு முன் எனது உறவினர் வீட்டில் இந்தப் புத்தகத்தைப் பார்த்து, புரட்டிப் படித்துவிட்டு இரவல் கேட்டபோது “இன்னும் படிக்கல” என்று சொல்லப்பட்டதால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால் அடிக்கடி இந்தப் புத்தகத்தை நினைத்துக் கொள்வேன். காரணம் திருக்குறள் போல பல நல்ல கருத்துகளை உள்ளடக்கிய புத்தகம் இது. மஹாபாரதம், உத்தியோகபர்வதத்தில் 33-40 அத்தியாயங்களில் உள்ள இதை, புத்தக வடிவில் அச்சிட்டு ஒரு திருமணத்தில் பரிசாகக் கொடுத்ததைத்தான் அவர் வீட்டில் வைத்திருந்தார். சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்தபோது, மறக்காமல் அவர் வீட்டுக்குச் சென்று போராடி, தேடி வாங்கிவந்து ஒரே மூச்சில் படித்தேன்.

வெரி இண்ட்ரஸ்டிங்கான சில புராணக் கதைகளை உள்ளடக்கியது இது. சொல்கிறேன் கேளுங்கள்.

விதுரநீதி யாருக்குச் சொல்லப்பட்டது?

பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் முடிந்து நாடு கேட்டு வந்தப்போ, திருதிராஷ்டிரன் தனது மெய்க்காவலனான ஸஞ்சயனை பாண்டவர்கள்கிட்ட அனுப்பி, “அவங்களை அப்படியே ஓடிப் போகச் சொல்லு. எனக்கு போர்ல விருப்பமில்ல”ன்னு சொல்லிவிடறாரு. ஸஞ்சயன் போய் பாண்டவர்கள்கிட்ட சொல்றப்போ, மிஸ்டர்.தர்மருக்கும் ஸஞ்சயனுக்கும் சில சம்பாஷணைகள் நடக்குது. கடைசியா தர்மர் “உங்காளுக அதர்மத்தை, தர்மம்ன்னு நெனைச்சு அரசாளறாரு. அத எப்படி நாங்க அலவ் பண்றது ஸஞ்சயா? சரி, ஒனக்கும் வேணாம், எனக்கும் வேணாம், நான் சொல்ற ஒரு அஞ்சு நகரத்தை மட்டும் எங்களுக்கு குடுத்துடுங்க”ன்னு சொல்லிவிடறாரு.

ஸஞ்சயன், திரும்பி திருதிராஷ்ட்ரன்கிட்ட வந்து “ஹலோ மிஸ்டர் கிங்கு, சீக்கிரம் ஒனக்கு சங்கு. அவனுக ரொம்ப நல்லவங்கப்பா. நீங்க அதர்மத்துக்கு சொம்பு தூக்கிகிட்டு இருக்கீங்க. எனக்கென்னமோ கௌரவகுலம் அழியும், அதுக்கு நீங்கதான் காரணமாயிருப்பீங்கன்னு தோணுது”ன்னு சொல்லீட்டு அங்க பேசினதை முழுசா சொல்லாம “ட்ராவல் பண்ணினதால டயர்டா இருக்கு. விரிவா காலைல சொல்றேன்”ன்னு சொல்லீட்டு போயிடறாரு. (யோசிச்சுப் பாருங்க. இன்னிக்கு மன்னனோ, நம்ம முதலாளியோ ஒரு வேலை சொல்லீட்டு நாம் இதுமாதிரி பாதி ரிப்போர்ட் பண்ணி, மீதியைக் காலைல சொல்றேன்னு தூங்கப்போகமுடியுமா? ஹூம்ம்ம்ம்!)

சஞ்சயன் தூங்கப் போயிட்டார். இங்க மன்னன் திருதிராஷ்ட்ரனுக்கு தூக்கமே வர்ல. மனசு ரொம்ப சஞ்சலப்படுது. உடனே விதுரரைக் கூப்ட்டனுப்பி “யப்பா. ஸஞ்சயன் காலைல என்ன சொல்லப்போறானோன்னு கெடந்து தவிக்குதுப்பா. என்ன பண்றதுன்னே தெரியல. கொஞ்சம் ஆறுதலா எதுனாச்சும் சொல்லு”ங்கறாரு. அப்போ விதுரர் சொல்ற அறிவுரைகள்தான் விதுரநீதி.

அந்த கௌரவர் கூட்டத்துல எப்படி விதுரர் மட்டும் நீதி, நேர்மைன்னு இருக்காரு? அதுக்கும் இருக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்.

மாண்டவ்யர்-ங்கற முனிவர் தன்னோட ஆசிரமத்துல அடைக்கலம் கேட்டுவந்த சிலருக்கு அடைக்கலம் தர்றார்.. அவங்க மொத நாள் நைட் அரண்மணைல ஆட்டையப் போட்டவங்க. (திருடினவங்க). அதுதெரியாம இவரு, தங்க வெச்சுட்டாரு. இப்போமாதிரி, ரெண்டுமூணு வருஷம் கழிச்சா திருடங்களைப் பிடிக்கறாங்க? அப்போவெல்லாம் உடனே பிடிச்சிடுவாங்கள்ல? அப்படி அரண்மணைக் காவலர்கள் வர்றப்போ, இந்த முனிவரையும் திருடன் ஒருத்தன்தான் வேஷம் போட்டிருக்கான்னு புடிச்சுட்டு போயிடறாங்க. எல்லாரையும் கழுவில ஏத்துங்கன்னு மன்னன் சொல்றாரு. அப்படி ஏத்தறப்போ முனிவர் மாண்டவ்யர் தன்னோட தவ வலிமையால் அப்படியே கழுமரத்தில் இருந்தார். இறக்கவில்லை. தன்னைத் தேடிவந்த முனிவர்களுக்கும் அப்படி இருந்துகிட்டே போதனையெல்லாம் சொல்றாரு. காவலர்கள் இதை ராஜாகிட்ட சொல்றப்போ ‘ங்கொக்கமக்கா, தப்பு பண்ணீட்டேனே”ன்னு ஒடிப்போய் கழுமரத்திலிருந்து அவரைப் பிரிக்கச் சொல்றான். முடியல. இரும்பில ஆன அந்தக் கழுமரத்திலிருந்து அப்படியே அவரை உரிச்சு எடுக்கச் சொல்றான். உடம்பில அங்கங்கே ஆணியோட, அரச மரியாதையோட மறுபடி ஆசிரமத்துக்கு போறார் மாண்டவ்யர்.

இவரோட காலம் முடிஞ்சு மேல யமலோகத்துக்கு போறப்ப மாண்டவ்யர் யமன்கிட்ட “என்ன கொடுமை யமா இது? எனக்கு ஏன் இப்படி நடந்துச்சு”ன்னு கேட்கறாரு.

யமன் அவரோட ரெகார்டையெல்லாம் பார்த்து, “சின்ன வயசுல பட்டாம்பூச்சிகளப் பிடிச்சு, அதோட வாலுல ஈர்க்குச்சியை சொருகி விளையாடியிருக்கீங்க. அதுக்குண்டான தண்டனைதான் இது”ங்கறாரு.

மாண்டவ்யர்க்கு கோவம் வருது. “ஆஸ் பர் யமலோக ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ், பன்னிரெண்டு வயசு வரைக்கும் ஒருத்தன் பண்ற பாவத்துக்கு அவனுக்கு தண்டனை இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நீ எனக்கு தண்டனை குடுத்த?”ன்னு கேக்கறாரு. யமன் “ஐயையோ... மிஸ்டேக் பண்ணீட்டோமே”ன்னு தலை குனிஞ்சு நிக்கறாரு. அப்போ மண்டவ்யர் சாபம் விடறாரு. “நீதியைக் காப்பாத்த வேண்டிய நீயே நீதி தவறினதால நீ மனுஷனாப் பொறந்து மத்தவங்களுக்கு நெறிமுறையைப் போதிச்சு, நீயும் அதன்படி வாழு”ன்னு.

அந்த யமன்தான், விதுரர்!

விதுரர் சொன்னதுதான் விதுரநீதி!

சில கருத்துகள் முரண்பாடா இருந்தாலும் (ஒரு இடத்துல ஒண்ணுமில்லாத ஆண்டி, நலப்பணிகள்ல ஈடுபட்டா விளங்கமாட்டான்னு சொல்றாரு. அடுத்த ஸ்லோகத்துல இல்லாட்டியும் வாரி வழங்குற ஏழை வானத்துக்கு மேல உயர்ந்தவன்-ங்கறாரு) பல கருத்துகள் ‘அட’ போட வைக்குது!

கடைசியா, இதையெல்லாம் கேட்ட திருதிராஷ்டிரன் ஏன் சண்டை போட்டான்? ஏன்னா, அவருக்கு கணிகர்-ங்கற அர்த்தசாஸ்திர வல்லுனர் சில போதனைகளைச் சொல்றாரு. ‘நீதி நேர்மையெல்லாம் தூக்கி குப்பைல போடுல. நான் சொல்றத கேளுல’ன்னு சில (அ)நீதி போதனை சொல்றாரு. மகாபாரதத்துல ஆதிபருவம்-139வது ச்சாப்டர்ல இருக்கு இது. கூடநீதி. (கூடம் = வஞ்சனை) அப்படியே இன்னைக்கு இருக்கற அரசியல்வாதிகள், இதைப் படிச்சிருப்பாங்களோன்னு நினைக்க வைக்குது!

தன்குறைகளை மறை, பிறர் குறைகளை விரிவுபடுத்து. அடைக்கலம் புகுந்தாலும் பரிவு காட்டாதே. நல்லவனா இருந்தா, சிறுகச் சிறுக பணம் குடுத்து அவனைக் கெடு. உனது செயல் முறையை முன்னதாக ஊகிக்க இடம் குடுக்காதே. திட்டத்தை திடீர்னு தள்ளிப்போடு. பிறர் உன்கிட்டேர்ந்து எதையேனும் எதிர்பார்க்கச் செய். எதிர்பார்த்து இருக்கும்போது மறுபடி தள்ளிப் போடு. தள்ளிப்போட ஏதாவது காரணத்தை சொல்லிகிட்டே இரு. அவன் எதிர்பார்த்து எதிர்பார்த்து அவனோட காரியத்துல கவனக் குறைவா இருக்கறப்போ போட்டுத் தாக்கி அவனை அழி.


இப்படி கூடநீதி படிக்கப் படிக்க அவ்வளவு சுவாரஸ்யம். (கேடுகெட்ட மனசு! விதுர நீதி புத்தகத்துல வெறும் மூணு பக்கம் இருந்தாலும் இந்த கூடநீதில நாட்டம் கொள்ளுது பாருங்க!)

இந்தப் புத்தகம் சிமிழி வெங்கடராம சாஸ்திரி டிரஸ்டுக்காக வெளியிட்டவர் சி.வே.ராதாகிருஷ்ண சாஸ்திரி, 22, வீரேஸ்வரம் அப்ரோச் ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620006 ன்னு போட்டிருக்கு. கிடைச்சா நிச்சயமா வாங்கிப் படிங்க!

எண்ணங்கள் ஆயிரம்: அறிவியலை மிஞ்சும் ஆன்மீகம்

புத்தகம்: எண்ணங்கள் ஆயிரம்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
விலை: ரூ.15

கண்ணதாசனுடைய பெரும்பாலான புத்தகங்களை படித்திருந்தாலும் இந்த புத்தகம் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட். மிகப்பெரிய வீடாயினும் அதை திறப்பதற்கு ஒரு சிறிய சாவி வேண்டியிருப்பதைப் போல், 62 பக்கமே கொண்ட இந்த புத்தகம் உங்கள் மனதை திறக்கும் ஒரு சாவி என்றால் அது மிகையல்ல. புத்தகத்தை படிப்பதன் மூலம் நிச்சயம் உங்களுடைய எண்ணங்கள் விசாலமடையும். எதையும் தாங்கும் ஒரு பக்குவம் ஏற்ப்படும். படித்து முடிக்கும் போது, இந்த தலைப்பு எவ்வளவு பொருத்தமானது என்பதை நம்மால் உணர முடியும். நேற்று வந்த எழுத்தாளருடைய புத்தகங்கள் கூட 100 ரூ, 150 ரூபாய் விற்கும் போது 18 கட்டுரைகள் கொண்ட இந்த புத்தகம் வெறும் 15 ரூபாய்தான். நல்ல ஹோட்டல்களில் இன்றைக்கு ஒரு வேலை சாப்பாடு கூட 25 ருபாய் விற்ப்பதை நினைக்கும் போது இந்த புத்தகத்தின் விலை ஒரு ஆச்சரியமே.

2003வரை மொத்தம் 23 பதிப்புகள் வெளிவந்துள்ளன. February 2004ல் இந்த புத்தகத்தை வாங்கினேன். அன்றிலிருந்து இன்று வரை நான் படிப்பதற்காக வெளியூர் சென்ற போதும் சரி வேலை நிமித்தமாக வெளிநாடு வந்த போது சரி இந்த புத்தகமும் என்னோடு பயணித்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 முறைக்கு மேலேனும் படித்திருப்பேன், ஒரு முறை கூட அலுப்பு தட்டியதே இல்லை. இத்தனை முறை படிப்பதற்கு இது என்ன வேத நூலா என்று யாரேனும் கேட்டால், 'அதற்கும் மேலே' என்பதுவே என் பதிலாக இருக்கும்.

"சில ஆண்டுகளுக்கு முன்னாள் நண்பர் 'சோ' அவர்கள், தனது 'துக்ளக்' பத்திரிக்கையில் ஏதாவது எழுதவேண்டுமென்று கேட்டார். 'எண்ணங்கள் ஆயிரம்' என்ற தலைப்பையும் அவரே சொன்னார். சில காலம் அந்த தலைப்பில் எழுதிவந்தேன்." என்று இந்த புத்தகம் உருவான கதை பற்றி கவிஞரே முன்னுரையில் சொல்லுகிறார். பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பது தெரியாமலே எப்படி பெயர் வைக்கமுடியும் என்று பலரும் கேட்கும் நிலையில், பெயர் வைத்துவிட்டு பெயருக்கு தகுந்தாற்ப்போல் 18 குழந்தையையும் பெற்றெடுத்திருக்கிறார் கவிஞர்.

18 கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்று சொல்லுவதைக் காட்டிலும் பலதரப்பட்ட எண்ணங்களை அழகாக எழுத்தாக்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். தன்னம்பிக்கை, அரசியல், ஆன்மிகம், காமராஜர், நேரு, இந்திரா, இந்தியா, ஜனநாயகம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொன்றை/ஒவ்வொருத்தரை எடை போடும் தராசாகவே தெரிகிறது.

நேருவைப் பற்றிய கட்டுரையில், மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பின் பிரதிபலிப்பாகவே உள்ளது. நேருவின் மறைவைப் பற்றிய இரண்டு பக்க கட்டுரையில்,
"உன் ஆசையின் விளைவே அரசியல் சட்டம். எங்கள் அனுபவத்தின் விளைவே அதில் நாங்கள் செய்யும் திருத்தம். கடலளவு மனம் படைத்த கருணைத் தலைவனே !. மன்னனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்து, தெய்வமாக மறைந்த மரகதச் சிலையே !. எங்கள் மனமே உன் கோவில். உன் திருமுகமே நாங்கள் ஆராதிக்கும் சிலை" என்கிறார். நேரு எப்படி வாழ்ந்தார், அவருடைய மறைவு எப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தை நாட்டில் ஏற்படுத்தியிருந்தது என்பதற்கு இந்த கட்டுரை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

"கோழிக்குஞ்சைப் பிடித்துவிட்ட தைரியத்தில், யானையையும் பிடிக்க ஒருவன் தயாராகிறான். கேரம்போர்டில் வெற்றி பெற்றுவிட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு ஒருவன் தயாராகிறான். நம்பிக்கை தரும் வெற்றிகளைக் காட்டிலும் தோல்விகள் அதிகம். நம்பிக்கையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மனிதர்கள், மிருகங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். தங்கள் சக்திக்கேர்ப்பவே அவைகள் நம்பிக்கை வைக்கின்றன." என்று 'நம்பிக்கை' என்னும் கட்டுரையில் வெற்றியும் தோல்வியும் மனிதனின் மனதை எந்தளவுக்கு பாதிக்கின்றன என்று சொல்லுகிறார். இது போன்ற வரிகளை படிக்கும் போது, பக்கத்தின் இடதுபக்கமோ அல்லது வலதுபக்கமோ பென்சிலால் கோடுபோடுவது என் வழக்கம். இந்த புத்தகத்தை படித்து முடித்த்தபோது மொத்த புத்தகமும் கோடாகிப்போயிருந்தது. குழந்தையின் சிரிப்பைப்போல, சில வரிகள் சோர்வடையும் போதெல்லாம் நினைவில் வந்து சாமரசம் வீசுகின்றன. அப்படி அனுபவித்து படித்த வரிகள் சில...

"மனிதன் வெளியில் இருந்து விளையாடுகிறான்; தெய்வம் மறைந்து நின்று விளையாடுகிறது. தெய்வத்தை நம்புகிறவன், தோற்றாலும் ஜெயிக்கிறான்; நம்பாதவன் ஜெயித்தாலும் தோற்கிறான்."

"நீ கிறுக்கியதெல்லாம் ஓவியமானால், குறுக்கே நின்று அதை திருத்தியவனுக்குப் பெயர்தான் பகவான்."

"'நான்' என்று நினைக்காதீர்கள்; நினைத்தால் ஆண்டவன் 'தான்' என்பதைக் காட்டிவிடுவான்."

"எதிலிருந்து ஜனனம் நிகழ்கிறதோ, அதிலே ஆண்டவன் இருக்கிறான். அதில் ஆபாசம் என்ன இருக்கிறது."

"பத்து பேர்களின் தகத்தை தீர்த்து விட்டு பாறையைத் தோண்டிப் பாருங்கள்; தண்ணீர் கிடைக்கும்." என்கிறார். அறிவியலை மிஞ்சும் ஒரு ஆன்மீகமாகவே இந்த புத்தகம் எனக்கு தோன்றுகிறது.

இரவு ஏழு மணிக்கு மேல் தெருவின் மூலையில், சிம்மினி விளக்கின் வெளிச்சத்தில், ஒரு சிறிய லேகியத்தை காட்டி, உஷ்ணம், வாய்வு, பித்தம், என்று உலகில் உள்ள எல்லா வியாதிகளையும் சொல்லி அதற்கெல்லாம் ஒரே மருந்து இந்த லேகியம் என்று சிலர் விற்றுக்கொண்டிர்ப்பார்கள். அத்தனை வியாதியையும் அந்த லேகியம் குணமாக்குகிறதோ இல்லையோ இந்த புத்தகம் குணமாக்கும் என்பேன் காரணம், James Bryce சொன்னதைப் போல் "The worth of a book is to be measured by what you can carry away from it." இந்த புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்த கட்டுரை ஒன்று இங்கே.

குறிப்பு: புத்தகத்தின் அட்டைப்படம் கிடைத்தால் போடலாம் என்று google image searchல் 'எண்ணங்கள் ஆயிரம்' என்று போட்டு தேடிப்பார்த்தேன், முதலில் வந்தது வாரணம் ஆயிரம் சூரியாதான். கடைசி வரை தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. நேரம் கிடைக்கும் போது ஸ்கேன் செய்து போடுகிறேன். நன்றி.




அசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு

சமீபத்தில்,தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் தமக்கு பிடித்த சிறுகதைகளை தொகுத்து அசோகமித்திரன் வெளியிட்டுள்ள தொகுதி படிக்க கிடைத்தது.1980'களில் வெளிவந்த இத்தொகுப்பு மிகச சிறந்தவை என வகைப்படுத்த படும் தமிழ் சிறுகதைகளை கொண்டது.வண்ணநிலவன்,வண்ணதாசன்,ஜெயகாந்தன்,ராஜநாராயணன்,சுஜாதா,ஆதவன்,நீலபத்மநாபன்,அழகிரிசாமி,கிருஷ்ணன் நம்பி ஆகிய எழுத்தாளர்களின் சிறுகதைகள் இதில் அடங்கும்.சக எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து வெளியிட்டிருப்பதால் அச்சிறுகதைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.




வண்ணநிலவனின் "எஸ்தர்"

வண்ணநிலவன் சிறுகதைகளுள் பெரும் வரவேற்பை பெற்ற சிறுகதை "எஸ்தர்" - மழை பொய்த்தால் விவசாயம் கேட்டு உணவின்றி வாழ்வே கேள்விக்குறியாகி போன குடும்பம்பதை பற்றிய கதை.அவ்வீட்டின் மூத்தவளான விதவை எஸ்தர்,பெரும்பஞ்ச காலத்தில் யாவரையும் அரவணைத்து குடும்பத்தை வழி நடத்தி செல்வதே இச்சிறுகதை.ஆரவாரமின்றி நகரும் இக்கதையில் நிலவும் ஒரு அமானிஷ்ய அமைதியானது பஞ்ச காலத்தில் விவசாயிகளின் நிலையை சொல்லுகின்றது.மேலும் பெரும்பாலான நிகழ்வுகள் சிம்மினி வெளிச்சத்தில் இரவின் துணையோடு நகர்வது மேலும் வேதனை மூட்டுவதாய் உள்ளது.துயர பிடியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் வழி மிகுந்த கதை..

வண்ணதாசனின் "தனுமை"



வண்ணதாசன் சிறுகதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தனுமை.அழகிய காதல் கதை.நாயகன் நாயகியோடு பேசாமலே.. பார்வையால்,எண்ணகளால்,உணர்வால் பிரியம் கொள்வதை அமைந்துள்ளது.மழை பெய்து ஓய்ந்த ஒரு நாளில் நாயகி தாணு சாலையில் நடத்து வருவதாய் வண்ணதாசன் அமைத்துள்ள காட்சி அழகிய கவிதை. நாயகன் தனுவின் நினைவாக தனிமையில் அமர்த்து இருக்கும் ஒரு காட்சியை"தனியாகி…தனுவாகி.." என வர்ணிக்கும் பொழுது கல்யாண்ஜி வெளிபடுகிறார்.கதைக்கு மேலும் அழகு சேர்க்கும் வண்ணம் பின்பாதி கதை மழையோடு பயணிக்கிறது.எழுத்தாளர் பாவண்ணன் பல்வேறு எழுத்தாளர்களில் சிறந்த கதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்..அதில் வண்ணதாசன் சிறுகதைகளில் அவர் தேர்ந்து எடுத்தது தனுமையே ..

கி.ராஜநாராயணனின் "நாற்காலி"



கி.ராஜநாராயணனின் "வெட்டி" சிறுகதை தொகுப்பில் முன்பொருமுறை இக்கதை படித்து இருக்கின்றேன்.பொதுவாகவே கிராமத்து மக்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.கரிசல் இலக்கியத்தில் நகைச்சுவை புகுத்தி எழுதுவதில் வல்ல கி.ராவின் மற்றுமொரு நகைச்சுவை புனைவு இது.முக்காலிக்கு விடை கொடுத்து நாற்காலி பயன்படுத்த ஆசைப்பட்டு தேர்ந்த மரத்தினால் நாற்காலி ஒன்றினை செய்து வீட்டில் வைக்கின்றனர்.அந்த நாற்காலியோ ஊரில் எழவு வீடுகளில் சவத்தினை சார்த்தி வைக்க பயன்பட தொடங்குகிறது...மிகுந்த ஹாசியம் கொண்டு எழுதப்பட்டுள்ள இக்கதை கிராமத்து பேச்சு வழக்கு,மாமன் மச்சான் உறவுகளில் நிலவும் கேலி,கிண்டல் என இயல்பாய் சொல்லப்பட்டுள்ளது.


ஜெயகாந்தனின் "பகல் உறவுகள்"





தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நடையில் ஜெ.கேயின் இக்கதை உள்ளது.ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு தம்பதியினர் வெளி உலகுக்கு ஆதர்ச தம்பதியினராகவும்,யாவரும் வியந்து பார்ப்பவர்களாகவும் தெரிந்தாலும் வீட்டினுள் இருவருக்குள்ளும் நிகழும் சண்டை,வார்த்தை போர், விருப்பமின்மை என தினமும் நகரும் நாட்களோடு பகலில் அலுவலகத்திலும்,வெளியிலும் கொண்டிருக்கும் உறவினை பற்றிய இறுக்கம் மிகுந்த கதை.எஸ்.ராவின் எழுது நடையை போன்றதொரு உணர்வை குடுக்கின்றது..வெகு வித்தியாச நடை.

நாஞ்சில் நாடனின் "ஒரு "இந்நாட்டு மன்னர்"

நான் படிக்கும் முதல் நாஞ்சில் நாடனின் கதை.முற்றிலும் வட்டார பேச்சு நடையுடன் படிக்க சுவாரசியமாய் உள்ளது.சு.ரா வின் ஒரு புளிய மரத்தின் கதை நாவலில்,தேர்தலின் பொழுது ஏழை கிழவருக்கு புத்தாடை குடுத்து காரில் அழைத்து சென்று ஓட்டு போட வைப்பார். அது நாவலின் ஒரு சிறு பகுதி. ஒரு இந்நாட்டு மன்னர் சிறுகதை அப்படி அலைந்து செல்லபடும் வைத்தியன் என்னும் கிழவரின் தேர்தல் சமய அனுபவங்களே..சற்றே நகைச்சுவை கலந்து தேர்ந்தால் கால நிகழ்வுகளை கூறி இருக்கும் விதம் நன்று.

"கிருஷ்ணன் நம்பியின் "மருமகள் வாக்கு"



1960 களில் வெளிவந்துள்ள இச்சிறுகதை மாமியார் மருமகளுகுள்ளான உறவினை பற்றியது.ஆதிக்க மனநிலை கொண்ட மாமியார்,எதையும் எதிர்த்து கேட்க துணியாத மருமகள் என இக்காலத்திற்கு சிறிதும் பொருந்தாத கதை நடை படிக்க வியப்பாக உள்ளது.தனிச்சையான முடிவு எடுக்க தைரியமில்லாத பெண்கள் இன்றும் உண்டு என்ற போதிலும் சார்பு நிலை அக்காலதினை போல இன்றில்லை.மாமியாரின் மீது கொண்ட பயமோ,பக்தியோ,சொல்ல முடியாத அன்போ எதுவோ ஒன்று தனக்கு பிடித்த கட்சிக்கு கூட வாக்களிக்க முடியாமல் செய்து விடுகிறது அவளை..திடமான மனநிலையும்,தைரியமும் பெண்களுக்கு மிகுந்த தேவை என சொல்லாமல் சொல்லும் கதை.

இந்திரா பார்த்தசாரதியின் "தொலைவு"

டெல்லியில் நடைபெறுவதாய் வரும் இக்கதை நடுதரமக்களின் பொருளாதார சிக்கலை முன்னிறுத்தி சொல்லப்பட்டது.ஒரு தந்தையும் மகளும் மாலை பொழுதில் வீட்டிற்கு செல்ல ஆட்டோ பிடிக்க அலைவதே கதை..ஜன நெருக்கடி மிகுந்த மாலை பொழுதுகளில் பேருந்துகளும்,ஆட்டோக்களும் தன் இருப்பை பெருமை படித்தி கொள்ளும் வண்ணம் ஆட்களை திணித்து கொண்டு செல்லும் காட்சிகள் நாம் தினமும் காண்பதே.டாக்சியில் செல்வதை தவிர்த்து மகளுடன் நடந்தே பல தூரம் சென்று ஆட்டோவை தேடி அலையும் சராசரி அரசு ஊழியனான நாயகன் புலம்பும் இடங்கள் எல்லா காலகட்டத்திற்கும் பொருந்தி வருவதே!!

அசோகமித்ரனின் "காலமும் ஐந்து குழந்தைகளும்"



நேர்முக தேர்விற்கு செல்ல ரயிலை பிடிக்க ஓடும் ஒரு இளைஞனின் சில நிமிட மனோட்டமே இச்சிறுகதை.நவீன இலக்கிய வகையை சேர்ந்த இக்கதை, இயந்திர ஓட்டத்தில் யாருக்காகவும் காத்திராத ரயிலினை கனவுகளோடும்,கடந்த காலங்களின் வேதனையோடும்,பெரும் நம்பிக்கையோடும் நெருங்கும் வேலை இல்லா இளைஞனின் அந்நேர மனவோட்டங்களை இயல்பாய் கூறி இருக்கும் விதம் நன்று.யாரையும் பொருட்படுத்தாது வேகமாய் செல்லும் அவன் கண்ணில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஐந்து குழந்தைகள் தென்பட அவர்கள் குறித்த சிந்தனையும் வந்து மறைகிறது..நம்மில் பலருக்கு இந்த அனுபவம் உண்டு,அடித்து செல்லும் இயந்திர வாழ்வில் நின்று நிதானித்து பிற மனிதர்களின் துக்கங்களில் பங்கு கொள்ள யாருக்கும் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை.
நூல் வெளியீட்டார் -நேஷனல் புக் டிரஸ்ட்
விலை - 18 ரூபாய்

வண்ணதாசனின் "நடுகை" - சிறுகதை தொகுப்பு

வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -"நடுகை" படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது.

* காற்றின் வெளி-- ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.




* ஜோதியும் நானும் அந்த பையனும் - காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்...மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.

* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது - வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான "கடைசியாய் தெரிந்தவர்கள்" போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே...

* நடுகை - நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.


இச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது."இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது" என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!

வெளியீடு - அன்னம் புக்ஸ்
விலை - 45 ரூபாய்
விளம்பர உலகம் - விசிட்டிங் கார்டு!  

"ங்கா.. ங்கா..' என்று ஒரு குழந்தை அழுகிறது. என்ன காரணம்? குழந்தைக்குப் பசிக்கிறது, பால்வேண்டும் என்பதுதானே? பேசத் தெரியாத குழந்தைகூட குறிப்பாகத் தன்னுடைய தேவையை உணர்த்தி விடுகிறது இல்லையா? இதற்குப் பெயர்தான் விளம்பரம்.

நூலின் பெயர் : சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா

பக்கங்கள் : 152

விலை : ரூ. 70/-

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in



சினிமாத்துறையைப் போலவே விளம்பரத்துறையும் பிரம்மாண்டமானது. பல கோடிகள் புழங்கும் துறை.

பிரபலங்களை மேலும் பிரபலங்களாக்கும் துறை. இத்துறைக்குள் நுழைவது ஒன்றும் சக்கரவியூகத்துக்குள் நுழைவதுபோலக் கடினமானதல்ல. கொஞ்சம் முயற்சி செய்தால், விளம்பரங்கள் குறித்து கொஞ்சம் தெரிந்துகொண்டால் போதும். எளிதாக நுழைந்து வெற்றிக்கொடி நாட்டிவிடலாம்.

இப்போதெல்லாம் சினிமாத்துறைக்குள் நுழைய விரும்புபவர்கள் முன்னோட்டமாகத் தேர்ந்தெடுப்பது, விளம்பரத்துறையைத்தான் என்பதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு குறை இருந்துகொண்டே இருக்கிறது. விளம்பரத்துறை குறித்த போதுமான புத்தகங்கள் தமிழில் இல்லை. பல விளம்பர முன்னோடிகள் தமிழர்களாக இருந்தும் இந்தத் துறையைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமானால், ஆங்கிலப் புத்தகங்களைத்தான் நாடவேண்டிய நிலை. ஆங்கிலத்தில் இந்தத் துறையின் ஒவ்வொரு பிரிவைப் பற்றியும் விரிவான பல நூல்கள் இருக்கின்றன. விளம்பரத்துறையின் மொழியே ஆங்கிலம்தான். அமெரிக்கப் பாணியில் நடத்தப்படும் விளம்பர ஏஜென்ஸிகளில் பணிபுரிய ஆங்கிலம் அத்தியாவசியமாக இருக்கிறது. இருந்தாலும் தமிழில் வாசிக்கும் சுகானுபவத்தை மற்ற மொழிகள் நமக்கு தந்துவிடுமா என்ன?

நான் ஒரு ஏஜென்ஸியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அங்கே நேர்முகத்தேர்வுக்காக ஓர் இருபது வயது இளைஞன் வந்திருந்தான். அவனது சொந்த ஊர் சிவகாசி. அங்கே சில அச்சகங்களில் ஓவியனாகப் பணியாற்றிய அனுபவம் அவனுக்கு இருந்தது. அருமையான ஓவியன். அவனிடம் ஒரு தயாரிப்பைப் பற்றிய சில விவரங்களைச் சொல்லி தலைப்புக் கொடுத்து ஒரு விளம்பரத்தை வரைந்து காட்டச் சொல்லியிருந்தேன். ஒரு பிரபல கிரிக்கெட் வீரரை வரைந்து தலைப்பு எங்கே வரவேண்டும், மற்ற விஷயங்கள் எங்கெங்கே வரவேண்டும் என்று வரைந்து காட்டியிருந்தானான். அவன் வரைந்து காட்டிய லேஅவுட் மிக அருமையாக வந்திருந்தது.

"இந்த விளம்பரத்துக்கு எதற்காக கிரிக்கெட் வீரரை மாடலாக வைத்தாய்?' என்று கேட்டதற்கு, அவனால் சரியான பதில் அளிக்க முடியவில்லை. "இவர்தான் இப்போது நிறைய விளம்பரங்களில் வருகிறார். இவரை மாடலாக வைத்தால் விளம்பரம் நன்கு கவனிக்கப்படும்' என்று பதில் சொன்னான். அவனுக்கு நல்ல ஓவியத் திறமை இருந்தது. ஆனாலும் விளம்பர நிறுவனத்தில் பணியாற்ற அதுமட்டும் போதாது. விளம்பரத்துறை குறித்த போதுமான அறிவு இருக்க வேண்டும்.

அருமையாக லேஅவுட் செய்வதும், மார்க்கெட்டிங் செய்வதும், டி.வி. விளம்பரங்களை படம்பிடித்துக் கொடுப்பதும் மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல. சுருக்கமாகச் சொல்லப் போனால் விளம்பரம் வெளியிடுவது மட்டுமே ஏஜென்ஸிகளின் வேலை அல்ல, அதையும் தாண்டி பொருளின் விற்பனையைப் பெருக்க உதவவேண்டும்.

நம்மில் நிறையப் பேர் விளம்பரங்கள் என்றாலே மாடல்கள்தான் என்று அந்த சிவகாசி பையனைப்போல நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் சொல்லப் போனால் மாடலிங் என்பது தனித்துறை. விளம்பரத்துறையைச் சார்ந்த இன்னொரு பெரிய துறை. அப்படியென்றால் எது விளம்பரத்துறை,? விளம்பரத்துறையில் யார் யார் இருக்கிறார்கள்,? என்ன என்ன செய்கிறார்கள்? போன்ற சந்தேகங்கள் வரலாம். அந்தச் சந்தேகங்களை எல்லாம் இந்தப் புத்தகம் வாயிலாகத் தீர்த்துக்கொள்ளப்போகிறோம்.

விளம்பரத்துறையின் ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் தனித்தனியாகவே புத்தகமாக எழுதமுடியும் என்றாலும், தமிழில் இந்தத் துறை குறித்து அறிந்துகொள்ளப் போதுமான புத்தகங்கள் இல்லாத நிலையில் இந்தத் துறை பற்றிய பறவைப் பார்வையைப் பார்க்க இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

- யுவ கிருஷ்ணா

சென்னையைச் சேர்ந்த யுவகிருஷ்ணா எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பர நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது கார்ப்பரேட் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். விகடன் குழுமத்தின் இணையத்தளமான யூத்ஃபுல்.விகடன்.காமில் தொடர்ந்து எழுதிவரும் யுவகிருஷ்ணா, இணைய வலைப்பூக்களிலும், சஞ்சிகைகளிலும் ஏராளமாக எழுதிவருகிறார். இணையத்தில் இவரது பெயர் லக்கிலுக்.

விளம்பர உலகம் - விரைவில் உங்கள் கரங்களில்...




     RSS of this page