Home / AnnaLibraryCase

AnnaLibraryCase


ருணாநிதி செய்தது அத்தனையையும் மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தால்... அவர் செய்த நல்லதும் தப்பாது அல்லவா? அப்படித்தான் சென்னை, கோட்டூர்புரத்தில் செயல் பட்டு வந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தையும் சிதைக்கஆரம்பித்துவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் என்ற நெரிசல் மிகுந்த இடத்துக்கு அது மாற்றப்படும். கோட்டூர்புரம் நூலகம் இருந்த கட்டடத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்து இருக்கிறார். அரசியல்வாதிகளை விட, இதில் கருத்துச் சொல்ல வேண்டியவர்கள் எழுத்தாளர்கள்தான். அவர்களையே கேட்டோம்!

 

சா.கந்தசாமி: சிங்கப்பூரில் உள்ள தேசிய நூலகத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது இந்த நூலகம். நான் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது, 'இப்படி தமிழ்நாட்டில் ஒரு நூலகம் இல்லையே’ என்று ஏங்கியிருக்கிறேன். அண்ணா நூலகம் தமிழகத்தின் கனவு. எங்கே காற்று வேண்டும், எங்கே வெளிச்சம் வேண்டும் என்று பார்த்துப் பார்த்து, படிப்பதற்கும் எழுதுவதற்கும் என்றே வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டடத்தை, எப்படி மருத்துவமனையாக்க முடியும்? மருத்துவம் அவசியம்தான். ஆனால், அது சென்னைக்கு மட்டும்தானா? வேறு எந்த நகரத்திலும் குழந்தைகள் இல்லையா?


பொன்னீலன்:
மருத்துவமனை கட்ட இடமா இல்லை? இந்த அரசுக்குக் கொஞ்சமும் சகிப்புத்தன்மை இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த நடவடிக்கை. இது அறிவுல கத்துக்கு விடப்பட்டுள்ள சவால். எழுத்தாளர்களை இந்த அரசு அவமானப்படுத்தியுள்ளது. அறிவுலகத்தின் மீதான ஒடுக்குமுறை என்பது சமூக ஒடுக்குமுறைக்கான ஒத்திகை. இது மிகவும் வருத்தம் தரக்கூடியது, சகிக்க முடியாதது.

தொ.பரமசிவம்: தமிழ் அடையாளத்தை அழிப்பதே யாழ்ப்பாண நூலகத்தை அழித்ததன் நோக்கம். அண்ணா நூலகக் கட்டடத்தை மருத்துவமனை ஆக்குவதும், தமிழ் அடையாளத்தை அழிக்கும் செயல்தான்!

அசோகமித்திரன்: நன்றாகச் செயல்படும் ஒரு அமைப்பை கலைக்கக் கூடாது. படிப்பதற்குரிய உற்சாகமான ஒரு சூழலைத் தரவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கட்டப்பட்ட நூலகம் அது. பராமரிப் பில்லாத ஒரு அரசு மருத்துவமனையாக்குவதை விட இந்த நூல கத்தை நூலகமாகவே வைத்துக் கொள்ளலாமே.

மேலாண்மை பொன்னுசாமி: முந்தைய அரசின் சாதனைகளை முறியடிப்பது என்பது சரி. ஆனால், அவற்றை ஒழித்துக் கட்டக்கூடாது. இது மிகவும் தவறான அணுகுமுறை. ஷாஜஹானுக்குப் பிந்தைய மன்னன் அப்படி நினைத்திருந்தால் இன்றைக்கு தாஜ்மஹால் இருந்திருக்காது. ராஜராஜசோழனுக்கு அடுத்து வந்த மன்னன் நினைத்திருந்தால்... தஞ்சை பெரிய கோயில் இருந்திருக்காது. கரிகால சோழனைத் தொடர்ந்தவன் அப்படி நினைத்திருந்தால் கல்லணை இருந்திருக்காது.

கீரனூர் ஜாகீர் ராஜா:  நூலகம் திறக்கப்படுகிறபோது, 'ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது’ என்று சொல்வார்கள். ஆனால், தமிழகத்தில் நடக்கிற கதை வேறு. ஏற்கெனவே, வாசிப்பில் பின்தங்கி உள்ள சமூகமாகவே தமிழ் சமூகம் மதிக்கப்படுகிறது. அரசின் இதுபோன்ற அதிரடியான செயல்பாடுகள் அதற்கு ஒரு மறைமுகக் காரணியாக அமைந்துவிடக் கூடாது.

சல்மா: மரணப்படுக்கையில் இருந்தபோதுகூட, அண்ணா படிப் பதில் ஈடுபாட்டோடு இருந்தார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட வரின் பெயரில் அமைந்துள்ள நூலகத்தை இடமாறுதல் செய்வது அநீதியானது. அரசியல் விரோதம் அறிவை விருத்தி செய்யும் விஷயத்தில் தலையிடக் கூடாது.

வண்ணதாசன்: இது இன்னொருவித 'யாழ் நூலக’ எரிப்பன்றி வேறில்லை. உயர் மருத்துவம் உடனடி யாகத் தேவைப்படுவது குழந்தைகளுக்கு அல்ல; இந்த அரசுக்குத்தான். அசுரப் பெரும்பான்மை என்பது, சொல்லுக்கு சொல் உணரப்படுகிறது; பிணம் தின்னல் தொடர்கிறது.

கலாப்ரியா: நூலகத்தை மாற்றிவிட்டு குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதை 'கெட்டிக்காரத்தன மான’ செயலாக நினைக்கலாம் முதல்வர். ஆனால், நல்ல செயல் இல்லை. கெட்டிக்காரராக இருப்பது சுலபம், நல்லவராக இருப்பது கடினம். இது தப்பு, தவறு இல்லை. ''தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும். தப்பு செய்தவன் வருந்தியாகணும்..'' நான் சொல்லவில்லை எம்.ஜி.ஆர். சொன்னது.

சிவகாமி: நூலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்டடத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டிய நிர்பந்தம் இப்போது அரசுக்கு என்ன? கருணாநிதி காலத்தில் கட்டப்பட்டது என்கிற ஒரு காரணத்தைத் தவிர வேறெந்தக் காரணத்தையாவது அரசால் சொல்ல முடியுமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் முதல்வர் இந்தள வுக்கு அராஜகமாகவும், தான் தோன்றித்தனமாகவும் நடந்து கொள்வதைத் தடுப்பதற்கு என்னதான் வழி?

நாஞ்சில் நாடன்: நூலகம் சமுதாயத்தின் அத்தியா வசியமான ஓர் உறுப்பு. நம் மக்களுக்கு அதை பயன் படுத்தத் தெரியவில்லை என்பது உண்மை. அதனால் வாசிப்புப் பழக்கத்தை அதிக ரிக்க என்ன செய்யலாம் என்றுதான் ஒரு அரசாங்கம் யோசிக்கவேண்டும். அதை விட்டு, நூலகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுப்பது ஒரு சமூக அவலம்

ஆ.சிவசுப்பிரமணியன்: நூலகம், மருத்துவமனை இரண்டின் உள்கட்டமைப்பு களும் வெவ்வேறு மாதிரி யானவை. ஒரு நூலகம் எளிதில் சென்றடையக்கூடிய இடத்தில் இருந்தால் மட்டும் போதாது, அங்கு அமைதியான சூழல் வேண்டும். மேலும் புத்தகங்கள் என்பவை சிமென்ட் மூட்டைகளோ, வெங்காய மூட்டைகளோ அல்ல... நினைத்தால் இடம் மாற்றி விடுவதற்கு. எல்லா விஷயங்களையும் அரசியல் நோக்கத்துடனேயே பார்ப்பதும் அணுகுவதும் ஆபத்தானவை.

சு.வெங்கடேசன்: இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்பு உணர்வில் எடுக்கப்பட்ட முடிவு. சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சகிப்புத்தன்மை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது வருந்தத்தக்கது. டி.பி.ஐ. வளாகத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்குக் கூட போதுமான இடங்கள் இல்லை. எப்படி லட்சக் கணக்கான புத்தகங்களைப் பராமரிக்கப் போகிறார்கள்?

வ.கீதா:மன்னர் ஆட்சிக் காலங்களில் கூட, ஒரு மன்னன் வெற்றி பெற்ற பிறகு, பழைய அரசனின் கட்டடங்களை உடைக்கவில்லை. ஆனால், ஜனநாயகம் என்ற பெயரில் ஜெயலலிதா, முடியாட்சியை விட மோசமாக நடந்துகொள் கிறார்.

அழகிய பெரியவன்: ஏற்கெனவே தமிழ்ச்சூழலில் வாசிப்பு குறைந்திருக்கிறது என்கிற ஆதங்கம் உண்டு. மொழி, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த குறைபாடுகளுக்கு ஒரே மருந்து புத்தகங்கள்தான். ஆனால், தான் ஆட்சி செய்யும் மக்கள் அறிவுமயப் படுத்தப்பட்ட சமூகமாக மாறி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது அ.தி.மு.க அரசு. இருக்கிற மருத்துவமனைகளையே இன்னும் சிறப் பாகப் பராமரிக்காத தமிழக அரசு, மேலும் மருத்துவமனைகளை உருவாக்கப் போவதாகச் சொல்வது அரசியல் காழ்ப்பு உணர்ச்சியுடன் கூடிய அபத்தம்.

புனிதபாண்டியன்: சட்டசபைக் கட்டடத்தையும் தலைமைச் செயலகத்தையும் தன் ஆணவப் போக்கினால் மாற்றினார் ஜெயலலிதா. ஆனால், அப்போது 'இது ஏதோ கருணாநிதியின் சொந்தப் பிரச்னை’ என்பதைப் போலப் பலரும் மௌனமாக இருந்ததால், இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் கை வைக்கிறார். சமச்சீர்க்கல்வி, அறிவை விரிவு செய்யும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம், தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டை மாற்றுவது போன்ற தமிழர்களின் அறிவு மற்றும் பண்பாடு சார்ந்த விஷயங்களைச் சீர்குலைப்பது ஆகியவை ஜெயலலிதாவின் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான்!

- நா.கதிர்வேலன், ரீ.சிவகுமார்,

கவின் மலர்


http://epaper.dinamani.com/newsview.aspx?parentid=25451&boxid=3911890&archive=true
http://epaper.dinamani.com/epaperimages/4112011/04112011-cni-mn-09/3911890.JPG


First Published : 06 Nov 2011 03:52:01 AM IST
சென்னை, நவ. 5: அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 கடந்த திமுக ஆட்சியில் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 230 கோடி செலவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த நூலகத்தை டி.பி.ஐ. வளாகத்துக்கு மாற்றுவது என்றும், கோட்டூர்புரம் நூலகக் கட்டடத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைப்பது என்றும் இப்போதைய தமிழக அரசு அறிவித்தது.
 அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பிரபாகரன், புகழேந்தி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது.
 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது என்று தமிழக அரசு எடுத்த முடிவு சரிதானா அல்லது இல்லையா என்பது பற்றி அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் வரை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.
 மீண்டும் இந்த வழக்கு 6 வாரங்களுக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர்.
 இந்த நிலையில், "அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம்மாற்றம் செய்யக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரும் "கேவியட்' மனுவை வழக்குரைஞர் பிரபாகரன் சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தாக்கல் செய்தார்.

First Published : 04 Nov 2011 02:23:24 AM IST
சென்னை, நவ. 3: அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

 இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

 சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 200 கோடியில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

 உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதியில் இந்த நூலகம் அமைந்திருப்பதால் கல்வியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு வசதியாக உள்ளது.
 புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் போல இந்த நூலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அண்ணாவின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே அவரது பெயரில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைந்திருப்பது பொருத்தமானது.

 மருத்துவமனை அமைக்க விரும்பினால், ஏற்கெனவே இயங்கி வரும் குழந்தைகள் மருத்துவமனையை மேம்படுத்தலாம். திருமழிசையில் ரூ. 2,160 கோடியில் அமைய உள்ள துணை நகரத்திலோ அல்லது தமிழகத்தின் பிற நகரங்களிலோ புதிதாக மருத்துவக் கல்லூரியுடன் கூடிய குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கலாம்.
 கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது என்பதற்காகவே இதை மாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறுவது இயற்கை. முந்தைய ஆட்சியின் திட்டங்களை மாற்றுவதன் மூலம் மக்களின் பணம்தான் விரயமாகிறது.

 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதைப் பார்க்க வேண்டும். வேண்டுமானால் இந்த நூலகத்தை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தலாம். கோயம்பேடு பேருந்து நிலையம் இரண்டு ஆட்சிகளிலும் நிறைவேற்றப்பட்ட திட்டமாகும். எனவே, மக்கள் நலன் கருதி கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.

முடிவைக் கைவிட தலைவர்கள் வலியுறுத்தல்
அண்ணா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றும் முடிவை முதல்வர் ஜெயலலிதா கைவிடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.  இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர்கள் வெளியிட்ட அறிக்கை:  ராமதாஸ்: நூலகத்தை மாற்றும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. அண்ணா நூலகம் மிகப்பெரிய தகவல் களஞ்சியமாகவும், சென்னையின் புதிய அடையாளமாகவும் உள்ளது. நூலகத்தை மாற்றிவிட்டு அங்கு குழந்தைகள் நல மருத்துவமனை அமைப்பது நடைமுறை சாத்தியமில்லாதது.


 செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை அகற்றிவிட்டு அங்கு மருத்துவமனை அமைக்கப்போவதாக கூறுவது அறிவார்ந்த செயல் இல்லை.  சென்னை எழும்பூரில் செயல்பட்டுவரும் குழந்தைகள் நல மருத்துவமனை கவனிப்பாரின்றி சீர்கெட்டு கிடக்கிறது. அதை முதலில் சீரமைக்க வேண்டும்.  எனவே, அரசு தன் முடிவைக் கைவிட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய அண்ணா நூலகம் தொடர்ந்து அதே இடத்தில் செயல்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  ஜி.ராமகிருஷ்ணன்: நூலகம் மாற்றம் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த நூலகத்தின் அவசியத்தைக் கருத்தில் கொள்ளாமல் திமுக ஆட்சியில் எழுப்பப்பட்ட நூலகம் என்ற காரணத்திற்காகவே அதிமுக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.  எனவே காழ்ப்பு அரசியல் அணுகுமுறைக்கு மாறாக ஆக்கப்பூர்வமான அரசியல் அணுகுமுறையை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும். இப்போது உள்ள இடத்திலேயே நூலகம் தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.  கி.வீரமணி: நூலகத்தை மாற்றும் முடிவு கண்டனத்துக்குரியது. கருணாநிதி மீதான வெறுப்பின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் அண்ணாவை அவமதிக்கும் செயலாகும். எனவே அரசு தன் முடிவைக் கைவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

First Published : 04 Nov 2011 02:22:14 AM IST
சென்னை, நவ. 3: அண்ணா நூலகத்தை இட மாற்றம் செய்யாமல் புதிதாக குழந்தைகள் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கவிஞர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 இது தொடர்பாக கவிஞர்கள் வியாழக்கிழமை விடுத்த கூட்டறிக்கை:

 அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டடம் நூலகத்துக்கென்றே வடிவமைக்கப்பட்டதாகும். ஆயிரக்கணக்கான வாசகர்களின் பயன்பாட்டில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களுள் ஒன்றாகும். அண்ணா நூற்றாண்டின் அடையாளமாகத் திகழ்கிற நூலகத்தை இடம் மாற்றுவதை பொதுமக்கள் பலரும் விரும்பவில்லை. பெரிய நூலகத்தை சிறிய இடத்தில் மாற்றியமைப்பது சமுத்திரத்தைச் சங்குக்குள் அடைக்கும் முயற்சியாகும்.
 குழந்தைகள் உயர் நல மருத்துவமனை என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால், மருத்துவமனையைக் கருத்தில் கொண்டே அதை வடிவமைப்பதுதான் சாலச் சிறந்தது. இருக்கும் சிறப்பைச் சிதைப்பதைவிட இல்லாத சிறப்பை உருவாக்குவதுதான் ஒரு சமுதாய முன்னேற்றத்தின் முதற்படியாகும். எனவே, அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் குழந்தைகள் உயர் நல மருத்துவமனையை புதிதாக அமைக்க வேண்டும் என்று கவிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 கவிஞர்கள் அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், இன்குலாப், மு. மேத்தா, கல்யாண்ஜி, அறிவுமதி, கலாப்ரியா, தமிழச்சி தங்கபாண்டியன், ம. முத்தையா, இந்திரன், தணிகைச்செல்வன், பா. விஜய், பழனிபாரதி, தாமரை, கபிலன், யுகபாரதி, விவேகா ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


சென்னை, நவ.4: சென்னையில் கோட்டூர் புரத்தில் இயங்கிவந்த அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதாக அரசு அறிவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பொதுநல மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்தார். மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்த நீதிபதி, இது தொடர்பாக தமிழக அரசு 6 வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.




     RSS of this page