சீரிய
இலக்கிய வாசகனைக் குதூகலப்படுத்தும் எழுத்தாளர்களில் ஒருவர்
அசோகமித்திரன். அவரது புனைகதைகள் தரும் வாசிப்பு இன்பத்துக்கு இணையாகவே
கட்டுரைகளும் வாசிப்புக்கு உகந்தவை. அதைப்போலவே அவரது மேடைப் பேச்சுகளும்
உரையாடலும் உத்வேகத்தையும் புதிய தகவல்களையும் நுட்பமான நகைச்சுவையையும்
தருபவை, அவரது புனைகதைகளை மேலும் நெருக்கமாகப் புரிந்துகொள்ளத்
துணைசெய்பவை. படைப்பெழுத்துக்கு நிகராகப் புதிய உலகைத் திறந்து வைப்பவை
அவரது நேர்காணல்கள்.
‘காலச்சுவடு’
இதழுக்காக அசோகமித்திரனுடன் நேர்காணல் நடத்துவது என்று இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பே முடிவு செய்யப்பட்டது. கண்ணன் முன்வைத்த யோசனையை அப்போதைய
பொறுப்பாசிரியர் தேவிபாரதி தெரிவித்து நாங்கள் இருவரும் சேர்ந்து செய்யலாம்
என்று திட்டமிட்டார். நீண்ட தாமதத்துக்குப் பின்பே திட்டம் செயல்வடிவம்
பெற்றிருக்கிறது.
நேர்காணலுக்கு இசைவு கேட்டு அசோகமித்திரனுக்கு எழுதிய மின்னஞ்சலுக்கு அவர் அளித்த பதில் இது.
‘சிறுகதை
கிடைத்துவிடும் ஆனால் நேர்காணல் அவசியமா? அவசியம் என்று தோன்றினால்
கேள்விகளை எழுதி அனுப்பினால் நான் பதில்களை அனுப்பிவிடுகிறேன். தாங்கள்
வந்துதான் தீரவேண்டும் என்றால் ஆகஸ்ட் 9 அல்லது 10 சரியாக இருக்கும். ஆனால்
அதைத் தவிர்க்கப் பாருங்கள்.’
மதிப்புக்குரிய படைப்பாளியுடன் உரையாடும் வாய்ப்பைத் தவிர்க்க விரும்பவில்லை. அதன் விளைவு இந்த நேர்காணல்.
திருவனந்தபுரத்திலிருந்து
நானும் ஈரோட்டிலிருந்து தேவிபாரதியும் புறப்பட்டு சென்னை சென்று நேர்காணலை
நடத்தினோம். ஆகஸ்ட் 9ஆம் தேதி பிற்பகல் சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரத்தில்
உள்ள அசோகமித்திரன் இல்லத்தில் நேர்காணல் நடைபெற்றது.
எண்பத்து
மூன்று ஆண்டுகளைச் சுமந்த முதுகுக்கூனல், எச்சரிக்கையான நடை, பனியன்
வேட்டி அணிந்த தோற்றம். உடலில் வயதின் சோர்வு தென்பட்டாலும் பேசத்
தொடங்கியதும் உற்சாகமானார். சுமார் 2.30 மணிநேரம் நடந்த நேர்காணலில்
இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் இங்கே இடம்பெறுகின்றன.
“ஒரு
எழுத்தாளனோட 20 பக்கப் பேட்டியை வாசிப்பதைவிட அவனுடைய பக்க இரண்டு
சிறுகதையை வாசித்தே வாசகனால் அந்த எழுத்தாளனைப் புரிந்துகொள்ள முடியும்”
என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன். இது அவரை
வாசித்தவர்கள் மேலும் நெருக்கமாக அறிந்துகொள்வதற்குச் செய்த முயற்சி.
- சுகுமாரன்
இதற்காகவே திருவனந்தபுரத்திலிருந்து வந்திருக்கிறீர்களா?
ஆமாம்.
இந்த நேர்காணலைக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே திட்டமிட்டோம்.
நடக்கவில்லை. சென்னையில் சமீபத்தில் நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’
கருத்தரங்கம் இதற்கான தூண்டுதலைக் கொடுத்தது. சொல்லப்போனால் இது நீண்ட கால
ஆசை. 1977இல் என்று நினைவு. நீங்கள் கோயம்புத்தூர் வந்திருந்தீர்கள்.
அப்போது முதல் ஏற்பட்ட எண்ணம்.
அது 74 இல்லையா?
இல்லை, 77, மே மாதம்.
ஆமாம்.
அப்போது குணா என்று ஒரு கம்யூனிஸ்ட்டும் வந்திருந்தார் இல்லையா?
பெங்களூர்க்காரர். மார்க்சியத் தத்துவவாதி. எஸ்.என். நாகராஜனும்
வந்திருந்தார். ஆமாம், அந்த ரெக்கார்டரை ஆன் செய்துவிட்டீர்களா?
ஆமாம்.
இந்த இதழுக்காகக் கருத்தரங்கக் கட்டுரைகளிலிருந்து பெருமாள்முருகன்,
பெருந்தேவி ஆகியோரது கட்டுரைகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறோம். ‘தண்ணீர்’
நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்த பி.கே. சீனிவாசன் ஒரு கட்டுரை
கொடுத்திருக்கிறார். சக்கரியாவிடம் ஒரு கட்டுரை கேட்க எண்ணம். வரும் என்று
உறுதியாகச் சொல்ல முடியாது. அவர் ரொம்பவும் பிஸியான மனிதர். மலையாளத்தின்
மிக முக்கியமான பத்தி எழுத்தாளர். பத்திரிகைகளுக்குப் பத்தி எழுதுவது தவிர
அதிகமான பயணங்களும் மேற்கொள்பவர். குறிப்பாக அயல்நாட்டுப் பயணங்கள்.
இதையெல்லாம்
உடல் நன்றாக இருக்கும்போதே செய்துவிட வேண்டும். இப்போது அதெல்லாம் எனக்கு
முடிவதில்லை. இந்த ரெக்கார்டரை இங்கே வைத்தால் போதுமா? இல்லை கையிலேயே
வைத்துக்கொள்கிறீர்களா?
(கட்டடத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து யாரோ எதையோ இடிக்கும் சத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறார்)
பாருங்கள்,
சத்தம் அதிகமாக வருகிறது. சென்னையில் எதையாவது இடித்துக்கொண்டே
இருக்கிறார்கள். நிசப்தமாக இருக்கிற இடம் இங்கே ஒன்றுமில்லை. இருப்பதிலேயே
சத்தம் குறைவான இடம் இதுதான். வேண்டுமானால் அந்தக் கதவைச்
சாத்திக்கொள்ளுங்கள். அப்போது சத்தம் குறையும்.
நாம் தொடங்கலாமா சார்?
சரி.
உங்களுடைய
புத்தகங்களில் தென்படும் வாழ்க்கைக் குறிப்புகளைப் பார்த்தால் நீங்கள்
உங்களுடைய இருபத்தியொரு வயதில் சென்னைக்கு வந்ததாக இருக்கிறது. பிறகு
ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தீர்கள். அதற்கு முன்னால் உங்களுடைய
வாழ்க்கை எப்படி இருந்தது? உங்கள் குடும்பம், நண்பர்கள், உங்களுடைய கல்வி,
மற்ற அக்கறைகள் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் பேசலாம் அல்லவா?
அவற்றைப்
பற்றியெல்லாம் அவ்வளவு தெளிவாக என்னால் சொல்ல முடியவில்லை. எல்லாக்
குடும்பங்களை யும் போலத்தான். எங்கள் குடும்பத்தைப் போன்ற நிறையக்
குடும்பங்கள் அங்கே இருந்தன. அதுபற்றிக் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
ஒன்றும் இல்லை. மெஹபூப் கல்லூரியில் தமிழ் உண்டு. கல்லூரி என்று பெயர்
இருந்தாலும் அது உயர்நிலைப் பள்ளிதான். நல்ல தமிழாசிரியர். ராஜாபாதர் என்று
பெயர். பள்ளி முதல்வரே ஆங்கிலம் போதிப்பார். கோட்டீஸ்வரன் என்று பெயர்.
அது முதலியார்களுக்கான பள்ளி. முதலியார்களுக்குத்தான் முக்கியத்துவம்
தருவார்கள். ஆனால் மிக நல்ல பள்ளி.
ஆனால்
அந்தக் காலம் ஒரு சங்கடமான காலம். சௌகரியமாக ஒன்றும் இருக்கவில்லை. எங்கள்
அப்பா மிகச் சாதாரண மனிதர். தன் மருமகன்களால் அதிகச்
சங்கடத்துக்குள்ளானார். அவர்கள் மிகவும் பொல்லாதவர்கள். அதனாலே மிகவும்
நொந்து போயி ருந்தார். குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும்.
சில செத்துப் போய்விடும். அக்காவின் குழந்தை ஒன்று மிக அழகாக இருக்கும்.
கட்டி வந்து செத்துப் போய்விட்டது. அப்போது அப்பா கண்ணீர்விட்டு அழுததைப்
பார்த்திருக்கிறேன். நாங்கள் மொத்தம் எட்டு சகோதர சகோதரிகள். அவர்களில்
மூன்றுபேர் செத்துப் போய் விட்டனர். அதில் இரண்டு பேர் பையன்கள். ஒன்று
தங்கை. எனக்கு இரண்டு அக்காக்கள். நான் மூன்றாவது. எனக்குப் பிறகு ஒரு
தங்கையும் தம்பியும். அந்த நாள்களில் முக்கால்வாசிக் குடும்பங்களில்
இப்படித்தான் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அன்றைக்கு அது
ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம். அது ஒருவகையில் குடும்பத்தை நடத்துவதற்குச்
சௌகரியமான ஏற்பாடு. பல வகைகளில் உதவியாக இருக்கும். அம்மாவுக்கு உடல்நிலை
சரியில்லாது போனால் அக்கா சமைப்பாள். இப்போது ஒரு குழந்தை, இரண்டு குழந்தை
எனக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள்.
உங்களுக்கு எழுத்தில் எந்த வயதில் ஈடுபாடு ஏற்பட்டது?
என்
பத்துப் பன்னிரெண்டு வயதிலேயே எழுதுவது சந்தோஷம் தரும் விஷயமாக
ஆகியிருந்தது. அப்போதைய பாடத்திட்டத்தில் கட்டுரைப் பகுதி இருந்தது. தமிழ்,
ஆங்கிலம் இரண்டிலுமே கட்டுரைப் பகுதி இருந்தது. எனக்கு ஆங்கிலத்தில்
கட்டுரை எழுதுவதுதான் பிடித்திருந்தது. வார்த்தைகளைச் சேர்த்து எழுதுவதில்
ஒரு சந்தோஷம் கிடைத்தது. ஷேக்ஸ்பியர் பற்றி நிறைய எழுதுவேன். எல்லாச்
சின்னப் பையன்களுக்கும் இருந்ததைப் போலவே எனக்கும் கடினமான வாக்கிய
அமைப்பின் மீது ஒரு கவர்ச்சி இருந்தது. அதுதான் உயர்வான எழுத்து என்று
நினைத்திருந்தேன். பாடத்தில் ஷேக்ஸ்பியர் பாஸேஜஸ் வரும். கடினமாக
இருக்கும். அதைப் போலவே எழுதுவதுதான் உயர்வு என்று நினைத்திருந்தேன்.
அதனால் சிக்கலான வாக்கியங்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதுவேன். ஆனால்
இருபது, இருபத்தொரு வயதாகும்போது எளிமையாக எழுதுவது எல்லோருக்கும்
புரியும்படி எழுதுவது எல்லாரும் ஒத்துக் கொள்ளும்படி எழுதுவதுதான் சிறந்தது
என்று நினைக்கத் தொடங்கிவிட்டேன்.
அப்போது உங்களுக்கு ஆதர்சம் என யாராவது இருந்தார்களா?
ஆதர்சம்
எனக் குறிப்பாக யாருமில்லை. ஆனால் வேறுவிதங்களில் சில விஷயங்கள் கிடைத்தன.
ரவீந்திரநாத் தாகூர், கல்கி, ‘கலைமகள்’ பத்திரிகை. 1944-45 இல் ஒரு
வருடத்திற்கு கலைமகள் இதழ் கிடைத்தது. அந்த ஒரு வருடத்திற்குள் அநேகமாக
அத்தனை மணிக்கொடி எழுத்தாளர்களும், புதுமைப்பித்தனிலிருந்து கு.ப.ரா வரை,
எல்லோருமே எழுதிவிட்டார்கள்.
ஆங்கில
எழுத்தாளர்கள் நிறைய இருந்தார்கள். ஆனால் எனக்குப் பிடித்திருந்தது கல்கி,
தேவன் - அந்தக் குடும்பம்தான். அப்போது நாங்கள் செகந்திராபாத்தில்
இருந்தோம். கலைமகள் பத்திரிகையே இரண்டு அல்லது மூன்று பிரதிகள்தான் வரும்.
முந்திக்கொண்டு போய் காத்திருந்து வாங்க வேண்டும். இல்லை என்றால்
உங்களுக்குப் பிரதி கிடைக்காது. (அவர்களையெல்லாம் படிப்பதற்கு அதன் மூலம்
வாய்ப்புக் கிடைத்தது) தவிர ஆங்கில எழுத்தாளர்கள் நிறையப் பேர் என்னைப்
பாதிப்பவர்களாக இருந்தார்கள். தமிழில் என்று பார்த்தால் கல்கியும்
தேவனும்தான் அதிகம் பாதித்தவர்கள். கல்கியின் தொடர்கதைகள் ஒன்று முடிந்த
அடுத்த வாரமே இன்னொன்று ஆரம்பமாகும். தொடர்ந்து படிக்க வேண்டும். ஆனால்
புத்தகங்களை வாங்குவதை அப்பா நிறுத்திவிட்டார். ‘நீ
வாங்கணும்ங்கிறதுக்காகத்தான் அவங்க நீட்டி நீட்டி எழுதறாங்க. நீ வாங்கிண்டே
இருந்தா அது முடியவே முடியாது’ என்று சொல்லி பத்திரிகை வாங்குவதை நிறுத்தி
விட்டார். அதனால் ‘சிவகாமியின் சபதத்’திற்கு அப்புறம் கல்கியின்
எழுத்துகளைப் படிக்க முடியவில்லை.
உங்கள் குடும்பத்தில் யாராவது வாசிப்பார்களா? வாசிப்புச் சூழல் இருந்ததா?
அப்பா
நிறைய வாசிப்பார். உரத்து வாசிப்பது அவருக்குப் பிடிக்கும். ஆனால் அந்த
மாதிரியான நேரங்கள் மிகவும் குறைந்து போய்விட்டது. அம்மா நேரடியாகப் படிக்க
மாட்டார். அப்பா அம்மாவுக்கு வாசித்துக் காண்பிப்பார். அப்போது குமுதினி
என்று ஒரு எழுத்தாளர். ‘கோதாவரி குண்டு’ என்று குமுதினி கதை எழுதினார்.
கோதாவரி குண்டு என்றால் தெரியுமில்லையா? வெண்கலப் பானை.
அந்தத் தலைப்பில் தி. ஜானகிராமன் ஒரு கதை எழுதியிருக்கிறார்.
அப்படியா?
இருக்கலாம். ஆனால் இந்தக் கோதாவரி குண்டுக்கு இணையாக அது இருக்குமா எனத்
தெரியாது. அப்பா அதைப் படித்துக் காண்பிப்பார். எழுபது வருடங்களுக்குப்
பிறகு இப்போது அதை ஆங்கிலத்தில் படித்தேன். அப்புறம்தான் குமுதினிக்குக்
காது கேட்காது என்பது தெரிந்தது. அதனால் அவரைப் பள்ளிக்கூடத்துக்கே
அனுப்பவில்லை. அதுபோன்ற ஒரு குறையை வைத்துக்கொண்டே, கல்யாணமாகிக்
குழந்தைகளெல்லாம் பெற்றுக்கொண்ட பிறகு எழுதினார். உலகப் பயணம்
பற்றியெல்லாம் எழுதியிருக்கிறார். பிரேமா நந்த குமாருடைய மாமியார்.
‘என்னுடைய மாமியார் மாதிரி யாருமே ஆகமாட்டார்கள்’ என்று பிரேமா நந்த குமார்
சொல்லுவார். ‘என்ன இது எல்லாரும் அம்மாவைத்தானே சொல்லுவாங்க. இவர்
மாமியாரைச் சொல்கிறாரே’ என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ரவீந்தரநாத்
தாகூரின் ஒரு நாவலை குமுதினி மொழிபெயர்த்தார். அந்த நாவலுக்குப் பெயர்
வேறு. அதில் வரும் பாத்திரம் குமுதினி. அதையே நாவலுக்கு வைத்துவிட்டார்.
தனக்கும் வைத்துக்கொண்டார் குமுதினி. அப்பா அதை பைண்ட் செய்து
வைத்திருந்தார். ஆதர்சம் என ஒன்றும் இல்லையென்றாலும் இதுபோன்ற சில
பாதிப்புகள் இருந்தன.
ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது என்பதால்தான் ஜெமினி வேலையை விட்டீர்களா?
அதற்குப்
பல காரணங்கள். அப்போது அந்த நிறுவனமே உற்சாகமாக இல்லை. ஆனால் இன்னும் ஒரு
மூன்று மாத காலம் அங்கே வேலை செய்திருந்தால் எனக்கு அதன் முழுப்
பணப்பயன்களும் கிடைத்திருக்கும். நான் வேலையை விடுவதாகச் சொன்னபோது என்
முதலாளி ஒரு மூன்று மாதம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியிருந்திருக்கலாம்.
ஆனால் அவர் சொல்லவில்லை. போனால் போகட்டும் என விட்டுவிட்டார். ஒரு
பதினான்கு வருஷங்கள் வேலை பார்த்திருக்கிறேன். ஏதாவதொரு தொகை
கிடைத்திருக்குமில்லையா?
ஆனால் ஒரு நிறுவனம் அப்படித்தானே நினைக்கும்? அவர்களுக்கு ஒரு தொகை மீதமாகுமில்லையா?
ஆனால்
அவர் அப்படி நினைத்திருக்கக் கூடாது. அவர் என் அப்பாவுக்கு நெருங்கிய
நண்பர். என் அப்பா இறந்தபோது ஒரு கடிதம் போட்டார். நான்கு மாதங்கள் கழித்து
நான் என்ன செய்கிறேன் எனக் கேட்டார். டியூஷன் எடுத்துக்கொண்டிருப்பதாகச்
சொன்னேன். தன் நிறுவனத்திற்கு வந்தால் மறுபடியும் வேலை தருவதாகச் சொன்னார்.
அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. ஆனால் அப்போது அவருக்குக் கேன்சர்
வந்துவிட்டதாகச் சொன்னார்கள். இதெல்லாம் மனப்போக்கை மாற்றியிருக்கும்.
ஒரு பதினைந்தாண்டுகள் ஜெமினியில் வேலை செய்தீர்கள் இல்லையா?
பதினைந்து இல்லை. பதினான்கு.
சரி.
பதினான்கு. அது உங்களுடைய வாழ்க்கையின் முக்கியமான காலகட்டம் அல்லவா?
குறிப்பாக இளமைக்காலம் முழுவதும். அந்த அனுபவம் உங்கள் எழுத்துகளை
வடிவமைத்ததா?
இருக்கலாம். அதுவும் இருக்கலாம். அதிலிருந்து நான் எவ்வளவு எடுத்தேன் எனத் தெரியாது.
ஜெமினி
நிறுவனம் இருக்கிறதே, பொதுப்படையாக எல்லோருக்கும் பிடித்தமானதாக இருக்க
வேண்டும், எல்லோரையும் கவர வேண்டும் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும்
அதுதான் அவர்கள் நோக்கம். அதனால் நான் அந்த அனுபவங்களிலிருந்து எவ்வளவு
எடுத்துக் கொண்டேன் என்று தெரியவில்லை. ஆனால் அந்த நோக்கங்களுக்காக நான்
குற்றம் சொல்வது கிடையாது. ஜெமினியையோ வாசனையோ குற்றம் சொல்ல என்னால்
முடியாது.
வேலையை
விட்டவுடன் எழுத்தாளராகத் தீர்மானித்ததற்குக் காரணம் வேறு வாய்ப்புகள்
இல்லை என்பதுதானா? அல்லது ஒரு எழுத்தாளனாக இருப்பதில் ஒரு சுதந்திரம்
இருப்பதாக நினைத்தீர்களா?
வேலையை விட்டவுடன் எனது ‘வெறி’ என்ற கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்.
அந்தக் கதை ‘விட்டேன் ஒரு குத்து’ என்ற பெயரில் குமுதத்தில் வந்தது. இல்லையா?
ஆமாம்,
மிகவும் புகழ் பெற்ற கதை. அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வந்தது. அது
சந்தோஷமானதாக இருந்தது. எழுத்தாளனாக இருப்பதன் மூலம் சுதந்திரத்தை
உணர்ந்தேன். ஏதோ சமாளித்தேன். பெரிய பணம் ஒன்றும் வரவில்லை. வந்தது ஏதோ
குடும்பச் செலவுகளுக்குப் போதும் என்று நினைத்தேன்.
வேலையை விட்டதற்குக் குறிப்பான காரணம் ஏதாவது உண்டா?
‘நான்
ஒரு எழுத்தாளன். என்னை எழுத்தாளனாகப் பயன்படுத்தாமல் மேஸ்திரி மாதிரி
பயன்படுத்துகிறீர்களே?’ என ஜெமினி அதிபரிடம் போய்க் கேட்டேன். அவர்
‘எழுத்தாளன் மேஸ்திரி வேலைக்கு வரமாட்டான்’ என்றார். மேஸ்திரி என்ற
வார்த்தையைச் சொல்லவில்லை. முக்கியமாக டிரைவர்களைச் சமாளிக்க வேண்டும்.
அவர்கள் எல்லோரும் ரொம்பவும் நல்லவர்கள்தான். அவர்களுக்கும் எரிச்சல்
இருக்கும். அப்போதுதான் ஒரு பெரிய ட்ரிப் போய்விட்டு வந்திருப்பார்கள்.
உடனே அவர்களை வேறொரு ட்ரிப்புக்கு அனுப்ப வேண்டும்.
இந்த டிரைவர்கள்தான் ‘வண்ணங்கள்’ குறுநாவலில் வருகிறார்களா?
அதில் டிரைவர்கள் வருகிறார்களா? அதில் ஆபீஸ் பாய்கள்தானே வருகிறார்கள்?
இல்லை. டிரைவர்களும் வருகிறார்கள். அறுபத்தி நாலு பைசாவுக்காக் கஷ்டப்படுகிறார்கள் என்று கூடக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
ஆமாம்.
அவர்களுக்கு வெறும் பத்தணா சம்பளம். அதற்காக அவர்கள் அடிமையாக வேலை செய்ய
வேண்டும். அதற்காக இரவு 12 மணிவரை வேலை செய்யவேண்டும். வேலை செய்வது
அவர்கள். நான் அவர்களது வேலையை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களுக்கு
எரிச்சல் வருமா வராதா? இந்த மாதிரி தர்மசங்கடமான காரியங்களையெல்லாம் என்
மூலமாகச் செயல்படுத்த வைப்பார்கள். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும்.
அதனால் வேலை செய்கிறவர்களுக்கு நேரடியாக என்மேல்தான் கோபம் வரும்.
தொழிலாளர்கள் மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பீடி குடிப்பார்கள். அதை நான்
கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் நிர்வாகத்திலிருக்கிறவர்களுக்கு அதெல்லாம்
பிடிக்காது. அதையெல்லாம் அனுமதித்தால் யார்யாரெல்லாமோ வந்து பீடி
குடிப்பார்கள் என்பார்கள்.
ஜெமினி
ஸ்டூடியோ இருந்தது மிகப் பெரிய இடத்தில். அதில் ஒரு பீடி குடித்துப்
போட்டால் ஒன்றும் ஆகிவிடாது என்று எனக்குத் தோன்றும். அதை அந்த ஆட்களேதான்
சுத்தமும் செய்வார்கள். துப்பரவுப் பணியாளர்களில் யார் சம்பளம்
வாங்குகிறார்களோ அவர்கள் வேலை செய்ய மாட்டார்கள். தங்கள் குடும்ப
உறுப்பினர்கள், உறவினர்களைக் கொண்டு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வார்கள்.
அதனால் யாரெல்லாமோ வந்து இருப்பார்கள். அது அவர்களுக்குப் பிடிக்காது.
இப்படி நிறைய. இதெல்லாம் எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.
எழுத்தாளனின்
சுதந்திரம் பற்றிக் கேட்டீர்கள் இல்லையா? கவிஞர் ஞானக்கூத்தனுக்குப்
பிரான்சுக்கு செல்வதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால் அவருடைய அலுவலகத்தில்
அதற்கான அனுமதி தரவில்லை. ‘நீயென்ன பெரிய கவியோ’ என்று கேட்டார்கள். ஆனால்
இங்கே என்னிடம் அப்படியெல்லாம் கேட்கவில்லை. ஏன் என்றால் இங்கே
ஸ்டூடியோவில் எல்லோருமே கவிகள்தான். ஆபீஸ் பாய்கள்கூட கதை
வைத்திருப்பார்கள். ‘என்னிடம் முதல்தரமான ஒரு கதை இருக்கிறது, அதைப்
படமாக்கினால் ஐம்பது வாரம் ஓடும்’ என்பார்கள். என்ன செய்வது? எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறதே.
முழு
நேர எழுத்தாளராக வசதியான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்திருக்க வில்லை என்று
தெரியும். அப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டதில் பிற்காலத்தில் எப்போதாவது
வருத்தம் ஏற்பட்டதுண்டா?
இல்லை.
வருத்தம் தோன்றிய தில்லை. அதெல்லாம் ஒரு தீர்மானத்தில் செய்ததுதானே? ஆனால்
சமீபத்தில் எனக்கு ஒருவர் அறிமுகமானார். அறிமுகம் என்றால் என் கதைகள்
எல்லாவற்றையும் படித்ததால் ஏற்பட்ட அறிமுகம். அவர் எல்லாக் கதைகளையும்
படித்துவிட்டு நீங்க ஏன் சார் அந்த ஊரைவிட்டு வந்தீங்க? அங்கேயே சந்தோஷமாக
இருந்திருக்கலாமே?’ என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பெயர்
வேலுமணி. அங்கே ஹைதராபாத்தில் இருக்கிறார். குடும்பமெல்லாம் இங்கே
இருக்கிறது. அவர் அப்படிச் சொன்னது வியப்பாக இருந்தது. எழுத்து மூலமாக
ஒருவரை அப்படிச் சொல்ல வைத்திருக்கிறேன் என்று ஆச்சரியமாக இருந்ததே தவிர
வருத்தமெல்லாம் இல்லை.
உங்களுடைய
சிறுகதைகள் இரண்டு தொகுதிகளாக வந்திருக்கின்றன. உங்களுடைய முதல்
கதை(தமிழில்) ‘நாடகத்தின் முடிவு’. 1956இல் உங்களுடைய இருபத்தைந்தாவது
வயதில் எழுதியிருக்கிறீர்கள். அந்தக் கதையின் கதாபாத்திரம் ஒரு நாடக
ஆசிரியர், எழுத்தாளர். முதல் கதையிலேயே ஒரு எழுத்தாளர் தன் கதாபாத்திரத்தை
ஏன் எழுத்தாளராக உருவாக்க வேண்டும்? இது தற்செயலானதா? நீங்களே ‘அன்பின்
வெற்றி’ என்னும் நாடகத்தை எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?
உண்மையில் நான் ஒரு நாடக ஆசிரியராக இருக்கவே விரும்பினேன். ‘அன்பின் வெற்றி’ வானொலி நாடகம். 1953இல் ஒலிபரப்பானது.
அதை இப்போதும் ஏதாவது போட்டிக்கு அனுப்பினால் நிச்சயம் முதல் பரிசு கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.
(சிரிப்புடன்)
யாரையாவது தண்டிக்க வேண்டும் என்றால் அதைப் போடலாம். ஆனால் நாடக
வடிவம்தான் உண்மையில் கடினமானது. கடினமான வடிவங்களைத் தான் நாம் சவாலாக
எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அந்த முதல் கதை அவ்வளவு விசேஷமானது அல்ல.
காலவரிசைப்படி முதலாவது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். வரலாற்றுக்
குறிப்புக்குச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அதே சமயத்தில் ஆங்கிலத்தில் நல்ல
கதைகள் எழுதியிருக்கிறேன்.
இல்லை,
ஆச்சரியப்படுத்துவதாகத் தோன்றியது, முதல் கதையிலேயே மையப்பாத்திரம்
எழுத்தாளனாக இருக்கவேண்டும் என்று ஏன் யோசித்தீர்கள் என்பதுதான்.
அந்தச்
சமயத்தில் என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும் எழுத்தாளர்கள். முதல்
கதை எழுத் தாளரைப் பற்றியதாக இருந்ததற்குக் காரணம் அதுதான்.
ராமநரசு
என்று ஒருவர் நாடகம் எழுதினார். ஆர்வத்தில் எழுதினார். நமது எஸ்.
வைதீஸ்வரனின் கஸின். அவர் கூடப் பழக்கம் இருந்தது. அப்போது எல்லாரும்,
எல்லாரும் என்றால், எல்லா எழுத்தாளர்களும், எஸ்.வி. சகஸ்ரநாமத்தின்
வீட்டில் கூடுவார்கள். சகஸ்ரநாமம் நல்ல மனிதர். எல்லாரையும் வீட்டுக்கு
அழைத்துச் சாப்பாடு போடுவார். இங்கே தாண்டவராயன் தெருவில் வீடு இருந்தது.
ரொம்ப நீளமாக இருக்கும். எல்லாரையும் கூப்பிட்டு சாப்பாடு போட்டே முதலில்
அந்த வீட்டை விற்றார். பிறகு இன்னொரு வீட்டை, அதற்குப் பிறகு இன்னொரு
வீட்டை என்று விற்றுக் கடைசியில் இருக்கிற இடம் மட்டும் மிஞ்சியது.
அப்புறம் அதையும் விற்றார்.
எதுக்குச்
சொன்னேன் என்றால் அன்றைக்கு எழுத்தாளர்கள்கூட இருந்தேன். அதனால் ஒரு
எழுத்தாளனின் கதையை எழுதலாமே என்று தோன்றியிருக்கக் கூடும். சரியாகச் சொல்ல
முடியவில்லை.
உங்களுடைய
பல கதைகளில் எழுத்தாளர்கள் பாத்திரங்களாக இடம்பெற்றிருக்கிறார்கள்.
‘ஒற்றன்’ முழுக்கவே எழுத்தாளர்களைப் பற்றிய கதை. இன்று நாவலில்கூட
எழுத்தாளர் ஒருவரின் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. ‘மானசரோவர்’ நாவலில்
கோபால்ஜி, ‘கரைந்த நிழல்க’ளில் ராஜகோபால் இப்படிப் பல எழுத்தாளர்கள்
இடம்பெற்றிருக் கிறார்கள்.
கோபால்ஜி
ஒரு முன்மாதிரி. அவரிடம் அசாதாரணமான சக்தி இருந்தது. அவர் கண்களை
மூடிக்கொண்டு உட்கார்ந்தால் உடம்பெல்லாம் ஆடும். எழுத உட்கார்ந்தால்
கடகடவென்று எழுதிக்கொண்டே போவார். அவர் நான் பார்த்த மனிதர்களில்
ஒருவர்தான். பொதுவாக நான் பார்த்த மனிதர்களை என் கதைகளில்
நினைவுகூர்கிறேன். அது அவர்களுக்கு நான் செலுத்தும் மரியாதை அல்லது அஞ்சலி
என்று சொல்லலாம்.
உங்களுடைய
செகந்திராபாத் நாள்கள், ஜெமினி நாள்கள் பற்றியெல்லாம் நிறையக் கதைகள்
எழுதியிருக்கிறீர்கள். செகந்திராபாத் நாள்கள் பற்றிய கதைகளில் ‘சுந்தர்’
என்ற ஒரு கதையைத் தவிர மற்ற கதைகள் பெரும்பாலும் சந்தோஷமான கதைகளல்ல.
அதேபோல் ஜெமினி நாள்கள் பற்றிய கதைகள் சந்தோஷமான கதைகளல்ல. உதாரணமாக
உங்களுடைய புலிக்கலைஞன். தமிழில் எழுதப்பட்ட மிகவும் துக்ககரமான கதைகளில்
ஒன்று அது. ஏன் அப்படி? மகிழ்ச்சியான கணங்களை நீங்கள் எழுதாமல்
விட்டுவிட்டீர்களா?
இருக்கலாம். நான்
தவறவிட்டிருக்கலாம். ஆனால் அங்கே இருந்த பலருக்கும் ஏதாவது ஒரு குறை
இருக்கும். எல்லோரிடமும் ஒரு கதை இருக்கும், யாருமே கேட்க மாட்டார்கள்.
கடினமாக வேலை செய்வார்கள். ஸ்டூடியோவிலேயே தூங்கி விடுவார்கள். அப்போது
முக்கியமான நிர்வாகி ஒருவர்(எம்.ஏ. பார்த்தசாரதி என்று பெயர்) இருந்தார்.
வாசனுக்கு நெருக்கம். படப்பிடிப்புக்காக வாசனைத் தனது மோட்டார் சைக்கிளில்
அழைத்துச் செல்லும் அளவுக்கு நெருக்கம். அவருக்கு ஸ்டூடியோவில் அவருக்கு
ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட தனி அறை, உதவிக்கு ஒரு பையன், டேபிள் எல்லாம்
இருந்தது. ஒரு கட்டத்தில் என்ன காரணத்தாலோ அவருக்கு அளிக்கப்பட்டிருந்த
வசதிகளை ஒவ்வொன்றாகக் குறைத்தார்கள். ஒருநாள் வந்து பார்க்கிறார். உதவிக்கு
என்றிருந்த பையனைக் காணவில்லை. அவர் நேரடியாக வாசனைச் சந்தித்துக்
கேட்டார். அதற்கு அவர் ஆட்களைக் குறைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னவர்,
அங்கிருக்கும் வேறு பையன்களைப் பயன்படுத்திக் கொள்ளலாமே எனச் சொன்னார்.
மறுநாள் அவருடைய அறையின் ஏர் கண்டிஷன் அகற்றப்பட்டது. கேட்டதற்கு
ஜன்னலெல்லாம் திறந்திருக்கிறதே என்றார்கள். அடுத்த சில நாள்களில் மேசையும்
பறிபோயிற்று. அப்போதுதான் அவருக்கு இனிமேல் நாம் தேவைப்பட மாட்டோம் என்பது
புரிந்திருக்க வேண்டும். பிறகு அந்த அறை மீண்டும் ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு
கதாநாயகி நடிகை ஒருவருக்குக் கொடுக்கப்பட்டது. இப்படி அங்கே
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான துக்கம்.
சினிமாவில் பதினான்கு வருடங்கள் இருந்திருக்கிறீர்கள். அதன் கிளாமரான சைடு பற்றியெல்லாம் உங்கள் கவனத்துக்கு வரவே இல்லையே?
கிளாமர்
சைடு என்று எதைச் சொல்கிறீர்கள்? அவர்களில் பலரும் என்னிடம்
அழுதிருக்கிறார்கள். ஆண்களுக்கு வேண்டுமானால் பளபளப்பான உலகமாக இருக்கலாம்.
பெண்கள் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஜெமினிகணேசன் ரொம்ப சந்தோஷமாக, உற்சாகமாக
இருப்பார். அவருக்காக நான் கோஸ்ட் ரைட்டிங்க் கூடப் பண்ணியிருக்கிறேன்.
‘சினி அட்வான்ஸ்’ என்று ஒரு பத்திரிகை. அதற்கு ஒரு பையன், அப்போது பையன்
தான், கமால்கோஷ் என்று பெயர். போட்டோ கிராபர். அவனுக்கு ஆங்கிலம் அவ்வளவு
வராது. தமிழும் தெரியாது. ஆனால் ரொம்ப நல்ல பையன். ‘சினி அட்வான்’ஸில்
அவனுக்குக் கொஞ்சமான சம்பளம். அவன் வீட்டுக்கெல்லாம் நான் போயிருக்கிறேன்.
சின்ன வீடு. ஒரே அறை. அதற்குள்ளேயே ஒரு மூலையில் கொட்டகை மாதிரி ஒன்றைப்
போட்டிருப்பான். அதுதான் அவனுடைய டார்க் ரூம். ‘இதிலேயே இருந்தா டி.பி.
வந்து விடுமே’ என்று அவனிடம் சொல்லியிருக்கிறேன். அப்புறம் அவனுக்குக்
கல்யாணம் ஆயிற்று. அதற்குப் பிறகு அவன் சரியாகி விட் டான். போட்டோ எடுத்து
விட்டு என்னிடம் வந்து ‘சார், சார், ஒரு ஸ்மால் ரைட்டிங்’ என்று கேட்பான்.
அப்படி அவனுக்காக ஜெமினி கணேசன் எழுதுவது மாதிரி எல்லாம் எழுதிக்
கொடுப்பேன். சினிமாவில் இந்த மாதிரி மனிதர்களைத்தான் நான் அதிகம்
பார்த்தேன். இவர்கள் வாழ்க்கையில் என்ன கிளாமர் இருக்கிறது? இவர்கள்
வாழ்க்கைதான் எழுதக் கூடியது என்று நினைத்தேன். ஒருவேளை அதனால்தான்
கிளாமரான பக்கத்தை என்னால் எழுத முடியவில்லை என்று நினைக்கிறேன்.
சினிமா
உலகத்தில் விளிம்புநிலை யிலுள்ள உங்களுடைய கதாபாத்திரங்களைப் போலவேதான்
மானசரோவரில் வரும் புகழ்பெற்ற கதாநாய கன் சத்யன் குமாரும் துக்ககரமான
வனாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார். அது ஏன் அப்படி?
சத்யன்
குமாரின் பின்னணியைப் பாருங்கள். பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு
வந்தவன். இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவன். அப்பா அம்மா எல்லாரையும்
பிரிந்து வந்தவன். அப்போது பெரிய கலவரங்களையெல்லாம் சந்திக்க நேர்கிறது.
இந்தப் பின்னணி தந்த துன்பம் அது.
குறுக்குக் கேள்வியாக இதைக் கேட்டு விடலாமா? சத்யன் குமார் என்ற பாத்திரம் இந்தி நடிகர் திலீப் குமாரை வைத்து உருவாக்கப்பட்டதா?
ஆமாம்.
அப்போது திலீப்குமாரை வைத்து இரண்டு படங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டன.
ஜெமினியில். ஒன்று இன்சானியாத். அப்போது அவருடன் ரொம்பப் பழக்கமில்லை.
ஆனால் பைகாம் படத்தில் நடிக்கும்போது நெருக்கம் வந்தது. என்னுடைய
இடத்துக்கெல்லாம், நான் வேலை பண்ணும் இடத்துகெல்லாம் வருவார்.
அப்போதெல்லாம் ஹிக்கின்ஸ் பாதம்ஸில் வெளிநாட்டுப் புத்தகங்களுக்கு ஆர்டர்
செய்தால் கிடைப்பதற்கு இரண்டு மாதம் மூன்று மாதம் ஆகும். அப்போதுதான்
டாக்டர் ஷிவாகோவுக்குப் பரிசு கொடுத்திருந்தார்கள். அதை அவர் கையில்
வைத்திருந்தார். பார்த்து விட்டுப் படித்துவிட்டுக் கொடுத்து விடுகிறேன்
என்றேன். அவர் அடுத்த நாள் போக வேண்டும். இல்லை படித்து விட்டுக் கொடுத்து
விடுகிறேன் என்று வாங்கினேன். ஆனால் பாதிதான் படிக்க முடிந்தது. அறுநூறு
பக்கப் புத்தகம். முடிக்கமுடியவில்லை. திருப்பிக் கொடுத்து விட்டேன்.
மானசரோவர் நாவலில் வரும் சத்யன் குமாருக்கு இருந்தது போன்ற ஆன்மீகத் தேடல் திலீப்குமாருக்கு இருந்ததா என்ன?
அப்படித்
தெளிவாகச் சொல்கிற அளவுக்கு எனக்குத் தெரியவில்லை. ஆனால் இருந்திருக்கும்.
அப்போது கி.ரா என்று ஒருவர் ஜெமினியில் இருந்தார். இந்தக் கி.ரா இல்லை.
கி. ராஜநாராயணன் இல்லை. அந்தக் கி.ரா. ரொம்பச் சாதாரணமான மனுஷர்.
திலீப்குமாருக்குக் கி.ரா.வை ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் முன்னாலே
சொன்னேனே எழுதிக் கொண்டே இருப்பார் என்று. அது அந்தக் கி.ரா. தான்.
அவருக்குத்தான் உடம்பெல்லாம் உதறும். சைக்கிக் எக்ஸ்பீரியன்ஸ் அவருக்கு
உண்டு. பிறகு சாமியாராகவே ஆகிவிட்டார். மறைந்தே போய் விட்டார். சாந்தவெளி
என்கிற இடத்தில் இன்னொரு சாமியார் இருந்தார். கி.ராவுக்கு அவர்கூடப்
பழக்கம் இருந்தது. அதனால் இவருக்கும், திலீப்குமாருக்கும் அதுமாதிரி எண்ணம்
இருந்திருக்கலாம்.
உங்களுடைய
கதைகள் எல்லாமே அசலான அனுபவங்களின் அடிப்படையில் நீங்கள் சந்தித்த,
உங்களுடனே வாழ்ந்த அசலான மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டும்
உருவாக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் அனுபவத்துக்கு நெருக்கமான
சித்திரிப்புக்கள். பொதுவாக அனுபவம் இலக்கியமாகும்போது ஒரு மாற்றம் நிகழ
வேண்டுமெனச் சொல்லப்படுகிறது இல்லையா? அதுபோன்ற மாற்றங்கள் உங்கள்
படைப்புகளில் நிகழ்ந்திருக்கின்றனவா?
அப்படியெதுவும்
எதையும் யோசிக்கவில்லை. என்னுடைய கதைகள் எல்லாமே எனக்குத் தெரிந்த
மனிதர்களுக்கு நான் செலுத்துகிற அஞ்சலிதான். என்ன பெரிய மகா இலக்கியம்?
அப்படிச் செய்பவர்களும் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு நண்பரைப் பற்றி ஒரு
கதை எழுதினேன். அவர் செத்துப் போய்விட்டார். நான் அவரைப்பற்றி எழுதினேன்.
நாங்கள் இரண்டுபேரும் சந்தோஷமாக இருந்திருக்கிறோம். அவருக்கு ஹிந்தி
தெரியும். எனக்கு அவ்வளவாகத் தெரியாது. சினிமா பார்க்கும்போது முக்கியமான
வசனங்களையெல்லாம் எடுத்துச் சொல்லுவார். ஹிந்திப் பாட்டுகள் அத்துபடி.
எந்தப் பாட்டைப் பற்றிச் சொன்னாலும் அது யார் பாடியது எந்தப் படம் என்று
டக்கென்று சொல்லி விடுவார். இன்னொரு நண்பர் இருந்தார். அவர் சீரியசானவர்.
இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். பெர்னார்ட் ஷாவையெல்லாம் படித்துப்
பேசுவார். ஆர்.கே. ராமசந்திரன், அவர் ஆர்.கே. நாராயணனுடைய சகோதரர்.அவரும்
ரொம்ப சுவாரசியமானவர். அவரும் செத்துப் போய் விட்டார். என்னுடைய நண்பர்கள்
எல்லோருமே செத்துப் போய் விட்டார்கள்.
(சிறிய மௌனமும் பிறகு பெரிய சிரிப்புமாகத் தொடர்கிறார்)
மகா இலக்கியம் செய்வதற்கு நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி எழுத ஆள் இல்லை. எனக்கு இது போதும்.
நீங்கள்
எழுதத் தொடங்கிய காலம் மிகவும் நெருக்கடியான காலகட்டம் சார்ந்தது.
அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடிக்கொண்டிருந்த சமூகம். இதைத்தான் நீங்கள்
உங்கள் படைப்புகளில் வெளிப்படுத்துகிறீர்கள் எனக் கருத முடிகிறது. உங்கள்
‘தண்ணீர்’ நாவலைக்கொண்டு ஒரு வாசகன் அப்படிக் கருத முடியும். அது ஒரு
குறியீட்டு நாவல் என்று பேசப்படுவதற்கு அது அன்றைய காலகட்டத்தின்
நெருக்கடிகளைப் பற்றிய குறியீடாக இருப்பதும் காரணமாக இருக்கலாம்.
இதைப்பற்றியெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?
அப்படி
நீங்கள் சொல்லலாம். ஆனால் தென்னிந்தியா வில் அப்படிப் பெரிய சமூகக்
கொந்தளிப்பெல்லாம் ஏற்படவில்லை. சாதி சார்ந்த சில பிரச்சனைகள் இருந்தன.
சாதியைச் சொல்லி ஆட்கள் அடித்துச் சண்டை போட்டுக் கொண்டார்கள். பெரிய
கலவரங்கள் (க்ஷீவீஷீts) ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. மொத்தச் சமூகத்தையும்
புரட்டிப் போடுகிற கலவரங்கள் எதுவும் இங்கே நடக்கவில்லை. இந்தக் கலவரங்கள்
பெரிய விஷயம். ஐரோப்பாவிலெல்லாம் இந்த அனுபவங்களை வைத்தே
எழுதியிருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுகிறார்கள். இந்தியாவிலும்
இப்போதுதான் எழுதுகிறார்கள். இந்த மாதிரி நிறைய வரவேண்டும். இந்த
அனுபவங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். ஒரு செய்தி படித்தேன். ஒரு
பெண், இந்திஸார் ஹுசேய்ன் என்ற பாகிஸ்தானி எழுத்தாளரின் கதைகளைத் தொடர்ந்து
படித்துக் கொண்டிருந்தாள். இந்த இந்திஸார் ஹுசேய்ன் இந்தியா பாகிஸ்தான்
பிரிவினைக் கலவரங்களில் செத்துப் போனவர்களைப் பற்றியெல்லாம் தொடர்ந்து
எழுதிக் கொண்டிருந்தார். இந்தப் பெண் கேட்கிறாள். ‘நீங்கள் எப்போது என்
அப்பாவைப் பற்றி எழுதப் போகிறீர்கள்?’ என்று. ஏனென்றால் அவளுடைய அப்பா
சும்மா காய்கறி வாங்குவதற்காகவோ எதற்காகவோ வெளியே போனவர் திரும்பி வரவே
இல்லை. அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரிந்துகொள்ளத்தான் அப்படிக்
கேட்கிறாள். இந்த மாதிரி நெருக்கடிகளைப் பற்றியெல்லாம் எழுத வேண்டும்.
நமக்கு அந்த மாதியான நெருக்கடிகள் ஒன்றும் வரவில்லை. வரவில்லை என்றால்
அதற்காக வருத்தப்படவும் கூடாது.
உங்களுடைய ‘நானும் என் எழுத்தும்’ என்னும் கட்டுரையில் என்னை முதலில் எழுதத் தூண்டியவை
கல்கியினுடையவையும்
சார்லஸ் டிக்கன்ஸுனுடையவையும். இரண்டு பேருக்குமே இலக்கிய உலகில் அவ்வளவு
அந்தஸ்து இல்லை. டிக்கன்ஸ் மேற்பூச்சான எளிமை. கல்கி எளிமையாகவே எழுதினார்
என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இந்த இருவரின் தூண்டுதலையும் கடந்து
உங்கள் எழுத்தில் ஒரு ஆழம் இருக்கிறது, அடர்த்தி இருக்கிறது. இது இயல்பாகவே
அமைந்ததா? அல்லது நீஷீஸீsநீவீஷீus ஆக எழுதினீர்களா?
சிஷீஸீsநீவீஷீus
ஆகவெல்லாம் எழுதவில்லை. கல்கியின் கதைகள் பற்றி இப்போதுகூட ஒரு கட்டுரை
எழுதியிருக்கிறேன். அவர் வரலாற்று நாவல்களுடன் கூடவே சமூகக் கதைகளும்
எழுதியிருக்கிறார். அவரிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் திடீரென்று
‘வாசகர்களே’ என நேரடியாக வாசகர்களிடம் உரையாடத் தொடங்கிவிடுவார். அப்படி
ஒரு அசட்டுத்தனம் அவருக்கு ஏற்பட்டு விடும். டிக்கன்ஸைப் பொறுத்தவரை
அவரிடம் ஒரு பரந்த பார்வை இருக்கிறது. அவரிடம் அவ்வளவு பரிவு இருக்கும்.
டிக்கன்ஸ் ஒரு சாதாரண எழுத்தாளர் இல்லை. எழுத உட்கார்ந்தால் ஊற்று மாதிரிப்
பெருகும். வாசிக்கும்போது இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் மனம் எங்கெங்கோ
போய்விடும்.
அயல் எழுத்தாளர்கள்
பலரையும் நீங்கள் வாசித்திருக்கிறீர்கள். அவர்களில் எர்னெஸ்ட் ஹெமிங்வே
உங்களைப் பாதித்திருக்கலாம் என்று யூகிக்கலாமா? உணர்ச்சியைக் கொட்டிவிடாத,
ஆவேசப்படாத ஒரு தொனியை உங்கள் எழுத்திலும் பார்க்க முடிவதனால் இந்தக்
கேள்வி?
ஹெமிங்வே நிறைய
பாதித்திருக்கிறார். அவரைத் தவிர வேறு சிலரும்கூட பாதித்திருக்கிறார்கள்.
பார்க்கப் போனால் ஸால் பெல்லோ நிறைய பாதித்திருக்கிறார். சிங்கர், ஐசக்
பாஷேவிஸ் சிங்கர் பாதித்திருக்கிறார்.
சிங்கரின் பாதிப்புதான் உங்களுடைய ‘அழிவற்றது ‘தொகுப்பில் உள்ள கர்ண பரம்பரைக் கதைகள் என்று சொல்லலாமா?
இருக்கலாம்.
ஆனால் அப்படி மட்டுமே சொல்ல முடியாது. அழிவற்றது என்கிற கதை இல்லாமல்
இருப்பதைப் பற்றிய கதை. ஆங்கிலத்தில் நான் - பீயிங் என்று சொல்லுவார்களே
அதைப் பற்றியது. சயன்ஸில் ஒரு கோட்பாடு இருக்கிறது. எதையுமே அழிக்க
முடியாது. ஒரு மரத்தை அழித்து விட்டால்கூட அது வேறு ஒன்றாக இருந்துகொண்டே
இருக்கும். அதுதான் சயன்ஸ். ஒருவர் ஒரு காலத்தில் பெரிதாக எதையாவது
எழுதியிருப்பார். யாருமே படித்திருக்க மாட்டார்கள். அவர் பிறகு
இல்லாமல்கூடப் போயிருப்பார். ஆனால் அவருடைய படைப்பு இருந்து கொண்டே
இருக்கும். அதுதான் அழிவற்றது.
உங்களுடைய
கதைகள் வெளிவரத் தொடங்கியபோது ஒருவிதமான இலக்கியச் சூழல் இருந்தது. அந்தச்
சூழலின் இலக்கிய நடையை நீங்கள் பின்பற்ற முயற்சிக்கவில்லை. ஒரு தனித்த
நடை. அவன் கோபப்பட்டான் என்றெல்லாம் நீங்கள் எழுதவில்லை. அது குறிப்பிட்ட
கதாபாத்திரத்தின் பேச்சிலோ செயலிலோ வெளிப்படும். இது ஒரு டெக்னிக்கா?
பார்வையா?
அது என் சுபாவம். அதுதான் எழுத்திலும் வருகிறது. எளிமையான நடையில் எழுதினால் போதும். அதுதான் என் பார்வை.
கோபத்தைப்
பற்றிச் சொன்னீர்கள் இல்லையா? எனக்கும் கோபம் வரும். ஆனால் அந்தக் கோபத்தை
வைத்துக்கொண்டு என்ன செய்வது? மனைவியைக் கோபித்துக்கொள்ளலாம், மகனைக்
கோபித்துக்கொள்ளலாம். அவனு டைய மனைவியைக் கோபித்துக்கொள்ளலாம். என்னைப்
பொறுத்தவரை சந்தோஷமான நினைவுகளுடனேயே மறைந்துபோய்விட வேண்டும். அது என்
சுபாவம்.
தண்ணீரில் டீச்சரின் மாமியார், மானசரோவரில் ஜம்பகா என வன்மம் நிறைந்த பாத்திரங்கள் வருகின்றனவே?
அந்தப்
பாத்திரங்களுக்கு ஏற்படும் கோபம் ஒருவித இயலாமை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜம்பகா மனப்பிறழ்வுக்குள்ளான நிலையில் வன்மமாக நடந்துகொள்கிறாள். அவள் தன்
மகனைக் கொன்று விடுகிறாள். உடைகளை அவிழ்த்துப் போட்டுவிடுகிறாள்.
குறுநாவல்
என்ற வடிவத்தை மிகவும் திறமையாகக் கையாள்பவர் நீங்கள். நாவல், குறுநாவல்,
சிறுகதை ஆகிய வடிவங்களை ஒன்றிலிருந்து மற்றொன்றை எப்படி
வேறுபடுத்துகிறீர்கள்?
வேறுபாடே இல்லை, எல்லாமே ஒன்றுதான்.
உங்கள்
நாவல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ‘தண்ணீர்’ நாவலின் ஆங்கில
மொழிபெயர்ப்புக்கு சக்கரியா எழுதிய முன்னுரையில் மலையாள இலக்கியத்தில்
அவர்கள் சிரமப்பட்டு உருவாக்கிய நவீனத்துவப் போக்கை அசோகமித்திரன் மிக
இயல்பாகச் சாதித்திருக்கிறார் எனச் சொல்கிறார். இப்போது யோசிக்கிறபோது
தற்போதைய நவீனத்துவ, பின்நவீனத்துவ நாவல்களுக்கு ஒரு வகையில் நீங்கள்தான்
முன்னோடி எனத் தோன்றுகிறது. ஒரு கதையை நேர்கோட்டில் சொல்வதில்லை. சிதறலாகக்
கதைசொல்வது, இவையெல்லாம் இன்று நாவல்களில் புதுமை என்று சொல்லப்படுகிற
காரியங்கள். இதையெல்லாம் முன்கூட்டியே உங்களுடைய எட்டு நாவல்களில் வேறுவேறு
வகைகளில் சாதித்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் உங்களுக்குள் ஏதாவது
திட்டம் இருந்ததா?
திட்டம் எல்லாம்
கிடையாது. வாழ்க்கையில் நமக்குக் கோர்வையாக எல்லாச் சிந்தனைகளும் வருவது
கிடையாது. இப்போது நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். அந்த அளவில் அது
கோர்வையாக இருக்கிறது. அதே சமயத்தில் எனக்கு உங்களுக்குப் பின்னால் உள்ள
புகைப்படங்களையும் பற்றி யோசிக்கத் தோன்றுகிறது. வேறு நினைவுகள் வருகின்றன.
அது மனதோட பிரதிபலிப்பே தவிர திட்டமிட்டுத் துண்டுதுண்டாக எழுதி பிறகு
க்ஷ்வீரீ க்ஷ்ணீரீ ஆக இணைத்தது கிடையாது.
ஆனால் உங்களுடைய ‘இன்று’ நாவலை நிச்சயமாக அப்படிச் சொல்ல முடியாது. அதில் நிச்சயமாக ஒரு திட்டம் இருக்கிறதே?
‘இன்று’
நாவல் இருக்கிறதே, ரொம்பவும் சந்தி சிரிச்ச நாவல். அது ஒரு துன்பகரமான
நினைவிலிருந்து உருவானது. அப்போது ஒருவர் சொன்னார் இது மாதிரி ஜங்கஷனில்
இருந்த ஒரு ஜனசங்க் பையனை போலீஸ் கஸ்டடியில் வைத்து அடித்துவிட்டார்கள்;
பிறகு அவன் பைத்தியக்காரன் ஆகிவிட்டான் என்று. அப்போது பெங்களூரில் ஒரு
தீவிர மூவ்மெண்ட் இருந்தது. அன்ந்தமூர்த்தியெல்லாம் அதில் இருந்தார்கள்.
அனந்தமூர்த்தி நிறையப் பேசுவார். அறிக்கையிலெல்லாம் கையெழுத்துப் போடுவார்.
ஆனால் ஸ்நேகலதா ரெட்டி போன்றவர்கள் உண்மையான களச் செயல்பாட்டாளர்கள். நான்
அவரைப் பார்த்ததில்லை. ஆனால் அவருடைய கணவர் பட்டாபி ராமரெட்டியுடன்
பழக்கம் இருந்தது. அப்போது எமர்ஜென்ஸி அமல் படுத்தப்பட்டிருந்தது. கர்நாடகா
காங்கிரஸ் அரசு ஸ்நேகலதா ரெட்டியைச் சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு
ஆஸ்துமா பாதிப்பு இருந்தது. சிறையில் அதற்கான மருந்து கொடுக்கப்படவில்லை.
ஆஸ்துமாவுக்குத் தொடர்ந்து மருந்து தரப்பட்டால் கட்டுக்குள் இருக்கும்.
எனக்குக்கூட ஆஸ்துமா பாதிப்பு இருக்கிறது. மருந்து சாப்பிட்டால் சரியாகும்.
ஆனால் ஸ்நேகலதா ரெட்டியை 1975இல் விடுதலை செய்து விட்டார்கள். இல்லை அது
1977இல். 75இல்தான் அவசர நிலை அமலில் இருந்ததே. இந்த ஆஸ்துமா முற்றித்தான்
விடுதலையான ரொம்பச் சீக்கிரமே அவர் இறந்து போய் விட்டார். ஸ்நேகலதா ரெட்டி
விடுதலை செய்யப்பட்ட போது நான் பெங்களூரில் இருந்தேன். அப்போது என் சகோதரி
பெங்களூரில் இருந்தாள். அதனால் அடிக்கடி அங்கு போக வாய்ப்பிருந்தது.
அப்போது சி.டி. நரசிம்மய்யா என்று ஒருவர் இருந்தார். அவருக்கு என்மீது ஒரு
மதிப்பு. என் எழுத்துகளைப் படித்து உருவானதல்ல. அவருக்கு மனிதன் மேல் ஒரு
நம்பிக்கை. அவ்வளவுதான். நிறையக் கருத்தரங்குகள் நடத்துவார். நான் ஒரு
இருபது இருபத்தைந்து கருத்தரங்குகளில் கலந்துகொண்டேன். முதல் கருத்தரங்கு
மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவற்றில் பத்துக் கதைகளைப் படித்து விட்டு
மிகவும் சீரியசாகப் பங்கெடுப்பேன். ஆனால் இந்த கல்வியாளர்கள்
இருக்கிறார்களே, அவர்கள் ஒரே ஒரு கதையைப் படித்துவிட்டுப் பேப்பர்
வாசித்துவிடுவார்கள். அப்போது ஏ.கே. ராமனுஜனைச் சந்தித்தேன். அவரோடு
தொடர்பு ஏற்பட்டது. அது இவருக்குப் பிடிக்கவில்லை. அவருடைய தோரணையே மாறி
விட்டது. பிரிந்துவிட்டோம். இதெல்லாம் கஷ்டம்தான்.
எமர்ஜென்ஸி
காலத்தில் பார்த்த, கேள்விப்பட்ட எல்லாம்தான் இன்று நாவலில் வருகிறது.
அவ்வப்போது எழுதி முடித்த நாவல். அதனாலேயும் அதற்கு என்று எந்தத் திட்டமும்
இல்லை.
தண்ணீர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். சக்கரியா தண்ணீரை நவீனத்துவ நாவல்களின் முன்னோடி எழுத்து என்று சொல்கிறார். சரிதானா?
ஒரு
பிரவாகம் போய்க்கொண்டிருக்கிறது. அதில் எழுத்து ஒரு பகுதி. நம்மைவிடவும்
அற்புதமாக எழுதுபவர்கள் இருக்கிறார்கள். சக்கரியா சொல்லியிருக்கலாம்.
அவருக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். எனக்கென்னவோ அவர் மிகைப்படுத்திச்
சொல்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
தண்ணீர்
நாவலுக்கு ந. முத்துச்சாமி எழுதியுள்ள பின்னுரையில் அதைத் தமிழின் முதல்
குறியீட்டு நாவல் எனச் சொல்லியிருக்கிறாரே. ஒரு வாசகனாக அதைப்
பார்க்கும்போது அது உண்மை என்றுதான் தோன்றுகிறது.
ஒரு
குறியீட்டு நாவல் என்று சொல்வதற்கு 16 பக்கங்கள் தேவையா? நானாக இருந்தால்
அதே விஷயத்தை அரைப்பக்கத்தில் சொல்லியிருப்பேன். அவர் அதை வலுக்கட்டாயமாகச்
சொல்லியிருந்தார். இதெல்லாம் க்ரியா ராமகிருஷ்ணனின் பாதிப்பு. ஆனால்
ராமகிருஷ்ணன் அதைப் பிரசுரிக்கவில்லை.
நிஜம்.
இமையம் தகுதியான எழுத்தாளர்தான். அதில் சந்தேகமில்லை. ராமகிருஷ்ணன்
அவருடைய எழுத்துகளைப் பிரசுரிப்பார். நான் நல்ல எழுத்தாளர் இல்லை என்று
நினைத்துவிட்டார். தண்ணீரைப் பிரசுரித்ததற்குக் காரணம் சுந்தர ராமசாமி.
அப்போது அவரும் ராமகிருஷ்ணனும் ரொம்ப நெருக்கமாக இருந்தார்கள். அவர்
ஊரிலிருந்து வந்தால் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்குத்தான் போவார். இவர்
அவரை ரொம்பப் பாராட்டுவார். அவரும் பாராட்டுவார். பாராட்டு கிற மாதிரி
இருக்கும். நான் யாரையும் குறை சொல்லவில்லை. எல்லோரும் அவரவர்களுடைய நலனைத்
தான் பார்ப்பார்கள். அவர் மட்டும் என்ன பெரிதாகச் சம்பாதித்து விட்டார்?
இவர் கணக்குக் கேட்பார்.
யார்?
நம்ம
ராமசாமி. சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி அவ்வப்பொழுது கணக்குக் கேட்பார்.
ராமகிருஷ்ணன் எனக்கும் கணக்குத் தருவார். ஐந்து சதவீதம் பத்து சதவீதம்
தருவதாகச் சொல்வார்.
மருத்துவரைப்
பார்க்கப் போவதாகச் சொன்னபோது நற்றிணையிலிருந்து பத்தாயிரம் ரூபாய் கொண்டு
வந்து கொடுத்தார். இந்தச் சொக்கலிங்கம், கவிதா பப்ளிகேஷன்ஸ், என்
சிறுகதைகளை இரண்டு தொகுதிகளாகப் போட்டார். இரண்டு தடியான புத்தகங்கள்.
அப்போது அவை இரண்டும் சேர்ந்து 750 ரூபாய். இப்போது 1000 ரூபாய். 1000
பிரதிகள் விற்றுவிட்டதாகச் சொன்னார். உங்களால் நம்ப முடிகிறதா? 1000
ரூபாய், 1000 பிரதிகள். என்னாலும் நம்ப முடியவில்லை. ஆயிரம் பேர் படிப்பதாக
அவர் சொல்கிறார். அந்தப் பணத்துக்கும் எனக்குக் கொடுத்த பணத்துக்கும் என்ன
சம்மந்தம்? ஆனால் ஏதோ கொடுக்கிறார். ராமசாமியும் பணம் கேட்டுவிடுவார்.
அப்புறம் ராமகிருஷ்ணன் அகராதி போட்டார். அகராதியை நாம் பதிப்பிக்கிறோம்.
ஆனால் அது என்னவோ உலகத்திலேயே இல்லாத காரியம்போல் பேசக் கூடாது. தமிழ் -
தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - ஆங்கிலம் - தமிழ், இப்படி எத்தனையோ
விதங்களில் போடுகிறார்கள். லிப்கோ எவ்வளவு போடுகிறார்கள்? ஆனால் எதுவுமே
பேசுவதில்லை. ‘சீட்டி’ன்னு ஒரு வார்த்தை. அச்சிட்ட துணி வகை. தற்கால தமிழ்
அகராதியில் அந்த வார்த்தையே இல்லை. லிப்கோவில் அந்த வார்த்தை இருக்கிறது.
ஆனால்
‘தண்ணீர்’ நாவலை க்ரியாவில் அழகாகத்தான் போட்டார்கள். சி.மோகன்
சொல்லித்தான் போட்டார்கள். அதில் குறியீடு இருக்கிறது என்பதெல்லாம்
ஒவ்வொருவருடைய அபிப்பிராயம். நான் அப்படி நினைத்து எழுதவில்லை.
‘கரைந்த
நிழல்கள்’, ‘மானசரோவர்’ இரண்டும் சினிமாப் பின்னணியில் எழுதப்பட்டவை.
இரண்டும் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. ஆனால் இரண்டுக்குள்ளும்
ஒரு தொடர்ச்சி இருப்பதுபோல் தோன்றுகிறது. கரைந்த நிழல்களில் வரும்
ஜெயசந்திரிகா மானசரோவரிலும் இருக்கிறாள். அப்புறம் அந்தப் புரொடக்ஷன்
மானேஜர். மானசரோவரிலும் அவர் இருக்கிறார். கதைக்களங்களும் கிட்டத்தட்ட
ஒன்றுதான். ஸ்டூடியோ. கரைந்த நிழல்களின் முடிவு மானசரோவரா? இது
தொடர்ச்சிதானா? அல்லது மானசரோவரின் தொடக்கம்தான் கரைந்த நிழல்களா?
நான்
பல சமயங்களில் நிர்ப்பந்தங்களால்தான் எழுதினேன். மானசரோவர் நான் ஏதோ
திட்டம் போட்டு எழுதியதாக நினைக்காதீர்கள். ஒரு சமயம் நான் சாவியைப்
பார்த்தேன். நாரதகான சபாவிலோ வேறு எதோ ஒரு நிகழ்ச்சியிலோ அவர் என்னைப்
பார்த்து ‘என்னப்பா ஒரு கதை கொடுக்கறியா’ எனக் கேட்டார். அவர் எல்லோரையும்
‘என்னப்பா’ என்றுதான் கேட்பார். உடனே தலைப்பும் தரச் சொன்னார். நான் உடனே
மானசரோவர் என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். இதையெல்லாம்
கேட்டால் உங்களுக்கு இவ்வளவு பொறுப்பற்ற தன்மையோடு ஒரு எழுத்தாளன்
இருப்பானா என்று தோன்றும். அப்போது பிரதி தொலைந்து போய்விட்டால் என்ன
செய்வது என்கிற பயம். அதனால் கார்பன் வைத்துக்கொண்டு பால் பாயிண்ட்
பேனாவால்தான் எழுத வேண்டும். அப்படி எழுதியதை ரவி பிரசாத் என்று ஒருவர்
வாங்கிக் கொண்டு போவார். அவர் இப்போது ஆனந்த விகடனில் வேலைபார்க்கிறார்
என்று சொன்னார்கள். அந்தக் கதையை சாவி படித்ததே இல்லை.
மானசரோவர் என்ற தலைப்பு எதனால்?
எனக்கு
மானசரோவர் போக வேண்டுமென்று ஆசை. அந்த நாள்களில் போயிருக்கலாம்.
போகவில்லை. அப்புறம் ஜெமினியில் இருந்த கி.ரா காணாமல் போய் விட்டார்.
சாமியாராகிவிட்டார் என்று சொன்னேனே, அது எனக்கு ரொம்ப வருத்தத்தைத் தந்தது.
ஆனால் கடைசியில் ஒரு நோக்கமும் கிடைத்தது விட்டது என்று
வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எழுதினேன் என்று
சொல்லலாம். அந்தச் சமயத்தில் சாவி ஒரு தலைப்புச் சொல்லச் சொன்னார்.
சொன்னேன். உடனே தலைப்புச் சொல்லவில்லை என்றால் சாவி போட மாட்டார்.
(சிரித்து விட்டு) எவ்வளவு பொறுப்பற்ற தன்மை பாருங்கள்.
ஆனால்
ஒரு படைப்பு என்பது எழுத்தாளரைப் பொறுத்தவரை அப்படித்தானே தொடங்க
முடியும்? உதாரணமாக, ஒற்றன் நாவலில் வரும் பெரு எழுத்தாளனான பிராவோ நாவல்
எழுதுவதற்காக சார்ட் எல்லாம் போடுவார். பாத்திரங்கள், சம்பவங்கள்
எல்லாவற்றையும் உள்ளடக்கிய சார்ட். அதைப் பார்த்து வியந்துபோன கதைசொல்லி
தான் எழுதுகிற கதைக்கு அடுத்த அத்தியாயம் என்றால் என்ன என்றே தெரியாது.
சொல்லப்போனால் அடுத்த அத்தியாயம் என்று ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை
என்று சொல்யிருப்பான். அது எழுத்தாளனின் குரல்தானே?
பிராவோ
ஊருக்குப் போன பிறகு எனக்கு அங்கிருந்து நூறு டாலருக்குக் காசோலை
அனுப்பினார். அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிறகு
கையெழுத்துப் போட்டுத் தரச் சொன்னார்கள். அப்போது 700 ரூபாய் 800 ரூபாய்
கிடைத்தது. பிறகு அவர் அந்த நாவலை எழுதிப் பிரசுரித்துவிட்டார். ஆனால்
எனக்கு ஒரு பிரதி அனுப்பவில்லை. அங்கு நடந்த புரட்சியில்
செத்துப்போய்விட்டார் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அதற்கு ஒரு
விருது கிடைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. எனக்கு ஒரு ஸ்பானிஷ் நண்பன்
இருந்தான். அவன் நாகர்கள் பற்றி ஒரு டாகுமென்ட்ரி படம் எடுத்தான். நன்றாக
இருக்கும். இந்த ஸ்பானிஷ் நண்பன் பிராவோ உயிரோடு இருப்பதாகவும் சமீபத்தில்
அவருக்கு ஒரு விருது கிடைத்ததாகவும் சொன்னான். எனக்கு ரொம்பத் திட்டம்
போட்டெல்லாம் எழுதத் தெரியாது.
தண்ணீர்
நாவலில் ஜமுனாவின் தற்கொலை முயற்சிக்குப் பின்னர் டீச்சர் பாத்திரம்
ஜமுனாவிடம் பேசுவது, அது ஒரு முக்கியமான பேச்சு இல்லையா? அந்த நாவலில்
எந்தப் பாராவும் பெரிதாக இருக்காது. டீச்சரின் பேச்சு ஒரு உபதேசம் மாதிரி
ஒரே பாராவாக நீண்டு செல்லும். அது ஒரு எழுத்தாளனின் குரல் இல்லையா?
இருக்கலாம்.
நான் அந்த டீச்சருக்கு ஒரு ஆளுமை மதிப்பைக் கொடுக்க நினைத்தேன். அவளுக்கு
ஒரு உருவம், உள்ளம் கொடுக்க வேண்டும் இல்லையா? அதைத்தான் செய்திருக்கிறேன்.
ஆனால் அதுவும் திட்டமிட்டுச் செய்ததல்ல. நான் நீங்கள் சொல்வதை
மறுக்கவில்லை. ஆனால் இங்கே பலபேர் திட்டமிட்டுத்தான் எழுதுகிறார்கள்.
‘தண்ணீர்’ கூட நீங்கள் சிறுகதையாகத்தான் எழுதத் தொடங்கினீர்கள். இல்லையா?
ஆமாம்.
அப்போது இலக்கியச் சங்கம் என்ற அமைப்பு இருந்தது. எல்லோரும் ஆளுக்கொரு
சிறுகதை எழுதி தொகுப்பாகக் கொண்டு வருவது என்ற திட்டம் இருந்தது. ஆனால்
யாருமே எழுதவில்லை. நான் மட்டும்தான் ஒரு பைத்தியக்காரனைப் போல உட்கார்ந்து
எழுதினேன். ராமகிருஷ்ணன் எழுதவில்லை. கிருஷ்ணமூர்த்தி எழுதவில்லை,
கந்தசாமி எழுதவில்லை.
சொல்வனத்தில்
வந்த கட்டுரை ஒன்றில் ஒரு குறிப்பு இருக்கிறது. ‘எனக்கு இந்த ஆன்மீகம்,
தேடல் போன்ற வார்த்தைகளிலெல்லாம் நம்பிக்கையில்லை. சொல்லப் போனால் அந்த
மாதிரி வார்த்தைகளில் ஒரு பயம் பாருங்கொ. நான் ஒரு நல்ல டூத் பேஸ்ட்டையே
ரொம்ப காலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். அதுவே இன்னும் கிடைத்தபாடில்லை.
இதில் ஆன்மீகத்தை எப்படித் தேடுவது என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால்
உங்கள் கதைகளில் பலவற்றிலும் ஒரு ஆன்மீக விசாரம் இருக்கிறது.
கதாபாத்திரங்களுக்கோ அல்லது எழுத்தாளருக்கோ. நீங்கள் ஆன்மீகம் என்று எதைக்
கருதுகிறீர்கள்?
ஆன்மீகம் என்றால்
என்ன என்று எனக்குத் தெரியவில்லை. அது தெரியவில்லை என்று ஒத்துக்கொள்வதில்
எனக்குத் தயக்கமும் இல்லை. ஆன்மீகவாதிகள் நிறையப் பேரைப் பார்த்துவிட்டேன்.
எல்லோரும் ஏதோ ஒரு இடத்தில் நமக்குப் புரிந்துகொள்ள முடியாதவர்களாக ஆகி
விடுகிறார்கள். நான் சொன்ன இந்தச் சித்தர் செத்துவிட்டார். அவருடைய
குழந்தைகள் செத்துப் போய்விட்டார்கள். அந்தப் பெண் பட்டினி கிடந்தே
செத்துவிட்டாள். நான் அவளைப் பார்த்தேன். அவளை சித்தருடைய மகளாகத்தான்
பார்த்தேன். அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.
அன்றைக்கு கும்பகோணத்தில் மழையான மழை. அந்தப் பெண்ணுக்கு அப்போது ஒரு நூறு
ரூபாயாவது கொடுத்திருக்கலாம். நான்கு நாள்கள் சாப்பிட்டிருப்பாள். ஆனால்
நான் கொடுக்கவில்லை. பிறகு அதைப்பற்றி யோசித்தேன். கொடுக்க வேண்டும் என்று
ஏன் எனக்குத் தோன்றவில்லை? அதை வருத்தம் என்று சொல்கிறீர்களா? இது மாதிரி
சின்னச் சின்ன விஷயங்கள். ஆக ஆன்மீகம் என்று எதை வரையறுப்பது?
பலதரப்பட்ட மனிதர்கள் பற்றி எழுதிய நீங்கள் புராண இதிகாச பாத்திரங்களைக் கையாளாமல் இருப்பதற்குக் காரணம் உண்டா?
என்னைப்
புராணங்கள் பிரமிக்க வைக்கின்றன.இதிகாசம் என்னை மலைக்க வைப்பதோடு பல
இடங்கள் புரியாமலும் உள்ளன. ஆரம்ப நாட்களிலிருந்தே நான் புரியாததைத்
தவிர்த்திருக்கிறேன். என்வரை இதிகாசங்கள் புரிந்துவிடக் கூடாத புதிர்கள்.
சில சமிக்ஞைகளை உணரலாம். ஆனால் இதிகாசங்களின் கால அளவை, தூர அளவை, தர்க்கம்
நம் அறிவுகொண்டு கற்பனைசெய்து கொள்ளக்கூடியது அல்ல என்று நான்
நம்புகிறேன். இது கிரேக்க இதிகாசங்களுக்கும் பொருந்தும். ஏற்றுக்கொள்ள
வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும். விட்டுவிடுவது, இந்தியாவரை
நாத்திகர்களுக்கும் சாத்தியமில்லை. இராமாயணத்து தசரதர் 60000 ஆண்டுகள்
ஆண்டவர். 60000 மனைவிகள் கொண்டவர், இவ்வளவு நாட்கள் ஆண்டுவிட்டு அவருக்கு
மகன் இல்லை என்று புத்திரகாமேஷ்டி யாகம் புரிந்து மூன்று மனைவிகள் மூலம்
நான்கு மகன்கள் அடைகிறார். அந்த இதிகாசக் களம் இந்தியா முழுதும் பரவி
இருக்கிறது. அதே போல பாரதமும் இந்தியா முழுதும் நிகழ்ந்த கதையாக
இருக்கிறது. யுத்தங்களில் நால்வகைப் படைகள். இதில் தேர்ப் படை எப்படி
இயங்கியது? வழியெல்லாம் மாண்டவர்கள், கைகால் இழந்து துடிதுடிப்பவர்கள் -
இவர்கள் மீது எப்படி ஓட்டிச் சென்றிருக்க முடியும்? நமக்குத் தெரிந்த
தர்க்கத்தைக் கொண்டு இதெல்லாம் புரிந்துகொள்ள முடியாது. அப்புறம்
விஸ்வரூபம்.
பாத்திரங்கள்
ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவர்களாகப் படைக்கப்பட்டவர்கள். ஒரு மகாமனிதர்
இவ்வளவு நுணுக்கமாகப் படைத்த பாத்திரத்தை நான் பயன்படுத்துவது
நியாயமாகப்படவில்லை. ‘இரண்டாம் இடம்’ என்று பீமனை வைத்தோ பரதனை வைத்தோ எழுத
முடியாது.வியாசரும் வால்மீகியும் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும்
எழுதியிருக்கிறார்கள். படிக்கப் படிக்கத் திகட்டாதவை. என்னால் என்ன கூட்ட
முடியும்?
இதெல்லாம் நான் எனக்கு
வகுத்துக்கொண்டவை.இதை எல்லாரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்த
மாட்டேன். இறுதியாக ஒரு கருத்து. எல்லா நேர்காணலிலும் கேள்வி கேட்பவர் அவர்
சிந்தித்து அடைந்த சில முடிவுகளின் அடிப்படையில்தான் கேள்வி கேட்பார்.
தவறில்லை. ஆனால் என்வரை ஆன்மிகம், முன்ஜன்மம், மறு ஜன்மம், கர்மம் எல்லாமே
நிழலாக உள்ளவை. இவற்றுக்கு எனக்குப் பதில்கள் இல்லை. இன்று ஒருவர் வாழ
அன்றாட வினை - விளைவு போதுமானது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும்
செயல்படுகிறதா? இல்லை. காரணம், நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாத காரணிகள்.
எனக்கு ஆன்மிக வேட்கை உள்ளது என்பதே சுயமயக்கம். என்னால் எனக் குத்
தெரிந்தது மேல்தான் வேட்கை கொள்ள முடியும்.
உங்கள்
கதை மனிதர்கள் எல்லோருமே மிகச் சாதாரணமானவர்கள். அசாதாரணமானவர்கள்-சத்யன்
குமார் போன்ற பெரிய நட்சத்திரங்கள்- எல்லோருமே சூழ்நிலையால்
இயக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். யாருமே சூழ்நிலையை மாற்றுவதற்கான
அல்லது அதில் குறுக்கிடுவதற்கான நோக்கமே இல்லாதவர்கள். ஒரு படைப்பாளியாக
மனிதனின் அடிப்படைக் குணத்தைப் பற்றி நினைக்கிறீர்கள்?
சூழ்நிலையைத்
திட்டமிட்டு மாற்றுவது அது வேறுசில விபரீதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
அதல்லாமல் மாற்ற வேண்டும், எல்லோரும் மேன்மையடைய வேண்டும் என்னும்போது
அதற்கு நிறையக் காலம் ஆகும். ஒரு பத்து வருஷம் ஆகலாம். ஒரு நாளில்
சட்டம்போட்டு மாற்றிவிட முடியாது. அப்படி நிறைய மாற்றங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே நடந்திருக்கின்றன. இயல்பாக
நடந்திருக்கிறது.
இருபது
வருடங்களுக்கு மேலாகக் ‘கணையாழி’யின் ஆசிரியராக இருந்தீர்கள். ஒழுங்காகப்
பார்சல் கட்டுவதைத் தவிர நீங்கள் செய்த வேறு பங்களிப்பு என்ன?
கையெழுத்துப்
படிகளைப் படித்துவிடுவேன். கவிதைகளை வேறு யாராவதுதான் பார்ப்பார்கள்.
கையெழுத்துப் பிரதிகளைப் படித்தால்தான் நிறையப் புது எழுத்தாளர்கள்
வருவார்கள். பிறகு அவர்களுக்கு நான் தகவல் தருவேன். பெருமாள்முருகன்கூட
அவர் எழுதிய ஒரு கதையைப் பிடித்திருக்கிறது, மிகவும் பிடித்திருக்கிறது
என்று நான் எழுதியிருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.
சுகுமாரன்:
எனக்கும் எழுதியிருக்கிறீர்கள். ஒரு கதையைப் பிரசுரமும்
செய்திருக்கிறீர்கள். அதற்காக முப்பது ரூபாய் சன்மானமும்
அனுப்பியிருக்கிறீர்கள்.
உங்கள் கையெழுத்து நன்றாக இருக்கும்.
தேவிபாரதி: நான் ஒரு கதை அனுப்பினேன். பிரசுரிக்க இயலாது என்று சொல்லிவிட்டீர்கள்.
என்ன
எழுதியிருந்தீர்கள்? பொதுவாக ரொம்பத் தீவிரமான மனித உறவுகளில் சிக்கல்
உள்ள கதைகளைப் பிரசுரிப்பதில்லை என வைத்திருந்தோம். இது ஒரு ஐம்பது பேர்
படிக்கிற பத்திரிகை. அதில் அப்படி ஒரு கதையைப் போட்டு சம்பந்தப்பட்டவர்கள்
படித்தால் வருத்தப்படுவார்கள். அந்த வருத்தம் வாழ்நாள் முழுக்க
இருந்துவிடும். அதனால் அந்த மாதிரியான கதைகளைப் போட வேண்டாம் என்று
இருந்தேன்.
இந்தப் பார்சல் கட்டுவது பற்றிச் சும்மா ஒரு வேடிக்கைக்காகச் சொன்னது..
ரொம்ப
வருஷத்திற்கு முன்னர் ஷிஜீணீஸீ இல் அமெரிக்க அனுபவம் பற்றி ஒரு கட்டுரை
எழுதினீர்கள். ‘ளிஸீமீ tஷீuநீலீ ஷீயீ ரீணீக்ஷீறீவீநீ’ என்று. அது
சிறுகதையாக வந்திருந்தது. ‘ஒற்றன்’ நாவலில் அது நாலாவது அத்தியாயமாக இடம்
பெற்றிருக்கிறது. கட்டுரைக்கும் கதைக்கும் திட்பமான வேறுபாடு ஏதாவது
வைத்திருக்கிறீர்களா?
எனக்கு
வேறுபாடு தெரியவில்லை. அதை நான் கட்டுரையாகத்தான் எழுதினேன். அவர்கள்
கட்டுரை கேட்டார்கள். கட்டுரை அனுப்பினேன். கதையாகப் போட்டு விட்டார்கள்.
இன்று
நாவலின் முதல் இரு அத்தியாயங்களில் இரண்டு உரைகள் இடம்பெற்றிருக்கும். ஒரு
உரை. அப்புறம் இன்னொரு உரை. இரண்டுமே கட்டுரைகளாகத்தான் இருக்கும். பிறகு
ஒரு நேர்காணல். உங்கள் படைப்புகளில் இவை கலந்து கலந்துதான் இருக்கும். அவை
சாதகமாகவும் இருக்கும். முத்துலிங்கத்தின் கதைகளில்...
முத்துலிங்கம் என்றால்... கனடாவில் இருப்பவர்தானே?
ஆமாம்.
அவருடைய கதைகளில் கட்டுரைத் தன்மை இருக்கும். நாஞ்சில் நாடனின் சமீபத்திய
படைப்புகளை சிறுகதையா கட்டுரையா என வகைப்படுத்த முடிவதில்லை. அப்படிப்
பிரித்துப் பார்க்கத் தேவையில்லை என்றும் அவர் சொல்கிறார். கட்டுரைத்
தன்மைதான் அதிகமாக இருக்கும். இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடு இப்போது
குறைந்துகொண்டு வருகிறது. அப்படியான ஒரு பேதம் தேவையில்லை எனச் சொல்லும்படி
இருக்கிறதா?
கட்டுரைக்கு ஆதாரம் தர
வேண்டும். கதைக்கு ஆதாரம் தேவையில்லை. நான் கதைகளுக்கும் ஆதாரம் தருகிறேன்.
ஆனால் கட்டுரைக்குத்தான் ஆதாரம் அவசியம். புனைகதைக்கு அது தேவையில்லை.
உங்கள்
கட்டுரைத் தொகுப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. அதில் மார்க்கேஸுக்குப்
பிறகு பெரிய எழுத்தாளர்கள் என யாரும் வரவில்லை. சின்னதாக ஒரு சலுகையை
வேண்டுமானால் சல்மான் ருஷ்டிக்குக் கொடுக்கலாம் என்று சொல்கிறீர்கள்.
2002இல் எழுதியிருக்கிறீர்கள். 12 வருஷங்கள் கடந்துவிட்டன. அதற்குப் பிறகு
இப்போது நிறையப் பேர் வந்திருக்கிறார்கள். யோசே சரமாகு, ஹாருகி முரகாமி,
ஓரான் பாமுக் ரேமண்ட் கார்வர் - இப்படிப் பலர் கவனம்
பெற்றிருக்கிறார்கள்.உங்கள் கருத்தில் இப்போதைய பெரிய எழுத்தாளர் யார்?
சமீப காலத்திலேயா? நிறையப் பேர். சீனாக்காரர்களும்கூட வந்திருக்கிறார்கள். யுவான் ரூல்ஃபோ வின் கதையைச் சமீபத்தில் படித்தேன்.
எது? பெத்ரோ பராமோவா?
ஆமாம். நீங்கள் படித்திருக்கிறீர் களா?
சுகுமாரன்:
படித்திருக்கிறேன். தமிழில் வந்திருக்கிறது. ஆனால் ரூல்ஃபோ,
மார்க்கேஸுக்கு முன்பே எழுதியவர். தமிழிலேயே அவருடைய நாவலும் ‘எரியும்
சமவெளி’ என்னும் பெயரில் சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கின்றன. சரியாகச்
சொல்லப்போனால் மாய எதார்த்தவாதம் என்னும் விஷயமே அவரிடமிருந்துதான்
பரவலாகத் தொடங்கியது.
ஆமாம்,
மார்க்கேஸ் கூட ரொம்ப கெட்டிக்காரத்தனமாகச் செய்கிறார். பெத்ரோ பரோமா
இயல்பாகவே செய்துவிடுகிறார். ஆனால் நம் கல்கி அதுபோல் ஒரு கதை
எழுதியிருக்கிறார். ‘தூக்குத் தண்டனை’ என்ற ஒரு கதை. அதில் நீதிபதி ஒருவர்
ஒரு இளைஞனுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்துவிடுவார். அவன் சுதந்திரப்
போராட்ட வீரன். எதையோ கொளுத்திவிடுகிறான். அவன் மீதுள்ள குற்றச்சாட்டு
பேரரசுக்கு எதிராகப் போர் தொடுத்தது. ஆனால் அந்த நீதிபதி அவன் எப்படியாவது
தப்பித்துவிட மாட்டானா என யோசிப்பார். தூக்குத் தண்டனை
நிறைவேற்றப்பட்டுவிடும். பிறகு அவன் உயிரோடு வந்துவிடுவான். அட,
தப்பித்துவிட்டாயா என அவனைப் பார்த்த நீதிபதி சந்தோஷப்படுவார். அதற்கு அவன்
தப்பித்து விட்டதெல்லாம் போகட்டும். ஒரு சாமியார் வந்து அந்தக் கலவரம்
நடந்தபோது நான் அங்கே இல்லை என்று சாட்சி சொன்னார். ஆனால் நீங்கள் அதைக்
கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. அதில் எனக்கு வருத்தம்தான் என்பார். ஆனால்
நிஜத்தில் இளைஞன் செத்துப்போயிருப்பான். தூக்குத் தண்டனை
நிறைவேற்றப்படுவதற்கு முன்னாலேயே செத்துப்போயிருப்பான். அப்படியானால்
வந்தது யார்? இது கல்கி எழுதியது. நாம் கல்கியை மிக மட்டமாக
நினைத்துக்கொண்டிருக்கிறோம். கல்கியை எல்லோரும் மேம்போக்காக எழுதி
இருக்கிறார். அதில் சரித்திரம் இல்லை என்று சொல்கிறார்கள். அதில் எனக்கு
முழு உடன்பாடில்லை. அவர் இந்தப் ‘பொன்னியின் செல்வனை’ வேண்டுமென்றேதான்
நீட்டிக்கொண்டு போகிறார். அது உண்மை. ஆனால் தென்னிந்திய வரலாறு
கிடைப்பதற்கு எனக்கு முழுக்க இந்தப் புத்தகம் உதவி செய்தது. அந்தப்
புத்தகத்தை சி.பி. ராமசாமி அய்யர் மகன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
ஐந்து தொகுதிகள். எதற்கு இந்த வேலையற்ற வேலை என்று கேட்டேன். அந்த
மொழிபெயர்ப்பின் முதல் தொகுதியை அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி
வெளியிட்டார். அப்போது பேசிய கருணாநிதி தான் பார்த்த காஞ்சி, மாமல்லபுரம்
எல்லாம் கல்கியின் நாவலைப் படித்த பிறகு புதிதாகத் தெரிவதாக அண்ணா சொன்னார்
என்று ஒரு தகவலைச் சொன்னார். இப்படியொரு பாதிப்பை ஏற்படுத்த
முடியுமென்றால் அவரை நாம் எழுத்தாளர் இல்லை என்று சொல்ல முடியுமா? சுந்தர
ராமசாமி மாதிரி கல்கியைக் கிண்டல் செய்தவர்கள் வேறு யாருமில்லை. ஜே.ஜே. சில
குறிப்புகளை ஆரம்பிக்கிறபோதே சிவகாமியம்மாள் தன் சபதத்தை முடித்துவிட்டாரா
என்று ஜே.ஜே. கேட்பதாகத்தான் ஆரம்பிப்பார்.
அதற்கு
வேறொரு அர்த்தம் இருக்கிறது இல்லையா? அதில் வரும் சேர்த்தலை கிருஷ்ண
அய்யர் என்ற வரலாற்று நாவலாசிரியர் ’குளச்சலில் ஒரு யுத்தம் நடந்ததாமே,
அதைப்பற்றி ஒரு நாலு வரி தகவல் கிடைத்தால் போதுமே ஒரு பெரிய நாவலை
எழுதிவிடலாமே’ எனக் கதை சொல்லியான பாலுவிடம் கேட்பார். அந்த மனநிலைதான்
இங்கே இருந்த பல வரலாற்று நாவலாசிரியர்களிடம் இருந்திருக்கிறது. கல்கி
மட்டுமில்லாமல் சாண்டில்யன், ஜெகசிற்பியன்
மாதிரி.
சாண்டில்யன் சரி. ஜெகசிற்பியன் கொஞ்சம் சீரியசானவர். சாண்டில்யனுக்கு அவ்வளவாகப் பொறுப்புக் கிடையாது.
ஒரு வரலாற்று ஆதாரமோ, அதற்கான ஆராய்ச்சியோ இவர்களிடம் இருந்ததா?
மாமண்டூரில்
ஒரு யுத்தம் நடந்தது உங்களுக்குத் தெரியுமா? சாளுக்கியர்களுக்கும்
பல்லவர்களுக்கும். அப்போது ஒரு வெள்ளம் வந்தது. அதற்கு ஆதாரமும்
இருக்கிறது. சிவகாமியின் சபதம் இல்லா விட்டால் என்னால் அதைத் தெரிந்து
கொண்டிருக்க முடியுமா?
மாமண்டூர்
யுத்தம் சிவகாமியின் சபதத்தில் இடம் பெறுவது எதற்காக? வாசகனுக்கு ஒரு பல்ப்
பிக்ஷன் (ஜீuறீஜீ யீவீநீtவீஷீஸீ) தரக்கூடிய சுவாரசியத்தைக் கொடுப்பதைத்
தவிர வேறென்ன?
எழுத்தாளன் வேறு எப்படி எழுதுவான்? ஆர்வமூட்டக்கூடியது தானே எழுத்து?
அப்படியானால் எழுத்தாளனாக இருப்பது என்றால் என்ன?
அதை
நான் சொல்ல மாட்டேன். எழுத்தாளன் எதைச் சொன்னாலும் சுவாரசியமாக இருக்க
வேண்டும். நம்பும்படியாக இருக்க வேண்டும். தி.ஜ. ரங்கநாதன் என்று ஒரு
எழுத்தாளர் இருந்தாரே, அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப்
பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார்.
நான் இப்படித்தான் என்று கிடையாது. ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தை என்
மனைவியிடம் கொடுத்தேன். அவளால் படிக்க முடியவில்லை. அதில் பத்துப்
பதினைந்து பகுதிகள். அதற்கு இத்தனை விவரிப்புத் தேவையா? ராஜாஜி மகாபாரதத்தை
250 பக்கங்களில் எழுதியிருப்பார். அதற்கு இருக்கிற வாசகப் பரப்பு இதற்கு
இருக்குமா? மகாபாரதத்தைப் பிரச்சாரம் செய்ய நான் விரும்பினால் இதைப்
பரிந்துரைக்க முடியாது. இதில் வேறு என்னென்னவோ குழப்பங்கள் இருக்கின்றன.
நாகர்கள் நாகர்கள் என்று சொல்கிறார். நாகர்களுக்கு அரண்மனையெல்லாம்
கிடையாது. ஆனால் அவர் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார்.
மலையாள மகாபாரத்தில் இருக்கிறது என்கிறார்.
அறுபது வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். எப் போதாவது ‘எழுத்துத்திணறல்’ (writer’s block) ஏற்பட்டது உண்டா?
இல்லை.
ஆனால் சோர்வு ஏற்பட்டதுண்டு. சோர்வாக இருக்கிற சமயம் யாராவது கதை வேண்டும்
என்று கேட்பார்கள். எழுத ஆரம்பிப்பேன். ஒருவர் கதை கேட்டு எழுதிக்கொடுக்க
முடியவில்லை என்றால் எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சி ஏற்பட்டுவிடும்.
இந்த
நூற்றாண்டின் எழுத்து பற்றிச் சொல்லுங்கள். நீங்கள் தொடர்ந்து
படிக்கிறீர்கள். இளம் தலைமுறை எழுத்தாளர்களுடன் தொடர்பு
வைத்திருக்கிறீர்கள். அதை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
இன்றைய
எழுத்தாளர்கள் விஸ்தாரமான மனநோக்கெல்லாம் வைத்துக்கொண்டு அதற்கெனத்
தத்துவமெல்லாம் வைத்துக்கொண்டு எழுத வேண்டும் என நினைக்கிறார்கள்.
தஸ்தயேவ்ஸ்கி ‘கரமாசோவ் சகோதரர்களை’ எழுதினார். சாதாரண எழுத்தாளர்களால்
அப்படியெல்லாம் எழுத முடியாது. அவர் ஒரு துப்பறியும் நாவல் எழுத
விரும்பினார். அதற்கான ஆதாரங்களையெல்லாம் சேகரித் தார். க்ரைம்
ரெக்கார்டுகள் முதலானவற்றைச் சேகரித்தார். கடைசியில் ‘குற்றமும்
தண்டனையும்’ வேறுமாதிரியாக உருவாயிற்று. முன்பே சொன்னது போல்தான்.
ஒன்றைப்பற்றிய எண்ணமும் அது உருவாகிற விதமும் வேறுவேறுதான். இப்போது
தற்காலம் பற்றி எழுதுகிறார்கள். அரவிந்த் அடிகா அப்படித்தான் எழுதுகிறார்.
அவருடைய ‘Last Man in Tower’ நாவல். ஒரு மாஃபியா கும்பல் ஒரு பழைய
குடியிருப்பை வாங்கும். அதை இடிப்பதற்காக எல்லாரையும் குடியிருப்போரை
வெளியேறச் சொல்லும். முப்பது, நாற்பது வருடம் இருந்தவர்கள் எங்கே
போவார்கள்? அதில் குடியிருந்த கிழவர் வெளியேற மறுத்துவிடுவார். அவருக்குப்
போக இடமில்லை. கொல்லலாம். ஆனால் கொன்றது யார் என்று தெரிந்துவிடும்.
அதற்காகப் பல வகைகளில் அவருக்குத் தொந்தரவு கொடுப்பார்கள். வீட்டில்
சாணியடிப்பார்கள். இரவு நேரங்களில் தொலைபேசியில் அழைப்பார்கள். அது இன்றைய
வாழ்க்கை.
இன்று தலைமுறைகளைப் பற்றிய
நாவல்கள் வருகின்றன. ஒரு நூற்றாண்டு, இரண்டு நூற்றாண்டு வாழ்க்கையைப்
பற்றி எழுதுகிறார்கள். நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இரண்டு நூற்றாண்டு அல்ல, ஆறு நூற்றாண்டுகளைப் பற்றிக்கூட எழுதுகிறார்கள். சு. வெங்கடேசன் நாவல். பெயர் நினைவுக்கு வரவில்லை.
‘காவல் கோட்டம்.’
அந்த
மாதிரி ரொம்பவும் பின்னோக்கியெல்லாம் போக முடியாது. அந்த நாள்களில் இப்படி
யெல்லாம் இருந்தது என்று வெகு சுலபமாக எழுதி விடுகிறார்கள். எனக்கு
ரொம்பப் பயமாக இருக்கிறது. நிறையத் தப்பபிப்ராயமெல்லாம் உருவாகிறது. எனக்கு
நேற்று பற்றியே சந்தேகம். இன்றைக்கு நீங்களிருவரும் வந்திருக்கிறீர்கள்.
அதுவரை உண்மை.
உங்கள் கதைகளில் ஆண்
பாத்திரங்களைவிடப் பெண் பாத்திரங்கள் துலக்கமாக இருக்கின்றன. அவர்களுடைய
உணர்வுகளை மிகவும் உண்மையாகச் சொல்கிறீர்கள். இது பற்றிச் சொல்லுங்கள்.
அப்படியும்
சொல்லலாம். ஆனால் ஆண், பெண் என்றெல்லாம் இல்லை. ஒருவகையில் அது
எழுதுவதற்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது. ஆண் பாத்திரங்களில் அது குறைவு.
ஆனால்
பெண் பாத்திரங்கள் அதில் துலக்கமாகிவிடுகின்றன. ‘தண்ணீரில்’ வரக்கூடிய
சாயா, டீச்சர், மானசரோவரில் வரக்கூடிய ஜம்பகம் எல்லோருமே மிகவும் உறுதியாக
இருக்கிறார்கள். இவர்களெல்லாம் சக்தியின் குறியீடுபோல் தோன்றுகிறது.
எனக்கு
நீங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. நீங்களாக
அதிகப்படியான அர்த் தத்தை ஏற்றிவிடுகிறீர்கள். அவை எல்லாம் வெறும் கதைகள்,
ஐயா. அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை.
உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை போல ஆகிவிடும்- அசோகமித்திரன் நேர்காணல்
ஐம்பது
ஆண்டுகளுக்கு மேல் எழுதிவரும் அசோகமித்திரன் தமிழின் முன்னோடி எழுத்தாளர்.
எளிய உரையாடல்களால் ஆன அவரது படைப்புகள் வாழ்வை மிக நுட்பாகச்
சித்தரிப்பவை. அவரது கதை மாந்தர்கள் மிகையுணர்ச்சி அற்றவர்கள். அப்பாவின்
சிநேகிதர் தொகுப்புக்காக 1996இல் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்.
ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதிவருகிறார். அசோகமித்திரனின் இலக்கியப்
பங்களிப்பிற்காக அவருக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இந்த
ஆண்டின் திரு.வி.க. விருதை வழங்கவுள்ளது.
இப்போது
தமிழ் வளர்ச்சித் துறையின் திருவிக விருது கிடைத்துள்ளது. மிக நீண்ட
பயணத்திற்குப் பிறகுதான் தொடர்ந்து விருதுகளால்
அங்கீகரிக்கப்பட்டுவருகிறீர்கள்...
விருது
கொடுக்கிறார்கள். சந்தோஷம். விருதுகொடுப்பதில் நிறைய பேருக்கு மகிழ்ச்சி.
அவ்வளவுதான். தொண்டு கிழம் ஆன பிறகு விருதுகொடுக்கிறார்கள். பலபேர் விருது
இல்லாமலே இறந்துவிடுகிறார்கள். எனக்கு 82 வயதாகிவிட்டது. சாரல் விருது
விக்கிரமாதித்யனுக்குக் கொடுக்கிறார்கள். ஆனால் எனக்குக் கவிதை குறித்தே
பொதுவாக நிறைய சந்தேகம் இருக்கிறது. எப்போதும் எனக்குக் கவிதை குறித்துச்
சந்தேகம் உண்டு. கவிதையைப் புனித வாக்கு என்கிறார்கள். கொஞ்சம் முயற்சி
எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்.
இது பொதுவாகக் கவிதை குறித்த உங்கள் அபிப்ராயமா?
ஆம்.
ஆரம்பத்தில் கவிதை ஏன் அப்படி எழுதப்பட்டது என்றால் எழுதிய அந்தச் சாதனம்
வெகுநாள் இருக்காது. ஓலைச் சுவடிகள் 150 வருஷத்திற்குள்
உதிர்ந்துபோய்விடும். அதனால் மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை, மோனை,
அலங்காரங்கள் வைத்து எழுதினார்கள். மகத்தான படைப்புகள் எல்லாம்
இருக்கின்றன. நான் இல்லை என்று சொல்லவில்லை.
கவிதை குறித்த சந்தேகம் தமிழ்க் கவிதைக்கு மட்டுமானதா?
எனக்குத்
தெரிந்த மொழியில் இருக்கும் கவிதைகள் எல்லாம் சந்தேகமானவைதாம். நான் கவிதை
எழுதியதில்லை. ஆனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் கவிஞர்களாக
இருக்கிறார்கள். நண்பர் வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்றோர்.
ரொமண்டிஸிஸம்
உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நீங்கள் எழுத வந்தீர்கள். ஆனால் உங்கள்
கதைகளின் மாந்தர்கள் அதைக் களைந்த இயல்பான மனிதர்களாக இருந்தார்கள். இது
எப்படிச் சாத்தியமாகியது?
அது
என்னுடைய இயல்பு. நான் என் கதைகளுக்குள் இது இதையெலாம் தவிர்க்க வேண்டும்
என்றெல்லாம் நினைக்கவில்லை. சிலர் ரொமண்டிக் தன்மையுடன் எழுதுகிறார்கள்
என்றால் அவர்களுடைய் இயல்பில் எங்காவது ரொமண்டிஸிஸம் இருக்கும். காண்டேகர்
என்று ஒரு எழுத்தாளர். எல்லா இந்திப் படங்களும் அவர் கதைகள் மாதிரியே
இருக்கும்; 2 ஆண்கள், 2 பெண்கள். காண்டேகரின் படைப்புகளை மு.வ. மிகவும்
வியப்பார். ஆனால் மு.வ.வின் எழுத்தில் அவ்வளவு ரொமண்டிஸம் இல்லை. நன்னெறி
கூறுவது போல இருக்கும். கல்கி எழுத்து நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கதை
முடிவில் ஒரு ரொமண்டிஸிஸத்தைக் கொண்டுவந்துவிவார்.
18ஆவது அட்சக்கோடு, கதைச் சம்பவம் நடந்து பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எழுதிய நாவல். இந்தக் கால இடைவெளி எதனால்?
பொறுமையாகத்தான்
எழுத வேண்டும். அப்போதுதான் அந்தக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைச்
சரியானபடி எடுத்துக் கூற முடியும். அதாவது படைப்புக்கு நியாயம்
செய்யும்படி. உடனே உடனே எழுதினால் செய்திப் பத்திரிகை மாதிரி ஆகிவிடும்.
நேற்று சசி தரூர் மீது எல்லோரும் அனுதாபம் காட்டிக்கொண்டிருந்தார்கள்.
இன்று கொலைசெய்துவிட்டார் என்கிறார்கள். அதனால் ஒரு இடைவெளி விட்டுச்
செய்வது நல்லது. ஆனால் இதை எல்லோருக்குமான வழியாகச் சொல்லவில்லை.
கால இடைவெளிக்குப் பிறகு எழுதும்போதுதான் உங்களால் துல்லியமாக எழுத முடிகிறதா?
ஒரு
வரலாற்றுப் பின்னணியில் எழுதும்போது இம்மாதிரியான இடைவெளி தேவை. சில
அந்தரங்கமான கதைகளுக்கு இடைவெளி தேவையில்லை. ஐந்து மாதம் முன்பு
பக்கத்துவீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதியுள்ளேன்.
தலித்தியம், பெண்ணியம் போன்ற கோட்பாடுகளை ஒரு எழுத்தாளராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்தக்
கதை இந்தக் கோட்பாட்டுக்குள் வரும் எனப் பிரிப்பதில் தவறு ஒன்றும் இல்லை.
ஆனால் ஒரு நிஜக் கதை அனைத்துக் கோட்பாடுகளையும் கொண்டதாகத்தான் இருக்கும்.
கோட்பாடுகள் மக்களுக்கு நலம் தருவதாக, நம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க
வேண்டும். ஆனால் ஒரு தலித் தான் தலித்தைப் பற்றி எழுத வேண்டும் என்றில்லை.
பிரேம் சந்த் தலித் இல்லை. அவர் எழுதிய சத்கதி ரொம்ப விஷேசமானது. ஒரு
தலித்கூட அந்த மாதிரி எழுதியிருக்க முடியாது.
தமிழ் படைப்பு மொழியின் தொனி இன்றைக்கு வெகுவாக மாறியிருக்கிறது. அது பற்றி...
இது
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது. சில ஐரோப்பியப் படைப்புகள்
விவரிப்புகள் மிகுந்ததாக இருந்தன. அந்தப் பாதிப்பில்தான் எழுதினார்கள்.
ஆனால் அதைத் திட்டமிட்டுச் செய்தார்கள் எனச் சொல்ல முடியாது. அவர்களே
அறியாதபடி அந்தப் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். சிறந்த எழுத்தாளன்
உரையாடல்கள் மிகுந்தும் எழுதுவான். விவரிப்புகள் மிகுந்தும் சிறப்பாக
எழுதுவான்.
நாவல் என்ற ஒரு வடிவத்திற்குப் போன பிறகும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறீர்கள்...
நான்
எழுதுகிறேன். பல பேரைச் சென்றடைகிறது. அது அவர்களுக்குப் புதிய விஷயமாக
இருக்கிறது. சமீபத்தில் தி இந்து பொங்கல் மலரில் வைரம் என்று ஒரு சிறுகதை
எழுதியிருந்தேன். பல பேருக்கு ஆச்சரியம், 500 ரூபாய்க்கு வைரத் தோடு
கிடைக்குமா என்று. இதெல்லாம் இந்தக் கதை மூலம் அவர்களுக்குத்
தெரியவருகிறது. மனித உறவுகள் எப்படியெப்படி எல்லாம் இருந்தது,
எப்படியெல்லாம் மாறியிருக்கிறது எனச் சொல்கிறது அந்தக் கதை. நாங்கள் ஊரை
விட்டு வந்துவிட்டோம். பேசாமல் அங்கேயே இருந்திருக்கலாம்.
ஊரின் நினைவுகள்தாம் உங்களை எழுத வைக்கிறதா?
இருக்கலாம்.
எந்த இடத்தில் உங்களுக்கு வேர்கள் இருக்கிறதோ அந்த இடத்தில் இருப்பது
நல்லது. அந்த வேர் அறுந்து போய்விட்டது. இப்போது புதிதாக வேர்கள்
கண்டுபிடிக்க வேண்டியது இருக்கிறது. சில சமயம் வேர் பிடித்துக்கொள்கிறது.
சில சமயம் பிடிக்கிறதில்லை.
இன்றைக்குள்ள சிறுகதைகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?
நல்ல தேர்ச்சி இருக்கிறது. ஆனால் சிறுகதைகளின் தேவை குறைவு. அதனால் ஒன்றோடு ஒன்றை ஒப்பிடுவது சிரமம்.
இன்றைக்கு உத்வேகம் எடுத்துள்ள இணைய எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து?
அதில்
அவ்வளவு நம்பிக்கை இல்லை. படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம்.
எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச்
சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை
படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என
ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து...
மூணு
நாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல்
இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக
இருக்கிறது. இந்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில்
நடப்பதாகச் சொன்னார்கள். அங்கே 20 படிகள் இருக்கும். கைப்பிடி இருக்காது.
உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி
இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க
வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே
விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற ஆறு மாதம் ஆனது.
இன்றைக்கு மானுடவியல், சமூகவியல் சார்ந்த நாவல்களே அதிகம் கவனம் பெறுகின்றன. இவை இலக்கியத் தரமானவையா?
பெரிய
நாவலாக இருந்தாலே அதன் இலக்கியத் தரம் குறைந்து போய்விடும். நாவல்
வடிவத்திற்கே குறைபாடு உள்ளது. உடனே டால்ஸ்டாய் எழுதவில்லையா? என்பார்கள்.
War and Peace நாவலில் நிறைய பிழைகள் உண்டு. அந்தப் பிழைகளைச்
சரிசெய்வதற்காக ஒரு பின்னுரை, பிறகு ஒரு பின்னுரை, அதற்குப் பிறகு இன்னொரு
பின்னுரை என அந்நாவலில் நான்கு பின்னுரைகள் இருக்கும். நாவல் எழுதிவிட்டு
ஒருத்தன் பின்னுரை எழுதுகிறான் என்றால் அந்த நாவலில் அவனுக்குத் திருப்தி
இல்லை என்றுதானே அர்த்தம்? ஆனால் அதே மனுஷன் ரொம்ப சின்ன நாவல்களும்
எழுதியிருக்கிறார். முன்பு இந்த மாதிரியான நாவல்களுக்கு வாசகர்கள்
இருந்திருக்க மாட்டார்கள். பதிப்பாளர்களும் வெளியிட மாட்டார்கள்.
இந்த மாதிரியான நாவல்களுக்கு இன்று தேவை இருக்கிறதா?
தேவை,
தேவையில்லை என்று இல்லை. எழுதியிருக்கிறார்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு
ஒரு பரிசு கிடைத்துவிட்டால் படிக்கிறார்கள். படிக்க வேண்டும்.
நீங்கள் ஆங்கிலத்திலும் கவனம் பெற்ற எழுத்தாளர்...
ஆங்கிலத்தில்தான்
முதலில் எழுதினேன். டெக்கான் ஹெரால்டில், இல்லஸ்ரேட் வீக்லியில் எழுதி
இருக்கிறேன். தொடர்ந்து ஆங்கிலத்திலே எழுதியிருக்க வேண்டும். ஆனால்
தொடர்ந்து எழுதவில்லை. தமிழில் நிறைய செய்வதற்கு இருக்கிறது என நினைத்தேன்.
அதுவும் ஒரு மாதிரி ரொமண்டிஸிஸம்தான்.
Keywords:
அசோகமித்திரன்,
நேர்காணல்,
இலக்கியம்,
படைப்பு,
கதை மாந்தர்கள்
அசோகமித்திரன் நேர்காணல் (அம்ருதா ஜூன் 2009 இதழில் வெளியான நேர்காணல்)
‘அச்சுக் கோப்பவர்கள்தான் என் ஆசான்கள்’
-அசோகமித்திரன்
தமிழின்
முக்கியமான நாவல்களாக கருதப்படும் ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘18வது
அட்சக்கோடு’, ‘மானசரோவர்’ ஆகியவற்றை எழுதிய அசோகமித்திரன், 1931-ம்
ஆண்டு, செப்டெம்பர் 22-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில்
பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழில்
எழுதி வருபவர்.
இவரது
பல படைப்புகள் பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட அயல்
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1996-ம் ஆண்டு, இவருடைய
‘அப்பாவின் சிநேகிதர்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி
விருது பெற்றார்.
ஜெமினி
ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர்.
அவருடைய படைப்புகளைப் போலவே நாம் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களும்
கூர்மையாக இருக்கின்றன. இனி அவருடன் நேர்காணல்...
கேள்வி:உங்கள்
கதைகளுக்கான மொழியை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்? அதுவரை தமிழில்
பயன்பாட்டில் இல்லாத மொழி உங்களுடையது. மிகவும் அப்ஜெக்ட்டிவ்வாக, செய்தி
சொல்லும் தொனி அதில் இருக்கிறது. இதை எப்படி உருவாக்கிக்கொண்டீர்கள்?
அசோகமித்திரன்: நானாகத்
திட்டமிட்டு என் நடையை உருவாக்கிக்கொள்ளவில்லை. உ.வே. சாமிநாதய்யரின்
‘என் சரித்திரம்’ படைப்பை ஆனந்த விகடனில் தொடராக வந்தபோது என் எட்டாவது
வயதில் படித்தேன். கல்கியின் ‘தியாக பூமி’யையும் அதே காலத்தில் படித்தேன்.
உண்மையில் என் நடையை அப்படைப்புகள்தான் உருவாக்கியிருக்க வேண்டும்.
கேள்வி: தமிழ்க்
கதைகளுக்குள் ஆசிரியரின் குரல் உரத்து ஒலிப்பது என்பது ஒரு பாணி. நீங்கள்
அதை முற்றிலும் தவிர்த்துவிட்டீர்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகள்
கழித்து இன்று அது ஓர் முக்கிய எழுத்துப் பாணியாகவே வளர்ந்திருக்கிறது. இதை
எப்படி செய்தீர்கள்?
அசோகமித்திரன்: ஆசிரியரின்
குரல் ஒரேயடியாக இல்லை என்று கூறமுடியாது. ஒரு குரல் இருக்கிறது. ஆனால்,
உங்களை வற்புறுத்தும் குரல் அல்ல. ஓர் நண்பனுக்கு யோசனை கூறுவது போல
அக்குரல் உள்ளது.
எழுத்துப்பணியும்
ஓரளவு அதுவாக அமைந்ததுதான். அந்த நாளில் 35 வயதில் வேலை கிடைப்பது மிகவும்
கடினம். ஓர் வேலைக்காக நான் கார் ஓட்டும் உரிமம்கூடப் பெற்றேன். எனக்கு
வேலை தேடிக்கொள்ளத் தெரியவில்லை என்றுதான் கூறவேண்டும். எழுதும் எதையும்
திருத்தமாகச் செய்யவேண்டும் என்று என் பள்ளி நாட்களிலிருந்தே தீர்மானமாக
இருந்தேன்.
கேள்வி: 70களில்
மாற்று அரசியல், மாற்று கலை இலக்கிய முயற்சிகள் நிறைய நடந்தன. தமிழில்
முக்கிய எழுத்தாளர்கள் பலர் இக்காலகட்டத்தில் உருவாயினர். கடந்த பத்து
பதினைந்து ஆண்டுகளில் அப்படியொரு உற்சாகம் இல்லை. உங்கள் பார்வையில்,
இந்தத் தேக்கத்துக்குக் காரணம் என்ன?
அசோகமித்திரன்: நான்
தேக்கம் என்று கூற மாட்டேன். புது எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள்.
சூர்யராஜன், வா.மு. கோமு, ஜாகிர் ராஜா போன்றோர் நன்றாகவே
எழுதுகிறார்கள். மதிப்பீடுகள் விஷயத்தில் சற்றுத் தயக்கமே. ஆனால், அவர்கள்
நல்ல எழுத்தாளர்களாக உருவாக வாய்ப்பு உண்டு.
கேள்வி: குறுநாவல்
வடிவத்தைச் செம்மைப்படுத்தியவர் நீங்கள். அதற்கான இலக்கணத்தை தமிழில்
பிரபலப்படுத்தியவரும் நீங்களே. நாவல் எழுதுவதைவிட, குறுநாவலில் உள்ள
சௌகரியங்கள் என்னென்ன? ஒரு கரு, நாவலுக்குள்ளதா, குறுநாவலுக்கானதா என்று
எப்படி முடிவு செய்வீர்கள்?
அசோகமித்திரன்: குறுநாவல்
‘தீபம்’ என்ற பத்திரிகைக்காகத் திட்டமிடப்பட்டது. உண்மையில் இது ஒரு
பத்திரிகைத் தேவைக்காக முயற்சி செய்தது. ‘தீபம்’ எனக்கு நல்ல பயிற்சிக்
களமாக இருந்தது. பல கட்டுரைகளும் எழுதினேன்.
நாவல்
எழுதும்போது ஒரு கட்டத்தில் சோர்வு வந்துவிடுகிறது. உண்மையில் அது ஒரு
பெரிய தடங்கல்தான். ஆனால் அதையும் மீறித்தான் நாவல் எழுதவேண்டியிருக்கிறது.
இப்போது நான் எழுதிவரும் நாவலின் ஆரம்பம் எனக்கு மறந்துவிட்டது. ஐந்தாம்,
ஆறாம் அத்தியாயங்கள் மூன்று உள்ளன.
என்
கதைகள், நாவல்கள் எல்லாமே ஒரு தொடர்பு உள்ளவையே. ஆதலால் தனியாகக் கரு
என்று நான் முடிவு செய்து கொள்வதில்லை. ஆனால், அப்படி எழுதுபவர்கள்
இருக்கிறார்கள். Plot வைத்து எழுதியதிலும் மகத்தான எழுத்தாளர்கள் உண்டு.
கேள்வி: எண்ணற்ற
எழுத்தாளர்கள் One time wonders ஆக இருந்திருக்கிறார்கள். ஒரு நாவல், ஒரு
குறுநாவல், ஒரு கதை என்று சிறப்பாக எழுதிவிட்டுக் காணாமல்
போயிருக்கிறார்கள். நீங்கள் கன்சிஸ்டெண்ட்டாக, தொடர்ந்து, பெரிய வருவாய்
தரவில்லை எனினும் தமிழில் கதைகள் எழுதுவதைச் செய்துவந்திருக்கிறீர்கள்.
இதற்கான மனத் தயாரிப்பு என்ன? தேவைப்படும் மனோபலம் என்ன?
அசோகமித்திரன்: இது
நம் வாழ்க்கைப் பார்வையைச் சார்ந்தது. நமக்குத் திட்டவட்டமாக பார்வை
இருந்து, நம் மனதிற்கிணங்க எழுதினால் அதில் நிச்சயம் ஒரு சீரான தன்மை
இருக்கும்.
கேள்வி: நீங்கள்
கணையாழி ஆசிரியப் பொறுப்பு வகித்திருக்கிறீர்கள். அப்போது நிறைய
எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றிச்
சொல்லுங்கள்.
அசோகமித்திரன்: இதுவும்
நான் நாடிச் சென்றதல்ல. முதல் இதழ் தயாரானபோது அதன் பொறுப்பாளர்
‘சற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டு டில்லிக்குப்
போய்விட்டார். எவ்வளவு பெரிய பொறுப்பு என்று அன்று எனக்குத் தெரியாது.
அது அச்சான இடத்தில், ஒருவர் எப்படிப் பிழை திருத்துவது என்று ஓரிரண்டு
குறிப்புகள் தந்தார். அப்புறம் பக்கம் அமைப்பது, படங்கள் எந்த இடத்தில்
போடுவது என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். மிகவும்
கடினமான பொறுப்பு பிரதிகளைக் கட்டு கட்டி இரயில்வே பார்சல் செய்வது, தபால்
அலுவலகத்தில் சேர்ப்பது. ஏன் இதெல்லாம் செய்தேன், இதற்கு என்ன பிரதிபலன்
என்றெல்லாம் யோசிக்கவில்லை.
கையெழுத்துப்
பிரதி அந்த எழுத்தாளனைப் பற்றி ஒரு தோற்றம் தரும். அவனுடைய கதையிலிருந்து
அவனுடைய சூழ்நிலை முதலியன ஊகிக்கலாம். எனக்கு ஒவ்வொரு கையெழுத்துப்
பிரதியும் ஒரு சவாலாக இருக்கும். கதை நன்றாக இருந்தால் பிரதியைத்
திருத்தித் திருப்பி எழுதிவிடுவேன். சில எழுத்தாளர்களின் கையெழுத்துப்
பிரதிகளை அச்சுக் கோப்பவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சுஜாதா,
இந்திராபார்த்தசாரதி, தி. ஜானகிராமன் போன்றோர் கையெழுத்தைப்
புரிந்துகொள்வது கடினம்.
கேள்வி: ஒரு
கதையை, நாவலை எத்தனை முறை திருத்திச் செம்மைப்படுத்துவீர்கள்?
செம்மைப்படுத்தும்போது, என்னென்ன விஷயங்களை மனத்தில் கொண்டு
திருத்துவீர்கள்?
அசோகமித்திரன்: செம்மைப்படுத்துவேன்.
கையெழுத்து சட்டென்று புரியாது என்றால் அந்தப் பக்கத்தை இரண்டாம் முறை
எழுதிவிடுவேன். எனக்கு அச்சுக் கோப்பவர்களை சிரமப்படுத்துவது சிறிதும்
பிடிக்காது. அந்த நாளில் ஈய அச்சுக்களை நால் முழுக்க நின்றுகொண்டே அச்சுக்
கோப்பார்கள். பலர் மிகவும் ஏழ்மையான பெண்கள்.
எந்த
எழுத்தாளனும் எழுதியதை மறுமுறை படிப்பதுதான் முறை என்று நான்
நினைக்கிறேன். சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை மீண்டும் படிக்கும்போதுதான்
செய்யவேண்டும்; செய்ய முடியும்.
கேள்வி: நீங்கள்
செய்நேர்த்தியில் (craftmanship) சிறப்பானவர். உங்கள் கதைகள்,
கச்சிதமானவை. வடிவம் செம்மையானவை. இதற்கான பயிற்சி என்ன? எப்படி இதை
நீங்கள் அடைந்தீர்கள்?
அசோகமித்திரன்: அச்சுக்
கோப்பவர்கள்தான் என் ஆசான்கள். உண்மையில் சிலர் மிகச் சிறந்த ஆசிரியர்கள்
என்றுகூடக் கூறுவேன். எனக்கு ராஜவேல் என்பவரின் கணிப்பு மீது மிகுந்த
மதிப்பு உண்டு. அவர் சொல்லி ‘விழா’ என்ற குறுநாவலில் பாரா பாராவாக
வெட்டியிருக்கிறேன். அவர் இறந்துவிட்டார் என்று அறிய மிகவும் வருத்தமாக
இருந்தது. அதே போல சாமி என்ற அச்சுக் கோப்பவர். அவர் நாடகங்களிலும்
நடிப்பார். என்னுடைய ‘காத்திருத்தல்’ சிறுகதை நாடகமாக்கப்பட்டபோது
அவர்தான் அரசியல் தொண்டன் வேடம் தரித்தார். நாடகம் மிகவும் நன்றாக
இருந்தது. ஆனால் அதைத் தயாரித்த டாக்டர் ருத்ரன் ஒரு முறைக்கு மேல் அதை
மேடையேற்றவில்லை.
கேள்வி: நீங்கள்
ஒரே மூச்சில் சிறுகதை எழுதுவீர்களா? இல்லை நடுவில் இடைவெளி விடுவீர்களா?
நாவல்களை, குறுநாவல்களை எப்படித் திட்டமிடுவீர்கள்? அத்தியாயங்களையும்
சம்பவங்களையும் முன்னரே யோசித்துவைத்திருப்பீர்களா?
அசோகமித்திரன்: விட்டுவிட்டுத்தான்
எழுதுவேன். எழுதுவதும் ஒரு கட்டத்தில் களைப்பு, சோர்வு உண்டு செய்யும்.
இரவில் படுக்கும்போது ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு அடுத்த நாள் சுமார்
ஒரு மணி நேரம் எழுதுவேன். சிறுகதை, நாவல், கட்டுரை எல்லாமே இப்படித்தான்
எழுதப்பட்டன.
கேள்வி: உங்கள் கதைகளில் கொண்டாட்டமான மனோபாவம் கொண்ட மனிதர்கள் வருவது கிடையாது. என்ன காரணம்?
அசோகமித்திரன்: அப்படி
இல்லை என்றுதான் நினைக்கிறேன். பல கதைகளில் கதையைக் கூறுபவன்
அப்படித்தான், அதாவது சட்டென்று சிரிப்பவனாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது.
கேள்வி: புலிக்கலைஞன் கதை நாயகன் கற்பனையா அல்லது நீங்கள் நேரில் பார்த்த ஒரு கதாபாத்திரமா?
அசோகமித்திரன்:
நான் ஒரு புலிவேடக்காரர் ஒரு சினிமா வாய்ப்புக்காக வந்தபோது அவரைப்
பார்த்தேன். அவருடைய தோற்றத்திலிருந்து அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்
என்று கற்பனை செய்து பார்த்தேன். நிஜமாகவே அந்த மனிதனுக்கு வாய்ப்புக்
கிடைக்கவில்லை. உண்மையில் சினிமாவில் கதாநாயகனே புலிவேடம் தரிப்பதுதான்
பார்வையாளருக்கு மகிழ்ச்சி தரும். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில்
கமல்ஹாசன் மிகச் சிறப்பாகச் செய்திருப்பார். என் ‘புலிக்கலைஞன்’ நிஜ
வாழ்க்கையில்தான் பரிமளிக்க முடியும். சினிமா சரியான களமல்ல.
கேள்வி: உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?
அசோகமித்திரன்: புத்தகங்கள்
என்று கூற வேண்டுமானால் என் பாட புத்தகங்கள், ‘பிரதாப முதலியார்
சரித்திரம்’ ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் தனித்தனிக் கதைகள், கட்டுரைகள்தான்
எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தின. அதில் புதுமைப்பித்தன் எழுதிய
‘சித்தி’ என்ற சிறுகதை. நான் எழுதிய ‘இன்னும் சில நாட்கள்’ அவருக்கு என்
அஞ்சலியாக நினைத்து எழுதினேன்.
கேள்வி: பாண்டி
விளையாட்டு சிறுகதைபோல இளம் பிராயத்து நினைவுகள் உங்களை அலைக்கழிக்குமா?
அதுபோல நீங்கள் சந்திக்க விரும்பும் நண்பர் யாராவது உண்டா?
அசோகமித்திரன்: எனக்கு சகோதரிகள் இருந்தார்கள். எங்களுக்குள் நாங்கள் பாண்டி, பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளை விளையாடியிருக்கிறோம்.
அந்தக் காலத்து நண்பர்களைப் பார்க்கும் வாய்ப்பிருக்கும் என்று தோன்றவில்லை. நான் ஊர்விட்டு ஊர் வந்தவன்.
கேள்வி: ஒப்பீட்டளவில் நான் ஃபிக்ஷன் எழுத்துக்கு இன்று வரவேற்பு அதிகம் இருப்பதாகத் தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
அசோகமித்திரன்: இல்லை.
கட்டுரைகளுக்குத்தான் இன்றைய பத்திரிகைகளில் அதிக வரவேற்பு இருக்கிறது.
கட்டுரைகள்தான் விவாதங்களைத் துவக்குகின்றன. ஒரு சிறுகதை அப்படி செய்ய
வாய்ப்பில்லை.
கேள்வி: சிறுபத்திரிகைகள்
மட்டும்தான் சிறுகதைகளை ஊக்குவிக்கின்றன. வெகுஜன இதழ்கள் ஸ்டாம்ப்
அளவுக்குக் கதைகளைச் சுருக்கிவிட்டன. நல்ல கதைகளை அதிகம் காணமுடிவதில்லை.
இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: இக்
கேள்வியே முந்தைய கேள்வியின் என்னுடைய பதிலை உறுதிப்படுத்துகிறது.
காலத்தின் தேவை என்று ஒன்றிருக்கிறது. அதுதான் பூர்த்தி செய்யப்படுகிறது.
கேள்வி: மொழிபெயர்ப்புகள்
தற்போது அதிகமான அளவுக்கு தமிழில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு
இலக்கியத்துக்காகவே தனி இதழ் ஒன்றுகூட வெளிவருகிறது. இந்தச் சூழலில்
அவற்றின் தரம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: ஒட்டு
மொத்தமாகக் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. முன்பு பல வங்காள நாவல்கள்
தமிழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இன்று அந்த நாவல்களின் ஆங்கில
மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது நம் மொழிபெயர்ப்பு குறையுடையது என்று
தெரிகிறது. மொழிபெயர்ப்பும் காலம் காலத்திற்கு மாறுபடும்.
கேள்வி: சினிமாவின்
பார்வையாளராக இருந்திருக்கிறீர்கள். சினிமா தயாரிப்பு நிறுவனத்திலும்
பணியாற்றி இருக்கிறீர்கள். ஆனால், நேரடியாக சினிமாவில் ஈடுபட உங்களுக்கு
ஆர்வம் ஏற்பட்டதில்லையா?
அசோகமித்திரன்: இல்லை
என்றுதான் கூறவேண்டும். ஆனால் எல்லாரும் அப்படி இருக்கவேண்டும் என்று நான்
கூற மாட்டேன். என்னால் திரப்படங்களை ஓரளவு செம்மைப்படுத்த முடியும். ஆனால்
நிறைய சமரசங்கள் செய்துகொள்ள வேண்டும். அந்தச் சக்தி இல்லை.
கேள்வி: சினிமாவுக்குள் நுழையும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இது ஆரோக்கியமான போக்கா?
அசோகமித்திரன்: முன்பும்
எழுத்தாளர் யாரோ ஒருவர்தான் ஒரு படத்துக்குக் காரணமாக இருந்தார்.
மனதளவிலாவது ஒரு திட்டம் இல்லாமல் எந்தத் திரைப்படமும்
தயாரிக்கப்படுவதில்லை. எழுத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் திரைப்படம்
முழுத் திருப்தி தர முடியாது. மீண்டும் சமரசம்தான். இது ஆரோக்கியமானது,
அல்ல என்பதெல்லாம் அபிப்ராயங்கள்.
கேள்வி: சமகால தமிழ்சினிமா பற்றி உங்கள் கருத்து? பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் போன்ற சமீபத்திய படங்களைப் பார்த்தீர்களா?
அசோகமித்திரன்: திரைப்படக்
கொட்டகையில் பார்த்ததில்லை. இந்தப் படங்களிலும் வன்முறைப் போக்கு,
பெண்களைக் கன்னத்தில் அறைவது போன்றவை உள்ளன. நிஜ வாழ்க்கையில் இதைவிட
மோசமான அனுபவங்கள் இருக்கலாம். திரைப்படத்தில் காண்பிப்பது எனக்குச்
சம்மதமல்ல. பெரும் தீமை, கயமை கூட நாம் கோடிட்டுக் காட்டலாம்.
அவ்வளவுதான்.
கேள்வி: பதிப்பகங்கள் பெருகியிருக்கின்றன. எழுத்தாளர்கள் வளமாக இருக்கிறார்களா? உங்கள் அனுபவம்?
அசோகமித்திரன்: சிலர்
இருக்கிறார்கள். பெரும்பாலான எழுத்தாளர்கள் எழுத்தால் வரும் ஊதியத்தை
மட்டும் நம்பியில்லை. மீண்டும் இதெல்லாம் பொதுப்படையான கேள்விகள். உலகம்
கெட்டுவிட்டதே என்று சொல்வது போல.
கேள்வி: புகழ், புத்தகங்களின் அதிக விற்பனை, ராயல்டி இதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட்டதுண்டா?
அசோகமித்திரன்: நாம்
கவலைப்பட்டாலும் கவலைப்படாமல் இருந்தாலும் புத்தகம் விற்றால் பணம் தானாகவே
வரும். பதிப்பகங்கள் கடன் வாங்கித்தான் நூல்களை வெளியிடுகின்றன. பல
சமரசங்கள் செய்து கொண்டுதான் நூலக உத்தரவு பெறுகின்றன. இதையெல்லாம்
எழுத்தாளன் கணகில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: எழுத்தை மட்டுமே நம்பி வாழ்வது இன்றும்கூட அசாத்தியமானதாகவே உள்ளது. ஏன்?
அசோகமித்திரன்: எப்படியோ
காலம் தள்ளிவிட்டேன். ஆனால் இன்னொரு முறை முடியாது. நான் சிறிது
ஆங்கிலத்திலும் எழுதியதால் சமாளிக்க முடிந்தது. என்னுடைய பல ஆங்கிலக்
கதைகள், கட்டுரைகள் மிகவும் பாராட்டப்பட்டன. சன்மானமும் கிடைத்தது. தமிழில்
பல படைப்புகள் இனாம்தான். ஒரு முழு நூல் என் முன்னுரைகள் கொண்டது.
முன்னுரைக்கு எப்படி, எவ்வளவு சன்மானம் தருவது? இந்த முன்னுரை எழுதுவதே
இழிவுபடுத்தும் அனுபவம் என்று நினைக்கிறேன்.
கேள்வி: சமகால எழுத்தை, எழுத்தாளர்களை நீங்கள் எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்? இலக்கியச் சண்டைகள் குறித்து உங்கள் கருத்து என்ன?
அசோகமித்திரன்: அபிப்ராயங்கள், சண்டை எதில் இல்லை? ஒரு குடும்பத்திலேயே சண்டை இல்லையா?
கேள்வி: இண்டர்நெட்
பற்றி உங்கள் கருத்து? இணையத்தளத்தில் உங்களைப் பற்றி எழுதுவதைப்
படித்திருக்கிறீர்களா? இணையம் வழியாக இன்று யார் வேண்டுமானாலும் எழுதலாம்
என்கிற நிலை வந்திருப்பது குறித்து?
அசோகமித்திரன்: எனக்கு அதிகம் தெரியாது. எனக்குக் கண் வலிக்கிறது. அதனாலேயே அதிகம் கணினி முன் உட்காருவதில்லை.
கேள்வி: முக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன? உங்கள் எழுத்துக்கு அதுபோலொரு நிலை வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
அசோகமித்திரன்: இறந்து,
எழுத்தாளர்களின் நூல்கள் பதிப்பில் இல்லை என்றால் நாட்டுடைமை
ஏற்றுக்கொள்ளக் கூடியது. வாரிசுகளுக்குப் பணம் தரவேண்டும். சகட்டு
மேனிக்கு நாட்டுடைமை அறிவிப்பது சரியல்ல.
கேள்வி: தமிழக அரசு கோட்டூபுரத்தில் மிகப்பெரிய நூலகம் ஒன்றைக் கட்டி வருகிறது. அதற்கு நீங்கள் தரும் ஆலோசனை, வேண்டுகோள்கள் என்ன?
அசோகமித்திரன்: அந்தத் துறைக்கென நிபுணர்கள் இருக்கிறார்கள். நூலகத் துறை மிகப் பெரிய துறை. அதில் எழுத்தாளன் ஓர் அங்கம். அவ்வளவே.
கேள்வி: புத்தகக் கண்காட்சிக்கு சென்றீர்களா? புத்தகக் கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அசோகமித்திரன்: திட்டமிட்டுப்
போனால் கண்காட்சி பயனுள்ளது. ஆனால் பத்து சதவீதச் சலுகை என்பது போக வரச்
செலவு, அனுமதிச் சீட்டு ஆகியவற்றில் போய்விடுகிறது.
கேள்வி: விடுதலைப்புலிகள்
தொடர்பான புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் விற்கப்படக்கூடாது என்கிற
அரசின் உத்தரவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை வரவேற்கிறீர்களா?
அசோகமித்திரன்: புத்தகங்கள்
வெளியிடப்பட்டால் அவற்றை என்ன செய்வது? முந்தைய நூற்றாண்டுகளில் கூட
நூல்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல நூல்கள் மீண்டு வந்துவிடுகின்றன.
கேள்வி: நோபல்
பரிசு பெறும் அளவுக்குத் தகுதியுள்ள எழுத்து என்று உங்களைப் புகழாதவர்கள்
இல்லை. உங்கள் நாவல்கள் ஏதாவது மொழிபெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுக்கு
பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதா?
அசோகமித்திரன்: நாம்
சொல்லிவிடலாம். தேசிய அளவிலேயே கடினம். உண்மையில் நம் தமிழ் நாட்டிலேயே
நிறுவன அங்கீகாரம் கிடையாது. ஆதலால், நான் இந்த மாதிரி விருது, பரிசு பற்றி
மனதைச் செயல்படவிடுவதில்லை.
கேள்வி: நீங்கள் இப்போது படித்து வரும் புத்தகம் எது?
அசோகமித்திரன்: பாரதி மணி என்பவர் எழுதிய, ‘பல நேரங்களில் பல மனிதர்கள்.’ நல்ல, சுவாரசியமான நூல். உயிர்மைப் பதிப்பகம் வெளியிட்டது.
கேள்வி: உங்கள் கதைகளுக்கு வரையப்பட்ட ஓவியங்களில் மறக்கமுடியாத சிறந்த ஓவியம் எது?
அசோகமித்திரன்: ராமு என்பவர் வரைந்த படங்கள் எல்லாமே எனக்குச் சம்மதமானவை. மிகவும் அடக்கமானவர்.
கேள்வி: எழுதவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் கதைகள் யாவை? என்ன காரணங்களால் அவை எழுதப்படாமல் இருக்கின்றன?
அசோகமித்திரன்: இப்போது
நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பல ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டது.
மனதளவில் ஏதோ எதிர்ப்பு இருந்து கொண்டிருக்கிறது. அதை மீறித்தான்
அவ்வப்போது எழுத முற்படுகிறேன். இந்த 2009-ம் ஆண்டில் அதை முடித்துவிட
வேண்டும். ஆனால் என் வயது இப்போது 77. ஓராண்டு என்பதுகூட யதார்த்தமான ஆசை
இல்லை.
நேர்காணல்: பாலு சத்யா