Home / Badri explains Corruption

Badri explains Corruption


Friday, January 16, 2009 

ஊழல்கள் பலவிதம்

நேற்று பத்ரியுடன் சாட் செய்துக்கொண்டிருந்த போது ஊழல் பற்றி சில கருத்துக்களை சொன்னார். சாட் முடிவில் இதையே ஒரு பதிவாக எழுதி அனுப்புங்கள் என்ற சொன்ன பத்தாவது நிமிஷம் அனுப்பினார். அவருக்கு என் நன்றி.

கட்டுரை கீழே...

ஊழல்கள் பலவிதம் - பத்ரி.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்கள்: இவை அனைத்தும் பெரும்பாலும் 1960-களின் கடைசியில் தொடங்கின. தமிழகத்தைப் பொருத்தமட்டில் நிச்சயமாக தி.மு.க.வின் கைங்கரியமாக இதனைப் பார்க்கலாம். அதன்பின், இன்று, ஊழல் செய்யாத கட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். கம்யூனிஸ்டுகள் நீங்கலாக என்று தோன்றுகிறது. அடிப்படை நோக்கம், கட்சிக்குப் பணம் தேவை, தேர்தலுக்குப் பணம் தேவை என்பதிலிருந்து ஆரம்பித்து, சொந்த வாழ்க்கை நடத்தவே பணம் தேவை என்ற அளவுக்குப் போய்விட்டது. கட்சியில் முக்கியஸ்தர்கள் ஆகும் பலரும் வெகு சில நாள்களுக்குள்ளாகவே கார், தோட்ட பங்களா, ஆங்காங்கே நிலபுலம், நாலைந்து கம்பெனிகள், கடைகள், கையிலும் கழுத்திலும் தங்க ஆபரணங்கள் என்று ‘செட்டில்’ ஆவது எப்படி? ஊழல், ஊழல், ஊழல் மட்டுமே.

எந்தெந்த வகையில் எல்லாம் இந்த ஊழல் நடக்கிறது, திருடப்படுவது எத்தனை கோடிகள் என்பது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான மெடீரியல்.

இதற்கு, அரசியல்வாதிகளோடு சேர்ந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அதற்கு அடியில் இருப்பவர்கள் என்று பெரும் கூட்டம் துணைபோகிறது. கூடவே அவர்களுக்கு ‘புல்லுக்கு ஆங்கே பொசியுமாம்’ என்பதுபோல பொசியப்படுகிறது.

தொழில்துறை ஊழல்: அரசியல் ஊழலைச் செய்வது படிக்காத மேதைகள் என்றால், தொழில்துறை ஊழல், மெத்தப் படித்த மேதாவிகள் செய்வது. சமீபத்திய உதாரணம் சத்யம் கம்ப்யூட்டர்ஸ். அரசியல்வாதிகள் ஊழல், அப்பட்டமானது. “அட போய்யா, அப்படித்தான். இல்லாட்டி என் <கட்சி, சாதி, இனம்> எப்படி முன்னுக்கு வரது?” என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் செய்தாலும், தான் செய்வது சரியல்ல என்ற எண்ணமும், மரியோ புஸோவின் மைக்கேல் கார்லியோன் போல, திருடிய பணத்தை ‘லெஜிட்’ செய்ய முற்படுவதும் அரசியல்வாதிகளிடம் உண்டு.

ஆனால் தொழில்துறை ஊழல், அப்படியல்ல. முதலில் ஊழல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே பிரெயின்வாஷ் செய்துகொள்கிறார்கள். தாங்கள் செய்வது ஒன்றும் தவறல்ல; ஒட்டுமொத்தமாகச் சரியே என்று தங்களைத் தாங்களே மந்திரித்துக்கொண்டு, முற்றிலும் அதில் மூழ்கியபின், தெளிவான, அழகான முறையை உருவாக்கிக்கொள்கிறார்கள். அதில் மேடாஃப் செய்த பான்ஸி வகை திருட்டும் அடக்கம்; சஞ்சய் அகர்வால், ராமலிங்க ராஜு வகை கிரியேட்டிவ் அக்கவுண்டிங்கும் அடக்கம்; ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பாரீக் வகை பங்க்குச்சந்தை தில்லுமுல்லும் அடக்கம்.

மத ஊழல்: சாமியார்கள் தங்களுடைய சொந்த பிராண்ட் திருட்டில் கைதேர்ந்துள்ளனர். இது மேலே சொன்ன இரண்டிலிருந்தும் வேறுபடுகிறது. முதலிரண்டில் பொதுமக்களால் இது தவறு, தடுத்து நிறுத்தவேண்டியது என்ற எண்ணம் மேலோங்குகிறது. ஆனால் மத ஊழலில் மேலோட்டமாகப் பார்த்தால் இந்த எண்ணமே தோன்றாது. “அவர்கிட்ட அருள் கொட்டிக் கிடக்கு; அதனால பணமும் குவியுது” என்றுதான் மக்கள் சொல்வார்கள். “அதுவும், சாமியார்க்கு எதுக்கு பணம்? அவர் ஒரு பைசா தொடறதில்ல. எல்லாத்தையும் அப்படியே மக்களுக்கே நல்லது செய்யக் கொடுத்துடராறு” என்று வெறு சான்றிதழ் தருகிறார்கள். ஆனால் சாமியார்கள் நில பேரத்திலிருந்து, கட்டப் பஞ்சாயத்திலிருந்து, ஹவாலா, கொலை என்று நீக்கமற நிறைந்துள்ளனர்.

பல நேரங்களில் அரசியல்வாதிகளே வெட்கிப்போகும்படி சாமியார்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.


இந்த மூவருமே ‘ரூம் போட்டு யோசித்தே’ திருவிளையாடல் செய்கிறார்கள் என்றாலும், இதில் அதிகமாக மூளையையும், குறைவாக உடல் வலுவையும் உபயோகிக்கும் தொழில்துறை ஊழலுக்கு ‘பிராமண ஊழல்’ என்று பெயரிடுகிறேன். அரசியல்வாதிகள் ஊழலுக்கு பெரும்பாலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதால் அதற்கு ‘சத்திரிய ஊழல்’ என்று பெயர் வைக்கலாம். சாமியார்கள் திறமையான ‘தொழில் முனைவோராக’ தமது ஊழலை நிறுவியிருப்பதால் அது ‘வைசிய ஊழல்’ ஆகிறது.

நாம் அனைவரும் சில்லறையாகச் செய்யும் ஊழல், தெருவோரத்தில் டிராஃபிக் கான்ஸ்டபிள் வாங்கும் 50 ரூபாய், இன்கம் டாக்ஸில் ஏமாற்றுவது, பிளாக்கில் பணம் கொடுத்து ஸ்டாம்ப் டியூட்டியைக் குறைப்பது முதற்கொண்டு, வரிசையில் நிற்காமல் அடுத்தவனுக்கு வேட்டுவைப்பது போன்றவற்றை, வேறு வழியின்றி ‘சூத்திர ஊழல்’ என்று பெயரிடுகிறேன்.

(கொஞ்சம் செயற்கையாக உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். கஷ்டம்தான்; ஆனால் வேறு வழியின்றி, இந்து தத்துவ மரபுக்குள் வரவேண்டியுள்ளதே!)

வாழ்க வளமுடன்!

- பத்ரி
(இட்லிவடை கேட்டுக்கொண்டதற்கு இணங்க எழுதப்பட்டது)

 



     RSS of this page