தொலைந்துபோன கிராமத்து முகங்களையும், அடையாளங்களையும் மண்வாசனை மாறாமல் தேடித்தரும் ஒரு முயற்சி இது.
ஆளுமைகளைப்பற்றி
தமிழில் எழுதப்படுவனவற்றில் உள்ள பொய்யும் உண்மையும் சாதாரண வாசகனால்கூட
எளிதில் உணரப்படத்தக்கவையாக உள்ளன. ஊடகம், அரசியல், வணிகம் தளங்களில்
செயல்படும் முக்கியமானவர்களைப்பற்றி எப்போதுமே உபச்சாரமான மிகையான சொற்களே
சொல்லபப்டுகின்றன. அவை யாரைப்பற்றியானாலும் எப்போதும்
ஒன்றுபோலிருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு ஆளுமைச்சித்திரம்
உருவாவதேயில்லை. உண்மையான சொற்கள் என்றால் எப்போதும் ஒரு துல்லியமான
ஆளுமைச்சித்திரம் உருவாகி வரும் என்பதையே அளவுகோலாகக் கொள்ள முடியும்.
ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இருவகை. ஒன்று அந்த ஆளுமையை எவ்வளவு
முடியுமோ அவ்வளவு தீவிரமாகவும் நேரடியாகவும் சித்தரிக்க முயல்வது. சுந்தர
ராமசாமி க.நா.சு பற்றி எழுதியது [க.நாசு.நட்பும் மதிப்பும்] நான் சுந்தர
ராமசாமி பற்றி எழுதியது [சு.ரா-நினைவின் நதியில்] ஆகியவை இவ்வகையைச்
சேர்ந்தவை. இவை தமிழில் அதிகமும் சிற்றிதழ் சார்ந்து எழுதப்படுகின்றன.
இவற்றை இன்றுகூட பெருவாரியான வாசகர்களால் ஏற்க முடிவதில்லை. இவற்றில் உள்ள
விமரிசன நோக்கு நம் மரபுக்கு அன்னியமானது. சிற்றிதழ்கட்டுரைகளிலேயே
உபச்சார புகழ்ச்சிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் இப்போது
உருவாகியிருக்கிறது.
மரபான முறையில் நாம் பெரியவர்களிடமிருந்து நாம் நல்லவற்றைமட்டுமே
கொள்ளவேண்டும்- நிலவிலிருந்து ஒளியை மட்டுமே பெறுவது போல. ரசனை இதழில்
ம.ரா.பொ.குருசாமி போன்றவர்கள் எழுதும் கட்டுரைகள் [திரு.வி.க.நினைவுகள்]
இதற்கு சிறந்த உதாரணம். அவ்வகையை சார்ந்தது வைரமுத்துவின் தீவிர ரசிகரான
மரபின் மைந்தன் முத்தையா அவரைப்பற்றி எழுதிய ‘ஒருதோப்புக் குயிலாக…’என்ற
நூல். வைரமுத்துவின் பன்முகப்பட்ட குணங்களை நினைவிலிருந்து சகஜமாகச்
சொல்லும் தன்மையுடன் எழுதப்பட்ட ஆர்வமூட்டும் நூல் இது.
நான்குவருடங்களுக்கு முன்பு தஞ்சையில் செழியன் எனபவரை சந்தித்தேன்.
வைரமுத்து ரசிகர். பேரவை உறுப்பினர். அவருடன் சில நண்பர்களும்
இருந்தார்கள். அவர்களுக்கு வைரமுத்துவிடம் உள்ள ஈடுபாடு உண்மையானதும்
சுயநலம் கருதாதுமாகும் என்பதை உணர்ந்துகொண்டேன். அதற்கு அவர்களின்
வாழ்க்கை காரணமாக அமைந்திருந்தது. மிகச்சாதாரணமான நிலையிலிருந்து
உழைப்பால் வணிகத்தில் உயர்ந்து சமூகத்தில் ஓர் இடத்தை அடைந்தவர்கள்.
அவர்களுக்கு அவர்களின் இளமையில் வைரமுத்துவின் கவிதைவரிகளும் பாடல்
வரிகளும் ஊக்கமூட்டும் சக்தியாக இருந்திருக்கின்றன. வாழ்க்கையில் ஒரு
பிடிப்பையும், எதிர்கால நம்பிக்கையையும் உருவாக்கியிருக்கின்றன. அப்படி
பலரை நான் பின்னால் சந்திக்க நேர்ந்தது.
பின்னர் அதைப்பற்றி யோசித்தபோது வைரமுத்து என்ற ஆளுமையின்
குறிப்பிடத்தக்க இயல்பு ஒன்று இதில் இருப்பதை உணர்ந்துகொண்டேன்.
முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர்.
கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது.
அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை.
சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம்
போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட
நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த
தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.
இளைஞன் ஒருவன் அதிலிருந்து அளவிலா ஊக்கம் அடைவதை அப்படித்தான்
புரிந்துகொள்ள முடிகிறது.
அந்த அம்சமே முத்தையாவையும் கவர்ந்திருக்கிறது என்பதைக் காட்டும் சிறு
நூல் இது. வைரமுத்துவின் நேரடியாகப் பழகும் குணம்,நீடித்த நட்புகளை
கொண்டிருக்கும் இயல்பு, அன்றாடவாழ்க்கையில் ஒவ்வொரு கணத்திலும் இருக்கும்
சமநிலையான நோக்கு, லௌகீக வாழ்க்கையை துல்லியமாக திட்டமிட்டுக் கொள்ளும்
தன்மை போன்றவற்றை இந்நூல் விவரிக்கிறது. ஆனால் வழக்கமாக நாம் இத்தகைய
நூல்களில் காணும் புளகாங்கிதமோ உபச்சாரமோ இல்லாமல் சாதாரணமாக அவற்றைச்
சொல்கிறது.
மேடை அமைப்பதற்கு முன் ஒவ்வொருமுறையும் ஒலிப்பெருக்கியை சோதனை
போட்டுக்கொள்ளும் வைரமுத்து அதற்காக வரிசையாக திருக்குறள்களைச் சொல்லும்
காட்சி சில சொற்களிலேயே அவரது ஆளுமையின் கோட்டுச்சித்திரத்தை அளிக்கிறது.
தன் கல்யாணமண்டப மேலாளரிடம் அவரது மேஜையில் ஆம்புலன்ஸ் எண் இருக்கிறதா
என்று கேட்கும் வைரமுத்துவில் உள்ள நிர்வாகியும் சரி, ‘எது சிறந்த
வீடுதெரியுமா, பகலில் மின்சாரம் பயன்படுத்தாத அளவுக்கு காற்றும் ஒளியும்
இருக்கும் வீடுதான்’ என்றுசொல்லும் விவேகியும் சரி, உரையாடல்களில் சிறு
சிறு இடக்குகளை உடனடியாகச் சொல்லும் நண்பரும் சரி துல்லியமாக
தெரியவந்திருக்கிறார்கள்.
இந்நூலில் வைரமுத்துவின் மேடைக்கூற்றுகளும் நகைச்சுவைகளும் நிறையவே
பதிவாகியிருக்கின்றன. அவரது மொழித்திறன் மற்றும் நேரக்கணக்கு ஆகியவற்றை
காட்டும் இடங்கள்.’வெண்பா போல வாழுங்கள்’ என்று மணமக்களை வாழ்த்தி ‘தன்
தளை தழுவி பிற தளை தழுவாது வாழ்வது வெண்பா. நாள் மலர் காசு பிறப்பு ஆகியவை
வெண்பாவின் ஈற்றசைகள். உங்களுக்கு நாட்கள் மலரட்டும். காசும் பிறப்பும்
நிகழட்டும்’ என்று வாழ்த்தும் வரி உதாரணம்.
வைரமுத்துவின் ஒரு பாடலை முத்தையா உதாரணம் காட்டுகிறார்.
பட்சி உறங்கிருச்சு பால் தயிரா தூங்கிருச்சு
நொச்சி மரத்து இலைகூட தூங்கிருச்சு
காசநோய் காரிகளும் கண்ணுறங்கும் வேளையிலே
ஆசநோய் வந்த மக அரநிமிஷம் தூங்கலியே
கல்லாடம் ஆசிரியர் ‘நொச்சி பூவுதிர் நள்ளிருள் நடுநாள்’ என்று
சொலவதையும் அந்த நுட்பம் இயல்பாக வைரமுத்துவால் நாட்டுபுறப்பாட்ட்டுக்குள்
கொண்டுவரப்பட்டிருப்பதை முத்தையா சுட்டிக்காட்டுகிறார்.
இன்னும் பொருத்தமான மரபுத் தொடர்ச்சி குறுந்தொகையில் வருகிறது. கொல்லன்
அழிசியின் பாடலில் ‘என் வீட்டுக்கு அருகே உள்ள ஏழில்மலையில் மயிலின்
குஞ்சி போல இலைகள் கொண்ட நொச்சிமரம் பூக்களை உதிர்த்து கொண்டிருக்கும்
ஒலியை இரவெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்’ என்று தலைவனை காத்து
தூங்காமலிருக்கும் தலைவி அவனிடம் சொல்கிறாள். தூங்காத மரம், இரவின்
நீட்சியைக் காட்டும் மரம் என்ற பொருளில் நொச்சி இங்கே
கையாளப்பட்டிருக்கிறது. நொச்சியும் தூங்கிவிட்டது என்ற சொல் இந்தபொருளில்
மேலும் ஆழம் கொள்கிறது.
வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும்
சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில்
ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு
மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன்
கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின்
பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம்.
நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச்
செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே
வைரமுத்துவின் தனித்தன்மை.
ஒரு நுண்ணிய ரசிகராக அதைச் சுட்டிக்காட்டும் நோக்கு முத்தையாவிடம்
இருப்பதனாலேயே இந்நூல் ஒரு உபச்சாரப்படைப்பாக இல்லாமல் நேர்த்தியான
சித்தரிப்பாக ஆகியிருக்கிறது.
[ஒரு தோப்புக் குயிலாக. கவிபேரரசு வைரமுத்து அவர்களுடன். மரபின்
மைந்தன் முத்தையா. விஜயா பதிப்பகம் 20, ராஜவீதி கோவை.1 பக்கம் 164 விலை
60]
லீலார்த்தம்from RP ராஜநாயஹம் by
RP RAJANAYAHEMஇந்திரா
பார்த்தசாரதி தன் படைப்புகளில் பாரதி, கிருஷ்ணன், ராமாநுஜர், ஆண்டாள்,
மகாத்மா காந்தி, ஷேக்ஸ்பியர் அவ்வப்போது பேசுவதை நாம் காணமுடியும்.
ராமாநுஜர் பற்றி நாடகம் எழுதி ‘சரஸ்வதி சம்மான்' விருது கிடைத்ததை
அறிவோம். இப்போது ‘கிருஷ்ணா கிருஷ்ணா' என்று ஒரு நாவல் எழுதி
வெளிவந்திருக்கிறது. கிருஷ்ணன் என்ற அரசியல்வாதியை, அவனுடைய லீலைகளை,
லீலைகளின் அர்த்தபுஷ்டியை கிருஷ்ணனே ஜரா என்ற வேடனிடம் சொல்லி ஜரா என்ற
அந்த வேடன் அந்த லீலார்த்தத்தை நாரதர் என்ற உலகின் Frist Ever journalist
இடம் சொல்லி அதை வாய்மொழியாகச் சொல்வதாக ‘கிருஷ்ணா கிருஷ்ணா' நாவல்
அமைந்திருக்கிறது. கிருஷ்ண லீலார்த்தம் எவ்வளவு கனமானதாக அடர்த்தியானதாக
இப்போதும் சாசுவதத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது என்பதை இயல்பாக இ.பா.
சொல்லியிருக்கிற நாசூக்கு அவருடைய புத்திசாலித்தனமான எழுத்துக்கு
அந்நியமான விஷயமில்லை.
பல வருடங்களுக்கு முன்னர் நான் புதுவையில்
இந்திரா பார்த்தசாரதியுடன் இரண்டு வருடம் பழகிய நாட்களில் ஒரு முறை
வி.என்.ஜானகி - ஜெயலலிதா அரசியல் போட்டியில் Power Monger ஆக ஜெயலலிதா
விஸ்வரூபமெடுத்து ‘கட்சி' அவர் கைவசமாக ‘தொண்டர்கள்' காரணமான விஷயம் பற்றி
பேச்சு வந்தது. அப்போது இ.பா. சொன்னார். ‘ நம்முடைய கலாச்சாரம்' அப்படி.
யாராவது 'ருக்மணி கிருஷ்ணன்' என்று பெயர் வைக்கிறார்களா? ‘ராதா கிருஷ்ணன்'
என்ற பெயர்தானே பிரபலம். யோசித்துப் பார்க்கும்போது சுவாரசியமாக இருந்தது.
ஆமாம் முன்னாள் ஜனாதிபதி முதல் இன்னாள் ஆபீஸ்பாய் வரை ராதாகிருஷ்ணன் என்ற
பெயர் அமைந்தவர்கள்தான் !. The other Woman is Always Powerful !!
ராதா
என்ற அந்தப் பெண் கிருஷ்ணனுக்கு அத்தை முறை. இன்னொருவனின் மனைவி.
கிருஷ்ணனை விட ஏழு வயது மூத்தவள். ஆனால் கிருஷ்ணனுக்கு ராதா மேல் தான்
ப்ரீதியும் பிரேமையும் மிக அதிகம்.
அவனுடைய அவதாரம் பற்றி
பேசப்படுகிற பாகவதம், பாரதம் என்று எந்தக் காவியத்திலும் கிருஷ்ணன் கதா
நாயகன் இல்லை. அவன் அரசனாகவும் இல்லை. கிருஷ்ணாவதாரத்தின் முக்கிய எதிரி
ஜரா சந்தனை கிருஷ்ணன் கொல்லவில்லை. பீமன் தான் கொல்கிறான். கிருஷ்ண
லீலார்த்தம் ஒழுங்கமைவை சீர் குலைத்து விடுகிறது.
பிருந்தாவனப்
பெண்களுக்கு கிருஷ்ணனால் கிடைக்கும் விடுதலையுணர்வு, ராதவுடனான Bridal
Misticism இவற்றை உணரும்போது தான் கிருஷ்ண லீலார்த்தப் பரிமாணம்
புரிகிறது. கிருஷ்ணன் இல்லாது போயிருந்தால் நம் இந்தியக் கலைகள், இசை,
நடனம், காவியங்கள் யாவுமே உலர்ந்து போய் ஒரு ‘ Ennui ' கவிழ்ந்திருக்கும்.
வாழ்க்கை
எனும் அலகிலா விளையாட்டின் அர்த்தத்தை கிருஷ்ணனின் முரண்பட்ட
குணச்சித்திரத்தின் மூலம் நுட்பத்துடனும் ஒரு அலட்சிய பாவத்துடனும்
இந்திரா பார்த்தசாரதியே பேசுவது போன்ற நடை. நாவல் ஒரு காவிய
சம்பந்தப்பட்டது என்பதற்காக செயற்கை இறுக்கமாக உரை நடையை அவர்
அமைக்கவில்லை என்பது வாசகனுக்கு ஆசுவாசம் தருகிறது. நாரதன் ‘ திரிலோக
சஞ்சாரி. சகஜமாக Macbeth பற்றி பேசுகிறான். முனிவர்கள், ரிஷிகள் எப்போதுமே
Kill - Joys தான் என்கிறான்.
இந்திரா பார்த்தசாரதியின் எழுத்து
பற்றி ஒரு ஜோக் இலக்கிய வட்டாரங்களில் உண்டு. ‘இ.பா.வின் நாவலை தமிழில்
மொழிபெயர்க்க அவரிடம் அனுமதி வாங்க வேண்டும் ‘ என்று. ஓரளவு ஆங்கில
பரிச்சயம். ஓரளவு என்ன நல்ல ஆங்கில அறிவு உள்ளவர்கள் இ.பாவை ரசிக்க
முடியும். இந்த நாவலிலும் ஆங்கிலம் எந்த reservation னும் இன்றி இயல்பாக
வந்து விழுகிறது. தனித்தமிழ் அன்பர்கள் திசைச்சொற்கள் அதிகமாகயிருப்பதால்
முகம் சுளிக்க வேண்டியதுதான் வேறு வழியில்லை.
மு.கருணாநிதி
சமீபத்தில் சென்ற 10.09.2004 முரசொலியில் கிருஷ்ணன், ராதா பற்றி
எதிர்மறையாக உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த வேடிக்கை வினோதம்
பற்றி இலக்கிய உலகம் அறியுமா என்று தெரியவில்லை.
‘கிருஷ்ணன்
அடுத்தவன் மனைவி ராதாவுடன் உறவு கொண்டவன். பாஞ்சாலி ஐந்து பேருடன்
படுத்தவள். கிருஷ்ணன், ராதா, பாஞ்சாலி ஒழுக்கமில்லாதவர்கள் - துரியோதனன்
குடும்பம் கண்ணியமான குடும்பம். அவனுடைய மனைவி பானுமதி ஒரு பத்தினி
என்றெல்லாம் கருணாநிதி உடன் பிறப்புக்கு கடிதமெழுதியிருக்கிறார்.
அந்தக்
கடிதம் எனக்குப் படிக்க வாய்த்தபோது இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா
கிருஷ்ணா' நாவலுக்கு எழுதப்பட்ட திராவிட இயக்க விமர்சனம் போல தோன்றியது
கூட ஒரு Irony தான்.
துரியோதனனும் பீமனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள்.
இன்னொரு சுவையான தகவல் இந்த நாவலில் தெரிய வருகிறது. இருவருக்கும் உள்ள
ஒரு முக்கிய உறவு இருவரும் சகலைபாடிகளும்கூட. பானுமதியின் தங்கை ஜலந்தரா
பீமனை மணக்கிறாள். கிருஷ்ணன் தான் இதற்கும் தூது போகிறான்.
கிருஷ்ணன் ஒரு சமுதாயக் கனவு என்பதை நிறுவிக் காட்டுவதில் இந்திரா பார்த்தசாரதிக்கு வெற்றி கிட்டியிருக்கிறது.
கிருஷ்ணன்
தன் ஆத்ம அன்பன் பார்த்தனிடம் ‘ எனக்கு எட்டு மனைவியர் உண்டு. ஆனால் ஒரே
ஒரு காதலி தான்' என்று அந்தரங்கமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறான்.
அப்படிப்பட்ட ஒரே காதலி ராதாவைத்தான் தன் அந்திமக் காலத்தில் சந்திக்க விரும்புகிறான். Classical Situation.
ராதாவின்
குடிசைமுன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அவளுடைய பேரப்பிள்ளைகள். ‘ராதா
எங்கே' என்று அந்தச் சிறுவர்களிடம் கேட்கிறான். அவர்கள் ‘ராதாப் பாட்டியா
? ' என்று கிருஷ்ணனைக் கேட்கிறார்கள். இவனுடைய அழகு நளினம், குழல் நரைத்து
தளர்ந்து கூனி கண்ணில் கைய குடையாக்கி இவனைப் பார்ப்பதை பார்க்கவேண்டுமா ?
வேண்டாம். அங்கிருந்து கிளம்பி ஜரா என்ற வேடனை காண வருகிறான். ஜரா தான்
கிருஷ்ணவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறவன்.
Fate Proves Stronger than Misfortune !
விதி செய்யும் விளைவினுக்கே வேறு செய்வார் புவி மீதுளரோ ?
‘
தந்திர பூமி' கஸ்தூரி. 'சுதந்திர பூமி' முகுந்தன் போன்றவர்களிடம் கூட
கிருஷ்ணனின் சாயலைக் காண முடியும். இந்திரா பார்த்தசாரதியின் ‘மாயமான்
வேட்டை' நாவலிலும் கிருஷ்ண லீலார்த்தம் விரவிக் கிடக்கும். அவருடைய ‘
ஒளரங்கசீப்' நாடகத்திலும் கூட. Krishna is a colorful, Multi -
Dimensional Evergreen Charactor. He is not a Hero. But he is the
dominating charactor.
நாம் அனுபவிக்கும் துயரங்கள் தாம் நம் மன
வலிமையை நிர்ணயிக்கும் அளவுகோல். மனிதனுடைய பிரச்சினைகள் தீராதவை என்பதில்
தான் வாழ்க்கையின் சுவாரசியம் இருக்கிறது.
The Intray is never Finished
கிருஷ்ணா கிருஷ்ணா நாவல் – இந்திரா பார்த்தசாரதி.
புதுப்புனல் வழங்கும் பன்முகம் ஏப்ரல் – ஜூன் & ஜூலை – செப்டம்பர் 2005
கம்பன் தொட்டதெல்லாம் பொன் - கமலா சங்கரன்
தொட்ட இடமெல்லாம்
பொன்மயமே! நூலாசிரியர் வாயிலாக கம்பனைப் படிக்கும்போது தமிழார்வம் கொண்ட
எவரும் உள்ளம் பூரிப்பது நிச்சயம், அந்த கவிதை வரிகளில் பொதிந்திருக்கும்
ஆழமான கருத்துகள் ஆச்சரியப்பட வைக்கும். கம்பன் தொட்டதெல்லாம் பொன்னான
ரசவாத வித்தையை பல பாடல்களின் வாயிலாக நூலாசிரியர் விளக்கியிருக்கும்
விதம் படித்துப் படித்து மகிழ வேண்டிய ஒன்று. 45/
பொன்னிவனத்துப் பூங்குயில் - கொத்தமங்கலம் சுப்பு
மன்னராகவே வாழ்ந்துவிட்டு வரலாம். மனதை உலுக்கும் காதல் கதை, ஒரு
சாம்ராஜ்யத்தில் இத்தனை மாற்றங்களை உண்டு பண்ணியதா என்று அதிர்ச்சி
அலையிலிருந்து வெளியே வரமுடியாமல், புத்தகத்தை மூட மனமின்றி, திகைத்து
நிழலாட வைக்கிறது. சுமார் 50 வருடங்களுக்கு முன் கொத்தமங்கலம் சுப்பு
எழுதிய ‘பொன்னிவனத்துப் பூங்குயில்‘ இன்றும் உயிரோட்டமுடன் நம்மை
உலுக்குகிறது. இந்த நாவலை வாசகர்களுக்கு விருந்தாகப் படைப்பதில் பெரும்
மகிழ்ச்சி அடைகிறோம். Rs.115
வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் அனில்குமார் எ.வி. (தமிழில்: டி.கே.ரவீந்திரன்)
உலக அளவில் இந்தியாவுக்குப் பெயர் பெற்றுத் தந்த மகத்தானவர்களில் கேரள
அரசியலில் ஒரு சகாப்தமாக விளங்கிய அமரர் இ.எம்.எஸ். என்கிற ‘ஏலங்குளம் மனை
சங்கரன் நம்பூதிரிப்பாடு‘ ஒருவர் அவருடன் நெருங்கிப் பழக நேர்ந்த
அனில்குமார் ஏ.வி., மூன்று பிரிவாகப் பிரித்துக் கொண்டு இ.எம்.எஸ்.-ஸின்
வாழ்க்கையை இந்த நூலில் அலசுகிறார். டி.கே.ரவீந்திரன்
மொழிபெயர்த்துள்ளார். மிகச் சிறந்த வாழ்க்கை வரலாற்று நூலுக்கான 1996ம்
ஆண்டுக்கான கேரள சாகித்ய அகாதெமி விருது பெற்ற மலையாள நூலை
மொழிபெயர்ப்புச் செய்து தமிழ் வாசகர்களுக்கு விகடன் பிரசுரம் மூலமாக
வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்! 55/-
தீரன் சின்னமலை - சூலூர் கலைப்பித்தன்
வெகுண்டெழுந்த வீரச் சிங்கங்கள்
இந்திய
சுதந்திரப் போராட்டம் சிப்பாய் கலகத்திலிருந்து தீவிரம் அடைந்தாலும்கூட,
அதற்கு முன்பே தமிழகத்தில் விடுதலைக்கான விதைகள் தூவப்பட்டன. பூலித்தேவன்,
மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் தீரன் சின்னமலையும்
விடுதலை வேள்வியைத் தொடங்கிவைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடு
பிடிக்க வந்த வெள்ளையர்கள், இந்தியாவில் சிதருண்டுக் கிடந்த அரசர்களையும்
குறுநில மன்னர்களையும் பார்த்து வியாபார வலை வீசினார்கள். வெள்ளையர்கள்
சூழ்ச்சி செய்து பின்னால் நம் தேசத்தையே சூரையாடப் போவது தெரியாமல்
அரசர்களும் குறுநில மன்னர்களும் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். அப்படிக்
காலடி வைத்த வெள்ளை ஏகாதிபத்யம், இந்தியாவுக்குள் இருக்கிற வியாபாரச்
சந்தையை கருத்தில் கொண்டு, நம் நாட்டில் இருக்கிற இயற்கைச் செல்வ
வளங்களையெல்லாம் தங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்ல, கிழக்கிந்தியக்
கம்பெனியைத் தொடங்கியது. எந்தச் சூதும் அறியாத அப்பாவி இந்தியப் பிரஜைகள்
கிழக்கிந்தியக் கம்பெனியிலேயே பணியில் சேர்ந்து, வெள்ளையர்களுக்கு
மறைமுகமாக உதவிவந்தனர்.
இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட வெள்ளையர்கள், ஆக்டோபஸ் போல
கொஞ்சம் கொஞ்சமாக நம்மை வளைத்துச் சுறண்டத் தொடங்கி, இறுதியாக நம்மிடமே
வரி வசூல் செய்து, நம் தேசத்துக்குள் இருந்துகொண்டு நம்மையே
அடிமைப்படுத்தினார்கள். இந்தச் சூழலை நன்கு உணர்ந்து பொறுக்க முடியாமல்
ஆர்ப்பரித்த வீரர்களில் ஒருவன்தான் தீரன் சின்னமலை. வெள்ளையர்களை
விரட்டியடிக்க முடியாவிட்டாலும், அன்னியர்களின் கண்களில் விரல் விட்டு
கலங்கச் செய்து, கொங்கு நாட்டில் எண்ணற்ற வீர இளைஞர்கள் வளர வித்திட்டான்
தீரன் சின்னமலை. வரலாற்று வீரனான தீரன் சின்னமலையைப் பற்றிய இந்த நூல்,
இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கும்
உதவியாக இருக்கும். மறைக்கப்பட்ட நம் வீர இளைஞர்களின் வரலாறுகளைத்
தெரிந்துகொள்ள பல புதையல்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.
அந்தப் பணியை நூலாசிரியர் திறம்பட ஆற்றியிருக்கிறார். வரவேற்போம். 45/-
பாரதியின் பார்வையில்... மு.ஸ்ரீனிவாசன்
ஓ! இப்படியும் ஒரு பாரதியா? ஒரு நண்பனாக; நல்லாசிரியனுமாக இருந்த பாரதி,
பண்பிலே தெய்வமாக, நம் எல்லோருக்குமே வழிகாட்டியாகவும் இருக்கிறான், இவன்
பாரதிதானா, அல்லது கலைவாணியேவா என்ற மலைப்பு, இந்தப் புத்தகத்தை
வாசிக்கும்போது நமக்கு ஏற்படும் 60/-
கதை கேளு... கதை கேளு... - சிறுகுடி பார்வதி தண்டபாணி
அன்புக்கும் அறிவுக்கும்...
ஊடகங்கள்
இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச்
சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக்
கதைகளாகவும் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த அத்தகைய கதைகள், அச்சு
ஊடகம் வந்த பிறகு அரியணை ஏற வாய்ப்புப் பெற்றன. கிராமியப் பாடல்கள்கூட
திரைப்படம் என்ற ஊடகத்தின் திரையில் ஒலி-ஒளி பெற்று பிரகாசம் அடைந்து
விடுகிறது. ஆனால், கிராமியக் கதைகளுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு
சொல்லும்படியாக இல்லை. அச்சு ஊடகம் மட்டுமே அந்த வாய்ப்பை தொடர்ந்து
வழங்கிவருகிறது.
இதுபோன்ற கிராமியமணம் கமழும் கதைகளைக் கொண்டு,
சமூகத்துக்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் ‘கதை கேளு... கதை கேளு...’
என்ற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழில் தொடராக எழுதிவந்தார் சிறுகுடி
பார்வதி தண்டபாணி. அதாவது, அவர் சொல்லச் சொல்ல செவிவழியாகக் கேட்டு
கிராமிய நடை மாறாது எழுத்தாக்கியிருக்கிறார் எழுத்தாளர் சுபா. சுபாவின்
எழுத்து நடைக்கே உரிய எளிமையும் ஆழமும் இந்தக் கதைகளில் வாசகர்கள்
பார்க்கமுடியும். தொடராக வந்தபோதே பெண்கள் மட்டுமின்றி அனைவரையும் கவர்ந்த
கதைகளாக இவை அமைந்திருந்தன. ‘அவள் விகடன்’ இதழில் வெளிவந்த இந்தக் கதைகள்
தொகுக்கப்பட்டு இப்போது ஒரே நூலாக வெளிவந்திருக்கிறது. வாசகர்களின்
அன்புக்கும் அறிவுக்கும் இந்நூல் பாத்திரமாகும். 55/-
என் கதையும் கீதமும் - சரசு தாமஸ்
ஓர் இனிய கீதம்!
மனித
வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பது இயல்பு. தனக்கு உண்டாகும்
இன்னல்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி
பெறுகின்றனர்.
ஒரு
சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கை ஒரு போராட்டம் என்றால், உடல் ஊனமுற்றவருக்கு
போராட்டமே வாழ்க்கையாகிறது. அவ்வாறான சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட ஒரு
பெண்ணின் சுயசரிதமே ‘என் கதையும் கீதமும்’. தனது ஐந்தாவது வயதில்,
போலியோவால் பாதிக்கப்பட்டுக் கால்களின் இயக்கத்தை இழந்தவர் சரசு தாமஸ்.
தன் பெற்றோருக்குப் பாரமாக இருக்க விரும்பாத அவர், திருவனந்தபுரத்திலுள்ள
‘செஷயர் ஹோம்’-ல் சேர்ந்தார்.
சரசு தாமஸ், தனது அனுபவங்களை கல் நெஞ்சும் உருகும்வண்ணம் எழுதியுள்ளார்.
அவருடைய வாழ்க்கையை தூரத்திலிருந்து பார்க்கும்போது சாதாரணமாகவே தோன்றும்.
ஆனால், அவரது எழுத்துக்களை வாசிக்கும்போது, அசாதாரணமான அனுபவங்களைப்
புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நூலைப் படிப்பவர்கள், தங்களின் எதிர்மறை
எண்ணங்களில் இருந்து விடுபட்டு, புது உத்வேகத்தை அடைந்து, இன்னல்களைத்
தகர்த்தெறிந்து, வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வது உறுதி. ‘என் கதையும்
கீதமும்’ ஒரு சுயசரிதை நூல்தான் என்றாலும், சமூக நாவலுக்கு உரிய அத்தனை
அம்சங்களையும் கொண்டுள்ளது. மொழியாக்கமும் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளது.
இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, ஒரு சிறந்த நாவலைப் படித்த
திருப்தியும், மனதை வருடிச் செல்லும் ஓர் இனிய கீதத்தைக் கேட்ட அனுபவமும்
உண்டாகும் என்பதில் ஐயமில்லை. - 60/-
எனது கிராமம் எனது மண் - அண்ணா ஹஜாரே
கிராம
முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சி: இந்நூலில் அழகற்று, ஆதரவற்றுக் கிடந்த
கிராமத்தை, தன்னுடைய அயராத சிந்தனை மற்றும் உழைப்பின் மூலம், மற்ற மாநில
மக்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றியது பற்றிய அனுபவங்களை
இந்நூலில் தெரிவித்துள்ளார். தன் கிராமத்தை எப்படியெல்லாம் நல்வழிக்குக்
கொண்டு வர முயன்றார்; அப்போது ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அவர் எப்படி
முறியடித்தார்; எப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினார் என்பதை அண்ணா
ஹஜாரேயின் வாழ்க்கையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இப்புத்தகத்தைப்
புரட்டும் ஒவ்வொரு விரல்களும் எதிர்காலத்தில் வலுவான சமுதாயத்தை உருவாக்க
உறுதி எடுக்கும். 50/- 70/
Rs. 50/-& Rs.65
கடல் நிலம்‘கடலின் மொழி அலையா... நுரையா..?’
-இந்தப்
பாடலிலிருந்து மேலும் விரிகிறது கடலின் மொழி. யாருக்குமே புரியாமல் மிக
ரகசியமாய், கடல்கோளாய், புயலாய், சுனாமியாய்... மனிதனை ஆட்டிப்படைக்கிறது!
கடல்
அள்ளிக் கொண்ட நகரங்களைப் பற்றி வரலாறுகளிலும் இலக்கியங்களிலும் படித்துக்
கொண்டிருந்த நமக்கு, நம் காலத்திலேயே கடலின் வேறொரு முகம்
தெரிந்துவிட்டது!
குழந்தையைப்
போல் கண்களை அகல விரித்துப் பார்த்துப் பழகிய சாதுவான கடல், திடீரென்று
மிருகத்தின் கூரிய நகங்களைப் போல் கரையேறி வந்தபோது நாம் அடைந்த அச்சம்
நமக்கே தெரியும். அந்த அச்சமும் இழப்பும் ஏற்படுத்திய வலிதான் இந்த ‘கடல்
நிலம்’ நாவல்.
1964-ல்
ராமேஸ்வரம் பகுதியில், கடும் புயலாலும் கடல் சீற்றத்தாலும் ஏற்பட்ட
பேரழிவுகளை கண்முன் நிறுத்துகிறது. இயற்கையின் அந்தச் சீற்றத்தை நேரெதிரே
பார்த்தவர்கள் இப்போது இதைப் படித்தால், காயங்களின் வலியை மீண்டும்
அனுபவிப்பார்கள். அந்த அளவுக்கு உண்மையாகவும் ரத்தமும் சதையுமாகப்
படைக்கப்பட்டிருக்கிறது இந்த நாவல்.
மீனவர்களின்
வாழ்க்கையை விவரிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், நெய்தல் நிலத்தை அப்படியே
படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் விஜயகிருஷ்ணன்.
கவித்துவம் நிறைந்த அவரது மொழிநடை, நாவலுக்குக் கூடுதல் பலம்
சேர்த்திருக்கிறது.
தரமான இலக்கிய நூல்கள் வரிசையில் ‘கடல் நிலம்’ நாவலுக்கும் நிச்சயம் இடம் உண்டு Rs.50
கண்டுபிடித்தது எப்படி?:கொரட்டூர் கே.என்.ஸ்ரீனிவாஸ்
கண்டுபிடிப்புகளின்
சுவாரஸ்யமான சம்பவங்களைப் படித்தால், அறிவியல் ரீதியில் நாமும் ஏதாவது
கண்டுபிடிக்கவேண்டும் என்ற உத்வேகம் நமக்குள் ஊற்றெடுக்கும் அறிவியல்
அடிப்படையும் ஆர்வமும் ஒரு துளி இருந்துவிட்டால் போதும். அடுத்த
தலைமுறைக்கு இந்த அறிவியல் நுட்பங்களின் பயனை, கண்டுபிடிப்புகளின்
வரிசையைக் கொண்டு சென்றவர்களாவோம். இந்த நூல் மாணவர்களுக்கும் அறிவியல்
ஆர்வலர்களுக்கும் ஒரு டானிக், அடிப்படைக் கையேடு. Rs. 50/-
Rs.40
50/ -ஜி.எஸ்.எஸ்.
சக
பதிவரும், தோழருமான பாலபாரதியின் அவன் - அது = அவள் படிக்கக் கிடைத்தது.
இந்த நெடுங்கதையை பற்றிய என்னுடைய சில கருத்துக்களை இங்கே பதிவு செய்ய
எண்ணம். கதை மூன்றாம் பாலினத்தவர் பற்றியது. உண்மையிலேயே பதிவுலகிற்குள்
லிவிங் ஸ்மைல் வித்யா வராதிருந்தால் இத்தகைய மனிதர்களைப் பற்றிய எனது
கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் என் மீதே
அருவெறுப்பாக இருக்கிறது - இவர்களை மனிதர்கள் என்றே நினைத்திருந்திருக்கப்
போவதில்லை என்ற கசப்பான உண்மை என்னைப் பற்றி நானே வலிந்து உருவாக்கி
வைத்திருக்கும் முற்போக்கு அடையாளங்களை ஆட்டம் காண வைக்கிறது. முன்பே
சு.சமுத்திரத்தின் வாடாமல்லியைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த போதும்
படிக்கத் தோன்றியதில்லை என்பதே இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றிய
என்னுடைய அலட்சியத்துக்கு சாட்சி. வித்யாவின் எழுத்துக்களே இத்தகைய சக
மனிதர்களின் மீதான் என் பார்வையை மாற்றியமைத்தது எனலாம். இப்போது இந்த
புத்தகம் இன்னும் கொஞ்சம் கூடுதல் தெளிவைக் கொடுத்திருக்கிறது.
தற்கொலை
செய்து கொள்ள வேண்டும் என்று எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பீர்களா?
‘ஆமாம், ஒரே ஒரு முறை நினைத்திருக்கிறேன்’ என்று சொல்பவர்கள் நம்மில்
அநேகர் உண்டு.
உடலளவில் ஆணாகவும், மனத்தளவில் பெண்ணாகவும்
இருக்கும் சிலருக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்? தினம் தினம்
செத்துப்போகலாம் என்று நினைத்துக் கொண்டே வாழ்க்கையை எப்படியாவது
முழுமையாக வாழ்ந்து தீர்த்துவிட வேண்டும் என்று ஆசைப்படுபவர்களே இவர்கள்.
தங்கள்
வாழ்க்கையின் அவலத்தைப் பற்றி என்னிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு திருநங்கை
- வாழ முடியவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டவள், அடுத்த நாள்
தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வந்தது.
எனது தந்தையின் மரணமும்,
தங்கையின் மரணமும் என்னை உலுக்கியதைவிட அந்தத் திருநங்கையின் தற்கொலை
என்னை அதிகம் நிலைகுலைய வைத்தது. இதைவிட சோகம் அந்தத் தற்கொலைச் சம்பவம்,
காவல்துறைப் பதிவுகளில் விபத்து என்றே பதிவு செய்யப்பட்டது.
பெண்களாகவும்
இல்லாமல் ஆண்களாகவும் இல்லாமல் திருநங்கைகளாக மாறியவர்களுக்கு
வாழ்க்கையின் மீது இருக்கும் தீராத காதலே இந்தப் புனைவு. இது முழுவதும்
புனைகதை என்று சொல்வதற்கு இல்லை. பல திருநங்கைகளின் வாழ்வில் இருந்து
எடுக்கப்பட்ட சம்பவங்களின் தொகுப்பே இந்த நெடுங்கதை. இக்கதையை
வாசிப்பவர்கள் திருநங்கைகளின் வாழ்வில் இருக்கும் வலியை உணர்ந்து, சக
மனிதர்களாக அவர்களை மதித்தால் இந்தப் படைப்பு பூர்ணத்துவமடைந்துவிடும்.
இது நூலின் என்னுரையில் ஆசிரியர் இந்த நெடுங்கதையைப் பற்றிச் சொல்லியிருப்பது.
கதை
என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது
பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு
செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின்
பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து
பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின்
பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான்
இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை.
அடுத்தது கதை சொல்லப் பட்டிருக்கும் மொழி - இது மிக எளிமையானதாக
இருப்பதால் அதற்கென அதிகம் மெனக்கிடாது விரைவாக கதைச் சரடைப் பிடித்துப்
போக முடிகிறது. இத்தனைக்கும் வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும்
பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி
என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு
மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப்
பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.
பெண்களுக்கு மட்டுமே
நேருவதாக நாம் நினைத்திருக்கும் பல கொடுமைகள் இந்த மனிதர்களுக்கும்
பொதுவானவை என்பதைச் சொல்வதோடு இவர்களுக்கேயான பிரத்யேகமான அவலங்களையும்
பட்டியலிடுகிறது கதை. ஆனால் ஒன்றை குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும் -
முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் பலாத்காரம் முதலாக
கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல
பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும்
போய்விடவில்லை கதை. அதே போல திருநங்கைகளின் ஒவ்வொரு பிரச்சனையையும் பற்றி
பேசுவதற்காக ஒவ்வொரு கதாபாத்திரம் பிரத்யேகமாக படைக்கப் பட்டிருப்பது
புரிந்தாலுமே கூட அப்பாத்திரங்கள் கதையோடு ஒட்டாது எந்த இடத்திலும்
துருத்திக் கொண்டு தெரிவதில்லை. பாத்திரப் படைப்பு என்பது மிகவும் இயல்பாக
இருக்கிறது.
திருநங்கையர் சமூகத்தின் செயல்பாடுகள் - அவர்களின்
ஜமாத் எனப்படும் குழு வாழ்க்கை முறை, ஒவ்வொருவரும் ஒரு சில பெண்களை தத்து
எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது,
அவர்களுக்கான பிரத்யேக சடங்குகள்(மரண காரியங்களிலிருந்து அவர்களுக்கே
உரித்தான குறி நீக்கம் செய்து கொள்ளும் நிர்வாண சடங்கு வரை) பல விஷயங்கள்
விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப்
பட்டிருக்கிறது.
நூலில் பாலபாரதியின் என்னுரை மட்டுமே
காணக்கிடைக்கிறது. ஆசிரியரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணோம்.
ஆசிரியருக்கு தன்னடக்கம் தடுத்திருக்குமேயானால் கூட
பதிப்பகத்துக்காரர்களாவது இரண்டு வரியை எழுதிச் சேர்த்திருக்கலாம்.
வலையுலகிலிருக்கும் நமக்கு அவரைப் பற்றித் தெரியுமென்றாலும் ஒரு பொது
வாசகருக்கு ஆசிரியரைப் பற்றிய குறிப்புகள் சற்றே படைப்பின் மீதான
நம்பகத்தைக் கூட்டலாம். அடுத்த பதிப்பிலேனும் கவனத்தில் கொண்டால்
நல்லது(அதற்கு அவரது ப்ரொஃபைல் மேலும் செறிவுள்ளதாக வாழ்த்துக்கள்
).
நூலைப்
பொறுத்த வரை எனக்கு மிக முக்கியமான குறைபாடுகளாகத் தோன்றுவது இரண்டு
விஷயங்கள் - ஒன்று கதை ரொம்பவே சுருக்க முடிந்து விடுவதாகத் தோன்றுவது.
இதை ஆசிரியரும் உணர்ந்தே இருப்பதாகத் தோன்றுகிறது - இதை நாவல் என்று
அழைக்காது நெடுங்கதை என்றே குறிப்பிடுவதன் மூலம். இன்னமும் இதில் பல
பகுதிகள் விவரித்துச் சொல்லப்படலாம் என்றே தோன்றுகிறது.
இன்னொன்று
திருநங்கைகளுக்கு கிடைக்கும் எந்தவிதமான ஆதரவையும் பற்றி இதில்
குறிப்பிடப் படாதது. அதிகம் அவர்கள் மதிக்கப் படுவதில்லை என்றாலுமே கூட
எங்கேனும் ஒன்றிரண்டு ஆதரவுக் கரங்கள் நீண்டுதானிருக்கும் நர்த்தகி
நட்ராஜிற்கு கிடைத்த குருநாதரைப் போல. அது போன்ற விஷயங்களும்
குறிப்பிடப்பட்டிருந்தால் சற்றே பாசிடிவ்-ஆகவும் இருந்திருக்கும்.
இது முதல் முயற்சி என்பது தெரியாத அளவுக்கு நூல் நேர்த்தியாகவே வந்திருக்கிறது. வாழ்த்துக்கள் பாலா
http://www.nilaraseeganonline.com/2008/07/blog-post_23.html
மயிலிறகாய் ஒரு காதல் - நூல் விமர்சனம்
வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..! - கவிஞர். க. அம்சப்ரியா
மரபுக்கவிதைக்குப்
பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை,
பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க்
கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள்
வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள்.
சமூகப்
பிரச்சனைகளை மையம் கொண்டிருந்த கவிதை நகர்ந்து வாழ்வியல் சிடுக்குகளையும்,
மனப் பிறழ்வுகளையும், அதீத கற்பனைச் சொற்களையும் ஏந்திக் கொண்டு பயணப்படத்
துவங்கியது. துவக்க கால எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளே கூட
நவீனத்துவத்தின் கெட்டித்த தன்மையுடன் வரத் துவங்கிய பின் காதலின் மிக
மென்மையான அனுபவங்களை பதிவு செய்கிற கவிதைகள் வாசகத்தளத்தில்
விரும்பத்தகாத இறக்கத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம், அல்லது
அப்படியான கவிதைகளை இன்னும் வாசித்துக் கொண்டிருப்பது வாசிப்பு
முதிர்ச்சியின் மீது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது எனலாம்.
இந்தக்
கவிதை விமர்சனக் களேபரங்களிடையில் காதல் கவிதைகளை சுமந்து கொண்டு புதிய
தொகுப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொகுப்புகள் மிக
எளிதில் தோல்வியை அடைவதற்கான காரணம் பொய்யான கற்பனையைக் கொண்டு
போலித்தனமாய் உருகி வழிவது தான் என்றால் மிகையாகாது.
இப்போதைய
காதல்கள் உண்மையில் கவிதையை ரசித்துக் கொண்டோ, மென் அனுபவங்களின்
மயிலிறகால் வருடிக் கொண்டோ இல்லை. வணிக ஊடகங்களின் அபத்தக் கற்பிதங்களால்
உடல் சார்ந்த வேட்கைக்கு காதல் என்று பெயர் சூட்டி வீணாகிக் கொண்டிருக்கிற
யுகம் இது. காதல் மிக அளிதில் கடந்து விடுகிற வாலிபக் கிளர்ச்சியாகி
அவரவர் வேலையை இனி அவரவர் பார்க்கப் போகலாம் என்கிற ரீதியில் இளமையாளர்கள்
தயாராகிவிட்ட பின் இந்தக் கவிதைகள் யாருக்குத்தான் எழுதப்படுகிறது?
எப்போதும் போல் தான் கவியுள்ளம் அதைப்பற்றியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்கிறது...?
இதோ அப்படியான ஒரு இளம் கவிஞனின் மயிலிறகால் எழுதிய வண்ணக் கவிதைகளின் தொகுப்பு காதலை துளிர்க்கச் செய்யும்படியாக வந்திருக்கிறது.
மீராவின்
கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிற்குப் பின் சில ஹைக்கூ
தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பேசப்படுகிற அளவுக்கு
வெளிவந்த தொகுப்புகள் ஒன்றிரண்டு தான் . பொன்.சுதாவின் "கவிதையல்ல காதல்".
அதற்குப் பிறகு தபூ.சங்கரின் பல தொகுப்புகள். தபூ.சங்கரின் காதல்
கவிதைகளின் விற்பனைக்குக் கூட வண்ண மயமான அட்டைப்படங்களும், உள்ளே
அட்டைப்படங்களுக்கு நிகரான வளவளப்பான அழகிய பெண்களின் உருவங்கள்
தேவைப்படுகிறது. காதலை வெளிப்படுத்துகிற வரிகள் மட்டுமே தொகுப்பிற்குப்
போதுமானதாக இல்லை.
நிலாரசிகனின் "மயிலிறகாய் ஒரு காதல்" புதுவரவு.
இத்தொகுப்பில் மொத்தம் ஐம்பத்தியொரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொன்றும் இலைகளை உதிர்த்து விட்டு பூக்களை மட்டும் ஏந்தி நிற்கிற 'மே
பிளவர்' மரங்களைப் போல பொய்ம்மையை உதிர்த்து விட்டு காதலை மட்டுமே இவைகள்
பூத்திருக்கின்றது.
ஒரு பெண்ணை நேசிக்கிற போது தான் காதல் கவிதை
வசப்படும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை. இந்த இயற்கையை,
மக்களை, சுற்றுப்புறத்தை நேசிக்கத் தெரியாத ஒருவனால் ஒரு பெண்ணை
போலித்தனமற்ற பிரியத்தால் ஒரு போதும் நேசிக்க இயலாது. அப்படியெல்லாம்
கிடையாது என்றால் அவனுக்குள் ஒரு பொய் உட்கார்ந்து கண் சிமிட்டுகிறது
என்று பொருள். இப்படிச் சொல்லக் காரணமிருக்கிறது. இந்தத் தொகுப்பு
'இன்னும் அறிமுகமாகாத என்னவளுக்கு..' என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் இப்படியொரு கவிதை வருகிறது.
கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக் கொள்வாய்.
ஆண் வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது..?
ஆண்களின் வெட்கத்தைப் பதிவு செய்திருக்கிற இந்தக் கவிதையின் பொருள் கவிஞரின் அரிய கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.
தொழில்
மயமாகிவிட்ட உலகில் ஆண்களும் பெண்களும் இயல்பாக பழக வேண்டிய தருணத்தில்,
எதைத் தோழமை என்று அனுமதிப்பது? யாரை காதல் என்ற வட்டத்திற்குள்
அனுமதிப்பது? என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு
இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது
காதலையா? நட்பையா? அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.
ஆரத்தி எடுக்காமல்
ஆச்சர்யப் பார்வை
பார்க்கிற உன்
அம்மாவிடம் சொல்லி வை
இவள் தோழி அல்ல என்
மனைவியாகப் போகிறவள் என்று..!
பெரும்பாலான
கவிதைகள் பெண்ணின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விரசமற்ற
அன்பின் ஏக்கமாக குழைந்து, நெக்குருகி இக்கவிதைகள் பூத்துள்ளன.
இத்தொகுப்பில் முழுக்க முழுக்க காதல் கவிதை தான் எனினும்
அலங்காரத்திற்காகவும் அழகுக்காகவும் அகலமான மண் பாத்திரத்தில் பூக்கள்
தூவி தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும். தண்ணீர் அழகாகி, பூக்களை
அழகுபடுத்துகிறதா? பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா?
இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா? என்று
ரசனைக்குறியவர்களுக்குத் தோன்றும். மிதக்கும் பூக்களைப் போல அ முதல் ஃ வரை
என்று பதிவு செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் மிளிர்கின்றன.
நல்லதோர் வீணை
செய்தே அதை
நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ..?
செருப்பில்லாமல்
நான் நடப்பதை
இப்படி நீ சொன்னால்
செல்லமாய் உன்னை
அடிக்காமல் வேறு
என்ன செய்வேனடா
நான்..?
அரிய உவமைகள், உருவகங்கள் தொகுப்பெங்கும் குவிந்து கிடக்கின்றன.
காய்ந்த பிறகு வாசம்
வீசும் மகிழம்பூவைப் போல்
நீ பிரிந்த பிறகும்
நேசம் வீசும் உன்
நினைவைத் தவிர..!
இந்தக் கவிதை கற்பனை ஓட்டத்தில் ஒரு மென் சிலிர்ப்பு.
நவீன
கவிதையில் காதல் பதிவுகள் அரிதாகிக் கொண்டு வருகையில் இம்மாதிரியான காதல்
கொகுப்புகள், காதல் கவிதைகளை விரும்பி நேசிக்கிறவர்களுக்கும், காதலின்
பரிசாக அளிக்கவும் ஆக மிகச் சிறந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது, "மயிலிறகாய்
ஒரு காதல்". கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு
மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான். பொய்களில் காதல் பொய்கள்
சுவாரஸ்யமானவை. எளிய வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள்
காதலையும் காதலிப்பவர்களையும் சிகரத்திற்கு உயர்த்துகிறது என்பதில்
எந்தவித ஐயமும் இல்லை. நேர்த்தியான அச்சமைப்பு இந்தக் காதலை மேலும்
உயர்த்துகிறது. தொகுப்பு: மயிலிறகாய் ஒரு காதல் (கவிதை நூல்)
நூலாசிரியர் : நிலாரசிகன் இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=212001
'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்
வாக்குமூலம்' என்கிற நூலை தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய ரா. முருகவேள்
மற்றும் பதிப்பித்த விடியல் பதிப்பகத்தினருக்கு முதலில் நம் வாழ்த்துகள்.
மூல ஆங்கில நூலை வாசித்தது போன்ற மிகவும் நெருக்கமான, எந்த நெருடலுமின்றி
இடைவிடாத பயணமாக நூல் தன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. மிகவும்
பொருத்தமான வார்த்தைகள், வாக்கிய அமைப்புகள், அடிக்குறிப்புகள் என ஒரு
முக்கிய நூலுக்குத் தேவையான அனைத்து குணங்களும் பொருந்தியதாக விளங்குகிறது.
.
உங்களுக்கு
உலகை வலம் வர விருப்பமிருந்தால், கரடு முரடான பயணங்களுக்கு நீங்கள் தயாராக
இருந்தால், உலக நாடுகளின் இயக்கத்தை எக்ஸ்ரே' கண் கொண்டு காணத்
துடித்தால், ஏகாதிபத்தியத்தின் புற முதுகைக் காண ஆவலிருந்தால் - உடனடியாக
இந்தக் கட்டுரை வாசிப்பதை நிறுத்திவிட்டு, இந்நூலைக் கையில் எடுங்கள்;
அதற்கு உங்களை ஒப்புக் கொடுங்கள்.
.
பெரும்
தொழில் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச வங்கிகள் ஆகியவற்றுக்கு ரகசியமாகவும்
வெளிப்படையாகவும் ஒத்துழைக்கும் அரசுகள் - என இந்த மூவர் கூட்டணியின்
இயக்கத்தை மிக விரிவாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் நமக்கு விளக்குகிறார்
ஜான் பெர்கின்ஸ். அமெரிக்காவின் பல பன்னாட்டு
நிறுவனங்கள், சி.அய்.ஏ., ஆளும் வர்க்கம், நிறுவன அதிகார வர்க்கம் என
சகலமும் வெவ்வேறு அல்ல; ஒரே மரத்தின் கிளைகளே என்பதையும்
வெளிச்சப்படுத்துகிறார். அமெரிக்காவின் உள்கட்டுமானங்கள் பற்றிய புதிய
சித்திரங்கள் பல உருவாகின்றன. உலகைத் தன் பிடிக்குள் கொண்டுவர அமெரிக்கா
தீட்டிய திட்டங்கள், அதற்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் என
மாபெரும் வலை நம் முன் விரிந்து செல்கிறது. மேற்கூறியவை, ஏகாதிபத்தியம்
பற்றி அறிந்திருப்பவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்தவை தான் என்ற போதிலும்,
இந்த நூல் ஒரு புனைவைப் போல் நாவலுக்கு ஒப்பாக நம் மனங்களை லாவகமாகப்
பற்றிக் கொள்கிறது.
.
ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல பெர்கின்ஸ், நம்மைப் பல அதிசயத்தக்க
மறைவான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். நாம் கண்டிராத, காண முடியாத
இடங்கள் அவை. வெவ் வேறு குரல்கள் நம் செவிப்பறைகளில் அலைமோதி, நம்மை
வேதனைக்குள்ளாக்குகின்றன. பொம்மலாட்டக்காரர், பழங்குடியினர், இந்தோனேசிய
ஆங்கில மாணவி, ஆப்கான் பிச்சைக்காரர், இளவரசர் டயிள்யூ, பொன்னிறக் கூந்தல்
கொண்ட அழகான இளம் பெண்கள், நீலக் கண்களுடன் சாலி, புஷ் குடும்பத்தினர்,
பின்லேடன், இடி அமின், அழுகிப் போன உடல்கள், வீச்சமடிக்கும் துர்நாற்றம்,
9/11 கட்டட இடிபாடுகள், கெரில்லாக்கள், அமேசான் காடுகள், சவுதி அரச
குடும்பத்தினர், ரோல்டோஸ், ஓமர், அலாண்டே, ‘மெய்ன்' நிறுவனத்தில்
பணிபுரிபவர்கள், அதன் பங்குதாரர்கள், மிஷினரிகள், பேதி மருந்து புட்டிகள்,
மதுக் கோப்பைகள் என இந்நூல் நம் கண்முன் நூற்றுக்கணக்கான காட்சிகளையும்
படிமங்களையும் உருவாக்கி வித்தை காட்டுகின்றன. நாள்தோறும் 24,000 பேர்
பட்டினியால் செத்து மடிய, மறுபுறம் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை
செழிப்புடன் விளக்கொளியில் மின்னுகிறது.
.
இதுவரையிலும்
நாம் படித்த பல நூல்கள் மனதில் சமமாகத் தோன்றிய வண்ணம் உள்ளன. ‘பூவுலகின்
நண்பர்கள்' வெளியிட்ட நூல்கள், காஸ்ட்ரோ அலாண்டே, சேயின் உரைகள்; சூசன்
ஜார்ஜின் மூன்றாம் உலக நாடுகளின் கடன் பிரச்சனைகள்; மைக்கேல் மூரின்
பாரன்ஹீட் 9/11 திரைப்படம் எனப் பட்டியல் நீண்டு செல்கிறது. குறிப்பாக,
இந்தப் புத்தகத்தின் 40 சதவிகித பக்கங்களை மைக்கேல் மூரின்
திரைப்படத்தில், புள்ளிவிவரங்களுடன் காட்சி வடிவமாகப் பார்க்கலாம்.
.
அதைப்
போலவே இப்புத்தகம் நெடுகிலும், நம் இந்தியச் சூழல் கண்முன் தோன்றிய
வண்ணமிருக்கிறது. ஆனால், இந்தியச் சூழலில் பொருளாதார அடியாட்களுக்கான
அவசியம் ஏதும் இல்லை. மன்மோகன் சிங், அலுவாலியா, ப. சிதம்பரம் என்ற மூவர்
கூட்டணி, பெர்கின்சின் தேவையை இல்லாமல் செய்துவிட்டது. இந்தியா வாங்கி
குவித்துள்ள கடன்கள், இங்கு பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணம், 50
ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முட்டாள்தனமான திட்டங்கள் என
அனைத்தும் மனசஞ்சலத்தின் உச்சங்கள்தான்.
.
சவுதி
அரேபியாவைப் போல் சென்னையில் ஓனிக்ஸ் நிறுவனம் குப்பை அள்ளுவது, பாதாள
சாக்கடைகள், அணு உலைகள், நர்மதா அணை எனப் பல நூறு திட்டங்களில் முடங்கிக்
கிடக்கும் கோடான கோடி டாலர்கள்; அதைவிட இந்தியா முழுவதும் போடப்பட்டு
வரும் நான்கு வழி சாலைகள் - நடப்பில் நாம் காணக்கூடிய
எடுத்துக்காட்டுகளாகும். முற்றிலும் அமெரிக்க நிறுவனங்கள்தான் இந்த
ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. இவை யாருக்கான சாலை? இந்த சாலைகளை ஒட்டிச்
செல்லும் பல கிராம சாலைகள் ஆண்டுக்கணக்காகப் பராமரிப்பின்றி கிடப்பது ஏன்?
இந்த சாலைகளில் எளிய இந்தியர்கள் இலவசமாகப் பயணிக்க
அனுமதிக்கப்படுவார்களா? அலுவலகக் கோப்புகளின் துர்நாற்றம், இந்திய சிவில்
சமூகத்தின் பரப்பளவெங்கும் வீசிக் கிடக்கிறது.
.
நம்
ஊரில், மாநிலத்தில், நாட்டில் உலாவரும் அப்பட்டமான அமெரிக்க முகவர்கள்
வரிசையாக மனக்கண்களில் வந்த வண்ணமிருக்கின்றனர். அவர்கள் அரசியல்வாதிகளாக,
நிறுவன அதிகார வர்க்கத்தின் உயர் பதவியில் உள்ளவர்களாக, தொண்டு
நிறுவனங்களின் தலைவர்களாக, பாதிரியார்களாக, பெரும் முதலாளிகளாக,
பத்திரிகையாளர்களாக, மீடியா பிரமுகர்களாக, திரைப்பட நடிகர்களாகப் பல்வேறு
உருவங்களில் உலா வருகிறார்கள். யாரைப் பார்த்தாலும் இனி நம்பிக்கை வராத
மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளார் பெர்கின்ஸ். இந்தோனேசிய
பொம்மலாட்டக்காரருக்கு இருக்கும் அரசியல் உணர்வு, ஏன் இந்தக் கேடு கெட்ட
நடுத்தர வர்க்கத்திற்கு இல்லை?
.
பனாமா,
ஈக்வெடார், நிகரகுவா, சவுதி அரேபியா, கொலம்பியா, இந்தோனேசியா எனப் பல
நாடுகள் ஏகாதிபத்தியத்தால் வீழ்ந்த கதை அடுக்கடுக்காய் நம் கண்முன்
விரிகிறது. பழங்குடியினர் மத்தியில் மிஷினரிகள் முதலில் உதவிகளை செய்து
விட்டு, பின்பு அவர்களின் நிலத்தை எண்ணெய் நிறுவனங்களுக்குத் தருவது; பல
நாடுகளின் அரசுகள் திட்டமிட்டு கவிழ்க்கப்படுவது; சவுதி அரச குடும்பம்
மற்றும் ஜார்ஜ் புஷ் குடும்பத்தினர், பின்லேடன் உள்ளிட்ட பல தீவிரவாத
குழுக்களுக்கு அளித்த பெரும் நிதியுதவிகள்... இந்தப் பொருளாதார திட்டங்கள்
எந்த விதத்திலும் வியட்நாம் போருக்கு சளைத்தவை அல்ல என்பதை நமக்கு
உணர்த்துகிறார் பெர்கின்ஸ்.
.
பெர்கின்சின்
மொழி நடை - பொதுவாகவே அவர்களுக்கு இருக்கும் பரந்த வாசிப்பையும், மொழி
வளத்தையும் செறிவாக்குகிறது. இந்நூலில் அவர் ஆயிரக்கணக்கான புத்தகங்களை,
கோப்புகளை அலுவலக நிமித்தமாக வாசிப்பதைப் பார்க்க முடிகிறது.
பெர்கின்சுக்கு அவரது வேலையில் இருக்கும் ஈடுபாடும், அவரது வாசிப்புக்கு
காரணமாய் அமைகிறது. அதே நேரத்தில், புத்தகம் நெடுகிலும் பெர்கின்ஸ்
நம்மோடு பகிர்ந்து கொள்ளும் அவரது எண்ண ஓட்டங்கள், மீண்டும் மீண்டும்
வாசித்ததையே வாசிப்பது போன்ற அயர்வைத் தருகிறது; பல நேரங்களில் அவை
எரிச்சலடையச் செய்கின்றன. இந்த எழுத்தின் வாயிலாக பெர்கின்ஸ் தனது மொத்த
வாழ்வையும் தற்செயல் நிகழ்வுகளின் கோர்வையாகத் தலைப்பிட விரும்புகிறார்.
மறுபுறம் தனது மொத்த பணியையும் சட்டத்துக்கு உடன்பட்டதாக (legitimize)
உருவகப்படுத்த முயல்கிறார். அதற்காக அவர் நமக்கு அளிக்கும் நீண்ட நெடிய
வாதங்கள் நகைப்பிற்குரியதாக மாறுகின்றன.
.
தான்
ஒரு தவறான செயலை செய்வதாக உணர்கிறார் பெர்கின்ஸ். தான் செய்யும் பணி
குறித்த முழுமையான அரசியல் தெளிவைப் பெறுகிறார். இருப்பினும், அந்த
நிறுவனத்தின் பணியாளராக இருந்து பங்குதாரராக அவர் உருமாறும் பயணத்தில்
எந்த மனத் தடையும் அவருக்கு இல்லை. டாலர்களை அள்ளிக் குவிக்கிறார். அவரது
சொகுசு கப்பல் நீரில் மிதக்கிறது. அவருடைய சுகபோகங்களுக்கு எந்தக்
குறையும் இல்லை.
.
இளவரசர்
டயிள்யூவுக்கு விருப்பமான அழகான பொன்னிறக் கூந்தல் கொண்ட இளம் பெண்களை
அனுப்பி வைத்து, அந்த நாட்டை கடன் வலையில் மூழ்கச் செய்வதற்காக பகல்
எல்லாம் அயராது உழைத்துவிட்டு, இரவில் பீர் பாட்டிலும் கையுமாக
உட்காரும்போது மட்டுமே - மூன்றாம் உலக நாடுகளின் மீது அவருக்குப் பாசம்
பொங்குகிறது. இத்தகைய மனநிலைதான் பிரதி முழுவதிலும் விரவிக்கிடக்கின்றன.
கேடுகெட்ட, இரக்கமற்ற சூறையாடலை செய்துவிட்டு, அதற்கு அந்த நிறுவனம்
பெர்கின்சுக்கு அளிக்கும் பதவி உயர்வையும் நற்சான்றிதழையும்
சன்மானங்களையும் - நம்மிடமே பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறார். அந்த
உயர்வுகளை நோக்கியேதான், தன் பணியையும் அமைத்துக் கொள்கிறார் பெர்கின்ஸ்.
.
பெர்கின்ஸ்
இந்த நூலை எழுதுவதன் நோக்கம் என்ன? ஏன் இந்த நூல் அமெரிக்க சமூகத்தில்
பதிப்பு பெறுகிறது? அதிகப்படியான பிரதிகள் விற்பனை என்ற சாதனைப்
பட்டியலில் எப்படி இது இடம் பெறுகிறது? இந்த நூலை அமெரிக்க நிறுவன அதிகார
வர்க்கம் ஏன் சகித்துக் கொண்டிருக்கிறது? ‘மெய்ன்' நிறுவனம் இயங்கிக்
கொண்டிருந்தால், பெர்கின்ஸ் இத்தகைய நூலை எழுதியிருப்பாரா? என
அடுக்கடுக்கான கேள்விகள் நம்முன் எழுகின்றன.
.
பெர்கின்ஸ்
இன்று அமெரிக்க சமூகத்தில் வாழக்கூடிய கோடீஸ்வரர்களில் ஒருவர். தன்
சொத்துகளுடன் சுகபோகமாக வாழ்ந்து வருபவர். அவர் தற்பொழுது பெரும் தொகை
புழங்கும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல நிறுவனங்களுக்கு
ஆலோசகராகவும் உள்ளார். அவரது சிறு குற்ற உணர்வின் வடிகாலாகத்தான் இப்பிரதி
திகழ்கிறது. அரவது பாவ மன்னிப்பு உரையை, அமெரிக்க சிவில் சமூகம்
தனதாக்கிக் கொள்வதற்கான வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம். அமேசான் புத்தக
வலைத்தளம், நியுயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர் என அதிகப்படியாக விற்பனை
ஆனதற்கு இதுதான் காரணம்!
.
தனது
வாழ்க்கை முழுவதும் அரசாங்கங்களுடன் உரையாடிய பெர்கின்ஸ், இந்தப்
புத்தகத்தில் அத்தகைய அரசாங்கங்கள், நிறுவன அதிகார வர்க்கம், மூன்றாம் உலக
நாடுகள் என அவர்களை நோக்கி பரப்புரையை ஆற்றுகிறார். எய்ட்ஸ் நோயுள்ள
ஒருவரிடம் கொஞ்சம் சாப்பாட்டில் உப்பு, புளியை குறைத்துக் கொள்ளுங்கள் என
ஆலோசனை வழங்குவது போல, மொத்த மூன்றாம் உலக வாழ்நிலையை
நிர்மூலமாக்கிவிட்டு, அதன் அரசுகளை, மக்களை நிரந்தரமான கடன் வலையில்
சிக்கவைத்துவிட்டு, அதன் வாழ்வாதாரங்களை, இயற்கை வளங்களை சூறையாடுவதற்கான
அனைத்து வழிவகைகளையும் செய்து விட்டு, இப்பொழுது பெர்கின்ஸ் நம்மிடம்
வந்து - பள்ளிக் கூடத்தில் உரை நிகழ்த்துங்கள், சிக்கனமாக எரிபொருளை
செலவழியுங்கள் என்று கூறுவது நகை முரணாக உள்ளது. அவர் கூறும் செயல்பாட்டு
யோசனைகள், தொண்டு நிறுவன ‘ப்ராஜெக்ட்' டுக்கு இணையாக இருக்கிறது.
.
ஜான்
பெர்கின்சின் வாழ்க்கைக் குறிப்புகள் பலவற்றில் அவர் விவிலியத்தின்
அடிப்படையிலான செயல்பாட்டாளர், முன்னறிவிப்பாளர், வலது சாரி ஆர்வலர் என்றே
உள்ளது. அவர் விவிலியத்தின் அடிப்படையிலான பல நூல்களை எழுதி உள்ளார்.
டன்கல் அறிக்கை விவிலியம் என்ற இரட்டைக் குழந்தைகளுக்கு மிகவும்
விசுவாசமான வராக உள்ளார் பெர்கின்ஸ். இந்த நூலில் வருவது போன்றே பேதி
மருந்து தடவப்பட்ட உணவை இலவசமாக வழங்கிவிட்டு, சிறிது இடைவெளிக்குப் பிறகு
மருந்துகளுடன் பழங்குடியினரிடம் செல்லும் மிஷினரிகள் போல், நம்மிடம் வந்து
கழிவிரக்கத்துடன் மன்றாடுகிறார் பெர்கின்ஸ்.
.
இந்த
ஒட்டுமொத்த சீரழிவுகள், சுரண்டல்கள் - மனித சமூகத்திற்கே விரோதமான
செயல்களுக்கு துணைபோவது மட்டுமின்றி, இவைகளை மக்கள் ஏற்கச் செய்யும்
கொடுமையையும் ஊடகங்கள் செய்து வருகின்றன. பெர்கின்ஸ் தயாரித்த போலி
புள்ளிவிவரங்களைப் போல, ஊடகங்கள் தொடர்ந்து வர்ண ஜாலங்களை - நாளிதழ்கள்,
தொலைக்காட்சிகள் வாயிலாக ஒவ்வொரு நொடியும் பரப்பிக் கொண்டேயிருக்கின்றன.
பட்டினியால் வாடும் குழந்தைகளின் முகத்திலும், தற்கொலை செய்து கொண்ட
விவசாயிகளின் சடலத்தின் மீதும், வேலையற்ற இளைஞர்கள் மீதும் ஊடகங்களின்
ஜிகினா தூள் சமமாகப் படிகிறது. இந்த மொத்த கொள்ளையின் சரியான பங்கை,
பெர்கின்சைப் போல் உலக ஊடகங்களும் பெறுகின்றன. பொழுதெல்லாம் பொய்யைப்
பரப்பும் ஊடகங்களின் முகமூடியைக் கிழித்தெறிந்து, மக்களை இவர்களின் கோரப்
பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
.
பெர்கின்சைப்
போல் நம்மைச் சுற்றி முகமூடிகளுடனும், முகமூடிகளின்றியும் பலர்
உலவுகின்றனர். இவர்களை அடை யாளம் காணும் பணி முக்கியமானது. அதற்கான
கையேடுகளைக்கூட நாம் கூட்டாக உருவாக்கலாம். சென்னையில் நங்கூரமிட்டுள்ள
‘நிமிட்ஸ்' அணு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பலிலிருந்து பல பெர்கின்ஸ்கள்
(மாலுமிகள்) துடைப்பங்களுடன் சென்னையை சுத்தம் செய்யத்
தரையிறங்கியுள்ளனர். இவர்கள் தங்கள் சமூக சேவைகளை தொடங்கிவிட்டதாக ‘சன்'
தொலைக்காட்சி தமிழ்ச் சமூகத்திற்கு தலைப்புச் செய்தியாக வழங்குகிறது.
பெர்கின்சையும் அவரது பங்காளிகளையும் சேர்த்தே அடையாளம் காண்போம்.
.
இந்நூலிலிருந்து....ஆங்கில மாணவி தீர்க்கமாக என் விழிகளை ஊடுருவிப் பார்த்தாள்.இவ்வளவு
பேராசை கொள்வதை நிறுத்துங்கள். உங்கள் சுயநலத்தையும், மாளிகை போன்ற
வீடுகளையும், பேன்சி ஸ்டோர்களையும் தவிர, உலகில் வேறு விஷயங்களும் உள்ளன
என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்..மக்கள்
உணவின்றிப் பட்டினி கிடக்கிறார்கள்; நீங்களோ உங்கள் கார்களுக்குத் தேவையான
பெட்ரோலைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குழந்தைகள் குடிக்க
நீரின்றி மடிந்து கொண்டிருக்கின்றன; நீங்களோ நவநாகரிக பாணிகளுக்காக
‘ஸ்டைல்' ‘பேஷன்' இதழ்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.. எங்களைப்
போன்ற நாடுகள் வறுமையில் கழுத்தளவு மூழ்கிப் போயிருக்கிறோம். எங்கள்
ஓலக்குரல்கள் உங்கள் செவிகளில் விழுவதில்லை. யாராவது உங்களுக்குச் சொல்ல
முயற்சித்தால், உடனே அவர்களுக்குப் புரட்சியாளர்கள் என்றும்
கம்யூனிஸ்டுகள் என்றும் முத்திரை குத்துகிறீர்கள்..ஒடுக்கப்பட்ட
ஏழை மக்களை மேலும் மேலும் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் தள்ளுவதற்குப்
பதிலாக, அவர்களுக்கு உங்கள் இதயங்களைத் திறக்க வேண்டும். காலம் கடந்து
கொண்டிருக்கிறது. இன்னும் உங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்றால்
ஒழிந்தீர்கள்!நூல்: ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ்
தமிழில்: ரா.முருகவேள்
வெளியீடு: விடியல் பதிப்பகம்11, பெரியார் நகர்,
மசக்காளி பாளையம்,கோயம்புத்தூர் - 641 015.
தொலைபேசி: 0422 - 2576772
-அ. முத்துக்கிருஷ்ணன்
நன்றி: தலித்முரசு, http://www.keetru.com/
துணையெழுத்து
தமிழின் நவீன இலக்கிய எழுத்தாளர்களில்
குறிப்பிடத்தகுந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். எந்தக் குழுவிலும் தன்னை
ஆட்படுத்திக்கொள்ளாமல், தனி மனித விமர்சனத்தை இலக்கியம் எனக் கொள்ளாமல்
சிறப்பான படைப்புகளை வழங்கி வருபவர்.
இவர்
ஆனந்த விகடனில் எழுதிய துணையெழுத்து என்ற கட்டுரைத் தொடர் இப்போது
புத்தகமாக வெளிவந்துள்ளது. தொடராகவெளிவந்தபோதே ஆயிரக்கணக்கான வாசகர்களைக்
கட்டிப்போட்ட தொடர் இது என்று சொன்னால் அது மிகையில்லை.
தொடராகப் படித்த அனுபவம் இருப்பினும், புத்தகமாகப் படிக்கும்போது புதிதாகப் படிக்கும் சுவாரசியத்தை இவரது எழுத்து நடைதருகிறது.
இந் நூலில் தனது அனுபவங்களையே எழுத்தோவியங்களாகத் தீட்டியுள்ளார். இமயம்
முழுவதும் குமரி வரை பல்வேறுகாலகட்டங்களில் தான் மேற்கொண்ட பயணங்கள்,
சந்தித்த மனிதர்கள், மனதை நெகிழச் செய்யும் அனுபவங்கள்
ஆகியவற்றைத்தொகுப்பாக்கியுள்ளார்.
ஒவ்வொரு அத்தியாயத்தையும்
படித்து முடிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது.
மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று
வேட்கையைத் தூண்டுகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் தனது பேனாவில்மனிதத்தை ஊற்றி
எழுதுகிறார் போலும்.
சிறந்த நூல்களைத் தேடி, படிப்பதை வழக்கமாகக்
கொண்டிருப்பவர்கள் தவறாமல் வாங்க வேண்டிய நூல் இது. மருதுவின்ஒவியங்களுடன்
விகடன் பிரசுரம் இதை நேர்த்தியாகப் பதிப்பித்திருக்கிறது.
புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. காணாமல் போவது எப்படி என்ற தலைப்பில், தான்
காணமல் போய் வீடு திரும்பியதை ஆசிரியர் இப்படிஎழுதுகிறார்:
''வீட்டை
அடைந்த போது அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள். நான் அமைதியாக
அடுப்படியில் நின்றபோது ஏறிட்டு என்னைப்பார்த்துவிட்டு, எதுவும் நடக்காதது
போலச் சமையலைத் தொடர்ந்தாள். வீட்டில் எவரும் என்னை எதுவும் கேட்காதது
மிகவும்வேதனையாக இருந்தது.
அம்மா சுடுசாதமும் ருசிமிக்க
காய்கறிகளும் சாப்பிடுவதற்காக எடுத்து வைத்துவிட்டு உள்ளே போய் விட்டாள்.
நாலைந்துநாட்களுக்குப் பிறகு வீட்டு உணவைச் சாப்பிட்டேன். சாப்பிடச்
சாப்பிட அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. பாதிக்குமேல் சாப்பிடவிருப்பமில்லை.
தண்ணீரைக் குடித்தபோது தொண்டை வலித்தது. அன்றிரவு அப்பா, என்னைத் தனியே
அழைத்துக் கொண்டு போய், வீடே நான்குநாட்களாகத் தூக்கமில்லாமல் வேதனையில்
இருந்தது என்று சொன்னார். அவமானமாக இருந்தது.
காணாமல்
போய்விடுவது தனிநபர் சம்பந்தப்பட்ட காரியம் இல்லை. அது ஒரு விபத்தை
விடவும் வலிய துயரம். இப்போதும் நகரின்ஏதோ சாலையில் சிறுவர்கள் தனியே
சுற்றி அலைவதைக் காணும்போது, தொண்டையில் மெலிதாக வலி உண்டாகிறது.
வீடு திரும்பாமல், ஏதோ காரணங்களால் வேறு ஊர்களில் வேறு தேசங்களில், வேறு பெயர்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்யாவரும் துயரவான்கள்.
அவர்களில் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தாலும், அவர்களின் கண்களை
உற்றுப் பாருங்கள். வீட்டை, ஊரை, குடும்பத்தைப் பிரிந்துவந்த நாள் இமையின்
ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும். அவர்களிடம் பேசிப் பாருங்கள்.. .
அவர்கள் வார்த்தைகளைவிலக்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்களோடு பழகிப்
பாருங்கள்... உங்கள் அன்பை அவர்கள் விலக்குவார்கள்.அவர்களால் வெறுப்பைக்
கூட ஏற்றுக் கொள்ள முடியும். நேசிப்பைத் தாங்க முடியாது.
காரணம், சாவை விடவும் வலியது காணாமல் போய்விடுவது.''
புத்தகத்தைப்
படித்து முடிக்கும்போது சக மனிதனின் மேல் இது வரை இல்லாத ஒரு பரிவு
வருகிறது. இதைவிட ஒரு பெரிய வெற்றி ஒருஎழுத்தாளருக்கு இருக்க முடியுமா
என்ன?
(துணையெழுத்து: எஸ்.ராமகிருஷ்ணன், பக்கங்கள்: 347, விலை:
ரூ.85 அல்லது ரூ.110 (தடித்த அட்டை), பதிப்பகம்: ஆனந்த விகடன்,757, அண்ணா
சாலை, சென்னை-2)இரவின் நரை
சிலர்
வருந்தி கவிதை எழுதுகிறார்கள். சிலர் யோசித்து கவிதை எழுதுகிறார்கள். வெகு
சிலருக்கு மட்டுமேஇயல்பாய் கவிதை வருகிறது. அத்தகைய கவிஞர்களில்
ஒருவர்தான் பிச்சினிக்காடு இளங்கோ.சிறுபத்திரிக்கைகள், இணைய இதழ்கள்
ஆகியவற்றில் உயிர்ப்புடன் எழுதி வரும் இளங்கோவின் கவிதைகளைதோழமை பதிப்பகம்
தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
இளங்கோவின் கவியாளுமை கவிதைகளில்
மட்டுமல்லாது அவர் எழுதிய முன்னுரையில் கூட கோலோச்சிநிற்கிறது.
வார்த்தைகள் இவரிடம் சரளமாக வந்து விழுகின்றன. கவிதைக்கான கருவைத்
தேர்ந்தெடுத்த பின்பும்,எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்ற
வித்தை இவருக்கு அழகாக கைவரப் பெற்றிருக்கிறது.
எதுகை மோனையில் கவிஞருக்கு ஒரு மயக்கம் இருக்கிறது. அதை பயணம் என்ற கவிதையில் அவரே ஒப்புக்கொள்கிறார்.
வாசத்தை
என் வார்த்தைக்கு வரவழைப்பது
ஒரு நியாயத்தினால் அன்றி
தேவையினால் அன்று.
இயற்கையின் மீது கவிஞருக்கு தீராத காதல் இருக்கிறது. பெரும்பாலான
கவிதைகளில் இயற்கை பற்றிய வர்ணனைவருகிறது. இயற்கை மீது மனிதன் காட்டும்
அசிரத்தை இளங்கோவிற்கு கோபத்தை வரவழைக்கிறது. நூலுக்குத்தலைப்பாகி
இருக்கும் இரவின் நரை என்ற கவிதையில், இரவு பகலாக மலரும் அற்புதத்தை
விளக்கிவிட்டு, உலகம்தூங்கினால் எப்படி உணரும் என்று தனது ஆற்றாமையை
வெளிப்படுத்துகிறார்.
ஆகாயம் பச்சை என்ற கவிதையில்,
காற்றையே சலித்தெடுக்கும்
கைதேர்ந்த வித்தை
தாவரங்கள் அறிந்த
விஞ்ஞான விந்தை
----- ----- -----
மதங்களைக் காட்டிலும்
மரங்களை நம்புங்கள்
என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
மனித மனத்தின் நுட்பமான உணர்வுகள் சில கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. எளிமை என்றொருகவிதையில்,
நாங்கள்
வரத்திற்காய்த்
தவம் கிடப்பவர்கள்
தவமின்றி
வரமென்றால்
தப்புக் கணக்கே
போடுவோம்
என்ற வரிகள் யதார்த்தத்தின் உச்சம்.
தொடரும் நட்பை துண்டிக்க வழியின்றி, வேண்டா வெறுப்பாய் பழகுவது எல்லாருக்கும் வாய்க்கும் அனுபவம்.இதை கவிஞர்,
நமக்கிடையில்
இடைவெளி என்பது
நதியாய் இருக்கையில்
நட்பு என்றொரு
பாலம் தேவையா?
என்று கேட்கிறார். என்ன ஒரு அழகான உவமை? இடைவெளி ஏற்படுத்திக் கொண்ட அந்த நண்பன் மீது நமக்குபச்சாதாபம் வருகிறது.
ஓரிரு கவிதைகளைத் தவிர்த்து, புத்தகம் முழுவதும் உள்ள கவிதைகளை இதேபோல்
எடுத்துச் சொல்லியபடியேபோகலாம். அந்தளவிற்கு பல நல்ல கவிதைகள் காணக்
கிடைக்கின்றன. வாசித்துப் பாருங்களேன்.
(இரவின் நரை: பிச்சினிக்காடு இளங்கோ, பக்கம் 112, ரூ.40, தோழமை வெளியீடு, 5டி, பொன்னம்பலம் சாலை,கே.கே.நகர், சென்னை-78)இருளும் ஒளியும்: புத்தக விமர்சனம்
வாழ்க்கை எல்லோருக்கும், எப்போதும் நிறைவைத்
தந்துவிடுவதில்லை. பணம் ஒன்றே நிறைவு தரும் என்று ஒரு சாரர் அதன்பின்னே
ஒட, பட்டம்,பதவியைத் தேடி இன்னொரு சாரர் ஓடுகிறார்கள். இவர்களுக்கிடையே
அன்றாடம் கடுமையாக உழைத்து மாலையில் சம்பளம் வாங்கி அந்த பணம்மறுநாள்
விடியும் முன்பு செலவழிந்துவிடும் ஏழ்மை நிலையோடு வாழப் பழகி விட்ட பாமர
சனங்கள்.
எதைப்
பற்றியும் கவலைப்படாத பேராசைக்காரர்கள், தன் நிலை குறித்த பிரக்ஞையின்றியே
வாழும் அப்பாவிகள் இவர்கள் இருவருக்கிடையே, தான்வாழும் சமூகத்தில்
சிந்தனையளவிலும், செயல் அளவிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த
உழைப்பவர்களாலேயே இந்த உலகம் இன்னும் உயிர்ப்புடன்இயங்கி வருகிறது.
அத்தகைய சமூக அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவராகவே இருளும் ஒளியும் நூல்
ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன் தெரிகிறார். அறிவொளி இயக்கம்
தமிழகத்தில்பிரகாசித்து ஒளி வீசிய காலத்தில் அந்த இயக்கத்தோடு தன்னை
முழுமையாகப் பிணைத்துக் கொண்டதையும், அப்போது கிடைத்த அனுபவங்களையும்
சிறப்பாகபதிவு செய்துள்ளார்.
அரசு உதவியுடன் நடைபெறும் ஒரு
இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் தொய்வு ஏற்படுவதும்,
நாளடைவில் அதை எல்லோரும்மறந்துவிடுவதும்தான் இயல்பு. ஆனால் அறிவொளி
இயக்கத்தில் அத்தகைய தொய்வு ஏற்படாமல் இருக்க அதில் ஈடுபட்டவர்கள்
எடுத்துக் கொண்டமுயற்சிகள் பிரமிக்க வைக்கின்றன.
சொற்ப அளவில்
அரசாங்கம் தரும் சம்பளத்தொகையைக் கருத்தில் கொள்ளாமல் இவர்களது சிந்தனை,
உடல் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைதோற்றுவித்தது எது? நான் வாழ இடம்
தந்த இந்த நாட்டுக்கு நான் செய்யும் உதவி, பாட்டாளி மக்களுக்கு நான் செய்ய
வேண்டிய கடமை என்றஉணர்வுதானே? அதுதானே ஒவ்வொரு அறிவொளி தொண்டரிடம்
நிரம்பியிருந்திருக்கிறது!
அந்த வகையில் மக்களுக்கு உழைக்கக் கிடைத்த இந்த வாய்ப்பை நல்ல முறையில்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் ச.தமிழ்ச்செல்வனின்அறிவொளிப்
பணிகளில் ஓங்கி நின்றிருந்திருக்கிறது. உழைத்ததோடு நில்லாமல் தனது அறிவொளி
அனுபவங்களை அழகிய புத்தகமாகவும் கொண்டுவந்திருக்கிறார்.
அறிவொளி
இயக்கத்தில் இயங்கியவர்களின் மனநிலை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அதில்
பெண்களின் பங்கு, அவர்களை கிராம மக்கள் எதிர் கொண்டவிதம், காலப்போக்கில்
தங்களுக்கானவர்களாக அவர்களை கிராமத்தினர் அங்கீகரித்துக் கொண்டது
ஆகியவற்றை மனதில் ஈரம்படர விவரித்துச்செல்கிறார் ஆசிரியர்
ச.தமிழ்ச்செல்வன்.
அறிவொளி இயக்கத்தின் முதல் நாளில், இத்தனை
வருசம் எங்க போயிருந்தீங்க என்ற மக்களின் கேள்விக்கு உருக்குலைந்து போனதாக
சொல்லும்தமிழ்ச்செல்வன், அந்த கேள்வி ஏற்படுத்திய குற்றவுணர்ச்சியை
படிப்பவர்கள் மனதிலும் ஏற்றிவிடுகிறார். புத்தகத்தை படித்து
முடிக்கும்போது அந்தகுற்றவுணர்ச்சி பன்மடங்காகி, சமுதாயத்திற்கு நீ என்ன
செய்தாய் என்ற பிரம்மாண்டமானதொரு கேள்வியாக நம்முன் உருவெடுக்கிறது.
ராத்தூக்கம் பாராது அற்புதமான சமுதாயப் பணி ஆற்றிய அறிவொளித் தொண்டர்கள்
அனைவரையும் பார்த்து ஒவ்வொருவர் கையையும் பிடித்து கண்ணில்ஒற்றிக்கொள்ளத்
தோன்றுகிறது. அதற்கு முன்னதாக அறிவொளிக் காலத்தை தன்னால் இயன்ற அளவிற்கு
நல்லதொரு புத்தகமாகப் பதிவு செய்துள்ளச.தமிழ்ச்செல்வனுக்கு நன்றி
தெரிவித்துக் கொள்வோம். பாரதி புத்தகாலயம் இதை அழகாக அச்சிட்டு
வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற சரித்திரப் பதிவை தனது தீம்தரிகிட இதழில் தொடராக வெளிவர முழு ஒத்துழைப்பு அளித்த ஞாநிக்கு பாராட்டுக்கள்.
தனது பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காகவே பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் இந்தப் புத்தகத்தை ஒரு முறை படிப்பது நல்லது.
மாதச் சம்பளம் வாங்கும் மத்திய தர வர்க்கத்தினர் இந்தப் புத்தகத்தைப்
படித்தால், தங்களது ஆதரவையும் பிரதிபலன் பாராத தொண்டையும்
எதிர்பார்த்துபாமர சனங்கள் காத்திருப்பது தெரியவரும்.
ஒரு நல்ல
புத்தகம் படித்து முடிக்கும்போதுதான் ஆரம்பிக்கிறது என்று யாரோ ஒரு அறிஞர்
சொன்னதாக ஞாபகம். அந்த வகையிலான புத்தகம்தான்ச.தமிழ்ச்செல்வனின் இருளும்
ஒளியும்.
புத்தகத்தின் இறுதி அத்தியாயத்தின் கடைசி சில பத்திகள்:
அறிவொளி இயக்க நினைவலைகள் கடல்போல் விரிந்து கொண்டே செல்கின்றன. முடிக்க
முடியாது. எங்கெங்கோ ஊர்களில் ஏதேதோ எதிர்பாராத்தருணங்களில் எப்போதும் ஒரு
அறிவொளித் தொண்டர் (பெரும்பாலும் ஒரு பெண் தொண்டர்) என்னைக் கடந்து போய்க்
கொண்டேயிருக்கிறார். நின்றுசினேகமாக சிரிக்கிறார். கிட்ட வந்து
பேசுகிறார். திரும்பவும் நாம எல்லோரும் சேர்ந்து வேலை செய்யத் தானே
போகிறோம், அப்ப நிதானமாப்பேசிக்கிடலாம் என்பது போலத் தலையசைத்து மெல்லப்
பிரிகிறார்கள்.
ஆண்களும் பெண்களுமாய் ஆயிரம் ஆயிரமாய் எங்களோடு
பேசிப் பழகிப் பணியாற்றிய அந்த நாட்களின் ஈரமும் சிரிப்புகளும்
சத்தங்களும் கூடவே வந்துகொண்டிருக்கின்றன. திளைக்கத் திளைக்க நீந்திப்
பின் கரையேறி சற்றே மூச்சு வாங்கிக் கொண்டு மீண்டும் குதிப்பதற்காகக்
காத்திருக்கும் தருணம் போன்றஉணர்வுதான் எப்போதும் எனக்கு இருக்கிறது.
இத்தனாந்தேதியோடு அறிவொளி இயக்கம் முடிஞ்சு போச்சு. போயிட்டு வாரோம் என்று
நாங்கள் மக்களிடம் விடைபெற்றுப் பிரியவில்லை. போனவாரம் கூட தென்காசிக்குப்
போய்விட்டு பஸ்ஸில் திரும்பும்போது கொய்யாப்பழம் விற்ற பெண்மணி என்னிடம்
ரெண்டு பழத்தை நீட்டியபோது நான் வேண்டாம்என்று மறுத்தேன். காசெல்லாம்
வேண்டாம் சார். சும்மா சாப்பிடுங்க. நீங்க அறிவொளி சார்தானே? எங்க ஊருக்கு
சசிகலா மேடம் கூட வந்துகதையெல்லாம் சொன்னீங்கள்ள? நானும் அறிவொளிதான்.
வெற்றிலைக்காவி படிந்த வெள்ளையான சிரிப்புடன் நீண்ட அந்த
கொய்யாப்பழங்களுடன் அவரது கைகளையும் சேர்த்து ஒரு கணம் என் இரண்டு
கரங்களாலும்இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். எப்படி இருக்கீங்க? பஸ் உடனே
கிளம்பிவிட்டதால் ஒன்றும் பேசிக்கிட முடியவில்லை.பிறகு பாப்பம் என்பதுபோல
அந்தப்பெண்மணியும் தலையசைத்தார்.
பேசாமல் நின்று போன பாக்கிகள்
கிராமம் கிராமமாய் ஏராளமாய்த் தொக்கி நிற்கிறது. மக்கள் எங்களுக்கு விடை
கொடுக்கவுமில்லை. நாம்விடைபெறவும் இல்லை.
நம் மக்களிடமிருந்து நாம் எப்படி விடை பெற முடியும்?
(இருளும் ஒளியும்: ச. தமிழ்ச்செல்வன், பாரதி புத்தகாலயம், 2 குயவர் வீதி,
கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை-600 015, மின்னஞ்சல்:info@thamizhbooks.com,தொலைபேசி: 044-2433 2424, பக்கம் 148, விலை ரூ.50)
பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்
எது இலக்கியம் என்பது குறித்த சர்ச்சை நீண்ட
காலமாக நிலவி வரும் ஒன்றாகும். இலக்கியம் என்பது சில மேல்தட்டுவாசிகளுக்கு
சும்மாஇருக்கும் நேரத்தில் சொறிந்து கொள்ள உதவும் சமாச்சாரமாகிவிட்டது.
ஆதிக்க சாதியில் பிறந்துவிட்டு, ஆதிக்க மனோபாவத்துடன்இவர்கள் எழுதும்
படைப்புகளைத் தவிர்த்து வேறெதுவும் இலக்கியம் இல்லை என்று கூச்சல்
இடுகிறார்கள்.
இலக்கியம்
என்பது காலத்தின் கண்ணாடியாகவோ, ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமைக்
குரலாகவோ, நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்குற்றமே என்று முழங்கும்
துணிச்சலாகவோ இவர்களுக்கு இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அதை
இலக்கியம் என்றோ, அதைஎழுதுபவர்களை இலக்கியவாதிகளாகவோ ஒத்துக் கொள்ள
மாட்டார்கள். நெற்றிக்கண்ணனைப் போற்றி எழுதப்படுபவை மட்டுமேஇவர்களுக்கு
இலக்கியமாகும்.
ஆனால் இவர்களது அங்கீகாரத்தை எதிர்பார்த்து
எழுதாமல், மக்களுக்காக எழுதும் எழுத்தாளர்கள் எப்போதும் இருந்து
கொண்டேஇருக்கிறார்கள். காரல் மார்க்ஸ், தந்தை பெரியார் கொள்கைகளை
வரித்துக் கொண்டு, பாரதியின் பாட்டுப்
பரம்பரையில்,ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் கவிஞர்கள் தமிழ்
மண்ணில் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட கவிஞர்களில்
ஒருவராக தனது இரண்டாவது தொகுப்பிலும் தன்னை நிறுவியுள்ளார்
ஆதவன்தீட்சண்யா. இவரது ஒவ்வொரு கவிதையும் ஆதிக்க சாதியினருக்கு
சாவுமணியாகவே ஒலிக்கிறது. சமூகத்தின் சகலஅவலங்களுக்கு எதிராகவும் சங்கு
முழங்குகிறார் ஆதவன் தீட்சண்யா.
கவிஞர்களைப் பார்த்து, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
சொல்லடுக்கிச் சொல்லடுக்கி
நீர் சொரிந்த பாடலெல்லாம்
போதும்... மாற்றார்
பல்லுடைத்து நமக்குற்ற
பழிதுடைக்க நாலுகவி
படைப்பீர்.
என்று பாடினார். இதோ அத்தகைய கவியாக ஆதவன் தீட்சண்யா உருவெடுத்துள்ளார்.
என் கவிதை மக்களுக்காக என்ற பிடிவாதம் இந்தக் கவிஞரிடம் இருக்கிறது.
ஒவ்வொரு கவிதையிலும் சமூக அக்கறை பிரதானமாகஇருக்கிறது. சமூக அவலங்களை
கூறுவதோடு தனது பணி முடிந்துவிட்டது என்று ஆதவன் கருதவில்லை. அவை
ஒவ்வொன்றையும்விசாரணைக் கூண்டில் ஏற்றி எழுத்துச் சவுக்கால் விளாசித்
தள்ளுகிறார்.
பூஜ்யத்திலிருந்து துவங்கும் ஆட்டம் என்ற இந்தக்
கவிதைத் தொகுப்பிற்கு முன்னுரை, மதிப்புரை, என்னுரை என்று எதுவும்
இல்லை.ஊசிப்பட்டாசுகளுக்குத்தான் அவை தேவை. இடிமுழக்கத்துக்கும் தேவையா
என்ன?
இலக்கியம் பண்ணுகிறேன் என்று பம்மாத்து பண்ணிக்
கொண்டிருப்பவர்கள் எதுவெல்லாம் ஒரு நல்ல கவிதைக்கு வேண்டும்
என்றுகூறுகிறார்களோ, அதுவெல்லாம் ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளில்
காணக்கிடைக்கிறது. தேர்ந்த வார்த்தைப் பிரயோகம், சிறந்தகவிதைக்
கட்டமைப்பு, எந்த வரியையும் நீக்க முடியாத கருத்துச் செறிவு, அங்கத
உணர்ச்சி என்று எதுவும் குறையவில்லை.
அனைத்திற்கும்
மேலாக ஒவ்வொரு கவிதையும், படித்தபின்பு மனதில் ஒரு பாரத்தை ஏற்றுகிறது.
எடுத்துக்கொண்ட பொருள் குறித்த சமூகக்கோபத்தை மனதில் எரிமலையாகப் பொங்கச்
செய்கிறது. பெண்சிசுக் கொலை, வர்க்க பேதம், அதிகார வர்க்கத்தின்
அடக்குமுறை, மதக்கலவரம், பெண் அடிமைத்தனம், நீதிபேதம், சாதி ரீதியிலான
ஒடுக்குமுறை, கடவுள் பெயரிலான பித்தலாட்டம் என எதுவும் இவர்
பேனாமுனைக்குத் தப்பவில்லை.
மயிலே மயிலே இறகு போடு என்று கெஞ்சிக்
கேட்பதில், பாரதியைப் போலவே இவருக்கும் நம்பிக்கை இல்லை. கேட்டுப்
பெறுவதல்லஉரிமை, அது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது என்பது இவரது கவிதை
வரிகளின் மையமாக இழையோடுகிறது.
இறுதியாக இது போன்ற கவிதைகள்
எல்லாம் இலக்கியம் அல்ல என்பவர்களுக்கான பதிலை கவிஞரே சொல்கிறார். இந்த
விவாதப்புடுங்கிகளிடமிருந்து கவிதை தனித்திருக்கிறது எமது சேரிகளைப்போல.
ஆமாம். கீதைக்கு பொழிப்புரை எழுதிக் கொண்டிருப்பவர்களால் கருணாநிதி, ஆதவன்
தீட்சண்யா போன்றவர்களின் படைப்புகளைஏற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால்
பல்லாக்கு தூக்குபவர்களுக்காக குரல் கொடுப்பவர்களை பல்லாக்கில் பயணம்
செய்பவர்களால்பொறுத்துக் கொள்ள முடியாதுதான்.
ஆனால், இலக்கியத்தை
கட்டிக் காப்பதற்காக பிறந்தவர்களே, உங்களது விஷ்ணுபுராணங்களை உங்களுடன்
வைத்துக் கொள்ளுங்கள்.எங்களுக்கு ஆதவன் தீட்சண்யாக்கள் போதும்.
ஆதவன் தீட்சண்யாவின் ஒரு நெருப்புக் கவிதை:
ஆமென்
என்னை கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித் தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்களின் மண் எது?
தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப் பக்கத்தில் எங்கள் வாழ்க்கை?
எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலே
சூரிய சந்திரச் சுழற்சிகள் இன்னும் எதுவரை?
எங்களுக்கான பங்கை ஒதுக்கிச் சொல்லியல்ல
எடுத்துக் கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்கொண்டிருக்கிறோம்
அதுவரை அனுபவியுங்கள் ஆசீர்வதிக்கிறோம்.
(பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம்: ஆதவன்
தீட்சண்யா, சந்தியா பதிப்பகம், 52, முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம்
நகர்,அசோக் நகர், சென்னை- 600 003, தொலைபேசி எண்: 044-24899968,
பக்கங்கள்: 79, விலை ரூ.30)
முதற் பதிப்பு(2000)
80.00 In Rs
363 பக்கங்கள்
அறிவியல்
வளர்மதி.மு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை
மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி அஞ்சல் சென்னை - 600113, இந்தியா
www.ulakaththamizh.org
(Baba Amte, Anita Kainthla, Viva Books, 2005, Rs. 195)
முரளிதர்
ஆம்டே கடந்த சில மாதங்களுக்குமுன் காலமானார். இவரைப் பற்றி அவ்வப்போது
செய்தித்தாளில் படித்திருக்கிறேன். நர்மதா அணை கட்டுவதை எதிர்த்துப்
போராட்டம் நடத்தும் நர்மதா பச்சாவோ ஆந்தோலன் என்ற அமைப்பில் மேதா
பட்கருடன் சேர்ந்து இவர் கலந்துகொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மேற்கண்ட புத்தகத்தை எழுதிய ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. அதனால் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தேன்.
***
முரளி
ஆம்டே மஹாராஷ்டிர பிராமண குடும்பத்தில் 26 டிசம்பர் 1914-ல் பிறந்தவர்.
நல்ல வசதியான பின்னணி. வக்கீலுக்குப் படித்து, வார்தாவில் அந்தத் தொழிலில்
ஈடுபட்டார். அந்த சமயத்தில் மஹாத்மா காந்தியுடன் தொடர்பு ஏற்பட்டு,
காந்தியவாதியாக மாறினார்.
சுதந்தரத்துக்குப் பிறகு, வாரோரா
நகராட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நகராட்சி
“எடுப்பு கக்கூஸ்” சுத்திகரிப்பு ஊழியர்கள் சம்பளம் உயர்த்தச் சொல்லிக்
கேட்டனர். முரளி ஆம்டே நகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார்.
அவர்கள், கக்கூஸ் சுத்திகரிப்பது என்பது மிகவும் கடுமையான வேலை, யாராலும்
இதனைச் செய்யமுடியாது என்றனர். “ஏன்? நான் செய்து காட்டுகிறேன்” என்று
இறங்கினார் ஆம்டே. முதல் நாள், முதல் கக்கூஸை சுத்தம் செய்வதற்குள் உயிர்
போய்விட்டது. அப்போதுதான் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எந்த மோசமான
நிலையில் வேலையில் ஈடுபடுகின்றனர் என்பதைப் புரிந்துகொண்டார். அடுத்த 9
மாதங்கள், நாளைக்கு 40 கக்கூஸ் சுத்தம் செய்யும் வேலையை, பிற
சுத்திகரிப்புத் தொழிலாளர்களுடன் சேர்ந்து செய்தார்.
ஆம்டே,
சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் யூனியனின் தலைவராகவும் இருந்தார். எனவே
“தீண்டத்தகாதவர்கள்” வீடுகளுக்குப் போய்வந்தார். இதனால் அவரது பெற்றோரும்
கிராமத்தவரும் அவரிடம் இருந்து விலகியே இருந்தனர்.
ஆம்டே,
இந்தியாவில் நிலவிவந்த கடுமையான சாதிப் பிரிவினைகளை எதிர்க்கத் தொடங்கியது
அப்போதுதான். தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு டீக்கடைக்கு வருவார்.
அவர்களுக்கு தனி டீ கிளாஸ் கொடுக்கப்பட்டால் அதனை எதிர்த்துக் கேள்வி
கேட்பார். இந்து மதத்தின் மீதான நம்பிக்கை அவருக்குப் போக ஆரம்பித்ததும்
அப்போதாகத்தான் இருக்கவேண்டும். அப்போது நாத்திகராக மாறிய ஆம்டே தன் உயிர்
போகும் வரையில் நாத்திகராகவே இருந்திருக்கிறார்.
இந்து
மதத்திலிருந்து விலகினாலும், இந்து என்ற பெயர்கொண்ட பெண்ணை அவர் திருமணம்
செய்துகொண்டார். அதுவும் சுவாரசியமான கதை. ஒரு மாதிரியான சாமியாராக, தாடி
மீசையுடன், கதராடையுடன் அவர் அலைந்துகொண்டிருந்தார். திருமணமே
செய்துகொள்ளமாட்டேன் என்ற உறுதியில் இருந்தார். ஆனால் உறவினர் திருமணம்
ஒன்றில் இந்து என்ற தூரத்து உறவுப் பெண்ணைப் பார்த்தார். வயது மிகவும்
குறைந்த பெண் அவர். இருந்தாலும் இருவருக்குள்ளும் ஈர்ப்பு ஏற்பட்டது.
காதல் கடிதங்களைப் பரிமாறிக்கொள்ளத் தொடங்கினர். பெற்றோர்களின்
எதிர்ப்பைமீறி அந்தக் காதல் கல்யாணத்தில் முடிந்தது.
கல்யாணம் ஆகி, ஒரு குழந்தை பிறந்தபிறகுதான் ஆம்டேக்கு அதிர்ச்சியூட்டும் அனுபவம் ஒன்று ஏற்பட்டது.
***
ஒரு
நாள் கொட்டும் மழையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆம்டே, தெருவில் ஒரு
தொழுநோய் ரோகியைக் கண்டார். கை, கால் விரல்கள், மூக்கு, காது ஆகியவை
இல்லாத, உடல் அழுகி நாற்றம் எடுக்கும், விரைவில் உயிர் பிரியப்போகும் ஒரு
மாமிச மூட்டையாகத் தெருவில் கிடந்த ஓர் உருவத்தை நடைபாதையில் கண்டார்.
முதலில் அருவெறுப்பு. கிட்டத்தட்ட வாந்தியே வர, அங்கிருந்து ஓடி
வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.
அன்று இரவு முழுதும் அவருக்குத்
தூக்கம் வரவில்லை. சக மனிதன், நோயால் திண்டாடும் ஒருவன், என் தனக்கு
அருவெறுப்பைத் தரவேண்டும் என்று யோசித்துக்கொண்டே இருந்தார். அடுத்த நாள்,
வீட்டிலிருந்து ஒரு போர்வையைக் கொண்டுபோய் அந்த சாகும் உருவத்தின்மீது
போர்த்தி, அதன் பக்கத்திலேயே இருந்தார். உடலின் புண்களைத் துடைத்து
மருந்திட்டு பார்த்துக்கொண்டார். இரண்டு மூன்று நாள்களில் அந்தத்
தொழுநோயாளி இறந்துபோனார். ஆனால் தொழுநோயாளிகளுக்கு ஒரு வழி ஏற்படுத்தித்
தரவேண்டும் என்ற புத்துணர்ச்சி ஆம்டேக்குள் பிறந்தது.
தொழுநோயாளிகளுக்கு
மருந்துகொடுக்க டாக்டர்கள், நர்ஸ்கள் யாருக்கும் விரும்ப்பம் இல்லை. அது
தொற்றுநோய் என்று பயந்தனர். (உண்மையில் தொற்றுநோய்களுக்குள்ளாக, மிகக்
குறைவாக அடுத்தவரைப் பிடித்துக்கொள்ளக்கூடிய நோய் இது.) எனவே தானே
தொழுநோய்க்கு மருத்துவம் செய்யும் படிப்பைப் படிக்க முடிவுசெய்தார். இவரது
பின்னணியோ சட்டப்படிப்பு. ஆனால் அப்போது ஜவாஹர்லால் நேரு பிரதமராக
இருந்தார். அவரது சிபாரிசில், ஆம்டே கொல்கத்தாவில் இருந்த Tropical School
of Medicine-ல் 1949-ல் சேர்ந்தார். அங்கு தொழுநோய்க்கான அடிப்படை
சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொண்டார்.
1951-ல் மத்தியப் பிரதேச
அரசு, தொழுநோயாளிகள் காப்பகம் ஒன்றைக் கட்ட ஆம்டேக்கு 50 ஏக்கர் நிலத்தை
அளித்தது. சரியான காட்டு நிலம். பாறைகள். காட்டு விலங்குகள். தண்ணீர்
கிடையாது. அந்த இடத்துக்கு தன் மனைவி, சிறு குழந்தை, சில தொழுநோயாளிகள்,
ஒரு நொண்டிப் பசு, 4 நாய்கள், கையில் ரூ. 14 ஆகியவற்றுடன் ஆம்டே சென்று
சேர்ந்தார். அந்த இடத்துக்கு ஆனந்தவனம் என்று பெயரிட்டார்.
முதலில்
தொழுநோயாளிகள் உதவியுடன் கிணறு தோண்டினார். குடில்கள் அமைத்துக்கொண்டார்.
அவர்கள் கொண்டுசென்ற நான்கு நாய்களையும் சிறுத்தைகள் பிடித்துச் சென்று
தின்றுவிட்டன. மாடு தப்பித்தது. சில நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு மேலும்
சில மாடுகளை தானமாக அளித்தன. அந்த மாடுகளின் பாலை விற்று பணம் சேர்த்து
அதில் பிழைக்க அவர்கள் எண்ணினர். ஆனால் தொழு நோயாளிகள் கை பட்ட பாலாக
இருக்குமோ என்ற பயத்தில் பக்கத்தில் உள்ள கிராமவாசிகள் பாலை வாங்கவில்லை.
பின் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டுவந்து காண்பித்து, ஆம்டேயின் மனைவிதான்
பால் கறக்கிறார் என்று சொன்னபிறகுதான் பாலை விற்கமுடிந்தது.
கொஞ்சம்
கொஞ்சமாக தொழுநோயாளிகள் உதவியுடன் சுற்றுப்புறத்தில் காய்கறிகள்
பயிரிடுதல், தானியங்கள் பயிரிடுதல் ஆரம்பித்தது. விரைவில் அவர்கள் அந்தக்
காட்டை பசுமை பொங்கும் நிலமாக மாற்றிவிட்டனர். மேலும் பல தொழுநோயாளிகள்
அங்கு வர ஆரம்பித்தனர். வெளிநாட்டு நிதி உதவியுடன் அங்கே
தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை கட்டப்பட்டது.
ஆனந்தவனத்தில்
தொழுநோய் குணமாக ஆரம்பித்தது. ஆனால் குணமான தொழுநோயாளிகளும் சமூகத்தில்
சேர்த்துக்கொள்ளப்படவில்லை. தனித்தே இருக்கவேண்டி இருந்தது. எனவே
தொழுநோயாளிகள், குணமானவர்கள், பிறர் என அனைவரும் அங்கேயே வசிக்குமாறு
அவர்கள் அனைவருக்கும் வசிக்குமிடங்கள் கட்டப்பட்டன. அனைவரும் தத்தம்
சக்திக்கு ஏற்ப உழைக்குமாறு தொழிற்சாலைகள் கட்டப்பட்டன. விவசாயம், பொருள்
உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டு, உழைப்பில் நோயை மறந்து தொழு நோயாளிகள்
மகிழ்ச்சியுடன் இருக்கத் தொடங்கினர்.
தொழுநோயை எதிர்கொள்ள சுற்று
வட்டாரத்தில் பல இடங்களில் 1950களில் கிளினிக்குகள் பலவற்றை ஆம்டே
கட்டத்தொடங்கினார். 1970களில் தொழுநோயை எதிர்கொள்ள நல்ல மருந்துகள் வர
ஆரம்பித்தன. அந்தக் கட்டத்தில் ஆம்டேயின் இரு மகன்களும் டாக்டர் படிப்பை
முடிந்தனர். அவர்கள் இருவரும் இரண்டு டாக்டருக்குப் படித்த பெண்களை மணம்
செய்துகொண்டனர். ஆம்டேக்கு மஹாராஷ்டிர அரசும் பல ஏக்கர் நிலங்களைக்
கொடுத்தது. அதில் மேலும் சில இடங்களில் ஆனந்தவனம் போல தொழுநோய் ஒழிப்பில்
ஈடுபடும் இல்லங்களைக் கட்ட ஆம்டே முற்பட்டார்.
ஆனால் சில இடங்களில் உள்ளூர் கிராமவாசிகளுக்கும் ஆம்டேக்கும் பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன.
ஒரு
கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட
ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக்
கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில்
ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.
***
1990களின்
ஆரம்பத்தில் பாபா ஆம்டே நர்மதா பச்சாவோ ஆந்தோலனில் ஈடுபடத் தொடங்கினார்.
நர்மதா அணை கட்டப்பட்டால் பல லட்சம் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள்,
சுற்றுச் சூழலுக்கும் பெரும் கேடு ஏற்படும் என்பது அணை எதிர்ப்பாளர்களின்
கருத்து. ஆனால் அந்தப் போராட்டத்தில் இருக்கும்போது அயோத்தியில் பாபர்
மசூதி இடிக்கப்பட்டது. தொடர்ந்து மும்பையில் இந்து-முஸ்லிம் கலவரம்
வெடித்து பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். காந்தி நோவாகாளியில் செய்ததுபோல,
ஆம்டே தன் மனைவியுடன் மும்பை சென்று மத ஒற்றுமை பற்றிப் பேசினார். சில
மாதங்கள் அங்கே தங்கியிருந்தார்.
ஆனால் காந்திக்குக் கிடைத்த
வெற்றி, ஆதரவு, ஆம்டேக்குக் கிடைக்கவில்லை. மற்றொரு பக்கம், நர்மதா அணை
கட்டப்படுவதிலும் ஆம்டேக்குத் தோல்வியே கிடைத்தது. அவரையும் மேதா
பட்கரையும் வலுக்கட்டாயமாகப் பிடித்து ஜெயிலில் எறிந்தபிறகு அணைப்
பகுதியில் நீர் நிரப்பப்பட்டது.
கரடுமுரடான நிலப்பரப்பில்
வண்டிகளில் பயணம் செய்தது, ஓயாமல் ஓடியாடி உழைத்தது ஆகிய காரணங்களால்,
ஆம்டேக்கு 1970களிலேயே முதுகெலும்பில் இரண்டு மூன்று துண்டுகளை
எடுக்கவேண்டியிருந்தது. அதனால் இடுப்பிலும் முதுகிலும் பிரேஸ் அணிந்தே
அவர் இயங்கிவந்தார். அவரால் உட்கார முடியாது. நிற்கலாம் அல்லது
படுக்கலாம். தனது கடைசி 40 வருடங்கள் முழுக்க முழுக்க இப்படியே இயங்கினார்
அவர்.
2007-ல் லூகேமியா என்ற ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆம்டே பிப்ரவரி 9, 2008-ல் ஆனந்தவனத்தில் உயிர் நீத்தார்.
ராமோன் மாக்சேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் முதற்கொண்டு பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர்.
http://www.chennaiclassic.com/1_Chennai/posts/13_Miscellaneous/86_Books_Magazines/7817__quot_karungalkottai_singabairavan_kathai_quot_.html
"karungalkottai singabairavan kathai" (Chennai)
Reply to: (Not Shown)
(Please mention ChennaiClassic.com when contacting)
New
Humoures Novel written by famous novelist "EZHILVARADHAN", Published by
"KAGITHA POO PATHIPAGAM .Very Interesting historical comedy, which u
can enjoy each and every page.....
Contact Person : mgs
Contact Number : 044-24803253
SREE SANGAMAM INFOMEDIA PVT LTD,8,SUBRAMANIAM STREET,KODAMBAKKAM,CHENNAI-600024