Home / BookFair2010

BookFair2010


உயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள் December 6, 2009 – 7:51 am

1. சிலுவையின்பெயரால்

கிறிஸ்தவம் குறித்து

கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் திட்டவட்டமாக ஒருங்கமைக்கபப்ட்ட கிறிஸ்தவம் ஒன்று. இன்றுள்ள எல்லா திருச்சபைகளும் அந்த அமைப்பில் இருந்து முளைத்து வந்தவையே. அவை கிறிஸ்துவை ஒரு இறைமகனாக மட்டுமே முன்வைக்கின்றன. அவர் விண்ணுலகுக்கு வழிகாட்டவந்தவர் என்று சொல்கின்றன. அவர் மட்டுமே ஒரே மீட்பர் என்று சொல்லி மத ஆதிக்கத்தை உலகமெங்கும் கொண்டுசென்று பரப்ப முயல்கின்றன

இன்னொரு கிறிஸ்தவம் உண்டு. அது ஞானவாத கிறித்தவம் [ ] எனப்படுகிறது. கிறிஸ்துவை ஒரு மாபெரும் ஞானகுருவாகக் கருதுவது அது. அவர் சொன்ன இறையுலகம் இந்த மண்ணிலேயே உருவாக்கப்படவேண்டியது என்று நம்புவது. கிபி மூன்றாம் நூற்றாண்டுமுதல் ஐந்தாம் நூற்றாண்டுவரையிலான மத ஆதிக்க காலகட்டத்தில் ஞானவாத கிறிஸ்தவத்தின் நூல்கள் அனேகமாக எல்லாமே வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. ஞானவாதிகள் கொன்றே ஒழிக்கப்பட்டார்கள்.

ஆனால் வரலாறு அவற்றில் சில நூல்களின் சில பக்கங்களை விட்டு வைத்தது. பைபிளில் இருந்து விலக்கப்பட்ட புனித தாமஸ் எழுதிய நற்செய்தி, மேரி மக்தலீன் எழுதிய நற்செய்தி போன்ற பல நூல்கள் பாப்பிரஸ் சுவடிகளாக கிடைத்தன. இவை கிபி இரண்டாம்நூற்றாண்டைச் சேர்ந்தவை என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்நூல் அந்த ஞானவாத கிறித்தவ மரபின் வழியாக கிறிஸ்து என்ற மகத்தான மெய்ஞானகுருவை உள்வாங்கிக்கொள்ளும் முயற்சி.

2. மேற்குச்சாளரம்

சில இலக்கிய நூல்கள்

இலக்கிய அழகியலுக்காக நாம் எப்போதும் மேற்குச் சன்னலை திறந்து வைத்திருக்கிறோம். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரொப்பா உலகமெங்கும் சென்றது, உலக இலக்கியங்களை எல்லாம் தன் மொழிகளில் கொண்டுவந்து குவித்தது. ஆகவே உலகை அறிய ஐரோப்பாவை நோக்கியே ஆகவேண்டும். இதுவும் அத்தகைய ஒரு முயற்சி

ஆனால் வழக்கமாக எது அதிகமாகப் பேசபப்டுகிறதோ அதை மட்டுமே கவனிப்பது நம் வழக்கம். இந்நூல் பரவலாக பேசபப்டாத நூல்களைப் பற்றி பேசுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான மாஸ்டர் கிறிஸ்டியன் [மேரி கொரெல்லி] முதல் சமகாலத்து நாவலான காண்டாக்ட் [கார்ல் சகன்] வரை , ஜப்பானிய நாவலான வுமன் ஆன் டியூன்ஸ் [கோபோ ஆப்] முதல் மத்தியக்கிழக்கு நாவலான பிரிட்ஜ் ஆன் தி டிரினா [ இவோ ஆண்டிரிச் ] வரை அதன் எல்லை விரிகிறது

இந்நூல் அந்நாவல்களின் கதையை அழகிய சுருக்கமான சித்திரமாக அளிக்கிறது. அவற்றின் மீது வாசக மனம் திறக்கும்படி சில நுண்ணிய அவதானிப்புகளை நிகழ்த்துகிறது

 

 

3 புதிய காலம்

சில சமகால எழுத்தாளர்கள்

இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது. இந்நூல் சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் நூல்களை விமரிசனப்பார்வையில் அணுகி அவர்களை புரிந்துகொள்ள முயல்கிறது. அவர்களை சூழலிலும் மரபிலும் வைத்து பரிசீலிக்கிறது

விமரிசனம் என்பது எப்போதும் ஒரு விவாதமே. தீர்ப்போ அளவீடோ அல்ல. இந்நூலும் சமகாலத்தின் ஆக்கங்கள் மீது விவாதங்களையே உருவாக்குகிறது. விவாதிப்பதன்மூலம் இப்படைப்பாளிகளை நாம் நெருங்கிச்செல்கிறோம்

4 நலம்

சில உடல்நல விவாதங்கள்

அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருப்பான் என்றார் காந்தி. மனித உடல் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம். தன் உடலை ஒருவன் புரிந்துகொள்ளும் அளவுக்கு எந்த மருத்துவரும் புரிந்துகொள்ள முடியாது.

இந்நூல் உடலையும் உடலுடன் இணைந்த மனத்தையும் குறித்த விவாதங்கள் அடங்கியது. நம்முடைய சமகால மருத்துவப்பிரச்சினைகள் மாற்றுமருத்துவச் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு கோணங்களிலான உரையாடல்களை இது திறக்கிறத
 

5 பண்படுதல்

பண்பாட்டு விவாதங்கள்

நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் ‘சாப்பிட்டாச்சா?’ என்று கேட்கிறோம். விசித்திரமான இந்தப்பழக்கம் எப்படி நமக்கு வந்தது? சாப்பாடு அரிதாக இருந்த ஒரு காலகட்டம் நமக்கிருந்ததா? பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நம் தேசத்தை பதற அடித்து பல லட்சம்பேர் சாகக் காரணமாக அமைந்த மாபெரும் பஞ்சங்களின் விளைவா அது?

நம் பண்பாட்டின் ஆழத்தில் அதற்கான விடை இருக்கலாம். அந்த ஆழத்தை தேடிச்செல்லும் கட்டுரைகளும் விவாதங்களும் அடங்கியது இந்த நூல். பண்பாடென்பதே ஒரு விவாதம் என்பதனால் பேசும்தொறும் நாம் பண்பாட்டை உருவாக்குகிறோம். இந்நூல் பண்பாட்டுப்பிரச்சினைகளை ,பண்பாடு என்னும் பிரச்சினையை பல கோணங்களில் விவாதிக்கிறது. நம்முடைய நீண்ட மரபின் பின்னணியிலும் இன்றைய நவீன யுகத்தின் பின்னணியிலும் இந்நூல் தன் ஆய்வுகளை விரித்துக்கொள்கிறது

 

6 முன்சுவடுகள்

வாழ்க்கை வரலாறுகள்

நாம் நடந்துசெல்லும் இந்தப்பாதையில் ஏராளமான பாதச்சுவடுகள். நாம் அவற்றை கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் செல்கிறோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு எச்சரிக்கைகள், ஒவ்வொரு பாடங்கள்.

இலக்கியத்தில் சுயசரிதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகளுக்கு வரும் முக்கியத்துவம் இவ்வாறுதான் உருவாகிறது. இந்நூல் பல்வேறு வாழ்க்கை வரலாறுகளில் உள்ள ஆர்வமூட்டும் பகுதிகளை எடுத்து சுருக்கமாக மறு ஆக்கம்செய்து அளிக்கிறது. விதவிதமான வாழ்க்கைகள்: வழியாக கடந்துசெல்லும் வண்ணமயமான அனுபவத்தை அளிக்கிறது இது

7 சாட்சிமொழி

அரசியல்

நாம் எப்போதும் அரசியலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறோம், ஓயாமல் விவாதிக்கிறோம். ஏனென்றால் அது நம்முடைய நிகழ்காலத்தின் , எதிர்காலத்தின் மீதான விவாதம். இந்த விவாதங்களில் எத்தனையோ தரப்புகள் உண்டு. கட்சித்தரப்புகள். கோட்பாட்டின் தரப்புகள். அவற்றில் ஒன்று எழுத்தாளனின் தரப்பு.

எழுத்தாளனின் தரப்பு என்பது கட்சி மற்றும் கோட்பாடுகளைச் சார்ந்ததாக இருக்க முடியாது. எந்த நுண்ணுணர்வால் அவன் இலக்கியங்களை படைக்கிறானோ அந்த நுண்ணுணர்வால் அவன் சமகால அரசியலை அணுகும்போது உருவாகும் கருத்துக்களால் ஆனது அது. ஒரு நாவலை எழுதும் அதே ஆராய்ச்சியுடன் முழுமை நோக்குடன் அவன் வரலாற்றையும் அரசியலையும் பார்ப்பான் என்றால் அவன் குரலை எவரும் புறக்கணித்துவிட முடியாது

சமகால அரசியல் குறித்த எண்ணங்களும் எதிர்வினைகளும் பதிவுகளும் கொண்ட நூல் இது

8 லோகி

நண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிபீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரால ஏ.கெ.லோகித தாஸ் ஆசிரியருடன் நெருக்கமான உறவுள்ளவர். 2009 அன்று தன் 55 ஆவது வயதில் மறைந்த லோகித தாஸ் இப்பக்கங்களில் சொற்களின் புத்துலகில் மீண்டும் பிறந்து வருகிறார். கூடவே மலையாளச் சினிமாச்சூழல் குறித்த ஓர் அறிமுகமும் அலசலுமாக ஆகும் நூல் இது.

9 புல்வெளிதேசம்

ஆஸ்திரேலியா இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்கு புறமாக கொண்டு வைத்த ஒரு நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள் வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்கள் வெளியுலகம் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தி தங்கள் பண்பாட்டை முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக அமைத்துக்கொண்டவர்கள். அந்நிலத்தை ‘நாகரீக’ உலகம் கண்டடைந்தபோது அது பேரழிவாக ஆகியது. பின்னர் ஒரு புதிய உலகம் அங்கே உருவாகி வந்தது

ஜெயமோகன் தன் துணைவியுடன் மேற்கொண்ட ஆஸ்திரேலிய பயணம் ஒன்றின் பதிவு இந்நூல். அந்த புதிய நிலத்தை மிக விரிவான தகவல்களுடன் நுணுகி ஆராய்கிறார் ஆசிரியர்.

10 இன்று பெற்றவை

எழுத்தாளனின் நாட்குறிப்புகள்

எந்த ஒரு நாட்குறிப்பும் ஆர்வமூட்டுவதே. அதில் ஓரு மனிதனின் வாழ்க்கை உள்ளது. எழுத்தாளனின் நாட்குறிப்பு என்பது ஒரு பண்பாடு தன் நாட்குறிப்பை எழுதுவதுபோல. கடந்த சிலவருடங்களில் ஜெயமோகன் பண்பாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவாதங்களைப் பற்றி எழுதிய சிறிய குறிப்புகளின் நாள்வழி அமைப்பு இந்நூல். இங்கே என்ன பேசப்பட்டது என்பதற்கும் என்ன பேசப்படவில்லை என்பதற்கும் சான்று இது. நுண்ணிய அவதானிப்புகளும் எதிர்வினைகளும் அடங்கியது.




     RSS of this page