Home / AravindanNeelakandnan

AravindanNeelakandnan


அரவிந்தன் நீலகண்டன், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். உளவியலிலும் பொருளியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் களப்பணியாளராக சேவை செய்கிறார். நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர். சமூகவியல், அறிவியல், இந்துமதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர். அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன், அறிவியல், சமூகவியல், திரைப்படம், ஆன்மிகம் சார்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.நாளைய தலைமுறைக்கான தேவைகளை உணர்ந்து தனது எழுத்துகள் மூலம் ஒரு மௌனமான தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவர்.


ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?

By அரவிந்தன் நீலகண்டன்

First Published : 22 March 2015 10:00 AM IST

 மிகவும் எளிதான பதில்தான். தாவரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு என்று கண்டுபிடித்தார். ஆனால் எல்லா எளிதான பதில்களையும்போல், இது முழுமையான சரியான பதில் அல்ல. ஜகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்தது இப்படித்தான் அறிந்துகொள்ளப்பட்டது அப்போது. அவரை எதிர்த்தவர்கள், இது சரியான ஆதாரமில்லாத கிழகத்திய கற்பனை என்று சொல்லி எதிர்த்தார்கள். ஆதரித்தவர்களோ, செடிகளும் மனிதர்களைப்போல் உணர்ச்சிகள் கொண்டவை என்பதை கண்டுபிடித்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

ஆனால், உண்மையில் போஸ் கண்டடைந்த விஷயம் வேறுவிதமானது. உயிரியலையும் இயற்பியலையும் இணைப்பது. உயிரற்ற பொருள்கள் அதிக நேரம் வேலையில் ஈடுபடுத்தப்படும்போது அவற்றின் செயல்திறமை குறைகிறது. பின்னர் அவற்றை ஓய்வு எடுக்க விட்டுவிட்டு பயன்படுத்தும்போது அவற்றின் செயல்திறமை மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. போஸ் இதிலிருந்து ஓர் அடிப்படை உண்மையைக் கண்டடைந்தார். உயிருள்ள பொருள்கள் – உயிரற்ற பொருள்கள் எனும் பாகுபாட்டு எல்லைகளைத் தாண்டி, அவற்றின் சில இயக்கங்கள் ஒரே தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

உயிரற்ற பொருள்கள் - உயிருள்ள பொருள்கள் என்கிற பாகுபாட்டிலேயே இரண்டையும் இணைக்கும் பாலங்கள் இருந்தால், தாவரங்கள்…?

இங்குதான் தத்துவத்தின் தாக்கத்தையும் தடையையும் நாம் உணர வேண்டும். மேற்கத்திய அறிவியல், அரிஸ்டாட்டிலை தத்துவத் தந்தையாகக் கொண்டது. அரிஸ்டாட்டில்தான் முதல்முறையாக உயிரினங்களைப் பாகுபடுத்தியவர். அவற்றை சிறு விலங்குகளில் தொடங்கி, இறுதியில் மனிதன் வரையாக ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தியவர். தாவரங்கள் இவற்றில் எங்கு வரும்? விலங்குகள்போல் அவற்றுக்கு உணர்தலும், இடம்பெயரும் தன்மையும் இல்லை. எனவே, அவை உயிரற்றவை என்றார் அரிஸ்டாட்டில். உயிருள்ளவற்றுக்கும் உயிரற்றவற்றுக்கும் நடுவில் எங்கோ தாவரங்கள் வரும் என்றார் அரிஸ்டாட்டில்.

இங்கு தொல்காப்பியர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ’ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே... புல்லும் மரனும் ஓர் அறிவினவே’ என தெள்ளத் தெளிவாக,  ‘அறிதலின்’ அடிப்படையில் தாவரங்களை உயிர் உள்ளவை என வகைப்படுத்திவிடுகிறார். ஓர் அறிவு என்பதை அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே தத்துவத் தரிசனங்களைப் புறஉலகுக்கான சட்டகமாக எடுத்துக்கொள்ளும்போது one to one mapping உதவாது.

ஆனால், அரிஸ்டாட்டிலின் இந்த வகைப்படுத்துதல் ஐரோப்பிய பொதுமனத்தில் ஆழமாக இடம் பிடித்துவிட்டது. என்னதான் தாவரங்களை வகைப்படுத்துதலும், தாவர உயிரணுக்களை நுண்ணோக்கியில் ஆராய்ச்சிகள் செய்தபோதிலும், அவற்றை உயிர்களாக அதுவும் அறிவுடைய உயிர்களாக ஏற்க ஐரோப்பிய மனது இடம் கொடுக்கவில்லை.

1880-ம் ஆண்டு நவம்பர் மாதம், இங்கிலாந்தில் ஒரு புத்தகம் வெளியானது. ஏற்கெனவே பிரபலம் அடைந்திருந்த உயிரியலாளரான சார்லஸ் டார்வின், தனது மகனும் தாவரவியலாளருமான பிரான்ஸிஸ் டார்வினுடன் இணைந்து எழுதிய நூல் அது. 1500 பிரதிகள் விற்றுப்போன அந்த நூல், தாவரங்களின் அசைவுகள், நகர்தல்கள் ஆகியவற்றை ஆராய்ந்தது. இந்த நூலில், டார்வின் ஒரு முக்கியமான அவதானிப்பைச் செய்திருந்தார். ‘‘தாவரங்களின் வேர் நுனிகள் ஒரு மீச்சிறிய விலங்கின் மூளையை ஒத்து செயல்படுவதாகக் கருதினால், அதை மிகைப்படுத்துதல் எனக் கூறமுடியாது” என அவர் சொல்லியிருந்தார். கேம்ப்ரிட்ஜில் போஸ் படித்தபோது, அவரது பேராசிரியர்களில் ஒருவர் பிரான்ஸிஸ் டார்வின்.

 

டார்வினுக்கு ஓர் எண்ணம் இருந்தது – தாவரங்களுக்கும் அறிதலுக்கான ஓர் அமைப்பு இருக்க வேண்டும். அதற்கும் விலங்குகளின் நரம்பு மண்டலத்துக்கும் ஒற்றுமை இருக்க வேண்டும். எல்லா விலங்குகளின் நரம்பு மண்டலங்களிலும் ஒற்றுமையான விஷயம் என்ன? நரம்புகளின் ஊடாக பயணிக்கும் மின்னழுத்த சமிக்ஞைகள். இவை தாவரங்களிலும் இருக்கலாம் அல்லவா? அன்றைய காலகட்டத்தில் விலங்குகளின் உடல் இயக்கத்தில் உள்ள மின்னோட்டங்கள் குறித்த ஆராய்ச்சி பரபரப்பாக இருந்தது. அதில், பிரிட்டனில் முன்னணியில் இருந்தவர் பர்டோன்-சாண்டர்சன் என்கிற உயிரியலாளர். இவருக்கு, டார்வின் கடிதம் எழுதி ஒரு தாவரத்தின் செயல்பாடுகளில் மின்னழுத்த சமிக்ஞைகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை ஆராயக் கேட்டுக்கொண்டார். அந்தத் தாவரம், வீனஸ் ஃபிளைட்ராப் (Venus Flytrap) என்கிற பூச்சிகளைத் தின்னும் அசைவ தாவரம்.

ஆம், அந்தத் தாவரத்தில் மின்னழுத்த செயல்பாடுகள் இருந்தன. அவை, அவற்றின் உடலில் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்துக்குக் கடந்து சென்றன. இந்த மின்சமிக்ஞைகளின் விளைவாக, ஒரு பூச்சி அல்லது புழு வீனஸ் ஃபிளைட்ராப்பில் இலைகளின் அருகே வரும்போது மேல் இலை 0.1 விநாடியில் மூடிவிடும். அபாரமான வேகம். ஆனால், இந்தத் தாவரத்தில் இருக்கும் மின்சார செயல்பாடு, எல்லா தாவரங்களிலும் இருக்க முடியாத ஒரு சிறப்பான தனித்தன்மை என பர்டோன்-சாண்டர்சன் கருதினார். அவர் பரிசோதனைகள் செய்த பல தாவரங்களில் மின்சார செயல்பாடுகளை அவரால் கண்டடைய முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், இங்கிலாந்து ராயல் சொசைட்டி எனும் அறிவியல் கழகத்தில் இயற்பியலாளர்கள் மற்றும் உயிரியலாளர்கள் முன்னால், தாவரங்கள் புறச்சூழல் தாக்கங்களுக்கு மின்னழுத்த எதிர்வினைகளை (responses) கொண்டிருப்பதாக ஜகதீஷ் சந்திர போஸ்  கூறினார். அதை அவர் கூறியபோது, இதை பர்டோன்-சாண்டர்சன் கடுமையாக எதிர்த்தார். போஸ் கண்டறிந்த இந்த மின்னழுத்த செயல்பாடுகளை எதிர்வினைகள் எனக் கூறக்கூடாது என்றார். போஸ் இந்த மின்னழுத்த செயல்பாடுகளைக் கண்டறிந்தது, ‘தொட்டால் சுருங்கி’ செடியில்.

இதிலிருந்து, போஸ் வந்தடைந்த கருத்து அபாரமானது: “எந்த இடத்தில் பௌதீகச் செயல்பாடு நிற்கிறது; எங்கே உயிரியக்கச் செயல்பாடு தொடங்குகிறது என ஒரு தெளிவான வரையறையை நாம் வகுக்க முடியாது. ஒவ்வொரு தாவரத்திலும், தாவரத்தின் ஒவ்வொரு பாகமும் புறச்சூழலுக்கு மின் எதிர்வினை ஆற்றும் தன்மை கொண்டவை.”

தன்னால் கண்டறியமுடியாத ஒன்றை போஸ் கண்டடைந்தார் என்பதில் ஏற்பட்ட ஆத்திரமா அல்லது உண்மையிலேயே அவரால் போஸின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா என்பது தெரியாது. மற்றொரு பிரபல உயிரியலாளரான அகஸ்டஸ் வாலரும் போஸின் எதிர்ப்பு அணியில் இருந்தார். பர்டோன்-சாண்டர்சனின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, பொதுவாக உயிரியலாளர்கள், போஸை தங்கள் அறிவியல் துறைக்குள் நுழைந்துவிட்ட ஓர் அயலாளாகக் கண்டார்கள். இயற்பியல் ஆசாமி எப்படி உயிரியல் துறையில் வரலாம்?

இந்தச் சர்ச்சை, போஸின் பழைய பேராசிரியர்களில் ஒருவரான சிட்னி ஹோவர்ட் வைன்ஸ் என்பவரை ஈர்த்தது. டார்வினின் சகாவான தாமஸ் ஹக்ஸ்லியைத் தொடர்ந்து, அவரது இடத்தில் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பணியாற்றிவந்த T.K.ஹோவஸ் என்பவரை அழைத்துக்கொண்டு அவர் போஸை வந்து பார்த்தார். போஸ் தமது பரிசோதனைகளை ஹோவஸுக்கும் வைன்ஸுக்கும் முன்னால் செய்து காட்டினார். “இந்த அரிய பரிசோதனையையும் அதன் முடிவுகளையும் பார்க்க தாமஸ் ஹக்ஸ்லி தன் வாழ்நாட்களையே அளித்திருப்பார்” என ஆச்சரியத்துடன் கூறினார் ஹோவஸ். வைன்ஸும் ஹோவஸும் லின்னயஸ் கழகம் எனும் அமைப்பில் முக்கியஸ்தர்கள். ராயல் சொஸைட்டி போலவே மதிப்பும் மரியாதையும் கொண்டது லின்னயஸ் கழகம். அங்கே போஸின் ஆராய்ச்சியை வெளியிடுவது என முடிவாயிற்று.

ஆனால், அதற்கிடையில் போஸின் ஆராய்ச்சியை ஒத்த ஒரு ஆராய்ச்சித்தாள், ஒரு அறிவியல் சஞ்சிகையில் வெளியாயிருந்தது. ராயல் சொசைட்டியில் போஸ் தனது பரிசோதனைகளை காட்டிய பிறகு இந்த ஆராய்ச்சித்தாள் வெளியிடப்பட்டிருந்தது. இதை வெளியிட்டவர் போஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதே அகஸ்டஸ் வாலர். போஸ், இது விசாரணை செய்யப்பட வேண்டுமென தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து ஆய்வு செய்த அறிஞர்கள் குழு, போஸின் ஆராய்ச்சியே காலத்தினால் முந்தியது எனத் தெரிவித்தது.

1903 பிப்ரவரி 21 அன்று, லின்னயஸ் கழகத்தில் போஸ் தன் ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். மின்-எதிர்வினைகள் எனும் வார்த்தை எடுக்கப்படாமலே அந்த ஆராய்ச்சித்தாள் சமர்ப்பிக்கப்பட்டது. இது சாதாரணமான சாதனை அல்ல. அறிவியலாளர்களுக்கும் கட்டுப்பெட்டித்தனமும் முன்முடிவுகளும் உண்டு. அதிலும் அன்று காலனிய காலகட்டம். இத்தகைய சூழலில், போஸின் இந்த வெற்றி மகத்தானது. ஆனால் எதிர்ப்புகள் தொடர்ந்தன.

அன்று உயிர் என்றால் என்ன என்பது குறித்து மேற்கத்திய நாடுகளில் இருவிதமான பார்வைகள்தான் இருந்தன. உயிர் என்பது பௌதீகப் பொருள்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒருவித ஆவித்தன்மை கொண்டது என்பது ஒன்று. இரண்டு, உயிர் என்பது முழுக்க முழுக்க பௌதீகக் கூட்டுக்கலவையால் ஏற்படும் ஒரு விளைவு. போஸ் இந்த இரட்டை நிலையைக் கடந்த ஒரு பார்வையை முன்வைத்தார். போஸின் இந்தப் பார்வையில் உயிர் என்பது ஓர் இயக்க இழை (process). உலகில் நாம் காணும் பல்வேறு வேறுபட்ட உயிரினங்களை இணைக்கும் ஒரு பொதுவான இயக்க இழை. மேற்கத்திய உலகில் இதற்குச் சற்று இணையாக தன்னுணர்வை இவ்வாறு காணும் ஆல்பர்ட் நார்த் வொயிட்கெட்டின் தத்துவ நிலைபாட்டைக் கூறலாம். அதேசமயம், வேதாந்த பௌத்த மரபுகளில் மிகவும் வேர் கொண்ட ஒரு தத்துவ பார்வைதான் இது. உயிரை பிரக்ஞை அறிதல் ஆகியவற்றுடன் இணைத்து, அதையே உயிரின் அடிப்படை பொதுத்தன்மையாக முன்வைக்கும் பார்வை போஸுடையது. இவ்விதத்தில், தாவரங்கள் எந்த உயிரினத்தையும்விட தன்னுணர்வில் ‘சளைத்தவை’ அல்ல.

‘தொட்டால் சுருங்கி’ செடிகளுடனான பரிசோதனை ஒன்றில் மிக மெல்லிய மின்னோட்டங்களை உணரும் தன்மையை அவர் சோதிக்கிறார். தனது சொந்த நாக்கில் அதே மிக மெல்லிய மின்னோட்டம் உணரப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். பின்னர் கூறுகிறார்: ‘தொட்டால் சுருங்கி’ செடிக்கு மிக மெல்லிய மின்னோட்டங்களை உணர்ந்து எதிர்வினையாற்றும் ஆற்றல் மானுடனுக்கு இருக்கும் உணர்ச்சித்தன்மையைக் காட்டிலும் அதிகமானது.”

ஆக, பிரிட்டனில் போஸ் சந்தித்த எதிர்ப்பு, தத்துவார்த்த ரீதியில் அரிஸ்டாட்டிலுக்கும் தொல்காப்பியருக்கும் இருந்த முரண். காலனியச் சூழல் அதில் மற்றொரு அதிகக் காரணி. நூறாண்டுகளுக்கும் மேல் கடந்த பின், இன்றைக்கு நவீன ஆராய்ச்சிகள், போஸின் முடிவுகளை ஆமோதிக்கின்றன.


டார்வினின் ஒளியில் போஸ்

By அரவிந்தன் நீலகண்டன்

First Published : 29 March 2015 10:00 AM IST

டார்வின் தனது சக காலத்தின் மிகச்சிறந்த உயிரியலாளர்களில் ஒருவரான பர்டோன்- சாமுவேல்சனிடம் தாவரங்களில் மின் செயலியக்கம் இருக்கிறதா என கண்டறிய கேட்டுக்கொண்டார். சாண்டர்சனும் வீனஸ் ஃப்ளைடிராப் (Venus flytrap) என்கிற பூச்சி தின்னும் தாவரத்தில் மின் இயக்கச் செயல்பாடுகள் இருக்கின்றன என்று கண்டுபிடித்தார். ஆனால் சாண்டர்சன், அது அந்த தாவரத்துக்கு மட்டுமான தனித்தன்மை என கருதினார். இந்த இடத்தில், டார்வினின் பார்வையைக் கணிக்க சாண்டர்சன் தவறிவிட்டார்.

டார்வின் காலத்தில் ஒரு புகழ்பெற்ற இறை நம்பிக்கை இருந்தது. இயற்கை என்பது இறைவனால் வடிவமைக்கப்பட்டது. தெருவில் போகும் வழியில் ஒரு கடிகாரம் ஒருவருக்குக் கிடைக்கிறது. அவர் கடிகாரத்தையே பார்த்தறியாதவராக இருக்கலாம். ஆனால், அந்தக் கடிகாரத்தைத் திறந்து அதன் உள்ளே பல்வேறு சக்கரங்கள், பல் அமைப்புகள் ஆகியவை இருப்பதைப் பார்க்கும்போது, அதை வடிவமைத்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பதை அவர் புரிந்துகொள்வார். அதுபோலவே, இயற்கையில் உள்ள ஒவ்வோர் உயிரினத்திலும் ஒரு வடிவமைப்பு உள்ளது. அதை ஒருவர் அறியும்போது அந்த அமைப்பை வடிவமைத்தவராகிய இறைவனது புகழை - பேரறிவை அவர் அறிகிறார்.

இந்தக் கருத்தை முன்வைத்தவர் வில்லியம் பேலி (William Paley 1743-1802) எனும் இறையியலாளர். இயற்கை இறையியல் (Natural Theology) என்று சொல்லப்பட்ட இந்தக் கோட்பாடு, அந்தக் காலகட்டத்தின் பல மேற்கத்திய உயிரியலாளர்களிடமும் அறிஞர்களிடமும் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. கடிகாரம் என்று ஒன்றிருந்தால், கடிகாரத்தைச் செய்த ஒரு ஆள் இருக்க வேண்டும். படைப்பு என்று ஒன்றிருந்தால் படைப்பாளி என்ற ஒரு ஆள் நிச்சயம் இருக்க வேண்டும்.

வில்லியன் பேலி

உதாரணமாக, கண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் செயல்பாடு, ஒரு அற்புதமான கேமராவைப்போல் இருக்கிறதில்லையா? இப்படி, ஒவ்வொரு உறுப்பும், ஒவ்வொரு உயிர் அமைப்பும் படைப்பாளியின் செயல்திறனை வெளிப்படுத்துகின்றன. 

சார்ல்ஸ் டார்வின் இளைஞராக இருந்தபோது, இறையியல் கல்லூரியிலும் கொஞ்ச காலம் படித்திருந்தார். அப்போது இந்தக் கோட்பாடு அவரைக் கவர்ந்த ஒன்று. பின்னர் அவர், ஹெச்.எம்.எஸ். பீகிள் (HMS Beagle) என்ற கப்பல், உலகப் பயணம் புறப்பட்டபோது அதில் உடன் சென்றார். 1831 முதல் 1836 வரைக்குமான பயணம் அது. இந்தப் பயணத்தின்போது, பல தென் அமெரிக்கத் தீவுகளின் உயிரினங்களின் பன்மையையும் ஒற்றுமையையும் டார்வின் கண்டார். உயிரினங்கள் ஒரு பொது மூதாதையில் இருந்து கிளைத்தவை என அவர் மெள்ள மெள்ள ஒரு தீர்மானத்துக்கு வந்தார். கண்டறிவின் மூலம், கூர்ந்த அவதானிப்பின் மூலம், மெள்ள மெள்ள தீர்மானமாக அவர் இந்த நிலைபாட்டை வந்தடைந்தார். எந்த ஓர் உயிரின உறுப்பும் அல்லது செயல்பாடும், தன்னளவில் முழுமை கொண்டதாகத் தோன்றினாலும் அவை கொஞ்சம் கொஞ்சமாகப் பரிணமித்து வந்திருக்கின்றன. அந்த உயிரினத்துடன் தொடர்புடைய கிளைகளில் எந்த உறுப்பின் இந்தத் தொடர்ச்சியையும் காண முடியும்.

சார்லஸ் டார்வின்


கண்ணைப்போல் மிகவும் அதிசயிக்கத்தக்க விதத்தில் தனித்தன்மை கொண்ட ஓர் உறுப்பை எடுத்துக்கொள்ளலாம். அதுகூட, ஒளியை உள்வாங்கும் திறன் கொண்ட சிறிய சிறிய செல்களில் இருந்து ஊசித்துளை கேமரா (pinhole camera) போன்ற கண் உறுப்பு என கிளைத்து வந்திருக்கிறது. இன்று நாம் காணும் அதிசயமான முப்பரிமாண பார்வையைக் கொடுக்கும் கண், ஒரு காலத்தில் படைப்பு - படைப்பாளி என பேசுகிறவர்களுக்குப் பெரும் ஆதாரமாக இருந்தது. அதை, டார்வினிய அறிவியல் உடைத்துவிட்டது.  

இதையே, தாவரங்களிலும் டார்வின் எதிர்பார்த்திருக்க வேண்டும். எல்லா விலங்கினங்களின் நரம்பு செயல்பாடுகளிலும் இருக்கும் ஒரு பொதுத்தன்மை, அவற்றின் மின் செயல்பாடு. எனில், தாவரங்களுக்குப் புலனறிதல் இருக்கும் பட்சத்தில், அதே மின் செயல்பாடு அவற்றிலும் இருக்கலாம். எல்லா தாவரங்களின் அறிதல் செயல்பாடும் மின்னியக்கத்தன்மை கொண்டதாக இருக்கலாம். டார்வின், சாண்டர்சனிடம் கண்டறிய விரும்பிய விஷயம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் சாண்டர்சன், பூச்சி உண்ணும் தாவரத்திடம் மின் செயல்பாட்டைக் கண்டறிந்தாலும், அதை உயிரியல் பரிணாமம் எனும் பெரிய திரைச்சீலையில் பொருத்திப் பார்க்கத் தவறிவிட்டார். அவரால் இயலவில்லை. இங்குதான் ஜகதீஷ் சந்திர போஸ் வெற்றி அடைந்தார். ஆனால், அதன் பிறகும் பிரச்னை ஓயவில்லை.

ஜகதீஸ் சந்திர போஸ்

வெளியில் இருந்து கிடைக்கும் புலன் தூண்டுதல்கள், தாவரங்களின் உடலுக்குள் மின்னழுத்த சமிக்ஞைகளை ஏற்படுத்துகின்றன. அவை தாவரங்களின் உள்ளே பரவி அவற்றின் நீர் அழுத்தத்தை மாற்றுகின்றன. இதன்மூலம், தாவரங்கள் எதிர்வினை ஆற்றுகின்றன. இவையெல்லாம் போஸ் முன்வைத்த கண்டுபிடிப்புகள். இதில் எவ்வித ‘மறைஞானம்’(mysticism) எல்லாம் இருக்கவில்லை. ஆனால், போஸின் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து அவரைத் தாக்கி வந்தார்கள். போஸ் தமது அதீத ஆர்வத்தால் அல்லது கிழக்கத்திய மனநிலையால், இப்படி செடிகளுக்கு உணர்ச்சிகள் இருக்கும், அவற்றுக்கு நரம்பு மண்டலம் இருக்கும் என தவறாகக் கருதுகிறார் என தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இன்று, தாவர நியூரோ - உயிரியல் (plant neuro-biology) என்றே ஒரு துறை இருக்கிறது. கூடவே, நியூரோ என்கிற பதத்தை எப்படி தாவரங்களுக்குப் பயன்படுத்த முடியும் என்கிற சர்ச்சையும் இன்னும் இருக்கிறது. இந்தத் துறையில் செயல்படும் ஒரு முன்னணி உயிரி - இயற்பியலாளர் (bio-physicist) ஷெப்பர்ட் என்பவர். ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தைச் சார்ந்தவர். அவர் நூறாண்டுகளுக்கு முன்னர் போஸ் செய்த ஆராய்ச்சிகள் மற்றும் அவர் கண்டடைந்த விஷயங்களில் இருந்து, இன்றைய தாவர நியூரோ – உயிரியல் நிரூபிக்கும் அல்லது ஆராய்ச்சி செய்வதைப் பட்டியலிட்டுத் தருகிறார். 

அவை:

1. புற உலகை அறிந்துகொள்ளவும், அவற்றுக்கு எதிர்வினையாற்றவும் தாவரங்கள் நிச்சயமாக மின்சார சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன.

2. விலங்கினங்களைப் போலவே நரம்பு செல்கள் அல்லது நியூரான்கள் இல்லாவிட்டாலும், நியூரானிய செயல்பாட்டை ஒத்த நரம்பு மண்டலம் போன்ற ஒரு செயல்பாட்டு அமைப்பு தாவரங்களில் உள்ளது.

3. தாவரங்களுக்கு ஞாபக சக்தி (memory) உண்டு. அவற்றுக்கு ‘பட்டறிவு’ உண்டு.

4. அனைத்து தாவரங்களிலும் நீர் சார்ந்த மின்-வேதியியல் செயல்பாடுகள் நாடித்துடிப்பாக இருக்கின்றன. 

ஒருவிதத்தில், போஸை ஆராதித்தவர்களும் அவரது கண்டறிதல்களின் முக்கியத்துவத்தை சரியாக அறிந்து கொள்ளவில்லையோ என தோன்றுகிறது. அவரை எதிர்த்தவர்கள், நிச்சயமாக அவரது பார்வையின் பேரெல்லையை நினைத்துக்கூட பார்க்கத் தவறிவிட்டார்கள். இதனால், தாவரவியலும் உயிர் குறித்த நமது அடிப்படை அறிதலும் பல பத்தாண்டுகள் பின் தங்கிவிட்டன.

போஸை அறிந்துகொள்ள டார்வின் உதவுகிறார் என்பது சுவாரசியமான உண்மை. ஒரு உயிரியலாளர் கூறினார் – ‘பரிணாம அறிவியல் இல்லாமல் உயிரியலில் எதையுமே அர்த்தப்படுத்த முடியாது’.

போஸ் விஷயத்தில், அது நூற்றுக்கு நூறு உண்மை.


காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்

கதீஷ் சந்திர போஸ் என்ற உடனேயே நினைவுக்கு வர வேண்டிய, ஆனால் இந்தியர்கள் மறந்துவிட்ட ஒரு முக்கியமான பெயர் பேட்ரிக் ஹெடிஸ் (Patrick Geddes). ஏனெனில், ஜகதீஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இவர்தான். இதுதான் போஸின் ‘அதிகாரபூர்வமான’ வாழ்க்கை வரலாறு என்றுகூட சொல்லலாம்.

சகோதரி நிவேதிதாவின் ‘இந்திய வாழ்வின் வலைப்பின்னல்’ (The web of Indian life) எனும் நூலில் இருவருக்கு நன்றி சொல்லியிருப்பார். ஒருவர், இந்திய பொருளாதார அறிஞர் ரமேஷ் சந்திர தத். மற்றொருவர், பேட்ரிக் ஹெடிஸ். பேட்ரிக் ஹெடிஸ், பலதுறை மேதை. Polymath என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். தாவரவியலாளர், கல்வியியலாளர், பரிணாம கோட்பாடுகளை முன்வைத்தவர், நகரங்களை திட்டமிடுவதில் வல்லவர். குறிப்பாக, நகரங்களை வடிவமைப்பதில் அவர் உயிரியல் கோட்பாடுகளை கையாளுவார். நகரத்துக்கும் அதில் வசிக்கும் மக்களுக்குமான உறவு உயிரியல் உறவு என்பது அவரது கருத்து.

இந்த மாதிரி ஒரு கோட்பாடு நம்மிடம் உண்டு. பரிபாடலில். மதுரையை வர்ணிக்கும் வரிகள் இவை:

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் 
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின் 
இதழகத் தனைய தெருவம் இதழகத் 
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் 
தாதின் அனையர் தண்டமிழ்க் குடிகள்

தாமரை மலரின் இதழ்களின் அமைப்பை போன்ற தெருக்கள் என்பதுடன் மக்கள், மலரின் மகரந்தத் தூள்கள்போல என ஒருவித உயிர் உறவைக் காட்டும் இந்தப் பாடல் வரிகளை கவிஞனின் கற்பனை என்று மட்டுமே எடுத்துக்கொள்ளலாமா?

பேட்ரிக் ஹெடிஸ், தென்னிந்தியாவில் உள்ள கோவில் நகரங்களையும், அந்த நகரங்களின் பழமையான அமைப்பையும் ஆழ்ந்து படித்தார். ஒவ்வொரு கோவில் நகரத்துக்கும் சென்றார். மதுரை, காஞ்சிபுரம் எல்லாம் சுற்றிப் பார்த்தார். தெருக்களின் அமைப்பு முதல் சாக்கடைகள் எங்கே போகின்றன என்பது வரை எல்லாவற்றையும் அவர் கவனமாக உற்று நோக்கினார். குறிப்புகள் எடுத்தார். புகைப்படங்கள் எடுத்தார். தெருக்களின் வடிவமைப்புகள், கோவில்களில் இருந்து குடியிருப்புகள் வரை அவை அமைக்கப்பட்டிருக்கும் விதங்கள் என அனைத்தையும் அவர் உள்வாங்கினார். அப்போது இந்தியா மாறிக்கொண்டிருந்தது.

இந்தியாவின் பழமையான நகர வடிவமைப்புகள், ஆங்கில அதிகாரிகளாலும் அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்கிற ஆங்கிலக் கல்வி கற்ற இந்தியர்களாலும் அந்த வடிவமைப்புகள் அழிந்து வருவதை ஆதங்கத்துடன் பதிவு செய்திருக்கிறார். மதுரை போன்ற கோவில் நகரங்கள் மிக அருமையாக வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்டுள்ள வாழ்விடங்கள், தனிமனித சுதந்தரத்தையும் கலை சுதந்தரத்தையும் இணைக்கும் கண்ணியத்துடன் உருவாக்கப்பட்டவை. தென்னிந்திய பெரும் கோவில் நகரங்களின் பண்டைய வடிவமைப்புக்கு இணையாக எங்கும் ஒரு நகரத்தைக் கூற இயலாது. ஐரோப்பாவின் மிகப்பெரிய நகரங்களில்கூட அவற்றைக் காண முடியாது.  

இதெல்லாம், இந்தியப் பண்பாட்டில் மயங்கிவிட்ட ஏதோ ஒரு மேற்கத்தியரின் வர்ணனை அல்ல. மேற்கத்திய நகரங்களை முழுமைத்தன்மையுடனும் அறிவியல்பூர்வமாகவும் அழகியலுடனும் வடிவமைக்க வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையில், இந்திய நகரங்களின் பண்டைய வடிவமைப்புகளை ஆராய்ந்த ஒருவரின் அவதானிப்பு. 

தேர்த் திருவிழாக்கள், இந்திய நகர வடிவமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவை. இவற்றுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மேற்கத்திய நாடுகளில் அவதூறுப் பிரசாரங்கள் நடத்தப்பட்டன. ஆனால் பேட்ரிக் ஹெடிஸ், தேர்த் திருவிழாக்களை நகர வீதிகளை நிர்வாகிக்கும் மிக சிறந்த ஒரு அமைப்பாகப் பார்க்கிறார். ரத வீதிகளில் இயல்பாகவே ஆக்கிரமிப்புகள் குறைந்திருக்கின்றன. மோட்டார் வாகனங்கள் வருவதற்கு முன், தெருக்களைப் பராமரிக்க இதைவிடச் சிறந்த ஒரு சமூக ஒருங்கிணைப்பை யோசிக்க முடியாது. 

நகரங்களை வடிவமைப்பதில் பேட்ரிக் ஹெடிஸுக்கு உள்ள மேதமை அனைவருக்கும் தெரியும். எனவே, அவரது ஆலோசனைகள் ஏற்கப்படுகிறதோ இல்லையோ, நிச்சயமாக அரசின் ஆலோசனைக் குழுக்களில் கோரப்படும். ஆனால், காலனிய நகராட்சி நிர்வாகங்கள், இந்தியர்களைப் பெயரளவுக்குத்தான் வைத்திருந்தன. இவற்றின் மூலம், தனது பார்வையை செயல்படுத்த முடியாது என உணர்ந்த ஹெடிஸ், சமஸ்தான அரசர்களின் ஒத்துழைப்பை நாடினார். இந்தூர் சமஸ்தானத்தில் அவரது செயல்பாடு முக்கியமானதாக அமைந்தது என்றாலும், சமஸ்தானங்களும் இறுதியில் காலனிய அதிகாரிகளின் முடிவுகளைத்தான் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்தன. 

இந்திய நகராட்சி நிர்வாகங்களுக்கு ஹெடிஸ் ஒரு அறிவுரை வழங்குகிறார். ரத வீதிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். ஒவ்வொரு கோவில் நகரத்திலும் உள்ள நகராட்சி உறுப்பினர்களும், கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செயல்படுவதைவிட, நகரங்களைச் செம்மைப்படுத்த நல்ல வழி கிடையாது… 

நகரத்தை விரிவுபடுத்துகிறோம் என்று நாநூறு ஐநூறு வீடுகளை இடித்து பெரிய வீதிகளை உருவாக்குவதை அப்போதே ஹெடிஸ் எதிர்க்கிறார். தெருக்கள் ஆங்காங்கே ஒரு மர நிழலில் முடிந்து அங்கிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். மரத்தடியில் ஒரு சிறிய தெய்வச் சிலை இருக்கட்டும். அங்கே, பெண்கள் கூடிப் பேசவும், குழந்தைகள் இணைந்து விளையாடவும் ஒரு வெளி தேவை.  

காஞ்சிபுரத்தின் பழமையான நகர வடிவமைப்பில் மிகவும் தோய்ந்து போயிருக்கிறார் பேட்ரிக் ஹெடிஸ். இந்த ஊரில் சாக்கடைகள் என்ன ஆகின்றன என்பதை ஆராய்ந்து அவர் எழுதியிருப்பதைப் படிக்கும்போது வருத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

இரண்டு இடங்களில் கழிவு நீர் வெளியேற்றும் அமைப்புகள் செயல்படும் விதத்தை நான் அவதானித்தேன். இவற்றை இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் எல்லாம் செயல்படுத்த முடியும் என நம்புகிறேன். இந்தக் கழிவு நீர், தோட்டங்களுக்குச் செலுத்தப்படுவதுடன் அதற்காகவே புதிய தோட்டங்களும் உருவாக்கப்படுகின்றன. இவ்விதமாக, நச்சுத்தன்மையும் துர்வாடையும் கொண்ட கழிவு நீர், அழகும் ஒழுங்கும் கொண்ட ஒரு விஷயமாக மாற்றப்படுகிறது.

இன்றைக்கு பாதாள சாக்கடை என்கிற பெயரில், நம் சிறு நகரங்களுக்குத் தேவையற்ற ஒரு திட்டத்தை, எவரோ அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் லாபமடைய உருவாக்கி, வீதிகளை எல்லாம் மரணக் குழிகளாக்கும், கட்சி வேறுபாடின்றி கொள்ளையடிக்கும் நம் நகராட்சிக் கொள்ளையர்களைப் பார்த்தால், ஹெடிஸ் என்ன சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை.

காஞ்சிபுரத்தின் பண்டைய வடிவமைப்பைச் சார்ந்து, அதன் அடிப்படையில் நகர சீரமைப்பைச் செய்ய ஹெடிஸ் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார். ஆனால் அது செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

1920-களில், பாலஸ்தீனின் தங்கள் பூர்விக தாயகப் பகுதிகளுக்கு யூதர்கள் திரும்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, ஐரோப்பிய யூதர்கள். அவர்கள், குடியிருப்புகளையும் நகரங்களையும் வடிவமைக்க ஆரம்பித்தனர். பின்னர் இஸ்ரேலின் தலைநகராக விளங்கப்போகும் டெல் அவிவ் நகரத்தினை வடிவமைக்க பேட்ரிக் ஹெடிஸின் உதவி கோரப்பட்டது. அதற்கு அவரது வடிவமைப்புத் திட்டம், காஞ்சிபுரத்தின் பழைய நகர வடிவமைப்பு குறித்த அவரது ஆராய்ச்சியின் அடிப்படையில் அமைந்திருந்தது.

காஞ்சிபுரம் பல குடியிருப்புகளால் ஆனதாகவும், ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு ஆலயத்தை மையப்படுத்தி தன் இருப்பைக் கொண்டதாகவும் இருப்பதை ஹெடிஸ் கண்டார். இதே அமைப்பு முறையை டெல் அவிவ் வடிவமைப்பில் பயன்படுத்தினார். ஆலயங்களுக்கு பதிலாக பூங்காக்கள்.

பாரதத்தின் திருவிழாக்கள் அவருக்கு பெரும் உத்வேகத்தை அளித்தன. சமூக ஒருங்கிணைப்புடன் குடியிருப்புகளை சுத்தமாக வைத்திருக்கும் வருடாந்திர வாய்ப்புகளாக அவர் அதைக் கண்டார். பொங்கல், தீபாவளி இரண்டுமே அவரைக் கவர்ந்தன. பொங்கலைப்போல ஒரு திருவிழாவை ஐரோப்பாவில் எண்ணிப்பார்க்க முடியாது. அங்குள்ள நான்கு பண்டிகைகளைச் சேர்த்தால்தான் பொங்கல் பண்டிகையின் அனைத்து செயல்பாடுகளும் கொண்டதாக அமையும்.

சுத்தம், சுகாதாரம், மகிழ்ச்சி, ஆன்மிகம் இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் சமூக பண்பாட்டு நிகழ்வுகள்தான் இந்தியத் திருவிழாக்கள். இவற்றை நகராட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஹெடிஸ்.

இந்தூரில் தீபாவளி கொண்டாட்டத்தை இவ்விதமாக மாற்றிக் காட்டினார். ராவணன் எரிக்கப்படும்போது சுகாதாரக்கேட்டையும் நோய் பரப்புவதையும் காட்டும் குறியீடாக, ஒரு பெரிய எலியும் சேர்த்து எரிக்கப்பட்டது. மேலும், நகராட்சியின் சுகாதார ஊழியர்களுக்கு, சமுதாய அமைப்பிலிருந்த இழிவான பார்வையை அவர் கேள்விக்குள்ளாக்கினார். அவர்கள் சாக்கடைகளில் பணி புரிவோர் அல்லர். கழிவுகளை நந்தவனங்களாக்கும் நந்தவனப் பணியாளர்கள் எனும் பார்வை மாற்றம் தேவை. இதற்கு, கழிவுநீரை சாக்கடைகளாக்குவதற்குப் பதிலாக நந்தவனத் தோட்டங்களுக்குச் செலுத்தும் முறையை இந்தியாவில் மீண்டும் உருவாக்க வேண்டும் என அவர் கூறினார்.

சீனாவில் இத்தகைய பாரம்பரிய முறை இருப்பதை சுட்டிக் காட்டினார். கழிவுகளாகக் கருதப்படும் அனைத்தும் சாக்கடைகளுக்குள் செல்ல வேண்டும் என்கிற ஐரோப்பிய நகர திட்டமிடுதலுக்குப் பதிலாக, அனைத்தும் மீண்டும் மண்ணை வளப்படுத்த மண்ணுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிற இந்தியப் பார்வையை அவர் வலியுறுத்துகிறார்.

ஹெடிஸ், அடிப்படையில் ஒரு அனார்கிஸ்ட் (Anarchist). அமைப்பு சாராத சோஷலிஸ மனப்பாங்கு கொண்டவர். இந்திய ஆன்மிகத்திலும் பண்பாட்டிலும் அவருக்கு இருந்த ஈர்ப்பு வெறும் ‘exotic’ என்பதல்ல. அதைத் தாண்டியது. ஒரு பெரும் பண்பாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டு அறிதல்களை உள்வாங்குவது, நாளைய மானுடத்தின் இருப்பை குறித்து சிந்திக்கும் அனைவருக்கும் தேவை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

அவருடன் தொடர்புடைய மற்றொரு அனார்கிஸ்ட் பீட்டர் க்ரோப்போட்கின் (Peter Kropotkin). இருவருக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை உண்டு. இருவருமே டார்வினின் பரிணாம கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆனால், அன்றைய காலகட்டத்தில் டார்வினிய அறிவியல் ‘சமூக டார்வினியம்’ எனும் போலி அறிவியல் பார்வையை உருவாக்கியிருந்தது. காலனியத்தையும் சமூக சுரண்டலையும் ‘வலியது வாழும்’ என கூறி நியாயப்படுத்தும் ஒரு பார்வை அது.

க்ரோப்போட்கின், அதற்கு மாற்றாக விலங்கினங்களின் பரிணாமத்தில் சமூக ஒத்துழைப்பும் பரஸ்பர உதவும் தன்மையும் கொண்ட உயிரினங்கள் வெற்றி அடைவதை முன்வைத்தார். போஸின் தாக்கம், ஹெடிஸின் நகர வடிவமைப்பிலும் இருந்ததை ஆராய்ச்சியாளர் நிருபமா கான் சுட்டிக்காட்டுகிறார். சுவாமி விவேகானந்தரின் தாக்கமும் அவரிடம் இருந்தது. இடதுசாரி சிந்தனையில் தொலைந்துபோன, ஆனால் மீட்டெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான இழை, பேட்ரிக் ஹெடிஸுடையது.

பாரத பாரம்பரியம் குறித்துப் பேசுவோருக்கு, உண்மையில் அதனை கண்டடைந்து மீண்டும் இன்றைய சூழல்களுக்கும் சவால்களுக்கும் ஏற்ற முறையில் தகவமைக்க பேட்ரிக் ஹெடிஸ் ஒரு ஆதார அச்சு. அவரது சிந்தனையிலிருந்து வளர்ந்திருக்கும் உயிர்த்துவம் கொண்ட நகரம் (Biopolis), இன்று சூழலியலாளர்களால் நாளைய நகரங்களின் முன்மாதிரி என விவாதிக்கப்படுகிறது.

இந்தியாவில், பேட்ரிக் ஹெடிஸின் அறிதலை முன்னெடுத்தவர் ராதாகமல் முகர்ஜி எனும் சமூகவியல் பேராசிரியர். 1930-களிலேயே அமெரிக்க சமூகவியல் ஆராய்ச்சி இதழில், மானுடத்துக்கும் இயற்கைக்குமான இசைவுடன் வளர்ச்சி அமைய வேண்டும் என எழுதியிருக்கிறார் இவர். இன்றைய சூழலியல் கோட்பாடுகளை அதிசயிக்கத்தக்க வகையில் எதிர்நோக்குகிறது இவரது எழுத்துகள்.

உதாரணமாக – “ஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். ...உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆகச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்”. 

இது எழுதப்பட்ட ஆண்டு 1930 என்பதையும், அதுவும் ஒரு சர்வதேச சமூகவியல் இதழில் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். காலனிய காலகட்டத்தில்கூட இந்தியச் சிந்தனை எப்படி உயிர்த் துடிப்புடன் இயங்கியது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள இயலும்.

எங்கே தவறவிட்டோம் இந்த அறிவியக்க இழையை எனும் கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனால், சுற்றி நோக்குகையில் அது ஒரு இன்றியமையாத வீழ்ச்சிதான்.

பாரதப் பண்பாட்டை காலனிய வெறுப்புக்கு சற்றும் குறையாத வெறுப்புடன் அணுகுவதை மட்டுமே இடதுசாரி ‘ஃபேஷனாக’ கருதும் மனநோயும், ஊழல்களுக்கான உறைவிடங்களாக மட்டுமே நகராட்சிகளை மாற்றியிருக்கும் தனித்தன்மையும், கட்சி பேதமற்றுக்கொண்டிருக்கும் நமக்கு, நம் நகரங்களை மீண்டும் நல்ல வாழ்விடங்களாக மாற்ற உழைத்த பேட்ரிக் ஹெடிஸ் போன்றவர்கள் மங்கலான நினைவாகி மறைந்துபோனதில் ஆச்சரியமில்லை.

அச்சுதன் முதல் ஜானகி வரை

By அரவிந்தன் நீலகண்டன்

First Published : 12 April 2015 10:00 AM IST


த்மநாபபுரத்தில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான அரண்மனைக்கு சென்றீர்கள் என்றால், அங்கே அரசருக்குப் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு ‘மூலிகை’ கட்டிலைப் பார்க்கலாம். அதை அரசருக்கு அளித்தவர் ஒரு டச்சுக்காரர் எனக் கருதப்படுகிறது. அப்படி தகவல் சொல்கிற ஒரு சிறிய அறிவிப்பை அங்கேயே வைத்திருக்கிறார்கள்.

17-ம் நூற்றாண்டில், மலபார் பகுதியில் டச்சு ஆதிக்கம் ஏற்பட்டது. ஹெட்ரிக் அட்ரியன் வான் ரீடீ (Hendrik Adrian von Rheede) என்பவர் அங்கே கவர்னராக இருந்தார். அவர் அந்தப் பகுதியின் தாவரங்களைப் பற்றி 12 பாகங்கள் கொண்ட ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் (Hortus Malabaricus) என்கிற மகத்தான தொகுப்பு நூல்களை வெளியிட்டார். மலபார் பகுதியின் அனைத்து தாவரங்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பு அது. ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் என்றால் மலபாரின் தோட்டம் என்று பொருள். இந்தப் பிரதேசத்தின் 740 தாவரங்களின் விவரங்கள் அந்தத் தொகுப்பில் இருந்தன. இந்தத் தரவுகளை முழுமையாகத் தொகுக்க அவருக்கு கொஞ்ச நஞ்சமல்ல இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின. 1678-ல் தொடங்கிய வேலை 1703-ல்தான் முடிந்திருந்தது. காலனிய காலகட்டத்தில், அறிவியல் அறிவு எப்படி சேகரிக்கப்பட்டது என்பதற்கான அற்புதமான ஒரு ஆவணமாக இந்தத் தொகுப்பு கருதப்படுகிறது.

இந்தத் தொகுப்பில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. இந்தத் தொகுப்புக்கான பணி தொடங்கியபோது, இத்தாலியில் இருந்து வந்திருந்த ஒரு மிஷினரி ஃபாதர் மாத்யூ என்பவர்தான் இந்தப் பணியில் ஈடுபட இருந்தார். ‘கிழக்கத்திய’ தாவரங்கள் குறித்த அவரது பகுப்பு முறையை விரைவில் கவர்னர் கைவிட வேண்டியதாக இருந்தது. அவை, இங்குள்ள தாவரங்களை வகைப்படுத்துவதில் பெரிதாக உதவிடுவதாக இல்லை. இறுதியில் உள்ளூர்வாசிகள், இங்குள்ள அறிஞர்கள் எப்படி தாவரங்களை பகுக்கிறார்கள் என்பதை கவர்னர் விசாரித்தார். அந்தப் பகுப்பு முறைதான் சரிப்படும் என்கிற முடிவுக்கு வந்தார். காலனிய அதிகாரி என்றாலும் அட்ரியன் ரீடீ செய்த சரியான முடிவு அது. 

யாரை அணுகுவது? மூன்று பட்டர்களையும் ஒரு வைத்தியரையும் அவர் அணுகினார். ரங்க பட்டர், விநாயக பட்டர், அப்பு பட்டர் ஆகியோர் அந்தப் பட்டர்கள். ஆனால், அவர்களுக்குக் களத்தில் தாவரங்களைக் கண்டறியும் திறமை இல்லை. ‘இட்டி’ அச்சுதன் (Itti Achuden), ஈழவ சமுதாயத்தைச் சார்ந்தவர். பாரம்பரியமான வைத்தியக் குடும்பம். அன்றைய நாள்களின் மிக முதன்மையான வைத்தியர் என்று ரீடீ கூறுகிறார். ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் நூலில் நாம் காண்கிற தாவரங்களின் விவரணம், பகுப்பு முறை, பெயர்கள் ஆகியவை அனைத்துமே ஏறக்குறைய அச்சுதனின் பங்களிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நூலில் உள்ள தாவரங்களின் விவரணங்கள், ஓவியங்கள், அவற்றின் வகைப்படுத்துதல் ஆகியவை தங்கள் பாரம்பரிய நூல்களின் அடிப்படையிலும், தம் அறிதலுக்கு உகந்ததாகவும் உள்ளன என அச்சுதன் கொடுத்த சான்றிதழும் (20 ஏப்ரல் 1675) உள்ளது. 

சூழலியல் வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் க்ரூவ், தன்னுடைய ‘பசுமை ஏகாதிபத்தியம்’ (Green Imperialism) எனும் நூலில், அச்சுதனின் பங்களிப்பை முழுமையாகக் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். அட்ரியன் ரீடீ கூறுவதைக் காட்டிலும், அச்சுதனின் பங்களிப்பும் ஈழவர்கள் பயன்படுத்திய தாவர பாகுபாடு முறையும், ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் நூலின் மிக அடிப்படையாகவே பயன்படுத்தப்பட்டன என்கிறார். ஹோர்ட்டஸ் மலபாரிக்கஸ் ஐரோப்பாவை அடைந்த பிறகு, அங்குள்ள முக்கியமான தாவரவியல் நூல்களில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. உயிரினங்களின் வகைப்படுத்துதலின் பிதாமகர் என அறியப்படுகிறவர் கார்ல் லின்னயஸ். இவரது வகைப்படுத்துதல், இன்றைக்கும் முக்கியமானது. லின்னயஸ் தன்னுடைய பாகுபாட்டில், 240 புதிய தாவர இனங்களை ஈழவ பாகுபாட்டு முறையைப் பயன்படுத்தி வகைப்படுத்தினார். அதேபோல், பல அன்றைய மேற்கத்திய முக்கிய உயிரியலாளர்கள் – அடன்ஸன் (1763), ஜுஸே (1789), டென்ஸ்ட் (1818), ஹாஸ்க்ரல் (1867), ஹூக்கர் என பலரும் இந்த ஈழவ பாகுபாட்டு அமைப்பை பயன்படுத்தினர் என்கிறார் க்ரூவ். ஆனால், அதில் ஒரு நுண்ணிய அதிகாரத்துவ இழையும் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

கார்ல் லின்னயஸ் தன்னை அறியாமலே ஈழவ பாகுபடுத்துதலை பயன்படுத்தினார் என்றாலும், அவருக்கு அது மற்றொரு பண்பாட்டில் இருந்து பெறப்பட்டது என்பது தோன்றவே இல்லை. அறிவு என்பது ஒரு பொதுவான அறிதலில் இருந்து உருவாகக்கூடியது. அந்த அறிதல் முறை அனைவருக்கும் ஒன்று மட்டுமே என்பதுதான் அப்போதைய மனநிலை. அறிதல், உரையாடல் மூலம் உருவாக முடியும். அதுவும், கிறிஸ்தவ மேற்கு கிறிஸ்தவரல்லாத பண்பாடுகளிடம் இருந்து அறிதலை பெற முடியும் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத விஷயம் என்கிறார் மானுடவியலாளர் அன்னா ட்ஸிங் (Anna Lowenhaupt Tsing). ஆனால், நடந்தது என்னவோ அதுவேதான். கேரளத்தின் வைத்தியர்கள், தாவரவியல் அறிவை ஐரோப்பாவிடம் இருந்து பெறவில்லை. ஆனால் அவர்களின் தாவரவியல் அறிவு, ஐரோப்பிய அறிதல் முறையை மாற்றியமைத்தது. 

இங்கிருந்துதான் ஒரு சிக்கலான விஷயம் ஆரம்பிக்கிறது. அறிவியல் மேற்கில் நிறுவனரீதியாக பலமாக பலமாக அது பிற பண்பாடுகளிலிருந்து பெற்ற பங்களிப்புகளை உள்ளே தன்னுடையதாக மாற்றியமைத்தது. அத்துடன், தன்னுடைய அமைப்புக்கு வெளியே இருக்கிறவர்கள் ஒரு அளவுக்கு மேல் பங்களிக்க முடியாதவாறு விலக்க ஆரம்பித்தது. 1858-ல் C.R.W.வாட்கின்ஸ் என்பவர், தாவரவியல் அடிப்படைகள் (Principles and Rudiments of Botany) என்கிற நூலை எழுதினார். இதில் கார்ல் லின்னயஸின் பாகுபாடு விமரிசிக்கப்பட்டது என்றாலும், அதன் தொடக்கத்தில் அவர் ஒரு முக்கிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறார். லின்னயஸ், ரீடீயின் நூலுக்கு தாம் முக்கியத்துவம் அளித்ததையும், அவற்றின் விவரணங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதையும் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறார். ஆனால், இந்தியப் பெயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார். கஷ்டப்பட்டு லத்தீனிய பெயர்களைச் சூட்டுகிறார். இவை எல்லாம், வேண்டுமென்று செய்யப்பட்டவை அல்ல. ஆனால், இவை அனைத்துமே மெதுவாக ஒரு அரணை எழுப்புகின்றன. எப்படி என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 2008-ல், ஜியோ எனும் பத்திரிகை, ஹென்றி நோல்டி எனும் ஆக்ஸ்போர்ட் தாவரவியல் ஆராய்ச்சியாளர் எழுதியுள்ள ‘காகிதப்பூக்கள்’ (‘Paper flowers’) எனும் கட்டுரையை வெளியிட்டது. ராபர்ட் விட் (Robert Wight, 1796-1872) எனும் ஸ்காட்டிஷ் மருத்துவர், இந்தியத் தாவரங்களைச் சேகரிப்பதிலும் வகைப்படுத்துவதிலும் பெரும் ஆர்வம் உள்ளவராக இருந்தார். இவர் இந்தியாவில் வாழ்ந்த 31 ஆண்டுகளில் (1817-1848) குற்றாலம், சிவகிரி, பழநி ஆகிய மலைப்பகுதிகளில் தம் நேரத்தை செலவிட்டார். பல தாவர இனங்களை வகைப்படுத்தினார். அவற்றுக்கு தாவரவியல் பெயர்களை இட்டார்.  ஏறக்குறைய 256 தாவர இனங்கள் (Species) அவருடைய பெயரைத் தாங்கியுள்ளன. அவரது பத்தாண்டு உழைப்பின் விளைவாக வெளிவந்த ‘இந்தியத் தாவரவியல் சித்திரங்கள்’ (Illustrations of Indian Botany – hand illustrated) என்ற அரிய நூல், 2462 தாவர ஓவியங்களைக் கொண்டதாக இருந்தது. பிரிட்டிஷ் காலனிய நாடுகளிலேயே இவ்வளவு விளக்கமான தாவரவியல் தரவுகள் வெளிக்கொணரப்பட்டது வேறெங்கும் இல்லை எனலாம். 

இந்த ஓவியங்களை வரைந்தவர்கள் ரங்கையா (Rungiah) மற்றும் கோவிந்தன் (Govindoo) எனும் பெயர்களைக் கொண்ட தஞ்சாவூரைச் சார்ந்த ஓவியர்கள். ஒரு மாதத்துக்கு 10-12 ஓவியங்கள் வரை இவர்கள் தீட்டினர். ஹென்றி நோல்டி, இக்கட்டுரையின் இறுதியில் ஒரு விஷயத்தை நோல்டி குறிப்பிடுகிறார். இந்திய உதவியாளர்களால் ஓரளவுக்கு மேல் – அதாவது ஓவியங்களைத் தீட்டுவதற்கு  அப்பால் – தாவரவியலுக்குப் பங்களிக்க முடியவில்லை. ஏன்? நோல்டி கூறுகிறார்: ‘விட் (Wight) வாழ்ந்த காலகட்டத்தில், இந்தியர்கள் மேற்கத்தியப் பாரம்பரியத்தின் தாவரவியலுக்குப் பங்களிப்பதென்பது சாத்தியமே இல்லாத ஒன்றாகும். லின்னயன் (Linnaean) வகைப்படுத்தல் விதிகளும் வழிமுறைகளும் குறித்து இந்தியர்கள் அறிந்திருக்காததே அதற்குக் காரணம்’. தமது பங்களிப்பில் உருவான அறிவியல் புலத்திலிருந்து தாங்களே பண்பாட்டளவில் அந்நியப்பட்டு நிற்கும் சூழல் உருவானது, காலனியத்தின் மானுட சோகங்களில் ஒன்று. 

ஆனால், பாரம்பரிய அறிதல் இந்தியாவுக்குள் அதே ‘மேற்கத்திய’ அறிவியல் மூலமாகவே மீண்டெழுந்தது என்கிற சுவாரசியத்துடன் நாம் இங்கு கட்டுரையை முடிக்கலாம். 1940-கள், மரபணுவியலின் முக்கியமானதொரு காலகட்டம். குரோமோஸோம்கள் அறியப்பட்டன. ஜீன்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் அவற்றின் முக்கியத்துவம் உணரப்படலாயிற்று.

ஜானகி அம்மாள்

அப்போது இங்கிலாந்தில் ஒரு இந்தியப் பெண் விஞ்ஞானி முக்கியமான பங்களிப்பு கொடுத்துக்கொண்டிருந்தார். ஜானகி அம்மாள் அவர் பெயர். மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியையாகப் பணியாற்றியவர். கோயம்புத்தூரில் 1930-களில் கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் மரபணு ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. 1945-ல் உலகப் புகழ்பெற்ற தாவரவியலாளர் சிறில் டார்லிங்கடனுடன் இணைந்து ஒரு அட்லஸை வெளியிட்டனர். சாதாரணமான அட்லஸ் அல்ல அது. பயிரிடப்படும் தாவரங்களின் குரோமோஸோம்களின் அட்லஸ் (The Chromosome Atlas of Cultivated Plants). இந்த உலகப் புகழ்பெற்ற இந்தியப் பெண் விஞ்ஞானி, பாரதம் விடுதலை பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார்.

அவரது ஈடுபாடு, பாரம்பரிய தாவரவியல் அறிவை மீட்டெடுப்பதிலும் சேகரம் செய்வதிலும் அமைந்திருந்தது. Ethno-botany என மேற்கத்திய உலகில் அறியப்படும் மக்கள் - குழுக்களின் தாவரவியல் அறிவு இந்தியாவில் பரந்து செழித்து உள்ளது. அதனை அறிய வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் நம் கடமை என்பதை அவர் வளர்ந்துவரும் இந்திய தாவரவியலாளர்களுக்குக் கூறினார். காணி சமுதாய மக்கள், வெண்கோஷ்டம் (Costus speciosus) மூலிகைச் செடியைப் பயன்படுத்தும் விதங்களை ஆராய்ச்சி செய்தார். இந்தியாவின் மக்கடள்குழு தாவரவியலை உருவாக்கியவர் என இவரே கருதப்படுகிறார். காலனிய காலகட்டத்தில் மையப்படுத்தப்பட்ட தாவரவியலை மீண்டும் பண்பாட்டு உறவுகளுடன் ஜனநாயகப்படுத்தும் ஒரு இயக்கமாகவே நாம் ethno-botany-ஐ பார்க்கலாம். ஈழவ அச்சுதனிலிருந்து லின்னயஸுக்கு சென்ற அறிவின் அடுத்த சுற்று மீள் உருவாக்கம்.

ஜானகி அம்மாள் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் பிறந்தது, அச்சுதன் பிறந்த ஈழவ சமுதாயத்தில் ஒரு பிரிவு என பெரும்பாலோரால் கருதப்படும் தீயர் சமுதாயத்தில்.




     RSS of this page