Home / 2008 Events

2008 Events


 

விகடன் டாட் காம் டீம்

இல‌ங்கை‌‌யி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.பி. சு‌ட்டு‌க் கொலை

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் எம்.பி. தியாகராஜ மகேஸ்வரன், ஆங்கில புத்தாண்டையொட்டி, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள சிவன் கோ‌யிலுக்கு சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஃபிடல் ஓய்வு!

கியூபா‌வி‌ல் ஆயுத‌ப் புர‌ட்‌சி‌யி‌ன் மூல‌ம் ஆ‌ட்‌சியை‌க் கை‌ப்ப‌ற்‌றி, 49 ஆ‌ண்டுகளாக அ‌திப‌ர் பத‌வியை வ‌கி‌த்து வ‌ந்த ஃ‌பிட‌ல் கா‌ஸ்‌ட்ரோ தனது ஓ‌ய்வை பிப்ரவரி 19-ம் தேதி அ‌றி‌வி‌த்தா‌ர். அதைத் தொடர்ந்து, கியூபா அதிபராக ஃ‌பிட‌ல் கா‌ஸ்‌ட்ரோவின் சகோதரர் ரவு‌ல் கா‌ஸ்‌ட்ரோ பத‌வியே‌ற்றா‌ர்.

பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம்!

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சியை‌ச் சே‌ர்‌ந்த யூசு‌‌ப் ரஷா ‌கிலா‌னி மார்ச் 24-ல் தே‌ர்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். ஆகஸ்ட் 18-ல் பாகிஸ்தான் அ‌திப‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகுவதாக பர்வேஸ் முஷாரஃப் அறிவித்தார். அதையடுத்து, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிஃப் அலி ஜர்தாரி செப்டம்பர் 9-ல் முறைப்படி பாகிஸ்தான் அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.

நர்கீஸின் நாசவேலையும், சீனாவை உலுக்கிய பூகம்பமும்!

மியான்மரில் ஏப்ரல் இறுதியில் அடித்த நர்கீஸ் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தாண்டியது என அந்நாட்டு அரசு மே முதல் வாரத்தில் அறிவித்தது. உலக அளவில் 2008-ல் ஏற்பட்ட பேரிடர்களில் மியான்மர் முன்னிலை வகிக்க காரணமானது, இந்த நர்கீஸ் புயல்.

சீனாவில் மே 12-ந் தேதியன்று பயங்கர பூகம்பத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமான மாணவர்கள் உயிரோடு புதைந்த கொடுமை உலகை உலுக்கியது. பூகம்பத்துக்கு பிறகு ஏற்பட்ட புயல், மழையால் மீட்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டது. 2008 பேரிடர் சம்பவங்களில் இது குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தது நேபாள மன்னராட்சி!

நேபாளத்தில் ஏப்ரல் மாதம் நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாவோயிஸ்ட் கட்சியின் முதல் கூட்டம் தலைநகர் காத்மண்டுவில் மே 28-ல் நடைபேற்றது. மன்னராட்சியை அகற்ற இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜூலை மூன்றாவது வாரத்தில், நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் பரன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், நேபாள நா‌ட்டி‌ன் ‌பிரதமராக மாவோ‌‌யி‌‌ஸ்‌ட் தலைவ‌ர் பு‌ஷ்ப கம‌ல் தா‌ல் எ‌ன்ற ‌பிரச‌ண்டா ஆகஸ்ட் 18-ல் பதவியேற்றுக் கொண்டார்.

இந்திய தூதரகத்தை குறிவைத்து தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜூலை 7-ல் உள்துறை அமைச்சகம் அருகே உள்ள இந்திய தூதரகத்தை குறிவைத்து தற்கொலைப்படை பயங்கரவாதிகள் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட சுமார் 50 பேர் பலியாகினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியா - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்

இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்துக்கான முட்டுக்கட்டைகள் அனைத்தும் விலகின. இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உறுதுணைபுரியும் வகையில், அணுசக்தி தொழில்நுட்ப வணிக நாடுகளிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் விலக்கை என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம் இருந்து செப்டம்பர் 6-ம் தேதி இந்தியா பெற்றது.

அதன்பின், இந்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த வ‌ழிவகு‌க்கு‌ம் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்‌துக்கு அமெ‌ரி‌க்க சென‌ட் சபை அக்டோபர் முதல் வாரத்தில் ஒ‌ப்புத‌‌ல் அ‌ளி‌த்தது. அதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸும்ம் அக்டோபர் 11-ம் தேதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தில் ஜூலை 22-ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி பெற்றதால், அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்துவது நூறு சதவிகிம் உறுதியானது.

பொருளாதார நெருக்கடி!

அமெரிக்காவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களான அமெரிக்கன் வங்கி, லீமேன் பிரதர்ஸ், ஏஐஜி, வாஷிங்டன் முயூச்சுவல்ஸ், ஃபிரெட்டி மே, ஃபேன்னி மா ஆகியன திவாலாக... அவற்றை மீட்க அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு 700 பில்லியனை டாலரை ஒதுக்கியது.

ஆயினும், அங்கே தொடங்கிய பொருளாதார நெருக்கடியின் உலகின் பல்வேறு நாடுகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக ஆசிய நாடுகளை வெகுவாக பாதித்தது.

ஒபாமா வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா மகத்தான வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையுடன் வரலாற்று நிகழ்வுக்கு வித்திட்டார், ஒபாமா. அமெரிக்கா மட்டுமின்றி, ஒட்டு மொத்த உலக நாடுகளும் கவனித்த, வியந்த ஒரு நிகழ்வாகவே இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தல் இருந்தது.

சரியான 'குறி'யும் கிரேட் எஸ்கேப்பும்!

2008-ம் ஆண்டு நிறைவில் உலகம் முழுவதும் இன்டெர்நெட்டில் பகிரப்பட்ட வீடியோ, புகைப்பட காட்சிகள், ஜோக்குகள்... என்றால், அது டிசம்பர் 15-ல் அமெரிக்க அதிபர் புஷ் மீதான ஷூ வீச்சுதான்!

ஈராக் தலைநகர் பாக்தாத் வந்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எகிப்தைச் சேர்ந்த டிவி பத்திரிகையாளர் முன்டஸார் அல் - சைதி ஒருவர் தனது இரு ஷூக்களையும் சரமாரியாக வீசி எறிந்தார். ஆனால், சாதுர்யமாக கனநொடியில் சுதாரித்துக் கொண்டு எஸ்கேப் ஆனார், புஷ்.

அதைத் தொடர்ந்து பாராட்டு மழையில் நனைக்கப்பட்டார், சைதி. அல்-சைதியை மலேசிய வெளியுறவு அமைச்சர் ரெய்ஸ் யாடின் பகிரங்கமாகவே பாராட்டியது ஹைலைட். பென்ஸ் கார், ரொக்கப் பரிசு... என பரிசுகள் குவியத் தொடங்கிய நிலையில் தனது பெண்ணையே சைதிக்கு மணம் முடித்துக் கொடுக்க முன்வந்தார் எகிப்தியர் ஒருவர்.


விகடன் டாட் காம் டீம்

முடிவில்லா பாதை..!

ஜனவரி 30 : சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மனு தாக்கல் செய்வதற்காக மத்திய அரசுக்கு மேலும் ஒரு மாத கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிப்ரவரி 28: சேது சமு‌த்‌திர‌‌ ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கு வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள தடையை ‌வில‌க்க‌க் கோ‌ரி, உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்வத‌ற்காகு 90 பக்க அளவிலான மனுவை ம‌த்‌திய அரசு தயாரித்தது. அந்த மனுவிற்கு ம‌த்‌திய அமை‌ச்சரவை‌‌யி‌ன் அர‌சிய‌ல் ‌விவகார‌ங்களு‌க்கான குழு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்தது.

பிப்ரவரி 29 : மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ' சேது சமுத்திர திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை 6-க்கு பதிலாக மாற்றுப் பாதை தேர்வு செய்வது சாத்தியமில்லை. இத்திட்டம் நிறைவேற்றப்படும் பகுதியில் உள்ள நிலத்திட்டு 'ராமர் பாலம்' என்று உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் குழு கூறியுள்ளது. இது இயற்கையாக உருவான மணல் திட்டுக்களே,' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் சர்ச்சைகள் மேலும் வலுவாகத் தொடங்கின.

ஏப்ரல் 15 : சேது திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ராமர் பாலம் என்று கூறப்படும் கடலில் மூழ்கியுள்ள நிலத்திட்டை ஒரு வழிபாட்டுத் தலம் என்று யார் கூறியது? நடுக்கடலிற்குச் சென்று அதனை யார் வழிபடுகிறார்கள்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மே 8 : சேது சமுத்திர திட்டப் பகுதியில் உள்ள நிலத்திட்டுக்கள் ராமர் பாலம்தானா என்பதைக் கண்டறிய தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தி, அதனை புராதன சின்னமாக அறிவிக்கும் சாத்தியக் கூறு குறித்து ஆலோசித்திட வேண்டும் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

ஜூலை 23 : இந்தத் திட்டத்தை ஏன் மாற்றுப் பாதையில் நிறைவேற்ற முயற்சிக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஜூலை 29 : ராம‌ர் சேது என‌ப்படு‌கிற மண‌ல் ‌தி‌ட்டு‌க்களை தேசியச் ‌சி‌ன்னமாக அ‌றி‌வி‌ப்பத‌ற்கு உரிய அடி‌ப்படை ஏது‌மி‌ல்லை எ‌ன்று உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்தது.

ஜூலை 30 : சேது‌ சமு‌த்‌திர‌ ‌தி‌ட்ட‌த்தை மா‌ற்று‌ப் பாதை‌யி‌ல் ‌நிறைவே‌ற்றும் சாத்தியம் உள்ளதா என்பதை பரிசீலிக்குமாறு அளித்த ஆலோசனையின் அடிப்படையில் ஆய்வை மேற்கொள்ள ஆறு பே‌ர் கொ‌ண்ட நிபுணர் குழு‌வினை ம‌த்‌திய அரசு அமை‌த்து‌‌ள்ளது என்று உச்ச நீதிமன்றத்திடம் தெர்விக்கப்பட்டது. இந்த நிபுணர் குழு‌க்கு தலைமை வகிக்கும் பொறுப்பு, டாடா எ‌ரிச‌க்‌தி ஆரா‌ய்‌ச்‌சி ‌நிறுவன‌த்‌தி‌ன் தலைமை இய‌க்குந‌ர் முனைவர் ஆ‌ர்.கே.ப‌ச்செள‌ரிக்கு அளிக்கப்பட்டது.

27% இடஒதுக்கீடு!

'ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் சட்டம் செல்லும். எ‌னினு‌ம் இட ஒது‌க்‌கீ‌டு வழ‌ங்கு‌ம் போது சமுதாய‌த்‌திலு‌ம் பொருளாதார‌த்‌திலு‌ம் மு‌ன்னே‌றியவ‌ர்களை கிர‌ீ‌மி லேய‌ரை த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்றும் உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 10-ம் தேதி அறிவித்தது.

அக்னி, பிருத்வி, அஸ்த்ரா வெற்றி!

மே 7 : மூன்று ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் அதிகமான தரை இலக்குகளை சாதாரண மற்றும் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கவல்ல இந்தியாவின் அக்னி 3 சோதனை முழு வெற்றி அடைந்தது.

மே 26 : 150 முதல் 250 கிலோ மீட்டர் வரையிலான தரை இலக்குகளை தாக்கக் கூடியதும், சுமார் 1000 கிலோ கிராம் எடை வரையிலும் வெடிபொருட்களை தாங்கிச் செல்ல வல்லதுமான பிருதிவி ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்தது.

செப். 13 : சூப்பர் சானிக் வேகத்தில் வரும் விமானங்களையும், அதிவேக விண் இலக்குகளையும் தாக்கி அழிக்கவல்ல 'அஸ்த்ரா' ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

குண்டுவெடிப்புகள்..!

மே 13 : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 8 இடங்களில் நட‌ந்த தொட‌ர்‌ குண்டுவெடி‌ப்‌பி‌ல் 65 பேர் பலியாகினர்; 150 காயமடைந்தனர்.

ஜூலை 25 : பெ‌ங்களூ‌‌ரு‌வி‌ல் அடு‌த்தடு‌த்து 9 இட‌ங்க‌ளி‌ல் நட‌ந்த கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌‌ல் 2 பே‌ர் ப‌லியாகினர்; 12 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

ஜூலை 26 : குஜரா‌த் மா‌நில‌ம் அகமதாபா‌த்‌தி‌ல் 12-க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட இட‌ங்க‌ளி‌ல் அடு‌த்தடு‌த்து கு‌ண்டுக‌ள் வெடி‌த்தன. இ‌தி‌ல் 30 பேர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

செப். 13 : டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பில் 24 பேர் கொல்லப்பட்டனர்; 100-க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.

செ‌ப். 29: மாலேகா‌ன் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 6 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

அக்.30 : அசா‌மி‌ல் தொட‌ர் குண்டு வெடி‌ப்புகளில் 70 பேர் உயிரிழந்தனர்.

குஜ்ஜார் பிரச்சனை!

தங்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி ராஜஸ்தான் மா‌நிலத்தின் குஜ்ஜார் இனத்தவர் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இந்த விவகாரம் பூதாகரமானது. இறுதியில் இடஒதுக்கீட்டில் மாறுதல் செய்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தார், முதல்வர் வசுந்தரா ராஜே. ஆனால், இந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழந்தற்கு, குஜ்ஜார் இனப் பிரச்சனையும் ஒரு காரணமாக அமைந்தது.

அம‌ர்நா‌த் கோ‌வி‌ல் ‌நில விவகாரம் + ஒரிஸ்ஸா கலவரம்

அம‌ர்நா‌த் குகை‌க் கோ‌யி‌ல் வா‌ரிய‌த்‌தி‌ற்கு 39.88 ஹெ‌க்டே‌ர் வன‌த்துறை ‌நில‌‌த்தை மா‌ற்‌றி‌த் தந்தால் பிரச்சனைகள் வெடித்ததைத் தொடர்ந்து, அந்த ஆணையை ஜூலை 1-ல் ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் அரசு ர‌த்து செ‌ய்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல முறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இதையும் மீறி வன்முறை வெடித்ததில் ஆகஸ்ட் 12-ல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர். இறுதியில் ஸ்ரீ அம‌ர்நா‌த் ச‌ங்கா‌ர்‌ஷ் ச‌மி‌தி அமை‌ப்‌பி‌ற்கு‌ம், ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ர் அர‌சி‌ற்கு‌ம் இடை‌யி‌‌ல் நட‌ந்த பேச்சுவார்த்தையால் நிலைமை சீரானது.

ஒரிஸ்ஸா மாநிலத்தில் விஸ்வ ஹிந்து பரிட்ஷித் அமைப்பின் முக்கியத் தலைவர் ஸ்வாமி லட்சுமானந்த சரசுவதி ஆகஸ்ட் 23-ல் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். அதன் பின்பு 25-ம் தேதி அங்கு நடந்த கவலரங்களில் தேவாலயங்கள் பலவற்றுக்கும் தீவைக்கப்பட்டன. கன்னியாஸ்திரி ஒருவர் பலியானர். இதைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்தன.

பண மழையில் பாராளுமன்றமும்; காங்கிரஸ் அரசின் வெற்றியும்!

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் ஜூலை 22-ல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானத்தின் போது, ம‌த்‌திய அர‌சி‌ற்கு ஆதரவாக வா‌க்க‌ளி‌க்கக் கோ‌ரி சமா‌ஜ்வா‌தி க‌ட்‌சி‌யி‌ன‌ர் த‌ங்களு‌க்கு ல‌ஞ்சமாக‌க் கொடு‌த்ததாக‌க் கூ‌றி, ம‌க்களவை‌யி‌ன் மைய‌த்‌தி‌ல் பா.ஜ.க. எ‌ம்‌.பி.க்க‌‌ள் ஆ‌யிர‌ம் ரூபா‌ய் நோ‌ட்டு‌க் க‌ட்டு‌க்களை‌க் கொ‌ட்டியதா‌ல் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது.

தனது தலைமையிலான அமைச்சரவையின் மீது நம்பிக்கை கோரி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது உறுதியானது.

சந்திராயன் வெற்றி!

சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ - இந்திய விண்வெளி ஆய்வு மையம் தயாரித்த 'சந்திராயன்-1' ஆளில்லா விண்கலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 22 காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர், நிலவின் மேற்பரப்பை படமெடுக்கத் தொடங்கிய சந்திராயனின் வெற்றிப் பயணம் உலக நாடுகளையே வியப்பில் ஆழ்த்தியது.

'சந்திராயன் 1' வெற்றியைத் தொடர்ந்து டிசம்பர் இறுதியில் டெல்லியில் நடந்த பாராட்டு விழா ஒன்றில், " சந்திராயன் -2 விண்கலத்திற்கான வடிவமைப்பு தயார் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் மாதவன் நாயர் தெரிவித்தார்.

மும்பை 26/11

மும்பையில் தாஜ் ஓட்டல், ஒபாராய் ஓட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாதிகள் நவம்பர் 26 தொடங்கி மூன்று நாட்கள் நடத்திய சம்பவம், இந்தியாவையே உலுக்கியது. உலகின் ஒட்டுமொத்த கவனமும் இந்தியா மீது இருந்தது. இந்தத் தாக்குதல்களில் 195 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனான அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டான். தான் ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி என அவனே ஒப்புக்கொண்ட பிறகும், பாகிஸ்தான் மறுத்தது. பாகிஸ்தான் மீது எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், போர் தீர்வாகாது என்று இந்தியா மறுத்தது. ஆயினும், பதற்றம் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

மும்பை தாக்குதலின் எதிரொலியாக, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் நீக்கப்பட்டார். அந்தப் பொறுப்பு ப.சிதம்பரத்திடம் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் பு‌திய முத‌ல்வராக அசோ‌‌க் சவா‌ன் ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டார்.

பயங்கரவாதத்தை ஒடுக்க தேசிய புலனாய்வு முகமையை ஏற்படுத்தவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் டிசம்பர் 18-ல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மும்பை 26/11-ன் தாக்கம், 2008 ஆண்டு முடியும் வரை முடிவுறாமல் இருந்தது!

ஐந்து மாநில தேர்தல்!

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்பட்ட டிசம்பரில் முடிவு வெளியிடப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தலில் எதிர்பாராத முடிவுகள் வந்தன.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ம், ச‌த்‌தீ‌ஸ்க‌ர் ஆகிய மாநிலங்களைத் தக்கவைத்த பாரதிய ஜனதா கட்சி, ராஜஸ்தான் மாநிலத்தை காங்கிரஸிடம் பறிகொடுத்தது.

விலைவாசி, பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மெத்தனப் போக்கு என்றெல்லாம பாதக நிலைகள் அடுக்கப்பட்டாலும் ராஜஸ்தான், டெல்லி, மிசோராம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வெற்றியை நாட்டி, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியது காங்கிரஸ்!


விகடன் டாட் காம் டீம்

ஜல்லிக்கட்டு : தடையும் தளர்வும்!

த‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌வீர ‌விளையா‌ட்டான ஜ‌ல்‌‌லி‌க்க‌ட்டு போ‌ட்டிகளுக்கு ஜனவரி 11-ல் உ‌‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை ‌வி‌தி‌த்து உ‌த்தர‌வி‌ட்டது.முன்னாள் மத்திய அமைச்சரும், பிராணிகள் நல வாரிய உறுப்பினருமான மேனகா காந்தி உள்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தடை கோரி அளித்த மனுவில், 'ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் மாடுகள் வதைக்கப்படுவதோடு, அவற்றுக்குப் போதை மருந்துகள் அளிக்கப்படுவதாகவும், மாடு பிடிப்போருக்கும், பார்வையாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து, இந்த தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 15-ல் விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்சால் ஆகியோர் கொண்ட முதலாம் அமர்வு, தமிழக அரசின் முழுமையான கண்காணிப்புடன், முழு பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி அளித்தது.

தை 1-ல் தமிழ்ப் புத்தாண்டு!

தைத் திங்கள் முதல் நாளையே தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட த‌மிழக அரசு முடிவு செ‌ய்துள்ளதாக, ஜனவரி 23 ஆம் தேதி சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா நிகழ்த்திய உரை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதற்கான சட்ட மசோதாவை முதல்வர் கருணாநிதி ஜனவரி 29-ம் தேதி தாக்கல் செய்தார்.

அதன்பின், தை முத‌ல் நாளை த‌மி‌‌ழ் பு‌த்தா‌ண்டாக ‌அ‌றி‌வி‌க்கு‌ம் சட்ட மசோதா ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் பிப்ரவரி முதல் தேதியில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, 'தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும் என செப்டம்பர் இறுதியில் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

ஒகேனக்கல் பிரச்னை

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பா‌ட்டு‌க்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், ரூ.1330 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட‌த்து‌க்கு முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி, பிப்ரவரி 26-ல் அடிக்கல் நாட்டினா‌ர்.

இந்தத் திட்டத்துக்கு கர்நாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்தைத் தொடர்ந்து, ஒகேனக்கல் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கர்நாடகம் கேட்டுக் கொண்டது. இதனிடையே, பல்வேறு அமைப்புகளும் இப்பிரச்னையில் களமிறங்கின. பெ‌ங்களூரு‌வி‌ல் த‌‌மி‌ழ்‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள் ஓடு‌ம் ‌திரையர‌ங்குகளை க‌ன்னட அமை‌ப்‌பின‌ர் அடி‌த்து நொறு‌க்‌கின‌ர்.

அதன் தொடர்ச்சியாக, கன்னட அமைப்பினரை க‌ண்டி‌த்து ஏப்ரல் 4-ம் தேதி செ‌ன்னை சேப்பாக்கத்தில் தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதில் ரஜினியின் ' உதைக்க வேண்டாமா' பேச்சு சர்ச்சையைக் கிளப்பி, 'குசேலன்' வெளியான தருணத்தில் கன்னடர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதன்பின், 'கர்நாடக மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. தற்போது அங்கே முடிவெடுக்கக் கூடிய அளவிற்கு ஓர் அரசு இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு இதனை ஒத்திவைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம்,' என்றெல்லாம் எப்ரல் மாதம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்த பிறகுதான் ஒகேனக்கல் பிரச்சனை ஓய்ந்தது.

தி.மு.க. - பா.ம.க. கூட்டணி முறிவும், காடுவெட்டி குரு கைதும்!

தி.மு.க. தலைமையைப் பற்றி பா.ம.க.வைச் சேர்ந்த குரு பேசிய வன்முறைப் பேச்சிற்காக அக்கட்சியின் தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையிலும், தி.மு.க.வினரை அப்படிப் பேசியது தவறு, அப்படிப் பேசக் கூடாது என்று கூறி, அதற்காக மன்னிப்போ வருத்தமோ கேட்காத நிலையிலும், தொடர்ந்து இப்படி கேவலப்படுத்துபவர்களோடு உறவை நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து செயல்பட முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது,' என்று தி.மு.க. உயர் நிலைக் குழுவில் ஜூன் 17-ல் நிறைவெற்றப்பட்ட தீர்மானத்தை கருணாநிதி படித்துக் காட்டினார். அதன்பின், பா.ம.க.வுடன் உறவை தொடரமுடியாது என்ற தி.மு.க.வின் முடிவு எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை என்று கூலாகச் சொல்லி உறவினை முறித்துக்கொண்டா பா.ம.க.நிறுவன‌ர் ராமதாஸ்.

கொலை முய‌ற்‌சி வழ‌க்‌கி‌ல் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு ஜூலை 5-ல் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், நவம்பர் 27-ல் காடுவெ‌ட்டி குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செ‌ய்த நடவடி‌க்கையை ர‌த்து செ‌ய்வதாக த‌மிழக அரசு அ‌றி‌‌வி‌த்தது!

இருண்ட நாட்கள்!

தமிழக மக்களுக்கு திமுக அரசு மீது அதிருப்தி ஏற்படுவதற்கான வெளிப்படையான காரணங்களில் ஒன்று... மின்வெட்டு! சென்னையில் தினமும் ஒருமணி நேர‌மு‌ம், ம‌ற்ற நகர‌ங்க‌ளி‌ல் ‌தினமு‌ம் இர‌ண்டு ம‌ணி நேரமு‌ம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று ‌மி‌ன்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஜூலை 18-ல் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவ்வப்போது மின்வெட்டை தளர்வு செய்வதும், மீண்டும் அமல்படுத்துவதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிமுக, பாமக, தேமுதிக, இடதுசாரிகள், சமத்துவ மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகளும் மின்வெட்டைக் கண்டித்து வெவ்வேறு நாட்களில் ஆர்பாட்டங்கள் நடத்தி கவனத்தை ஈர்த்தனர்.

முடிவில்லா மீனவர் பிரச்சனை..!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை ஜனவரி 22-ல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அதன் தொடர்ச்சியாக, 'ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்' என்ற தலைப்பை ஏந்திக் கொண்டு அவ்வப்போது செய்திகள் வரத் தொடங்கின. இதன் உச்சமாக, நாகை அருகே ‌நடு‌க்கட‌லி‌ல் மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த மீனவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரை ‌இலங்கை கட‌ற்படை‌யின‌ர் து‌ப்‌பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ன்றன‌ர்.

அதன்பின், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஒருமித்து குரல் கொடுக்கத் தொடங்கினர். ராமேஸ்வரம் மீனவர்களும் போராட்டங்களை நடத்தினர். த‌மிழக ‌‌மீனவ‌ர்க‌ள் மீது தொட‌ர்‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் இலங்கை கட‌ற்படையை க‌ண்டி‌த்து ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் ஜூலை 19- ல் நடைபெ‌ற்ற உ‌ண்ணா‌விரத‌த்‌தி‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் ல‌ட்ச‌‌க்கண‌க்கானோ‌ர் ப‌ங்கே‌ற்றன‌ர்.

தமிழக மீனவர்க‌ள் ‌மீது இலங்கைக் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குவதும், சிறைப்பிடித்து மனிதநேயமற்ற முறையில் நட‌ந்து கொ‌ள்ளு‌‌ம் இ‌ச்செயலு‌க்கு மத்திய அரசு உடனடியாக நீடித்த நிலையான தீர்வொன்றை எட்டி, நடைமுறைப்படுத்திட வே‌ண்டுமெ‌ன்று அக்டோபர் 14-ல் அனை‌‌த்து‌க்க‌ட்‌சி கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌தீ‌ர்மான‌ம் நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசி!

இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்தைப் போலவே தமிழக மக்களை கவனிக்க வைத்த திமுக அரசின் திட்டம்தான் ரூ.1-க்கு ஒரு கிலோ அரசி. அ‌றிஞ‌ர் அ‌ண்ணா‌ நூ‌ற்றா‌ண்டு ‌விழாயொ‌ட்டி நியாய விலை‌க்கடைக‌ளி‌ல் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி செப்டம்பர் 15-ம் தேதியன்று தொடங்கி வை‌த்தா‌ர்.

ஜனவரியில் நடைபெறவுள்ள திருமங்கலம் இடைத் தேர்தலாக இருக்கட்டும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரவுள்ள மக்களவைத் தேர்தலாக இருக்கட்டும்... திமுக முன்வைக்கப்படும் சாதனைப் பட்டியலில் ரூ.1-க்கு ஒரு கிலோ அரிசியும் இடம்பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

2008-ஐ ஆக்கிரமித்த இலங்கைத் தமிழர் பிரச்சனை

2008-ம் ஆண்டின் பிந்தைய ஆறு மாத காலத்தில் நாளேடுகளின் தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்த செய்தி என்றால், அது இலங்கை தமிழர் பிரச்சனையும், இதற்கான தமிழக அரசியல் தலைவர்களின் குரல்களுமே!

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தமிழக அரசியல் தலைவர்கள் தீவிரமாக குரல் கொடுக்கத் தொடங்கிய தருணத்தில், இலங்கைத் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌இலங்கை ராணுவ‌த்தை க‌ண்டி‌த்து கா‌ந்‌தி ஜெய‌ந்‌தி நாளான அ‌க்டோப‌ர் 2-‌‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று செப்டம்பர் 20-ல் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டி‌ய‌ன் அறிவித்தார். அந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு வெகுவாக இருந்தது.

இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவக் கூடாது; இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை அந்நாட்டு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்; இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு நிர்பந்திக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தி வந்தன.

சென்னையில் அக்டோபர் 14-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் செய்துவரும் வன்முறைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்தனர். அதன்பின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தூதராக சென்னைக்கு அக்டோபர் இறுதியில் வந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, முதல்வர் கருணாந்தியைச் சந்தித்துப் பேசினார். தன்னைச் சந்தித்து விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, பதவி விலகல் முடிவை தள்ளிவைப்பதாகத் தான் அவரிடம் உறுதியளித்தாகக் கருணாநிதி கூறினார். இதனால், பதவி விலகல் விவகாரம் முடிவுக்கு வந்தது.

பின்னர், இல‌ங்கை‌யி‌ல் உடனடியாக போரை நிறு‌த்த அ‌ந்த நா‌ட்டு அரசை ம‌த்‌திய அரசு வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ பிரதம‌ரை ச‌ந்‌தி‌த்து முதல்வர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் அனை‌த்து‌க்க‌ட்‌சி தலைவ‌ர்க‌ள் டெல்லியில் டிசம்பர் 4-ல் வலியுறுத்தினர்.

அப்போது, இலங்கையில் போ‌ர் நிறு‌த்த‌ம் செய்யவும், இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தை துவக்குவதற்கு ஏற்பாடு செய்யவும் வலியுறுத்த இ‌ந்‌‌திய வெளியுறவு‌த்துறை அமை‌ச்ச‌ர் பிரணா‌ப் முக‌ர்‌ஜி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை ச‌ந்‌தி‌த்து பேசுவா‌ர் எ‌ன்று‌ முதல்வர் கருணாநிதியிடம் பிரதமர் உறுதியளித்தார்.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, தமிழ் திரையுலகினரும் ஒருசேர குரல் எழுப்பினர். அக்டோபர் 19-ல் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரையுலகினர் போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, சென்னை நடிகர் சங்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில், திரட்டப்பட்ட சுமார் 45 லட்ச ரூபாய், இலங்கை தமிழர் நிவாரண நிதிக்காக முதல்வர் கருணாநிதியிடம் அளிக்கப்பட்டது.

கவனத்துக்குரிய கைது நடவடிக்கைகள்!

இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்துப் பேசுகையில் பி‌‌ரி‌வினையை தூ‌ண்டியதாகக் கூ‌‌றி, மதிமுக பொது‌ச் செயல‌ர் வைகோவும், அக்கட்சியின் அவைத் தலைவர் கண்ணப்பனும் அக்டோபர் 23-ல் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வைகோ கைது நடவடிக்கையில் அரசியலும், இயக்குனர்கள் கைது நடவடிக்கைகளில் நிர்பந்தகளும் இருந்ததாக தகவல்கள்.

சீமான் மீண்டும் டிசம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டது, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் - விடுதலைச்சிறுத்தைகள் இடையே மோதலை உண்டாக்கும் அளவுக்கு பிரதிபலித்தது.

இலங்கைப் பிரச்சனையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதற்காக, திரைப்பட இயக்குனர் சீமானுடன், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பெ.மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

"ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்தும், ராஜீவ் காந்தி படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று சீமான் புகழ்பாடியுள்ளதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்," என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியதைத் தொடர்ந்தே கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டக்கல்லூரி வன்முறை

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் இரு பிரிவினரிடையே நவம்பரில் நடந்த கடுமையான வன்முறையும், அதையொட்டி நிகழ்ந்த சம்பவங்களும் தமிழகத்தை மட்டுமின்றி, நாட்டையே உலுக்கின.

சுவரொட்டி ஒட்டுவதில் இரு தரப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட பிரச்னை, சாதிவெறியாக மாறி கல்லூரி வளாகத்துக்குள்ளேயே கத்தி, உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி என அனைத்துவிதமான ஆயுதங்களையும் கொண்டு தாக்கிக் கொள்ள... தமிழகமே நிலைகுலைந்துப் போனது.

போர்க்களமாக மாறியிருந்த அந்தக் கல்லூரி வளாகத்தில் ஆறுமுகம் என்ற மாணவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு தரப்பினர் கண்மூடித் தாக்குதலில் ஈடுபட்டனர். அந்த மாணவனைக் காப்பற்றுவதற்காக வந்த பாரதி கண்ணன் என்ற மாணவனும் கொலைவெறித் தாக்குதலில் சிக்கினார். இவற்றையெல்லாம் நேரில் பார்த்துக் கொண்டிருந்தது காவல்துறை.

இறுதியில், மாணவர்கள் கைது, அதிகாரிகள் மாற்றம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு விவகாரம் பல பாதக விளைவுகளை ஏற்படுத்திவிடாமால் பார்த்துக்கொண்டது, தமிழக அரசு.


விகடன் டாட் காம் டீம்

சர்ச்சைத் தொடர்!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஜனவரியில் நடந்த டெஸ்ட் தொடர் சர்ச்சைகளின் பிள்ளையார் சுழியாகவே இருந்தது. தவறான அம்பயரிங்கால் ப‌க்ன‌ர் ‌நீ‌க்க‌ம், ஹ‌ர்பஜ‌ன் ‌மீதான இனவெ‌றி கு‌ற்ற‌ச்சாட்டு என ப‌ல்வேறு ச‌ர்‌‌ச்சை‌களு‌க்கு நடுவே ஆஸ்திரெலிய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் மிகவும் போராடி வென்றது. எனினும், பெர்த் டெஸ்டில் இந்தியா வென்றதன் மூலம் தொடர்ந்து 17 டெஸ்ட் போட்டிகள் வேற்றி பெற்று உலக சாதனை படைக்கும் ஆஸ்திரேலிய அணியின் கனவு தகர்க்கப்பட்டது. அன்று தொடங்கிய அடி, இந்த ஆண்டு இறுதி வரை ஆஸ்திரேலியாவை தொடர்ந்தது!

ஆஸி.க்கு முதல் அடி!

டெஸ்ட் தொடரை இழந்தாலும் ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி மார்ச் மாதம் உலக கிரிக்கெட் ரசிகர்களை வியப்புக்குள்ளாக்கியது இந்திய அணி. ஆஸ்திரேலிய மண்ணில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வெற்றி பெற்றது மைல்கல்லான நிகழ்வு.

ஹாட் கிரிக்கெட்!

உலக அளவில் 2008-ல் மிகுதியான கவனத்தைப் பெற்ற போட்டித் தொடர் என்றால், அது இந்தியன் பிரீமியர் லீக் டிவென்டி தொடர்தான். ஏப்ரல் 18-ல் தொடங்கி ஜூன் 1 வரை நடைபெற்றது. ஸ்ரீசாந்தை ஹர்பஜன் அறைந்த விவகாரம், கங்குலி - ஷென் வார்ன் உரசல், ஷாரூக்கின் ஓவர் பில்டப், பிரீத்தி ஜிந்தாவின் கட்டிப்பிடி வைத்தியம், சியர் லீடர்ஸ் என அழைக்கப்பட்ட மைதான குத்தாட்ட மங்கைகள் என பல்வேறு பரபரப்புகள். இறுதியில், தோனியின் சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது வார்னின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இந்தத் தொடரின் மூலம் ஸ்வப்னில் அஸ்னோட்கர், யூசுப் பதான், நீரஜ் படேல், ஆர்.ஜடேஜா, மன்ப்ரீத் கோனி, பத்ரிநாத் போன்ற இந்திய இளம் புயல்களின் சீற்றத்துக்கு வழிவகை செய்யப்பட்டது போற்றுதலுக்குரியது.

மெண்டிஸ் சுழற் புயல் தாக்குதல்!

ஜெயசூர்யாவின் அபாரமான ஆட்டத்தாலும், மெண்டிஸ் என்ற புதிய சுழற் புயலின் தாக்குதலாலும், ஜுலையில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது இலங்கை அணி. இந்திய அணியின் குறிப்பிடத்தக்க ஏமாற்றங்களில் இதுவும் ஒன்று.

மீண்டும் தோல்வி!

கொழும்பில் ஆகஸ்டில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது கும்ப்ளே தலைமையிலான இந்திய அணி. இதிலும், மெண்டிசின் பங்களிப்பு பிரதானமாக இருந்தது.

வாகை சூடிய தோனி அணி!

டெஸ்ட் தொடரை இழந்தாலும், இலங்கையில் ஒரு நாள் தொடரை முதன் முதலில் வென்று சாதனை படைத்தது இந்தியா. இதில், தோனி தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது.

மகத்தான எழுச்சி!

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக ஸ்ரீகாந்த் செப்டம்பரில் நியமிக்கப்பட்டார். அதன்பின், இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணியை நவம்பர் இரண்டாவது வாரத்தில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. இந்தியாவின் இந்த அபாரமான வெற்றி, ஆஸ்திரேலிய அணியை திக்குமுக்காடச் செய்தது.

சாதனை மேல் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்து, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அக்டோபர் 17-ல் மொஹாலியில் நடந்த போட்டியில் உலக சாதனை படைத்தார்.
மொஹாலி டெஸ்டில் முதல் நாளில் சச்சின் டெண்டுல்கர் 16 ரன்கள் எடுத்த போது, அவரது மொத்த ஸ்கோர் 11,955 ரன்கள் என்ற நிலையை அடைந்தும் இந்த சாதனை எட்டப்பட்டது. மொத்தம் 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, லாரா 11,953 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும். மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெறுமையையும் இந்த டெஸ்டிலேயே பெற்றார், சச்சின்.

இரு சகாப்தம்!


ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெல்லி நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அனில் கும்ளே நவம்பர் 2-ல் அறிவித்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில், கும்ப்ளேவின் பங்களிப்பு மகத்தானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளவர்களில் 3வது இடத்தில் உள்ள அனில் கும்ளே. 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், 35 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் கங்குலி ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் கேட்பனாக இருந்தவர் இவரே. அத்துடன், இந்தியாவுக்கு அதிக வெற்றிகள் பெற்று தந்த கேப்டன் என்ற பெருமையையும் கங்குலியைச் சாரும். 49 டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்திய கங்குலி, 21 வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார்.

அதிக ஒருநாள் போட்டிகளில் இந்திய கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார். மொத்தம் 146 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து, 76 வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார். மொத்தம் 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி (188 இன்னிங்ஸ்) 7,212 ரன்கள் குவித்துள்ளார். இதில், 16 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும். மொத்தம் 311 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி, 11,363 ரன்கள் குவித்துள்ளார்.

நசுக்கப்பட்ட இங்கிலாந்து!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2008 ஒரு வெற்றிகரமான ஆண்டாக திகழும் வகையில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர் மறக்க முடியாததாக அமைந்தது. ஒருநாள் போட்டித் தொடரில் 5-0 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் அணி தரவரிசைப் பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியது.


இந்திய டென்னிஸ் : வீழ்ச்சியும் எழுச்சியும்!

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை 2008-ல் மகத்தான சாதனை புரிவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி வரை இந்தியாவின் மகேஷ் பூபதி- சானியா மிர்சா இணை முன்னேறியது. இதனால், டென்னிஸ் தரவரிசையில் 29-வது இடத்துக்கு முன்னேறி, ஆசியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பினைப் பெற்றார். ஆனால், தொடர்ந்து வீழ்ச்சியினை சந்தித்து 2008-ன் இறுதியில் 100 இடத்துக்கு கீழே சரிந்தார். (விளம்பரங்களில் காட்டும் அக்கறை... பயிற்சியிலும் வேண்டும் என்பது டென்னிஸ் விமர்சகர்களின் கருத்து).

இந்தியன் எக்ஸ்பிரஸ் என்று அழைப்பது, இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இணை. ஆனால், இந்த ஆண்டிலும் இருவரும் இணைந்து விளையாடியது சொற்ப ஆட்டங்களிலேயேதான்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஆண்டு முழுவதுமே ஆதிக்கம் செலுத்தி வந்தார். செப்டம்பரில் நடந்த தாய்லாந்து ஒபன் சாம்பியன் பட்டம், அக்டோபரில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உள்ளரங்க சர்வதேச டென்னிஸ் இரட்டையர் சாம்பியன் பட்டம் உள்ளிட்டவற்றை வென்றார். சர்வதேச இரட்டையர் தரவரிசையில் 6-வது இடத்துக்கு முன்னேறியது ஹைலைட்.

செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய-ஜிம்பாப்வே இணையான லியாண்டர் பயஸ்-காரா பிளாக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்தத் தொடரில் ஆடவர் இரட்டையரிலும் இறுதி வரை முன்னேறினார் லியாண்டர் பயஸ். ஆனால், அமெரிக்க ஓபனை தவிர, பயஸ் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெறவில்லை.

ஒலிம்பிக்கில் இந்திய டென்னிஸ் வீரர், வீராங்கனைகள் சோபிக்காததது வருத்தத்துக்குரியது. பயஸ் - பூபதி இணை வெற்றி வாகை சூடாததற்கு, அவர்கள் இணைந்து உரிய அளவில் பயிற்சி மேற்கொள்ளாததே காரணம்.

சென்னை கண்டெடுத்த முத்து!

கேரம் விளையாட்டில் பிப்ரவரி 22-ல் உலக சாம்பியன் பட்டம் வென்றார், சென்னை வீராங்கனை இளவழகி. ஏழைத் தொழிலாளியின் மகளான இவர் அயராது உழைத்து சாதனை செய்ததற்குப் பிறகே கவனிக்கப்பட்டார். இவரது சாதனையை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ.10 லட்சம் பரிசளித்தது தமிழக அரசு. கேரம் விளையாட்டு மீது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்ததில் இளவழகியின் பங்களிப்பு மகத்தானது.

புடியாவுக்கு கெளரவம்!

வளர்ந்து வரும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் பாய்ச்சுங் புடியா, சர்வதேச நட்சத்திர வீரர்கள் ககா, ஸ்டீவ் கெராட், ஜியாலுங்ஜி பஃபோன், ருட் வான் நிட்டோர்லே உள்ளிட்டோர்களுடன் இணைந்து முனீச்சில் நடைபெற்ற நட்பு போட்டியில் ஜூலை 12-ல் பங்கேற்றார். கோல் 4 ஆப்பிரிக்கா திட்டத்துக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் புடியா ஒரு கோலையும் பதிவு செய்தார்.

தேசிய விளையாட்டின் வீழ்ச்சி!

ஒலிம்பிக்கில் எப்போதும் இந்திய மக்களுக்கு நம்பிக்கை தரும் விளையாட்டு என்றால், அது தேசிய விளையாட்டான ஹாக்கியே. ஆனால், 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் 'வரலாற்று சிறப்பு மிக்க' ஏமாற்றத்தைத் தந்தது இந்திய ஹாக்கி அணி. ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றான ஹாக்கியில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக புகழுடனும், பெருமையுடனும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஹாக்கி, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறக்கூட முடியாத ஒரு அவமானகரமான பின்னடைவை இம்முறைச் சந்தித்தது.

ஒலிம்பிக்... இந்திய 'தங்கமகன்' பிந்த்ரா!

பீஜிங் ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 11-ல் நடந்த ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபில் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றார்.

இதுவே, ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கப் பதக்கம். மேலும், இதுவரை பெற்றுள்ள தங்கப் பதங்கங்களில், இது 9-வது தங்கமாகும். எதிர்பாராத மகிழ்ச்சியால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திளைக்கச் செய்தது, அபினவ் பிந்த்ராவின் தவறாத 'குறி'!

மல்யுத்த மாவீரன் சுஷில்!

ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துக்கு ஆளாக்கிய பெருமை, மல்யுத்த வீரர் சுஷில் குமாரையே சாரும். ஆகஸ்ட் 20-ல் நடந்த மல்யுத்த போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்று தந்தார் அவர்.

ஒலிம்பிக் போட்டிகளில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கத்தை வென்று தந்த பெருமையும் சுஷில் குமாரையேச் சேரும். கடந்த 1952-ம் ஆண்டு ஹெல்சின்ஹி ஒலிம்பிக்கில் மல்யுத்த வீரர் கே.டி.ஜாதவ் வாயிலாக இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்தது நினைவுகூறத்தக்கது.

வெற்றி வீரன் விஜேந்தர்!

பீஜிங் ஒலிம்பிக்கில் 75 கிலோ மிடில் வெயிட் பிரிவு குத்துச்சண்டையின் அரையிறுதிப் போட்டி ஆகஸ்ட் 22-ல் நடைபெற்றது. இதில் போராடி தோல்வியுற்றார், இந்தியாவின் விஜேந்தர் குமார். எனினும், அவருக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.

ஒலிம்பிக் போட்டிகளில் மிகவும் கவனத்தைப் பெற்ற இந்திய வீரர்கள் என்றால், அது குத்துச்சண்டை வீரர்களே. அகில் குமார், ஜிதேந்தர் குமார் மற்றும் விஜேந்தர் குமார் ஆகிய மூவரும் காலிறுதிக்கு தகுதி பெற்றது அனைவரையும் வியப்புக்குள்ளானது.

டிசம்பரில் நடந்த சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பின் உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய வீரர்கள் அகில் குமார், லலித் அந்த்ரேஷ் லக்ரா, தினேஷ் குமார் மற்றும் ஜிதேந்தர் குமார் ஆகிய நால்வருக்குமே வெண்கலப் பதக்கம் வென்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

செஸ் கிங் ஆனந்த்!

ஜெ‌ர்ம‌னி‌யி‌ன் பா‌ன் நக‌ரி‌ல் அக்டோபரில் நட‌ந்த உலக ச‌ெ‌ஸ் சா‌ம்‌பிய‌ன்‌ஷி‌ப் போ‌ட்டி‌யி‌ல் இ‌ந்‌திய வீர‌ர்‌வி‌‌ஸ்வநாத‌ன் ஆ‌ன‌ந்‌த் 3-வது முறையாக சா‌ம்‌பிய‌ன் ப‌ட்டதை வெ‌ன்று‌ள்ளா‌ர். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாக வென்றிருப்பதால், தான் ஓர் ஒப்பற்ற செஸ் கிங் என்று நிரூபித்தார்.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற பில்போ கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடரில் கடைசி இடத்தையே பிடித்தார், ஆனந்த். இந்த பின்னடைவு, விளாடிமிர் கிராம்னிக்கிற்கு எதிரான உலக செஸ் சாம்பியன் போட்டியிலும் எதிரொலிக்கும் என செஸ் பண்டிதர்கள் சிலர் கருதினர்.

ஆனால், தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத ஆனந்த், நம்பிக்கையுடன் கிராம்னிக்கை எதிர்கொண்டார். தனது சாதுர்யமான ஆட்டத்தால் உலக சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாகக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

சாதனை சாய்னா !

2008-ம் ஆண்டின் சிறந்த வளரும் வீராங்கனையாக இந்தியாவின் சாய்னா நேவாலை டிசம்பரில் உலக பேட்மின்டன் சங்கம் தேர்ந்தெடுத்தது.

பீஜிங் ஒலிம்பிக்கில் காலிறுதி வரை எட்டி, தனது அசாத்திய திறனை வெளிப்படுத்திய சாயானா, அண்மையில் உலக பேட்மின்டன் தரவரிசையில் 10-வது இடத்தைப் பிடித்தார். உலகத் தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
அதேபோல் டிசம்பரில் கோலாலம்பூரில் நடந்த உலக சூப்பர் சீரிஸ் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறி சாதனை படைத்தார், சாய்னா! இவரை 2009 சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது.

பில்லியர்ட்ஸ் பிரபு!

உலக அளவில் இந்தியாவின் புகழை ஓங்கச் செய்து வரும் விளையாட்டு வீரர்களில் பங்கஜ் அத்வானிக்கு ஒரு சிறப்பிடம் உள்ளது.

இந்த 23 வயது இளைஞர், பெங்களூருவில் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎஸ்எப் உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், எட்டுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கீத் சேத்தியை தோற்கடித்து உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
2008-ல் மட்டும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் மொத்தம் 8 பட்டங்களைப் பெற்றிருப்பது மகத்தான சாதனையாகும்.




     RSS of this page