வெங்கட் சாமிநாதன் பக்கம்
venkatsuvaminathan.JPG
-------------------------------------------------------------------------------------------------
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்
எழுத்தாளர்கள்- 1!
- வெங்கட் சாமிநாதன் -
(1)
நவீன தமிழ் இலக்கியத்தில்
நிகழ்ந்துள்ள நாம் கொண்டாடும் எந்த மாற்றத்தையும் புதிய திருப்பங்களையும்
போல, சுதந்திர உணர்வின் கிளர்ச்சியும் அதன் போராட்ட வெளிப்பாடும் ஒரு
தொடர்ந்த இயக்கமாக வெளிப்படுவதை நாம் சுப்ரமண்ய பாரதியிலிருந்து தான்
ஆரம்பம் பெறுவதைக் காண்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால், இன்றைய தமிழ்
இலக்கியத்தின் வரலாறே பாரதியிடமிருந்து தான் தொடங்குகிறது. ஜி.சுப்பிரமணிய
ஐயர் என்னும் அந்நாளைய அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டக் காரருமான
ஜி.சுப்ரமணிய ஐயர் தன் ஆசிரியத்வத்தில் நடத்திவந்த தமிழிலேயே வெளிவந்த
முதல் தமிழ் செய்தி நாளிதழுமான சுதேசமித்திரனில் 1905-ல் உதவி ஆசிரியராக
வேலைக்கமர்வதே அன்றைய தேசிய அரசியல் களத்தில் குதிக்கும் காரியம் தான்.
அந்நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு தேசீய போராட்டத்தில் தன்னை
அர்ப்பணித்துக் கொள்வதென்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். ஆனால்
பாரதிக்கு விடுதலை என்பது நிறைய அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு கருத்து.
அவருக்கு விடுதலை என்பது அரசியல் விடுதலையோ பொருளாதார விடுதலை மட்டுமோ
இல்லை. அவரது சிந்தனையில் விடுதலை என்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து
விடுதலை, ஜாதி, மத
பேதங்களிலிருந்து விடுதலை,
வெற்றுச் சடங்குகளிலிருந்தும், காலம் கடந்த பழம் மரபுகளிலிருந்தும்
விடுதலை, உண்மையில்
சொல்லப்போனால், இன்று வரை நாம்
நமக்குள் வாதிட்டுக் கொண்டிருக்கும் ஆனால் அடையமுடியாது கனவு கண்டு
கொண்டிருக்கும் லக்ஷ¢யங்கள் கொண்ட கருத்தாக்கங்களுக்கான விடுதலை.
இவையெல்லாம் பற்றித்தான் அவன் கவிதைகள் பேசுகின்றன. ஒரு ஆவேச நிலையில்
பாரதி எழுதிக்குவித்துள்ள அத்தனை கதைகள் கட்டுரைகளும் பேசுவதும் இவை
பற்றித் தான். ருஷ்ய புரட்சி வெற்றியடைந்து, ஜார் அரசன் வீழ்ச்சியுற்றதைக்
கொண்டாடி வரவேற்று கவிதை எழுதிய முதல் கவிஞன், இந்திய துணைக்கண்டத்திலேயே
முதல்
கவிஞன் பாரதிதான் என்று நான்
நினைக்கிறேன். அதே சமயம் புரட்சிக்குப் பின் வந்த லெனினின் கம்யூனிஸ்ட
அரசு ருஷ்ய மக்களை அடக்கியாளக் கையாண்ட வன்முறைக் கொடுங்கோன்மையையும்
எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் இந்தியக் கவிஞனும் பாரதிதான் என்றும்
நான் நினைக்கிறேன். இதன் பிறகு பாரதி 1921-ல் இறந்த போது அவனுக்கு வயது
39. இரண்டு வருடங்களுக்கு முன் 1919-ல் ருஷ்யாவை அரசாள வந்த கம்யூனிஸ்ட்
கட்சித் தலைமையின் உண்மை குணத்தை அறிந்து கொள்ள ஐரோப்பிய அறிஞர்களுக்கும்
தத்துவ மேதைகளுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் எவ்வளவு காலம் பிடித்தது
என்பதை நான் சொல்லவேண்டாம். நீங்களே
கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.
இதையெல்லாம் நான் சொல்ல வந்த காரணம், பாரதியின் சிந்தனையில், விடுதலை
என்பது ஒரு
முழுமைபெற்ற கருத்தாக்கம் என்பதை
வலியுறுத்தத்தான். பாரதி மொழிபெயர்த்தவற்றிலிருந்து இரண்டே இரண்டு
படைப்புக்களைப் பற்றி மாத்திரம் குறிப்பாக எடுத்துக் காட்டிப் பின்
மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறேன். ஒன்று பங்கிம் சந்திரரின் வந்தேமாதரம்
என்னும் கீதம். இரண்டாவது, ஒரு காவியமாக விரிந்த பாஞ்சாலி சபதம்- இது
1912-ல் எழுதப்பட்டது. இது மகாபாரதக் கதை ஒன்றைத் திரும்பச் சொல்வதல்ல.
பாரதி அதைச் செய்ய வேண்டியதில்லை. இக்காவியத்தில், பாஞ்சாலி, பாரத
நாட்டையே, பாரதத் தாயை அடையாளப்படுத்துகிறாள். பாஞ்சாலியின் துகிலுரிதல்
பாரதம் அடிமைப் பட்டுக்கிடக்கும் நிலைக்கான படிமம் ஆகிறது. அவனது காவியம்
நாட்டின் பட்டி தொட்டிகளில் வாழும் கல்வியறிவற்ற மக்களையெல்லாம்
சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தில் இதை ஒரு நாடக வடிவில், கிராமிய
மெட்டுக்களில் எழுதிவைத்தான்.
பாரதியின் பாடல்கள் எல்லாம்
கிராமிய மெட்டுக்களிலும், கர்நாடக ராகங்களிலும் இசையமைக்கப்பட்டவை. அவை
அரசியல்
பொதுக்கூட்டங்களிலும், பண்டிகைக்
கூட்டங்களிலும், விழாக்களிலும், நாட்டுப்புற நாடக மேடைகளிலும்
பாடுவதற்கென்றே அமைந்தவை. அரசியல் கூட்டங்களிலும் பொது மேடைகளிலும்
பாரதியே கூட உரத்த குரலில் தன் பாட்டுக்களைப் பாடுவார். பிபின் சந்திர
பால் சென்னை வந்து மரீனா கடற்கரையில் பேசிய கூட்டத்தில் பாரதி தன் தேசீய
கீதங்களைப் பாடினார். அவருடைய பாடல்களை சிறு துண்டுப் பிரசுரங்களாக 15,000
பிரதிகள் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார் வசதி படைத்த ஒரு பெரிய
மனிதர். தான் கைது
செய்யப்படலாம் என்று தெரிந்ததும்,
பாரதி புதுச் சேரிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் அங்கு அரவிந்தரும்
வந்து சேர்ந்தார். அங்கு
பாரதிக்குக் கிடைத்த இன்னொரு சகா
வ.வே.சு. அய்யர் (1881-1925). இந்தியன் சிவில் செர்வீஸில் சேரும்
எண்ணத்தோடு லண்டன் சென்ற வ.வே.சு. அய்யர், அங்கு வீர் சாவர்க்காருக்கு
வலது கையானார். இந்திய விடுதலைக்கான வன்முறைப் புரட்சிக்கு
இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஹோம் ரூல் லீக்- ஐ உருவாக்கும்
முயற்சியில் வீர் சவர்கருக்கு அவர் உதவி வந்தார். அங்கும் தான்
சிறைபிடிக்கப்படலாம் என்ற நிலை வந்ததும், லண்டனிலிருந்து தப்பினார்.
லண்டனிலிருந்து தப்பி வராகநேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் என்னும் V.V.S.
வீர் விக்ரம் சிங்காகி புதுச் சேரி வந்த கதை ஒரு துப்பறியும் கதை சொல்லும்
சாகசங்களும், தந்திரங்களும், திகிலும் நிறைந்தது. ஆனால் வ.வே.சு. அய்யர்
ஒரு இலக்கிய ரசிகர். மற்றும், லத்தீன், ·ப்ரென்ச், சமஸ்கிருதம்,
தமிழ், ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். கம்பனையும், மில்டனையும்
ஒப்பிட்டு காவிய ஆராய்வு எழுதியவர். தமிழுக்கு சிறுகதை வடிவத்தையும்,
விமர்சனம் என்ற துறையையும்,
இலக்கிய ஆராய்வையும் அறிமுகப்படுத்தியவர். கரிபால்டி, குரு கோவிந்த் சிங்
என விடுதலைக்காக போராடிய வீரர்களின், சரித்திர புருஷர்களின் வாழ்க்கைச்
சரிதங்களை, இளைஞர் மனதில் விடுதலை உணர்வை எழுப்பும் நோக்கத்தோடு
எழுதினார். ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலையும் மொழிபெயர்த்தார்.
புதுச்சேரியில் பாரதியின்
நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர் இன்னும் பலர் இருந்தனர். கவிஞர் பாரதி
தாசன் (1891-1964) அவர்களில் ஒருவர். அவர் பாரதியாலேயே கவிஞராக
முடிசூட்டப் பெற்றவர். பாரதி தாசன் என்ற அவர் தன்னை அழைத்துக் கொண்டார்.
கவிஞராக மட்டுமே அவர் பாரதிக்கு நெருக்கமாக இருக்கவில்லை. பிரிட்டீஷ்
இந்தியாவிலிருந்து புதுச்சேரிக்கு வந்து அடைக்கலம் புகுந்துள்ள தேசீய
வாதிகளின் நடவடிக்கைகளை உளவறிய வரும் போலீஸையும் அவர்களுக்கு உள்ளூரில்
உளவு சொல்பவர் களையும் கண்காணிப்பதும் அவர்கள் ரகசிய திட்டங்களை உளவறிந்து
அவர்கள் விரிக்கும் வலையில் விழாது எச்சரிக்கையாக இருப்பதுமான பல
பொறுப்புகளை
பாரதி தாசன் தன்
மேற்கொண்டிருந்தார்.
வ.ரா (1889-1951) என்று
அறியப்பட்ட அவர் காலத்திய இளம் எழுத்தாளர்களுக்கெல்லாம் பிதாமகர்
போன்றவர். தமிழ் மொழியை, தமிழ் உரைநடையை வரண்ட பண்டிதத்தனத்தின்
பிடியிலிருந்து மீட்டவர். எளிய சாதாரணத் தமிழே, மிக சக்தி வாய்ந்ததாகவும்
அழகாகவும் அழுத்தம் கொண்டதாகவும் இருக்கமுடியும் என்பதைத் தன் உரைநடையால்
நிரூபித்தவர். எல்லா பழமைவாதங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர்.
சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக பிரசுரங்களை வினியோகிப்பதும், பணம்
சேர்ப்பதுமான காரியங்களுக்காக அலைந்து கொண்டிருந்தவர் பாண்டிச்சேரிக்கும்
ஒரு புனித யாத்திரை மேற்கொண்டார். அத்தோடு புதுச்சேரியில் இடம் பெயர்ந்து
வாழும் தேசீயவாதிகளோடு தொடர்பு கொள்வதும் அவர் நோக்கம். பாரதி என்ற
மனிதரைப்பற்றியும் கவிஞரைப்பற்றியுமான ஒரு வாழ்க்கைச் சரிதத்தை முதலில்
எழுதியவரும் வ.ரா. தான். இன்று வரை பாரதியைப் பற்றி அறியக் கிடைக்கும் ஒரு
முக்கிய புத்தகங்களில் அதுவும் ஒன்று. பின்னர் முப்பதுக்களில், மணிக்கொடி
என்னும் இலக்கிய பத்திரிகையைச் சுற்றி எழுந்த தமிழ் இலக்கியத்தில் ஒரு
மறுமலர்ச்சி இயக்கத்துக்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கிய புருஷர்களில்
ஒருவர் வ.ரா.
பாரதியாலேயே கவிஞர் என்று
முடிசூட்டப்பட்டவர் என்ற பெருமைக்கும் கர்வத்துக்கும் உரிய மற்றொரு கவிஞர்
நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை
மாகாண காங்கிர அரசால் தமிழ் ஆஸ்தான கவிஞராக பிரகடனப் படுத்தப்பட்டவர்.
வங்காள பிரிவினையின் காரணமாக எழுத்த தேச கொந்தளிப்பில், கல்லூரிப் படிப்பை
உதறி விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.
காங்கிரஸில் சேர்ந்தார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கிப்
புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரகிகள் தங்கள் நடை பயணத்தில் பாடிச் சென்ற
பாட்டு, நாமக்கல் கவிஞர் எழுதிய, 'கத்தியின்று ரத்தமின்றி யுத்தமொன்று
வருகுது..' தான். நாமக்கல்லார் ஒரு காந்தி பக்தர்.
சுதந்திரப்போராட்டத்தில் காந்தி
சகாப்தம் ஆரம்பிக்கும் முன் இருந்த தேசீயவாதிகளைப் பற்றி நான்
பேசியிருக்கவேண்டும். சுப்ரமண்ய சிவா (1884-1925) வாழ்ந்தது 41 வருட
காலமே. அதில் 19 வருடங்களை அவர் சுதந்திர போராட்ட வீரராக சிறையில்
கழித்தவர். மனைவியைத் துறந்து, போராட்ட வாழ்வில் தன்னை ஐக்கியப்படுத்திக்
கொண்ட அவர், நாட்டுக்குழைக்க தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து கொள்ள
சன்னியாச வாழ்வை மேற்கொண்டவர். ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு,
கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அவரை 'அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடும் நீங்கள்
எந்த மாதிரி சன்னியாசி?" என்று கோர்ட்டில் அவர் கிண்டலாகக் கேள்வி
கேட்டனர். "ஆமாம், நான் சன்னியாசி தான். என் ஆத்மாவின் சுதந்திரத்திற்காக
மட்டுமில்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் நான் பாடுபடுகிறேன்"
என்றாராம் அவர். சுதந்திரப் போராட்டத்தில் தன் கருத்துக்களை வெளியிடவும்,
தமிழ்மொழியின் எழுத்துச் சீர்த்திருத்ததிற்கும், தூய தமிழ்
இயக்கத்திற்கும், ஞானபானு
(1913-16), பிரபஞ்ச மித்திரன் (1916-17) என்னும் இரு பத்திரிகைகளை அவர்
தன் ஆசிரியத்வத்தில்
வெளியிட்டார். அவர் காந்தீய வாதி
அல்லர். மாறாக காந்தீய வாதமும், காந்தியவாதிகளும் அவர் கண்டனத்திற்கும்
கேலிக்கும்
உள்ளானார்கள். மேற்கத்திய
நாகரீகத்தினாலும், மேற்கத்திய கல்வி முறையினாலும் இந்தியப் பெண்களுக்கு
விளைந்து வரும்
தீமைகளைச் சித்திரிக்கும் முகமாக
நளின சுந்தரி என்னும் ஒரு நாவலையும் அவர் எழுதியுள்ளார். அவர் ஒரு
சுயசரிதமும்
எழுதியிருக்கிறார். அதில் அவர்
பெரும்பாலும் விவரித்திருப்பது அவர் சிறை வாழ்க்கையைத் தான். 1908-ம்
வருடம் வ.உ. சிதம்பரனாரும் சுப்ரமணிய சிவாவும் சேர்ந்து 1908-ல் நடத்திய
தூத்துக்குடி மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இந்தியாவிலேயே நிகழ்ந்த முதல்
தொழிலாளர் வேலை நிறுத்தமாகும். பின்னர் 1920-ல் மதராஸ் டிராம் தொழிலாளர்
வேலை நிறுத்தமும் முக்கியமானதாகும். தொழிலாளர்
இயக்கமாகக் கொள்ளப்படும்
கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்று அப்போது இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இந்த
வேலை நிறுத்தத்தில் அவருடன் ஒத்துழைத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு வக்கீல்,
தமிழறிஞர், இலக்கியவாதி. தூத்துக்குடி வாசி. அவரும் ஒரு சுதேசி கப்பல்
போக்குவரத்துக் கம்பெனியை ஆங்கிலேயருக்குப் போட்டியாகத் துவக்கியவர்.
இப்போட்டியை விரும்பாத ஆங்கிலேயர் தம் பிரயாண, சரக்கு போக்குவரத்துக்
கட்டணத்தைக் குறைத்து வ.உ.சியின் சுதேசி கப்பல் கம்பெனி நஷ்மடையச் செய்து
ஒழித்தனர். வ.உ.சிதம்பரம்
பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும்
திலகரின் விசுவாசிகள். வ.வு.சி செய்யுள் நடையில் எழுதியுள்ள சுய சரிதம்
அவரது
போராட்டங்களை விவரிக்கிறது.
சுதந்திர போராட்டத்தில் காந்தி யுகம் ஆரம்பிப்பதற்கு முந்திய காலத்தில்,
தமிழக அரசியல், இலக்கிய அரங்கில் மிக முக்கிய பாத்திரங்கள் இவ்விருவரும்.
[தொடரும்]
vswaminathan.venkat@gmail.com
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
பகுதி 2 & 3 : சுதந்திரப்
போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும்!
- வெங்கட் சாமிநாதன்
கா.சு.வேங்கடரமணி(1892-1952)வுக்கு
லண்டன் டைம்ஸ் லிடரரி சப்ளிமெண்டில் வேலை கிடைத்தது. ஆனால் அவர்
லண்டனுக்குச் செல்வதை அவரது தாயார் விரும்பவில்லை. வேங்கட ரமணியின் முதல்
நாவல், தேச பக்தன் கந்தன், தமிழில் தான் எழுதப்பட்டது. அதன் கதாநாயகன்
கந்தன், சீமையில் படித்து வந்தவன். அவனுடைய காதலுக்கும் கிளர்ந்தெழும்
தேசபக்த உணர்வுக்கும் இடையேயான போராட்டம் தான் நாவலின் கதை. முதலில்
காதலும், அரசியலுமாகத் தொடங்கி வளரும் கதை கடைசியில் தத்துவார்த்த
விசாரணையில் முடிகிறது. முதலில் தேசவிடுதலைக்கான கிளர்ச்சியாக தொடங்கி
பின் மெதுவாக, ஏதும் முரண் இன்றி,
வெகு இயல்பாக அது தனி மனிதனின் ஆத்மீக விடுதலைக்கான ஒன்றாக உருமாறி
தத்துவார்த்த உலகிற்கு இட்டுச் செல்வது என்பது அக்கால பெரிய
கீர்த்திமான்களின் விதியாகவே இருந்துள்ளது ஒரு சுவாரஸ்யமான விஷயம். இது
அரவிந்தரிலிருந்தே
தொடர்கிறது. வேங்கட ரமணியின்
அடுத்த நாவல் முருகன் ஒர் உழவன்(1927). இதை அவர் ஆங்கிலத்தில் தான்
முதலில் எழுதினார். பின்னர் அவர் தானே அதைத் தமிழிலும் மொழிபெயர்த்தார்.
கிராமத்துக்குத் திரும்பிச் செல்வது தான் அதன் மையக் கரு.
காந்தியடிகளுக்குப் பிரியமான விஷயம். வேங்கட ரமணி முழுக்க முழுக்க காந்தீய
சிந்தனைகளால் கவரப்பட்டவர்.
வெ.சாமிநாதன் சர்மா(1895-1978)
வெவ்வேறு கால கட்டங்களில் தேசபக்தன் (1917-1920), நவசக்தி, ஸ்வராஜ், குமரி
மலர் போன்ற பத்திரிககளுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார்.
இப்பத்திரிகைகளில் உலக நாடுகள் பலவற்றின் சுதந்திர போராட்டங்கள்
பற்றியும், உலக சரித்திரம் பற்றியும் தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொல்லும்
நோக்கில் நிறைய எழுதி வந்தார். காந்தி, மோதிலால் நேரு, திலகர், கார்ல்
மார்க்ஸ், முஸ்த·பா கமால் பாஷா போன்ற
தலைவர்களின்
வாழ்க்கைச்சரிதத்தையும் மனித குலத்திற்கு அவர்கள் பங்களிப்பைப் பற்றியும்
விஸ்தாரமாக எழுதினார். ப்ளேட்டோவின் 'குடியரசு'(Republic), ரூஸோவின்
சமுதாய ஒப்பந்தம் (Social Contract) போன்ற நூல்களை மொழிபெயர்த்தார்.
அவற்றோடு, எழுச்சியுற்ற புது சீனா, சோவியத் ரஷ்யா, கிரீஸின் புராதன
வரலாறு, நாடாளுமன்றம் மூலம் ஜனநாயக அரசமைப்பு தோன்றிய வரலாறு, ஆசியாவும்
உலக சமாதானமும்,
மனித சுதந்திரம் என்ற
கருத்தாக்கத்தின் தோற்றம், இப்படி பல்வேறு விஷயங்களைப்பற்றி விரிவான
புத்தகங்கள் எழுதினார். சுமார் கால் நூற்றாண்டுக்காலம், தமிழ் மக்கள் உலக
சரித்திரம்பற்றியும், பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துள்ள சுதந்திர
போராட்டங்கள், சமூக புரட்சிகள் பின் மாற்றங்கள் பற்றியும், தெரிந்து
கொண்டார்கள் என்றால் அது வெ.சாமிநாத சர்மாவின் அயராத உழைப்பும்,
உத்வேகமும் தந்த விரிவான வரலாற்றுப்
புத்தகங்களால் தான். அவர்
காலத்தில் வாழ்ந்த,அவர் பழகி அறிந்த சுப்ரமண்ய பாரதி இன்னும் மற்ற
எழுத்தாளர்கள், சுதந்திர போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்கள்
பற்றியும் தம் அனுபவங்களையும் எழுதியுள்ளார்.
கவிஞரும் யோகியும்,
பாண்டிச்சேரியில் அரவிந்தரின் ஆசிரமத்தில் நிறைய வருடங்கள் இருந்தவருமான,
யோகி சுத்தானந்த பாரதியும் அப்படித்தான். லத்தீன், ·ப்ரெஞ்ச்
இரண்டிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்த அவர் தாந்தேயின் Divine Comedy,
விக்டர் ஹ¤யூகோவின் Les Miserable (ஏழை படும் பாடு) போன்ற ஐரோப்பிய
இலக்கியங்கள் பலவற்றை தமிழுக்குத் தந்தார். 25 வருடங்கள் நீண்ட மௌன
தவத்திலிருந்து மீண்ட அவர் பாரதி மகா சக்தி
காவியம் என்னும் தலைப்பில் பாரத
தேசத்தின் வரலாற்றையே ஒரு பெரும் காவியமாக எழுதினார். என் பள்ளிப்
பருவத்தில் படித்த சுத்தானந்த பாரதியின் புத்தகங்களிலிருந்து தான் தமிழ்
தேசிய உணர்வையும் தேச பக்த உணர்வையும் பெற்றேன் என்று சொல்ல வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இளம் தமிழ் வாசகர்கள்
யோகி சுத்தானந்த பாரதியின் நூற்களைப் படிப்பதில் ஒரு பரவசமும் வெறியும்
கொண்டிருந்தார்கள் என்றும்
சொல்லவேண்டும். அவர் ஒரு தவ யோகிதான். இருப்பினும் அவர் நிறைய எழுதினார்.
அவர் எழுதிய 250 புத்தகங்களில், 173 புத்தகங்கள் தமிழில் எழுதியவை.
திரு.வி.க என்றே அறியப்பட்ட
திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் பார்க்கப்போனால் ஒரு தமிழ் அறிஞர்,
தொழிற்சங்க வாதி. சிங்கார வேலருடன் சேர்ந்து 1918-ல் அவர் நிறுவிய
தொழிற்சங்கம் தான் இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் தொழிற்சங்கம் என்ற
பெருமை திரு வி.க வையே சாரும். அவர் பல முனைகளில் தீவிரமாக செயல்பட்டவர்.
அவர் பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தார். அவர் கீழ் பயிற்சி பெற்ற
பலர் பின்னாட்களில் தமிழ்
பத்திரிகைத் துறையிலும்,
அரசியலிலும் இலக்கியத்திலும் பெரிய சாதனையாளர்களாக திகழ்ந்தனர். மகாத்மா
காந்தி அந்நாட்களில் தென்னாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அவருடன்
சென்று மகாத்மாவின் சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்ப்பவராக இருந்தார்
திரு.வி.க. அவர்
மகாத்மா காந்தியின் தலைமையில்
கண்ட சமூகம், தார்மீகம் அறம் சார்ந்த அம்சங்களைப் பற்றி, மகாத்மாவும் மனித
வாழ்க்கையும், இந்தியாவும் சுதந்திரமும் போன்ற புத்தகங்களில் விரிவாக
எழுதியுள்ளார். பெண்களின் சுதந்திரத்திரத்திற்கும் அவர்கள் உரிமைகளுக்கும்
அவர் தீவிரமாக வாதாடியவர். அது பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.
ராஜாஜி(1879-1971) தன் அரசியல்
வாழ்க்கையில் நேரம் கிடைத்த போதெல்லாம் சிறு கதைகள், அரசியல்
விமர்சனங்கள், சிறுவர்களுக்கான குட்டிக் கதைகள் என பல வடிவங்களில்
எழுதுவது போக, பத்திரிகளுக்கு ஆசிர்யராகவும் இருந்திருக்கிறார்.
மொழிபெயர்ப்புகள் தந்துள்ளார். மார்க்கஸ் அரேலியஸ், ராம க்ரிஷ்ண பரமஹம்ஸர்
போன்ற மகான்களின் உபதேசங்களைத் தொகுத்ததோடு, ராமாயணம், மகா பாரதம் இரண்டு
இதிகாசங்களையும் சிறுவர்களுக்கான
எளிய நடையில் ஒரு தார்மீக பார்வையில் எழுதியுள்ளார். தன் சிறை வாழ்க்கை
பற்றிய குறிப்புகளையும் எழுதியிருக்கிறார். இருபதுக்களில் திருச்செங்கோடு
கிராமத்தில் ஒரு ஆசிரமம் நிறுவி அங்கிருந்து விமோசனம் என்ற
பத்திரிகையையும் வெளியிட்டு வந்தார். அதில் அவர் காந்தியம், விதவை
மறுமணம், மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு பற்றியெல்லாம் கதைகள் எழுதி
வந்தார். ஹன்ஸ் ஆண்டர்சனின்
சீர்திருத்த நோக்கம் கொண்ட
இன்னொரு அவதாரம் என்று சொல்ல வேண்டும் அவரை.
ராஜாஜியிடமும் திரு.வி.க.விடமும்
பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றவர் தான் கல்கி என்ற பெயரிலேயே
பெரும்பாலும் அறியப்பெற்றவரும் தமிழ் நாட்டின் பத்திரிகையாளரிலேயே
ஜாம்பவான் என்று கருதப்படவேண்டியவருமான
ரா.கிருஷ்ணமூர்த்தியும்(1899-1953). அவர் வாழ்ந்த காலத்தில் மிகப்
பிரபலமானவரும் மிகுந்த
செல்வாக்கும் கொண்டவருமான கல்கி சுமார் முப்பது வருட காலம் தமிழ்
எழுத்திலும் பத்திரிகை உலகிலும் இணையற்ற ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தவர்.
1921-லிருந்தே அவர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக இயங்கியவர். மூன்று
முறை, 1922, 1930, 1941 வருடங்களில் அவர் சிறை சென்றார். தமிழில் மிக
பிரபலமான பத்திரிகை, ஆனந்த விகடனில் அவன் ஆசிரியர் பதவியை, மிகுந்த
செல்வாக்கும் வசதிகளையும் தந்த
பதவி அது, உதறித்தான் அவர்
விரும்பியவாறு 1941-ல் சிறை செல்ல முடிந்தது. சிறை செல்ல வேண்டுமெனில்
ஆசிரியப் பதவியைத் துறக்கத்தான் வேண்டும் என்று ஆனந்த விகடனின் அதிபராக
இருந்த எஸ் எஸ் வாசன், சொல்லவே, அவர் அப்பதவியைத் துறக்கத் தயங்கவில்லை.
மாந்தருக்குள்
ஒரு தெய்வம் என்ற அவரது புத்தகம்
காந்தியடிகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும். யங் இந்தியாவிலிருந்து
காந்தியின் எழுத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தார். லாலா லஜபத் ராயின்
வாழ்க்கையைப்பற்றியும், இந்திய தேசீய இயக்கத்தின் வரலாற்றைப் பற்றியும்
எழுதியவர் நம் தாய்நாடு என்ற
தலைப்பில் விவேகானந்தரின்
எழுத்துக்களையும் தொகுத்துத் தந்துள்ளார். தியாக பூமி என்ற அவரது நாவல்,
தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு, ஹரிஜனங்களை கோவிலுக்குள் அனுமதித்தல்,
ஹரிஜன முன்னேற்றம், தேசீய விடுதலை போன்ர காந்தீய கொள்கைச் சொல்ல
எழுதப்பட்டது. பின்னர் அது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது ஆனால் அது உடன்
அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. 1945-ல் தான் அத்ததை நீங்கியது.
கல்கியின் நாவல்களிலேயே மக்களிடையே மிகவும் விரும்பப்பட்டதும்
பிராபல்யமானதுமான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின்
செல்வன் போன்றவை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. பல்லவர்களும், சோழ்
மன்னர்களும் ஆண்ட காலத்திய தமிழ் நாட்டின் மகோன்னத வரலாற்றைச் சொல்ல வந்த
இந்த நாவல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் நாட்டைப் பற்றியும் மொழியைப்
பற்றியும் அவர்களது வரலாற்றின் புகழ் பெற்ற காலங்கள் பற்றியும் அவர்கள்
மூதாதையரின் மகோன்னத சாதனைகளை அறியச் செய்து அது பற்றி அவர்கள் பெருமையும்
கர்வமும் கொள்ள வேண்டும் என்ற நோக்கம், தேசீய விடுதலை போராட்டத்தில் தன்னை
ஈடுபடுத்திக்கொண்ட கல்கிக்கு இருந்தது
பகுதி 3: சுதந்திரப்
போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்!
சற்று முன்னர் முப்பதுக்களில்
மலர்ந்த ஒரு மறுமலர்ச்சியின் ஆதர்ச புருஷராக வ.ரா. இருந்தார் என்று
சொல்லியிருக்கிறேன். அது அம்மறுமலர்ச்சியின் இலக்கியம் சார்ந்த அங்கத்தை
மனதில் கொண்டாகும். ஈ.கிருஷ்ண அய்யரும் ருக்மிணி அருண்டேலும் தமிழ்
நாட்டின் நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த ஒரு நாட்டிய மரபு தேய்ந்து
மறைந்து கொண்டிருந்த காலத்தில் அதை மீட்டெடுத்து புதுப்பித்து வாழ்வு
கொடுத்த காரியமும்
இம்மறுமலர்ச்சியின் மற்றொரு
அங்கம் தான். தமிழ் நாட்டின் மேடைக் கச்சேரிகளில் தமிழில் பாடுவதே
அரிதாகிக் கொண்டிருந்த காலத்தில் தமிழிசை மரபை நினைவுறுத்தி அதற்கு உரிய
இடத்தைப் பெற்றுத்தர எழுந்த தமிழிசை இயக்கமும் இந்த மறுமலர்ச்சியின்
அங்கம் தான். இவையெல்லாம் தேசம் முழுதும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்
நாடு பெற்ற விழிப்புணர்வின் விளைவுகள் தாம். தேசீய விழிப்புணர்வின்
விளைவாகவே வங்காளத்தில் புதிய பாணி ஓவிய முயற்சிகள் தோன்றியது போல. நான்
இப்போதைய சந்தர்ப்பத்தில் இலக்கியத்தோடு நின்றுகொள்கிறேன். தமிழ் நாட்டில்
முப்பதுகளில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி, தேசீய எழுச்சியும் சுதந்திர
உணர்வையும் மக்களிடையே பரப்புவதற்கென்றே, சுதந்திரப் போராட்ட வீரர்களால்
தோற்றுவிக்கப்பட்ட மணிக்கொடி பத்திரிகையைச் சுற்றியே மலர்ந்தது. முன்னரே
சொன்ன வ.ரா. தவிர பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, புதுமைப் பித்தன்
போன்றோரையும் சேர்த்துச் சொல்லவேண்டும். இவர்களில் சி.சு.செல்லப்பாவும்
பி.எஸ்.ராமையாவும் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் இயங்கியவர்கள். சிறை
சென்றவர்கள். இப்போது 86 வயதாகும் செல்லப்பா ஒருவர் தான் சுதந்திரப்
போராட்டத்தில் தீவிரமாக இருந்த எழுத்தாளர்களில் இப்போதும் நம்மிடையே
வாழ்பவர். அவரை இன்னமும் நம்மிடையே பெற்றிருக்கும் பாக்கியம் நமக்கு.
முப்பதுக்களின் சுதந்திர போராட்ட காலத்ததிய அன்றைய வாழ்க்கையைச் சொல்லும்
1700 பக்கங்களுக்கு விரிந்துள்ள சுதந்திர தாகம் என்ற மூன்று பாகங்கள்
நீளும் ஒரு நாவலை அவர் தன் வாழ்வின் அந்திம காலத்தில் எழுதியிருக்கிறார்.
அது ஒரு ஆவணமும் ஆகும். அது உண்மையில் சுமார் ஏழாண்டு கால(1927-1934)
நடப்புகளைத்தான் விவரிக்கிறது. காந்தியின் ஆணையைத் தலைமேற் தன் கல்லூரிப்
படிப்பை பாதியிலேயே துறந்து சத்தியாகிரஹியாகி சிறை சென்ற நடப்புகள் அவை.
இந்த பிரம்மாண்ட நாவல் என்னவோ மதுரையையும் அதைச் சுற்றியும் நிகழும்
சம்பவங்களை மட்டுமே விவரித்தாலும், (செல்லப்பா
சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கு
மேல் இட விஸ்தாரம் பெறவில்லை), அதன் உணர்வுகள் நாடு முழுதும்
கொந்தளித்துக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தையே பிரதிபலித்தன.
புதுமைப் பித்தன் (1907-1947) ஒரு தனி பிறவி. அவர் எந்தப் போராட்டத்திலும்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக ஈடுபடும் எந்த
செயலிலும் தன்னையும் அதில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் இயல்பு அவரிடம்
இல்லை. அவர் ஒரு தீவிர தனி நபர் வாதி. தன் தனித்வத்தை அதன் எல்லைவரை
இட்டுச் செல்பவர். ஆனால் ஆளும் ப்ரிட்டீஷ் அரசாங்கம், அதற்கு சேவுகம்
செய்வதில் பெருமை கொள்ளும் கருப்பு நிற அதிகார வர்க்கம்,
சரிகைத்தலைப்பாகைகள் மீது அவருக்கு இருந்த ஆக்கிரோஷ
வெறுப்பு அத்தனையும் அவருடைய
எழுத்துக்களில் வந்து கொட்டும். சந்தர்ப்பம் இருக்கிறதோ இல்லையோ, தேவை
உண்டோ இல்லையோ, எழுதும் போக்கில் ஆங்கில அரசின் குட்டி தேவதைகளுக்கு
எதிரான அவர் தனது சீற்றத்தையும் , கிண்டலையும் போகிற போக்கில் உதிர்த்துக்
கொண்டே
போவார். அவரது எழுத்து முழுதிலுமே
இத்தகைய கிண்டலும் வெறுப்பும் தெளித்திருக்கக் காணலாம். அடிமைப்
பட்டுக்கிடந்த இந்தியாவில், தமிழ் நாட்டில் ஒரு சுதந்திர ஜீவி
இருந்தாரென்றால் அது அவர் தான். எந்த அதிகாரத்தையும், அது
வெளிநாட்டிலிருந்து வந்ததோ அல்லது உள்நாட்டிலேயே பிறந்து வந்ததோ, அவர்
மதித்ததில்லை.
கடைசியாக அந்நாட்களின் வரலாற்றைப்
பதிவு செய்தவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். எல்லோருக்கும் முதலாக, 'உலகம்
சுற்றிய தமிழர்' என்றே அறியப்பட்ட ஏ.கே.செட்டியாரைப் பற்றி. அவரது உலகப்
பயணங்கள் பற்றி அவர் எழுதியது போக, காந்தி பற்றி அவர் எடுத்துள்ள செய்திப்
படம். இது தான் இந்தியாவிலேயே காந்தி பற்றி எவரும் எடுத்துள்ள முதல்
செய்திப் படமும் ஆகும். அந்நாட்களின் சுதந்திர போராட்டச் செய்திகளை,
காந்தி பற்றிய செய்திகளை அரசு செய்திப் படங்களில் பார்க்கும்போது, ஒரு
பெரிய திறந்த வெளியில் நூற்றுக்கணக்கில் சரிவர உடைகூட உடுத்தியிராத ஏழை
ஸ்திரீகள், வயதானவர்கள் உட்பட
உட்கார்ந்து கைராட்டினம் சுற்றி நூல் நூற்றுக்கொண்டிருக்கும் காட்சியைப்
பார்த்திருக்கிறோமே, அது ஏ.கே.செட்டியார் காந்தி பற்றிய
செய்திப்படத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட காட்சிதான். செட்டியார் தன்
உலகப் பயணத்தில், எங்கெங்கோ தொலைவில் உள்ள நாடுகளில் கூட காந்தியின் பெயர்
எழுப்பும் உத்வேகமும் வரவேற்பும் பற்றி வெகு உற்சாகத்துடன் எழுதுகிறார்.
இன்னும் பலர் அந்நாட்களைப் பற்றி எழுதியிருக்கின்றனர். கவிஞர் நாமக்கல்
ராமலிங்கம் பிள்ளை என் சரிதம் என்று எழுதியுள்ள சுயசரிதம்,. அவர்
காலத்தில் நடந்த
சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும்,
அவரது சரிதத்தையும் சொல்லும். தி.சு.சு.ராஜன் எழுதியுள்ள புத்தகம் ராஜாஜி
தலைமையில் வேதாரண்யம் வரை நடை பயணம் சென்ற உப்பு சத்தியாக்கிரஹ
நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் விவரிக்கும். திரு.வி.க வின் வாழ்க்கைக்
குறிப்புகள் என்னும் சுயசரிதம்,
அறுபது ஆண்டு கால தொழிற்சங்க
வரலாற்றையும், சுதந்திர போராட்டமாக விரியும் தேசீய அரசியலையும் பதிவு
செய்துள்ளது. தனது வயதின் தொன்னூறுகளில் இறந்த ம.பொ.சிவஞான கிராமணியார்,
சுதந்திர போராட்டத்தில் தீவிர மாக இயங்கியவர் 'விடுதலைப் போரில் தமிழகம்
என்று ஒரு
பிரம்மாண்ட நூலில் தமிழ் நாட்டின்
சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக விஸ்தாரமாக, விவரங்கள் செறிந்த வகையில்
உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிச் செல்கிறார். இப்பங்களிப்பைப் பற்றி ம.பொ.
சிவஞானம் அவர்கள் அளவுக்கு விஸ்தாரத்திலும் விவரப் பெருக்கிலும் உணர்வு
பூர்வமாகவும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல் வேறு ஒன்று தமிழில் இல்லை.
சுமார் 1200 பக்கங்களுக்கு விரிந்துள்ள இந்த வரலாறு முழுதும் ம.பொ.சி
அவர்களால் வாய் மொழியாகவே
நினைவிலிருந்து சொல்லச் சொல்ல பதியப்பட்டுள்ளது.
1997-ல் இந்திய சுதந்திரத்தின்
50-ஆண்டு நிறைவை ஒட்டி தில்லியில் மத்திய செயலக நூலகம் (Central
Secretariat Library) நடத்தின் சுதந்திர போராட்டத்தில் எழுத்தாளர்கள் என்ற
கருத்தரங்கில் பேசியது.
(இதற்கு முன்குறிப்புகளாக நான்
உரையைத் தொடங்கும்னமுன் சொன்னவற்றையும் இங்கு சொல்வது அவசியம்:
அக்குறிப்புகள் இதோ:)
"இந்த உரையை உங்களுக்குச்
சமர்ப்பிக்கும் முன் இவ்வுரை தனக்குள் வகுத்துக் கொண்டுள்ள எல்லைக்
கோட்டின் வட்டத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். இக்கருத்தரங்கை ஏற்பாடு
செய்துள்ளவர்கள் தந்துள்ள 1900-1947 கால கட்ட வரையறை. அடுத்து
இக்கருத்தரங்கு இலக்கியப் பங்களிப்பை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளது.
சீரிய இலக்கிய மாணவர்களுக்கெல்லாம் தெரியும், எந்த பெரிய நிகழ்வைப்
பற்றியுமான ஆழமான
சிருஷ்டி கர இலக்கியப் பதிவு அது
நிகழ்ந்து முடிந்து அந்நிகழ்வின் தாக்கத்தின் சூடு ஆறிய பிறகு, எழுத்தாளன்
தன்னை அதனிலிருந்து விலக்கி எட்டி நின்று, அந்நிகழ்வின் உணர்வுகளின்
அழுத்தமும், சூடும் தன்னை பாதிக்காது அதன் குணத்தை அறிய முடிகிற போது தான்
சாத்தியமாகிறது.
எனவே, ஒரு வேளை கருத்தரங்கை
அமைத்துக் கொடுத்தவர்களின் நோக்கம், அத்தகைய ஆழ்ந்த சிருஷ்டி பூர்வ
பதிவுகளின் இலக்கிய ஆராய்வு அல்ல, மாறாக, போராட்டம் நிகழ்ந்து
கொண்டிருக்கும்போதே அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எழுத்தாளர்களின்
பங்களிப்பைப் பற்றி பேசுவது என்று தோன்றுகிறது. எனவே இங்கு நான்
செய்துள்ளது போராட்ட கால கட்டத்திலேயே தமிழ் எழுத்தாளர்கள் அதை எப்படி
எதிர்கொண்டார்கள், என்ன பதிவு செய்தார்கள், அது போராட்டத்திற்கே எத்தகைய
பங்களிப்பைச் செய்தது என்பதேயாகும். இத்தகைய அவ்வப்போதைய கால கட்டத்தின்
ஆவேச உற்சாகங்களையும் உணர்ச்சிப் பெருக்கையும் மீறி, எவை இன்று ஆழந்த
இலக்கியங்களாக காலத்தை மீறி வாழ்கின்றன எவை சீரிய இலக்கிய
சாதனைகளாகியுள்ளன என்று கணிப்பதல்ல..
மேலும், இலக்கியத்திற்கு அப்பால்
மற்ற துறைகளில், வாழ்வுத் தளங்களில், தொடர்பு சாதன வடிவங்களில்
போராட்டத்திற்கு உதவியவர்கள், அவர்களின் சாதனைகளைப் பற்றிப் பேசவில்லை.
நாடக மேடையில், திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்தவர்கள்,
பாடலாசிரியர்கள், பாடகர்கள், பொம்மலாட்டக்காரர்கள், பிச்சைக்காரர்கள்,
தெருப்பாடகர்கள் போன்றோரையும் விட்டு விட்டேன். ஆமாம்,
பிச்சைக்காரர்களும், தெருப்பாடகர்களும் தான்.
கற்பனை செய்து பாருங்கள். ஒரு
பத்து வயது சிறுமி, எண்ணையற்ற பிசுக்கேறிய தலையும், அழுக்குச் சட்டை
பாவாடையுமாக ஓடும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக இறங்கி ஏறி வருகிறாள்.
அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு உச்ச ஸ்தாயியில், பாடிக்கொண்டே பெட்டி
பெட்டியாக நகர்ந்து
கொண்டே,
பண்டித மோதிலால் நேருவை பறி
கொடுத்தோமே,
பறிகொடுதோமே, பரிதவித்தோமே....
மோதிலால் நேரு மட்டுமல்ல, திலகரை
பறிகொடுத்ததும், கஸ்தூரிபாவின் தியாகங்களும் அவளுக்குப் பிச்சையெடுக்க
உதவும் பாட்டுக்களாக மட்டுமல்ல அவள் அலறல், ரயில் பயணிகளின் உள்ளத்தையும்
தொடும். ஒரு நாள் பயணத்தில் தமிழ் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி
வரை
அவள் பயணம் செய்துவிடுவாள்.
எத்தனையோ ஆயிரம் பயணிகளுக்கு அவள் கதறல் போய்ச் சேரும். அவள் சற்று
தூரத்தில் இறங்கி விட்டால் மற்றொரு சிறுமி அவள் இடத்தில் தோன்றுவாள்..
ஆங்கில அரசின் கரங்கள் திரைப்படங்களை, நாடகங்களை, புத்தகங்களை, பொதுக்
கூட்டங்களை,
புத்தகங்களை, பாரதியின் கவிதைகளை
தடை செய்துவிட முடியும். ராஜாஜியை, மகாத்மா காந்தியை கைது செய்து சிறையில்
அடைத்து விட முடியும். ஆனால் அந்த சூரியன் அஸ்தமிக்காத பகாசுர அரசு, தன்
தொண்டை கிழிய கத்திப் பாடும் இந்த பிச்சைக்கார சிறுவர் சிறுமியரை அந்த
அரசின்
அதிகாரத்தை அறியாது மீறும்,
பணியாத இக்குரல்களை, அரசுக்கு எதிராக ஆயிரக் கணக்கான பயணிகளின்
உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்யும் இந்த அழுக்குச் சட்டைப் பாவாடைகளை
என்ன செய்ய இயலும்? இவர்களும் சுதந்திரப் போராட்டதிற்குப் பங்களித்தவர்கள்
தான். காலத்தின் கதியில் நாம் மறந்து விட்ட, மறக்கப்பட்டுவிட்ட இப்
பங்களிப்புகள் எல்லாம் உடனுக்குடன் பாதிப்பை ஏறுபடுத்தியவை. வெடிமருந்தைப்
போல பயங்கர
விளைவுகளையும் ஏற்படுத்தியவை.
காட்டுத் தீயைப் போல படர்ந்து பரவும் குணத்தவை. ரயில் பெட்டிகளில் பாடிப்
பிச்சையெடுக்கும் இச்சிறுமிகளுக்குக் கிடைத்துள்ளவர்கள் தயாராகக்
காத்திருப்பவர்கள் (captive audience)- இருந்த இடத்தில் ந்கராது
கேட்பவர்கள். மனது நெகிழ்வதற்குக் காத்திருப்பவர்கள். அரசியல் வாதிகளும்,
எழுத்தாளர்களும் மக்கள் மனதில் பாதிப்பைக் காண் தம் திறைமையெல்லாம்
திரட்டி சாகஸங்கள்
செய்யவேண்டும். இனி என் உரை..
தமிழ் இலக்கியத்துள்
நிகழ்ந்துள்ள.....
வெங்கட் சாமிநாதன்/23.8.07
இலக்கியம்!
எதிர்வினை!
எனக்கு அந்த வெற்றி வேண்டாம்!
- வெங்கட் சாமினாதன்
-
''தினை விதைத்தவன் தினை
அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்னும் பழமொழி
கேள்விப்பட்டதுண்டா? என்று மாலன், ஒரு தர்ம தேவனின் உயர்ந்த ஆசனத்தில்
தான் அமர்ந்துள்ள நினைப்பில் தன் கடாட்சத்தைக் கீழ் நோக்கி அற்ப பாவ
ஜீவனான என்னைக் கேட்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஆசனம்,
இந்த பாத்திரம் அவருக்கு உசிதமில்லை. இன்று எங்களைச் சுற்றியுள்ள தமிழக
பொது வாழ்க்கை, அரசியல்,இலக்கியம், கலை, பத்திரிக்கை உள்ளிட்ட அத்தனையின்
தலைமைகளும், குணங்களும், மாலன் சொல்லும் பழமொழியைக் கேலி செய்பவை. மாலன்
தேர்ந்துள்ள பத்திரிகை,தொலைக்காட்சி உலகில், அவர் நிழல் தேடி
அடைக்கலமாகியுள்ள நிறுவனம், அந்த நிறுவனத்தை ஆட்கொண்டுள்ள அரசியல் கட்சி,
மாலனையும் சேர்த்து எல்லாமே ஒரு சிகர வெற்றிக்கான பளிச்சிடும்
அத்தாட்சிகள். தோல்வியுற்றவர்களைக் கேலிப்புன்னகையுடன் நோக்கும்
உயரத்தில்தான் எல்லாமே. மாலனையும் சேர்த்து. அந்த வெற்றியின்
எக்களிப்புக்கு உரியவர்தான் மாலன், கட்டாயமாக. இவை சாத்தியமாகியுள்ளது,
தினை விதைத்துத்தானா என்று அவர் தன்னையே கேட்டுக்கொள்ள வேண்டும். பொது
வாழ்க்கையிலும் சரி, மற்ற நான் குறிப்பிட்ட தலைமைகளும் சரி, வெற்றி
பெற்றுள்ளது தினை விதைத்ததனால் அல்ல. வினையே விதைத்து தினை அறுக்கும்
சாமர்த்தியம் ஒவ்வொரு தலைமைக்கும், அதன் வெற்றிக்கும் பின்னுள்ளது. தமிழ்
நாட்டில் எந்த மூலை முடுக்கிலும் உள்ள எந்த பாமரனைக் கேட்டாலும், "ஆமா,
இதிலே யார் ஓழுங்கு, என்னமோ சொல்ல வந்துட்டீக" என்று அலுத்துக்கொள்வான்.
இந்த பண்பாட்டுச் சீரழிவு எங்கே தொடங்கிற்று மாலன்? பிரியமுடன் நீங்கள்
எனக்குச் சொல்லும் இப்பழமொழி போல இக்காலகட்டத்தின் சில கோஷங்களைச்
சொல்லட்டுமா? உங்களுக்குப் பழக்கமானவைதான். '" நாங்கள் என்றுமே
நீதிமன்றங்களை மதிப்பவர்கள்'":" அண்ணா எங்களை இப்படி வளர்க்கவில்லை";
"கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மூன்றும் எங்களுக்கு அண்ணா கற்றுத்
தந்தவை'': "சாவு வாழ்விலே ஒரு முறைதான் வரும்." '"கண்ணகி சிலையைக்
காப்பற்ற நான் உயிரையும் கொடுப்பேன்"; போதுமா, இன்னும் வேண்டுமா? தமிழ்
நாட்டுக்காற்றில் இப்படி கோஷங்கள் மிதக்கும். அவை மிக மலிவானவை.
நிறைய கிடைக்கும். மாலன், கண்களை மூடிக்கொள்வது செளகரியமானது.உங்களுக்கே
தெரியும். நீங்கள் இருக்கும் இடத்தில் யாரும் தினை அறுக்க தினை
விதைப்பதில்லை. அவர்களுக்கு நன்றாக தெரியும். தினை விதைத்து தினை
அறுக்கலாம் என்ற நினைப்பு தோல்வியையே தரும். இந்த பேருண்மையின் வாழும்
சாட்சியம் இதோ நானே இருக்கிறேன். வெற்றி பெற அல்ல, நான் மடத்தனமாக தினை
விதைப்பதையே தொடர்வது. என் இயல்பில் நான் ஏதோ செய்து வருகிறேன். நான்
தொடர்ந்து தோற்று வருகிறேன். என்னை மாற்றிக்கொள்ள முடியவில்லை.
அனுபவத்தில், அல்லது, தம் இயல்பில் பாடம் கற்று வெற்றி பெற்றவர் மாலன்.
எனக்கு அந்த வெற்றி வேண்டாம். நான் இப்படியே கேலிக்கு உரியவனாகவே இருந்து
விட்டுப்போகிறேன்.
---
இலக்கியம்!
ஒரு பரிமாற்றம்!
வெங்கட் சாமிநாதன்
கீழே தரப்பட்டுள்ள ஒரு
பரிமாற்றத்தையும் முன் வைக்கிறேன். இப்பரிமாற்றம், முன்னர்
வைக்கப்பட்டுள்ள எனது 'தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்', அதைத் தொடர்ந்த
சுந்தர ராமசாமியின் 'சொல்லப்படுகிறது' கொஞ்சம், ' நம்பப்படுகிறது'
கொஞ்சம்', பின் எனது 'காற்றினிலே வந்த கீதங்கள்" ஆகியவற்றின் விளைவும்,
என் எதிர்வினையும் கொண்டது. எனது கருத்துக்களும், செயல்களும்,
எழுத்துக்களும் மறைக்க ஏதும் இல்லாதவை. காற்றினிலே மிதக்கும் என்
சொற்களும் தான். இவை எல்லாவற்றிற்கும் ஒரு தார்மீக பரிமாணம் உண்டு.
எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பேற்கிறேன். என்னிலிருந்து எவ்வடிவத்தில்
கிளர்ந்த எதையும் என்னதல்ல என்று சொல்ல நான் விரும்பமாட்டேன். அது எனக்கு
அவமானம் தரும் செயல். எனவே இப்பரிமாற்றமும் வெளியுலகின் முன். இவையும்
தான் நான். இவற்றின் பலமும் பலவீனமும் நான் தான். இவற்றை ஆங்கில
மூலத்திலேயே தருகிறேன், த்வனி, பொருள் மாற்றங்கள் செய்து விட்டேன் என்று
ஏது குற்றச்சாட்டு எழக்கூடாதல்லவா?
வெங்கட் சாமிநாதன்
28.12.04
--------
என் தரப்பிலிருந்து!
- வெங்கட் சாமிநாதன் -
5.6.04 அன்று நடந்த சந்திப்பைப்
பற்றி சுமதி ரூபனும் டி.செ.தமிழனும் வெளியிட்டுள்ள எதிர்வினைகளும்,
சந்திப்புக்குப் பின் டொராண்டோ தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில்
வெளியாகின. சில எதிர்வினைகளும் என்னை வருத்தப்படச் செய்தன. துவேஷம்
நிறைந்தவையும் என்னையும் என் கருத்துக்களையும் முன் தீர்மானங்களின்றி,
சந்திக்க மறுப்பவையும் அவை என்பது ஒரு புறம் இருக்க, 10-15 வருடங்களாகவே
அல்லது அதற்குமேலாக முற்றிலும் அன்னிய கலாச்சார, அரசியல் சூழலில்
வாழ்ந்தும் கூட தமிழகத்திலே மட்டுமே காணப்படும் சாதீய துவேஷத்தைச் சுமந்து
கொண்டு, மாற்றுக் கருத்துக்களையும் பார்வைகளையும் எதிர் கொள்ளாது உதறி
எறியும் மனப்போக்கையும் வேண்டாத சுமையாக,குடிபெயர்ந்த இடத்திலும், தமிழ்
டி.வி. அப்பளம், குமுதம், இதயம் நல்லெண்ணெய் போல் இக்கசடுகளையும்
இவர்கள் சுமந்து திரிவதும் எனக்கு வருத்தம் தந்தன. நாடு இழந்தும்,
மண் இழந்தும், அன்னிய கலாசாரம் சூழ்ந்தும், சாதீய கசடுகள் இவர்களை
அட்டையாக ஒட்டிக்கொண்டுள்ளது. கழன்று விழுவதாகக் காணோம்.
என்னைப்பற்றி ஞானம் லம்பேர்ட்
கொடுத்த அறிமுகம், எனக்கு வியப்பாக இருந்தது. தமிழ் நாட்டிலேயே யாரும்
அறிய விரும்பாத என்னைப்பற்றி இவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாரா! என்று.
அடுத்து நான் பேசியபோது, " நாம் கலந்து உரையாடுவோம். என்னைப்பற்றி
நீங்களோ, உங்களைப்பற்றி நானோ எவ்வளவு அறிந்துள்ளோம் என்பது தெரியாது.
உங்கள் கேள்விகளுக்கெல்லாம், நான் உடனுக்குடன் பதிலளித்துவிடுவேன் என்று
சொல்ல முடியாது. காரணம், பதில் இருந்தாலும், அது இப்போதே, இங்கேயே
எனக்குத் தோன்றாது போகலாம். கூட்டம் முடிந்ததும், அல்லது வேறு எப்போதோ,
நாளையோ, அடுத்த வருடமோ தோன்றலாம். தோன்றாது போகலாம். பதில் எனக்குத்
தெரியாது கூடப்போகலாம். இதற்கு அர்த்தம் ஒருவர் சரி என்றோ, இன்னொருவர்
தவறு என்றோ ஆகிவிடாது. பதில் உங்களில் யாரிடமிருந்தாவது கூட வரலாம். ஆக,
ஜே கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல, நாம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம்.
கேள்விகளைக் கேட்டுக்கொள்வோம். எல்லோரும் சேர்ந்தே பதில்களைக் காண்போம்
என்று சொன்னதாகத் தான் ஞாபகம். இதைத் தான், டி. செ. தமிழன்,
¡பொழிப்புரை" என்று சொல்லியிருக்கிறார். அவர் அன்று நடந்ததைச்
சரியாகத்தான் பதிவு செய்துள்ளார் என சுமதி ரூபனும் சான்றுப் பத்திரம்
வழங்கியுள்ளார். இப் பொய்யாடலின், திருகலின் பின்னுள்ள நோக்கமும்
முன் தீர்மானங்களும் ,இருவரின் மன அமைப்பும் என்னவாக இருக்கும்.?
முதலில் தொடங்கும் போதே, இருவருமே
முன் கூட்டிய வெறுப்புடனும் ஒரு வித இளக்காரத்துடனும் தான் தம்
எதிர்வினைகளைத் தொடங்குகின்றனர். முன் பின் அறியாத என்னுடன் இவர்கள்
இத்தகைய உறவு கொள்வதற்கான காரணத்தை முன் சொன்ன சுமையைத்தான் காரணமாகச்
சொல்ல வேண்டுமா? இப்படிப்பட்ட மன நிலைகளைத் தாம் கொண்டு இவர்கள்
தம்மைத்தான் இழிவு படுத்திக்கொள்கிறார்கள். சாணி எறிபவன் மனத்தில் தானே
முதலில் படியும்.பின் தேடும் கண்களில், பின் அவர்கள் கைகளில்.
கடைசியிவ் தானே அவர்கள் எதிரிகள் மீது.
வந்திருக்கும் புதியவரைப்பற்றி
கலந்துரையாடலில் அறிய விரும்புவது நியாயம், இயல்பு. அதை விட்டு,
"ஈழத்தைப்பற்றி என்ன மதிப்பீட்டை இவர் வைத்துள்ளார்? அங்கே (கனடாவில்)
ஏதாவது இதைப்பற்றி கேள்விகள் கேட்பார்களே என்று மனச்சாட்சி உறுத்த கொஞ்சம்
ஹோம் வொர்க் செய்து வருவார்கள்" என்று தம் நம்பிக்கையை, எதிர்பார்ப்பைச்
சொல்கிறார் டி.செ.தமிழன். ஈழத்தமிழ் எழுத்தைப் பற்றி கேள்வி கேட்பார்களே
என்று தயார் செய்து கொண்டு வரும் மனிதர் அந்த ஈழத்து இலக்கியம் பற்றி என்ன
இழவு மதிப்பு வைத்திருந்தால் தான் என்ன, வைத்திருக்காவிட்டால் என்ன, அது
என்ன சுண்டைக்காய்க்கு உதவும்? என்று டி..செ.தமிழன் தனக்குள் கேட்டுக்
கொண்டிருக்கவேண்டும். அது தான் சுய கெளரவம் உள்ள விஷயம். டி. செ. தமிழன்
அந்த கூட்டத்திற்கு வந்த காரணங்கள் ஒவ்வொன்றும் அபஸ்வரங்களாகவே
ஒலிக்கின்றன. அவை சரியானவே என்று சுமதி அம்மையாரும் ட்.செ.தமிழனுக்கு
ஒத்து ஊதுகிறார். வில்லுப்பாட்டில், ¡ஆமாம், ஆமாம்¡ என்று
சொல்ல இருவர் இல்லாவிட்டால் சுவாரஸ்யமாக இராது.
புரிசை நடேசத்தம்பிரானின்கூத்தை
நான் முதலில் கண்டது, தில்லியில், 1965-66 களில். அந்த நாள் மாலை ஒரு மணி
நேர அனுபவம் மாத்திரமே எனக்கு அதன் தனித்துவத்தையும், வீர்யத்தையும்
அறிந்து கொள்ள போதுமானதாக இருந்தது. என் கலைகள் பற்றிய பார்வைகள்
என் சொந்த அனுபவங்களால் மாத்திரமே ஆனவை.இது அப்போதே பதிவு செய்யப்பட்டு,
ந.முத்து சாமியையும் தொற்றியது. சுமார் பத்து ஆண்டுகள் முன்பு வரை,
கூத்து, தம்பிரான்கள் பற்றிய அறிமுகத்திற்கும் , பின் அவர் தான் எழுதும்
நாடகங்கள் பற்றிய ஆலோசனைகளுக்கும் என்னைத்தான் காரணஸ்தனாகச் சொல்வது அவர்
வழக்கம். இப்போதெல்லாம், மறதி அவரை ஆட்கொண்டுள்ளது, தமிழகத்திற்கே
பழக்கமாகியுள்ள அரசியல் . தமிழ் எழுத்தாளர்களும் இதன் உபயோகம் கண்டு,
இக்குணத்தைச் சிக்கெனப்பற்றி யுள்ளார்கள்.
தெருக்கூத்து பற்றியும்,
தம்பிரான்கள் பற்றியுமான என் ரசனைகள் என என் எழுத்துக்கள் பற்றிச் சொல்வது
ஒன்றைப்பற்றிப் பேசும்முன் எதும் முதலில் தெரிந்துகொண்டு பேசவேண்டும்
என்னும் அடிப்படை தர்மங்கள் கூட இல்லாது தங்கள் அறியாமையிலேயே செளகர்யம்
காண்பவர்களிடம் என்னை நிருபித்துக்கொள்ளும் அவசியம் எனக்கு என்ன?
கருஞ்சுழியின் முக்கியத்துவம் பற்றி அதன் முதல் மேடையேற்றத்தின் பின் நான்
அது பற்றி Indian Express-ன் Sunday Magazine section-ல் ஒரு daily
paper-ன் அரைப்பக்கத்துக்கு விரிவாக பாராட்டி எழுதியது இந்தியா முழுதும்
உள்ள 14- editions களிலும் வெளிவந்துள்ளது. கருஞ்சுழி நாடகத்தை இந்தியா
முழுதும் ஐரோப்பிய கலை விழாக்களிலும் எடுத்துச் செல்ல உதவியுள்ளதை
கருஞ்சுழி ஆறுமுகத்திடமிருந்தே டி.செ.தமிழன் அறிந்து கொள்ளட்டும்.
நான் அன்றைய சந்திப்பில் பேசியது நவீன நாடகம் என்று சொல்லி,
நாடகமும் இல்லாத, கூத்தும் இல்லாத, ஒரு கூத்தடிப்பைப்பற்றி. இது கலைத்தரம்
பற்றிய, நாடகம் என்னும் நிகழ் கலை பற்றிய எனது கருத்து. கூத்தையும்
தம்பிரான்களையும் பற்றி நான் பெருமைப்பட்டுப் பேசுவதில் நாடகங்கள்
பற்றிய என் ஆழ்ந்த அனுபவங்களையும் அறிவையும் காணும் டி.செ. தமிழன், அதை
நவீன நாடகம் என்று சொல்லி நிகழ்த்தப்படும் தரமற்றதை நான் கண்டனம்
செய்தால் அதில் டி.செ.தமிழன் காண்பது, என் சாதீய பின்புலம்.
எனக்குத் தெரிந்ததை நான் காண்கிறேன். அவருக்குத் தெரிந்ததை அவர்
காண்கிறார். என் கலைப்பார்வை சாதீயத்தை ஒதுக்குகிறது. டி.செ.தமிழனின்
சாதீயப் பார்வை, கலையை ஒதுக்குகிறது என்பது தெளிவு. எங்கு அவருக்கு
உவக்காத கருத்தை நான் முன் வைக்கிறேனோ, அங்கு அவருக்கு அது சாதீய
பின்புலமாகிப்போவதற்கான காரணத்தை டி.. செ.தமிழனும் இன்னும் அவர்
போன்று பேசுபவர்களும் தம் அறிவார்த்த நபும்ஸகத்திலேயே காணவேண்டும். இதே
டி.செ. தமிழன், வெளி நாட்டு நிறுவனங்களின் நிதி உதவி பெறும் நாடக
நிகழ்வுகள் அத்தனையும் அழிவை நோக்கியே செல்வதாக மு.ராமசாமி சொன்னதாக
அங்கீகாரத்துடன் சொல்லும் டி.செ.தமிழன், நான் சொன்னால் அது சாதீய
பின்புலமாவது எப்படி?
வ,அ,ராசரத்தினம், கலாநிதி
கைலாசபதி பற்றியெல்லாம் நான் எழுதத்தொடங்கியது, 1962-ல் என்று என் ஞாபகம்.
அப்போது டி.செ.தமிழனும், சுமதி ரூபனும் இன்னும் இப்பூதலத்தில்
அவதாரம் கொள்ளவில்லை.என்று நம்புகிறேன். கடைசியாக போன வருடமோ என்னவோ, நான்
எழுதியது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கவிதைத்தொகுப்பைப் பற்றி. அதற்கு
முன் பா.அகிலன் பற்றி, சிவ ரமணி பற்றி. இடையில் நான் ஈழத்தமிழ் எழுத்து
பற்றி, ஈழத்தமிழர் பற்றி எழுதியுள்ளது, வேறு எந்த தமிழக, ஈழத்தமிழ்
எழுத்தாளரும் எழுதியதை விட அதிகமாகவே இருக்கும். சாதித்துவேஷாகள் என்றும்
வாழ்வது இருட்டு உலகில் தான். அவர்களோடு நான் வாதிட வேண்டியது இல்லை.
அடுத்து, சுமதி ரூபன் அம்மையார்
கூறுகிறார், விருது பற்றி தொலைபேசியில் சொல்லக்கேட்டதும் நான்
¡புளகாங்கிதம்¡ அடைந்து விட்டதாக. அவருக்கு தூர த்ருஷ்டி
வரமாகக் கிடைத்துள்ளதா, அல்லது, இப்படி வர்ணிப்பது அவர் வாதத்திற்கும்,
இளக்காரத்திற்கும் உதவும் என்றா? எனக்கு விருது அளிக்கப்பட்டது, தமிழக
எழுத்தாளர் பலருக்கு உவக்காதது போலவே, இவருக்கும் உவக்காது இருந்தால்தான்
இப்படிக் கற்பித்துக் கொள்வதற்கு இவருக்கு நியாயம் உண்டு. இதே மனம் தான்,
ஜெயமோகன் ¡புளகாங்கிதம்¡ அடைந்ததாக வர்ணிக்க இவர்
ஆசைப்படுவதும். இப்படிப் பேச இவருக்கு என்ன ஆதாரம்? என் வார்த்தைகளில்,
என் எழுத்தில், என் நடத்தையில், மெய்ப்பாடுகளில்? ஆதாரம் அவர் மனத்தில்
தான் என்று நினைக்கிறேன்.இதை நான் குறிப்பிடக்காரணம், டி.செ.தமிழனின்
திருகல்களையெல்லாம், ¡சரியான பதிவு¡ என்று
சா¡ன்றுப்பத்திரம் வழங்கும் போது, சுமதி ரூபனின் மன அவசங்கள்
வெளிப்படுகின்றன. விருது எனக்கு மகிழ்ச்சியையும், வியப்பையும்
அளித்தது உண்மை. அதை நான் ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது
புல்லரிப்பு அல்ல. அந்த பருவத்தை நான் தாண்டி விட்டேன்.
பெண்ணீய கவிஞர்களின் சமீபத்திய
கவிதைகளில் உள்ள மொழிப்பிரயோகம் பற்றிக் கேட்கப்பட்டது. இவை எனக்கு
சம்மதமில்லை. எனக்கு உவக்காதவை. ஆயினும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.
அதற்கான வாத்ங்களையும் வைக்கிறார்கள், "எங்கள் வேதனையைச் சொல்ல,திடுக்கிட
வைக்க பச்சையாகத்தான் சொல்ல வேண்டும் "என்கிறார்கள். ஆக வாதம் விஷயம்
பற்றி அல்ல. மொழி பற்றியது. இப்போது அவர்களுக்கு உள்ள ஆவேசமும், உணர்ச்சி
வேகமும் இப்படி எழுதத்தூண்டுகிறது, இவை அடங்கியதும் இவர்கள் இம்மொழியைப்
பயன்படுத்த மாட்டார்கள். அப்போது, இம்மொழியின் அதிர்ச்சி குணம் மறையும்.
அல்லது இவர்கள் இதைக் கைவிட்டிருப்பார்கள்.அவரவர் பார்வைகள் அவரவர்க்கு.
அவர்கள் என்னையோ, நான் அவர்களையோ மதம் மாற்றும் அவசியம் இல்லை. கட்டாயம்
ஏதும் கிடையாது.
அவர்கள் என்னதான் வாதாடினாலும்,
அவர்களுக்கே இவை ஆபாசமாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம். அதனால் தான்
"உங்களுக்கு என்ன தோன்றுகிறது? என்று கேட்டேன். "எனக்கு ஆபாசமாக் இல்லை"
என்றார், சுமதி ரூபன். வீம்புக்குத்தான் இப்படி சொல்கிறார் என்று எனக்குத்
தோன்றியது. இப்போதும் என் எண்ணம் அதுவே. ஆனால் இதற்கு மேல் வாதமிட ஏதும்
இல்லை. அதனால் தான் , ¡சரி அப்படி என்றால், சரி¡ என்றேன்.
¡ஆபாசம் இல்லை என நீங்கள் நினைத்தால், அந்தக் கவிதைகளில்
ஒன்றிரண்டைச் சொல்லுங்கள் " என்று கேட்டிருக்கலாம். அவர் நாணி முகம்
சிவந்து, உடல் நெளிய மிகவும் அவஸ்தைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.
இல்லை எனில் வீம்புக்கு கவிதை வரிகள் சிலவற்றைச் சொல்லியிருந்தால்,
அக்கணங்களை அவர் வெகு நாட்கள் மறக்க முடிந்திருக்காது. "இதெல்லாம் மனித
உறுப்புக்கள் தானே, ஒன்று போல் மற்றொன்று" என பெண்ணியமும்
முற்போக்கும் கலந்த ஒருவர் எழுதி வாதிடினார். அப்போது அவர் தலை மட்டும்
தெரிய உடை போர்த்தித்தான் வந்திருந்தார். அவரிடம் கேட்க வேண்டிய
கேள்விகளைக் கேட்க எனக்குத்தான் மனமில்லை.
இதெல்லாம் சரி, இவர்கள் பார்வையை
சரி என நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறார்கள்.? நான்
இவர்களிடம் அதை எதிர்பார்க்கவில்லையே. ஒப்புக்கொள்ளாவிட்டால் அது
நழுவல் ஆகிவிடுமா?
ஜே.பி. சாணக்யா எழுதுகிறாரே, அது
இலக்கியமாகியுள்ளதே. அதை ஒப்புக்கொள்கிறீர்கள், இதை ஏன் ஒப்புக்கொள்ள
மறுக்கிறீர்கள்? என்று ஒரு கேள்வி. நான் சாணக்கியாவின் கதையைப்
படிக்கவில்லை. அது இலக்கியம், இலக்கியம் இல்லை என்று ஏதும் சொன்னதில்லை.
அதை ஏற்பதும் ஏற்காததுமான பிரச்னையே இல்லை. இங்கு ஒரு தவறு
நிகழ்ந்துள்ளது. பெண்ணிய வாதிகள் தாம் செய்வதற்கெல்லாம் அங்கீகாரம்
பெறத்துடிக்கிறார்கள். கிடைக்காத பட்சத்தில் என்னென்னவெல்லாமோ
விதண்டாவாதம் செய்கிறார்கள்.
பூமணியின், பெருமாள் முருகனின்
எழுத்துக்களில் ஒரிரு சொற்கள் வருகின்றனதான். ஆனால் அவை விஸ்தாரமான் பெரிய
படைப்பில் வரும் ஒரிரு சொற்கள். பெரும்பாலோர் இவற்றைக் கவனித்துக் கூட
இருக்கமாட்டார்கள். நான் இவற்றைக் குறிப்பிடுவது அவர்களுக்கு
வியப்பாகக்கூட இருக்கும். ஆனால் இவற்றை அவர்கள் தம்பட்டம் அடித்துக்
கொள்வதில்லை. ஏதும் சித்தாந்த லேபிள் ஒட்டுவதில்லை. ஆனால், சாரு நிவெதிதா
போன்றவர்கள் எழுத்தின் அடையாளமே இச்சொல்லாடல்கள் தான். ஆனால் அவர்கள்
இவற்றை ஏதும் ஆணாதிக்க கொள்கை முழக்கமாக வைப்பதில்லை. இது அவர்கள்
தனித்வம். சுதந்திரம் என்பார்கள். இவற்றை ஏற்பவர்கள் எதும் கொடி ஏந்தி
முழக்கமிடுவதில்லை. ஏற்காதவர்கள் இவற்றை தனி மனித வக்கிரம் என்று
ஒதுக்கிவிடுவார்கள்.
ஆனால் பெண்ணிய வாதிகளிடம் இது
சித்தாந்தமாக வெளிப்படுகிறது. அவர்கள் இயக்கத்தின் manifesto வாகவே
முன் வைக்கப்படுக்கிறது. அவர்கள் எழுத்தின் அடையாளமாகிறது.
இதை தனி மனித வக்கிரம் என்று யாரும் சொல்வதில்லை. அதனால் தான் தனி மனித
வக்கிரம் எனப்படுவது உதாசீனப்படுத்தப்படுகிறது. ஆனால் சித்தாந்தம்
கட்சியாடலுக்கு உள்ளாகிறது.
சுமதி ரூபனும், டி.செ.தமிழனும்
என் மீது ஒரு குற்றச்சாட்டை வீசியுள்ளனர்.கனடாவில் ஒன்றும், தமிழகத்தில்
வேறொன்றுமாக நான் பேசியுள்ளதாக. இதை அவர்கள் நிரூபிக்க ஒரு அரிய
வாய்ப்பைத் தரலாம் என்று எண்ணுகிறேன். அன்றைய நிகழ்வுகளின் பேச்சுக்கள்,
பரிமாறல்கள் பதிவாவதை நான் கவனித்தேன். அதை தருவதாக டி.செ.தமிழன் உறுதி
அளித்துள்ளார். ஓலி நாடா வேண்டாம். அவரும் சுமதி ரூபனும் சேர்ந்து
அப்பதிவினை எழுத்தில் வடித்து எனக்கு மின் அஞசல் மூலம்
அனுப்பமுடியுமானால், அதை ஒரு முற்றுப்புள்ளி பிசகாது வெளியிட
செளகர்யமாயிருக்கும். அவர்கள் தயை செய்ய வேண்டும். இப்போதுள்ள அவர்கள்
எதிர்வினைகளில் உள்ளது போல திருகல்களை ள் ஒலி நாடாவிலிருந்து எழுத்து
வடிவத்துக்கு மாற்றும் போது செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
swaminathan_venkat@rediffmail.com
-------------------------------------------------------------------------------------------------
தமிழகக் கோட்டைகள்!
- வெங்கட் சாமிநாதன் -
வெற்றுப் படாடோபங்களும்,
பம்மாத்துக்களும், தமிழ் சினிமாத்தனமான பாவனைகளுமே ஈர்ப்புப் பெறும்
இன்றைய தமிழ்ச் சூழலில், அமைதியாக தனக்குத் தெரிந்ததை, தான் ஆழமாக ஈடுபாடு
கொண்டவற்றை மாத்திரமே வெளி உலகுக்கு வைத்து அமைதி கொள்ளும் மனிதர்கள்
கவனிக்கப்படுவதில்லை. அதிகம் பேசுபவரும் உரக்கப் பேசுபவரும் இல்லை விட்டல்
ராவ். தண்டோரா போட்டால் தான் கவனிக்கப்படும் என்பது நியதியானால் இழப்பு
யாருக்கு என்பது ஒரு ஆரோக்கியமான சமூகத்துக்குத் தெரியும். ஆனால் தமிழ்
நாட்டில்
அது பற்றி பிரக்ஞையே இல்லை.
சௌகரியமாகப் போச்சு.
விட்டல் ராவ் பிறந்த, வாழ்ந்த
இடம் அவருக்கு பல வாய்ப்புக்களைக் கொடுத்துள்ளது. கன்னடமும் தமிழும்
சந்திக்கும் இடம். கன்னடம் பேசும் மாத்வ பிராமணர், தமிழராக தமிழ் நாட்டில்
வாழும் தமிழர். ஒவியம் படித்தவர். நாடகப் பித்து பிடித்தவர்கள் அவர்
குடும்பத்தில் இருந்தனர். கன்னட நாடகக் குழுவில் இருந்தவர்கள். இளம்
வயதிலிருந்தே நாடகத்திலும் சினிமாவிலும் ஈர்ப்பு. எழுத்தாளர். அவர்
பிறந்த, வாழ்ந்த மொழி கலாச்சார கலப்பு வாழ்க்கை வெகுவாக சிறப்பித்துக்
காட்டும் நாவல்களை எழுதியவர்.
இவையெல்லாம் போக தன் ஆளுமையின்
பரிமாணங்களில் காணும் இன்னொரு ஈடுபாட்டையும் விட்டல் ராவ் தனது சமீபத்திய
புத்தகம் தமிழகக் கோட்டைகள் என்னும் புத்தகத்தில் வெளிப்படுத்துகிறார்.
தமிழகக் கோட்டைகள் பற்றித்தான் அவர் பெரும்பாலும் எழுதுகிறார் என்ற
போதிலும் அவரது புத்தகம் மைசூர், சீரங்கப்பட்டினம் என்றும் விரிகிறது.
அவர் பிறந்து வளர்ந்த ஹோசூர், நாமக்கல், ஒமலூர் பகுதிகள் கோட்டைகள்
நிறந்தவை. விஜய நகர சாம்ராஜ்ய காலத்திலிருந்து தொடங்கி, நாயக்கர்கள்,
நவாபுகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், என்று கடந்து ஆங்கிலேய கம்பெனி
ஆட்சிக்காலம் வரை நீளும் சரித்திரத்தில் சீரங்கப் பட்டினத்திலிருந்து
தொடங்கி, கிருஷ்ணகிரி, வேலூர் என்று கடந்து வந்தால் சென்னை புனித ஜியார்ஜ்
கோட்டை வரை வரலாற்றால் சங்கிலித்தொடராக பின்னப்பட்டவை தான் இடைப்பட்ட
ஊர்களில் காணப்படும் கோட்டைகள் அத்தனையும். இவற்றின் மையம்,
இப்புத்தகத்தின் தொடக்கத்துக்கும், விட்டல் ராவின் இளம் வயதிலிருந்து
தொடங்கும் கோட்டைகள் மீது கொண்ட கவர்ச்சி வளர்ந்து இப்புத்தகத்திற்குக்
காரணமாகவிருந்த ஓமலூர் நாமக்கல் கோட்டைகள் தான். அப்பா அடிக்கடி மாற்றல்
பெரும் உத்தியோகத்தில் இருப்பவர். எல்லாம் அன்றைய சேலம் மாவட்டத்திற்குள்
தான். ஐந்து வயதில் 'கோட்டைன்னா என்னம்மா?' என்ற கேள்வியோடு தொடங்கி,
அடுத்த
வருடங்களில் மாறிய இடங்களில், தன்
விளையாட்டுத் தோழனோடு வீட்டுக்குத் தெரியாமல் ஊர் சுற்றக் கிளம்பியதும்,
பள்ளிக்கூட சுற்றுப் பயணம் பற்றிப் பேச்சு எழுந்தால் ' சார் கோட்டைக்குப்
போகலாமே சார்" என்றும், புதிய இடத்திற்கு மற்றலாகிப் போகும் பஸ்
பயணத்தில், 'அங்கேயும் கோட்டை இருக்குடா, காமிக்கிறேன்' என்று அப்பா
உற்சாகமூட்டுவதும் வாழ்க்கையின் கட்டங்கள்.
இப்படிப்பட்ட வாழ்க்கை தந்த
வாய்ப்புக்கள், இயல்பான கலை உணர்வு, ஒவியப் பயிற்சி, இலக்கிய உணர்வு
எல்லாம் சேர்ந்தால்,
கோட்டைகள் பற்றிய புத்தகம் வெற்று
விவரத் தொகுப்பாக இருக்க முடியாது. பழைய ஞாபகங்கள், பின்னர் சமயம் நேர்ந்த
போது புதுப்பித்துக்கொண்ட அனுபவங்கள், பின்னர் இது பற்றி எல்லாம்
எழுதவேண்டும் என்று தோன்றியபோது ஏற்படுத்திக்கொண்ட பிரயாண அனுபவங்கள்,
இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இழப்புக்கள், சரித்திர பதிவுகள், கும்பெனி
கால ஒவியர்கள் விட்டுச் சென்ற ஓவியப் பதிவுகள், பின் படித்திருந்த
சரித்திரம், கெஜட்டியர் தரும் விவரங்கள் என்று ஒரு கலவை இப்புத்தகம்.
தமிழகக் கோட்டைகள் பற்றிய
புத்தகம் தான். பெரும்பாலும் தமிழகத்தில் காண்பவை தான். ஆனால் இவற்றில்
அனேகம் நாம் பெயராகக் கூட பரவலாக அறிந்திராத கோட்டைகள். நாம் அறிந்திராதது
இருக்கட்டும். அறிந்தவற்றைப் பற்றிப் பேசலாம் முதலில். சென்னை புனித
ஜியார்ஜ் கோட்டையை உள்ளே சென்று ஆவலோடு பார்த்திருக்கும் சென்னை வாசிகள்
எத்தனை பேர் இருப்பார்கள்? நான் முதன் முதலில் தில்லியில் வேலைகமர்ந்த
போது முதலில் குதப் மினார் போகலாம் என்று கிளம்பிய போது என்னோடு
அலுவலகத்தில் இருந்த நண்பர்களும் உடன் சேர்ந்தனர். அவர்களில் பலர்
தில்லியிலேயே பிறந்தவர்கள். அவர்கள் குதப்மினாரைப் பார்த்தவர்கள் இல்லை.
அந்த
எண்ணம் தோன்றவில்லை அவர்களுக்கு.
ஆனால் விட்டல் ராவ் நமக்குக் காட்டும் காட்சி வேறு வகையானது. அது நம்
வரலாற்று
அக்கறைகளை, நம் மண்ணின் மீது
நமக்கு இருக்கும் பிரியத்தை, நம் கலைகள், நம் மூதாதையர் நமக்கு விட்டுச்
சென்றிருக்கும்
சொத்துக்களைப் பற்றி நமக்கு
இருக்கும் அறியாமை, அலட்சியம் பற்றியெல்லாம் சொல்லும்.
சிறு வயதில் அப்பாவோடு பார்த்த
மாளிகை அது, கெனில்வொர்த் காசில். ஹோசூருக்கு கலெக்டராக வந்த ப்ரெட் தன்
அன்பு
மனைவிக்காக, தன் நாட்டில்
இருக்கும் அழகான கெனில்வொர்த் மாளிகை போன்று ஒன்று கட்டிய மாளிகை அது.
அப்படிப்பட்ட
மாளிகையில் தான் வசிப்பேன் என்று
அவள் சொன்னாளாம். "மூளையில் ஹொசூரின் வரலாறும் டானியல்களின் ஓவியங்களும்
வளைய வர, நவீன தொழில் நகரமாகிவிட்ட "ஓசூர்" என தமிழ் உச்சரிப்பு பெற்ற
ஹோசூரை அடைந்தேன். பஸ் நிலையத்தில் அறுபது வயது மதிக்கத்தக்கவரை அணுகி
விசாரித்தேன்.
"கெனில் வொர்த் காசிலுக்கு எப்படி
போகலாம்"
அவர் நெற்றியைச் சுருக்கிக்
கொண்டு என்னையே உற்றுப் பார்த்தார். மீண்டும் கேட்ட போது, "அப்படீன்னா
என்ன?" என்று கேட்டார். அந்த இடத்தைக் காலி செய்து தபால் நிலையம் சென்று
கேட்டேன்.
"எந்தத் தெரு?" என்று கேட்டார்
அந்த சிப்பந்தி.
"தெருவெல்லாம் கிடையாது.
பெங்களூர் ரோடு, ஜூஜூவாடிக்கு ஏரிக்கு எதிரே"
"கதவு எண் ஏதாவது இருக்கா?" என்று
கேட்ட பெண் ஊழியரைப் பரிதாபமாகப் பார்த்தேன்.
"சார் தெரிஞ்சுக்கங்க. ஜூஜூவாடி
ஏரிங்கறதே இப்ப இல்லே. அது போய எத்தனையோ வருஷமாச்சு. ஏரியத் தூத்துட்டுத்
தான் சிட்கோ தொழிற்பேட்டை வந்திருக்கு. எந்தூரு நீங்க?"
"சரி கோட்டைக்கு எப்படிப் போறது?"
"அது கூட இருக்காதே. பஸ்
ஸ்டாண்டுக்குப் பின்னாடியா போய்ப் பாருங்க.
நான் திரும்பிச் செல்லும்போது,
மூத்த சிப்பந்தி பெண் சிப்பந்தியிடம் சொன்னது தெளிவாகக் கேட்டது.
"பாவம் எதையோ நினைச்சிக்கிட்டு,
எதையோ தேடிக்கிட்டு, பைத்தியக்காரத்தனமா......"
கடைசி முயற்சிகளில் ஒன்றாக, காவல்
நிலையத்திற்குச் சென்றேன். அது பெங்களூர் சாலையை ஒட்டியிருந்தது.
இன்ஸ்பெக்டர், நடுத்தர
வயது.
"சார், கெனில்வொர்த் காசில் பத்தி
தெரியுமா? அது எங்கிருக்கு இந்த ரோட்லே.?
"ஏதாவது காணாமப் போயிருச்சா?
"இல்லீங்க அது வெள்ளைக்கார மாளிகை"
"சார் இது போலீஸ் ஸ்டேஷன். ஏதாவது
கம்ப்ளெய்ண்ட் கொடுக்கணுமா?
"அதைப் பார்க்கணும். சின்ன வயசிலே
பார்த்தது."
"எதை?
"கெனில்வொர்த் காசிலை"
"அப்படீனா யாரு, தொரையா?"
"துரை கட்டின மாளிகை."
"போய் விசாரிச்சு பாருங்க.
எங்கிருந்து வர்ரீங்க?"
எப்படியோ ஒரு வழியாகத் தேடி
அலைந்து சென்று பார்த்த போது "கோட்டை மதிற்சுவர்கள் தரைமட்டத்திற்கு
இருந்தன" காணக்
கிடைத்தது, அம்மைத் தழும்பு போல்
ஆகிவிட்ட அகழி மட்டுமே. தரை மட்டத்திற்கு மேல் எதுவுமே இல்லை. புல் டொசர்
ஒன்று
கோட்டையின் கடைசி கட்டுமானத்தை
இடித்துக் கொண்டிருந்தது; வீட்டு வசதி வாரியம் அலுவலகம் முதலிய
கட்டுவதற்காக ஹோசூரின் வரலாற்றுச் சின்னங்களையும், திப்பு சுல்தானின்
கோட்டையையும், இடித்துத் தரைமட்டமாக்கிக்கொண்டிருந்தன. அகழி என்றோ
மூடப்பட்டு விட்டது. கெனில் வொர்த் மாளிகை இடிக்கப்பட்டது எண்பதுக்களில்
நடந்து விட்டது. தொன்னூறுகளில் ஹோசூர் கோட்டையும் இடித்தாகிவிட்டது. தர்ம
புரி கிருஷ்ணகிரி ம்யூசியம்களில்(?) உடைந்த சிற்பங்களும், நடுகற்களும்
தான் இருந்தன. பாராமஹால் கோட்டைகள், மாளிகைகள் குறித்த புகைப்படங்களோ,
சித்திரமோ, குறிப்புகளோ எதுவும் இல்லை. விசாரித்தால்
சலித்துக்கொள்கிறார்கள். கோட்டைகள், மாநில அரசி அருங்காட்சியகங்களின்
பொறுப்பில் இல்லையென்றும், அவை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின்
பொறுப்பில் உள்ளவை என்றும் கூறி விரைவாக வெளியில் அனுப்புவதில் தான்
குறியாக இருக்கிறார்கள். பஸ் நிலைய பழக்கடையில் விசாரித்த வயோதிகருக்கும்,
இந்த மாநில அரசு அருங்காட்சியக அலுவலகர்களுக்கும் வித்தியாசம் கொஞ்சம்
தான்" என்று கூறி முடிக்கிறார், ஒரு பயணக் கதையை விட்டல் ராவ்.
இத்தகைய அனுபவங்கள் அவருக்கு
திரும்பத் திரும்பக் கிடைக்கின்றன. தாலிபான்கள் ஒரு குருட்டுத்தனமான மத
வெறியால் சரித்திரத்தையும் கலைகளையும் அழிக்கின்றனர். நாங்கள் தமிழர்.
எங்களுக்கு இன்று தேவை பணம், வீட்டு மனைகள், கட்டிடவேலை செய்து சம்பாதிக்க
ஏரிகள், குளங்கள், பழம் வரலாற்றுச் சின்னங்கள் எதுவானாலும் இடித்து
தரைமட்டமாக்கி வீட்டு மனைகளாக்க.
தென்கரைக் கோட்டைக்கு பள்ளிச்
சிறுவனாகச் சென்றபோது, கல்யாண மகால்கள், படிகள் கட்டப்பட்ட குளம், அதை
ஒட்டிய பெரிய மண்டபங்கள், ராணிகள் குளிக்கும் இடம் என்று சொல்லப்பட்டது.
பள்ளிச் சிறுவன் ஒருவன், மிகுந்த வேலைப்பாடுகள் கொண்ட ஒரு சுவரில், தன்
பெயர், தான் படிக்கும் படிவம், பள்ளியின் பெயர் எல்லாம் கீறி வைக்கிறான்.
இசைத்தூண்கள் ஒவ்வொன்றையும் சிறுவர்கள் கல்லால் அடித்து இசை
எழுப்புகிறார்கள். 'டேய் மெல்லத் தட்டுங்கடா" என்று சொல்லவேண்டியிருக்கிற
து. இப்போது ஐம்பது வருடங்களுக்குப் பிறகு விட்டல் அங்கு சென்ற போது, ராணி
குளிக்கும் மண்டபம் சிறு வயதில்பார்த்தது எங்கென்றே காணோம். எங்கும் புதர்
மண்டி, இடிபாடுகளுக்கிடையே பாசி ஏறிய சுண்ணாம்புப் பாளத்திடையே
"அன்னய்யன், இரண்டாம் படிவம், ஏ-பிரிவு, ஜில்லா போர்டு உயர்நிலைப் பள்ளி
ஹோசூர்" என்று ஆணியால் கீறப்பட்டிருந்தது மாத்திரம் தெரிந்தது. எது
அழிகிறது, எது அமரத்வம் அடைகிறது என்பதிலும் விடம்பனம்.
கோட்டைக்குள்ளிருந்து ஒருவன் வெளிவந்து உள்ளே போகாதீங்க, கூட்டம்
நடக்குது, அது முடிந்த பிறகு போகலாம்" என்று தடுக்கிறான். அவர்கள்
பாளையக்கார வம்சமாம். அவர்கள் கூட்டம் நடக்கிறதாம்.
ஆத்தூர் கோட்டை,
சமவெளிக்க்கோட்டைகளில் மிக அழகானது என்கிறார். அதைப் பார்க்கப் போகிறார்.
இன்னமும் பார்க்க அழகாகத் தான் இருக்கிறது தூரத்திலிருந்து பார்க்க.
சாக்கடைகளைக் கடந்து புதர்களையும் இடிபாடுகளையும் கடந்து செல்லவேண்டும்.
மேற்கூரை இடிந்து காணப்பட்ட அது நெற்களஞ்சியமாக இருந்ததாம். இப்போதும் அது
நெற்களஞ்சியமாகத்தான் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
பாளையக்காரர்களுக்கோ அரசுக்கோ அல்ல. அதைப் பாதுக்காக்க என்று
நியமிக்கப்பட்டுள்ள ஒருவனின் குடும்பத்து தானியங்கள் அங்கு காயப்
போடப்பட்டுள்ளன. 'போட்டோ எடுக்காதீங்க" என்று அங்குள்ள பெண் தடுக்கிறாள்.
பின் அந்தப் பெண்ணோடு போய் பார்த்ததில், அங்கு கிடந்தவை, கீற்றுக்கள்
ஓலைத் தடுப்புகள், காயப் பரப்பப்பட்ட விறகுக்கட்டைகள், மட்டை உரிக்கப்படாத
தேங்காய்க் குவியல்கள்.
அங்கு ஒவ்வொரு மஹாலும், முட்கம்பி
வேலியிடப்பட்டு, தொல்பொருள்துறையின் பெரிய நீல நிற எச்சரிக்கைப் பலகை
சகிதம் பாதுக்காக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாட்சியம் பெரிய நீல நிற
எச்சரிக்கைப் பலகைதான். மஹாலின் மையத்தில் ஒரு கயிற்றுக் கட்டில், ஒரு
தலையணை.
வாட்ச்மேன் படுத்துப்பாரா?
வாட்ச்மேன், கீச்சுமேனெல்லாம் இல்லை. பக்கத்து வீட்டுத் தாத்தாதான்
காத்தாட வந்து படுப்பாரு.சென்னைக்கு வரும்போதெல்லாம், செங்கல்பட்டைக்
கடக்கும்போது "கோட்டை ரோடு" என்ற அறிவிப்புப் பலகை ஒன்று அறுபதுகளில்
கண்ணில் பட்டுக்கொண்டிருக்கும். ஊரு முடிந்து கொளவாய் ஏரியை ஒட்டி பழைய
கோட்டையின் நீண்ட சுவரும், சுவரை ஒட்டி புற அரண்கள் ஒன்றிரண்டும்
தென்படும் என்ற ஞாபகத்தில், "கோட்டைக்கு இப்படியே போகலாங்களா? என்று
இப்போது விசாரித்த விட்டல் ராவுக்குக் கிடைத்த பதில், "நீங்க
நின்னுட்டிருக்கிறதே கோட்டை ஏரியாதாங்க எல்லாமே".
இப்படியான அனுபவங்கள்
அடுத்தடுத்து நேரும்போது, இன்றைய தமிழ் பண்பாட்டின் காவலர்களின்
பண்பாட்டுணர்வு வறுமையை எண்ணி துக்கிக்க வேண்டியிருக்கிறது. இவர்கள் வேறு
வகை தாலிபான்கள் என்பதை யாரும் உணரவில்லை.
இது ஒரு புறமிருக்க இவர்களையும்
மீறி கோட்டைகள், பழம் வரலாற்றுச் சின்னங்கள் பல அழிவிலிருந்து
தப்பியுள்ளனதான். அவை எவ்வளவு நாட்கள் இருக்குமோ தெரியாது. ஐம்பது
வருஷங்களுக்குள் இவ்வளவு அழிபாடுகளை எங்கள் நாடு அமைதியில்
வாழ்ந்திருக்கும்போதே நாங்கள் சாதித்திருக்கிறோமென்றால் அது
ஆச்சரியப்படவேண்டிய விஷயம் தான்.
fort_tamilnadu_Gingeefort_2.jpg
அப்படி மிஞ்சியிருப்பவை பற்றி அனுபவித்து, எழுதியிருக்கிறார் விட்டல்
ராவ். இப்படி ஒரு விஷயத்தை எழுதத் தேர்ந்தெடுத்தது
அபூர்வம் தான். தென்கரைக் கோட்டை,
பாராமஹால், ஆத்தூர் கோட்டை, ஏன் செங்கல்பட்டுக்கோட்டை என்று கூட நான்
கேள்விப்பட்டதில்லை. இப்படி நிறைய
தகவல்கள், அவற்றின் சரித்திரப் பின்னணி, கோட்டையின் கட்டுமான அழகுகள்,
அவற்றிற்கான ஆவணச் சான்றுகள், கேள்விப்படும் பழம் கதைகள் என நிறைய
எழுதியிருக்கிறார். ஒவ்வொரு கோட்டைக்கும் சென்று பார்க்கும்போதும், சிறு
வயது நினைவுகள், படித்த சரித்திரம், டானியல்கள் இருவரின் ஒவியங்கள்
எல்லாம் அலைமோது. குறிப்பாக ஒவியப் பதிவுகள் பற்றி கிடைத்தவரை
எழுதியுள்ளார். இவை எனக்கு மிக சுவாரஸ்யமானவை. ஐம்பதுக்களில் முதன் முதலாக
கொல்கத்தா சென்றிருந்த போது விக்டோரியா மெமோரியல் ஹாலில் பார்த்த
டானியல்களின் ஒவியங்கள், பின் தில்லி ஜெய்பூர் மாளிகையிலும் சில
டானியல்கள் உள்ளன, பார்த்த எத்தனையோவற்றில் இவையும் நினைவில் பதிந்துள்ளன
என்றால், அவற்றின் ஒவியச் சிறப்போடு ஆவண முக்கியத்வமும் முன்னிற்கிறது.
கடந்துவிட்ட காலத்தைப் பற்றிய பிம்பங்களை உருவாக்கி திரையோடும் அவை.
பின்னர் தாணாய்க்கன் கோட்டை புத்தகத்தை என்னிடமிருந்து இந்த புத்தகம்
எழுவதற்காகவே விட்டல் ராவ் எடுத்துச் சென்றார்.
இது மிக முக்கியமான நூல். இதை
வெளியிட ஒரு பிரசுராலயம் அவருக்குக் கிடைத்துள்ளது பற்றி எனக்கு மிக
சந்தோஷம். ஆனால், இதில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அனேகம்
தெளிவற்றவை. எவ்வித தெளிவான உருவையும் அவற்றில் நாம் பார்க்க முடியாது,
இருள் மண்டியவையாக ஏதோ மாலை நேர சில்ஹட்டைப் போல காண்கின்றன இவை. மேலும்
இப்புகைப்படங்கள் எது பற்றியவை என்று ஒரு குறிப்பும் இல்லாது பிரசுரம்
செய்யப்பட்டுள்ளன. புகைப்படங்கள் இல்லாது இத்தகைய புத்தகம் வெளிவருவது
அர்த்தமில்லாதது. ஆனால் அப்புகைப்படங்கள் இருள் பூசப்பட்டைவையாகவே
தரப்பட்டால், அதை என்ன சொல்வது?
இது தொலைபொருள் காப்பகத்தின்
பாதுகாப்பில் உள்ளது என்று ஒரு பெரிய நீல நிற எச்சரிக்கைப் பலகையை
நிறுத்தி விட்டால் தங்கள் பணி தீர்ந்தது என்று எங்கள் தொலைபொருள்
பாதுகாப்பகம், அரும்பொருள் காப்பகங்கள் செயல்படுகின்றன. அது போல்தான்
எல்லாமே இருக்கும்
தொமஸ் டேனியலும் அவரது மருமகன்
வில்லியம் டேனியலும் இப்பழைய அரண்கள் இருந்த விடமெல்லாம் சென்று ஒவியம்
வரைந்தது பற்றி அதற்கு அவர்கள்
படும் சிரமங்கள், எடுத்துச் செல்லும் பொருட்கள், -ஏதோ ஒரு
படையெடுப்புக்கான ஆயத்தம் போல அவை தோன்றும், - பற்றி விட்டல் ராவ்
எழுதியிருப்பது மிக சுவாரஸ்யமானது. அவை தான் பல கோட்டைகள், அக்கால
காட்சிகள், உடைகள், வாழ்க்கை பற்றிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. நாம்
இழந்தது எது என்பதையும் அவை சொல்கின்றன. ஆங்காங்கே விட்டல் ராவ்,
"இக்கோட்டை டானியலின் ஒவியங்களில் பதிந்துள்ளதா என்று தெரியவில்லை." என்று
எழுதுகிறார்.
தமிழகக் கோட்டைகள்:விட்டல்ராவ்.
அம்ருதா பதிப்பகம், எண் 5, ஐந்தாவது தெரு, எஸ்,எஸ் அவென்யு, சக்தி நகர்,
போரூர், சென்னை 600116 விலை ருபாய் 150.
-------------------------------------------------------------------------------------------------
vithya_sankar_sthapathy_statue.jpg
trostky_maruthu_vithiyee.jpgதமிழ்
நாட்டுக் கலைகளின் சீர்மையும் சீரழிவும் - இன்றைய சித்திரம்!
- வெங்கட் சாமிநாதன் -
தமிழகக் கலைச் சூழல் பற்றி
எழுதுவது சிக்கல்களிலும் முரண்களிலும் அகப்பட்டுத் தவிப்பதாகும்.
கலைவடிவங்கள் அத்தனையும் ஒரு சீரான கலை உணர்வால் பேணப்படுவதில்லை.
ஒவ்வொன்றும் வெவ்வேறு வித சூழல்களால் ஆக்கப்பட்டும் அழிக்கப்பட்டும்
வருகின்றன. அழிக்கப்பட்டு வருபவை ஏதோ மகோன்னத வாழ்வு வாழ்வதாக பெருமை
பேசப்பட்டு வருகின்றன. தம் கலைப் பண்புகள் அதிகம் பாதிக்கப்படாது ஏதோ தன்
பாட்டில் தம்மைக் காத்து வரும் கலைகள் கலை உணர்வின் தாக்கத்தால் தான்
தொடர்ந்து ஜீவிக்கின்றன என்றும் சொல்லமுடியாது. இப்படி பொதுப்படையாகச்
சொல்லிச் செல்வது முரண்களையும் சிக்கல் களையும் தெளிவாகச் சொல்வதாகாது.
ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லவேண்டும்.
ஒரு பொதுவான பாகுபாட்டில்
இக்கலைகளின் வாழ்நிலையைக் கொண்டு இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம் முதலாவது,
மரபார்ந்த நீண்ட வரலாறு கொண்ட வடிவங்கள். மற்றது புதியன ஆங்கிலேயர்களின்
வருகைக்குப் பின் இம்மண்ணில் அறிமுகப்படுத்தவை.
ஒரு உதாரணத்தோடு இதை விளக்கலாம்:
நீண்ட பாரம்பரியம் கொண்ட ஒன்று: சங்கீதம். புதிய கலைவடிவம் ஒன்று; சினிமா.
இரண்டிலும் நான் நேர் எதிர் துருவங்களின் கோடியில் இருக்கும் இரு
உதாரணங்களையே எடுத்துக் கொள்கிறேன். எம்.டி.ராமனாதனின் சங்கீதம் ஒரு
புறம். மிகவும் பண்பட்ட, நுண்ணிய சங்கீத ரசனை கொண்டவர்களையே கவரும் குணம்
கொண்டது இது. இதற்கு எதிராக மகோன்னத வெற்றி என்று கொண்டாடப்படும் ஒரு
தமிழ்த் திரைப்படம். எதிலுமே ஒன்றும் அறியாத பாமரனானாலும் சரி, நல்ல
சங்கீத உணர்வு கொண்டவரானாலும் சரி, இருவரது சினிமா பற்றிய எதிர்வினைகள்
ஒரே தரத்ததாக, தமிழ்க் கலைச் சூழலில் இருப்பது ஒரு முரண் வினோதம்.
திரைப்படம் என்றால் காசு கொடுத்துப் பார்க்கும் வெகுஜனங்களின் அதம பொது
ரசனைதான், எல்லோருடைய ரசனையும். "என்னய்யா படம் எடுத்திருக்கே?" என்று
யாரும் கேள்வி கேட்கலாம். அது நியாயம் தான் என்று எல்லோரும்
ஒப்புக்கொள்ளும் உண்மையாகிறது.
ஆனால், இதற்கு எதிராக, நிரம்ப
படித்த அறிவாளியும் சரி, பாமரனும் சரி, எம்.டி. ராமனாதனின் சங்கீதத்தைப்
பற்றி அபிப்ராயம் சொல்லும் தகுதி தனக்கு இருப்பதாக நினைக்கக் கூட
மாட்டார்கள். "அதெப்படிங்க, அதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் இல்லிங்களா?
சங்கீதம் தெரியாம அது பத்தி எல்லாம் எப்படிங்க பேசறது?" என்பது தான்
ஒருமித்த அபிப்ராயமாக தமிழ் நாடு முழுதும் இருக்கும். அது சினிமாவுக்குள்
நுழைந்ததும், அவ்வக்கால வெகுஜனம், மாறிவரும் ரசனைக்கேற்ப, தனக்கு அந்த
தகுதி வந்துவிட்டதாக கருதுகிறது. நாற்பதுகளில் படித்தவனும், பாமரனும்
ரசித்தது, (சந்தையில் வியாபாரம் முடிந்து இரவு ஆட்டம் பார்த்துத் தன்
கிராமத்துக்குத் திரும்பும் வண்டிக்காரன் பாடிக்கொண்டும் போக, நான்
கேட்டது) "அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி சுப்பனைப் பாடுவேனோ?" வாக
இருந்தது. இருபது வருஷங்களுக்குப் பின் அது சற்று மாறியது. அறுபதுகளில்
அவர்கள் ரசித்துக் கேட்பது "போனால் போகட்டும் போடா" வாக இருந்தது, இன்று
அது "அண்டங்காக்கா கொண்டைக்காரி"யாக இருக்கிறது.' இன்று தமிழ்த்
திரைப்படம், கலை உணர்வையே, அது எத்தரத்தினதாக இருந்தாலும் சரி, அதை தனக்கு
எதிரியாக நினைக்கிறது. கலை உணர்வு அலட்சியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று
என்று நினைக்கிறது. எவ்வளவு அதிக பட்சமான மக்களை ஈர்ப்பதையும் அவர்களின்
உடனடி கிளுகிளுப்புக்கு தீனி போடுவதையுமே தனது ஒரே இலக்காகக்
செயல்படுகிறது. சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் தரம் படிப்படியாக
தேய்ந்து இன்று அது தரத்தின் அடிமட்டத்திற்கு போனது மட்டுமல்லாமல், சாதாரண
பொதுப்புத்தி கூட ஏற்க இயலாத ஒன்றாக ஆகியுள்ளது. தமிழ் நாடு என்றுமே
'சினிமா' என்ற சாதனத்தைக் கலைவடிவாக புரிந்து கொண்டது இல்லை. இருந்த
போதிலும், ஆரம்ப காலங்களில் அதில் ரசிக்கக் கூடியதாக, இன்றும் கூட நம்மை
மகிழ்விக்கும் குணம் உள்ள ஒன்றாக இருந்தது. காரணம், அதில் அந்நாட்களில்
பிரதான அம்சமாகக் கருதப்பட்ட சங்கீதம் தான். அது கேவலப்படுத்தப்படாத
காரணம், மறுபடியும், சங்கீதத்திற்கு இருந்த பாரம்பரியமும், மரபும் தான்.
சங்கீதத்திற்கு அதன் செவ்விய
தளத்தில் (in its classical form) ஒரு நீண்ட பாரம்பரியமும் வரலாறும்
உண்டு. இரண்டாயிரம் வருடங்களுக்குக் கூட அதை நீடிக்கலாம். இதை விவரம்
தெரிந்தவர் மட்டுமல்ல, எதெற்கெடுத்தாலும் மக்களை முன் வைக்கும் அரசியல்
கட்சிகளும் ஒப்புக்கொள்ளும். காரணம், இன்றைய கர்னாடக சங்கீதத்தின் அன்றைய
வடிவை இன்று நாம் தமிழிசை என்று சொல்கிறோம். தம் அரசியலை அதன் ஆதாரத்தில்
கட்டமைக்கும். மிக நியாயமான கோரிக்கையாக, தமிழில் பாடவேண்டும் என்பார்கள்.
திருவாரூர் மும்மூர்த்திகளுக்கும் முன் இருந்த மும்மூர்த்திகளை ஏன்
மறந்தீர்கள் என்பார்கள். இதில் சாதி அரசியல் இருந்தாலும் சங்கீதத்தின்
செவ்விய தளம் கேள்விக்குள்ளாகவில்லை. ஏனெனில் அது இன்றைய இவர்களது
உருவாக்கம் இல்லை. அதன் செவ்வியத் தொன்மை பெருமைக்குரிய தாகிறது.
'மோகனம் வேண்டாம், ஏற்றப்பாட்டு
பாடு, அது தான் மக்களைச் சென்றடையும்' என்று யாரும் அன்று சோனதில்லை.
மோகனம் என்று நீங்கள் இன்று சொல்வதை அன்று முல்லைப் பண் என்றார்கள் என்று
தான் மறுப்பு எழும். பெயர்களைப் பற்றிய பிரச்சினை இல்லை. செவ்விய
வடிவத்திற்கு ஆபத்திருந்ததில்லை. நாடகங்களிலும் சரி, பின்னர் வந்த
சினிமாவிலும் சரி, சங்கீதம் சங்கீதமாகத்தான் இருந்தது. முன்னூறு
வருடங்களுக்கு முன் புரந்தர தாசரிடமிருந்து பெற்ற சிந்து பைரவி 'வெங்கடேச
நிலையம், வைகுண்டபுர வாசம்", அறுபது வருடங்களுக்குப் பின்னரும் எம்.எஸ்
குரலில் அது சினிமாவில் "காற்றினிலே வரும் கீ தம்" ஆயிற்றே ஒழிய குணம்
மாறவில்லை. "க்ருபயா பாலய சௌரே" என்று வெளிப்படும்
சாருகேசி,....சினிமாவுக்கு ஒரு கேளிக்கையாக வந்தால் கூட சாருகேசியாகத்தான்
இருந்தது தியாகராஜ பாகவதரின் "மன்மத லீலையை ..." பாட்டில் கூட. தியாக ராஜ
பாகவதர் என்னும் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாத, வெகுஜனப்ரிய சினிமா
பாடகர் கூட "கா..கா... கா" பாடியிருப்பார் என்று நினைக்கமுடியாது. அவர்
உயிரோடு இருந்தார். மதிப்புகளின் சரிவு அவர் ஜீவிய காலத்திலேயே
தொடங்கியாயிற்று. ஆனால் அந்த சரிவு தொடர்ந்து இன்றிருக்கும் நிலையில்,
கர்நாடக சங்கீதத்தின் புகழ் வாய்ந்த பாடகர்கள் கூட, சினிமா அழைத்தால்,
சமரசம் செய்துகொள்ளத் தயாராகத்தான் இருக்கிறார்கள். சமரசம் எவ்வளவு கீழே
என்பது அவரவர் மனப்பண்பைப் பொறுத்தது. அன்றைய பாபநாசம் சிவன், (இந்த
நூற்றாண்டில் இவருக்கு இணையானவர் அல்லது அடுத்த படியில் உள்ளவர் என்று ஒரு
வாக்கேயகர்த்தாவை நான் காணவில்லை) கூத்தாடிகள் கூடாரம் என்று
அக்காலங்களில் நிந்திக்கப்பட்ட சினிமாவில் கால் பதித்தாலும், அவர்
பாபநாசம் சிவனாகத்தான் இருந்தார். அவர் சினிமாவுக்குச் செய்த பங்களிப்பு
அவருடைய பாடல்களும், இசையும், சினிமாவிலிருந்து பிரித்தாலும் தனித்தே அவை
தம் செவ்வியல் குணத்தை சற்றும் இழக்காதவை.
ஆனால் இன்று எவ்வளவு புகழ்
வாய்ந்த கவிஞரே ஆனாலும் அவரிடம் கொடுக்கப்படும் மெட்டுக்கு சொல்பவர்
சொல்படி வார்த்தைகளை இட்டு நிரப்புகிறவர்தான். ரஹ்மானே
இசையமைத்திருக்கலாம். பாட்டு எழுத வந்தவர் "ருக்குமணீ, ருக்குமணீ" என்று
விளித்து முதல் இரவு என்ன நடந்தது என்று கேட்டு ஒரு டஜன் கிழவிகள்
நடனமாடும் பாடலாக அது இட்டு நிரப்பபடும். அவர் எப்படியும் கேட்டபடி
மாற்றிக் கொடுப்பார். அது தணிக்கைக்கு இரையாகாமல் இருக்கவேண்டும்.
சினிமாவில் அவர் கவிஞரும் இல்லை. இசையும் அது மக்கள் கூட்டத்தின் இன்றைய
ரசனையைச் சொல்வதாக இருக்கும்.
ஆனால் கர்னாடக இசை, முன் சொன்னது
போல இன்றும் வாழ்கிறது. சினிமாவின் பாதிப்பு அதற்கு ஆளாகும்
பாடகர்களிடமிருந்து தமக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்கிறதே அல்லாது கர்னாடக
இசையை ஏதும் பாதகமாக பாதித்து விடவில்லை. கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு
இன்று ஆதரவு பெருகியுள்ளது. உலகம் பூராவும் தென்னிந்தியர் வாழும்
இடங்களில் எல்லாம் அவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அவர்கள் ஒரு
ராஜரத்தினமாகவோ, மதுரை மணியாகவோ இருக்கவேண்டும் என்ற அவசியல் இல்லை.
துறையில் ஒரளவு பெயர் பெற்ற கலைஞர் வருடா வருடம் வெளிநாடு செல்லாதோர்
மிகக் குறைவாகவே இருப்பர். சென்னையின் டிஸம்பர் விழாப் போன்று, அல்லது
திருவையாறு தியாக ராஜ் உத்சவம் (திருவையாற்றில் மட்டுமல்ல, இப்போது அது
தமிழர் இருக்குமிடமெல்லாம் நிகழ்கிறது) போன்று அதற்கு இணையாக, அதன்
பிரும்மாண்டத்திலும் செல்வாக்கிலும், வேறு இல்லை என்றுதான் நான்
நினைக்கிறேன். "தமிழ் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் சங்கீதம், நாட்டியம்
பயிலும் குழந்தையைப் பார்க்கலாம்" என்பது பொதுவாக வங்காளிகளிடையே நிலவும்
அபிப்ராயம். இது சற்று மிகைப்படுத்தப்பட்ட உண்மை என்று சொல்லவேண்டும்.
தமிழ் நாட்டில் செவ்விய கலைகளாக, சங்கீதத்திற்கும் நடனத்திற்கும் உள்ள
ரசனையின் வியாபகமும் ஆதரவும், இந்தியாவில் வேறு எங்கும் எந்த செவ்விய
கலைக்கும் இல்லை.
கர்னாடக சங்கீதம் அழியவில்லை.
இன்றைய சினிமாவை மீறி, அரசியலை மீறி ராக்ஷஸ பலம் கொண்ட தொலைக்காட்சியையும்
மீறி, அது தன்னைக்காத்துக் கொண்டுள்ளது சற்று நம்ப முடியாத ஆனால்,
சந்தோஷம் அளிக்கும் ஒன்று தான். காரணம் அதன் பாரம்பரியம் மிகப் பழமையானது.
ஆழ வேரூன்றியது. மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன தான். முன்னர் போல அது
ஜமீந்தார்களையும் கோவில்களையும் சார்ந்து வாழவில்லை. சபாக்கள், அரசு,
மக்கள் என அதன் புரவலர்கள் மாறியுள்ளனர். காலமாற்றத்தின் விளைவு. யாரும்
வறுமையில் வாடுவதில்லை. ஆனால் மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், திருவாடுதுறை
ராஜரத்தினம் பிள்ளை, புல்லாங்குழல் மகாலிங்கம், மதுரை மணி அய்யர், எம்.டி.
ராமனாதன் போன்ற கலைஞர்கள் இந்த தலைமுறையில் இல்லை. கர்னாடக சங்கீதம் ஒரு
நாதோபாசனை என்று சொல்வதுண்டு. இன்று கர்னாடக சங்கீதம் உள்ள நிலையில் அதை
நாதம் என்றோ உபாசனை என்றோ எவ்வளவுக்கு சொல்லமுடியும், எவ்வளவு பேரிடம்
இதைக் காணமுடியும் என்பது எனக்கு சந்தேகமே. இவ்வளவு செல்வாக்கும் ஆதரவும்
இருந்த போதிலும், இன்று அது பாடுதல் (performance) என்ற அளவிலேயே
இருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. அதை மீறி நாதத்தில் நம்மையோ, பாடுபவர்
தம்மையேவோ மறந்து திளைக்கச் செய்யும் ஒரு அனுபவமாக(experience) எழுச்சி
பெறுவது என்பது கிடைப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொன்னால், கற்ற
காரணத்தால், செய்யுள் இயற்றத்தெரிகிறது, ஆனால் கவிதை பிறப்பதில்லை என்பது
போலத்தான். இத்தகைய மீறலை, நிகழ்ச்சி அனுபவமாக எழுச்சி பெறுவதை நான் சில
சமயங்களில், ஓ.எஸ் அருணிடம், சஞ்சை சுப்பிரமணியனிடம் கண்டிருக்கிறேன்.
அனேக மற்ற சமயங்களில், ' கச்சேரி எவ்வளவு நன்னா அமைஞ்சுட்டது பாத்தியா?
என்பது போலத்தான் ஒரு உணர்வு. ஒரு கிஷோரி அமன்கரோ, உஸ்தாத் அமீர் கானோ,
குமார் கந்தர்வாவோ பாடும்போது ஏற்படும் அனுபவ மெய்சிலிர்ப்பு வெகு
அரிதாகத்தான் கர்னாடக சங்கீதத்தில் இன்று கிடைக்கிறது. ஸ்வரங்கள் ராகமாவது
போல, ராகம் ஒரு நாத உலகமாக, ஒரு தவமாக, தன்னை மறந்த லயிப்பாக, சஞ்சாரமாக
அனுபவ மாற்றம் பெறுவதில்லை. சங்கீதம் இரண்டு மணிக்கான நிகழ்ச்சி நிரலாக,
மாறியுள்ளது. பாடகர்கள் தம் குரலைப் பற்றிக் கவலைப் படுவது என்பது
முன்னரும் இருந்ததில்லை. இன்றும் இல்லை. தனக்காகப் பாடுவது, மற்றோர்
கேட்பது என்பது இன்றைய நடைமுறையில் இல்லை. குமார் கந்தர்வாவின் மகன், ஏதோ
ஒரு கிராமத்தில் ஒரு காளி கோயிலில் தங்கி பூஜை செய்வதும், கோயிலைச்
சுத்தப்படுத்துமாக நாட்களைக் கழிப்பவர், பெயர் மறந்து விட்டது, எப்போதாவது
யாராவது அழைத்தால் படுவது என்று வாழ்க்கை மாறியுள்ளது அவருக்கு. அப்படி
இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. அந்த மனம் வேண்டும். யாரும் தன்
கவனத்தைக் கெடுத்தால், மனம் சரியில்லை என்றால், மேடையை விட்டு எழுந்து
விடும் கிஷோரி அமன்கரின் சங்கீத அர்ப்பணிப்பு சங்கீதத்திற்குத் தேவை.
சடங்காக உள்ள ஒன்று பூஜையானால் நல்லது. குறைந்தது அது அர்ப்பணிப்பாக,
தன்னை மறத்தலாக அல்லது ஒரு பங்கு பெறும் அனுபவமாகவாவது ஆவது நல்லது.
அப்போது தான் அது கலையாகும். இல்லையெனில் பயின்ற தொழில் தான்.
எல்லைகளை மீறி தன் செல்வாக்கைப்
பெற்றுள்ளது. இது பெற்றுள்ள செல்வாக்கு வேறு நடன வடிவிற்கு இதுகாறும்
இல்லை. சமூகத்தின் பழிப்புகளை மீறி இதை மீட்டுக் கொடுத்ததற்கு நாம்
ருக்மிணி அருண்டேலுக்கும், ஈ.கிருஷ்ண ஐயருக்கும் நன்றி சொல்லவேண்டும்.
இந்த நடன வடிவம் நமக்கு அளித்த கலைஞர்கள், பால சரஸ்வதி, யாமினி
கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் ஈடானவர்களை வேறு எந்த இந்திய நடன வடிவமும்
தந்ததில்லை. எதையும் மிகைபடக்கூறும் தமிழரின் இயல்பு தான் என்னிடமும்
காணப்படுகிறது என்று ஒரு குற்றச் சாட்டு எழக்கூடும். ஆனால் இது உண்மை. அதே
சமயம் நடனம் ஒரு மொழி, வெளிப்பாட்டு மொழி என்று தெரிந்து கொண்டால்,
இம்மொழியைக் கற்றுக் கொண்டவர்கள், கற்றுக் கொடுக்கப்பட்டதோடேயே தேங்கி
விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதன் சாத்திய எல்லைகளை
விஸ்தரிக்கவில்லை. கற்றுக்கொண்ட எல்லைகளை மீறவில்லை.
ஆங்காங்கே சில விதிவிலக்குகள்
காணப்படுகின்றன. ஜஸ்டின் என்பவர் மதுரைக் காஞ்சியை நாட்டிய நாடகமாக
ஆக்கினார். ஒரு பாதிரியார், ·ப்ரான்ஸிஸ் பார்போஸா என்பவர்,
மும்பையில் உள்ள சந்திரசேகரிடம் பரதநாட்டியம் பயின்றவர். 'பைபிளிலேயே
நாட்டியம் பற்றி பேசப்பட்டுள்ளதே, முன்னர் தேவாலயங்களில் நடனம்
ஆடப்பட்டதே, பரதமும் பக்தியின் வெளிப்பாடுதானே', என்று அவர் சிந்தனை
செல்ல, கேரள சிரியன் கிருஸ்தவரான தேவசியாவின் கிறிஸ்து பாகவதம் என்னும்
சமஸ்கிருத கிரந்தம் அவருக்குக் கைகொடுத்தது. பைபிள் கதைகளையும் சங்கீதப்
பகுதிகளையும் பரதமாக்கினார். தில்லியில் நான் இருந்த போது அங்கு ஜமுனா
என்னும் கலைஞர் வள்ளலாரின் பாடல்களுக்கு நடனமாடினார், பரதத்தின்
கட்டமைப்புக்குள்ளே. வள்ளலாரை எடுத்துக் கொண்டது தான் பாதை மீறல். பின்னர்
டெல்லியிலேயே, அமெரிக்காவிலிருந்து தாய் நாடு திரும்பிய தமிழ்ப் பெண்மணி
ஒருவர், நடனக் கலைஞர் தான், (பெயர் ஞாபகமில்லை, அனேகமாக அனீதா ரத்னமாக
இருக்கக்கூடும்) ஏ.கே ராமானுஜத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பில் சங்க
அகப்பாடல்களுக்கு நடன வடிவம் கொடுத்து ஆடியதாகப் படித்தேன். தமிழ்ப் பெண்,
பரதம் ஆட மூலப்பாடல்கள் தமிழிலேயே இருக்க ஆங்கில மொழிபெயர்ப்பை ஏன்
எடுத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை. இப்படி பல முயற்சிகள் அவ்வப்போது
நிகழ்ந்தாலும், தமிழ் நாட்டில் பரதம் அதன் பழம் வடிவத்திலேயே,
கற்றுக்கொடுக்கப்பட்ட பாணியிலேயே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
நிகழ்ச்சியாகத்தான் (performance), இருக்கிறதே ஒழிய expression ஆக,
சிருஷ்டிபரமாக ஆகவில்லை. இது பற்றி சொல்லப்படவேண்டிய நல்ல விஷயம் இது
தான். பெயர் பெற்றுவிட்ட சிலர் இதை சினிமாத்தன நடிப்பாக்கியதும் மற்றும்
சிலரிடம் இது வெறும் தேகப்பயிற்சியாகியுள்ளதும் இங்கு சொல்லப்படாமல்
விடுபட்டுள்ளது. சங்கீதம் போலவே, அதனளவுக்கு இல்லாவிட்டாலும், பரதமும்
உலகம் முழுதும் தன் செல்வாக்கை வியாபித்துள்ளது.
பரதம் போகட்டும். எந்த கலைஞனும்
தன் அனுபவத்தை, தான் கற்ற கலை மூலம் வெளிப்படுத்த முயல்வது, தன் இன்றைய
அனுபவத்தைச் சொல்வதுஎன்னும் வகையில் நடனத்தைக் கையாளும் பாதைகளை யாரும்
தேர்ந்து கொள்ளவில்லை. கர்னாடக சங்கீதம் போல பரதமும் காப்பாற்றப்பட்டு
வாழ்ந்து வருகிறது. சிருஷ்டி பரமாக என்று சொல்வதற்கில்லை.
இனி நாடகம் பற்றிப் பேசலாம்.
நாடகம் என்பதும் புதிய வரவு தான். 19-ம் நூற்றாண்டு இறுதி வருடங்களில்
பம்மல் சம்பந்த முதலியார் இருபதாம் நுற்றாண்டு நாடகத்திற்கு வித்திட்ட
ஆரம்பங்கள் பற்றிப் பேசும் போது அது தெருக்கூத்து போல சதங்கை கட்டி
வாத்தியங்களோடு பாட்டுக்களின் ஒத்திகையோடு தான் ஆரம்பித்தது என்கிறார்.
அது மாறியது சென்னை வந்த ·பார்சி நாடகங்களின் தாக்கத்தால் தான்
என்கிறார். அதற்கு முந்தி நடிகர்கள் நடித்து கதை நிகழ்த்தும் நாடகம் பற்றி
தமிழர் ஏதும் அறிந்ததில்லை. அக்காலத்திலும் நாடகங்கள் அவற்றில் இடம்
பெறும் இசைக்காகத்தான் பெயர் பெற்றன. பெரிய பாடகர்களின் பாட்டைக்
கேட்கத்தான் மக்கள் குழுமினார்கள். அவை நாடகங்களாக இருந்ததில்லை. இசை
நாடகங்களாக, ஆபெராக்களாகத்தான் இருந்தன. கதை என்னவாக இருந்தாலும், எந்த
இடத்திலும் சம்பந்தமில்லாத, ஆனால் அந்த பாடகரின் தம்க்குப் பிடித்த
பாட்டைப் பாடச்சொல்லி நிர்ப்பந்திப்பார்கள். திரும்பத் திரும்ப "once
more" கூச்சல்கள் எழும். அந்த நாடகங்கள் மறைந்த சுவடு இப்போது
காணப்படுவதில்லை. ஆனால் இருபதுகளில் முப்பதுகளில் கிட்டப்பா பாடிய
பாட்டுக்கள் இன்றும் கேட்பது ஒரு சுக அனுபவமாக இருக்கும். "கோடையிலே
இளைப்பாறிக்கொள்ள......" வுக்கு இன்றும் உயிர் உண்டு. வருடங்கள்
எண்பதுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் அந்த நாடகங்கள் பாமரத்தனமானவை, அதன்
மற்ற எல்லா அம்சங்களிலும். நேற்று வரையிலும் இதே கதை தான். நாடகம்,
ஆபெராவாக இருந்தது. பக்தி போதனை செய்தது. விடுதலைப் போராட்ட ஆயுதமாக
இருந்தது. திராவிட இயக்க, அரசியல் பிரசார மேடையாக இருந்தது. மக்களை
கிளுகிளுக்க வைக்கும் சிரிப்பு தோரணமாக இருந்தது. நாடகமாக அது என்றுமே
தமிழ் நாட்டில் இருந்ததில்லை
இன்னும் ஒன்று, அக்காலங்களில்
நாடகங்களை ஓரளவிலாவது கலை அனுபவமாக்கியது அதன் இன்றியமையா அம்சமாக இருந்த
சங்கீதம் தான். மற்ற எதுவும் பொருட்படுத்தத்தக்கதாக இல்லை. எல்லாமே ஒரு
பாவனைதான். நடிப்பும் ஒரு பாவனைதான். பின்னாட்களில் ஏற்பட்ட ஒவ்வொரு
மாற்றமும், நாடகத்தை ஒரு கலை சார்ந்த ஈடுபாடாக்கவில்லை. ஒரு
நாடகாசிரியரைக்கூட அது தந்ததில்லை. கடைசியாக அது பெற்ற அவதாரம், சிரிப்பு
தோரணம். அதுவும் இன்று இல்லை.
எழுபதுகளில் எழுந்த எளிய
விழிப்புணர்வு எளியதாகவும் பலமற்றதாகவுமே ஆகியது. அப்படித்தான் இன்றளவும்
உள்ளது. இந்திரா பார்த்த சாரதி, ந.முத்துசாமி போன்றோர் முயற்சிகள்
எவ்விதத்திலும் தமிழில் கலாபூர்வமான நாடக இயக்கத்தைத் தோற்றுவிக்கவில்லை.
சிரிப்பு தோரணமாக இருந்த நாடகம் ஒரு பரிதாபம் என்றால், அதனிடத்தில்
வந்துள்ள நவீன நாடகம் அதன் பாவனையான seriousness-ம் பரிதாப உணர்ச்சியை
எழுப்புவதுதான். துக்கம் அளவுக்கு அதிகமானால் அது பைத்தியக்காரச்
சிரிப்பாக வெளிப்படுவதில்லையா? சந்தோஷம் அதிகமானால், கண்களில் நீர்வழிய
அழுகை வந்துவிடுவதில்லையா? சிரிப்பு தோரணமாக தரப்படும் நாடகம் பரிதாப
உணர்வைத் தந்தது போல, நவீன நாடகத்தின் அதி தீவிர serious பாவனைகள் நமக்கு
சிரிப்பாகிப் போகின்றன. காவாலம் நாராயணப் பணிக்கரைப் பார்த்துப்
போட்டுக்கொண்ட சூடு என்று எனக்குத் தோன்றுகிறது. அவர் எடுத்துக் கொள்ளும்
பாஸரின் நாடகங்களுக்கு கூடியாட்ட உடல் மொழி, பேச்சு மொழி பொருத்தமாக
இருக்கலாம். அதற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அவரும் வெகு கவனமாக அந்த
குறுகிய வட்டத்தை விட்டு வெளியே கால் வைப்பதில்லை. ஆனால், தமிழ் நாட்டின்
நவீன நாடகக் காரர்கள் உருவாக்கிக்கொள்ளும் உடல் பேச்சு மொழிகளுக்கு
பாரம்பரியமும் இல்லை. அவர்களே உருவாக்கிக்கொண்ட இலக்கணமும் இல்லை. அவை
வெறும் பைத்தியக்கார அங்க சேஷ்டைகளாகத்தான் சீரழிகின்றன. பேச்சும்
அப்படியே. இதை எதிர்த்து யாரும் வாய் திறப்பதில்லை. நாடகக்காரரும் சரி,
பார்வையாளரும் சரி வாலறுந்த நரி பார்த்த தெய்வ தரிஸனமாகத்தான் நவீன நாடகம்
ஆகியுள்ளது. அதைப் பார்த்து வாலறுத்துக்கொண்ட மற்ற நரிகளும் உண்மையைச்
சொல்வதில்லை. அனேகமாக எல்லாத் துறைகளிலும் தமிழ் நாடே வாலறுந்த நரிகளின்
நாடாகிவிட்டதோ என்று தோன்றுகிறது. இந்த நரிகள் எல்லாமே தெய்வத்தைத்
தரிசிப்பதாகத் தான் சொல்கின்றன.
இதிலும் ஒரு விதி விலக்கு. எந்த
சித்தாந்தத்தையுமோ, நாடக பத்ததியையுமோ தன்னைக் கட்டுப்படுத்தாமல், தான்
இயக்க எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு நாடகத்திற்கும் அதற்கேற்ற வடிவையும்
மொழியையும் தீர்மானித்து, இதுகாறும் தான் இயக்கிய எந்த ஒரு நாடகத்தையும்
முன்செய்ததைப் போல் செய்யாது, ஒவ்வொன்றையும் ஒரு புது வடிவில் தருபவராக
உள்ள செ.ராமானுஜம். ஏதும் கிடைக்காத போது மொழிபெயர்த்தோ, தழுவியோ, அல்லது
தானே எழுதியோ தனித்து இயங்கி வருபவர் அவர். அவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல
வேண்டியது, 'வெறியாட்டம்" ட்ராய் நகரப் பெண்களின் அவலத்திற்கு அவர்
கொடுத்த ஒப்பாரி வடிவம். ஒற்றை மரம் தோப்பாகாது. ஒற்றை ராமானுஜம் தமிழ்
நவீன நாடகத்தின் போக்கையோ குணத்தையோ மாற்றிவிட முடியாதே.
முப்பதுக்களில் பேசும் சினிமா
வந்தது, அப்போதிருந்த (ஆபெராவாக இருந்த) நாடகங்கள் தான் திரைப்படமாகின.
அதிலும் பாட்டே முதலிடம் வகித்தது. நன்கு பாடத்தெரிந்தவர்களே சினிமாவில்
நடிக்க எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஜி.என். பாலசுப்பிரமணியம், மகாராஜபுரம்
விஸ்வனாத ஐயர், எம். எஸ் சுப்புலக்ஷ்மி, என். சி. வஸந்த கோகிலம்
எம்.எம்.தண்டபாணி தேசிகர் போன்ற அன்றைய சங்கீதப் பெருந்தலைகள்
சினிமாவுக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் தம் சங்கீதத்தைத் தான்
சினிமாவுக்கு எடுத்துச் சென்றனர். சினிமா தான் சினிமாவாக இல்லையே ஒழிய
அவர்களும் சங்கீதமும் தம் குணத்தை ஆளுமையை மாற்றிக்கொள்ளவில்லை. எப்படி
புதிய வடிவான நாடகம், நாடகம் என்ற கலைவடிவாக மலரவில்லையோ அது போலவே, தமிழ்
மண்ணுக்குப் புதிதாக வந்த சினிமா என்ற புதிய சாதனம், கலை வடிவாக
உணரப்படவுமில்லை. பேணப்படவுமில்லை. அது ஒரு வியாபார, முழுக்க வியாபார
சாதனமாகத்தான் கருதப்பட்டது. இன்று வரை அதன் கதி அதே தான். அன்று
சினிமாவுக்கு வந்த வியாபாரிகளுக்கு அன்றைய சமூகம் கொண்டிருந்த சில
தர்மங்கள் இருந்தன. வியாபாரத்திற்கும் ஒரு தர்மம் உண்டு என்று நினைத்தனர்.
"சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம். அதற்காக எதையும் செய்வது என்றில்லை"
என்று தாம் மீறக்கூடாத வரையப்படாத ஒரு கோடு ஒன்று இருந்தது. இன்று அந்த
மதிப்புகள் சரிந்து விட்டன.
ஆனால், சினிமா புதிய வரவு. அது
தொடக்கத்திலிருந்தே வியாபாரிகளின் கைக்குப் போனது. இன்று அது சூதாட்ட
குணம் கொண்ட பெரு வியாபாரமாகியிருக்கிறது. பல கோடிகள் பணம் போட்டு
பலமடங்கு அதிக கோடிகள் உடனடியாக வசூல் செய்யப்படவேண்டிய நிர்ப்பந்தத்தை
தானே உருவாக்கிக்கொண்டு ஒரு சூதாட்டமாக உள்ள ஈடுபாடாகியுள்ளது இது. ஆனால்
ஆகவே, கடுகு உளுத்தப்பருப்பு மிளகாய்ப்பொடி என்ற தாளிக்கும் ரீதியில்,
கால்கள் தம்மிச்சையில் தாளம் போடும்படியான டான்ஸ், பாலியல் குறிப்புகளோடான
பாட்டு, நாட்டுப்புற மெட்டு, மூன்று நான்கு சண்டைக் காட்சிகள், அவையும்
நம்ப முடியாமலும், பிரமிக்கத்தக்கவையாகவும் இருக்கவேண்டும். பின் கதை ஒரு
கிராமத்தானைப்பற்றியதோ, உள்ளூர் தாதாவைப்பற்றியதோ எதுவானாலும், டோரண்டோ,
சிங்கப்பூர், நைஜீரியா, ·ப்ராங்க்பர்ட், நயாகரா நீர் வீழ்ச்சி
அல்லது டென்மார்க்கில் ஒரு வீதி என்று டான்ஸ் ஆடும் பாட்டின் ஒவ்வொரு
வரிக்கும் மாறிய இடம், மாறிய உடைகள் என்று நாலைந்து டான்ஸ் என்னும் ஒரு
அவலட்சண கூத்தாட்டம். நான் நினைப்பதுண்டு, வெளிநாட்டு வீதிகளில் இப்படி
ஒரு டான்ஸ் ஆடுகிறார்களே, வெட்கமாக இருக்காதா என்று. வெளி நாடு என்ன
நம்மூரிலேயே, 45 வயது ஆண் பள்ளிப் பையனாக கால் சராயும், வாட்ட சாட்டமான
இளமையின் பூரிப்பு கொண்ட நடிகை பள்ளிப்பெண்ணாக குட்டை ஸ்கர்ட் அணிந்து
கொண்டு பத்திருபது அதே தரத்து மாணவ மாணவிகள் சூழ, "தரூவ்வ்வீவீய்ய்யா..
மாட்ட்டீடீய்ய்யா?.. என்று ஒரு அலங்கோல நடனமாடுவது வெட்கம் தரும் காரியமாக
இருக்காதா? இது ஒரு உதாரணமே. ஒவ்வொரு படத்திலும் இம்மாதிரி மூன்று அல்லது
நான்கு ஐடம்கள் இருக்கும். "குண்டக்கா, மண்டக்கா" இல்லையெனில், "தள்ளாதே,
தள்ளாதே, தாவணியைத் தள்ளாதே", இல்லையெனில் "சின்னவீடா வரட்டுமா, பெரிய
வீடா வரட்டுமா?" இதென்ன பைத்தியக்காரத்தனம்? இதைப் பத்து லட்சம் பேர்
பார்க்கமாட்டார்களா? எப்படிய்யா நான் வெளீலே தலை காட்டறது? என்று
கேட்கமாட்டார்களா என்று நினைத்துக் கொள்வேன். இது நிறைய பணம் வசூலித்து
விட்டால், இவர்கள் முதல் தர "கலைஞர்கள்" ஆகி விடுகிறார்கள். இந்த ஒரு
பாட்டு, ஒரு நடனம், ஒரு ஜோடி நடிகர்கள் பற்றிய விஷயம் அல்ல. தமிழ் சினிமா
முழுதுமே இப்படியான ஒரு மன அமைப்பு தயாரித்து சந்தைக்கு வைக்கும் பண்டமாக
ஆகியுள்ளது. ஒவ்வொரு வருஷமும் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்கள்
இப்பண்டங்களைத் தயாரிக்க வீணாகின்றன என்று கேட்கும்போது மனம்
வேதனைப்படுகிறது. இவ்வளவு குப்பைகளில் ஒரு அடி நீள ·ப்ரேம் கூட
அருவருப்பு தராத, பொதுப்புத்தியைக் கேவலப்படுத்தாததாக கிடைக்காது.
இன்று தமிழ் சினிமா மற்ற எதையும்
விட மிக முன்னேறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தொழில் நுட்பத்தில்
இந்தியாவில் தமிழ் சினிமாதான் முன்னிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
க்ரா·பிக்ஸ் என்றால் உலகத்தின் பல நாடுகளிலிருந்து எல்லோரும்
குவிவது சென்னைக்கு என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு படத்தைப் பற்றி அது
எப்படி என்ன புதிய தொழில்நுட்பத்தில் எவ்வளவு சிரமப்பட்டு எடுக்கப்பட்டது
என்று சொல்லி கேட்பவரை அசத்திவிடுகிறார்கள். இங்கு ஒரு படம்
திரையிடப்படுவதற்கு முன் கனடாவில், சிங்கப்பூரில், பாரிஸில் உள்ள
தமிழருக்கு அது விசிடி யாக கிடைத்துவிடுகிறது. இப்படி ஒரு முன்னேற்றம். 75
வருட கால தமிழ் சினிமாவிற்கு ஒரு காட்சியைக் கட்டமைப்பது,
·ப்ரேமிங் என்றால் என்ன என்பது தெரியாது. காட்சி பூர்வமான கதை
சொல்லல் என்றால் என்ன என்று தெரியாது. தமிழ் சினிமாவுக்கும் தமிழ்
வாழ்க்கைக்கும் எந்த உறவும் இருப்பது இல்லை. முற்றிலும் அன்னியப்பட்ட ஒரு
தொழிலாக தமிழ் சினிமா ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் இப்போது தொழில் திறமை
வாய்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் வந்துள்ளனர். நல்ல ஓவியக் கலைஞர்கள்,
தோட்டா தரணி, பி. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் art direction-க்கு
வந்துள்ளனர். தமிழ் சினிமாவில் art direction என்றால் ப்ரும்மாண்டமான
சம்பந்தமில்லாத செட்கள் அமைப்பது தான். சிறந்த காமிரா கலைஞர்கள் தம்
திறமையைக் காட்ட கதையில் விஷயம் இருப்பதில்லை. நல்ல picture postcard
காட்சிகளை உருவாக்கிக்கொடுத்துப் போகிறார்கள். இவற்றைத் தான் இன்றைய
பெருந்தலை visual treatment என்று சொல்கிறார். ஒரு அடிப்படையான விஷயம்.
தான் சொல்லவந்த விஷயத்தை எப்படி திறமையாக சொல்வது என்ற கேள்விக்கு பதில்
அளிப்பது தான் தொழில் நுட்பம். சிறந்த தொழில் நுட்பம் தன்னை மறைத்துக்
கொள்ளும். நான் மதிக்கும் ஒரு தமிழ் சினிமா இயக்குனர், சொல்வார்: 'தமிழ்
சினிமாவில் தொழில் நுட்பம் பிணத்துக்குச் செய்யும் அலங்காரம்' என்று.
இன்றைய தமிழ் இலக்கியத்தில் தாம் வித்தியாசமானவர் என்று பெயர்
வாங்கியவர்கள் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளனர். அவர்கள் தமிழ் சினிமாவில்
தம் முத்திரை பதிப்பதற்குப் பதிலாக, தமிழ் சினிமா முத்திரையைத் தான்
தமக்குப் பச்சை குத்திக் கொண்டுள்ளனர். இந்தக் கூடாரத்துள் நுழைவதற்கு
முன் எதையெல்லாம் கேவலமாக, கேலியாகப் பேசினார்களோ அவற்றில் இப்போது
அவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். காரணம் கொள்ளை கொள்ளையாகக் கிடைக்கும்
பணம். முன்னர் கூத்தாடிகள் கூடாரம் என்று சினிமா இழிவு படுத்தப்பட்டது.
அதில் ஜி.என்.பி. எம்.எஸ். பாபநாசம் சிவன், எம்.எம்.தண்டபாணி தேசிகர்
போன்ற கலைஞர்கள் நுழைந்து தம் முத்திரை பதித்து தம் தடங்களை
கௌரவப்படுத்தினார்கள். இன்று அந்த கூடாரம் கலைஞர்கள் உலகமாகச்
சொல்லப்படுகிறது. அந்த கூடாரத்தில் இப்போது நடப்பது கூத்தாட்டமாகத் தான்
இருக்கிறது. உள்ளே போகிறவர்கள் தம் அடியாளங்களை இழக்கிறார்கள். அவர்கள்
தடம் தெரிவதில்லை.
அறுபதுகளில், ஜெயகாந்தன் தன்
'உன்னைப் போல் ஒருவன்' கதையைப் படமெடுத்தார். தன் வழியில். தன்
பொதுப்புத்தியும் இலக்கிய உணர்வும் காட்டிய வழியில். அது ஒரு திருப்பமாக
இருந்தது. மிக எளிய குறைந்த செலவிலான நேர்மையான ஒரு முயற்சி. அதைத்
தொடர்ந்து ஜெயகாந்தன் ஒன்றிரண்டு படங்கள் முயன்றார். முதல் படத்தில்
அவருக்கு இருந்த சமரசமற்ற துணிச்சல் மற்றவற்றில் இருக்கவில்லை.
ஸ்தாபிதமாகிவிட்ட பெரிய முதலைகளின் மறைமுக எதிர்ப்புகளை அவரால் சமாளிக்க
முடியவில்லை என்று தோன்றிற்று. இந்த முதல் அடிவைப்பு மற்றவர்களால்
பலத்துடன் தொடரமுடியவில்லை. திக்கற்ற பார்வதி, பசி, போன்ற மிக எளிய
முயற்சிகள் பின்னர் ஜெயபாரதியின் 'குடிசை', 'நண்பா, நண்பா', பூமணியின்
'கருவேலம்பூக்கள்', மகேந்திரனின் 'உதிரிப் பூக்கள்', என்று சொல்லிக்கொண்டு
போகலாம். சுமார் நாற்பது வருடகால நீட்சியில் (ஜெயகாந்தனின் 1964-ன்
உன்னைப்போல் ஒருவனிலிருந்து 2006 வரை) இப்படி ஒரு டஜன் படங்களை அதிகமாகக்
குறிப்பிடலாம். இவற்றில் காட்சி பூர்வமான சலனம், குறிப்புணர்த்தல்,
யதார்த்தமான சித்தரிப்பு, அடங்கிய நடிப்பு, இயல்பான வாழ்க்கை என்று சினிமா
என்று வகைப்படுத்தக்கூடிய குணங்களை வைத்துக்கொண்டு மதிப்பிட்டால், இவை
எல்லாம் அங்கங்கு இந்த நிபந்தனைகளை ஒரளவுக்கு நிறைவேற்றுவன தான். ஆனால்
நான் சினிமா என்று தொடங்குவதென்றால், பாலு மகேந்திராவின் 'வீடு' என்ற
படத்துடன் தொடங்குவேன். அது ஒன்று தான் நான் குறிப்பிட்டுள்ள குணங்களை
அதிக அளவு கொண்டுள்ளது. ஆனால், அவரும் இந்த ராக்ஷஸ் வியாபார உலகத்தில்
கால் ஊன்ற முடியவில்லை. பல படங்களில் தன் சமரசங்களை எவ்வளவுக்கு
குறைக்கமுடியும் என்று முயல்கிறார் தான். ஆனால் அந்த சமரசங்கள் தமிழ்
ஜனங்களிடம் பலனளிப்பதில்லை. படம் முழுதும் தமக்கு வேண்டியதையே அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள். அதனால் தான், வெளிநாட்டு படப்பிடிப்பு, நடனங்கள்,
வித விதமான ஆடை மாற்றங்கள், சண்டைக் காட்சிகள்(அதுவும் நிஜ சண்டையாக
தோன்றக்கூடாது. கிட்டத்தட்ட நடனம் போல சர்க்கஸ் போல choreographed
movements உள்ளவையாக இருக்கவேண்டும்) பாலியல் குறிப்புகள் கொண்ட
உரையாடல்கள், ஆடைகள், நடனங்கள், பாட்டுக்கள் எல்லாம் இருக்கவேண்டும்.
வினியோகஸ்தர்கள் கேட்பது, எத்தனை சண்டைக்காட்சிகள், வெளிநாட்டு
படப்பிடிப்புகள்? என்று. ஒரு ரம்யாவை சம்பந்தமில்லாமல் மூன்று நிமிடம் ஆட
வைத்துச் சேர்த்தால் அது பயனில்லை. பாலு மகேந்திரா மலையாளத்தில் படம்
எடுக்கும் முறை வேறு. தமிழில் அது வேறு. மோகன் லாலும், மம்மூட்டியும்
தமிழுக்கும் மலையாளத்திற்கும் தனித்தனி நடிப்பு பாணிகளைக் கையாள்கிறார்கள்.
ஒரு கட்டுண்ட பார்வையாளரைத்
தயாராகப்(a ready captive audience) பெற்றுவிடும் தொலைக்காட்சிகள் கூட
சினிமாவின் அலங்கோலத்தையே ஒவ்வொரு வீட்டுக்கும், குடிசைக்கும் தினம் தினம்
எடுத்துச் செல்கின்றன. சினிமாவின் விளம்பர அங்கமாகியுள்ளது. சினிமா அல்லது
கட்சிப் பிரசாரம் என்ற இரண்டு காரியங்களையே அது செய்கிறது. ஷியாம்
பெனிகலின் 'பாரத் ஏக் கோஜ்' போன்றோ, 'மூசிக்கி ஏக் கோஜ்' போன்றோ ஒன்றை
எந்த தமிழ் தொலைக்காட்சியிலும் பார்க்கக் கிடைக்காது. இனி வரும் என்றும்
எதிர் பார்க்கமுடியாது. தமிழ் தொலைக்காட்சி தன் முன் ஒரு குடும்பத்தின்
நாலைந்து பேர் ஒரு அறையில் 5 அல்லது 6 அடி தூரத்தில் இருப்பவர்களாக
நினைப்பதில்லை. ஒரு பெரிய மக்கள் கூட்டமே தொலைக்காட்சிப் பெட்டியின் முன்
இருப்பதாகத் தான் எண்ணி அவ்வளவு இரைச்சலும்,
தமிழில் எதுவும் மிகைப்படுத்தப்பட
வேண்டும். எங்களுக்கு பந்தாக்கள் மிக தேவை. தமிழினமே கல் தோன்றி மண்
தோன்றாக்காலத்தில் முன் தோன்றி மூத்த குடி. இங்கு எல்லாரும் கலைஞர்கள்.
கவியரசுக்கள், கவிப்பேரரசுகள், கவிக்கோக்கள், புன்னகையரசி, இலட்சிய
நடிகர், மக்கள் திலகம், புரட்சி நடிகர், வித்தகக் கவிகள், தமிழினத்
தலைவர்கள், உவமைக் கவிஞர்கள் இத்யாதி இத்யாதி. பெற்றோர் இட்ட பெயரைச்
சொல்வது பண்பற்ற செயலாகிவிடும். எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் நிறைய
புலம்பும். அழும். இரைச்சலிடும். தமிழ் சினிமாவின் நீட்சி தான். அதற்கென
தனி வாழ்வு கிடையாது. சினிமா இல்லையென்றால் தொலைக்காட்சிப் பெட்டிகள் எந்த
வீட்டிலும் உயிர் பெறா.
இனி மிகுந்தது, அதிகம் சொல்ல
இல்லாதது தமிழ் நாட்டின் நாட்டுப்புற கலைவடிவங்கள். இவற்றில் மிக
முக்கியமானது, ஒரு சக்தி வாய்ந்த நிகழ்த்துக் கலை என்று சொல்லத்தக்கது
தெருக்கூத்து. தெருக்கூத்து அதன் கிராமீய வடிவில் கோவில் சார்ந்து
இருப்பதன் காரணமாக ஜீவித்திருக்கிறது. தில்லி அகாடமிகளின் காருண்ய
பார்வையால், இவை கிராமத்தின் திரௌபதி அம்மன் கோயிலை விட்டு வெளியேயும்
கால் பதித்தது. இந்தியா ஏற்பாடு செய்யும் கலைத் திருவிழாக்களின் அழைப்பு
பெற்று ஐரோப்பா, ரஷ்யா என உலகம் சுற்றியும் வந்துள்ளது. மத்திய அரசின்
மான்யமும் விருதுகளும் பெறுகிறது. ஜீவித்திருக்கிறது என்று சொல்லவேண்டும்.
நடேசத் தம்பிரான், கண்ணப்ப தம்பிரான் போன்ற பெரும் கலைஞர்கள் இதைச்
சிறப்பித்திருக்கிறார்கள். ந.முத்துசாமி கூத்துப் பட்டறை தோன்ற ஆதர்சமாக
இருந்திருக்கிறார்கள்.
இவ்வளவு கவனமும் ஆதரவும்
பெறாவிட்டாலும், இன்னமும்கோவில் சார்ந்து இருப்பதால், பொம்மலாட்டம் ஒரு
சில இடங்களில் ஜீவித்திருக்கிறது. ஆனால் பொம்மலாட்டக்காரர்கள் அதையே
சார்ந்து இருக்கமுடிவதில்லை. நிலமோ அல்லது வேறு எதுவுமோ தான் அவர்களுக்கு
ஆதரவு. நாடகம் தோன்றியபோதே தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற கிராமீய
கலைகள் ஆதரவிழக்கத் தொடங்கிவிட்டன. சினிமாவும், தொலைக்காட்சியும் அனேகமாக
எல்லாக் கிராமியக்கலைகளையும் அழித்து விட்டன என்று தான் சொல்லவேண்டும்.
தோல் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியத்தில் 10-
நூற்றாண்டிலிருந்து காணப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அது தன் கடைசி
மூச்சில் விழுந்து கிடக்கிறது என்று தான் சொல்லவேண்டும். மரப்பாவைக்கூத்து
கோவில் சார்ந்திருப்பதால் கிடைக்கும் கொஞ்சம் ஆதரவும் தோல்
பொம்மலாட்டத்திற்கு இல்லை.
வேடிக்கையாக, நாட்டுப்புற
பாடல்கள் மாத்திரம் அதன் மாறிய கொச்சை வடிவில் தமிழ் சினிமாவை
ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. "மன்மத ராசா, மன்மத ராசா", "ஓடிப் போய்
கல்யாணம் கட்டிக்கலாமா, கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா"
போன்றவற்றிற்கெல்லாம் பிறப்பிடம் நாட்டுப்புற மெட்டுக்கள் தாம். ஒரு
காலத்தில், "வள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும், உள்ளம் உருகுதடீ
கிளியே" கிராமீய மெட்டின் அறிமுகமாக இருந்தது. இன்று அதன் அவதாரம் வேறாக
இருக்கிறது.
தமிழ் நாட்டின் கலைச் சூழலில்
எனக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பகுதியைப் பற்றிச் சொல்லி மகிழ்ச்சியோடு
முடிக்கத் தோன்றுகிறது எனக்கு. புதிதாக கடந்த 40 வருடங்களில் ஏற்பட்டுள்ள
மெதுவான மாற்றம் - ஓவியம், சிற்பம். சென்னையில் கலைக் கல்லூரி
தோற்றுவிக்கப்பட்டு அதற்கு முதலில் வங்காளத்திலிருந்து ராய் சௌதுரி,
பின்னர் கே.சி.எஸ். பணிக்கர், தனபால் போன்றோரின் தலைமையில் படிப்படியாக
மெதுவாக ஏற்பட்டுள்ள மாற்றம் இது. தமிழ் நாட்டில் தொடர்ந்து நம் கண்
முன்னே கலை உணர்வூட்டும் வகையில் சிற்பங்கள் தான் கோவில்களில் உள்ளன.
ஓவியத்திற்கு அத்தகைய தொடர்ச்சி இல்லை. சற்று முந்தியது என்று நாயக்கர்
கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை
கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள்
இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம். ஒவியமோ சிற்பமோ கற்க வந்தவர்கள்
இவற்றை திரும்ப நினைவு படுத்திக் கொள்ளலாம். அப்படித்தான் ஒவியக் கல்லூரி
மாணவர்கள் செய்தார்கள். தில்லி, மும்பை யில் நடந்தது போன்று, ஐரோப்பிய
தாக்கத்தைப் போலிசெய்ய யாரும் தயாரில்லை. அப்ஸ்ட்ராக்ஷன், க்யூபிஸம்,
என்றெல்லாம் அவர்கள் சிந்தனை செல்லவில்லை. தமிழர்கள் தங்கள் உருவச் சார்பை
விடத் தயாராயில்லை. முதலில் கோவில் சிற்பங்களை, சுவரோவியங்களை பிரதி
செய்யும் ஒரு கட்டம் தாண்டி, ஒவ்வொருவரும் தன் மொழியை, தன் பாணியை
உருவாக்கிக் கொண்டனர். அதற்கு நீண்ட காலம் தேவையாக இருந்தது. சில
முக்கியமான, நாம் கர்வம் கொள்ளத்தக்க பெயர்கள் முன் நிற்கின்றன.
ராமானுஜம், மனம் பேதலித்த சமூகத்தோடு ஒட்ட முடியாத தோற்றம் அளித்த தன்
தனிப்பட்ட உலகை உருவாக்கிக்கொண்ட கனவுலக மனிதர். தன் மண்ணில் கால்
அழுத்தமாக பதித்து தன் கிராமீய ஏக்கமும், வறுமையும், வான் நோக்கி வாழும்
மனிதனை உணர்வுகளை சிற்பங்களாக்கும் தக்ஷ¢ணாமூர்த்தி, வெகுகாலம் தான்
ஒரு மாஸ்டர் ஆகிவிட்ட கோட்டுச் சித்திரங்களைக் கைவிட மறுத்து இப்போது
ரூபங்களிலிருந்து பிறந்த அரூபங்கள் படைக்கும் ஆதிமூலம், பூனைகளையே தன்
வற்றாத கற்பனை ஊற்றாகக் கொண்ட பாஸ்கரன், எல்லா தளங்களிலும் கால்
பரப்பியுள்ள பி.கிருஷ்ணமூர்த்தி, ட்ராட்ஸ்கி மருது, பழமையின் பிடிப்பிலேயே
புதிய பிம்பங்களை உருவாக்கி நம்மைத் திகைக்க வைக்கும் வித்யா சங்கர்
ஸ்தபதி இப்படி பலர்,. சினிமா, பத்திரிகை உலகம், இலக்கியத்தோடான உறவாடல்,
என்று பல திசைகளில், பரிமாணங்களில் தம் தாக்கத்தை காணவைக்கின்றனர். தமிழ்
மண்ணில் இதெல்லாம் நிகழ்கின்றனவா என்று நான் சில சமயம் திகைத்துப்
போகிறேன். இந்த நிகழ்வு நான் முன் சொன்ன வகைப்பாடுகளில் அடங்காதது. ஆனால்
என்ன? எனக்கு மகிழ்ச்சி தான்.
வெங்கட் சாமிநாதன்
vswaminathan.venkat@gmail.com
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
'காற்றினிலே வந்த கீதங்கள்!
வெங்கட் சாமிநாதன்
[வெங்கட் சாமிநாதனின்
'தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள்' என்னும் கட்டுரை ஏற்கனவே 'பதிவுகள்,
'திண்ணை', மற்றும் 'அமுதசுரபி' ஆகிய சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தது.
அதற்கு சு.ரா.வின் பதில் 'அமுதசுரபி' மற்றும் 'திண்ணை' ஆகியவற்றில்
வெளிவந்திருந்தது. அதற்குரிய பதிற் கட்டுரையாக இதனை வெங்கட் சாமிநாதன்
எமக்கு அனுப்பியிருக்கிறார். பதிவுகளின் வாசகர்களுக்காக அதனை நாம் இங்கு
பிரசுரிக்கின்றோம். -ஆ-ர்]
சுந்தர ராமசாமி அவர்கள் தன்
தரப்பைப் பற்றி சொல்ல வந்துள்ளது எனக்கு சந்தோஷமளிக்கிறது. இது காறும்
அவர் பற்றி எழுதப்பட்டது எதற்கும் அவர் மெளனமே சாதித்து வந்துள்ளார்.
என்னில் அவர் கண்ட "கழிவிரக்கம்' வகையறாக்களை அவர் பொருட்படுத்தியது
ஆச்சரியமாக இருக்கிறது. ஆயினும் அவர் எழுத்தில் காணும் ஆவேசமும்,
படபடப்பும் அவர் குணத்திற்கு அன்னியமானவை. விருது பற்றிய செய்தி வந்த
கணத்திலிருந்து விஸா கிடைத்த கணம் வரைய நீண்ட தொடக்கம், நான் எழுதியதில்
பாதியை நிரப்பியுள்ளது. அதவ்வளவும் பயணம் பற்றிய நிச்சயமற்ற நிலையையும்,
விருது பற்றிய செய்தி என்னை அப்படி ஒன்றும் புல்லரித்து வானத்தில்
மிதக்கச் செய்து விடவில்லை என்பதையும் சொல்லத்தான். அதற்கும்
காலச்சுவடின் ஆசிரியர் குழுவின் இலங்கைப் பிரதிநிதியின்
கரிப்புக்கும் சம்பந்தமில்லை.அந்த கரிப்பினால் நான் கழிவிரக்கம்
கொள்ளவுமில்லை. டோரண்டோவில் விருது கொடுத்தபோது நான் பேசியதும் அதே மன
நிலையில் தான் என்பது அந்த பேச்சிலிருந்து விளங்கும். விருது தர அவர்கள்
என்னிடம் கண்ட தகுதிகளை நான் ஏற்கவில்லை என்பது அதில் தெளிவாகும்.
இலங்கைக் காரர், என் சிந்தையில் காலச்சுவடு அவரை மேடைக்கு இழுத்து வரும்
வரை இருந்ததில்லை. என் பயணத்தின் நிச்சயமற்ற நிலையில் இன்னுமொரு சிக்கலும்
சேர்ந்து கொண்டது. என் ஹிருதய நோயும் முட்டி தேய்ந்து பலஹீனமான கால்களும்
விமான பயணத்துக்கும் கனடாவில் இருக்கும் நாட்களுக்கும் சேர்த்த
இன்ஷ்யூரன்ஸ் முழுதுமாக கிடைக்கத் தடங்களாக இருந்தன.. ஆக எனக்கு
ஏதும் நேரிட்டால் எனக்கான வைத்தியச் செலவு மிகவாக விருது
அளிப்போரைப் பாதிக்கும். இதை நான் அவர்களுக்கு தெரிவித்தபோது, கனடா பயணம்
ரத்தாகும் என்றே நான் நினைத்தேன். ஆனால் ஆச்சரியம், அதற்கும் அவர்கள்
தயாராக இருந்தது தான். ஆகவே சுந்தர ராமசாமி அவர்கள் ஆசையோடு என் எழுத்தில்
படிக்கும் யூகங்கள் யாவும் அவர் விருப்பம் சார்ந்தனவே அல்லாது, உண்மை
சார்ந்தன அல்ல. எல்லாம் சு.ரா என்னும் புனைகதைக்கார ஆளுமையின் நீட்சி.
இப்படி அவர் சந்தோஷப்பட்டுக்கொண்டால் நான் அதைத் தடுக்கமுடியாது. அவர்
வாசிப்பு எப்போதிருந்து இவ்வளவு கோணலாயிற்று?
இலங்கைக்காரர் எனக்கு ஒரு பொருட்டல்ல. 1961 லிருந்து எத்தனையோ பேர் இப்படி
என் பாதையில் வழி மறித்திருக்கிறார்கள். இன்னமும் வருவார்கள். சு.ரா.
நிச்சயமாக என்னளவு எதிர்ப்பைச் சந்தித்திருக்கமாட்டார். இன்னமும்
மேற்சென்று சொல்வதென்றால் நான் பெற்றுள்ள அலட்சியத்தையும்,
உதாசீனத்தையும், வசைகளையும் சு.ரா. சந்தித்திருந்தால்.......
சொல்லமுடியாது,அவர் என்ன செய்திருப்பாரோ.
இலங்கைக்காரரை வெளியிட்டது கருத்து சுதந்திரம் என்கிறார். அவர் எழுத்தில்
காணப்படுவது கருத்து என்றும் அவர் எழுதியது சுதந்திரம் எனப்பெயர் பெறும்
என்றும் சு.ரா. சொல்வதை என்னென்பது!. ஏவப்படுவதும், ஏவப்பட்டதைச்
செய்வதும் , கருத்து, சுதந்திரம் எனப் படமாட்டாது. காலச்சுவடில் என்னை வசை
பாட வைத்து தன் கரிப்பைத் தீர்த்துக் கொள்வது கருத்து சுதந்திரம் அல்ல.
அமுதசுரபியிலும் திண்ணையிலும் நான் எழுதியதை காலச்சுவட்டில் எழுத இடம்
கொடுத்திருந்தால், அது என் சுதந்திரம், என் கருத்து என அங்கீகரிக்கலாம்.
தேவி பாரதியும், அரவிந்தனும், சிபிச்செல்வனும், ஆ.இரா.வெங்கிடாசலபதியும்
இளவேனிலும் காலச்சுவடில் சு.ரா.வின் புகழ் பாட பிரசுரித்துக்கொள்வது
கருத்து சுதந்திரம் அல்ல.
ஏவலுக்குக் காத்திருப்பவரை ஏவி, தம் கரிப்பைத் தீர்த்துக்கொண்டு, இது ஜன
நாயகம், கருத்து சுதந்திரம் என்று ஒளிவது தார்மீக மற்ற சாமர்த்தியம்,
கோழைத்தனம் என்கிறேன். இயல் விருது பற்றிய செய்தி, விருது வழங்கப்பட்ட
செய்தி, பின் ஏவிப் பெற்றுதைப் பிரசுரித்தது எல்லாம் ஒரே மாதிரியான
முறையில் பெட்டிச் செய்தியாக தரப்பட்டுள்ளன. இதைக் கண்டிக்கும் தஞ்சை
நா.விஸ்வநாதனின் கடிதமோ, கடிதங்களின் கூட்டத்தில் போடப்பட்டுள்ளது. அது
சுதந்திரமாக வந்ததல்லவா? ஏவப்பட்டு பெற்றதல்லவே. காலச்சுவடு ஆசிரியர்
அரவிந்தன் எனக்கு தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதுகிறார்: என்னிடம்
மதிப்பு வைத்துள்ளதாலேதான் விருது பற்றிய செய்தியைப் பிரசுரித்தாகவும்,
நுஹ்மானைப் பிரசுரித்தது, கருத்து சுதந்திரமும் ஜனநாயகமும் ஆகும் என்று.
தனிப்பட்ட கடிதத்தில் எனக்கு சமாதானம் சொல்லியாகிறது. பொது மேடையிலோ
நுஹ்மானுக்கு தனிக்கவனம். இது தான் சாமர்த்தியம். ஆனால் சு.ரா.வோ,
நுஹ்மானிடம் கண்ணியமும் கருத்துக்களும் காண்கிறார்: அவர் முன்னர்
{1972-73) எழுதியதின் நீட்சி என்கிறார். முன்னர் எழுதியதில் நுஹ்மான்,
"சாமி நாதனின் பாட்டன், முப்பாட்டன்" எல்லாம் இழுக்கப்பட்டிருந்தனர். நல்ல
கண்ணியமான எழுத்துத் தான். கருத்துக்கள் தான்.1விருது பற்றிய செய்தி
சொல்லப்பட்டபோது,"இது நல்ல தேர்வு. 40 வருடங்களாக எந்த அங்கீகாரமும்
கிடைக்காதவருக்கு கொடுப்பது நல்ல காரியம்" என்று என்னைப் பற்றி சொன்னது,
என்னை தானும் மனைவியுமாக வாழ்த்தியது ஏப்ரல் மாதம். அதை முற்றாக
நிராகரிக்கும் நுஹ்மானிடம் கண்ணியமும் கருத்து சுதந்திரமும் கண்டு
புளகாங்கிப்பது அக்டோபர் மாதம். இப்போது டெலிபோனில் சொன்னதெல்லாம் நினைவு
கொள்வது சரியல்ல. காரணம், நுஹ்மானின் கருத்துக்களின் ஒளி வீசும் தகதகப்பு.
உலக சரித்திரமே ஒரே நாளில் மாறும் போது, நேற்றைய குல்லுகபட்டர், இன்று
மூதறிஞர் ஆகும், நேற்றைய புரட்சி நடிகரும்,இதய தெய்வமும் இன்று
மலயாளியாகவும் நடிகராகவும் ஆகும் கலாச்சாரம் பேணும் தமிழ் நாட்டில் ஆறு
மாத இடைவெளியில் மனமாற்றம், ஞானோதயம் நிகழக்கூடாதா என்ன?
கருத்து சுதந்திரம் என்கிறார். எனக்கு அவர் சொல்லித்தர வேண்டிய நிலை வந்து
விட்டதா, நாகர் கோயிலில் வீற்றிருக்கும் பெருமானே?
1. என் முதல் கட்டுரைத்தொகுப்பு 'பாலையும் வாழையும்' 1970 களில்
வெளிவந்தபோது, அதற்கு முன்னுரை எழுதியவர், சி.சு.செல்லப்பா.
சண்டையில்லாது,இரைச்சல் இல்லாது சூடான வாக்கு வாதம் இல்லாது நாங்கள்
சந்திதுக் கொண்ட நாள் கிடையாது. இருப்பினும் அவர் எழுதுவதற்கு நான்
மறுப்பு சொன்னதில்லை. அவர் எழுதியதை புத்தகம் பிரசுரமான பிறகு தான்
பார்த்தேன். நான் தில்லியில். அவர் சென்னையில். இதற்குப் பெயர் கருத்து
சுதந்திரம்.
2. திரும்பவும் 70 களில் 'எதிர்ப்புக் குரல்' என்னும் தொகுப்பை
மணிபதிப்பகம் வெளியிட்டபோது, அதற்கு முன்னுரை சுந்தர ராமசாமி அவர்களிடம்
பெற விரும்புவதாக மணி சொன்னார். அப்போது சு.ரா.வுக்கும் எனக்கும் இடையே
தீவிர மனஸ்தாபம். உறவு முறிந்து விட்டது என்றே நான் நினைத்திருந்த காலம்.
இருந்தும் நான் மறுக்கவில்லை. அவர் எழுதியது என்ன என்று புத்தகம்
வெளிவந்தபிறகு தான் எனக்குத் தெரியும். இதற்கு பெயர் கருத்து சுதந்திரம்.
3. சு.ரா.இருக்கும் நாகர்கோயிலிலிருந்து அவர் நண்பர்
ராஜமார்த்தாண்டனின் 'கொல்லிப்பாவை'-யில் நான் எழுதிய கட்டுரைக்கு ஒரு
நீண்ட மறுப்பு எழுதினார், சு.ரா. அதை ஏன் பிரசுரித்தீர் என்று நான்
ராஜமார்த்தாண்டனிடம் கேட்டதாக செய்தி இருந்தால் சு.ரா. சொல்லட்டும்.
அவருக்கும் நான் பதில் எழுதினேன். இதற்குப் பெயர் கருத்து சுதந்திரம்.
4. 'யாத்ரா' பத்திரிகை என் பொறுப்பில் வந்தபோது, என்னிடம் பகை உணர்வு
கொண்டிருந்த அசோகமித்திரன், நகுலன் போன்றோரை, அவர்களை எழுதச் சொல்லி கேட்க
வைத்தேன். நகுலன் மறுத்து விட்டார். அசோகமித்திரன் தன்க்கு அப்போது சுரம்
என்றார். சுரம் விட்டபிறகு எழுதலாம் என்று சொல்லப்பட்டது. பின்னும்
அவர்கள் எழுதவில்லை. அவர்கள் கடிதங்கள் யாத்ரா வில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரமீளும் இன்னும் மற்றோரும் எனக்கு எதிராக செய்த பிரசாரம் யாத்ரா
இதழ்களில் தான் தொடங்குகின்றன. யாத்ரா இதழ்கள் இதற்கு சாட்சி. இதற்குப்
பேர் கருத்து சுதந்திரம்.
5. 'அக்ரகாரத்தில் கழுதை' என்னும் திரைக்கதை புத்தகமாக வந்தபோது
அதுபற்றி வந்த முதல் நிராகரிப்பு, சு.ரா. வினுடையது, அது ஒரு நீண்ட
கடிதமாக. அதை 'வைகை' பத்திரிகையில் வெளியிடச் செய்தது நான். அதன் இரண்டாம்
பதிப்பு வந்தபோது அவருடைய நிராகரிப்பையும் தாங்கியே அது வந்தது. முதல்
பதிப்பிலும், இரண்டாம் பதிப்பிலும், என்னுடன் பகை கொண்டு இருந்த பிரமீளின்
முன்னுரையும் அடக்கம். பிரமீள் ' நான் அதற்கு முன்னுரை எழுதுவேன்' என்று
மணி பதிப்பகத்திடம் வற்புறுத்தி எழுதியது. நான் அதற்கு மறுப்பு
சொல்லவில்லை. அவர் எழுதியதை புத்தகம் வெளிவந்தபிறகு தான் நான் தெரிந்து
கொண்டேன். இதற்குப் பேர், சு.ரா.அவர்களே, கருத்து சுதந்திரம்.
6. எனது நாடகம் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு, 'அன்றைய வரட்சியிலிருந்து
இன்றைய முயற்சி வரை' புத்தகத்திற்கு எனக்கு எதிர் அணியிலிருந்த
மார்க்சிஸ்ட்டான் எஸ்.வி.ராஜதுரைதான் நீண்ட பின்னுரை
எழுதியிருக்கிறார். இது நான் அவரை வலியக் கேட்டுப் பெற்றது. அவரது
விமர்சனங்களை, புத்தகம் வெளிவந்தபிறகு தான் பார்த்தேன். இதைத் தான்
கருத்து சுதந்திரம் என்று சொல்லவேண்டும்.
7. 'பாவைக்கூத்து' என்ற என் புத்தகத்திற்கு, எனக்கு அறிமுகமில்லாத, என்னை
அறிந்திராத, ஆனால் அத்துறை வல்லுனரான எல்.எஸ். ராஜகோபாலன் தான் முன்னுரை
எழுதினார். இதற்குப் பேர் தான் கருத்து சுதந்திரம்.
8. 'பான்ஸாய் மனிதன்'என்ற தலைப்பில் 'பாலையும் வாழையும்' இரண்டாம் பதிப்பு
வந்தபோது அதில் கி.அ.சச்சிதானந்தமும், வெ.இறையன்பும் அவர்கள் கருத்தைத்
தாங்கிய கட்டுரைகளும் அப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. வெ.இறையன்பு,
சில குறைகளை,தவறுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார். சச்சிதானந்தமோ, என்னைக்
கடுமையாக விமர்சித்துள்ளார். அது நேரே அச்சுக்குப் போனது.
புத்தகம் வெளிவந்தபின் தான் அதை நான் படித்தேன். இறையன்பு தனதை எனக்கு
அனுப்பி வைத்திருந்தார். இதற்கும் பெயர் கருத்து சுதந்திரம்.
9. நான் தில்லி சாகித்ய அகாடமிக்காக தொகுத்த, இன்றைய தமிழ்க் கவிதை, தமிழ்
புனைகதை, தமிழின் இன்றைய தலித் இலக்கியம், பின் Encyclopaedea of Indian
Literature-ன் தமிழ்ப் பகுதியின் பொறுப்பும் Oxford Companion on Indian
Theatre க்கு கட்டுரைகள் எழுத நேர்ந்த போதும், என்னிடம் விரோதம்
கொண்டவர்கள் என யாரையும் நான் ஒதுக்கியது கிடையாது. நான் வற்புறுத்தி,
சண்டையிட்டு பெயர்கள் சேர்த்து, கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அப்படி
சேர்த்த விரோத பாவம் கொண்டவர்கள் இதன் பின்னும் தங்கள் விரோத பாவத்தைத்
தொடர்கிறார்கள் தான்.இதற்குப் பேர்தான், சு.ரா.அவர்களே கருத்து
சுதந்திரம். இவை எல்லாவற்றின் முழு விவரங்களையும், காலச்சுவடு
எனக்கு இடம் அளிக்குமானால் தர நான் தயார். கருத்து சுதந்திரம் பேசும்
நீங்கள் என்ன செய்வீர்களோ.
நான் இங்கு சொன்னது போல்
நீங்களோ காலச்சுவடுவோ கருத்து சுதந்திரம் பேணியதை(அதாவது உங்களை
விமர்சித்ததை}ச் சொல்லமுடியுமா? உங்களுக்கு வேண்டாதவர்களை அடிக்க
எடுத்துக்கொண்ட சுதந்திரத்தையல்ல.
நான் யாரிடம் கருத்து சுதந்திரம் பற்றி பாடம் கேட்கவேண்டும்? இதை நான்
ஏதும் ரூஸோவிடமோ, வால்டேரிடமோ, ப்ரெஞ்சுப் புரட்சி படித்தோ, இந்திய
அரசியல் சட்டத்தின் preamble படித்தோ கற்றவனில்லை. எனக்கு எது சரி, எது
நியாயம் என்று தோன்றிற்றோ அதைச் செய்தேன். செய்கிறேன். என் இப்போதைய
சந்தேகங்களும் குற்றச்சாட்டுககளும் அதே நியாயத்திலிருந்து எழுபவைதான்.
இவற்றில் அனேகம் நடந்து,பின் 1980க்களில் எப்போதோ சு.ரா. 'காலச்சுவடு'
தொடங்கியபோது, எனக்கு எழுதுகிறார்: காலசுசுவடுக்கு எழுதுங்கள்.
பரிசீலித்து பிரசுரத்துக்கு ஏற்றதெனில் பிரசுரிக்கலாம்' என்று. இப்படி
அவர் எழுதுவது என் எழுத்துக்களுடன்,பார்வையுடனான 20 வருங்களுக்கும் மேலான
பரிச்சயத்திற்குப் பிறகு. இதை அவர் எழுதும்போது, அவர் என் குரலில்
காந்தியையும், என் ஈடுபாட்டில் பாரதியையும் காண்பதாக சொல்லி அவை பதிவான
பிறகு. இவர் கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார். விமர்சன ஜ்வாலை பற்றி
பேசுகிறார். அதை முதலில் காலச்சுவடில் நடைமுறைப் படுத்தி விட்டு
பின்னல்லவா பேசவேண்டும்.? என்னை விமர் சிப்பது பற்றி அல்ல எனது மறுப்பு.
ஏன் இரட்டை நாக்குப்பேச்சு? என்னை அடிக்க ஆளைத்தேடிக் கொண்டு இலங்கை
போவானேன்? பின் நானல்ல என்ற கோழைத்தனம் ஏன்?
தஞ்சை மாவட்டத்தில் பாரம்பரியமாக நூற்றாண்டுகள் பல பழமையான கலாச்சாரம்,
தன் வீட்டின் தெருபார்த்த முகப்பில் ஒரு பகுதியை பொது உபயோகத்திறகாக
திண்ணை என்று ஒரு மேடை ஒட்டுக்கூரையோடு அமைத்து வைப்பது. அது என் வீட்டைச்
சேர்ந்ததே ஆனாலும் என் செலவிலே கட்டப்பட்டதானாலும் அது தெருவில் செல்லும்
யாரும் வெயிலில்,மழையில் ஒதுங்க, இரவில் படுத்துறங்க. திண்ணை இணையமும்
அப்படி ஒரு பொது இடமாக எனக்கும், காலச்சுவடில் இடம்
மறுக்கப்பட்டவர்களுக்கும், இடம் மறுக்கும் சு.ரா.வுக்கும் பயன்படுகிறது.
காலச்சுவடு ஒரு திண்ணையல்ல. ஓரு மடத்தின் பாதுகாப்பான உள் பகுதி. அல்லது
சமஸ்தானாதிபதியின் தர்பார் அரங்கம். சாமரம் வீசுவார்,பாமாலை பாடுவார்,
விதூஷகர், போன்றோருக்கும் மந்திராலோசனைக்குமான இடம். மடத்தைச்
சாராதவர்களைத் திட்ட, மடாதிபதியைப் புகழ கருத்து சுதந்திரம், முன்னுரிமை
பெற்று உள்ளே புகுந்துள்ளவர்களுக்கு தரப்படும். மடத்தின் சம்பிரதாயங்கள்
இருக்கும் தானே.
ஆனால், சு.ரா. நீங்கள் எப்படி அமுதசுரபி, திண்ணை இன்னும் மற்ற இடங்களில்
கருத்து சுதந்திரம் என்று கோஷித்து இடம் கோருகிறீர்களோ அப்படி
மற்றவர்களுக்கு காலச்சுவடில் இடம் கொடுப்பது தான் கருத்து சுதந்திரமாகும்.
எப்படி உங்களைப் புகழ இடம் கொடுக்கிறீக்களோ அப்படி உங்களை விமர்சனம்
செய்யவும் இடம் கொடுக்கவேண்டும். கொடுப்பது என்ன,கொடுப்பது? சுதந்திரமாக
வந்தமரும் திண்ணையாக அது இருக்கவேண்டும். அப்படி இல்லாதவரை, உங்களுக்கு
வேண்டாதவர்கள் என்று நீங்கள் பொறுக்கி எடுத்துள்ளவர்களை
தாக்க,மனுஷ்யபுத்திரனை,ஜயமோகனை, சுஜாதாவை,வைரமுத்துவை,திகசியை, இப்போது
என்னையும் பட்டியலில் சேர்த்துள்ளார்கள் போலிருக்கிறது. இனி எனக்கு எதிரான
ஒரு witch hunting நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இதில் இடையில்
அப்துல் ரகுமான், சிற்பி போன்றோர் ஏன் விட்டுப்பே''னார்கள்? புற நானூறுவை
வைத்து சுஜாதாவைத்தாக்குகிறீர்கள். தொல்காப்பியமும் செய்தியில் அடிபட்டதே,
அதை ஏன் விட்டு விட்டீர்கள்?. நான் கேள்வி கேட்பது ,கவனமாக
பொறுக்கும்,விட்டு வைக்கும் உங்கள் சல்லடை குணத்தைத் தான். ஜெய
மோகனைத்தாக்க வேல்சாமி பயன்படுவார் என்று தெரிந்த பிறகு தானே காலச்சுவடு
அவர் வீட்டுக் கதவைத் தட்டியது? இல்லை அவரா வந்து "என்னை நேர் காணுங்கள்"
என்று காலச்சுவடு அலுவலகத்திற்கு வந்து கேட்டாரா? சரி, இலங்கைகாரர்
இருக்கவே இருக்கிறார், என்னைக் கவனித்துக்கொள்ள. அடுத்து மனுஷ்யபுத்திரன்
விஷயத்தில் யாரை நேர் காணப்போகிறீர்கள்,? யாருக்கு கருத்து சுதந்திரம்
அளிக்கபோகிறீர்கள்?புஷ்-ஷிடம் டெமாக்ரஸி படும் பாடு உங்களிடம் கருத்து
சுதந்திரம் படுகிறது, சு.ரா.
20 வருட காலத்திற்கும் மேலாக என்னை அறிந்திருந்தும், 'எழுதுங்கள்
பரிசீலிக்கிறோம்' என்று சொன்ன உங்களிடம் நான் விரோதம் கொள்ளவில்லை. நான்
காலச்சுவடுக்கு எழுதவில்லை. இது என் சுதந்திரம். உங்கள் பையன், கண்ணன்
என்னை என் எழுத்தை மதிப்பதில்லை என்பது தெரிந்தும், தில்லி வந்து, தமிழினி
2000 விஷயமாக உதவ வேண்டும் என்று கேட்ட போது என்னால் ஆனதை மனதார,
தயக்கமின்றி செய்தேன். அது ஒரு சுக்குக்கும் பயனில்லாமல் போனது வேறு
விஷயம். நான் உதவினேன். விரோதம் பாராட்டவில்லை. என் எழுத்தை மதிக்காதது
உங்கள் இருவரின் சுதந்திரம்.
ஆனால், இப்போது இருவரும் மனதில் வன்மம் கொண்டு என்னை மதிப்பதாக ( நீங்கள்
) சொல்லிக்கொண்டே, சொன்னதைச் செய்யத்தயாராக இருக்கும் ஒரு மனிதனைப்
பிடித்து இழுத்து வந்து எழுத வைத்தது தர்மமில்லை. கருத்து சுதந்திரம்
இல்லை. ஆண்மை இல்லை. இந்த காரியத்தின் பின்னிருக்கும் வன்மம் தான் என்னை
வெகுவாக காயப்படுத்தியுள்ளது. கூலிப்படையின் எழுத்து அல்ல. இதைத்
தொழிலாகக் கொண்ட மனிதன் கேவலப்பட்ட மனிதன். அது இழி தொழில். இந்த வசை
எனக்கு ஒரு சுண்டைக்காய். 40 வருடங்களாய் கேட்டுப் பழகியது. ஆனால்
நெடுங்கால நண்பரின் மகன் என்று நான் வாத்சல்யத்துடன் பழகிய
கண்ணனும், நட்பு காட்டிய சு.ரா.வும் மறைத்து வைத்திருந்த வன்மம் ..,, என்ன
சொல்லட்டும். இது தர்ம யுத்தமில்லை.
கருத்து, பார்வை வேறு பாடுகள் ஒருபொருட்டல்ல. அசோகமித்திரனும், சா.கந்த
சாமியும் எனக்கு எதிராக் சதி செய்த காலத்தில், அவர்களது எழுத்துக்களில்
சாதகமாக நான் கண்டவற்றை நான் அங்கீகரிக்க தவறவில்லை. மறைக்கவில்லை.
இருட்டடிப்பு செய்யவில்லை. இதை அவர்கள் எண்ணிப்பார்க்கவில்லை என்பதும்
வேறு விஷயம். அது அவர்கள் கீழ்மையைப் பற்றிய விஷயம்.
இப்படித்தான் உலகமே இருக்கிறது. புத்தக வெளியீட்டில், எழுத்தைச்
சீராக்குவதில், நாம் அன்று எண்ணிப்பார்க்காத தரத்திற்கு,உயரத்தி
இவ்விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் க்ரியா ராமகிருஷ்ணன். இதெல்லாம்
அவருடைய கொடை. - a gift of his vision and dedication. இன்று
காலச்சுவடையும் சேர்த்து நாம் பார்க்கும் அத்தனைக்கும் முன்னோடி,
வழிகாட்டி அவர். அவருக்கும் எனக்கும் இருந்த நட்பின் நெருக்கம்
உஙகளுக்குத் தெரியாது. அது டெல்லியில் தொடங்கியது. இருப்பினும் அவரது
க்ரியாவினால் அதிகம் பயனடைந்தது. சு.ரா. ஒரு பயனும், அடையாதது நான், இன்று
வரை. ஆனால், இன்றும் நானும் ராமகிருஷ்ணனும் நண்பர்கள் தான்.
அதிகப்பயனடைந்த சு.ரா. விரோதித்துக் கொண்டு போய் வருடங்கள் பத்துக்கும்
மேலாயிற்று. முகம் பார்த்துக்கொள்ள விரும்பாத நிலை.சு.ரா.வுக்கு நினைவு
இருக்கிறதோ என்னவோ, தில்லியில் இருந்த எனக்கு இது தெரிய வந்ததும், இவ்வளவு
பழைய, நெருங்கிய நட்பை இப்படி உதறுவது வயது முதிர்ந்த காலத்தில் நல்லதல்ல
என்று இருவருக்கும் எழுதி சமாதானம் செய்து வைக்க முயன்றேன். பட்ட
காயத்தின் வலியை ராமகிருஷ்ணனால் மறக்க இயலவில்லை. சு.ரா.வுக்கு, கண்ணன்
காட்டிய எதிர்கால மகோன்னத சுபிட்சம் கண்களை மறைத்தது என்று நினைக்கிறேன்.
என் புத்தகம் ஒன்று கூட க்ரியாவில் வெளிவராவிட்டாலும் நானும்
ராமகிருஷ்ணனும், இடைப்பட்ட உரசல்களையும் மீறி நண்பர்கள் தான். இன்று
காலச்சுவடு ஒரு சாம்ராஜ்யம் தான். அது வெளியிட்டுள்ள சு.ரா.வின்
புத்தகங்களில் ஒன்றில் சு.ரா. ராமகிருஷ்ணனை நினைவு கூறுகிறார்: எப்படி?"
படைப்பின் உருவாக்கத்திற்கும், அச்சேற்றத்திற்கும் இடைப்பட்ட
நுட்பங்களையும் பொறுப்புக்களையும் எனக்கு உணர்த்திய எஸ்.ராமகிருஷ்ணன்,
என்.சிவராமன், கி. நாராயணன் ஆகியோருக்கும், ப. சங்கரலிஙகம்
நினைவுக்கும்". இதைத்தான் left handed compliment என்பார்களோ!.
கண்ணியம் மிக்க சு.ரா.வுக்கு அது தெரிந்திருக்கிறது. நன்றி சொன்ன
மாதிரியும் இருக்கும். எதிராளி மனதைப் புண்படுத்தும் காரியமும் நடக்கும்.
1996 தமிழக தேர்தலில், தி.மு.க.வின் பிரசாரத்திற்கு ரஜனிகாந்தின் "இந்த
முறை அ.தி.மு.கவிற்கு நீங்கள் வோட்டளித்தால், தமிழ் நாட்டை கடவுள் கூட
காப்பாற்ற முடியாது" என்ற கோஷம், தொலைபேசியில் பதிவானதை தமிழ்
நாடெங்கும், தெருவுக்குத் தெரு, சந்துக்குத் சந்து கருணா நிதியே, சூப்பர்
ஸ்டார் சொல்கிறார் என்று சொல்லி எதிரொலித்து நன்கு பயன்படுத்தி, தேர்தலில்
வெற்றி பெற்ற பிற்கு ஒரு நீண்ட மெளனம். கேள்விகளும், கண்டனங்களும் நிறைய
எழுந்தனவோ என்னவோ, பின் " ஆமாம், பெரிய சாமி, கருப்ப சாமி, ராமலிங்கம்,
க்ருஷ்ண குமார், வேலுப்பிள்ளை, ரஜனிகாந்த், ரகுராமன், வெள்ளையப்பன், பழனி,
போன்ற எத்தனையோ பேர் உழைப்புக்கும் தி.மு.கவின் வெற்றியில் பங்குண்டு"
என்று இப்படி ஏதோ சொன்னார் கருணா நிதி. சு.ரா.வும் கருணா நிதியும்
ஒரேமாதிரித்தான் செயல்படுகிறார்கள். இதில் மாத்திரமா? இன்னும் பல
ஒற்றுமைகளைப்பட்டியலிட முடியும்
காலச்சுவடு-வில் வருவதெல்லாம் எனக்கு தெரிந்தா வருகிறது.? ஆனால் என்
பொறுப்பில் இருந்தால் இதையேதான் செய்திருப்பேன் என்கிறார், சு.ரா.
சாமர்த்தியம் தான். எம்.ஜி.ஆர், கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரா, ஸ்டாலின்
துணைச்செயலாளர் ஆனாரா, தே.ஜ.கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகுகிறதா, தயா
நிதி மாறன் தேர்தலில் நிறுத்தப்படுகிறாரா, மத்திய காபினெட்டில் பதவி
அவருக்கு வேண்டும் என்று கேட்கப்படுகிறதா, எல்லாம் தி.மு.க.வின்
செயற்குழுதான் தீர்மானிக்கிறது என்றுதான் ஒவ்வொருமுறையும் கருணா நிதி
சொல்கிறார். தி.மு.க. ஆவணங்களும், செயற்குழு கோப்புகளும் அதைதான் நிரூபணம்
செய்கின்றன, எழுதப்படும் தி.மு.க வரலாறும் அப்படித்தான் சொல்லும். அன்பு
மணிக்கு ராஜ்ய சபாவில் இடம் தரவேண்டும் என்றும், அவரை மந்திரி
ஆக்கவேண்டும் என்றும் கட்சியில் பலத்த வேண்டுகோள் எழுந்ததாகத் தான்
டாக்டர் ஐயா, ராமதாசும் சொல்கிறார். காற்றினில் வரும் கீதங்களை
ஒதுக்கிவிட்டு நிரூபணங்களைத் தேடிச் சென்றால் ராமதாஸ் சொலவது தான்
நிரூபணம் ஆகும் என்று தோன்றுகிறது. சோவியத் ரஷ்யாவில் முடிவுகள் எல்லாம்
எடுப்பது கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுதான், ஸ்டாலின்
அம்முடிவுகளை செயல்படுத்ததான் செயலாளராக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆவணங்களும் அதைதான் சொல்லும்.
இதைத் தானே சு.ரா.வும் கேட்கிறார். வெ.சா. சொல்வதற்கு என்ன ஆதாரம்?
நிரூபணம் என்ன? எல்லாம் ஆதாரமற்ற காற்றினிலே வந்த கீதங்கள் என்று. நான்
எங்கே போவேன் நிருபணத்திற்கும், ஆவணங்களுக்கும்.? நாகர்கோயிலுக்கும்
கலிபோர்னியாவுக்கும் இடையே நடந்த இ-மெயில், தொலைபேசி பரிமாறல்களின்
பதிவுகள் எனக்கு எங்கே கிடைக்கும்?. பட்ட பகலில் சாலை நடுவே
நடக்கும் கொலைகளுக்கே சாட்சிகள் கிடைப்பதில்லை. கேஸ் ரத்தாகிறது. தாவூத்
இப்ராஹீமை கைது செய்தாலும், நிரூபணம் எங்கே என்று அவன் கேட்டால் போலீஸ்
என்ன செய்யும்? எல்லாம் காற்றினிலே வந்த கீதங்கள் தானே.
எனக்கு விருது தருவதாக நிச்சயிக்கப் பட்டதும், அதை டோரண்டோவிலிருந்து
செல்வ கனகனாயகம் எனக்குச் சொன்னதும். இது பற்றி சு.ரா.வுக்குச்
சொல்லப்பட்டதும், அவர் இதைப் பாராட்டி, நல்லகாரியம், 40 வருஷமாக
வெ.சா.செய்ததற்கு அவருக்குக் கிடைத்தது ஒன்றுமில்லை என்றுதும்.
நாகர்கோயிலிலிருந்து அவரும் அவர் மனைவியும் என்னை வாழ்த்தி, கட்டாயம் போய்
வாருங்கள் என்று சொன்னதில் சந்தோஷத்தை நான் உணர்ந்ததும், இப்படி ஒராயிரம்
விஷயங்கள் காற்றினிலே வந்த கீதங்களாகத்தான் இருந்துவிட்டன. எதற்கும்
நிரூபணம் இல்லைதான். சு.ரா. தொலைபேசியில் வாழ்த்தும் போது, பின்னர் இது
பற்றி அவர் மெளனம் சாதிப்பார்,' நான் எந்த சந்தர்ப்பத்தில் என்ன மன
நிலையில் இருந்தேன், கேலியாக பேசினேனா? என்றெல்லாம் அவர் பின்னர்
கேட்கக்கூடும் என்று நான் யூகித்து,, ஆகையால், 'இது காற்றில் வரும்
கீதம். பத்திரத்தில் எழுதிக்கொடுங்கள்" என்று நான் எப்படிக்
கேட்டிருக்கமுடியும்? அது சரி ஆவணங்களாகக் கிடைப்பவை எவ்வளவு உண்மை.?
செயற்குழு தீர்மானங்கள் எனப் பதிவு செய்யப்படுபவை, உண்மைகளா?
ஆவணப்பதிவுகள் எனப்படுபவை எப்படி உண்மையை மறைத்து, எது வெளியே
சொல்லப்படவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டவை மாத்திரமே ஆவணமாகின்றனவோ
அப்படியே, காற்றினிலே வந்த கீதம் என்று அசெளகரியமானவற்றை அங்கீகரிக்க
மறுப்பதும், நீரூபனம் எங்கே? கேலியா பேசினேனா, நிஜமாவா? என்று
கேட்பதும்.
சொல்லப்போனால், நம் கலாச்சாரத்தின் பண்பாட்டின், நாகரீகத்தின் வித்துக்களே
காற்றினிலே வந்த கீதங்கள் தான். முகம்மது நபிக்கு குர் ஆன் கிடைத்ததும்,
கிறிஸ்து உபதேசித்ததும், ராமகிருஷ்ண பரம ஹம்சரின் கதாம்ருதம் முழுதும்,
அர்ஜுனனுக்கு கண்ணன் கீதோபதேசம் செய்ததும், நமது இதிகாசங்களும், எல்லாம்
காற்றினிலே வந்த கீதங்கள் தான். வேதங்களும் காற்றினிலே ஆயிரம் ஆயிரம்
வருஷங்களாக பயணம் செய்துதான் நம்மை வந்தடைந்துள்ளன. அவற்றின் விசேஷ பாராயண
முறைகள் ஒரு அக்ஷரம் பிசகாது நம்மை வந்தடையும் வழிசெய்துள்ளதாக
அறிஞர்கள் சொல்கிறார்கள். பீஹார் மா நிலத்தைச் சேர்ந்த ஒரு கல்விமான், 50
வருடங்களுக்கு முந்திய செய்தி இது, சொல்வாராம், அவர் பெயர் ஏதோ ஜா,
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் எல்லாம் தொலைந்து போனாலும் உலகம் அவற்றை இழந்து
விட'து. எல்லாம்{தன் தலையைச் சுட்டி} இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. "
என்பாராம். என் கிராமத்தில் எங்களோடு இரண்டு தலைமுறை உறவு கொண்டிருந்த
ஒருவர், எங்களுக்கு எதிராக கோர்ட்டில் ராமாயணத்தின் மேல் கைவைத்து பொய்
சத்தியம் செய்த பாவத்திற்காக ஏதோ பெரிய சமாராதானை செய்தாராம். வாக்கு மீறி
பொய் சத்தியம் செய்தது குத்தகையை கொடுக்காமல் ஏமாற்ற. சமாராதனை அந்த பொய்
சத்தியம் செய்த பாபத்திலிருந்து மீள. ஏமாற்றுபவர்கள் கூட காற்றினிலே
பரிமாறிக்கொண்ட கீதத்தைப் புனிதமாக கருதினார்கள். அதை மறுப்பது பாபம்
என்று நினைத்தார்கள், என்பது சு.ரா, இதனால் பெறப்படும் நீதி.
ஆவணமோ, காற்றினிலே வரும் கீதங்களோ, அவற்றின் உண்மை சூழல்களால்
அனுபவத்தால், பரிமாறிக்கொள்ளும் மனிதர்களின் குணங்களால் உணரப்படும்.
பொய்யும் ஆவணங்களால் நிருபணம் ஆகும். ஆகின்றன.
கடைசியாக ஒன்று. சு.ரா.வோடு இன்றும் நட்பு பாவத்தோடு இருப்பவர்கள் மனம்
நொந்து என்னிடம் பேச்சு வாக்கில் சொன்னதைச் சொன்னேன். சு.ரா. அவர்களைச்
சந்திக்கும்போது அவர்கள் சினேக பாவத்தோடு தான் இருப்பார்கள். ஆனால்
அவர்களை இப்போதைய வாத செளகரியத்திற்காக 'பெருந்தகைகள்" என்று கேலி பேசி
மனம் நோகச் செய்துள்ளார். சு.ரா. இதை உதாசீனம் செய்யக்கூடும்.
சு.ரா.வை ராமசாமி என்று நெருக்கமும் சகஜமுமான பாவனையில் இனி
நான்அழைக்கமுடியும் என்று தோன்றவில்லை.வருத்தமாகத்தான் இருக்கிறது.
இத்தோடு இதுவிஷயம் பற்றி நான் எழுதுவதற்கு முற்றுப்புள்ளி. தொடர்வதற்கு
எனக்கு இஷ்டம் இல்லை.
வெங்கட் சாமிநாதன்
swaminathan_venkat@rediffmail.com
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
தார்மீகமிழந்த
சாமர்த்தியங்கள்!
வெங்கட் சாமிநாதன்
இப்போது எந்த மாதம், எந்த
நாள் என்புது கூட மறந்து விட்டது. இரவு பத்து மணி இருக்கும். தொலைபேசி மணி
அடித்தது. கனடாவிலிருந்து செல்வ கனகநாயகம் பேசுகிறேன் என்றது குரல்.
யார் நம்புவார்கள்? யார் இந்த கனக நாயகம்? கனடாவுடன் எனக்கு என்ன
தொடர்பு? கனடாவை நான் எப்போதாவது நினைத்தாவது பார்த்திருக்கிறேனா? வாழ்
நாளிலேயே? இப்போது நினைவுக்கு வருவது, கனடாவிலிருந்து ஐம்பதுக்களின்
ஆரம்பத்தில் ஏகப்பட்ட நீராவி ரயில் என்ஜின்கள் வாங்கி, அவற்றின்
கனத்தையும் வேகத்தையும் நம் நாட்டு இருப்புப்பாதைகள் தாங்கமுடியாத
காரணத்தால், பத்து பன்னிரண்டு என்ஜின்கள் தொடர்ந்து கவிழ்ந்த
விபத்துக்களின் காரணமாக மத்திய ரயில் மந்திரி தம் பதவியைத் துறந்தார்.
மந்திரிகள் தார்மீக பொறுப்புக்கள் பற்றி நினைத்த காலம் அது. இன்று
அது பைத்தியக்காரத்தனம். அது ஒரு காலம். ஐம்பதுக்கள்.
இன்னொன்று தமாஷான விஷயம். கனடாவின் பிரதம மந்திரி ட்ரூடோ, நம் அரசின்
அழைப்பில் இந்தியா வந்திருந்த போது அவருக்குத் தந்த உபசரிப்பில், ஒரு நாள்
மாலை யாமினி கிருஷ்ணமூர்த்தியின் நடனமும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது.
யாமினி ஆடிய கிருஷ்ண சப்தத்தில் ஒரு கட்டம். 'ராரா, ராரா' என்று பாலகன்
கிருஷ்ணனை விளையாட்டும் குறும்புமான நேத்ராபிநயத்தில்
நடனமாடும் யாமினி கண் சிமிட்டி கொஞ்சலாக அழைக்கப் போய், முன் வரிசையில்
அமர்ந்திருந்த ட்ரூடோ, யாமினி தன்னைத்தான் அழைப்பதாக எண்ணி, தன் இருக்கையை
விட்டு எழுந்து, மேடையை நோக்கி விரைந்தார், என்று ஒரு செய்தி உண்டு.
இது எவ்வளவு உண்மை என்பது தெரியாது. ஆனாலும், இந்த கதையின் சுவாரஸ்யம் என்
மனதில் நன்கு பதிந்து கனடாவைப்பற்றி நினைக்கும் போதெல்லாம்
இந்த நினைவும் உடன் வரும். அதெல்லாம் சரி, இந்த கனகநாயகம் யார்?"
உங்கள் வாழ் நாள் முழுதுமான இலக்கிய சாதனைக்காக, உங்களுக்கு இயல் விருது
அளிப்பதாக எங்கள் குழுவில் ஏகமனதாக தீர்மானித்துள்ளோம், நீங்கள்
ஏற்றுக்கொள்ளவேண்டும். உங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்து உங்கள்
சம்மதத்தைப் பெறத்தான் உங்களோடு தொடர்பு கொண்டேன்" என்றார், கனக நாயகம்.
அவர் பேசியது இலங்கைத்தமிழ். ஆகவே இது hoax ஆக இருக்கமுடியாது. நான்
ஜன்மத்தில் இப்படியெல்லாம் எனக்கு தொலைபேசி செய்திகள் வரும் என்று
எண்ணியது கிடையாது. அதுவும் போக இது விருது பற்றி. இருப்பினும்,
"மகிழ்ச்சியான விஷயம். நன்றி. நான் சற்றும் எதிர்பார்க்காத விசயம் இது.
எனக்கு இதை அதிகார பூர்வமாக கடிதம் எழுதுவீர்களா?" என்று
கேட்டேன். '"கட்டாயம் எழுதுவோம். நாளாகும். இது முன்னறிவுப்பு தான்"
என்றார், கனகநாயகம்.
இது தமிழ் நாட்டில் நடந்த
ஒரு பரிசுப்புரட்சி என்றே சொல்லவேண்டும். "'டெலிபோன் வந்தது,
ஆச்சரியப்பட்டுப்போய் விட்டேன்" என்று ஸ்டாக் டயலாக் பேசுவார்கள். அது
தான் தமிழ் வரலாறு. மரபு. ஆனால் இது தமிழ் நாட்டில் நடந்தது இல்லையே,
கனடாவில் அல்லவா நடந்துள்ளது.! ஆக தமிழ் மரபும், வரலாறும், தமிழ்
எழுத்தாளர் சீலமும் காப்பாற்றப்பட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.
என் சக எழுத்தாளர்களையும், தமிழ் எழுத்து உலகையும் எனக்கு நன்கு
தெரியுமாதலால், நான் யாரிடமும் இதுபற்றி மூச்சு விடவில்லை. முன்னர்,
கோயில் சுண்டல்கடலை போன்று வினியோகிக்கப்படும் பரிசு ஒன்று, கலைமாமணி
போன்ற ஒன்று, தமிழ் வளர்ச்சி கழக பரிசோ அல்லது தமிழ் அரசு பரிசோ எதொ
தெரியாது, கடைசிக்கட்டத்தில் இருப்பதாக சொல்லப்பட்டது மறைந்த மாயம்
தெரியவில்லை. ' "கடைசிக்கட்டம் வரை சென்றது எப்படி ஐயா?, அதைச்சொல்லும்,"
என்றேன். பதில் வரவில்லை. ஆக எந்நேரமும் எதுவும் நடக்கலாம்.
பிரதம மந்திரியின் சென்னை வருகையே ரத்தாகிறது. இந்த விருது எந்த மூலை?
தமிழ் எழுத்தாளர்களுக்கு தன் சகாக்களின் சுக துக்கங்களில் மிகுந்த ஈடுபாடு
உண்டு. இந்த தள்ளாத வயதில் நான் அலையலாமா? கனடாவில் குளிர் வேறு
கடுமையானது. விசா வாங்குவது வேறு பெரிய தொல்லை. பேசாமல்
மடிப்பாக்கத்திலேயே அக்கடா என்று இருப்பவர் தொல்லைப்படும் படி
விடக்கூடாது, என்று எனக்காக விசனப்படுவார்கள். அது வராமலிருக்க ஆவன
உடனே செய்வார்கள். தில்லியில் என்னைப் பார்க்க வருபவர்களை, "'என்னத்துக்கு
உங்களுக்கு கேடு காலம்? அந்த ஆள் மேலே விழுந்து புடுங்குவான்யா'" என்று
தடுத்தாட்கொண்ட மகானுபாவர்கள் எனக்கு நண்பர்களாக நிறைய
இருந்திருக்கிறார்கள். இது எனக்கு தடுத்தாட்கொள்ளப்பட்டவர்களே பின்னாளைய
சந்திப்பில் சொன்னது. ஆக என் சுக செளக்கியங்களில் அக்கறை கொள்ளும் தமிழ்
எழுத்தாளர்கள் நிறைய. ஆக கனடாவுக்கு செய்தி போகக்கூடும். செய்திகள்
போகின்றன தான். அது பற்றி பின்னர் சொல்ல இருக்கிறேன்
சில நாட்கள் கழித்து நான்
கனடா வர செய்து கொள்ள வேண்டிய தயாரிப்புகள் பற்றி, உரை ஆற்றுவது பற்றி,
அதற்கு முன் சுந்தர ராமசாமிடம் தாம் பேசியிருப்பதாகவும் அவருடன் ஒரு
கலந்துரையாடலும் தமக்கு வேண்டும் என்றும் சொன்னார், பேசியது இம்முறை
அ.முத்துலிங்கம். இதைத்தொடர்ந்து, அடுத்து என்னிடம் பேசியது, சுந்தர
ராமசாமியே. இதற்கு சில வாரங்கள் முன் அவர் என்னை அவருடைய க. நா.சு
நினைவுகளைப்பற்றிய புத்தகத்தைப் பற்றி அதன் வெளியீட்டு விழாவில் பேச
நாகர்கோயில் அழைத்திருந்தார். விழாவுக்கு மட்டும் வந்து போவது
என்றில்லாமல், "நாம் சந்தித்து உரையாடி வெகு ஆண்டுகளாகி விட்டதால், சில
நாட்கள் இங்கு தங்கி சாவகாசமாக் பேசும்படியாக வாருங்கள்" என்று
அழைத்திருந்தார். இதற்குள் நான், எல்லாக் கிழங்களுக்கும் நேர்வது போல்
குளியலறையில் வழுக்கி விழுந்து, கால் முட்டியும் தேய்ந்து, நடக்கமுடியாது
போய், தில்லி கதா விழாவுக்கும் போக முடியாது, நாகர்கோயில் போவதையும்
விட்டு விடவேண்டியதாயிற்று. இயல் விருது எனக்கு கிடைத்துள்ளது பற்றி
தனது சந்தோஷத்தைத் தெரிவித்து, எனது கால் நிலையைப்பற்றி விசாரித்தார்.
சுந்தர ராமசாமி." இதற்காக கனடா போகாமல் இருந்து விடாதீர்கள். விமான
அதிகாரிகளிடம் சொன்னால் சக்கர நாற்காலியும், உதவியாளரும் கொடுப்பார்கள்."
என்றும், என் புத்தகங்களை மறுபடியும் ஒருமுறை படித்து, நினைவுகளைப்
புதுப்பித்துக் கொண்டு, பின்னர் உரையாடலுக்கு ஏற்பாடு செய்யலாம்'" என்றும்
சொன்னார். "'பக்கத்தில் கமலா இருக்கிறாள். உங்களுடன் பேச விரும்புகிறாள்"
என்று சொல்லி, போனைக் கொடுக்க, அவர் மனைவியும், தான் '" ரொம்ப ரொம்ப
சந்தோஷப்படுவதாகச் சொல்லி, வாழ்த்துத் தெரிவித்து, போகாமல் இருந்து
விடாதீர்கள், "என்றார்.. பின்னர், டோரண்டோவில், செல்வம் அருளானந்தமும்,
மகாலிங்கமும் கூட இருவரும் தனித்தனியே, பேச்சுக்களிடையே, சொன்னார்கள்,
'பரிசு யாருக்கென தீர்மானமானதும், சு.ரா.வுக்கு தொலைபேசியில் சொன்னோம்.
அவர் மிகவும் சந்தோஷப்பட்டுச் சொன்னார், " நாற்பது வருஷகாலமாக அவர்
செய்துள்ளதற்கு அவர் பெற்றது ஒன்றுமில்லை. இந்த விருது அவருக்குக்
கிடைக்கவேண்டியது தான். நீங்கள் செய்துள்ளது மிக நல்ல காரியம், என்றார்
சு.ரா. "என்று எனக்குச் சொல்லப்பட்டது. கிடைத்த எல்லா செய்திகளும் ஒன்றை
ஒன்று அரண் செய்வதாகவே இருந்தன.
ஜெயமோகனும் இரண்டு மூன்று தடவை
எனக்கு டெலிபோன் செய்தார், '"ஏதாவது காரணம் சொல்லி போகாது
இருந்துவிடுவீர்களோ என்று எனக்கு பயம். அதனால் தான் திரும்பத் திரும்ப
பேசுகிறேன். கட்டாயம் போய் வாருங்கள் " என்பார். இதற்கிடையில்
திண்ணை இணைய இதழில் எனக்கு அளிக்கப்பட விருக்கும் இயல் விருது பற்றி
விரிவாக செய்தி தரப்பட்டிருந்தது. இதன் பிறகே, இனி தமிழ் நாட்டு என்
சகபாடிகள் யாரும் என் உடல் நிலையில் அக்கறை கொண்டு, கனடாப் பயணத்தை
தடுத்து நிறுத்தி விட முடியாது என்ற நிச்சயம் என்னுள் பிறந்தது.
இதன் பிறகு ஒரு பிரபல
பத்திரிகை, குங்குமம் என்று நினைவு, "விமர்சகர் வெங்கட் சாமினாதன் ஒரு
லக்ஷ ரூபாய் பரிசு பெற அமெரிக்கா போகப்போவதாக" ஒரு பெட்டியுள் அடக்கிய
ஐந்து துணுக்குச் செய்திகளில் ஒரு துணுக்காக, வெளியிட்டிருந்தது. டொரண்டோ
போனால் இந்த செய்தியைக்காட்டி, ஒரு லக்ஷ ருபாய் டிமாண்ட் செய்யலாம் என்று
நினைத்துக்கொண்டேன். இதன் பிறகு எனக்கு வாழ்த்துக்கள் இரண்டோ மூன்றோ
வந்தன. தமிழ் நாட்டின் ஏழுகோடியில் என் வோட்டு வங்கி இவ்வளவு தான் என்று
தெளிவாகியது. தம் புத்தகங்களை அனுப்பி என் கருத்துக்களைக் கேட்டவர் தொகை
கிட்டத்தட்ட ஒரு நூறு இருக்கலாம். ஆனால் வோட்டு வங்கி ஒரு கைவிரலுக்குள்
அடங்கி விடுகிறது. ஒரு அன்பர் கேட்டார், "கனடாவுக்குப் போகணுமா இங்கியே
கொடுப்பாங்களா?" என்று கேட்டார். "கனடாவுக்குப் போகணும்" என்று சொன்னதும்,
"அடி சக்கை, லாட்டரிச் சீட்டு விழுந்துடுச்சி உங்களுக்குன்னு சொல்லுங்க,"
என்றார். இன்னொருவர், '"கேள்விப்பட்டேனே, அப்படித்தாங்களா?" என்று
கேட்டார். ஏதோ நான் போகக்கூடாத இடங்களுக்கு சந்திருட்டில் போய்,
அகப்பட்டுக்கொண்டு ஒரு இரவு போலிஸ் ஸ்டேஷனில் கழித்து வந்தவனை துக்கம்
விசாரிப்பதான சோக பாவம் அவர் முகத்தில் இருந்தது. தமிழ் நாட்டில் பரிசு
வாங்குவதும் இருட்டில் ஏற்பாடு செய்யப்படும் சமாசாரம் தானே என்ற
மரபுத்தொடர்ச்சிதான் சோகத்திற்குக் காரணமோ என்னவோ. இவ்வளவு தான் தமிழ்
நாடு இயல் விருது எனக்கு அளிக்கப்பட்டது பற்றி சந்தோஷம் அல்லது துக்கம்
பட்டது. இதே விருது கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கோ அல்லது கவிப்பேரரசு
வைரமுத்துக்கோ அளிக்கப்பட்டிருந்தால், தமிழ் நாடு என்ன அல்லோகல
கல்லோலப்பட்டிருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன்.எத்தனை "சென்று வருக,
வென்று வருக" போஸ்டர்கள் தமிழ் நாட்டுச் சுவர்களை ஆக்கிரமித்திருக்கும்.
தமிழினத் தலைவரைக் கண்டு ஆசி பெற்று, அது முரசொலியில் கவிதையாக மலர்ந்தும்
இருக்கும். கொடுக்கப்படுபவரின் குணத்தையும் தரத்தையும் தான் பரிசும்
பெறுகிறது என்பது எவ்வளவு உண்மை என்பது மறுபடியும் நிரூபணமாயிற்று. பின்னே
வேறு என்ன காரணம் ஐந்து லக்ஷம் பெறுமான ஸம்ஸ்க்ருதி பரிசு இ.பா.வுக்கு ஏதோ
பாங்க் கணக்கில் சேர்ப்பது போன்று பேச்சு மூச்சின்றி நடந்து
முடிகிறது.? 50,000 ருபாய் சாகித்ய அகாடமி பரிசோ 50,000 க்கு மேலேயே செலவு
செய்யப்பட்டு பெறப்பட்டு, தமிழ் நாடெங்கும் விழாக்கோலம் கொள்கிறது. .
எனக்குக் கொடுத்து அதன் கெளரவத்தையே குலைத்து வீணாக்கிவிட்டதாக
பலரும் நினைத்தார்கள்.இவர்கள் பொருமலில்,வயிற்றெரிச்சலில், ஒரு
தமிழ் மரபு நியாயம் இருக்கத்தான் செய்கிறது.
ஆக இதில் எனக்கு ஏதும்
புல்லரிப்போ அல்லது வேறு எந்த அரிப்புமோ இருக்கவில்லை. மாறாக, நிறைய
அலைச்சலும் பணச்செலவும் தான், மன நிம்மதியையும் குலைத்துக்கொண்டு. ஆனால்,
என்னமோ சொல்வார்களே, உள்ளூரில் கோழி பிடிக்காதவன் வெளியூரில் யானையா
பிடித்து விடுவான் என்று. எனக்கு உள்ளூரில் கோழிக்குஞ்சுகூட பிடிபடவில்லை.
எங்கோ 6000 மைலுக்கு அப்பால் நான் அம்பாரத்தோடு யானையையே பிடித்துவிட்டதாக
பாராட்டு வந்தது. உள்ளூர்க்காரன் யாரும் நம்புவதாக இல்லை. சந்தோஷப்படவும்
இல்லை. "கனடா போகும் ஏற்பாட்டுக்கே இவ்வளவு செலவு இங்கேயே என்றால்,
கனடா போய் அதை வாங்கணுமா?" என்று ஒரு கேள்வி வீட்டில் எழுந்தது. "கனடா
பார்க்கலாமே" என்று சொல்லிப்பார்த்தேன்." ஆமாம், கும்மிடிப்பூண்டியே
பார்த்ததில்லை. கனடா பார்க்காவிட்டால் என்ன கெட்டுப்போயிற்று? "- என்னிடம்
இதற்கு பதில் இருக்கவில்லை. தில்லிக்கு விசா வாங்கப்போனேன். காலையில் 8.30
க்கு ஹை கமிஷன் வாயில் திறக்கும். நாம் இங்கிருந்து காலை 7.30க்கு கிளம்பி
ஆட்டோவில் போய்விடுவோம். எட்டு மணிக்கெல்லாம் அங்கு இருப்போம்." என்றார்
நண்பர் ராஜேந்திரன். காலை 8,.00 க்கு அங்கு போனால், முதல் நாள் இரவே
அங்கிருந்த புல்வெளியில் டேரா போட்டு உறங்கி எழுந்த பஞ்சாப் ஹரியானா
கூட்டம். சுமார் 500-600 பேர். தினம் 100 பேர்தான் ஹைகமிஷன்
காம்பவுண்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மிகுந்தவர் மறு நாள் வரலாம்,
என்று சொன்னார்கள். முந்தின தினம் இரவு வந்து புல் வெளியில்
படுத்துக்காத்திருந்தவரில் வரிசைப்பட்டியலை ஒரு சர்தார்ஜி வாசிக்க
ஒவ்வொருவராக ஹைகமிஷனின் வாயில் நோக்கி ஒடத்தொடங்கினர்." பச்சீத்தர் சிங்,
ஜண்டா சிங், தெளசண்டா சிங், -மாஹீந்தர் சிங், ...................ப்யாரா
சிங், ஹர்மீந்தர் சிங்... அவ்வளவுதான் ஆயிற்று நூறு பேர்" என்று சொல்லி
முடித்தான்.அந்த சர்தார்ஜி. மிகுந்தவர்களும் பின் தொடர்ந்து
ஒடிப்போய் வரிசையில் சேர்ந்து கொண்டனர். நானும் நொண்டி நொண்டி
போய்ச்சேர்ந்தேன், 578வது ஆளாக. "எதற்கு இந்த பைத்தியக்காரத்தனம்?
தெரியாது. " நேற்று உதவுவதாக சொன்ன அதிகாரி ஏமாற்றி விட்டாள்.
இப்போதான் அவளுக்கு டெலிபோன் செய்து விட்டு வருகிறேன்." என்றார்
ராஜேந்திரன். அரைமணி காத்திருந்தோம். யாரும் ஒரு அங்குலம் கூட
முன்னேறியதாக தெரியவில்லை. நான் இருந்த இடத்திலேயே இருந்தேன். இதில் ஏதும்
அர்த்தமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கால் வலி எடுத்தது. நிற்க முடிய
வில்லை. "சரி திரும்பிப் போய் கனடாவுக்கு. "விசா கிடைக்க வில்லை.
நானும் கனடா வரமுடியாது. உங்கள் தேர்வுக்கும் நல்ல மனதுக்கும்
நன்றி" என்று ஒரு இ-மெயில் கொடுத்து விடலாம். அது ஒன்று தான்
செய்யக்கூடியது" என்று தீர்மானித்தேன். " இல்லை, நான் போய் ஏதாவது வழி
இருக்கா என்று பார்க்கிறேன் "'என்று சொல்லி உள்ளே போன ராஜேந்திரன் அரைமணி
கழித்துத் திரும்பி, "டோரண்டோ யுனிவர்சிடி கடிதத்தை கொடுங்கள், காவல்
அதிகாரி பார்க்க விரும்புகிறான் " என்றார்.
ஊள்ளே நுழைய அனுமதி
கிடைத்தது. ஆக நான் கனடா போனது, விருது பெற்றது எல்லாம், அந்த காவல்
அதிகாரியின் மனது மாற்ற கடைசி இழையில், ராஜேந்திரன் மூளையில் அந்த நிமிடம்
தோன்றிய அலையில், தொங்கிக் கிடந்தது. அந்த நூலிழை அறுந்திருந்தால், எத்தனை
பேர் இப்போது தம் மனதுக்குள் பொருமுகிறவர்கள், அடக்கமுடியாது
கரித்துக்கொட்டுபவர்கள் சந்தோஷப்பட்டிருப்பார்கள்! நடக்கவில்லை. இப்போது
பலரின் முகம் சற்று தெளிவாகத் தெரிய தொடங்கியுள்ளது. இவ்வளவுதான் இந்த
யாக்கையின் கனடாச் செலவின் ஒரு அத்தியாயம். முதல் அத்தியாயம். இது பரிசு
எனக்குக் கொடுத்த பரவசத்தைச் சொல்லும்.
சுந்தர ராமசாமி திடீரென
சுகவீனமுற்றதால், சிகித்சை பெற்றுப் பின் அமெரிக்கா செல்வதாக கடிதம்
எழுதினார். அதற்கு மேல் அவர் ஏதும் விவரம் சொல்லவில்லை. அரவிந்தன் பேட்டி
காண்பார் என முத்துலிங்கத்திடமிருந்து செய்தி வந்தது. இடையில் ஒரு ஒவியக்
கண்காட்சியில் பார்த்த மனுஷ்யபுத்ரன், பேட்டி காண தன்னைக்
கேட்டிருப்பதாகச் சொன்னார். அடுத்து சில நாட்கள் கழித்து, சிபிச்செல்வம்
தான் தான் பேட்டி காணவிருப்பதாக சொன்னார். யாரும் முந்திய நபர் மறைந்து
தான் காட்சி தரும் ரகசியம் என்ன என்பது பற்றி ஏதும் சொன்னதில்லை. என்னமோ
திரை மறைவில் நடப்பதாகத் தான் மனதில் நிழலாடியது. முத்துலிங்கமோ எனக்கு
எவ்வளவு தகவல் அவ்வப்போது தேவையோ அவ்வளவே தருபவராக இருந்தார்.
காலச்சுவடு, உயிர்மை, அமுதசுரபி மூன்றும் தான் இயல் பரிசு பற்றிய செய்தியை
பிரசுரித்தன. கனடாவிலிருந்து திரும்பி வந்ததும், காலச்சுவடும்,
உயிர்மையும், கனடாவிலிருந்து வெங்கட் ரமணனும், முத்துலிங்கமும்(என்
யூகம்) பரிசளிப்பு விழா பற்றி எழுதி அனுப்பிய செய்தியைப்
வெளியிட்டிருந்தன.
கண்ணனுக்கு என் எழுத்தில்,
என் செயல்பாடுகளில் ஏதும் மதிப்பு கிடையாது என்பது எனக்குத் தெரியும். அது
ஒருகாலத்தில் கண்ணனுடன் நெருங்கியிருந்தவர்களிடமிருந்தும் பேச்சுவாக்கில்
உறுதி செய்யப்பட்டது. ஆனால் நேர் பழக்கத்தில், கண்ணன் ஒரு போதும், என்
வயது காரணாமாகவோ, அப்பாவின் நெடு நாளைய நண்பன் என்ற காரணத்தோலோ,
மரியாதைக்குறைவாக நடந்து கொண்டது கிடையாது. எனக்கும், கண்ணன் அப்பாவின்
இலக்கிய ஈடுபாடுகளில் கொண்டுள்ள மதிப்பும் அப்பாவை ஒரு சிகரத்தில்
அமர்த்திவிட எடுத்துக்கொள்ளும் தீவிர முயற்சிகளும் பாராட்டத்
தகுந்தவையாகவே தோன்றின. மேலும் கண்ணனின் நிர்வாக திறனை நான்
பாராட்டும்போதெல்லாம் கண்ணனுக்கு ஏனோ அவை கேலியாகவே பட்டன.
இனித்தான் சிலருக்கு தம்
தமிழ் மரபு பேணும் நினைவு வந்தது போலும். காலச்சுவடு வில் பெட்டி
கட்டி முக்கியப்படுத்திய கடிதம் ஒன்று, காலச்சுவடுவின் இலங்கை வாழ்
ஆலோசனைக் குழுவினரான எம். ஏ நுஹ்மான் என்பவர் இயல் விருதுக்கு நான்
தகுதியற்றவன், விருதுவின் கெளரவத்தையே இது தாழ்த்திவிட்டது என அவர் தன்
வயிற்றெரிச்சலையே கொட்டித்தீர்த்துக் கொண்ட கடிதம் ஒன்று வெளியாகிற்று.
இதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பார்த்தால், காலச்சுவடு
கண்ணனும் நுஹ்மானின் கரிப்பைப் பகிரிந்து கொள்வதாக எனக்குப் பட்டது.
இயல் விருது அறிவிக்கப்பட்டபின் கண்ணன் என்னுடன் பேசியது, அதுவும்
நாகர்கோயிலிலிருந்து தொலைபேசியில், ஒரே ஒரு முறை தான். இந்தியா டு டே யில்
நான் தருமு சிவராமுவின் கதைத்தொகுப்பு பற்றிய என் மதிப்புரையைப்
படித்துவிட்டு, அது மிக நன்றாக balanced- ஆக எழுதப்பட்டுள்ளதாகவும்
தனக்குப் பிடித்திருந்ததாகவும் சொல்லத்தான். இதற்காகவா
நாகர்கோயிலிலிருந்து std? அதுதான் கண்ணன் முதல் தடவையாக என் எந்த எழுத்து
பற்றியும் ஏதும் கருத்து சொன்னது . "இது பெரிய விஷயம் தான். கண்ணனின்
பாராட்டு கிடைத்துவிட்டதே, இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு ?" என்று
பதிலளித்தேன். . பின் எனக்குத் தோன்றிற்று, ஒரு மதிப்புரையைப் பாராட்டத்
தெரிகிறது. இயல் விருது பாராட்ட வேண்டிய விஷயமாகக் கண்ணனுக்குத்
தோன்றாதது, மறதியோ, தற்செயலான விஷயமோ இல்லை என்று. இந்த நினைப்பு
தவறாகவும் இருக்கலாம். ஆனால் நுஹ்மான் எழுத்தும் அது பெற்ற
முக்கியத்வமும்? பின்னர் அதைக் கண்டனம் செய்து வந்த கடிதங்கள் பத்தோடு
பதினொன்றாக பிரசுரிக்கப்பட்ட பாங்கு. நுஹ்மானது கருத்து அவரதே எங்களது
அல்ல என்று கூட ஒரு வரி அடிக்குறிப்பு கூட இல்லை. கண்ணனுக்கு அத்துடன்
உடன்பாடு இல்லை எனில் அது பிரசுரிக்கப்பட்டிராது. ஏதும்
நிர்பந்தமிருப்பின், பத்திரிகை அத்துடனிருந்து தன்னை விலக்கிக் கொள்ளும்
குறிப்பு பத்திரிகை தர்மத்தை, தனி மனித தர்மத்தை, கருத்து தர்மத்தைச்
சார்ந்து வெளியிடப்பட்டிருக்கும். காலச்சுவடு ஒரு முனிசிபாலிடி
குப்பைத்தொட்டி அல்லவே., யாரும் எதையும் அதில் விட்டெறியலாம், எதுவும்
கிட்ட வந்து ஒரு பின்னங்காலைத் தூக்கலாம் என்பதற்கு.
நுஹ்மானுக்கு என்னிடம் 30
வருட மிகப் பழைய,கூலியாகப் பெற்ற ,குரோதம் உண்டு. கைலாசபதியின் ஒரு
பிதற்றல் புத்தகத்தை நான் கடுமையாக நடை பத்திரிகையில் கண்டனம்
செய்திருந்தேன். ஒரு மிக நீண்ட கட்டுரை. நடையின் நாலைந்து இதழ்களில்
வந்தது. தாம் ஒரு மேதையாக குருவாக மதித்திருந்த ஒருவர் இப்படி அடி படுவது
முற்போக்காளர் சமூகத்திற்கு அதிர்ச்சியாக இருந்தது. தமிழருக்கே உள்ள
குணமான, கண்டுகொள்ளாமலிருப்பது, கைலாசபதிக்கு அப்போது செளகரியமாக
இருந்தது. ஆனால் சில வருடங்கள் கழித்து, அது பூரணீ என்னும் இலங்கைப்
பத்திரிகையிலேயே ஒரே இதழில் பிரசுரமானதும், தன் பேட்டையிலேயே தான்
அவமானப்படுவது சரியல்ல என்று, அப்போது தன் காலடிக் கீழ் இருந்த நுஹ்மானை
இதற்கு பதில் கொடுக்கச் சொன்னார் கைலாசபதி. ஆண்டை இட்ட கட்டளையை
ஆசானின் திருப்திக்கு நிறைவேற்றப்பட்டது, ஒரு கூலிப்படையின் கர்ம
சிரத்தையுடன். அதற்கான வெகுமதியும் அவருக்குக் கிடைத்து அதை இன்று
வரை அனுபவித்தும் வருகிறார் இவர். ஆக விஸ்வாசமான சொன்னதைச் செய்யும்
கூலிப்படை என்னும் புகழ் ஏற்கனவே உள்ளதால், இப்போது, தன் அப்பாவுக்கு
சமதையாக விருது பெற்றுள்ள, தான் மதிக்காத ஒருவரை சும்மா விடுவதா என்ற
நினைப்போ என்னவோ, கண்ணனுக்கு. ஏற்கனவே நல்ல service record உள்ள
கூலிப்படைக்கு இன்னொரு வேலை. தன் தர்பாரிலேயே வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள
ஒரு ஆள் கிடைத்தால் வேறென்ன வேண்டும்? கண்ணனின் நிர்வாகத்திறன் என்
பாராட்டைப் பெற்றுள்ளதே.
நுஹ்மானின் வசைக்கு எதிரொலி
பதிவுகள் என்னும் இணையத்திலேயே, எழுத வைத்துப் பெறப்பட்ட ஒன்று அது என
வெளிவந்தது. இது கனடாவிலிருந்து வரும் இணைய இதழ். "கேட்டார்கள்
எழுதிக்கொடுத்தேன்' என்று நுஹ்மானே சொன்னதாகவும் ஒரு செய்தி. இதை
நுஹ்மானின் மாண்பும் வரலாறும் அறிந்தவர்கள் நம்புவார்கள் தான். எனக்கு பல
இடங்களிலிருந்து வரும் செய்தி, இது கட்டளையிட்டு பெறப்பட்டது என.
காலச்சுவடையும் கண்ணனையும் நன்கு அறிந்த மனுஷ்யபுத்திரன் அவசரம் கருதி
துண்டுபிரசுரமாக வெளியிட்டுள்ளதில் காலச்சுவடில் வெளியாகும் பல கட்டுரைகள்
கூட்டுத்தயாரிப்புகள்தான் என்கிறார். கோட்டைக்குள் வெகு காலம் இருந்தவர்.
உள் விஷயங்கள் அறிந்தவர் என கொள்ளலாம். இக்கூட்டுத்தயாரிப்புகள், காலம்,
சந்தர்ப்பம், கருதிச் செய்யப்படும் திட்ட நடவடிக்கைகள் என்று அவர்
பிரசுரத்திலிருந்து தெரிகிறது. ஜெயகாந்தன், ஜெயமோகன் பற்றி வந்த
விமர்சனங்கள் இப்படிப்பட்டவை எனவும் இவற்றின் பின் இலக்கியம் மீறிய
காரணங்கள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. முன்னாளைய எதிரணிக்காரர்,
இன்றைய நேர்காணலுக்குப் பாத்திரமான பொ.வேல்சாமி. இது இப்போர்த்
தந்திரஙகளுக்கான இன்னும் ஒரு உதாரணம்.
அப்பாவுக்கு ஒரு
குறிப்பிடத்தகுந்த இலக்கிய ஸ்தானம் உண்டு. கண்ணனுக்கு தன் அப்பாவின்
மேல் அவர் எழுத்தின் மேல் உள்ள மதிப்பும் பிரேமையும் பாராட்டத்தக்கவையே.
கண்ணனின் நிர்வாகத்திறனும், செயல்திறனும் யாரையும் உடன் கவரும். ஆனால்,
எதுவும் ஒரு அளவுக்கு மேல் முற்றிலும் குணம் மாறியதாகிவிடும். என்ன அளவு
என்று கேட்கவேண்டாம். இதில் சாமர்த்தியம் காட்ட வேண்டாம். புளிப்பு
இனிப்பாகும். இனிப்பு புளிப்பாகும். எந்த அளவில்?. தெரியும்
எல்லோருக்கும். அப்பா கம்பீரமான ஆகிருதி தான். photogenic தான். இயல்பான்
அவரது தோற்றத்தில், மிக impressive ஆன புகைப்படங்களை நிறைய
சேர்க்கமுடியும். அவரது ஜீவ சரித்திரத்தையே திட்டமிடாது சேர்த்த
புகைப்படங்களாலேயே காட்சிப்படுத்தி விட முடியும். ஆனால் இப்போது
திட்டமிட்டு நடந்துள்ள கண்காட்சி, அவரை ஒரு வெற்று மாடலாக்கி
கீழிறக்கியுள்ள ஒன்று. தர்பாரில் இருப்பவர்களெல்லாம் புகழ் பாடுவார்கள்
தான், நிதானமிழந்து, இவையெல்லாம் பழங்கால சமஸ்தான சூழலையே
நினைவுறுத்துகின்றன. இதை ராமசாமி எப்படி எடுத்துக்கொண்டார் என்று
தெரியவில்லை. இம்மாதிரியான ஒரு புகழ் தர்பாரைப் பார்த்து மகிழ, திமுக
தலைவர் அலங்கரிக்கும் எந்த மேடையையும் பார்க்கலாம். அவர் தான்
இப்புகழ்மாலைகளை ரசிப்பவர். காமராஜ் தலைமை தாங்கும் மேடையில் இதைக் காண
முடியாது. அவர் ஒரு கலைஞர் இல்லைதான். இருப்பினும் அவரால் இதையெல்லாம்
சகித்துக் கொள்ள முடியாது. "சரி போதும் நிறுத்திக்கண்ணேன்" என்று
மேடையிலேயே கண்டிப்பார்.
ஒரு காலத்தில் அப்பாவைச்
சுற்றிச் சுற்றி பக்தியோடு வந்தவர்களெல்லாம் முற்றிலுமாக
அன்னியப்பட்டுப்போய் இன்று சீறுவதற்குக் காரணம் யார், என்ன? அப்பாவைச்
சிகரத்தில் வைக்க யாரும் முயல வேண்டாம். தன் இடத்தை அவரே தேடிக்
கொள்வார். இவர்களெல்லாம் பேசப்படுகிறார்களே, அப்பாவின் இடத்தை
பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து அவர்களை எல்லாம்
சிறுமைப்படுத்தும் முயற்சிகள் எல்லாம் அப்பாவுக்கு அவப் பெயரைதான் தரும்.
நாகர் கோயில் மடம் என்று சொல்ல ஆரம்பித்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. அவர்கள்
எல்லாம் அப்பாவின் விரோதிகள் அல்லர். அவரிடம் இன்றும் எந்த பகை உணர்வும்
இல்லாதவர்கள் தான், "இதில் அவருக்கு இஷ்டமில்லை, அவர் இதை விரும்பவில்லை
என்று எப்படி சொல்லமுடியும்.? "இப்போ நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.
எல்லாத்தையும் கண்ணன் பார்த்துக்கறான்." என்று சொல்வது யார்.? அவரை
நிர்ப்பந்தப்படுத்தி மாடலாக யார் உட்கார வைக்க முடியும்? ஒவ்வொரு
அதிகாரியின் பிரபலத்தின் நடிகரின் வீட்டுக்கும் இழுத்துச்சென்று காக்க
வைக்கமுடியுமா? ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று ராமசாமியைக் கேட்டேன்.
"எல்லாமே பாலிட்டிக்ஸாக இருக்கும்போது நாமும் கொஞ்சம்
அப்படிச்செய்யவேண்டித்தான் இருக்கிறது" என்கிறார். என்க்குத் தெரிந்த
முந்தைய ராமசாமி இப்படிப் பதில் சொல்லியிருக்கமாட்டார். இப்படிச்
செய்திருக்கவும் மாட்டார்." என்று எனக்குச் சொன்னவர் ராமசாமிமின் விரோதி
அல்லர்."காலச்சுவடுவில் வருவதெல்லாம் எனக்குத் தெரிந்து தான் வருகிறது
என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டாராம் சுந்தர ராமசாமி. இதில்
சாமர்த்தியம் தானே தெரிகிறது? அவர் என்ன திருதராஷ்டிரரா? ஔரங்கசீப்
சிறையிலிருக்கும் ஷா ஜஹானா? முன்னைப்போல், சு.ரா.வை நினைத்தபோது
பார்க்கமுடிவதில்லை. தடையாக இருப்பது கண்ணன் என்று என்னிடம் நீண்ட நாளைய
எங்கள் பொது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதற்கு ராமசாமியின்
அவ்வப்போதைய உடல் நிலையும் ஒரு நியாயமான காரணமாக இருக்கலாம். அந்த
நியாயமான காரணம், வேறு காரணங்களுக்கு நீட்டிக்கப்படும் சாத்தியத்தையும்
இருக்காது என்று சொல்வதற்கில்லை.
முன்னொரு காலத்தில்," இந்த
சாகித்ய அகாடமி பரிசு எனக்குக் கொடுத்தால், அதை தூக்கி எறிவேன்"என்றவர்,
இப்போது அது தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருக்கிறது
என்கிறார், இன்னொரு சு.ரா. நண்பர். இவ்வளவு தூரம் புழுத்து நாறிப்போய்
கிடக்கும் அந்த பரிசுக்கா ஏக்கம் ராமசாமிக்கு? ஞான பீடப் பரிசு
அப்பாவுக்குக் கிடைக்க ஏற்பாடுகளில் முனைந்திருப்பதாக சொல்லப்படுவது
உண்மையானால், சாகித்ய அகாடமி பரிசு பெற்ற கனவான்களை அடிக்க கையாண்ட தடி
தானே இது? எந்த பிரபலத்தையும் தரிசிக்காது, எந்த முயற்சியும் செய்யாது,
இதைப்பற்றிக் கனவே கூட காணாது இருந்த ஒரு விருது எங்கோ இந்த பூதலத்தின்
மூலையிலிருந்து என்னைத் தேடி வந்தால், அது யாருக்கும் கரிக்க வேண்டுமா?
கரிப்பெடுத்த ஜீவன் இருக்கக்கூடும் தான். அதற்கு இடம் கொடுக்க வேண்டுமா?
குடல் அவஸ்தைப் படுபவன் குளம் நாடிச் சென்றால், அந்த குளம் புனிதமாகக்
கருதப்படுமா? குடல் அவஸ்தைக் காரர்களுக்கெல்லாம், காலச்சுவடுதான் நாடும்
குளமா? கண்ணன் எப்படி தன் பொறுப்பை உதற முடியும்? தனக்கு ஒரு நியாயம்.
ஜெயமோகனுக்கு வேறொன்றா? நாச்சார் மடம் எழுதியவர் தர்ம யுத்தம்
செய்யவில்லைதான். ஆனால் அது எழுதியது ஜெயமோகன் இல்லை என்பது தெரிந்தும்.
ஜெயமோகன் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்டபிற்கும், ஜெயமோகனையே
குற்றவாளியாக்கி, தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதன் நோக்கம்
என்ன? சொல் புதிது வில் வந்தால் அதற்கு பொறுப்பு ஜெயமோகன் தான் என்று
வழக்காடுவது, புஷ்ஷ¤க்கு இராக்கைத்தாக்க சாக்கு கிடைத்தது போல்,
கண்ணனுக்கு செளகரியம் என்றால், காலச்சுவடு வில் வந்ததற்கு
தான் பொறுப்பில்லை என்று எப்படி சொல்லமுடியும்.? இது சாமர்த்தியமான்
கோழைத்தனம் தான். நுஹ்மான் அனுப்பிய இ-மெயில் இதோ என்று சொல்லலாம். எந்த
ஊழலுக்கும் தப்பும் முன் தயாரிப்புகளில் விஞ்ஞான பூர்வமாக வரலாறு காணாத
அளவு முன்னேறியுள்ள நாடு தமிழ் நாடல்லவா?
இந்த காரியங்களினாலெல்லாம்,
காலச்சுவடோ, சுந்தர ராமசாமியோ, கண்ணனோ ஒரு அங்குலமாவது உயர்ந்துள்ளதாக
நினைக்கமுடியுமா? ஒரு செண்டி மீட்டராவது? எந்த இழி செயலுக்கும்
கூலிப்படைகள் கிடைப்பார்கள், பேட்டை ரெளடி போன்றவர்களால், காரியம்
நடக்கும். அவர்கள் மரியாதை இழந்தவர்கள் ஆவார்கள். பேட்டை ரவுடிக்கு என்ன
மரியாதை கிடைக்கும்? யாரும் தலைவருக்குப் போட்டியாகி விடுவார்களோ என்று
கிட்ட நெருங்க விடாது மண்டையிலடித்து துரத்தும் இன்றைய அரசியல்
செயல்பாடாக இருக்கிறது காலச்சுவடின் காரியங்கள். எத்துறைக்கும்,
எக்காரியத்துக்கும் ஒரு தார்மீக பரிமாணம் உண்டு. எளிய வெற்றி, எளிய
ப்ராபல்யம் தேடுகிறவர்கள் தார்மீகத்தை மறந்து விடுகிறார்கள்.
நன்றி: அமுதசுரபி அக்டோபர் 2004
12,9,04
-------------------------------------------------------------------------------------------------
k.v.subbanna_d.jpg
SubbannaKV_c.jpg
subbanna.jpg
இலக்கியம்..
ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005)!
இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு
வருத்தும் !
- வெங்கட் சாமிநாதன் -
போனமாதம் மூன்றாம் வாரமோ என்னமோ
ஒரு நாள் வெளி ரங்கராஜனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. இரங்கல் கூட்டம்.
ஹெக்கோடு சுப்பண்ணா (1932-2005} மறைந்து விட்டார். திகைப்பாகவும்
வேதனையாகவும் இருந்தது. எப்படி இந்தச் செய்தியை பத்திரிகையிலிருந்து என்
பார்வை தவறவிட்டது? வெளி ரங்கராஜனைக் கேட்டேன். பங்களூரிலிருந்து வந்த
நஞ்சுண்டன் மூலம் தான் தனக்கு இந்தச் செய்தி தெரிந்ததாகவும், உடனே அவசர
அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று என்றார். அடுத்த இரண்டாம் நாள்
நஞ்சுண்டனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்னை பதிப்பை
விட்டுத்தள்ளுங்கள், பங்களூர் பதிப்பில் கூட ஹிந்துவில் இந்த செய்தி
வரவில்லை என்று அவர் சொன்னார். சரிதான் தமிழ் மரபு காப்பாற்றப் பட்டு
விட்டது என்று நினைத்துக் கொண்டேன். சென்னையிலிருக்கும் லா.ச.ரா வே
யாரென்று தெரிந்திராத, பைத்தியக்காரக் கூத்தாட்டத்திற்கும்,
சினிமாவுக்கும் வித்தியாசம் தெரியாத ஹிந்துவுக்கு, யாரும் அதற்கு
எடுத்துச் சொன்னாலும், கர்னாடகாவில் ஏதோ ஒரு ஒதுங்கிய கிராமத்தில்
நாடகம் போடும் பாக்குத் தோட்டக் காரராகத்தான் ஹிந்து பத்திரிகை அதைப்
புரிந்து கொண்டிருக்கும்.. ஹிந்துவின் முகச்சித்திரமே இது வென்றால், மற்ற
தமிழ் பத்திரிகைகளைப் பற்றிப் பேசுவது வீண். அந்த காலத்தில், சோழ நாட்டுத்
தூதுவன் குதிரையேறி பாண்டி நாட்டுக்கு ஓலை கொண்டுவந்தால் தான் சோழநாட்டு
செய்தி தெரியும் என்ற கதையாயிற்று இன்று. கர்னாடகாவிலிருந்து வந்த தூதுவர்
சொல்லித்தான் நமக்குச் செய்தி தெரிகிறது.
"வங்காளத்துக்கு ரவீந்திரர் என்ன
செய்தாரோ, அதைச் சுப்பண்ணா கர்நாடகத்திற்குச் செய்தார்" என்று நஞ்சுண்டன்
கருத்துக் கூறியிருந்தார். ரவீந்திரரைப் போல வள்ளத்தோல், சிவராம் கரந்த்
என்று இன்னும் சில பெயர்கள் அவ்வரிசையில் என் மனத்தில் நிழலாடிச்
செல்கின்றனர். நாம் ஒரு ரவீந்திரரையோ, காரந்தையோ, வள்ளத்தோலையோ நம்
மண்ணில் எதிர்பார்க்க முடியாது. அதெல்லாம் இயற்கை வழங்கும் அருளின்
பாற்பட்ட விஷயங்கள். அவர்கள் பிறக்கும் போது, காலம் வரும்போது
பிறக்கட்டும். ஆனால், மாங்கன்றாக, தென்னங்கன்றாகக் கிடைத்த ஒன்று, அது
தனக்கு இயற்கையான வளர்ச்சி பெறலாமே. அதை எதிர்பார்க்கலாமே. நெல் வளர்ந்து
விழலாவானேன்?
இருபது இருபத்திரண்டு
வருடங்களுக்கு முன் தில்லியின் தேசீய நாடகப் பள்ளியில் படித்து வந்த
கிருஷ்ணமூர்த்தி என்னும் கர்னாடகாவிலிருந்து வந்த மாணவருடன் ஒரு
நாள் மாலையும் இரவுமாக அவர் அறையில் நானும் ராஜேந்திரனும் நிறைய
பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தான் அவர் ஹெக்கோடுவில் இயங்கி வரும்
நீநாசம் ( நீலகண்டேஸ்வர நாட்டிய ஸேவா சங்கம்) பற்றியும், கே.வி. சுப்பண்ணா
ஒர் பாரம்பரிய நாடக மன்றத்தைத் தன் தந்தையிடமிருந்து பெற்றவர், அதை
எப்படியெல்லாம் உருமாற்றி, தன் கிராமம் ஹெக்கோடுவையும் அதன் சாதாரண கிராம
மக்களையெல்லாம் எத்தகைய ஒரு பெரிய இயக்க மாற்றத்திற்கு இட்டுச்செல்வதில்
ஈடுபட்டிருக்கிறார் என்றெல்லாம் பெரிய கதையாக சொல்லிவந்தார். அத்தோடு தான்
அங்கு தேசீய நாடகப் பள்ளியில் நாடகக் கல்வி பயில வந்துள்ளதற்கும் காரணம்,
நீநாசமும், சுப்பண்ணாவும் தான் காரணம் என்றும், தன் கல்வி முடிந்ததும்,
திரும்பிப் போகப் போவது, ஹெக்கோடுவுக்கும், நீநாசம் நாடக மன்றத்திற்கும்
தான் என்றார். அப்படியே அவர் சொன்னபடியே படிப்பு முடிந்ததும்
நீநாசத்துக்குத் தான் திரும்பிச் சென்றார். சினிமா, நாடகம், நாடகப்
பயிற்சிப் பட்டறைகள், தரமான உலகத் திரைப்படங்கள் என்-றல்லாம் அங்கு
நடப்பவை பற்றியெல்லாம் சொல்லி வந்தார். அன்று என் முன் ஒரு புதிய உலகமே
விரிவதாகத் தோன்றியது. சுப்பண்ணாவும் சரி, ஹெக்கோடுவில் அவரது
முயற்சிகளும் சரி, - ரவீந்திரரைப் பற்றிச் சொன்னார் நஞ்சுண்டன் - வேறு
எங்கும் நடந்திராத செயல்பாடுகளாகவும் முயற்சிகளாகவும் தான் எனக்குப்
பட்டன. இவை பற்றி வெளியிட்டுள்ள பிரசுரங்களை கிருஷ்ணமூர்த்தி மூலம்
ஹெக்கோடுவிலிருந்து தருவித்து அவற்றையும் மொழிபெயர்த்து, அப்போது
என் பொறுப்பில் இருந்த யாத்ரா வில் கே.வி.சுப்பண்ணா சிறப்பிதழாக கொணரச்
செய்தேன். (யாத்ரா, இதழ் 50-51. 1984). அவரது செயல் பாடுகள் நம்மவருக்கு
ஒரு படிப்பினையாக, வழிகாட்டியாக இருக்கும் என்ற நினைப்பு எனக்கு. ஆனால்,
க.நா.சு. செய்தது போல், ஒரு விஷயத்தை பண்ணிப் பண்ணி 45 வருடங்கள்
தொடர்ந்து பிரசாரம் செய்தால் ஒழிய யாருக்கும் எதுவும் உறைப்பதில்லை, நம்
மண்ணில் எதுவும் முளைவிடுவதில்லை. நஞ்சுண்டனிடமும், வெளி ரங்கராஜனிடமும்
அவர்களிடம் 20 வருடங்களுக்கு முன் யாத்ரா இது பற்றி தமிழர்களிடம்
பேசியுள்ளது என்றேன். அவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை.
ஹெக்கோடு ஒரு சிறிய கிராமம்.
அல்லது பத்திருபது வீடுகள் என்று கொத்துக் கொத்தாக பரந்து கிடக்கும்
குட்டி கிராமங்களின் தொகுப்பு. அதன் மையம் ஹெக்கோடு. நாகரீகம் பாழ்
செய்யாத இடம். நாகரீகத்தின் சின்னமான சினிமா பார்க்கவேண்டுமாயின் சில
மைல்கள் தூரத்திலிருப்பது சாகர். ஒரு தாலுகாவின் அதிகார மையம்.
சுப்பண்ணாவின் தந்தை ஒரு விவசாயி, அங்கு விளைவது பாக்கும் நெல்லும்.
சுப்பண்ணா படித்தது பட்டம் பெற்றதெல்லாம் மைசூரில் உடன் படித்தவர்களும்
கன்னட இலக்கியத்தில் பெருந்தலைகள். ஹெக்கோடுவுக்குத் திரும்பி வந்த
சுப்பண்ணாவுக்கு கிடைத்தவை தந்தையார் பார்த்து வந்த விவசாயமும், 1949
வாக்கில் தொடங்கி நடத்தி வந்த நீலகண்டேஸ்வர நாட்டிய சங்கமும் தான். கிராம
மக்களுக்குத் தெரிந்தது அம்மண்ணின் பாரம்பரிய யக்ஷகானம், பின்
அண்டியிருக்கும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த பார்ஸி நாடகம். இரண்டுமே
அவர்களுக்கு பிரியமானவைதான். அப்பாவிடமிருந்து பெற்ற பார்சி நாடகமன்றத்தை,
மைசூரிலிருந்து திரும்பியதும், தான் கன்னட மக்களுக்கும், அந்த கிராம
மக்களுக்கும் என்ன கொடுக்க வேண்டும் என்று விரும்பினாரோ அதற்கேற்ப நீநாசம்
மன்றத்தை மாற்றி அமைத்தார். மத்திய அரசு, கர்நாடக அரசு, மற்றும்
பொதுஸ்தாபனங்களின் நிதி உதவி பெற்று, ரங்கமந்திரம் என்றொரு நாடக
அரங்கொன்றை தன் கிராமத்தில் எழுப்பினார். இது நடந்தது 1972-ல். இது போன்ற
ஒரு நாடக அரங்கு கிராமத்தில் அமைந்துள்ளது இந்தியாவிலேயே இதுதான்
என்று தெரிகிறது. அப்போது மராட்டியில், ஹிந்தியில், வங்காளியில் துளிர்த்த
புதிய நாடகங்களையெல்லாம், ஐரோப்பிய, சமஸ்கிருத நாடகங்கள் பலவற்றை
கன்னடத்தில் மொழிபெயர்த்து மேடையேற்றினார். த'ன் மேடையேற்றிய நாடகங்களை
வெளிமாநிலங்களுக்கும், தில்லிக்கும் எடுத்துச் சென்றார். நாடகப் பள்ளி
ஒன்றைத் துவக்கினார். தன் நாடகப் பள்ளிக்கு வேண்டிய புத்தகங்களையெல்லாம்
கன்னடத்தில் தானே மொழிபெயர்த்துக் கொண்டார். தில்லி தேசீய நாடகப்
பள்ளியின் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் ஹெக்கோடுவுக்கும் கொணரப்பட்டன.
ஹெக்கோடுவில். இதற்கெல்லாம் வேண்டிய பணம் அவருக்கு பல அமைப்புகள், அரசு.
பல்கலைக்கழகம் போன்றவற்றிலிருந்து கிடைக்கிறது,
நீநாசம் அமைப்பின் கிளையாக
1973-ல் நீநாசம் திரைப்பட சங்கமும் அமைக்கப்பட்டது. இது இந்தியாவின்,
உலகின் தரம் வாய்ந்த திரைப்படங்கள், திரையிட பயன்படுகிறது. அவ்வப்போது,
திரைப்பட விழாக்களும் நடைபெறுவதுண்டு. திரைப்படங்கள் கொடுப்பது,
திரைப்பட ரசனைப் பயிற்சி வகுப்புகள் நடத்த உதவுவதும் புனேயில் உள்ள
Film and Television Institute of India தான். இவ்விழாக்களும்,
திரைப்படங்களும் ஹெக்கோடு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவசமாகவே
கிடைக்கின்றன. திரையில் படம் ஓடும்போது, சுப்பண்ணாவும், காஸரவல்லி போன்ற
இயக்குனர்களும் கன்னடத்தில் மொழிபெயர்த்துச் சொல்லிக்கொண்டு வருவார்கள்.
திரைப்படம், நாடகம் பற்றிய பயிற்சிப் பட்டறைகளும் வகுப்புகளும்
கன்னடத்திலேயே நடைபெறும். அதற்கு பிரஸன்னா, கர்னாட், காஸரவல்லி, காரந்த்
போன்ற கன்னட நாடக திரைப்பட கலைஞர்களும், புனே Institute-ன்
பேராசிரியர்களும் தில்லி தேசீய நாடகப் பள்ளியின் ஆசிரியர்களும்
பங்கெடுத்துக் கொள்ள வருவார்கள். திரைப்பட விழாவிற்குப் பிறகு, கிராம
மக்கள் ரசித்தது எப்படங்களை, ரசித்தது எதற்காக, இம்மாதிரியான, ஸாகர்
டவுனில் அவர்களில் சிலர் பார்த்திருந்த வியாபார கன்னடப்படங்களிலிருந்து
வேறுபட்ட இப்படங்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் போன்ற விவரங்களை
அறிவதற்கான கள ஆராய்வும் நடைபெறும். படம் திரையிலோடும்போதே அவர்கள் எப்படி
ரசிக்கிறார்கள் என்பதை அறிய நீநாசம் மன்றத்தைச் சேர்ந்தவர்களே அரங்கில்
மக்களிடையே அமர்ந்து கவனித்து குறித்துக் கொள்கிறார்கள். படம்
முடிந்தபிறகு அது பற்றி கிராமத்துப் பார்வையாளர்களோடு உரையாடல் நடக்கும்.
ஆக, இது வெறும் பொழுது போக்காக,
இலவச சினிமா காட்டும் விவகாரமாக ஆகிவிடாது, மக்களின் ரசனையில்
மாற்றங்கள் நிகழ்வதை அறியும் சாத்தியங்களையும்
கொண்டுள்ளது. யாத்ரா 84-ல் பிரசுரித்த சுப்பண்ணா சிறப்பிதழ் பேசிய 1977-
வருட திரைப்பட விழாவில் பெர்க்மனின் Wild Strawberries, சார்லி சாப்ளினின்
Gold Rush, ராபர்ட் ·ப்ளாஹர்ட்டியின், Nanook of the North, டி
சிகாவின் பைஸைக்கிள் திருடன், ரேயின் பாதேர் பஞ்சலி, ஐஸ்ன்ஸ்டைனின்
Battleship Potempkin, அகிரா குரஸாவாவின் ரோஷோமோன், Incident at Owl
Creek, Wages of Fear, Wedding, Happy anniversary என்று ஹெக்கோடு
கிராமத்து ஜனங்கள் பார்க்கக் கிடைத்த படங்களின் பட்டியல் நீள்கிறது.
அவர்களுக்கு புரியாது போனது பெர்க்மனின் படம் தான். மற்றவைகளை படம்
முடியும் வரை விஸில் அடிக்காது, கலவரம் செய்யாது, காமென்ட்
அடிக்காது அமைதியாக இருந்து பார்த்தார்கள். தனக்கு இடம்
கிடைக்கவில்லை என்று ஒரு 12 வயது சிறுமி அழுகிறாள். சார்லி இறந்து
விட்டார் என்று சொன்னபோது, 'யாரு, செருப்பைக்
கடிச்சுத்தின்னுக்கிட்டிருந்தானே அந்த கோமாளியா? என்று ஒரு கிழவி
கேட்கிறாள். மொத்தத்தில் தரமான படங்களுக்கும் தாம் அன்னியரில்லை, ரசனையை
வளர்ப்பது, பாழ்படுத்துவதும் வியாபார, அரசியல் சக்திகள் தான் என்பது இங்கு
நிரூபனமாகிறது, ஒவ்வொரு முறையும். நம்மவர்கள் ஏதோ " ஊர் ரோடையெல்லாம்
பெயின்ட் அடிச்சுட்டு வா, இல்லே கட்டிலை ஆட்டிவிட்டு முனகச் சொல்லு,
அப்பத்தான் படம் பார்க்க வருவேன்" என்று மக்கள் கூடி
தீர்மானம்போட்டு இவர்களுக்கு அனுப்பி வைத்து போல, ஜனங்கள் இதைத்தான்
விரும்புகிறார்கள் என்று மூன்று தலை முறையாக நம் சினிமா கலைஞர்கள் தம்
ஆபாசக் கூத்தடிப்புக்கு காரணம் சொல்லி அதைக் கலை என்றும் பெருமைப்
பட்டுக்கொள்கிறார்களே, அந்த ஆபாசம் அவர்களிடமிருந்துதான் உற்பத்தி ஆகிறதே
தவிர மக்களிடமிருந்து அல்ல என்பதை மீண்டும் மீண்டும் கே.வி.சுப்பண்ணா
ஹெக்கோடுவில் நிரூபித்து வந்தார்.
இன்னுமொன்று. ஹெக்கோடுவும்
கர்நாடகாவும் யக்ஷகானத்தின் பாரம்பரியத்தில் வந்தவை தான். சுப்பண்ணாவும்
அது பற்றி பெருமை கொள்ளும் வாரிசு தான். ஆனால் அதற்காக வேர்களைத்
தேடிப்போகிறேன், நவீன நாடகம் காணப் போகிறேன் என்று இது
யக்ஷகானத்திலிருந்து பெற்றதாக்கும் என்று கோமாளி வசனமும் அபிநயமும்
செய்யவில்லை. கர்நாடகாவில் யாரும் அப்படிச் செய்வதில்லை. தங்களது
'ஒற்றைப்பரிமாண சமாசாரம்" என்று யாரும் அங்கு சொல்லவும் இல்லை. அது பற்றி
அவர்கள் கவலைப் படுவதுமில்லை. இது தமிழ் மண்ணுக்கே உரிய மேதமை.
பார்ஸி நாடகங்கள் நடத்தி வந்த
நீநாஸம் மன்றத்தை ஒரு அகில இந்திய திரைப்பட, நாடக மையமாக மாற்றி,
ஹெக்கோடு கிராமத்து மக்களுக்கு அவர்கள் பழகிய பார்ஸி, யக்ஷகானங்களை
மீறி, அகில இந்திய பரப்பிலும், உலக பரப்பிலும் விரிந்து கிடக்கும் நாடக,
திரைப்பட உலகங்களுக்கும் பாக்கியதாரர்களாக ஆக்கிக் காட்டியுள்ளார்.
அவர் பெற்ற ஹெக்கோடு அல்ல அவர் விட்டுச் சென்றுள்ள ஹெக்கோடு. அதன்
குணத்தை, தரத்தை, அதன் எதிர்பார்ப்புகளின் குணத்தை மாற்றிச் சென்றுள்ளார்.
அவருக்கும் பல்கலைகழக, சங்கீத நாடக, கர்னாடக அரசு மான்யங்கள் கிடைத்தன.
Ford Foundation மான்யங்கள் கிடைத்தன. மாக் சே சே விருதும் பரிசும்
கிடைத்தது. இந்த மான்யங்கள் பரிசுகள் எல்லாம் சுப்பண்ணா பார்ஸி நாடக
நீநாஸத்தை மாற்றி அமைத்துத் தன் வழி கண்ட பிறகு அதைத் தொடர விஸ்தரிக்கக்
கிடைத்தவை. மான்யங்களிலேயே வாழ்ந்தவர் அல்லர் அவர். அது நின்றதும்
செயலற்றுப் போகிறவரும் அல்லர். மான்யங்களும் விருதுகளும் அவர் தன்னை
உயர்த்திக்கொள்ள அல்ல. தன் கிராமத்தை, தன் மக்களை, தன் கன்னட
பிராந்தியத்தின் குணத்தை மாற்ற அவருக்கு அவை உதவின. தான் விட்டுச்
செல்லும் ஹெக்கோடும், கன்னட நாடும் மக்களும் தான் பெற்றதை விட ஒர் உயர்ந்த
தளத்திற்கு உயர்த்திவிட்டுச் சென்றுள்ளவர். இம்மாதிரியான ஒரு கொடையை நாம்
ஒவ்வொருவரும் நம் மக்களுக்கு, தமிழ் நாட்டுக்கு, அவரவர் இயன்ற அளவுக்குக்
கொடுக்க முடியும். நாட்டையும் மக்களையும் வளப்படுத்த முடியும்.
ஆனால் பட்டங்களும், மான்யங்களும், பணமும் செல்வாக்கும், நம்மிடையே
பலருக்கு நாட்டின் மக்களின் தரத்தை ஆபாசப்படுத்தி தன் செல்வத்தை,
பிராபல்யத்தை பெருக்கிக் கொள்வதிலேயே முனைப்பாக இருந்து வருவது நம்
சரித்திரம். ஒரு தாகூர், காரந்த், வள்ளத்தோல் இல்லாமலேயே நாம் நம்மால்
முடிந்த அளவுக்கு செயலாற்றியிருக்க முடியும். ஆனால் நம் நோக்கங்கள்
வேறாகவே இருந்து வந்துள்ளன. தன் செல்வத்தையும், பிராபல்யத்தையும்
பெருக்கிக் கொண்டுள்ள நம் தமிழ் இலக்கிய கலைப் பெரும் தலைகள் எத்தனை பேர்
இவற்றை சம்பாதிக்க தான் கொடுத்தது எத்தரத்தது என்பது பற்றி வெட்கமில்லாமல்
சொல்லிக் கொள்ளமுடியும்? இப்படி ஒரு செல்லப்பா, ஒரு க. நா.சு.
சொல்லமுடியும். வேறு......?
வெங்கட் சாமிநாதன்/14.8.05
-------------------------------------------------------------------------------------------------
singapore_welcome_c.jpg
இலக்கியம்!
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்!
- வெங்கட் சாமிநாதன் -
முதலில் என்னுடைய அறியாமையை
ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த
நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன்
தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை
வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல்
ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும்
அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ்
அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம்?
தென் ஆப்பிரிக்கா, ·பிஜி,
மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம்
நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து
தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக
தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள்.
பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி
இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும்.?
அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி
காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக்
கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ்
சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி.
அதற்கு மேல்? ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப்
படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர
காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ
கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த
ஞாபகம். வகுப்பு நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு
இருக்கிறதா? யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக
வெளியேறியிருக்கிறார்களா? தெரியாது.
ஆனால் முனைவர் எம்.எஸ்
ஸ்ரீலக்ஷ்மி அவர்களின் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - ஆழமும்
அகலமும் என்ற புத்தகம் அவ்வப்போது வாசித்த கருத்தரங்க கட்டுரைகளின்
தொகுப்பு. அது பல புதிய சுவாரஸ்யமான செய்திகளைத் தருகிறது. அந்த செய்திகள்
பலவும் நமக்குத் தெரிய வேண்டியவை. மகிழ்ச்சி அளிப்பவை. அவர் தரும்
செய்திகள் சில நம்மில் பல கேள்விகளையும் எழுப்பி இன்னும் சற்று
அதிகம் அறியத் தூண்டுகின்றன. அங்கு, மலேயாவிலோ, சிங்கப்பூரிலோ 19-ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் குடியேறத்தொடங்கியவர்களில் பாதிப்பேரான
ஆதி திராவிடர்களும் மற்றவர்களும் , வயிற்றுப் பிழைப்பிற்காக போனவர்கள்
படிப்பறிவற்றவர்கள் என்றிருக்க, தமிழ் சிறுகதை வரலாற்றில் எழுதப்பட்ட
முதல் சிறுகதை, விநோத சம்பாஷணை, மக்தூம் சாயபு என்பவரால்
எழுதப்பட்டது. சிங்கப்பூர் மண்ணில் தோன்றியது. வருடம் 1888. வடிவச்
சோதனைக்கும் வட்டாரத் தமிழுக்கும் வாய்ப்பளித்த கதை என்று
சொல்லப்படுகிறது. அதன் சிறுகதை வடிவம் பற்றி கேள்விகள் எழுந்தாலும்,
வ.வே.சு. ஐயரை அது முந்திக்கொண்டுள்ளது என்பது விசேஷம். மக்தூம் சாயபு
யார், அவர் இதை எழுத வந்த பின்னணி என்ன, போன்ற விவரங்களைக் கேட்க
தோன்றுகிறது நமக்கு. அதன் தொடர் நிகழ்வுகள் என்ன என்றும் கூட. இதன்
இழையில் இன்னொரு சுவாரஸ்யமான விவரம் இத்தீவு மக்கள் 1825 லிருந்தே
இலக்கியம் படைக்கத் தொடங்கி விட்டனர் என்பது. சி.ந.சதாசிவப்
பண்டிதர் வண்ணை அந்தாதி என்று தொடங்கி நான்கு அந்தாதிகள் 1887 -ல் எழுதி
அச்சிட்டிருக்கிறார் இலங்கையிலிருந்து வந்தவர் தன் யாழ்ப்பாண வண்ணை நகரைப்
பற்றி இரண்டும் பின் சிங்கப்பூரில் வந்த இடத்தில் கோயில் கொண்டுள்ள
முருகப் பெருமான் பற்றியுமானவை அவை. இது தொடர்கிறது. 1893-ல்
ந'.வ்.இரங்கசாமிதாசன் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்னும் லாவணி
பாடியிருக்கிறார். ஒரு பயண நூல், மலாக்காவுக்கு கப்பலில் வந்த கதையை
காவடிச் சிந்து வடிவில் ஆதியோடந்தமாகச் சொல்கிறது. அக்கால சிங்கப்பூர்,
கப்பல் பயணம், இத்யாதி பற்றிய வரலாற்றுப் பதிவு என்று இப்பயணக் கதையைச்
சொல்லவேண்டும். இதை எழுதியவர் இதைத் தொடர்ந்து பல பயண நூல்கள்
சிந்துக்களாகத் தொடர்கின்றன. 1907 -ல் சிங்கை நகர் பற்றியும், 1936-
புத்தர் ஆலய வழி நடைச் சிந்து (பிரமன் ஆலயம் என்றும் வேறு ஒரு இடத்தில்
சொல்லப்படுகிறது) என்றும் கடைசியாக 1937-ல் இந்தியக் கப்பல் பிரயாணம்
பற்றி ஒரு வழி நடைச் சிந்து. இவை அவ்வளவும் மரப்பார்ந்த அந்தாதி, காவடிச்
சிந்து என பா வடிவங்களிலேயேயானாலும் அவரவர் தம் அனுபவங்களையும்
வாழ்க்கையையுமே சார்ந்து எழுதியுள்ளனர். இத் தமிழ் ஆசிரியர்கள் இலங்கையை
விட்டு எதற்கு பயணமானார்கள், அங்கு சென்றது தமிழ் படிப்பிக்கவா, அக்கால
குடியேறிகள் தமிழ் படிக்கும் தேவை இருந்ததா,? அதற்கும் மேல் இலக்கிய
முயற்சிகளிலும் தம் அனுபவங்களையும் பதிவு செய்யும் ஆர்வமும் இவ்விலங்கை
பண்டிதர்கள் அன்று கொண்டிருந்ததும் அந்த வசதிகள் அவ்வேழை குடியேறிகளின்
சமூகத்தில் இருந்ததென்றால் ஆச்சரியப்படவேண்டிய ஒன்று. இன்று 70 வருட
காலமாக தமிழ் பற்று பிரசாரம் செய்தவர்கள் அரசேறிய தமிழ் நாட்டில் தமிழ்
படிக்காமலேயே இருந்து விடுவது சாத்தியமாகிறது. அப்படி ஒரு தலை முறை
வளர்ந்துவிட்டது.
இன்னும் ஒரு சுவாரஸ்யமான விவரம்.
அக்கால சிங்கை மலேசிய குடியேறிகள் தம்முடன் தம் தமிழ் அடையாளங்களையும்
சுமந்து தான் இருந்தனர். தமிழக தொடர்புகள் விடவில்லை. அது ஒரு சில
விஷயங்களோடு நின்றது. தம் சாதி உணர்வு, பூசை வழிபாட்டு வழக்கங்கள், பழய
சாதி உணர்வுகளுக்கும் மேல் ஆங்கிலம் அறிந்தவர்- அறியாதவர் என்று
கூடுதலாக இன்னும் ஒரு புது சாதிப் பிரிவு, இத்யாதி. இத்தோடு, 1925--
ல் வருகை தந்த ஈ.வே.ரா பெரியாரின் தாக்கம். பிராமணர்களே இல்லாத, 50
விழுக்காடு ஆதி திராவிடர்களே ஆன பூசையையும் கோவிலையும் விடாத அந்த
சமூகத்தில் வெறும் நாத்திகமும் பிராமண எதிர்ப்புமே எப்படி தாக்கம் பெற்றது
என்பது புரியவில்லை. இருப்பினும் 1932 தமிழர் சீர்திருத்த சங்கம்
தொடங்கப்பட்டு தமிழ் முரசு, திராவிட முரசு என பத்திரிகைகள்
வெளிவருகின்றன. . இவை பெரும் த'க்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக
ஈ.வே.ரா. வின் பகுத்தறிவுச் சிந்தனைகளே நாவல், சிறுகதைகளாக
உருப்பெறத்தொடங்கின. ந.பழநிவேலு, பாத்தென்றல், வில்லிசை வேந்தர்
என்றெல்லாம் அறியப்படும் முருகதாஸ் போன்றவர்கள் இதில் அடக்கம்.
ஆனால் பொதுவாக ஈ.வே.ரா.வின் தாக்கம் அச்சமூகத்தில் பரவலாக காணப்பட்டது.
முருக தாஸ் ஈ.வே.ராவையும் சைவ சமயத்தையும் ஒருங்கே அரவணைத்துக் கொண்டவர்.
அனேகமாக அங்குள்ள பகுத்தறிவாளர் பெரும்பாலோர் முருகனுக்கு காவடி
எடுப்பவராகவும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். 'எம்மதமும் சம்மதம்'.
அவ்வாரம்ப கால எழுத்தாளர்களும்
தாம் அப்போது வாழும் இடம் வாழ்க்கை பிரச்சினை பற்றி எழுதியவரில்லை.
அவர்கள் எழுத்தில் விட்டு வந்த தமிழ் நாடுதான் தொடர்ந்தது. இது முனைவர்
லக்ஷ்மிக்கும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அந்தாதி என்றும்
காவடிச்சிந்து என்றும் எழுதிய முன்னவர்கள் தம் முன்னிருந்த
அனுபவித்த வாழ்க்கைப் பிரச்சினையை எழுதினார்கள். ஆனால், பின் வந்தவர்கள்
தாம் இருக்கும் நாட்டையும் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் விட்டு விட்டு
ஏதே பழம் கற்பனைகளில் கதை அளந்தார்கள். என்கிறார் முனைவர் லக்ஷ்மி.
இதே போல் தான் கவிதையிலும். கவிதை
எழுத வந்தவர்கள் பழம் யாப்பிலேயே வாய்ப்பாடாகிவிட்ட விஷயங்களையே அரைத்த
மாவையே அரைப்பவர்கள், ஆனாலும் தம்மை கம்பனென்றும் காளிதாசன் என்றும் எண்ணி
மயங்குகிறவர்கள் என்கிறார்., விதி விலக்காக புதுக்கவிதை எழுதுவோரில்,
இளங்கோவன், கனக லதா ,இக்பால் என மூவரை மாத்திரம் லக்ஷ்மி சிறப்பாகக்
குறிப்பிடுகிறார். நாம் படித்திராவிட்டாலும் அவர் கருத்துக்களில்
நம்பிக்கை விழுகிறது. லக்ஷ்மியிடம் நான் காணும் மிகவாக குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டிய குணம் தயக்கம் இல்லாமல், பயமின்றி, மனதில் பட்டதை பட்டவாறே
சொல்கிறார். அதிலும் விசேஷமாக எதையும் பொதுப்படையாகச் சொல்லி எந்த
ஒருவரையும் புண்படுத்தாது, தப்பித்துக் கொள்ளும் நோக்கம் அவரிடம் இல்லை.
எழுத்தாளர்கள் பெயர் சொல்லி, விவரம் சொல்லி, இது திருட்டு, இது
பேடித்தனம்,என்று சொல்கிறார். பொதுவாக சிங்கப்பூர் எழுத்தாளர்கள்
பரிசுக்காகவும், பேட்டிக்காகவும் எழுதுபவர்கள், தம்மைப் பற்றி
எதுவும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை, மூடி மறைக்கிறார்கள் என்கிறார்.
உதாரணமாக ஏ.பி.ஷண்முகம் பற்றி எழுதும்போது, எழுத்துச் செம்மல் என்று
பட்டம் பெற்றவர், இவரெல்லாம் ஏன் எழுதுகிறார், குழப்பம் கொண்ட
கிறுக்கல்கள் இவை என்கிறார். சீதாலட்சுமி என்பவரின் கதை அபத்தமாகவும்
தத்து பித்தென்று உளறுவதாகவும் இருப்பதாக கருத்து தெரிவிக்கிறார். இவ்வளவு
கடுமையாக தமிழ் நாட்டில் யாரும் எது பற்றியும் எழுதி தப்பி விடமுடியாது.
தனி நாடாகிவிட்ட ஒரு நகரத்தில் இருந்து கொண்டு அதில் வாழும் ஒரு பத்து
சதவிகிதம் தமிழரிடையே வாழ்ந்து கொண்டு இப்படி ஒருவர் எழுத முடிகிறது.
எழுதும் தைரியம் அவருக்கு இருக்கிறது. தமிழ் நாட்டில் இதை யாரும்
கற்பனை கூட செய்யமுடியாது. காய்தல் உவத்தல் இன்றி எழுதுபவர் லக்ஷ்மி என்று
பின் அட்டையில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் லக்ஷ்மி காயவேண்டியவற்றை
தயக்கமின்றி காய்ந்தும், உவக்கவேண்டியதையும் அதே உணர்வுடன் உவந்தும்
எழுதியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். காய்தலைக் காரணங்களோடு
படித்ததும், அவர் காரணங்களோடு உவந்தவற்றை நாம் படித்திராவிட்டாலும்,
நம்பத்தோன்றுகிறது.
இம்மாதிரி, ஒரு நகரப்
பரப்பு அளவிலேயே அவரது களம் சிறுத்து விட்டதாலும், எழுதுபவர்
எல்லோரும் நன்கு தெரியப்படுவதாலும், இன்னும் ஒருவகையான ஆரம்பக்
கட்டத்திலேயே நடை பயிலும் இலக்கிய படைப்புலகம் இனி வரவிருக்கும் செழுமையை
எதிர்நோக்கி இருப்பதாலும், சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என்று எந்த
வடிவிலும் வெளித் தெரிந்தவர் எல்லோரையும் பற்றி குறிப்பிடவும்
வேண்டியிருக்கிறது. பொய்யாக புகழ்ந்துரைக்கவும் மனமில்லை. எதிர் கால
வளமையில் இங்கு பேசப்படுபவர் பெரும்பாலோர் ஒதுக்கப்பட்டிருப்பர். கனமாகப்
பேசப்பட்டிருப்பவர்களும் பின்னர் அவ்வளவு விசேஷமாகத் தெரியாமலும் போகலாம்.
நமது பேட்டையில் இருக்கும் ரெளடி தன்னை கட்டபொம்மனாகத் தான் நினைப்பான்.
அவன் நமக்கு வீரன் தான். நம்ம பள்ளிக்கூட தமிழ் வாத்தியார், புலவர் தான்.
நம்முர் சிவாஜி கணேசன் போல உலகத்திலேயே ஒரு நடிகன் இல்லை என்று நாம் கூரை
உச்சி ஏறி கத்தவில்லையா? ஆனால் நம் உலகமும் களமும் விரிய விரிய நாம்
பெருமைப்படுவனவற்றின் பரிமாணங்கள் சிறுக்கும் அல்லது பெருகும். முனைவர்
லக்ஷ்மியின் நிர்ப்பந்தங்கள் நமக்கு இல்லை. ஒரு விவரமும் தெரியாத நமக்குச்
செய்துள்ள உதவி இப்புத்தகம். இருப்பினும் அவர் நமக்காகச் சலித்தெடுத்துத்
தந்துள்ளவற்றில், நாம் இன்னமும் நெருக்கமாகப் பரிச்சயம் கொள்ள
வேண்டியவர்களை மாத்திரம் குறிப்பிடலாம். இவர்கள் படைப்புகள் நமக்குக்
கிடைக்கவேண்டும். ஒரு கூட்டத்தில், பீர் முகம்மது என்னும் மலேசிய
எழுத்தாளர், 'நாங்கள் உங்களைத் தெரிந்து கொள்ள பெரு முயற்சி எடுத்துக்
கொள்கிறோம். ஆனால் தமிழ் நாட்டில் நாங்கள் அலட்சியப் படுத்தப் படுகிறோம்'
என்று குமுறினார். உண்மை. அவர் குமுறல் நியாயமானது.
கவிதையில் இளங்கோவன், கனக லதா,
இக்பால் என்ற பெயர்கள் தெரிகின்றன. லக்ஷ்மி போலவே, தயக்கமின்றி தன்
அபிப்ராயங்களைச் சொல்லும் இளங்கோவன் தான் வாழும் தமிழ்ச் சூழலை கடுமையாகச்
சாடுபவர். அதன் காரணமாகவே அவர் வக்கிர உணர்வு கொண்டவர் என்று புகழ்
பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆங்கிலத்திலும்,
தமிழிலும் அவர் நாடகங்கள் எழுதுபவர். கவிதைகளும் சிறுகதைகளும் கூட
எழுதுகிறார் என்று தெரிகிறது. அவர் இங்கு வந்திருந்த போது, இப்படி ஒரு
மனிதர் எப்படி உருவாக முடிந்தது என்று எனக்கு திகைப்பு. லக்ஷ்மி யும்
நா.கோவிந்த சாமி என்று நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ளவர் (கணினியின்
கீபோர்டை தமிழுக்கு இயைய வடிவமைத்தவர் என்று சொல்கிறார்கள். நான் computer
illiterate. எனக்குத் தெரியாது). இப்போது சிறு கதை நாவல்
எழுதுபவராகவும், தமிழ் பிரக்ஞையை, இளங்கோவன் போல தாம் வாழும் காலத்துக்கு
இழுத்து வர முயற்சித்தவராகவும் தனி மனித வழிபாட்டைச் சாடுபவராகவும்
இப்போது அறிகிறோம். இளங்கண்ணனின் நினைவுக் கோலங்கள்' வைகறைப் பூக்கள்
போன்ற நாவல்கள் பேசப்படுகின்றன. இவை சிங்கப்பூர் வாழ்க்கையை, வரலாற்றினூடே
சமூக மாற்றத்தைச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. பால கிருஷ்ணன் இளங்கண்ணன்
ஆவதில் சிரமமில்லை. ஆனால் அவர் எழுத்து தீவிர தனித் தமிழில் எழுதுவதாகச்
சொல்லப்படுகிறது. பின்னர் எப்படி அவரது எழுத்தைப் படிப்பதும்
ரசிப்பதும் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஈ.வே.ரா அண்ணாதுரையோ,
கருணாநிதியே' தனித் தமிழில் பேசியதுமில்லை. எழுதியதுமில்லை.
கடைசியாக, எஸ். எஸ் சர்மா என்னும்
ஒரு பன்முக இலக்கிய வாதியைப் பற்றிச் சொல்கிறார் லக்ஷ்மி. மிகவும்
சுவாரஸ்யமான மனிதராக படைப்பாளியாகத் தோன்றுகிறார். கலை அரசு என்ற பட்டம்,
பெற்றவர். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். 1952 லிருந்து பல
பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். வானொலியில், தொலைக்காட்சியில்,
நாடக மேடையில் அவர் தொடர்ந்து எழுதி நடித்து வந்துள்ளார். தன்
கலைக்குழுவோடும், தன் குடும்பத்தோடும், அனேக அயல் நாடுகளுக்கு கலைப்
பயணமாக, ஆன்மீகப் பயணமாக, அறிவார்த்த தேடலாக பயணம் மேற்கொண்ட அவர் தன் பயண
அனுபவங்களை ஒன்பது நூல்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இவரும் ஒளிவு மறைவற்றவராகத் தெரிகிறது. ஒரு சில உதாரணங்கள்:. அருமை
தெரியாது கல்வெட்டுக்களை படிக்கட்டுக்களாக தமிழ் நாட்டில் கண்ட
அவரது சோகம், புதிதாகக் கோயில் கள் கட்டுவதற்குப் பதிலாக
பாழடைந்துள்ளவற்றை நல்ல முறையில் பாதுகாக்கலாமே என்ற ஆதங்கம்,
திருவோட்டின் பிறப்பிடம் ஷெய்ச்சிலஸ் என்ற புதிய ஆச்சரியம் தரும்
செய்திகள். அடுத்து பேசப்படவேண்டியவர் பி.கிருஷ்ணன். 350-க்கும் மேலாக
வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் எழுதியுள்ளவர். முக்கியமாக ஒரு ஆவணமாக
52 வாரங்கள் தொடர்ந்து ஒலி பரப்பப் பட்ட அடுக்கு வீட்டு அண்ணா சாமி என்ற
நாடகத் தொகுப்பு. இது சிங்கப்பூரின் 35 ஆண்டு கால வரலாற்றை மாற்றங்களை
படம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இதன் முக்கியமான் பரிமாணம்.
இன்று சிங்கப்பூர் அதன் பொருளாதார வளத்தில், Asian Tigers-ல் ஒன்றாக
பெருமை பெற்றுள்ளது. அந்த சிங்கப்பூரில் மாடு வளர்த்து வாழ்க்கை நடத்திய
முத்தம்மாள் பற்றி ஒரு நாவல் பேசுகிறது. ஆச்சரியமாக இருந்தது.
சிஙகப்பூரில், மலேயாவில், வாழும்
தமிழர் தமிழ் நாட்டின் தமிழரை விட வாழ்க்கை வசதிகள் பெற்றவர்கள், தமிழ்
அரசு மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக
இவர்கள் சீன, மலாய் மொழி பேசும் பெரும்பான்மை மக்களிடையே வாழ்ந்துள்ளனர்.
இப்பன்மொழி மக்களிடையே இலக்கிய, கலைத் துறைகளில் பரிமாறல் ஏதும்
நிகழ்கிறதா, தமிழர் அவர்களுக்கு ஏதும் கொடுத்துள்ளனரா, அவர்கள் தமிழுக்கு
ஏதும் கொடுத்துள்ளனரா என்பது தெரியவில்லை. ஒருவர் சீனச் சிறுகதைத்
தொகுப்பு ஒன்று தந்துள்ளார் என்று தெரிகிறது. இளங்கோவன் மலாய் மொழி
அறிந்தவர் என்று தெரிகிறது. அதற்கு மேல்? அங்கும் தனித் தீவாகத்தான்,
பொருள் வசதிகளோடு வாழ்கிறார்களா? சீனப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு
கலாச்சாரச் சிக்கலுக்கு ஆட்பட்டு அவள் மேல் சந்தேகம் கொள்வதும், தமிழ்
நாடுவந்து பெண்தேடி அவளைக் கைவிடுவதும் சில கதைகளில் பேசப்படுகிறது.
பரிமாற்றம் என்பது இத்தோடு தானா? தெரியவில்லை.
முனைவர் லக்ஷ்மி, இந்நூலில்
இலக்கியம் மாத்திரமல்ல, வாழ்க்கையின், மனிதர்களின் மற்ற பரிமாணங்களைப்
பற்றியும் ஆங்காங்கே பேசுகிறார். நகரத்தார் பற்றி பேசாமல் இருக்கமுடியுமா?
அது பற்றி ஒரு அத்தியாயமே இருக்கிறது. இப்புத்தகத்தில் நான் அறிந்து
கொண்டது நிறைய. அத்தோடு நான் வியந்தது, முனைவர் லக்ஷ்மி, இளங்கோவன்,
நா.கோவிந்தசாமி போன்றார் எப்படி அந்த சமூகத்தில் உருவானார்கள். இங்கு
தமிழ் நாட்டில் அவர்கள் என்னவாயிருப்பார்கள் என்பதும் என் திகைப்பு. ஆனால்
ஒன்று எப்படி உருவானார்களோ என்னவோ, இவர்கள் தம்மை ஆக்கிரமித்துள்ள
சூழலுக்கு இரையாவதில்லை. தாம் காணும் சூழலை மாற்றி அமைப்பவர்கள்.
வெங்கட் சாமிநாதன்/2.11.05
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
யாத்ரா பிறந்த கதை!
- வெங்கட் சாமிநாதன் -
யாத்ரா பத்திரிகை தோன்றியதன்
கதையைச் சொல்வதென்றால் அது, அதற்கும் சில வருடங்களுக்கு முன்னிருந்த ஒரு
முனைப்பின் தொடர்ச்சி என்று சொல்லவேண்டும். எழுபத்து நான்கோ ஐந்தோ
ஞாபகமில்லை சரியாக. ஒன்றிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விடுமுறையில்
தெற்கே வரும்போதெல்லாம் சென்னையில் தங்கும் நாட்களில் செல்லப்பாவைச்
சந்தித்துப் பேசுவது வழக்கம். இந்த வழக்கம் தவறியதில்லை அனேகமாக.
தவறினால், அது அவருக்குத் தெரியவந்தால், அவர் போடும் சத்தத்தைச் சமாளித்து
சமாதானம் சொல்வது சிரமமான காரியம். ஒரு முறை, 75-76 களில் சந்தித்த போது,
"டேவிட் சந்திர சேகர் ராஜபாளையத்திலிருந்து வந்த இரண்டு நண்பர்களுடன்
வந்திருந்தார். அவர்கள் உங்கள் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகம் போட
விரும்புகிறார்கள். அதற்கு உங்கள் சம்மதம் வேண்டும். அத்தோடு அவர்கள் அரசு
ஊழியத்தில் இருப்பவர்கள், புத்தக பிரசுரம் பற்றியெல்லாம் எதுவும்
தெரியாது. அதனால் பிரசுரத்திற்கும் நான் உதவ வேண்டும் என்றார்கள். நீங்கள்
டெல்லியிலிருந்து இப்போது வரவிருக்கிறீர்கள், வந்ததும் சொல்கிறேன்,
நீங்களும் சந்திக்கலாம், என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்" என்று
சொன்னார். அவர்களுடன் அந்த சந்திப்பு நிகழவில்லை, செல்லப்பாவைப்
பார்த்துப் பேசிவிட்டுத் திரும்பி விட்டார்கள். சென்னையில் வங்கி ஊழியராக
இருந்த டேவிட் சந்திரசேகர் தான் சந்தித்துப் பேசினார். பின்னர் நான்
டெல்லி திரும்பியதும், ராஜபாளையத்திலிருந்து மணி என்பவரிடமிருந்து வந்த
இரண்டு மூன்று கடிதங்கள் எனக்காகக் காத்திருந்தன. அவர்கள் மூன்று பேரும்
வேளாண் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து நண்பர்கள்.
நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு மூலையில் இருப்பதாலும், எல்லாவற்றிகும்
செல்லப்பாவையே பொறுப்பாக்கி நிம்மதியுடன் இருப்பதே எங்களுக்கு
சாத்தியமானதும், சௌகரியாமானதும், செல்லப்பாவுக்குப் பிரியமானதுமான
காரியமாக இருந்தது. கட்டுரைகளை நான் அனுப்பி வைத்தேனே ஒழிய, தேர்வு
செல்லப்பாவினதாகவே இருந்தது. இப்படித்தான் 'பாலையும் வாழையும்'
புத்தகமும், ராஜபாளையம் ஸ்ரீ மணி பதிப்பகமும் பிறந்தன. 'புத்தகம் போடறது
தான் போடுகிறீர்கள். சிவராமுவின் கவிதைத் தொகுப்பும் ஒன்று போடுங்களேன்'
என்று செல்லப்பா சொல்ல, அவர்கள் அதற்கும் சம்மதித்தார்கள். சிவராமுவை
அண்டி காரியமாற்றவேண்டியது, டேவிட் சந்திர சேகரின் பொறுப்பாயிற்று.
"கைப்பிடியளவு கடல்"- வெளி வந்தது. இதைத் தொடர்ந்து பின் வருடங்களில்,
'அக்கிரகாரத்தில் கழுதை' திரைப் பிரதியும், 'எதிர்ப்புக் குரல்" என்னும்
இன்னொரு கட்டுரைத் தொகுப்பும் வெளிவந்தன, ஸ்ரீ மணி பதிப்பகத்தின்
வெளியீடுகளாக. 'இப்படி ஒவ்வொன்றாக எல்லாத்தையும் கொண்டு வந்துடலாங்க"
என்று சொல்வார் மணி சந்திக்கும் போதெல்லாம்.
இவ்வருடங்களில், நான் தெற்கே
விடுமுறைக்கு வரும்போதெல்லாம் நாங்கள் சந்தித்துக் கொள்வோம், ராஜபாளையமோ,
சென்னையோ, மதுரையோ, அல்லது தஞ்சையோ, எங்கு சாத்தியமோ அங்கு, மணி,
ஜெயபாலன், இன்னொரு நண்பர், அவர் பெயர் மறந்து விட்டது, இப்படி மதுரையில்
நாங்கள் சந்தித்தபோது வைகை பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதன்
பொறுப்பில் இருந்தவர்கள் மோகனும், சிவராமனும். திரு வல்லிக்கண்ணன்
சிறுபத்திரிகைகள் பற்றி எழுதியுள்ள புத்தகத்தில், வைகை பற்றி, சாமினாதனின்
செல்வாக்கே அதில் அதிகம் காணப்பட்டது என்ற அர்த்தத்தில் எழுதியுள்ளார்.
ஆனால் அதில் என் ஒரு வரி கூட பிரசுரமானதில்லை. உண்மையில் அவர்கள் கேட்டு
நான் எழுதிய கட்டுரையை வைகை திருப்பி அனுப்பியது. இது மணிக்குத் தெரிய
வந்தது. "இனி நாம் உங்களுக்காக ஒரு பத்திரிகை தொடங்கவேண்டியது தான் என்று
நாங்கள் தீர்மானித்தோம். என்ன ஆகப்போகிறது. இருநூறு முன்னூறு ஒரு
மாத்த்திற்கு நாம புரட்ட முடியாதா என்ன? பார்த்துக்கலாம்" என்று அவர்கள்
கூடிப்பேசியதாக பின்னர் எனக்கு மணி தெரிவித்தார். "சிவராமூ
இங்கிருக்கிறார். அவரை ஆசிரியராகப் போட்டு நடத்திவிடலாம், நீங்கள் உங்கள்
இஷ்டத்திற்கு தில்லியிலிருந்து எழுதி அனுப்புங்கள். மீராவின் அச்சகம்
பக்கத்திலிருக்கிறது. அவர் எல்லா வேலைகளையும் அவரே பார்த்துக் கொள்வதாகச்
சொல்லியிருக்கிறார்" என்றார். ஆனால், "சாமிநாதனது எது வந்தாலும் நான்
எடிட் பண்ணித்தான் போடுவேன்" என்று எந்த முகாந்திரமுமில்லாமல் யாரும்
எதுவும் கேட்காமலே, தானே சிவராமூ சொல்லவே,இது சரிப்படாது போலிருக்கிறதே
என்று சிவராமூவின் ஆசிரியத்வத்தை அவர்கள் கைவிட்டதாகவும் நான் தான்
பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னார்கள். 'என் அரசு ஊழியம் தடை நிற்குமே
என்று சொன்னேன். ஜெயபாலனின் தம்பி ஒரு வக்கீல், அவர் பெயரைப் போட்டு
நடத்தலாம், ஒரு வம்பும் வராது," என்றார்கள்.
யாத்ரா பிறந்தது. 1978-ல். சுமார்
ஆறு வருட காலம் 54 இதழ்கள் வெளிவந்துள்ளன. எளிமையும் வறுமையும், சுவடற்ற
பாதைளில் தன்னிச்சையாகப் பயணம் செய்வதும் அதன் அடையாளங்களாக இருந்தன.
இன்று அவை அத்தனையையும் ஒரு சேர, தொகுப்பின் நிமித்தம் பார்க்கும்போது,
அக்கால கட்டத்தில், அதன் பரப்பும் வீச்சும் வேறு எந்த பத்திரிகையும்
சாதித்திராத அளவில் குணத்தில் இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கட்டாயம்
எழுத்து பத்திரிகை போன்று ஒரு சக்தியாக அது பரிணமிக்கவில்லை தான். ஆனால்,
தனக்கிருந்த குறைந்த பலத்திற்கு, ஒரு சில பொறாமைக்காரர்களின் பகைமையை
மீறி, அது தமிழ் சமூகத்திற்கு அது பழக்கப்படாத, இருந்தும் பார்க்க
விரும்பாத பார்த்துப் பழக்கப்பட்டிராத பல தளங்களை, பாதைகளை, உலகங்களை முன்
வைத்துள்ளது என்று சொல்லவேண்டும். அதனால் ஏதும் பயன் இருந்ததா, ப'திப்பு
இருந்ததா என்றால், தன் சிறுமைத் தனத்தால், உதாžனத்தால் கொடுத்ததைப் பெற
இயலாது, விரும்பாது போனவர்களைத் தான் குற்றம் சொல்லவேண்டும் என்று
நினைக்கிறேன். 'பின்னோக்கிய மறு பார்வையில்' என பலரின் ஆளுமை பற்றிய
பார்க்கப்படாத பரிமாணங்களை, பார்க்கப்பட்டதன் மறு பரிžலனையை முன் வைத்தது
யாத்ரா. அது காறும் செய்யப்படாத வகையில், ஓவியர்களின் படைப்புகளைப் பற்றி
முடிந்த அளவு முழுமையாகவும், ஆழமாகவும் பார்க்கத் தொடங்கியது யாத்ரா.
தங்கள் மேடையில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கொடுக்க மனம் இல்லாத,
ஆனால் கருத்து சுதந்திரம் பற்றி உரக்க உபதேசம் செய்தவர்களுக்குக் கூட இடம்
கொடுத்தது யாத்ரா. எனக்கு முன் ஆண்டி ராம சுப்பிரமணியம் பற்றி, ஹெக்கோடு
சுப்பண்ணா பற்றியும், தெரிந்தவர்கள் உண்டு. ஆனால், அவர்களின்
வியக்தித்வத்தின் பெருமை பற்றி, தனித்த குணம் பற்றி அறிந்தவர்கள் இல்லை
அவர்கள். அது பற்றி பேசவேண்டும் என்று கூட தோன்றியதில்லை அவர்களுக்கு.
ஆனால், யாத்ரா இத்தகைய ஆளுமைகளின் தனித்வம் பற்றி நிறைய பேசியது.
பின்னரும் கூட எந்த பாதிப்பும் நிகழாதது யாத்ராவின் குற்றமில்லை. பாரதி
தாஸ்ன் பற்றி, உ.வே.சா. பற்றி, வையாபுரிப் பிள்ளை பற்றி, தெ.பொ. மீனாட்சி
சுந்தரம் பற்றியெல்லாம், யாத்ரா பார்த்த பார்வை யாரும் பார்த்ததில்லை.
ராமச்சந்திரன், சிவராம மூர்த்தி, ருக்மிணி அருண்டேல், நா ரகுநாதன்
(ரசிகன்) என்றெல்லாம் யாத்ரா வெற்றுப் பெயர் உதிர்த்துச் செல்லவில்லை.
சோஷலிஸ்ட் யதார்த்த இலக்கியம் பிறந்த வரலாற்றையும், லெனின் இலக்கியத்துடன்
கொண்டிருந்த பார்வையைப் பற்றியும், முற்போக்குப் பத்திரிகைகள் கூட தமிழ்
நாட்டில் அக்கறை கொண்டதில்லை. அவர்களுக்குத் தெரிந்தது கோஷங்களே. ஆனால்
யாத்ரா முன் வைத்தது. ஆனால் சிகப்புக் கொடிகாரர்கள் யாரும்
கண்டுகொள்ளவில்லை. தி.ஜானகி ராமனுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக வெளியிட்ட
சிறப்பு மலர், அவரை நெருங்கி அறிந்தவர்களால் மட்டுமே எழுதப்பட்டது.
தி.ஜானகி ராமன் என்ற வாழ்க்கை ரசனை கொண்ட மனிதரை அது முன் வைத்தது.
குறிப்பாக கரிச்சான் குஞ்சு எழுதிய நினைவுகள். எது பற்றியும் யாத்ரா
வித்யாசமாக சிந்தித்தது, செயலாற்றியது. நாடகம், தெருக்கூத்து,
பாவைக்கூத்து, மெலட்டூர் பாகவத மேளா, கணியான் ஆட்டம் என்றெல்லாம் யாத்ரா
தன் தளம் விரித்துள்ளது. யாத்ராவின் செயலாற்றலின் பரப்பும், ஆழமும், அன்று
வேறு எந்த பத்திரிகைக்கும் இருந்ததில்லை. ஆண்டி ராமசுப்பிரமணியம் பற்றிய
சிறப்பிதழைப் பார்த்து, அன்னம் பதிப்பக மீரா சொன்னார், "இதை நீங்கள்
புத்தகமாக வெளியிட்டிருக்கவேண்டும், பத்திரிகை இதழாக்கியது, அதன்
ஆயுளையும் குறைக்கிறது. புத்தகம் என்றால் கொஞ்சம் பணமும் திரும்பப்
பார்க்கலாம்" என்று. என்னோடு சம்பந்தப்பட்ட எதையும் கண்டு கொள்ளாது
விடுவது அல்லது உதாžனமாக எழுதுவது என்றே கொள்கை கொண்ட திரு வல்லிக் கண்ணன்
கூட யாத்ரா பற்றி எழுதும் போது அதன் தனித்வத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கடந்ததை எல்லாம் தொகுத்துப்
பார்க்கும் போது, யாத்ராவின் முயற்சிகள் மனதுக்கு நிறைவாகத்தான்
இருக்கின்றன. ஆனால் அது தமிழ் சமூகத்தில் உரிய பாதிப்பை நிகழ்த்தவில்லை
என்பது வருத்தத்திற்கு உரிய விஷயம். குளத்தில் எறிந்த கல் அலை எழுப்பாதே
நீரில் மூழ்கியது என்றால் அதை என்னென்பது. ஆனால் மாற்சிரியம் இல்லாத ஒரு
தலை முறை யாத்ராவின் குணத்தை அறிந்து கொள்ளும். யாத்ராவின் பக்கங்கள்
அதற்கு ஆச்சரியம் தரும். அட! இதெல்லாம் கூடப் பேசப்பட்டிருக்கின்றனவா!
என்று.
இன்னும் ஒரு அரிய நிகழ்வைப்
பற்றிச் சொல்லவேண்டும். அந்த உத்வேகத்தின் இன்னொரு இணைப்புச் சங்கிலியாக,
ஸ்ரீ மணி பதிப்பகம் எப்படி என் எழுத்துக்காக என்றே எழுத்துலகில் இல்லாத
உற்சாகிகளால் தொடங்கப்பட்டதோ, அது போல என் எழுத்துக்களும், என்
பார்வைகளும் அக்கறைகளும் எந்த தடையும் இல்லாது வெளிப்படவேண்டும், யாருடைய
உதாžனத்திற்கும் இரையாகாது, என்று அன்றைய இளைய தலைமுறையினர் சிலருக்கு
தோன்றியதே, எந்த பிரதி பலனும் இன்றி செயல் பட்டார்களே, அது எனக்கு
கர்வத்தை அளிக்கிறது. அதே போல, 'நான் பதிப்பாளனாகக் கூட ஒரு வரி எழுத
மாட்டேன். வெ.சா.எ. முழுதும் உங்கள் எழுத்துக்களுக்காகவே வெளிவரும்" என்று
என் மறுப்பையும் மீறி இரண்டு மூன்று வருடங்கள் பிடிவாதம் பிடித்து, தன்
அந்திம காலத்தில் கூட மரணத்தின் வாயிலில் நின்று கொண்டு தன் காரியத்தைச்
சாதித்துக் கொண்டாரே, தஞ்சை பிரகாஷ், இதெல்லாம் வேறு யாருக்குக்
கிடைத்தது? தஞ்சையிலிருந்து தொலை பேசியில் வற்புறுத்துவார். 'என் உடம்பு
அது பாட்டிலே அது ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் அடுத்த வெசாஎ -க்கு
எழுதி அனுப்புங்க"
இப்போது இவ்வளவு ஆண்டுகள் கழிந்த
பின், யாத்ரா இதழ்களைத் தொகுத்து வெளியிட பல விதங்களில் எனக்கு உதவி வரும்
நண்பர் சந்தியா நடராஜன் முன் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.
அவருக்கு நான் நன்றி சொல்வது சம்பிரதாயத்தின் பாற்பட்டதில்லை.
யாத்ரா: இதழ்த் தொகுப்பு: முதல் @
இரண்டாம் பாகங்கள்: தொகுப்பு: வெங்கட் சாமிநாதன்: சந்தியா பதிப்பகம்:
அசோக் நகர், சென்னை-83
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
என் மத வெறியும் முக மூடிகளும்!
- வெங்கட் சாமிநாதன் -
நண்பர் தாஜ் இப்போது
என்னிடம் மிகக் காட்டமாக இருக்கிறார். அவர் மனமும் எழுத்தும் ஒரு நிலையில்
இருப்பதில்லை போலத் தோன்றுகிறது. என்ன செய்யலாம் என்று மனம் பரபரக்கிறது.
கற்பனையா ஆத்திரமா எது செய்யும் விஷமம் என்று தெரியவில்லை. கணையாழி
அலுவலகத்தில் என்னைப் பார்த்ததாகவும் பின் ஒரு டீக்கடையில் டீ
சாப்பிட்டுக்கொண்டு பேசியது பற்றிச் சொல்கிறார். வளர்ந்தவராக முப்பது வயது
மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் என் நினைவில் நிழலாடுகிறார். அவர் தான் தாஜ்
ஆக இருக்கவேண்டும். பேசியது எதுவும் என் நினைவில் இல்லை. ஆனால் அவர்
நினைவிலிருந்து இப்போது நிறைய என்னைப் பற்றி எழுதி வருகிறார். அவர்
கருத்துக்களோடு மோத நான் வரவில்லை. அவர் கருத்து அவரது உரிமை. ஆனால் தவறான
உண்மைக்கு மாறான தகவல்கள் அவரது உரிமை அல்ல. அவர் வேண்டுமென்றே திரித்துச்
சொல்கிறார் என்று சொல்ல நான் துணியவில்லை. ஆனால் ஆத்திரம் மேல் எழுந்து
கொதி நிலை அடைந்து விட்டால் நினைவுக்கு வருவதெல்லாம் உருமாறி வந்து
விடுகின்றன.
எனக்குத் தான் என்ன பேசினோம்
என்பது நினைவில் இல்லை என்றேனே. அவர் என்னிடம் ஏன் ஜே.ஜே. சில குறிப்புகள்
பற்றி எழுதவில்லை என்று கேட்டதாகவும் நான் கர்நாடகாவிலிருந்து வரும்
ஆங்கிலப் பத்திரிகையில் எழுதியிருப்பதாகவும் சொன்னதாகச் சொல்கிறார்.
முதலில் அவர் சொல்கிறபடி, "விமர்சனமே என் ஆத்மார்த்த பணி" என்று நான்
இயங்கவில்லை. நான் என்னை விமர்சகனாக கருதிக்கொள்வதில்லை என்று 8749 தடவை
சொல்லியாயிற்று. இரண்டாவது யாரையும் ஏன் இந்த புத்தகத்திற்கு விமர்சனம்
எழுதவில்லை என்று கேட்டு விட முடியாது. எழுதுவதும் எழுதாதிருப்பதும்
அவரவர் சந்தர்ப்பம், விருப்பம், பொறுத்து அமைவது. எழுதக் கேட்டு பின்
மறுத்திருந்தால் தான், ஏன்? என்ற கேள்வி எழுப்ப ஒருவருக்கு உரிமை உண்டு.
ஏதோ ஒரு புத்தகத்தைக் குறிப்பிட்டு அதற்கு நீங்கள் ஏன் எழுதவில்லை என்று
எந்த உலகிலும் யாரையும் கேட்கமுடியாது. இதெல்லாம் சாதாரண, அடிச்சுவடி
விஷயங்கள்.
விஷயத்திற்கு வரலாம். ஜே. ஜே.
குறிப்புகள் புத்தகம் வந்த பிறகு நாகர் கோயிலில் ஒரு கருத்தரங்கம்
நடந்தது. அதற்கு நான் அது பற்றி எழுதி அனுப்பக் கேட்கப்பட்டேன். நானும்
எழுதி அனுப்பினேன். அதுவும் கருத்தரங்கில் படிக்கப்பட்டது. "உங்கள்
கட்டுரையை அந்த சந்தர்ப்பத்தில் கவனமாக கேட்க முடியவில்லை" என்று சுந்தர
ராமசாமி எனக்கு எழுதினார். இதற்கு அர்த்தம் புத்தகத்தைப் பற்றி நான்
எழுதியிருந்தது அவருக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை என்று நான்
புரிந்து கொண்டேன். அதை நான் கேள்வி கேட்க முடியுமோ?, அல்லது அவர் தான்
என்னைக் கேள்வி கேட்க முடியுமோ?. அந்த கட்டுரை யாத்ரா இதழ் 42-43, ஆகஸ்ட்,
1983- ல் பிரசுரமாகியுள்ளது. பின்னர் அந்த கட்டுரை "என் பார்வையில் சில
கதைகளும், சில நாவல்களும்" என்ற 2001-ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்ட
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது (பக்கம் 150-162).
தாஜ் தான் வெ.சா.வின் எழுதியது
எல்லாவற்றையும் அனேக மாக படித்துள்ளதாக வேறு சொல்லியிருக்கிறார். எல்லாம்
படித்திருப்பது சாத்தியமில்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அப்படி
இருந்தால் தாஜ் "ஜே.ஜே பற்றி ஏன் எழுதவில்லை?" என்று கேட்பதற்கு பதிலாக
நீங்கள் எழுதியிருக்கிறீர்களா? எங்கு? என்று தான் நியாயமாகக்
கேட்டிருக்கவேண்டும். எழுதவே இல்லை என்று அடித்துச் சொல்வது நியாயமில்லை.
இது ஏதோ தற்செயலாக களங்கமில்லாது
கேட்கப்படும் கேள்வியாக எனக்குத் தோன்றவில்லை. போகட்டும்.
இதைக்கூட நான் பாராட்டாது ஒதுக்கி
விடலாம். தொடர்ந்து என் மத வெறியையும், முக மூடிகளையும் கிழித்தெறியும்
இயக்கத்தின் பணியில் ஒன்றாக, அவர் கீழ்க்கண்ட வரிகளை எழுதியிருக்கிறார்:
அவரது அம்பறாத்துணியிலிருந்து எடுத்து எய்த அம்புகளில் இது ஒன்று என்பது
நினைவில் கொளவது நல்லது:
"இரண்டு வருடங்களுக்கு முன் ஏதோ
ஒரு வலைப் பதிவில், வெ.சா. அவர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப்
போயிருந்ததைப் பற்றி எழுதியிருந்தார். அதன் அருகில் உல்ள மசூதியின்
இரைச்சலால் காசி விஸ்வநாதரை நிம்மதியாக வழிபடமுடியவில்லை என்ற தனது
ஏக்கத்தை அதில் அவர் பதிந்திருந்தார்."
நான் எழுதியிருந்தது அப்போது
வந்து கொண்டிருந்த "உலகத் தமிழ்.காம்" இனையத்தில்.
இரண்டு தவறுகளை தாஜ் இங்கு
செய்திருக்கிறார். ஒன்று நான் எழுதிய சந்தர்ப்பத்தைச் சொல்லாதது. இரண்டு,
நான் எழுதியதையும் நினைவிலிருந்து தவறான பொருள் கொள்ளும் வகையில் திரித்து
எழுதியது.
அவர் குறிப்பிடும் பாராவின் மூல
ரூபத்தை தடித்த எழுத்துக்களில் தந்து நான் எழுதிய பகுதியை மாத்திரம் அதன்
முழு வடிவில் தருகிறேன். என் முகமூடிகளையும், மத வெறியையும் எல்லோருமே
தெரிந்து கொள்ளலாமே. இது 'கலை உலகில் ஒரு சஞ்சாரம்' என்ற புத்தகத்தில்
பக்கம் 164-165 -ல் வெளிவந்துள்ளதைப் பார்க்கலாம். "உலகத் தமிழ்.காம்
இப்போது இல்லையாதலால் அது வெளிவந்த
வேறு குறிப்புகள் நான் தர இயலாது.
இனி நான் எழுதியது:
"தமிழ் நாட்டில் எல்லா அரசியல்
கட்சிகளும் ஒன்றையொன்று அழிக்கும் முனைப்பில் தீவிரம் கொண்டவை. இந்த
அழிப்பு வேள்வியில், பரஸ்பர பகைமையில், தமிழ் நாடு வரண்ட பாலையாகச்
சீரழிந்தாலும் இக்கட்சிகளுக்குக் கவலை கிடையாது. ஆனால் இக்கட்சிகள்
எல்லாம் ஒரே ஒரு விஷயத்தில் ஏகோபித்து ஒன்று சேர்ந்துள்ளன. திருவண்ணாமலை
கோயில் பிரச்னை ஒரு உதாரணம். இக்கோயிலைச் சுற்றியிருக்கும் வியாபாரிகளின்
பிடியிலிருந்து விடுவித்து உலகப் பொதுவான கலைச் சொத்தாகப் (World Heritage
site) பிரகடனப்படுத்த இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சித் துறை முயன்றது.
அதன் பராமரிப்பிற்குள் வராமல் கோவில் காப்பாற்றப்படவேண்டும். இதில்
மட்டும் அரசு, எதிர்க் கட்சிகள். வியாபாரிகள், கோயில் குருக்கள், பக்த
கோடிகள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் எல்லோரும் ஒரு குடைக்கீழ்.
கோயில் ஒரு Departmental Store
ஆவதை நான் தென்னாட்டில் தான் பார்க்கிறேன். மதுரை மீனாட்சி கோயில் எதிரே
உள்ள புது மண்டபம் காலப்போக்கில் ஒரு கடைத் தெருவாக மட்டும் மாறி விட்டது.
எனக்குச் சொல்லப்பட்ட ஒரு
சம்பவத்தை நான் இங்கு பதிவு செய்ய வேண்டும்.
கங்கை ஆற்றின் கரையில் உள்ள காசி
விஸ்வநாதர் ஆலயம் மிக பிரசித்தி பெற்றது. கங்கை ஒரு புனித ஆறு, எல்லாப்
பாவங்களையும் போக்கும் என்று நம்பப் படுகிறது. மதுரையில் இருப்பவர் தன்
சொத்துக்களுக்கு உயில் எழுதி ஏற்பாடு செய்துவிட்டுத் தான் காசி யாத்திரை
புறப்படுவார். திரும்பி வருவது நிச்சயமில்லை என்ற காரணத்தால். இது
அந்நாளைய சமாச்சாரம்.
இந்நாளைய காசி விஸ்வநாதர்
ஆலயத்தையோ, கங்கை ஆற்றையோ ஜீவித லட்சியமாகக் கொண்டு ஏமாந்து விடக்கூடாது.
இப்போது கங்கை சாக்கடையாகப் பரிணமித்து விட்டது. இப்போது சிறுமைப்பட்டு
சிறியதாகிவிட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் ஒரு பெரிய மசூதியின் பின்
ஒட்டிக்கொண்ட out house மாதிரித்தான் இருக்கும். காரணம், விஸ்வநாதர் ஆலயம்
சரித்திரத்தில் பலமுறை இடிக்கப்பட்ட ஆலயம். திரும்பக் கட்டப்பட்டு,
திரும்ப இடிக்கப்பட்டு, இப்போது தன் இடத்தை விட்டுக் கொடுக்காத
பிடிவாதத்தில் கட்டப்பட்ட மசூதி போக எஞ்சியுள்ளதே இன்றுள்ள விஸ்வநாதர்
ஆலயம். சுற்றி வந்தால் மசூதி மிகப் பெரியதாக, சுத்த மாக இருக்கும். நான்
போய்ப் பார்த்த எந்த மசூதியும் சுத்தமாகத்தான் இருக்கும்.
ஒரு ஹிந்து, ஒரு முஸ்லீம்
இருவரும் அத்யந்த சினேகிதர்கள். வாலிபத்துடுக்கு மிக்கவர்கள். "நீ வாய்
திறக்காமல் வா. நீ இல்லாமல் போகமாட்டேன்" என்று ஹிந்து நண்பர் முஸ்லீம்
நண்பரை விஸ்வநாதர் ஆலயத்துக்குள் இட்டுச் சென்றார். செருப்பைக் கழட்டி
உள்ளே சென்றால், அந்த மிகச் சிறிய ஆலயத்தின் - ஒரு பெரிய முற்றத்தின் அளவு
தான் இருக்கும் -பளிங்குக்கல் பதித்த தளம். எப்போதும் ஈரமும் மண்ணும்
கலந்த சகதியாகத் தான் இருக்கும். காலெல்லாம் சேறாகும்.
பின்னர் மசூதிக்குள் நண்பர்கள்
நுழைந்தார்கள். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. "ஏன்?" என்று முஸ்லீம்
நண்பன் கேட்க, "ஹிந்துக்களுக்கு அனுமதி இல்லை" என்று பதில் வந்தது. "நான்
முஸ்லீம் தான். எனக்கு ஏன் அனுமதி இல்லை?" என்று வாதாட நீங் கள் இரண்டு
பேருமே ஹிந்துக்கள் தான். நீங்கள் விஸ்வநாதர் ஆலயம்
போய்வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்கள் இருவர்
கால்களிலும் உள்ள சகதியைப் பாருங்கள். என்னையா ஏமாற்ற நினைக்கிறீர்கள்?"
என்று சத்தமிட்டு அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் என்பது தான் அந்த
சம்பவம்.
நம் புனித ஸ்தலங்களை எவ்வளவு
மதிக்கிறோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு புறம் திருவண்ணாமலை
கோபுரங்கள் வெள்ளையடிக்கப்பட்டு, கோயில் புணருத்தாரணம் நடக்கும். மறுபுறம்
அக்கோயிலுக்குரிய நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும். நமது நாஸ்திக
சமுதாயப் புரட்சியும், ஆஸ்திக ஆன்மீகப் புரட்சியும் ஒரே குணத்தவை. ஒரே
வண்ணம் கொண்டவை."
நான் எழுதியவற்றிலிருந்து தாஜ்
கொடுத்துள்ள பகுதியும் அவர் அதற்குத் தந்துள்ள வியாக்கியானமும் எப்படிப்
பெறப்படுகிறது? நான் எப்படி மதவெறியனானேன்? யார் முகத்தை முக மூடி
மறைக்கிறது.
தாஜுக்கோ, நாகூர் ரூமிக்கோ பதில்
சொல்லித்தான் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற நிலை இல்லை. பொய்யான
தகவல்களை மாத்திரம் திருத்த வேண்டும். நாகூர் ரூமிக்கு பதில்
நானில்லாவிட்டாலும் நான் அறிந்த, அறியாத நண்பர்களின் தார்மீகக் கோபம்
பதில் சொல்கிறது. பொய்க்கூற்றுக்களை நான் தானே திருத்த வேண்டும்?
வெங்கட் சாமிநாதன் /18.10.06
-------------------------------------------------------------------------------------------------
வெங்கட் சாமிநாதன் பக்கம்!
ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி -
காஞ்சி மடத்தில் ஒரு ஞானி!
- வெங்கட் சாமிநாதன் -
"ஐம்பது வருஷங்களுக்கு முன் உலக
வஸ்துக்கள் எல்லாம் எழுபத்திரண்டு மூலப் பொருள்களுக்குள் (elements)
அடங்குவதாக ஸயன்ஸ் சொல்லி வந்தது. இந்த மூலப்பொருள்கள் ஒன்றுக்கு ஒன்று
மாறுபட்டவை என்பதே அன்றைய கருத்து. ஆனால் இப்போது அணு(atom) பற்றிய அறிவு
விருத்தியான பின் இந்த மூலப்பொருள்கள் எல்லாமும் கூட வேறுவேறான பொருட்கள்
அல்ல என்றும், ஒரே சக்தி (energy) தான் இவை எல்லாமாகவும் ஆகியுள்ளது
என்றும் ஸ்யன்ஸ் நிபுணர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். பொருள்(matter), சக்தி
(energy) இவையும் வேறு வேறானவை அல்ல என்று நவீன ஸயன்ஸ் சொல்லுகிறது. ஆக,
அத்வைதம் தான் ஸயன்ஸ¤ம் நமக்குக் காட்டுகிற உண்மை. ஐன்ஸ்டைன், ஸர்
ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல ஸயன்ஸ் நிபுணர்கள், உபநிஷதமும், சங்கர பகவத்
பாதாளும் உபதேசித்த அத்வைத சித்தாந்தத்துக்கு மிகவும் நெருங்கி
வந்துவிட்டார்கள்."
"உலகம் மாயை என்று அத்வைதம்
கூறுவதற்குப் பொருள் யாதெனில், 'உலகம் இறுதி சத்தியமல்ல. இது
விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம். இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற
ஒன்றைச் சார்ந்ததே என்பது தான். இதையே மேற்கண்ட ஸயன்ஸ் நிபுணர்களும்
சொல்லுகிறார்கள். பிரம்மமே பரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே
என்று அத்வைதம் சொல்வதைத் தான் இவர்கள் "உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச்
சார்ந்தவை (relative) தான்: முழு உண்மை அல்ல (absolute) அல்ல"
என்கிறார்கள். (தெய்வத்தின் குரல்: பாகம்-1; பக்கம்-18).
இந்த ஜீவன் தான் ஹீப்ரு மதங்களில்
ஈவ் ஆகியிருக்கிறான். 'ஜீ' என்பது 'ஈ' யாவது ஒரு வியாகரண விதி. 'ஜ' வரிசை
சப்தங்கள் 'ய' வரிசையாக மாறிவிடுவது சகஜம். இப்படித்தான் 'யமுனா' 'ஜமுனா'
வாயிற்று. 'யோகீந்திர' என்பது 'ஜோகீந்தர்' என்றாயிற்று. 'ஜீவ' என்பது
'ஈவ்' என்றாயிற்று. 'ஆத்மா' என்பது 'ஆதம்' ஆக மாறிவிட்டது. *பிப்பலம்
என்பது 'ஆப்பிள்'(apple) என்றாயிற்று. அறிவு விருட்சம் என்பதும் நம்
'போதி' விருட்சம் தான். 'போதம்' என்றால் 'ஞானம்". புத்தருக்கு போதி
விருட்சத்தின் கீழ் தான் ஞானம் உண்டாயிற்று என்பது எல்லாருக்கும்
தெரிந்தது தானே? ஆனால் அவருக்கும் முந்தியே அரசமரத்துக்கு போதி விருட்சம்
என்ற பெயர் இருந்தது. (மேற்கூறிய நூல்: பக்கம் -135-136)
* இதற்கு ஒரு பாரா முன்னதாக
உபநிஷதத்தில் இதே old testament கதை, பிப்பல மரத்தை மையமாக வைத்துச்
சொல்லப்பட்டிருப்பதை விஸ்தரிக்கிறார் பரமாச்சாரியார்.
"பழைய தர்மங்களை எல்லாம் முறிவு
படாமல் காப்பாற்றப்படவேண்டும் என்று எங்களுக்கு ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள்
ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை நான் வைத்துக் கொண்டிருப்பதால் தான்
நிங்கள் இங்கு வருகிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க
வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரியத்தில் நிறைவேற்றுவதும்,
நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக
§க்ஷமம், ஆத்ம §க்ஷமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட்டவை
என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்." (மேற்கூறிய நூல்
பக். 284)
"தினமும் ஒவ்வொருவரும் ஒரு
மாட்டுக்கேனும் ஒரு பிடி புல்லோ, அகத்திக்கீரையோ கொடுக்க வேண்டும்.
மாட்டுக்கு ஒரு பிடி புல் கொடுப்பதை "கோக்ராஸம்", என்று பெரிய தர்மமாக
சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. 'க்ராஸம்' என்றால் ஒரு வாயளவு
(mouthful): இங்கிலீஷில் புல்லை grass என்பது கூட இதிலிருந்தே
வந்திருக்கலாம்." (மே. நூல் பக். 316)
"வான நூலில் (astronomy) நமக்கு
இருந்த பாண்டித்யத்தால் தான் எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக, இன்று அமாவாசை,
இன்று கிரஹணம் என்று கொஞ்சம் கூடத் தப்பாமல் பஞ்சாங்கம் கணிக்க
முடிந்திருக்கிறது." (மே. நூல் பக். 424)
"இப்போது கூட, நாஸ்திகர்கள் என்று
தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களில் ரொம்பப் பேர் வியாதி வெக்கை வந்து
ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டால், வெங்கடரமணஸ்வாமிக்கு வேண்டிக்
கொள்கிறார்கள்: மாரியம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்துகிறார்கள்.
கேட்டால், "வீட்டில் இப்படி அபிப்ராயம்: சம்ஸாரத்துக்கு இதிலே நம்பிக்கை:
அவர்களுக்காக விட்டுக் கொடுத்தேன். அவர்கள் உணர்ச்சி (feeling)க்கு
மதிப்பு(respect) கொடுத்தேன்: என்று ஜம்பமாக சொல்லிக்கொள்வார்கள்." (மே
நூல் பக். 576)
"Action and reaction are equal
and opposites (செயலும் பிரதிச் செயலும் சம சக்தி வாய்ந்ததாகவும்
எதிரிடையானதாகவும் இருக்கும்) என்ற "Newton Law" எல்லாக் காரியங்களையும்
பற்றின 'கர்மா தியரி' யை அடிப்படையாகக் கொண்டது என்பது மட்டுமில்லை;
எண்ணத்தின் பிரதிபலனையும், மன நெறியின் சக்தி மற்ற மனங்களின் மீது
மட்டுமின்றி 'natural forces' மீதும் பிரதி விளைவுகளை உண்டாக்குவதையும்
அடிப்படையாகக் கொண்டது தான். Mental plane, metaphysical plan, physical
plane, மூன்றையும் கோத்து தம் மதத்தில் சொன்னதை physical plane-ல் (பௌதீக
மட்டத்தில்) மட்டும் சொல்வதே ந்யூட்டன் லா:......"(மே. நூல். 3-ம் பாகம்:
பக் 392)
"வெறும் physical plane-லேயே ஜட
இயற்கை என்கிற வெளிநேச்சர் அடங்கியிருந்ததானால் சூர்யன் எப்போதோ
குளிர்ந்து போயிருக்கும் என்று ஸயண்டிஸ்டுகளே சொல்கிறார்கள். எப்படியோ
அதில் உஷ்ண சக்தி ஊறிக்கொண்டே யிருக்கிறது என்று சொல்லி இதன் காரணத்தைப்
பலவிதமாக ஊகம் செய்கிறார்கள். ஆதி காரணம் ஈஸ்வர சக்தி
தான்.......ஐன்ஸ்டைன் மாதிரி ரொம்ப பெரியவர்கள் அது தான் ஈஸ்வர சக்தி
என்று நமஸ்காரம் பண்ணுகிறார்கள். (மே நூல்: 3-ம் பாகம்: பக். 393)
"விக்ரஹங்களில்
பார்த்திருக்கலாம். 'நாத தநூம் அனிஸம் சங்கரம்" என்று தியாகராஜ ஸ்வாமிகள்
செய்திருக்கிற க்ருதியில் பரமேஸ்வரனுக்கு நாதமே சரீரம் என்கிறார். "தநூ"
என்றால் சரீரம், இதுவே ஈஸ்வரனின் சக்தியோஜாதம் முதலான ஐந்து
முகங்களிலிருந்தே சப்த ஸ்வரங்களும் வந்திருக்கின்றன என்று சரணத்தில்
சொல்லியிருக்கிறார்." ஸத்யோஜாதாதி பஞ்சவக்த்ரஜ ஸரிகமபதநீ வர சப்தஸ்வர")
ஐந்து முகத்திலிருந்து ஏழு ஸ்வரமென்றால் எப்படி என்று புரியாமலிருந்தது,.
வாஸ¤தேவாச்சார், காரைக்குடி சாம்பசிவ ஐயர், மகாராஜபுரம்,
செம்மங்குடி முதலிய இத்தனை பேரையும் விசாரித்துப் பார்த்தேன். முதலில்
அவர்களுக்கும் புரியாமல்தான் இருந்தது. அப்புறம் சங்கீத சாஸ்திரங்களைப்
புரட்டிப் பார்த்ததில், சட்ஜமும், பஞ்சமமும் பிரக்ருதி ஸ்வரங்கள் என்பதாக
ஈஸ்வரனைப் போலவே ஸ்வயம்புவாக இருப்பவை என்றும், விக்ருதி என்ற செயற்கை
ஸ்வரங்களான மற்ற ஐந்துமே பரமேஸ்வரனின் ஐந்து முகங்களில் ஒவ்வொன்றிலிருந்தே
ஒவ்வொன்றாகத் தோன்றிய என்றும் அர்த்தம் தொனிக்கும்படி பிரமாணங்கள்
அகப்பட்டன.(மே. நூல் பக். 811-12).
"சப்த பிரம்ம வாதத்தில் சப்தம்
முக்கியமானது, பூர்ணமானது என்று இரண்டு லக்ஷணங்கள் சொல்லியிருக்கிறது.
Time என்கிற காலத்துக்குக் கட்டுப் படாமல் இருப்பது தான் 'நித்யம்'. Space
என்னும் இடக்கட்டுப்பாடு இல்லாமல் எங்கும் பரவியிருப்பது தான் 'பூர்ணம்'.
இப்படி எக்காலத்திலும், எவ்விடத்திலுமான நிறைந்திருப்பதே சப்தம் என்று நம்
பூர்வீகர்கள் சொன்னதை இப்போது தான் ஸயன்ஸ் நிரூபித்துக்
காட்டியிருக்கிறது. (மே. நூல் பக். 814)
"இப்போது தான் வயசு ஒன்றைத்தவிர
ஜனநாயகப் பிரதிநிதிகளுக்கு எந்தத் தகுதியும் வைக்காமல் விட்டிருக்கிறது.
நம்முடைய கான்ஸ்டிட்யூஷனை (அரசியல் நிர்ணய சட்டத்தை) நிறைவேற்றிய சபைக்கு
அக்கிராசனராக இருந்த ராஜேந்திர பிரசாதே இதை ஆட்சேபித்துப் பார்த்தார்.
"சட்டத்தைப் பற்றி வாதிக்கவேண்டிய வக்கீல்களுக்கும் தீர்ப்புக்
கொடுக்கவேண்டிய ஜட்ஜுகளுக்கும் அனேக க்வாலி·பிகேஷன்கள்
வைத்திருக்கிறோம். ஆனால் அந்தச் சட்டங்களைப் போட்டு நிறைவேற்றுகிற
எம்.எல்.ஏக்களுக்கும் எம். பி.க்களுக்கும் ஒன்றும் வேண்டாம் என்றால்
கொஞ்சம் கூட சரியாயில்லையே" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும்
அவர் சொன்னதறகு கான்ஸ்ட்டியூவெந்த் அசெம்ப்ளி ஒத்துக் கொள்ளவில்லை. (மே.
நூல் பக். 854).
"நிர்வாணம் என்பதற்கு நேர்
அர்த்தம், 'தீபத்தை ஊதி அணைப்பது'. ஒரே சூடாக தகித்துக் கொண்டு,
பிரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவது தான்
நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற
மாதிரி வேறே எதையும் பண்ணமுடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க
வைத்துத் தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும்.
அப்போதும் கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக
நினைத்த பிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில்
இருந்து கொண்டுதான் இருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று
சொல்லுகிறார்கள். அக்னி அணுக்களால் ஆனது அல்ல (அக்னி எரிவதற்குத்தான்
ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள் தான் என்று நினைத்து
விடக்கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத் தான் அடியோடு ரூபமே
இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவது தான்
நிர்வாணம். பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. (மே. நூல்.
5-ம் பாகம் பக். 648)
"அபிநவசங்கரர்": அவர்களுடைய
ஆர்குமெண்டில் இன்னும் இரண்டு பாக்கி இருக்கின்றன. கம்போடிய கல்வெட்டில்
ஒரு 'பகவத் சங் கர' ரின் காலில் அறிஞருலகம் முழுதும் தாமரையை வண்டுகள்
மொய்ப்பது போல தங்களுடைய சிரசுகளைத் தாழ்த்தியிருப்பதாகச்
சொல்லியிருக்கிறதே, அது நம்முடைய ஆதி சங்கர பகவத் பாதாளைத் தவிர
யாராயிருக்கமுடியும்? 'கல்வெட்டிலிருந்து அந்தக் காலம், கி.பி. 8-
நூற்றாண்டின் முடிவு பாகத்திலிருந்து 9- நூற்றாண்டின் ஆரம்ப பாகம் வரை
ஆசார்யாளின் காலம்' என்பதற்கும் ஒத்துப் போகிறதே! இதற்கு என்ன
சொல்கிறீர்கள்?" என்பது ஒரு ஆர்குமெண்ட். இன்னொன்று நம் ஊரிலேயே வழங்கும்
சங் கேதக் கணக்கு ஸ்லோகம்- கலியில் 3889-ம் வருஷமான கி.பி.788 -ஐச்
சொல்லும் "நிதிநாகேபவஹ்ன்யப்தே ஸ்லோகம்." (மே.நூல் 5-ம் பாகம் பக் 835).
மேலே தரப்பட்டிருப்பவை காஞ்சி
பரமாச்சார்யர், ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி (1894-1895) அவர்களின்
சொற்பொழிவுகளிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள். அவரைத் தரிசிக்க வந்து
குழுமும் பக்தர்களுக்கு அவ்வப்போது அவர் உபதேசங்கள் செய்வதுண்டு.
இப்பிரசங்கங்களுக்கு ஏதும் முன் தயாரிப்புகள் கிடையாது. அவ்வப்போது
அவர்கள் முன் தம் மனதில் தோன்றுவதைச் சொல்வார். மேலே கொடுக்கப்பட்ட
பகுதிகள், எவ்வித தேர்வும் இன்றி யதேச்சையாக கண்களில் பட்டவை (இது காறும்
வெளிவந்துள்ள ஆறு பாகங்களின் சுமார் 6000 பக்கங்களிலிருந்து
எடுக்கப்பட்டவை.கண்ணில் பட்டவற்றில் துறைக்கு ஒரு மேற்கோள் என்று
மாத்திரமே ஒரு சில துறைகளோடு நிறுத்திக்கொண்டேன். மாதிரிக்கு ஒரு துணுக்கு
என்று )பரமாச்சாரியாரின் படிப்பும், அக்கறைகளும் என்ஸைக்ளோபீடியா என்று
சொல்லும் அளவுக்கு விஸ்தாரமும் ஆழமும் கொண்டவை. வரலாறு, தத்துவம், இசை,
மொழியியல், சமஸ்கிருதம், தமிழ் இலக்கியம், பெளதீகம், தொல்லியல் என
அடுக்கிக்கொண்டே போகலாம், அவரது அறிவு விஸ்தாரமும் தீக்ஷண்யமும் விரிந்து
கொண்டே போகும். இவற்றோடு உடன் நிகழ் கால அரசியல், சமூக பிரச்சினை களையும்
நிலவரங்களையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். தன் 13வது வயதில்
சங்கராச்சாரியாராக பீடமேறிய பையனுக்கு மடத்தைச் சேர்ந்த சம்பிரதாயங்களும்,
பீடாதிபதியாக அந்தப் பையன் தெரிந்து கொள்ள வேண்டிய மத சாஸ்திரங்கள்
அனுஷ்டானங்கள், புராணங்கள், சடங்குகள், பின் சமஸ்கிருதத்திலும் தமிழிலும்
நல்ல தேர்ச்சி இவற்றைத் தவிர வேறு என்ன கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும்?
வேறு எதுவும் யார் கற்றுக் கொடுப்பார், கற்பதற்கு நேரம் எங்கு இருக்கும்?
இவற்றைக் கற்பதே, முழு நேர கடும் பயிற்சியாக இருக்கும். பின் எங்கிருந்து
அவர் ஆங்கிலமும், அவருக்கு இப்போது தெரியவந்துள்ள அத்தனை இந்திய மொழிகளில்
பயிற்சியும், உயர் கணிதமும், தொல்பொருளியலும், கல்வெட்டு இயலும்,
·ப்ரென்சும், ஆஸ்ரமத்துக்குள் இருந்து கொண்டு எப்படிக் கற்றார்?.
ஆசிரமத்து கடமைகள் போக அவருக்கு நேரம் எப்போது கிடைத்தது? யார் அவருக்குக்
கற்றுக் கொடுத்தார்கள்? அவராகத் தான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். எந்த
ஆஸ்ரமும் இத்துறை ஒவ்வொன்றிற்கான பேராசிரியர்களை வரவழைத்து பீடாதிபதிக்கு
கற்பிக்க ஏற்பாடு செய்ய முடியாது. அவராகக் கற்றுக்கொண்டால் அதற்குத் தடை
எழாது மடத்திலிருந்து. அதற்காக அவர் இர்விங் வாலஸ், எர்ல் ஸ்டான்லி
கார்ட்னர், க்ரேஸ் மெடாலியஸ் என்று படித்துக் கொண்டிருக்க முடியாது.
நூற்றாண்டுகள் பல காலமாக கடைப்பிடிக்கப் பட்டு வரும் சம்பிரதாயங்களும்,
மடத்தின் கண்ணியமும், சமூகத்தில் அதற்கு உள்ள மரியாதையும் பங்கப்படாத வரை,
சங்கராச்சாரியார் எந்த சாஸ்திரம் படித்தாலும் அது பற்றிக் கவலை இல்லை.
ஆனால் விஷயம் அதுவல்ல. ஒரு பீடாதிபதிக்கு இதையெல்லாம் தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற மன உந்துதல் இருக்க வேண்டும். அத்தோடு ஆசிரமத்துப்
பொறுப்புக்களை நிறைவேற்றியபிறகு இவற்றைக் கற்க நேரம் இருக்கவேண்டும். அந்த
மனம் இந்தப் பதினோரு வயதுப் பையன் தன் வளர்ச்சியில் எப்படிப் பெற்றான்,
அதுவும் ஆஸ்ரமத்துச் சூழலில் என்பது ஒரு கேள்வி. அத்தோடு இதற்கான நேரம்
எப்படிப் பெற்றான் என்பது அடுத்த கேள்வி.
பரமாச்சாரியாரின் பிரசங்கங்கள்
1945லிருந்து 1972 வரை உள்ள கால கட்டத்தைச் சேர்ந்தவை. அதாவது 30 வருட கால
நீட்சி கொண்டவை. பரமாச்சாரியார் பேசும்போது எடுத்து எழுதிய
குறிப்புகளிலிருந்து சேர்க்கப்பட்டவை. சுமார் ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்
கொண்ட ஐந்து பாகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை மேலே கொடுக்கப்பட்டவை.
புத்தகத்தை உத்தேசமாக திட்டமின்றிப் புரட்டிப் பெற்ற பக்கங்களிலிருந்து
கண்ணில் பட்டவை என்று எடுக்கப்பட்டவை. 1945-ல் டேப் ரெகார்டர் கிடையாது.
பரமாச்சாரியாரின் பேச்சுக்களை
பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணமே எப்படி எப்போது தோன்றியிருக்கக்கூடும்.
அவரது பரந்த அறிவும், உலக ஞானமும், பல அறிவார்த்த, தத்துவ கலைத் துறைகளில்
உள்ள ஆழ்ந்த சிந்தனைகளை ஒருமைப் படுத்திப் பெற்ற ஞானம் ஒரு மடாதிபதியாக,
இந்து மத போதகராக, ரக்ஷகராக அவருடைய ஸ்தானத்தைச் சிறப்பிக்கக் காணும் போது
அது பக்தியோடு கூடும் சாதாரண மக்களுக்கும் புரியும் படியாகச் சொல்லும்
வல்லமையையும் கண்டு, அப்பிரசங்கங்கள் காற்றோடு போய்விடக்கூடாது, பதிவு
செய்ய வேண்டும் என்று ஒரு கட்டத்தில் ஒரு சிலருக்குத்
தோன்றியிருக்கவேண்டும்.
அப்பிரசங்கங்கள் வெறும் இந்துமத
சாஸ்திர போதனைகளாக இல்லாமல், ஒரு தத்துவ தரிசனமாக வெளிப்படுவதும் பல
சிக்கலான அறிவுத்துறை விஷயங்களைப் பற்றிய அவரது விளக்கங்கள் பாமரனும்
புரிந்து கொள்ளும் மொழியில் இருந்து விட்டதும் இன்னும் சிறப்பு. அவரது
தரிஸன ஆளுமை ஆஸ்ரமத்தைத் தாண்டி, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்து
மதத்தினரையும் தாண்டி வெளிஉலகில் பரவவே, அது மகாத்மா காந்தியையும் அவரிடம்
ஈர்த்துள்ளது. பால் ப்ரண்டனையும் ஈர்த்துள்ளது. 1930 களிலேயே. இதன்
பின்னர் தான் ஆர்தர் கெஸ்லர் ஐம்பதுக்களில் பரமாச்சாரியரிடம் வருகிறார்.
தன்னைக் காண வந்த பால் ப்ரண்டனை ரமண மகரிஷியையும் காணும்படி அனுப்பி
வைத்தார் பரமாச்சாரியார். அவர்கள் எல்லாம் காணவந்தது ஒரு மடாதிபதியை அல்ல.
ஒரு மடாதிபதியாக அமர நேர்ந்துள்ள ஒரு ஆச்சாரிய புருஷனை.
ஆக, தொழில் நுட்ப வசதி இல்லாத
காலத்தில் அது குறிப்பெடுத்த பதிவுகளாகத்தான் இருந்திருக்க முடியும்.
பதிவாவது தன் மொழியில் அல்லாது, பரமாச்சாரியரது மொழியில்
அமைந்திருக்கவேண்டும். விஸ்தாரமாகக் குறிப்பெடுப்பது மட்டுமல்லாமல் அதை
ஆச்சாரியரது மொழியிலேயே தருவதற்கு சிரமமும் சிரத்தையும் அவையெல்லாம் போக
பக்தியும் கூடத் தேவை.
சந்திர சேகர சரஸ்வதிக்குக்
கிடைத்த இந்த கியாதி, காஞ்சி மடம் தந்ததல்ல. உண்மையில், காஞ்சி மடத்தை
மற்ற சங்கர மட பீடாதிபதிகள் அங்கீகரிப்பது கூட இல்லை. சிருங்கேரி
மடத்தவருக்கு காஞ்சி மடம் என்றால் இளப்பம் தான். ஆதி சங்கராச்சாரியார் தன்
காலத்தில் ஸ்தாபித்த மடங்களில் காஞ்சி எங்கேயிருந்து வந்தது என்று
கேட்பார்கள். பூரி சங்கராச்சாரியாருக்கு மடத்தைவிட மற்ற காரியங்களில்,
அரசியலில் விருப்பம் அதிகம். பத்திரிகைச் செய்திகளில் ஒவ்வொரு சமயம் அவர்
பெயர் அடிபடும். வடக்கே பத்ரிநாத் மடம் நிலத்தகராறு, பணத்தகராறுகளில்
சிக்கிக் கொண்டிருப்பது. மடத்துத் தலைவர் யார் என்பதில் போட்டி. அது
இன்னம் தீர்ந்தபாடில்லை. அவர்களுக்கெல்லாம் லோகாயத, ஸ்தாபன நிர்வாக
அக்கறைகள் அதிகம். அவர்களைத் துறவிகள் என்றோ ஞானிகள் என்றோ நினைப்பது
சிரமம் தரும் காரியம். மடத்தை நிர்வகிக்க வந்தவர்கள். அவ்வளவே. ஆக,
இம்மடங்கள், காஞ்சி மடத்தை ஒர் சங்கராச்சாரிய பீடமாக ஏற்பதில்லை. ஆனால்
விஷயம் என்னவென்றால், இவர்கள் பீடாதிபதிகளாக இல்லையென்றால்,
இவர்களுக்கென்று தனிப்பட்ட ஆளுமை ஏதும் கிடையாது. ஒரு அதிகாரி பதவி இழந்த
மாதிரி தான். இவர்களது தனி மனித ஆளுமை காரணமாக, இவர்கள் தலைமையேற்க வந்த
மடத்தின் கண்ணியமும் கௌரவமும் இவர்களால் க்ஷ£ணித்துள்ளது என்று தான்
சொல்லவேண்டும். தம் இழுக்குகளைத் தான் மடத்தின் தலைமைக்கு எடுத்துச்
சென்றிருக்கிறார்கள் என்றும் சொல்ல வேண்டும்.
ஆனால், 11 வயது சாமிநாதன் என்ற
சிறுவனை விதி காஞ்சிக்கு அழைத்து சந்திரசேகரானந்த சரஸ்வதியாக காஞ்சி மட
பீடாதிபதியாக்கியிருக்காவிட்டாலும், இந்த நாடு முழுதும் அவரது கியாதி
தெரிந்த ஒரு தயானந்த சரஸ்வதியாகவோ, ஆனந்த குமாரசுவாமியாகவோ மகாத்மா
காந்தியாகவோ அறியப்பட்டிருப்பார். மடத்துக்கு அவர் தம் ஆளுமையின்
பெருமையைக் கொடுத்தவர் பரமாச்சாரியார். மடத்தின் சம்பிரதாயங்கள்,
சங்கராச்சாரியாராக அவரது பொறுப்புகள் அவரது செயல்களைக்
கட்டுப்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். அப்படியும் காஞ்சி ஒரு
சங்கராச்சார்ய பீடமாக, காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு ஜகத் குருவாக அப்படி
ஒன்றும் பெரிய அளவில் செல்வாக்கு உள்ள மடமோ பீடாதிபதியோ அல்ல. காஞ்சி
நகரில் அவரை முஸ்லீம்கள் வெகுவாக மதித்தனர், அவர்களுக்கு அவர் குரு அல்ல
என்றாலும். காஞ்சியைச் சுற்றிலும் சென்னையிலும், தஞ்சை போன்ற சில
மாவட்டங்களின் உள்ள பிராமணர்களை உள்ளிட்ட ஒரு வட்டத்திற்குள் தான்
அவருக்கு குரு ஸ்தானம். தென் மாவட்டங்களில் உள்ள பிராமணர்கள் சிருங்கேரி
சங்கராச்சாரியாரைத் தான் தம் குருவாக மதிக்கின்றனர். மடத்தின் ராஜ்ய
விஸ்தாரம் அப்படி ஒன்றும் பெருமைப் படும் பரப்பு கொண்டதல்ல. ஆனால் காஞ்சி
மடம் சந்திரசேகரானந்தரின் பீடாதிபத்யத்தில் பெற்றுள்ள கீர்த்திக்கும்
மரியாதைக்கும் ஈடாக வேறு எந்த சங்கராச்சாரியார் பீடம் மட்டுமல்ல, எந்த மத
பீடத்தையும் சொல்ல முடியாது. அதிலும் தனிப்பட்ட முறையில் சந்திரசேகர
சரஸ்வதி அவர்கள் பெற்றுள்ள, பீடம், மதம், மாநிலம் மீறிய கௌரவமும்
பெருமையும் ஈடு இணையற்றது. மடத்தின் கட்டிட எல்லைக்குள் சாதாரணமாக நிகழும்
உபதேசப் பேச்சுக்களில் கூட புத்தர், காந்தி, முகம்மது, ராமானுஜர் போன்ற
ஆச்சாரியார்கள், சரித்திர மகான்கள், ஞானிகள் பற்றிப் பேசும்போது
அவர்களுக்குரிய மரியாதையோடு தான் குறிப்பிடுவார். அவர்கள்
அத்வைதிகளாகத்தான் இருக்க வேண்டும் என்ற பேதம் பார்த்ததில்லை. அவருக்கு
ஐன்ஸ்டைன் கூட வேத காலத்து ரிஷி போன்றவர் தான். அவருடைய அக்கறைகள், ஆழந்த
அறிவு எத்துறையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது, ஆங்கிலத்தில்
Catholicity of outlook என்பார்களே அப்படியானது அவரது பார்வை. ஆக,
அப்படிப்பட்டவர், மடத்தின் தலைமைக்கு ஈர்க்கப்பட்டிராவிட்டால் என்னவாக
இருந்திருப்பார் என்று யூகிப்பது சிரமம் தான் என்றாலும், அவர் எத்துறையில்
செயல்பட்டிருந்தாலும், அவர் தனது அருளையும், ஞானி தேஜஸயும் உடன் கொண்டு
சென்றிருப்பார், அத்துறையும் அவரது ஞான ப்ரசன்னத்தில் ஓளி பெற்றிருக்கும்
என்பது நிச்சயம்.
அத்துடன் அவருடைய அசாதாரண தீர்க்க
தரிசனமும் அவருக்கு துணை கொடுத்திருக்கும். இந்தியா சுதந்திரம் பெற்ற
ஆரம்ப வருஷங்கள் அவை. அரசியல் நிர்ணய சபை என ஒன்று அமைந்து இந்தியாவுக்கான
அடிப்படையான அரசியல் நிர்ணய சட்டம் உருவாகிக்கொண்டிருந்த காலம். அப்போது,
பெரும்பான்மையான மக்கள் கல்வியற்றவர்களாக இருக்கும் நிலையில், வயது
வந்தவர்களுக்கெல்லாம் வாக்குரிமை என்பதும் கட்சி சார்ந்த அரசியலும்
அபாயங்கள் நிறைந்தது என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். பண பலம்
கொண்டவர்களால் தேர்தல்கள் துஷ்பிரயோகத்திற்கு இரையாகும், கட்சிகளையும்
அவர்கள் தம் வசப் படுத்தக் கூடும் என்று அவர் எச்சரித்தார். ஒரு மத
பீடாதிபதி அரசியல் விவகாரங்களில் தலையிடலாமா, இது ஜனநாயகத்திற்கு எதிரான
குரல் அல்லவா, இப்படியெல்லாம் பேசுவது பிற்போக்கு வாதமல்லவா என்று பலர்
அந்நாட்களில் கருதியிருக்கக்கூடும். கட்சி சார்ந்த அரசியலும் ஜனநாயகமும்,
கட்சித் தாவல்களால், 'ஆயாராம் கயாராம்' களால் நாசமடையக்கூடும், கொடும்
குற்றவாளிகள் மந்திரிகளாவார்கள், நீதி மன்றங்கள் மந்திரிகளின் லஞ்ச
ஒழுங்கீனங்கள் பற்றி பேசுவது, நீதிமன்றங்களே தம் எல்லை மீறும் செயலாகும்
என்று குற்றம் சாட்டுவார்கள் என்று நமக்கு இன்று தெரிவதைத்தான் அன்று
பரமாச்சாரியார் சொன்னார் என்று நம்மில் இப்போது சொல்லலாம். ஆனால்,
1948-1951-ல் யார் சொல்லக்கூடும்?. அன்று அவர் பிற்போக்கு வாதியாக,
அனாவசியமாக அரசியலில் ஒரு மதத் தலைவர் தலையிடுவதாகத் தான் குற்றம்
சாட்டப்ப்டிடிருப்பார். ஆனால் யார் சொன்னது சரி என்று நிரூபணம்
ஆகியுள்ளது?. பரமாச்சாரியாரா, அல்லது நம் அரசியல் வாதிகளா?
சாதி பற்றியும், பெண்கள்
பற்றியும் அவரது கருத்துக்கள் பழமை சார்ந்தவை, இறுகியவை என்பது உண்மைதான்.
அவர் அதில் சமரசத்திற்கு வழியே வைப்பதில்லை. இப்பழம் சம்பிரதாயங்களையும்
மரபுகளையும் சார்ந்து பேசும் சமயங்களில் அவர் மனிதாபிமானமோ இரக்க குணமோ
அற்றவராகப் பேசுவதில்லை. இந்நேரங்களில் ஒரு பிற்போக்கு மனம் கொண்ட,
உணர்ச்சியற்ற பழமைவாதியாக அவர் நம் முன் காட்சியளிப்பதில்லை. பல
நேரங்களில் ஒரு மத குருவாக, ஒரு மடத்தின் தலைவராக தான் பல
கட்டுப்பாடுகளுக்குள்ளேயே இயங்கவேண்டிய பொறுப்புக்களைப் பற்றிப் பேசுவார்.
ஆதி சங்கரர் காலத்திலிருந்து தொடரும் சம்பிரதாயங்களை, மடத்தின்
சம்பிரதாயங்களைத் தான் காக்கும் பொறுப்புகளைப் பற்றி தான் அவற்றை மீறி
எதுவும் செய்யவியலாது என்றும் சொல்வார்.
அவர் வழிகாட்டலை எதிர்நோக்கும்,
அவருடைய உபதேசங்களை ஆவலுடன் கேட்கும் பக்தர்களுக்கு அவர் ஜகத் குரு.
தெய்வாம்சம் பொருந்தியவர். சிவனின் மறு அவதாரமே தான் அவர். ஆனால்
பரமாச்சாரியார் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.
"ஒரு தேசத்தின் பண்பாட்டு வளத்தை
எப்படி கண்டறிவது? ஒரு தேசத்தின் கவிஞர்களின் குரலில் தான் அத் தேசத்தின்
ஹிருதயம் நம்மிடம் பேசுகிறது. மதத்தலைவர்களின் கருத்துக்களுக்கு ஒரு
முக்கிய இடம் உண்டுதான். ஆனால், ஒரு மதத்தின் தலைமை தன் மதத்தின்
சிறப்புக்களையும் பெருமையையும் நிலை நாட்ட, மற்ற மதங்களின்
நம்பிக்கைகளையும் சாஸ்திரங்களையும் மட்டமாகப் பேசி இழிவு படுத்துவார்கள்.
ஆனால் ஒரு சிருஷ்டிகரமான கலைஞனுக்கு இம்மாதிரியான நோக்கங்கள்
இருப்பதில்லை. கலைஞன் பாரபக்ஷமற்றவன். அவன் தனக்கு எது அழகாகத்
தோன்றுகிறதோ, உண்மையெனத் தோன்றுகிறதோ அதைச் சொல்வதற்கு அவன் சுதந்திரம்
பெற்றவன்."
(மேற்கண்ட வரிகள் நான்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டவை. இதன் தமிழ் தமிழ் மூலம்
உடனடியாகக் கிடைக்காததால், என் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து திரும்ப
தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டேன். கருத்து அதே தான் வார்த்தைகள் தான்
என்னுடையவை)
ஆதி சங்கராச்சாரியார் எட்டாம்
நூற்றாண்டில் ஸ்தாபித்து விட்டுச் சென்ற காலத்திலிருந்து இன்று வரை அந்த
மடங்களில் இவ்வளவு நீண்ட கால நீட்சியில் எத்தனையோ சங்கராச்சாரியார்கள்
பீடாதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். ஆனால், காலடியிலிருந்து வந்த எட்டாம்
நூற்றாண்டு ஆதி சங்கராச்சாரியாரைத் தவிர வேறு எவரும் நாம் இன்று நினைவு
கொள்ளும் தடயங்களை விட்டுச் செல்லவில்லை. சந்திரசேகரானந்த சரஸ்வதி காஞ்சி
சங்கர மடத்தின் சங்கராச்சாரியாரக இருந்த செய்தி மறக்கப்படலாம். ஒரு
வரலாற்றுத் தகவலாக அது குறுகி விடலாம். அது தற்செயலான ஒரு இடை நிகழ்வு
தான். ஆனால் சந்திரசேகரானந்த சரஸ்வதி ஒரு மகான். ஒரு உன்னத நிகழ்வு. அவர்
பிறந்த பதினொன்பதாம் நூற்றாண்டின் பின் பாதி இந்த நாட்டிற்கு
விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்ஸர், வள்ளலார், மகாத்மா காந்தி, தயானந்த
சரஸ்வதி போன்ற பல ஞானிகளை, மகா மனிதர்களைத் தந்திருக்கிறது.
பரமாச்சாரியார் இந்த மகா புருஷர்களில் ஒருவர். ஒரு மடத்திற்குத் தலைமை
வகித்த இன்னுமொரு சங்கராச்சாரியார் அல்லர்.
-------------------------------------------------------------------------------------------------
samuthram_A.gif
இலக்கியம்!
யூமா வாசுகி முதல் சு.சமுத்திரம்
வரை!
- வெங்கட் சாமிநாதன் -
[கேட்டீர்கள், சொல்கிறேன்]!
கடந்த 40 வருஷங்களாக அவ்வப்போது
பத்திரிகைகள் கேட்க எழுதியவை இங்கே தொகுக்கப் பட்டுள்ளன. எல்லாமே இவைதான்
என்றல்ல. எழுதித் தொகுக்கப்பட்டு வந்துள்ளவை போக எஞ்சியுள்ளவற்றில் இவை
ஒரு பகுதி. இன்னும் மிஞ்சியிருப்பவை இப்போதைய அவசரத்திற்கு
கையிலகப்படாதவை. அவை அத்தனையும் ஆங்கிலத்தில் இருப்பதால் இப்போது உடனே
சேர்க்க இயலாமல் போயுள்ளது. அவற்றில் கரிச்சான் குஞ்சு, கோபி கிருஷ்ணன்,
க.நா.சு, 1970களில் சென்னையில் இருந்த இலக்கிய சங்கம் தொகுத்த கோணல்கள்,
தி.ஜானகிராமன் ஆர். ஷண்முக சுந்தரம் என்று நிறையப் பேர் உண்டு. சேர்க்க
முடியாமல் போவது எனக்கு வருத்தம் தருவது தான். ஆனால் என்ன, அடுத்த
தொகுப்பு வருமானால் அதில் சேர்த்துக் கொண்டால் போயிற்று. அதற்கிடையில்
ஆங்கிலத்தில் உள்ளவற்றை மொழிபெயர்த்துக்கொண்டிருக்க வேண்டும். இது
மட்டுமல்ல, இன்னும் நாடகம், நாட்டியம், செய்திப்படம் என்பன தவிர பொதுவான
இலக்கியப் பிரச்சினைகள் பற்றியும். பார்க்கலாம்.
இப்போதைக்கு, 'யூமா
வாசுகியிலிருந்து......'என்று நான் இத்தொகுப்பின் தலைப்பைத் தொடங்குவது
ஒரு கோட்டின் தொடக்கத்தைக் குறிக்க. சு.சமுத்திரம் அக்கோடு முடியும்
புள்ளி. இக்கோட்டை பலவாறாக அர்த்தப் படுத்திக்கொள்ளலாம். இதன் பல
நிலைகளில், பரிமாணங்களில் பலவும் உண்டு. வண்ணங்களில், தரும்
சுவாரஸ்யத்தில், எழுத்துத் திறனில், இலக்கிய நோக்கில். தான் பெற்ற
அனுபவத்திலிருந்து அர்த்தம் பெறப்படுகிறதா, அல்லது வெளியிலிருந்து பெற்ற
அர்த்தம் அந்த அனுபவத்திற்குள் திணிக்கப்படுகிறதா, என்று பலவாறாக அவரவர்
பார்வைக்கேற்றவாறு பொருள் கொள்ளலாம்.
யாரையும் எதையும் இப்படித்தான்
பார்க்கவேண்டும், இப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்திக்க
முடியாது. எத்தனை மனித ஜீவன்கள் உண்டோ அத்தனை பார்வைகள் இருக்கும்.
இருக்கவேண்டும். நாமெல்லாம் என்ன அச்சு வெல்லமா, ஹமாம் சோப்பா? குணம்,
மணம், உருவம், நிறம் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க. இருப்பினும் இப்படி
நிர்ப்பந்திக்கும் குணம் நம்மை விட்டு நீங்க மாட்டேன் என்கிறது.
நான் பிறக்கும் போதே சங்கிலிப்
பிணைப்புடன் பிறந்தவன். சாதி. மற்றவர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள
குண்டாந்தடி. அதை நான் மறந்தாலும் மற்றவர் மறப்பதில்லை. அதெப்படி
மறப்பார்கள்? அது தான் அவர்களுக்குக் கிடைத்த வலுவான ஆயுதமாயிற்றே, என்
சுதந்திரப் போக்கு பிடிக்காதவர்கள் என்னைத் தாக்க. பின் நானே என்
வளர்ச்சியில் ஏற்றிக் கொண்ட சுமைகள். அவையும் என்னை எதிரியாக்கி
விடுகின்றன.
சென்னை வந்த புதிது. "நான் சோலை
சுந்தரப் பெருமாள். உங்களைப் பார்க்கவேண்டும்" என்ற தொலை பேசிக்குரல்
கேட்டது. வாருங்கள் என்றேன். புதிய அறிமுகம். ஒரு நாள் அந்தி நேரம்.
வந்தார். அவருடைய தஞ்சைச் சிறுகதைகள் தொகுப்பைக் கொடுத்து அதுபற்றி என்
கருத்தைச் சொல்லவேண்டும் என்று சொல்லிப் போனார். பெரிய தொகுப்பு. அதில்
என்னையும் க.நா.சு வையும் நாலு சாத்து சாத்தியிருந்தார். மூன்று நான்கு
இடங்களில். அவருடைய சார்பு முற்போக்கும் திராவிட இயக்கமும். அதற்கு
ஆதாரமாக அவர் என்னைப் பற்றி கூறியிருந்ததும், என் கருத்துக்கள் என
மேற்கோள் காட்டியிருந்ததும் முற்றிலும் தவறானவை. உண்மையில்லாதவை. ஆனாலும்
தொகுப்பின் பெரும்பகுதி இலக்கிய பூர்வமானது. அவருடைய உழைப்பிற்கு
சாட்சியாக முன்னிற்பது. அவரது சித்தாந்த கொள்கைச் சார்புகளும் கூட சோலைய
கைபிடித்து இழுத்துச் சென்றிருக்கின்றன தொகுப்பில். எதையும் மறைக்கவில்லை.
இரண்டையும் தெளிவாகச் சொல்லி எழுதினேன். அவர் எனக்களித்த மண்டகப்படியை
மறந்து விட்டதாகவும் சொல்லியிருந்தேன். அன்றிலிருந்து இன்று வரை அவர்
எழுதும் ஒவ்வொரு புத்தகம் பற்றியும் நான் எழுத வேண்டும் என்று
வற்புறுத்துவார். பின் அந்த மதிப்புரைகளை யெல்லாம் தொகுத்து புத்தகமாக
வெளியிடுவார். அத்தொகுப்புகளில் என் கருத்து மாத்திரம் தனித்து நிற்கும்.
ஏனெனில் என்னைத் தவிர மற்றெல்லோரும் அவருக்குச் சார்பான அரசியல்
சார்புடையவர்கள். அவர் எனக்கு நண்பர் தான். இந்த தொகுப்பிலும் அவரது
இரண்டு நாவல்களைப் பற்றி நான் எழுதியவை சேர்க்கப்பட்டுள்ளன. சோலை
பொறுத்ததை அவரது மூத்த முற்போக்கு அன்பர், தமிழ்ச் செல்வனால் பொறுக்க
இயலவில்லை. நான் ஏதோ தெருவில் 'சிவனே' என்று நடந்து போய்க்கொண்டிருக்கும்
தோழர் சோலையை வீட்டுக்குள் இழுத்து வைத்து அடித்துவிட்டது போல கோபம்
கொண்டு எனக்கு கட்டைப் பஞ்சாயத்து செய்துவிட்டார். இந்த அன்பர் சிறுகதை
ஒன்றை நான் மிக விரும்பி சாகித்ய அகாடமியின் ஹிந்தி வெளியீட்டுக்குத்
தயாரித்த இன்றைய தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பில் சேர்த்தேன். கதையின் பெயர்
பாவனைகள். எழுதியவர் தமிழ்ச் செல்வன். அவர் பாவனைகள் கதையைப் பார்த்த
கணம், தமிழ்ச் செல்வன் ஒரு முற்போக்கு என்பதைப் பொருட்படுத்த எனக்குத்
தோன்றவில்லை. ஆனால் தமிழ்ச் செல்வனுக்கு என் இலக்கிய நேர்மை ஒரு
பொருட்டல்ல. நான் முற்போக்குச் சார்பற்று இருந்தது அவரது பகைமைக்குப்
போதுமானதாக இருந்திருக்கிறது. மேலும் சோலையின் பெருந்திணை நாவலைப் பற்றி
என்னிடம் எழுதி வாங்கி சோலைதான் உங்கள் நூலகம் பத்திரிகைக்கு
பிரசுரத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் தமிழ்செல்வன்? சரி, நான் ஒருத்தன்
அவர் அணியில் சேர்ந்து சீருடை அணியாவிட்டால் என்ன நஷ்டம்? நோ. தப்பு.
எல்லோரும் கட்டாய ராணுவ சேவை செய்யவேண்டுமென்கிறார்கள். இது தான் தமிழ்
நாடு. அதன் அறிவு ஜீவிகள். எழுத்தாளர்கள். யாருடைய குரலும் சற்றும்
வேறுபட்டு விடக்கூடாது.
சு.சமுத்திரம் பற்றி எழுதியது
அவர் சாகித்திய அகாடமி இலக்கியப் பரிசு பெற்றதை முன்னிட்டு அகாடமியின்
Indian Literature -ல் எழுதியது. அதன் ஆசிரியராக அப்போது இருந்தவர் D.S.
ராவ், லா.ச.ரா பற்றி நான் எழுதிக் கொடுத்ததிலிருந்து என் நண்பர். என்
எழுத்தை மிக விரும்புகிறவர். நான் எழுதித் தான் ஆக வேண்டுமென்று கட்டாயப்
படுத்தினார். விருப்பமின்றி நண்பரின் கட்டாயத்திற்காக எழுதினேன் அவர் பல
வருடங்களுக்கு முன் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற தெலுங்கு எழுத்தாளர்
ஒருவரைப் பற்றி மட்டமாக எழுதப் போக வேலையிலிருந்து நீக்கப்பட விருந்தார்.
அவரைக் காப்பாற்றியது டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று சொல்லப்பட்டது.
அப்படியிருந்தும் மறுபடியும் ஆபத்தோடு இன்னொரு விளையாட்டில் இறங்குவதா?
அவர் வேலை பாதிக்கப்படக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட பாதகமாக இல்லாது
மறைமுகமாக கிண்டலாகவே சமுத்திரத்தின் எழுத்தைப் பற்றியும் பரிசு பெற்ற
புத்தகத்தைப் பற்றியும் எழுதினேன். அதைப் பிரசுரிக்க என் நண்பர் வேலையில்
இல்லை. சாகித்ய அகாடமி தலைமையோடு வேறு தகராறு செய்துகொண்டு அவரே வேலையை
விட்டுப் போனார். வேறொருவர் வந்து நான்கு மாதங்கள் ஏற்ற ஆசிரியப்
பொறுப்பில் என் எழுத்துக்கு அறுவை சிகித்சையெல்லாம் நடந்து பிரசுரம்
பெற்றது. 'சாமிநாதனே என்னைப் பாராட்டிவிட்டார். மற்றவர்களைப் பற்றி
எனக்குக் கவலை இல்லை' என்று சமுத்திரம்
சொல்லிக்கொண்டிருந்தார்/எழுதியிருக்கிறார் என்று கேள்விப் பட்டேன். அந்தக்
கட்டுரையும் இத் தொகுப்பில். எத்தகைய பாராட்டு அது என்பதை எல்லோரும்
படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இதெல்லாம் எப்படியோ போகட்டும்.
சு.சமுத்திரத்தின் எதிர்பாராத மரணம், அந்த விபத்து வேதனை மிகுந்தது.
விபத்தில் அடிபட்டுக்கிடந்த சமுத்திரம் உடன் கையில் பணமில்லாத காரணத்தால்
அவர் கவனிப்பாரற்றுக் கிடந்தார் ஒரு மருத்துவ மனையில் என்ற செய்தி,
கேட்பவர் இரத்தம் உறையச் செய்யும் செய்தி தமிழ் நாட்டின் கோரமுகத்தையே
காட்டிற்று. நிறைந்த அரசியல் செல்வாக்கும் வசதிகளும் கொண்ட மனிதருக்கே
அந்த கதி. உயிருடன் இருந்த வரை தன் உரிமைகளுக்கும் தனது உரிமை என்று அவர்
நினைத்துக் கொண்டவற்றிற்கும் உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர்
அவர்.
இதுதான் என் தமிழ் நாடு. இங்கு
நான் தொகுத்துள்ளவை அந்தப் புத்தகங்களைப் பற்றி மாத்திரம் சொல்வன அல்ல.
என் சமூகத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சொல்லும். அது தான்
எனக்கும், என் நாட்டுக்கும் மக்களுக்கும் இந்த எழுத்துக்களுக்கும் நான்
செய்து கொள்ளும் நியாயம்.
வெங்கட் சாமிநாதன்/ 29.11.06:
யூமா வாசுகி முதல் சமுத்திரம் வரை: (கட்டுரைத் தொகுப்பு): வெங்கட்
சாமிநாதன்: எனி இந்தியன் பதிப்பகம்: 102, எண். 57, பி.எம்.ஜி.
காம்ப்ளெக்ஸ், ஸௌத் உஸ்மான் ரோட், தி.நகர், சென்னை-17
-------------------------------------------------------------------------------------------------
k_alagirisami.jpg
இலக்கியம்!
கு. அழகிரிசாமி!
- வெங்கட் சாமிநாதன் -
கு.அழகிரிசாமி (1923-1970)
என்றொரு தமிழ் எழுத்தாளர் இருந்தார். அந்தக் காலத்தில் சிறுகதைகள்
எழுதியவராக அறியப்பட்டார். அவரைப் பற்றி நம்மில் சிலருக்கு நினைவு
இருக்கலாம். இளைய தலைமுறை அவர் பெயரைக் கேள்வி கூட பட்டிருக்க
மாட்டார்கள். 1950 களின் ஆரம்ப வருடங்களில் நான் ஒரிஸ்ஸா மாநிலத்தின்
புர்லா என்ற அணைகட்டு முகாமில் இருந்த போது இரண்டு புத்தகங்கள் சக்தி
காரியாலயத்தார் வெளியிட்டவை, அந்தக் காலத்துக்கு மிக அழகாக, ஆசையுடன்
தயாரிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள் வெளிவந்தன. ரகுநாதன் கதைகள்,
அழகிரிசாமி கதைகள் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். அப்போது அழகிரிசாமி
அப்படி ஒன்றும் பிரபலமான எழுத்தாளர் இல்லை தான். முப்பது வயதில் அதிகம்
எழுதாத, அதிகம் தெரியவராத ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு சிறப்பான
வரவேற்பு நம் வெளியீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது பற்றி இன்று
யோசிக்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது தான்.
அவ்வளவு அழகாக செய்நேர்த்தியுடன் அக்காலத்தில் சாதாரணமாக யாருக்கும்
பிரசுரம் கிடைத்ததில்லை என்று தான் நினைக்கிறேன். அதற்கு சில
வருடங்களுக்குள் கு. அழகிரிசாமி பற்றி க.நா.சு. பேச ஆரம்பித்து விட்டார்.
அழகிரிசாமியின் 'திரிவேணி', 'ராஜா வந்தான்' கதைகளைப் பற்றி அவர்
சிறப்பித்துப் பேசியிருக்கிறார். அதிகம் அறியப்படாத, பேசப்படாதவர்களைப்
பற்றிப் பேசி ஒரு சிறிய வட்டத்திற்குள்ளாவது சிறப்பாக எழுதுகிறவர்கள்
என்று தாம் கருதுகிறவர்களைப் பற்றி கவனத்தைத் திருப்பச் செய்திருக்கிறார்.
ஆனால், க.நா.சு வேகூட யார் என்று நினைவூட்ட வேண்டிய காலம் வந்துள்ளது.
தான் மறந்துவிட்ட மறைந்த
பெரியவர்களுக்கு சிலை எழுப்பி ஆண்டுக்கு ஒரு முறை மாலை சார்த்தி
சொற்பொழிவாற்றி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துத் தலைப்பை
உறுதிப் படுத்திக்கொள்ளும் தர்மத்தின் வழி என்று சொல்லத்தான் தோன்றுகிறது.
ஆனாலும், சாகித்திய அகாடமியின் பதிப்புகள், கு.அழகிரிசாமி கதைத் தொகுப்பு
ஒன்றும் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் கு.அழகிரிசாமி பற்றி ஒரு
சிறிய புத்தகமும் வெளிவந்துள்ளது, அவரது இளமைக்கால நண்பர் கி.ராஜநாராயணன்
சாகித்திய அகாடமியின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த காரணத்தாலும்
இருக்கலாம். எத்தனையோ பேர் என்னென்னவோ தமக்குச் செய்து கொள்கிறார்கள்.
ராஜநாராயணண் தம் நண்பரை நினைவு கொண்டு செய்த காரியம் நட்புக்கும்
இலக்கியத்திற்கும் செய்த சேவை என்று சொல்லவேண்டும்.
கு.அழகிரிசாமி சிறு கதை
எழுதியவராகவே அறியப்பட்டார். மலேயாவுக்கு அவர் சென்று தமிழ் முரசு
ஆசிரியராக பணிபுரிந்த காலம் அவர் அங்கு அழைக்கப்பட்டதும், அறியப்பட்டதும்
சிறு கதைக் காரராகத்தான். கு.அழகிரிசாமிக்கு இடைக்கால பிரபந்தங்களிலும்
கம்பனிலும் இருந்த ஈடுபாடு க.நா.சு வுக்கு தெரியும் அந்த ஈடுபாட்டுக்கும்
க.நா.சு.விடம் நிறைந்த மரியாதை இருந்தது. அது பற்றி அவர்
எழுதியுமிருக்கிறார். க.நா.சு. பெயரையே நான் திரும்பத் திரும்பச் சொல்லக்
காரணம், கு.அழகிரிசாமி பெயரை அவரைத் தவிர அவர் அளவுக்குப் பிரஸ்தாபித்து
பேசியவர் வேறு யாரும் எனக்குத் தெரியவில்லை.
கு.அழகிரிசாமி பற்றி சாகித்ய
அகாடமி பிரசுரத்திற்காக எழுதியிருப்பவர் வெளி. ரங்கராஜன். நாடகங்களில்
அதிக ஈர்ப்புக் கொண்டவர். வெளி என்ற ஒரு பத்திரிகையை நாடகத்திற்கென்றே
நடத்தியவர். சாகித்திய அகாடமியிடமிருந்து இம்மாதிரியான வாய்ப்புக்களைப்
பெற்று எழுதியுள்ளவர்கள் புத்தகங்களைப் பார்க்கும் போது பொதுப்
பணித்துறையிடமிருந்து சாலை போடும் குத்தகை பெற்றது போன்ற சமாசாரமாகத் தான்
இதையும் பார்க்கத் தோன்றும். அப்படி நினைபெழுந்தால் குற்றம்
சொல்வதற்கில்லை. ஆனால், ரங்கராஜனின் இப்புத்தகம் விதி விலக்கானது.
தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு நியாயம் செய்திருக்கிறார் என்று தான் நான்
நினைக்கிறேன். இப்படிப்பட்ட விதி விலக்குகள் தான் நடைமுறைக்கு சாட்சியம்
சொல்கின்றன.
பெரும்பாலும் அக்காலத்தில் கூட
சிறு கதைக்காராக மட்டுமே தெரிய வந்த கு.அழகிரிசாமியின் மற்ற பரிமாணங்களைப்
பற்றியும் ரங்க ராஜன் நிறைந்த ஈடுபாட்டுடன் எழுதியிருக்கிறார்.
அழகிரிசாமியின் ஆளுமையின் முழுமை நம்மை அழகிரிசாமியை வியப்புடன் எத்தகைய
உயர்ந்த மனிதர் தன் குறுக்கிய கால வாழ்க்கையை எவ்வளவு இடர்பாடுகளிடையேயும்
எவ்வளவு அழகும் அன்பும் துலங்க வாழ்ந்துள்ளார் என்று நினைக்க வைத்து
விடுகிறது. இலக்கிய உலகில் உறவு கொண்டவர்களோடும், நண்பர்களோடும்,
இவற்றுக்கெல்லாம் வெளியே எதிர்ப்பட்ட எதிர்படாது தம் வழிச்
சென்றவர்களோடும் சரி எத்துணை ஆதரவோடும் அன்புணர்ச்சியோடும் நெருங்கு
உணர்ந்து வாழ்ந்துள்ளார் என்பது சாதாரணமாக எழுத்தாளர் கலைஞர் பட்டயம்
சுற்றிக்கொண்டு நம்மைச் சுற்றியுள்ளோரிடம் இன்று நாம் காணமுடியாத
குணங்கள். இவையெல்லாம் அழகிரிசாமியின் தனித்வ குணங்கள் என்ற நிச்சயத்தோடு
அன்றைய கால கட்ட சூழலையும் ஒரு வேளை நாம் காரணம் காட்டலாம். ஒரு வேளை
தான்.
அவர் எழுதும் கதைகளும் அப்படி
ஒன்றும் லக்ஷக்கணக்கில் இல்லை, ஆயிரக் கணக்கில் கூட வாசக கூட்டத்தைச்
சொக்கி மயங்க வைக்கும் குணம் எதுவும் கொண்டதில்லை. வெகு சாதாரணம் என்று
வாசகர்கள் சொல்லக்கூடும் கதைகள் தான். ஏது சம்பவங்கள், உணர்ச்சி மிகும்
கட்டங்கள், அலங்கார நடைகள், கவர்ச்சிமிக்க வர்ணணைகள் இப்படியான மசாலா
எதுவும் அற்றது. அவர் சொன்ன கதையைத் திருபச் சொல்வது கூட கஷ்டம்.
மொத்தத்தில் உப்புச் சப்பற்ற என்று தான் சொல்லக் கூடும். எம்.டி. ராம
நாதனின் அடித் தொண்டை கரகரப்பை அவர் குரலின் மலைப்பாம்பு ஊர்தலைக் கேட்க
எத்தனை பேருக்குப் பிடிக்கும்? இப்படியெல்லாம் பட்டாசு வெடிகளோ, பட்டாடை
பளபளப்புகளோ, அவரிடம் இருந்ததில்லை. வெகு சாதாரண மனச் சலங்களை, சத்தம்
எழுப்பாது, வெகு சாதாரண வார்த்தைகளில் எழுப்பி மனத்தில் லேசான அதிர்வுகளை
எழுப்பி விடுவார். அதிர்வுகள் நம் மனத்தில் தான் மெல்ல மெல்ல எழும்பித்
தளும்புமே தவிர அவர் எழுத்தில் அவை மெல்லிய அலைகளாகத்தான் இருக்கும்.
எப்படித் தான் எழுதினாரோ என்று இருக்கும். மற்றவர் கைகளில் சப்பென்று
போய்விடக்கூடியவை அவர் எழுத்தில் வாசிப்பவர் மனதில் கரைசலைக்
கிளப்பிவிடும்.
கதைகள் என அவர் அதிகம்
எழுதியவருமில்லை. எழுதும் வாய்ப்புக்களும் மன நிலையும் அவருக்கு
இருந்ததில்லை. பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தால் என்ன நடக்கும்?
என்ன சாத்திய மாகும்? சக்தி, பிரசண்ட விகடன் போன்ற பத்திரிகைகளில் இருந்த
போது கட்டுரைகள் எழுதியது தான் அதிகம். நிறையவே எழுதியிருக்கிறார் என்று
இப்போது தெரிகிறது. அவை கவனிக்கப்படவில்லை என்பதும் தெரிகிறது. அதிலும்
அழகிரிசாமி தன் ஆளுமையை நன்கு பதித்துள்ளார் என்பதும் தெரிகிறது.
அவற்றிலிருந்து மாதிரிக்கு ஒன்றை சற்று விரிவாகவே தரவேண்டும்.
சென்னையில் காலை நேரத்தில் கேட்கு
இரண்டு குரல்களைப் பற்றி எழுதுகிறார். ஒன்று மொக்கு மாவு விற்கும் ஒரு
பெண். இரண்டு முள்ளங்கி விற்கும் இரண்டு சிறுவர்கள்: அவரே சொல்லட்டும்.
"ஏக காலத்தில் 'முள்ளங்கி,
முள்ளங்கி' என்று கூவுவது காலைக் காற்றில் கலந்து சிறிது தூரம் பிரயாணம்
செய்து, நான் குடியிருந்த வீட்டின் மாடியில் ஏறி, ஜன்னல் வழியாக ஏதோ தெய்வ
சுரங்களை மிழற்றிக்கொண்டும் என் அறைக்கு வரும். மற்றொரு குரல் தெய்வக்
குரலே தான். ..இந்தப் பெண் மொக்கு மாவு என்று கூவும்போது அந்தச் சொல்லில்
ஒரு எழுத்துக்கும் மற்றொரு எழுத்துக்கும் இடையில் எத்தனையோ அழகான இனிய
அசைவுகள். விம்மியும் மெலிந்தும் ஒலி வெளிப்படும்போது எத்தனையோ நெளிவுகள்,
அதை விவரித்து புரிய வைக்க முடியாது. எந்த சங்கீத வித்வானாலும் அது போல
கூவிக் காட்ட முடியாது........ஏதோ ஒரு பறவை தன் மழலை முற்றாத குரலில்
தாயைப் பார்த்துக் கூவுவது போல இவள் குரல் கேட்கும்......இவளை வெகு
நாட்கள் வரை நான் பார்க்கவில்லை. ஒரு நாள் அதிகாலையில் எழுந்து இவள்
வருகைக்காக நான் தெருவோரத்தில் வந்து நின்றுகொண்டேன். ...அவளும் வழக்கம்
போல வந்தாள். சுமார் 25 வயதுடைய பெண். அழுக்கு புடவை. சிக்கு விழுந்த
கூந்தல். மொக்கு மாவைத் துளாவியதால் வெள்ளைப் பொடி அப்பிய விரல்கள்.
குரலுக்கேற்ற அழகியல்ல அவள். அத்துடன் அருகில் நின்று கேட்கும்போது, அந்த
குரலில் இருந்த சுகம் முக்கால் வாசி மறைந்தும் விட்டது. அந்தக் குரல்
காற்றோடு கலந்து, காற்றோடு அசைந்து, எங்கெங்கோ முட்டி, எத்தனையோ
கரகரப்புகளை உதறிவிட்டு, அனேக எதிரொலிகளைப் பின்னணி இசைகளாக ஏற்றுக்
கொண்டு என் அறையில் புகும்போது தான் இனிமையாக இருந்தது. காற்றில் கலந்த
ஒலியின் மகிமை இது.
இப்படி நீள்கிறது அந்தக் கட்டுரை.
ஓசைகளையும் சங்கீதம் பற்றியும் கவிதை பற்றியும் எழுதும் போது, வார்த்தைகள்
குழைந்து குழைந்து வடிந்தோடி வருகிறது அவர் பேனாவிலிருந்து என்று தான்
தோன்றுகிறது. மேலே நான் முழுவதையும் கொடுக்கவில்லை. முன்னும் பின்னும்
மட்டுமல்ல, இடையிலும் வெட்டியிருக்கிறேன். அழகிரிசாமியின் கட்டுரைகள்
அத்தனையும் நமக்குக் கிடைக்கச் செய்யவேண்டும். சங்கீதம் பற்றிய அவர்
உணர்வுகள் அவராகவே கேட்டுக் கேட்டு தன்க்குள் பக்குவப் படுத்திக்கொண்டவை.
அது அவரதே. இதில் அவருக்கேற்ற சகா ராஜநாராயணன். இன்னொன்று சகாயம்
பக்கத்திலேயே விளாத்திகுளம் சுவாமிகளின் காருகுருச்சி அருணாசலத்தின்
ஸ்பிரசன்னங்கள். ஒரு இடத்தில் அவர் மிக காரசாரமாக சங்கீத பண்டித உலகம்
ஒருமனதாக ஏற்றுக்கொண்டிருப்பதை மறுக்கிறார். மேளகர்த்தா ராகங்கள் 32 தான்.
அதற்கான தன் வாதங்களையும் வைக்கிறார். "காந்தாரத்துக்கு சதுஸ்ருதி
ரிஷபத்தையும், நிஷாதத்துக்கு சதுஸ்ருதி தைவதத்தையும் சேர்த்துக்கொண்டு
கனகாங்கி என்று ஒரு ராகத்தை உண்டாக்கினார். ரிஷபம் எப்படி காந்தாரம்
ஆகும்?" என்று கேட்கிறார். மற்றவர்களைப் போல இதில் ஜாதி புகுவதில்லை.
புகுவது வாதம்.
இப்படி தான் ரசனையும், தன்
அனுபவமும் தான் வழிகாட்டலாகக் கொண்டு பல கேள்விகளை, சமூகம் ஏற்றுக்
கொள்ளாத கேள்விகளைக் கேட்கிறார். காரைக்கால் அம்மையாரையும்
திருவாசகத்தையும் கவிதையாக ஏற்றுக்கொள்ளும் அவர் பெரிய புராணத்தையும்
திருவிளையாடற்புராணத்தையும் ஏற்பதில்லை. கம்ப ராமாயணத்தை கவிதையாக ஏற்கும்
அவர் மனதுக்கு நம்மாழ்வார் பாசுரங்கள் கவிதையாகப் படுவதில்லை. அண்ணாமலை
ரெட்டியாரின் காவடிச் சிந்துக்கு முறையான பதிப்பு கொணர்வதில் மனம்
செல்கிறது அவருக்கு. தனிப்பாடல்களில் அவருக்குப் பிடித்தவற்றைத்
தொகுக்கிறார். அழிந்து வரும் பதங்களைத் தேடி அலைகிறார். தஞ்சையைச் சேர்ந்த
தாசி ஒருவரிடமிருந்து பழம் பரதப் பதங்களைச் சேர்த்து புதுமைப் பித்தனுக்கு
அனுப்புகிறார். கீர்த்தனங்களை விட பதங்களில் ராகத்தின் பாவங்கள்
தோய்ந்திருக்கப் பார்க்க முடிகிறது என்கிறார். இப்படி அவர் தனக்கு எனச்
சேர்த்துக்கொண்ட ரசனையும் பார்வையும் அவரதே. அவற்றில் அனேகம் வழமைக்கு
மாறானவை. Unorthodox and unconventional.
ராஜநாரயணனுக்கும் சுந்தர
ராமசாமிக்கும் அவர் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயுள்ளன. எதிர்கால பிரசுரம்
கருதி எழுதும் முன்னதாகவே மனத்துக்குள் வெட்டி, பட்டி வைத்து தைத்து
ஜாக்கிரதையாக தயாரிக்கப் பட்ட அலங்காரங்கள் அல்ல அவை. தான் விரும்பும்
தோற்றத்தை தரவல்லதாக அல்ல, உண்மையான அழகிரிசாமியின் மனக்குரலைப் பதிவு
செய்தவை அவை. அவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் ஏமாற்றங்களையும்,
போராட்டங்களையும் பற்றி நாம் அறிவது அவர் தம் நண்பர்களுக்கு முக்கியமாக
ராஜநாராயணனுக்கு எழுதியுள்ள கடிதங்களிலிருந்து தான். வேறு எங்கும் அவர்
சொல்லிக்கொள்வதில்லை. அவரை அறிந்தவர்கள் அவர் கஷ்டங்களை அறிந்தவர்கள்
இல்லை. அவர் கதைகள், கட்டுரைகள் அதைச் சொன்னதில்லை. எவ்வளவுதான் கஷ்டங்கள்
அவரை வருத்தினாலும், மகிழ்ச்சியாகவே, அவர் தன்னைக் காட்டிக் கொண்டார்.
அவ்வளவுக்கிடையிலும் அவர் தன் ரசனைக்கேற்ப வாழ்ந்து கொள்ள
முடிந்திருக்கிறது. அவரது ரசனைக்கு "தூங்கு மூஞ்சி மாமா" என்று எழுப்பும்
குழந்தைகள் இருந்தால் போதும். "மொக்கு மாவு" என்று கூவும் அழகே இல்லாத ஒரு
அழுக்குப் புடைவைப் பெண்ணின் தெருக் கூவல் முட்டி மோதி அவர் அறைக்கு
வரும்போது அது உதய கன்னியின் கீதமாக மாறிவிடும். கிட்டப்பாவின் எவரனி
ஆயிரம் தடவை கேட்டாலும் அலுப்பதில்லை. பன்னிரண்டு மைல் நடந்து விடிய விடிய
ராஜரத்தினத்தின் தோடியும், திருவீழி மிழலையின் 'ஸ்வர ராக ஸ¤தா"
கேட்க இருக்கும் போது எத்தனை வருத்தும் வாழ்க்கையும் இனிமையாகி விடுகிறது.
கொஞ்சம் சம்பளம் கிடைத்தாலும் போதும், தேவியும் டி.கே.சி. யும் இருக்கும்
போது அவர்கள் கவிதை பற்றி அளவளாவ இருக்கும் போது என்று எண்ணத்
தோன்றுகிறது. முக்கூடற்பள்ளு வைத் தேர்ந்தெடுப்பவருக்கும் விறலிவிடு
தூதுவும் விலக்கல்ல. ஆனந்த குமாரசுவாமியும் அன்னி பெஸண்ட் அம்மையாரும்
விலக்கல்ல.
ரசனையும் இன்பமும் வசதிகளினால்
வருவதல்ல. அவரது கதைகள், கட்டுரைகள், கடிதங்கள், அவர் தேர்வு செய்து கொண்ட
இடைக்கால பிரபந்த இலக்கியங்கள், சங்கீதம் எல்லாம் சேர்ந்து தான்
அழகிரிசாமி. எளிமையிலும் வாழ்வை ரசித்து மகிழும் ஆளுமை அவரது.
கு. அழகிரிசாமி (வெளி. ரங்கராஜன்)
சாகித்ய அகாடமி, குணா பில்டிங்ஸ், 443 அண்ணா சாலை, சென்னை-18:123
பக்கங்கள் விலை ரூ 25.
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
மறைக்கப்பட்ட உலகம்!
- வெங்கட் சாமிநாதன் -
ஊரோடு ஒத்து வாழத்தெரியாது
எனக்கு. இந்தத் தமிழ் மண்ணோடு சற்றுப் பிடிப்பில்லாத, இதைச் சுரண்டி
வாழும் ஒரு பாமரக் கோமாளி எனக்கு "ஸார்" ஆகிவிடமுடியாது, அவன் எனக்கு
எவ்வளவு பணம் கொட்டிக் கொடுத்தாலும்.ஸார் ஆனது மட்டுமல்ல. அவரது மெளனம்
என்னென்னவோவெல்லாம் பேசுவதாக மாய்ந்து போகிறார், அந்த முன்னணி எழுத்தாளர்.
யார் பெரிய கோமாளி என்று தோன்றுகிறது? ஒரு அரசியல் தலைமை கை ஸ்பரிஸத்தில்
கவிதை மின்ஸாரமாகப் பாய்கிறது என்று சொல்லி அத்தலைமை மனம் குளிரவைக்க
முயற்சிக்கமாட்டேன். அதிகார மமதை பிடித்த பத்திரிகாசிரியருடன் 'அட்ஜஸ்ட்"
பண்ணிக்கொள்வது அருவ்ருப்பாக இருக்கிறது எனக்கு. இப்படி எத்தனையோ
பலவீனங்கள் எனக்கு. . இந்த சங்காத்தமே வேண்டாம் என்று பத்து பதினைந்து
வருடங்கள் தமிழில் எழுத்துத் தொடர்பு அறுத்து தில்லி ஆங்கிலப்
பத்திரிகைகளில் எழுதி வந்தேன். சும்மா இருந்தவனை, இந்தியா டு டே சந்திக்கு
இழுத்துக் கேட்கவே, அப்போதைய தமிழ் எழுத்து பற்றி எழுதினேன். '"புதை
குழியிலிருந்து மீட்டு எடுக்கப்பட்டதாக," ஒரு பேராசிரியர், சித்தாந்தவாதி
என்னைப்பற்றி எழுதினது மட்டுமல்லாமல் என் எழுத்து மலம் துடைக்கத்தான்
லாயக்கு என்று தீர்மானம் நிறைவேற்றி அதை செயல்படுத்தவும் செய்தார்கள்,
அ.மார்க்ஸ் தலைமையிலான, கல்வியாளர், இலக்கியவாதிகள் கூட்டங்கள் இரு
இடங்களில். இவ்வாறான அவர்களது ·பாஸிஸ செயல்பாடுகளுக்குக் காரணம்,
நான் 'முற்போக்கு, திராவிட இயக்க இயக்கங்கள் தமிழ் நாட்டில் ·பாசிச
குணங்கொண்டவை என்றும் அவற்றில் உண்மை இல்லாத காரணத்தால் அவர்களிடமிருந்து
ஏதும் இலக்கியம் பிறக்கவில்லை' என்றும் சொல்லியிருந்தேன். என் கூற்றை
அவர்கள் தம் எதிர்வினையால் நிரூபிக்கத்த'ன் செய்தார்கள். மலம் துடைத்துத்
தன் எதிர்ப்பைக்காட்டும் பேராசிரியரை தமிழ் நாட்டுக்கு வந்தால் காணலாம்.
இத்தகைய வெள்ளத்தின் ஒட்டத்தில் நான் மிதந்து வாழமுடியுமோ? கரையேறி
தில்லியிலேயே இருந்தேன்.
ஆனால் 'கதா' நிறுவனம், தமிழின்
சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேட்டது. எனக்குக் கிடைத்த இரு
பெயர்களில், இருவரும் எனக்கு புதியவர்கள், தமிழில் அதிகம் அன்று
அறியப்படாதவர்கள் - சோ.தருமன் ஒருவர். 'நசுக்கம்" என்ற கதை. இரவில்
இருட்டில் திருட்டுத்தனமாக பட்டாசு வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட
சிறுவர் ஏதோ தேட மெழுவர்த்தி கொளுத்தப்போய் மருந்து வெடித்துச்
சாகின்றனர். ஏதும் கோஷங்கள் இல்லை. அரசியல் சீற்றங்கள் இல்லை.
சகஜமாக்கப்பட்ட இக்கோடூர நிலை ஆரவாரமற்ற சாதாரண நடையிலேயே சொல்லப்பட்டு
நம்மைப் பதறச் செய்துவிடுகிறது. ஒரு கொடுமை ஆரவாரமற்று சகஜமாக்கப்பட்ட
அன்றாட வாழ்க்கை நிலை வாழ்வுண்மை. அரசியல் கோஷமல்ல. இப்படித்தான் சோ
தர்மனின் கதை உலகம் பின்னரும் விரிகிறது. அவர் ஒரு தலித், பஞ்சாலைத்
தொழிலாளி என்பதெல்லாம் பின்னர்தான் தெரிய வருகிறது. 'நசுக்கம்" கதை
மற்றெல்லா மொழி பரிசுக்கதைகளையும் பின் தள்ளி, Economic Times
பத்திரிகையில் அகில இந்திய பதிப்பில் இடம் பெறுகிறது. தமிழில் சோ.தர்மன்
எழுத்துலகம் அறிந்தவராகிறார். இதை அடுத்து நம் தமிழகத்தின் பண்பாட்டுப்
பெருமை கூறும் ஒரு சம்பவத்தையும் சொல்லவேண்டும். 'கதா' பரிசுக்கான கதையாக
சாமிநாதன் 'நசுக்கம்' தேர்ந்தெடுத்துள்ளதை கதா சோ தர்மனுக்குச் சொல்ல, சோ
தர்மன் அதை தன் கோவில்பட்டி (நாமக்கல் கோழிப் பண்ணை போல, கோவில் பட்டி
எழுத்தாளர் பண்ணை) எழுத்தாள நண்பர்களிடம் சொல்லப் போய் ' சாமிநாதன்
பார்ப்பன வெறியனாச்சே, அந்த ஆள் உங்க கதைய தேர்ந்திருக்க மாட்டானுங்க,
வல்லிக்கண்ணனாத்தான் இருக்கணும், நல்லா விசாரியுங்க" என்று திரும்பத்
திரும்ப மறுத்திருக்கிறார்கள்
தருமன் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி.
தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர். தலித். இவரை இந்த இரு
வகையினரும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் இவ்விரு கட்சியினரும் பிடித்து
வைத்துள்ள அச்சுக்குள் அவர் அடங்கவில்லை. அவர் எழுதியது தான் அறிந்த
வாழ்க்கையை. அவ்வாழ்க்கை கட்சியினரின் அச்சுக்குள் பொருந்த மறுத்தது.
தூர்வை என்றொரு நாவல் தொடர்ந்தது. அது மினுத்தான் - மாடத்தி என்னும் தலித்
தம்பதியினரைச் சுற்றி உருளக்குடி கிராமத்து மக்களின் இரண்டு தலைமுறை
வாழ்க்கையை, கடைசியில் உருளக்குடி கிராமம் வரண்டு, தீப்பெட்டி
தொழிற்சாலைகளும் சாக்குக் கம்பெனிகளும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன.
நிலத்தில் உழைத்தவர்கள் இப்போது தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள்.
மினுத்தான் - மாடத்தி தம்பதிகள் தலித் சித்தாந்திகள் தயாரித்து
வைத்திருக்கும் மாதிரி சித்திரங்களாக இல்லை.
"மாடத்தியின் வீட்டுக்கு வரும்
மருமக, எத்தன தலமொறென்னாலும் இருந்து திங்கலாம்" என்பது உருளக்குடி மக்கள்
அறிந்தது. உருளக்குடி கிராமத்து வீடுகளின் 'குலுக்கை'களில் ரெண்டு மூணு
வருஷமாய் தானியம் அள்ளாமல் மக்கிப் போய் புழுப்பிடிச்சு, நாற்றம் அடித்து
மாவாகிப் போகிற அளவுக்கு செல்வம் பொழிந்த ஊர். மாடத்தி சாகக் கிடக்கிறாள்.
அப்போது சொத்தை தன் வளர்ப்புப் பிள்ளைக்கும் சக்களத்திக்குமாக பங்கு
பிரித்துக் கொடுக்கச் சொல்கிறாள்: "சும்மக்காடு நாலு குறுக்கத்தையும்,
கருப்பசாமி கோயில் தோட்டத்திலே தே மொடங்கிய அரக் குறுக்கத்தையும் அந்த பய
பேருக்கு மாத்திடு. வாக மரத்து புஞ்ச நாலு குறுக்கத்தையும் அவ (சீனியம்மா)
பேருக்கு எழுதிடு" என்று தன் புருஷன் மினுத்தானுக்குச் சொல்கிறாள். தன்
வீட்டுக்கு முன் நிற்கும் கருப்பியிடம் மாடத்தி சொல்கிறாள்: "ஏணம் கொஞ்சம்
பெரிய ஏணமாக கொண்டாரப்படாது? கூடக் கொஞ்சம் சோறு குழம்பு கொண்டு
போவியல்ல?" இதற்கு கருப்பி "இம்புடு போதும் தாயி, ஏராளம் தாயி, ஏராளம்."
இது ஒரு கால கட்டத்திய தலித்
குடும்பத்தின் சித்திரம். எல்லா தலித்துகளும் இப்படி என்றில்லை.
கருப்பிகளும் தான் இருந்தார்கள். ஆனால், தலித்துகள் வசதியான நில
உடமைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி தலித்தை வைத்துக்கொண்டு
மேல்சாதிக்காரர் கொடுமைகளை எதிர்த்து எப்படி போராடுவது என்பது தலித்,
முற்போக்கு சித்தாந்திகளின் நியாயமான வாதம். ஆனால் எனக்கென்னமோ "தூர்வை"
மிக முக்கியமான படைப்பு எனத் தீர்மானம்.
"அமைப்பு சார்ந்த எழுத்துக்களின்
மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த அமைப்புகளுக்கு அப்பால் விர்ந்து
பரந்த வாழ்க்கை யன்று இருக்கிறதாகவோ, அந்த வாழ்க்கை கட்சியின் கர்க்கஸ்
வேலைகளுக்கு அப்பல் வசப்படாமல் அது பாட்டிற்கு தன் போக்கிற்கு இயங்கிக்
கொண்டிருப்பதாகவோ இவர்கள் கருதுவதில்லை. அதில் அக்கரை கொள்வதும் இல்லை.
இவர்கள் சார்ந்த கட்சியின் கட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்ட ஜீவனற்ற ஒரு
சதைப் பிண்டமாகவோ, அல்லது உயிர்த்துடிப்பற்ற ஒரு களிமண் பொம்மையாகவோ தான்
பெரும்பாலும் அமைந்து விடுகிறது."...."இவர்கள் இலக்கியங்களில் வரும் கதா
பாத்திரங்கள் எவ்வித ஆசாபாசங்களும் அற்ற மரப்பாச்சிப் பொம்மைகளாய் வர்க்க
பஜனைதாசர்களாய் இருந்து வருகிறார்கள்...."என்னுடைய எழுத்துக்களை ஒரு சிலர்
தலித் எழுத்துக்களாகச் சித்தரிக்கிறார்கள். நான் பிறப்பால் மட்டுமே தலித்.
எழுத்தால் அல்ல. "இது வரை நமக்குக் காட்டப்பட்டுள்ள தலித் சித்திரங்கள்
ஒரு பக்கச் சார்புடையதாக, அழுக்கு உடை நாற்றமுடையவனாக, எளிதில் சோரம்
போகும் பெண்களாக, கை கட்டி நிற்பவர்களாக, கூலிக்காக மட்டுமே
போராடுபவர்களாக் காட்டப்பட்டுள்ளனர். இவையெல்லாம் இடதுசாரி மார்க்சீய
எழுத்தாளர்களின் கோணல் பார்வை. இதையே சில தலித் எழுத்தாளர்களும் செய்வத்து
தான் வேடிக்கை. தலித்தின் பன்முக வளர்ச்சி, ஆன்மா இவைகள் பதிவு செய்யப்பட
வேண்டும்."
என்றெல்லாம் சோ.தர்மன் தன்
விளக்கம் தந்துள்ளார்.
இதில் தகராறு என்னவென்றால்,
சோ.தர்மன் உருவாக்கியுள்ள பாத்திரங்கள், பொய் என்றோ கற்பனை என்றோ யாரும்
வாதிடவில்லை. குற்றம் சாட்டிவிடவில்லை. உண்மையாக இருந்தாலும் அவை
மறைக்கப்படவேண்டும், பதிவாகக் கூடாது. தங்கள் சித்தாந்த மாதிரிகள் தான்
சித்தரிக்கப்படவேண்டும் என்பது தான் அவர்கள் கொள்கை. ஆனால், முற்போக்கு
எழுத்தாளர்களுக்கு நேர் எதிர்மாறாக, தலித் எழுத்தாளர்கள் பெரும்பாலோர்
தமக்குத் தெரிந்த வாழ்க்கையையே, அநுபவங்களையே எழுதினார்கள். அவர்களை,
ஜாதி, வறுமை என்னும் சமூக பொருளாதார கொடுமைகள் வதைத்தன. அவர்கள் வதைபடுவது
அவர்களுக்குச் சற்று ஒரிரு படிகளே மேல் இருந்த பிற்படுத்தப்பட்டோர் என்று
தமக்கு பட்டயம் வழங்கிக் கொள்வதில் வெற்றி கொண்ட நாடார், தேவர், நாயக்கர்,
வன்னியர் ஜாதியினர். சித்தாந்திகள் தம் சாட்டையைச் சொடுக்க ஆசைப்பட்ட
பார்ப்பனர் எங்கோ தூரத்தில் தான் இருந்தனர். இதன் காரணமாகவே, சோ.தருமன்,
பூமணி, இமையம், போன்றோரை சித்தாந்திகள் அங்கீகரிக்க மறுத்தனர். தம்மை
தலித் சித்தாந்த திருமூலராக வரித்துக்கொண்டு தலித் இலக்கிய விதிகள் சமைத்த
பேராசிரியர் அ.மார்க்ஸின் தீர்ப்பைக் கேட்கலாம்:
"தீண்டாமை/சாதிகொடுமைகளின்
ஆணிவேராக விளங்குவது பார்ப்பனீயமே என்பதை அம்பேத்கர் அவர்கள்
அறுதியிட்டுக் கூறியுள்ள போதிலும், கிராமப்புறங்களில் நேர் அடியான
அனுபவங்கள் என்பன இந்த ஆழமான உண்மையை அறிந்து கொள்ளப்போதுமானதாக
இருப்பதில்லை. பிற்படுத்தப்பட்ட சாதியினரே அங்கே கொடுமைகளுக்கு உடனடிக்
காரணமாக நிற்கின்றனர். எனவே அவர்களுக்கு எதிராக அணி திரள்வதே தலித்களின்
உடனடி அரசியல் நடவடிக்கையாக மாறுகிறது. தாழ்த்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையோர் அகியோர் பார்ப்பனீயத்திற்கு எதிராக
ஒன்றிணைவது என்கிற தலித் அரசியலின் தொலை நோக்கான பார்வைக்கு இந்த
எதார்த்தம் இடையூறாக இருக்கிறது. நாடார்கள், நாயக்கர்கள், தேவர்கள்,
கோணார்கள்... போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினரின் தீண்டாமைக் கொடுமைகளை
அபிமானியின் சிறு கதைகளின் வாயிலாக படிக்கும்போது இந்த எண்ணங்கள் நமக்கு
மேலோங்குகின்றன." (நிறப்பிரிகை, 1994 பக்கம் -109)
சோ.தர்மனை நான் இப்போது
தேர்ந்தெடுத்த காரணத்தைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன். அவரும்
தனித்து விடப்பட்டவர். அதற்காக வருந்துபவரும் இல்லை. இழ்ப்புகள்
உண்டுதான். இழப்புகளைப் பற்றி எண்ணாது, தன் அனுபவங்களுக்கு உண்மையாக அவர்
எழுத்து இருந்து வருகிறது என்பது இன்றைய சூழலில் சிறப்பான் விஷயம்.
அந்த சோ தர்மனைத்தான் திரும்பவும்
அவரது சமீபத்திய நாவல் 'கூகை'யிலும் காண்கிறோம். திரும்பவும் இது
கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின்
இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் நிலத்தில் கூலி
வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில்
தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் ·பாக்டரிகளில்
மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை
முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி
பெயர்கிறார்கள் அல்லது இங்கு பாக்டரி முதலாளி ஆகிறார்கள். அவதாரங்கள் தான்
மாறுகின்றன. விதி மாறுவதில்லை. மாறாத விதி கொண்டவர்களுக்குத்தான் கூகை
குறியீடாகியுள்ளது. கூகை சக்தி வாய்ந்த பறவை. ஆனால் பகலில் கண்தெரியாது
அதற்கு. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி
வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது.
இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும்.
பிறந்த குழந்தையைக் காப்பாற்றிய
நன்றிக்கடனில் கூகை சீனிக் கிழவனுக்கு தெய்வமாகியது. கூகையைக் கும்பிடும்
அவன் கேலிக்காளாகிறான். அவனையும் அவன் பள்ளக்குடி சகாக்களையும் சீனி தன்
பணிவினால், சந்தர்ப்பம் அறிந்த அடக்கத்தினால் காப்பாற்றுகிறான்,
தேவர்களின் மேல் ஜாதி மிருகத்தன கொடுமையிலிருந்து. அவனும்
தப்புவதில்லைதான். நாவலின் தொடக்கத்தில் இரண்டு பள்ளக்குடி வாலிபர்கள்
கோவில்பட்டி புறநகர்ப்பகுதியில் உள்ள நாச்சியார் கிளப்பில் மற்றவர்க்குச்
சமதையாக பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிட்டு வரும் ரகசிய சாகஸச் செயலைக்
கண்டு பிடித்து விட்ட காவக்கார முத்தையா பாண்டியனிடம் செமத்தியாக அடி
வாங்குகிறர்கள் "நாறப்பயகளே ஒங்களுக்குக் கேக்குதோ கிளப்புக்கடச் சோறு,
அதுவும் பெஞ்சுமேலே உக்காந்து தொரகளுக்கு ஒய்யாரத்துலே சோறு."
ஜமீன'கட்டும், மற்ற பண்ணைக்காரர்களான நாயக்கர் தேவர் என்றில்லை, அவர்களின்
எடுபிடிகளின் கொடுமைகளுக்கும் ஆளாகவேண்டியிருக்கிறது. துட்டி சொல்ல மைல்
கணக்கில் நடந்து போகும் ஆளைக்கண்டு இரங்கி வண்டியில் ஏறச்சொன்னவர்கள்,
அவன் பள்ளன் என்று தெரிந்தது, அவனை உடனே வண்டியை விட்டு இறக்கி
விளாசுகிறார்கள் "துட்டி சொல்ல வார பறத் தாயோளிக்கு ஒய்யாரம் கேக்கோலெ"
பண்ணை ஆட்களுக்கும் போலீசுக்கும் தப்பி ஒடும் அப்புச்சுப்பன் (பள்ளன்)
ஏரித்தண்ணீரில் மூழ்கி ஒளிந்தவன், கரையில் பேச்சுக்குரல் கேட்கவும்
"சாமியோவ்" என்று கூவி தான் அம்மணமாக தண்ணீரில் இருப்பதால் வெளியே வர துணி
கேட்கிறான். அவர்கள் தூக்கி எறிந்த துண்டைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தவன்
தன் கதையைச் சொல்கிறான். தான் பகடை{சக்கிலியன்} என்று சொல்லிக்கொள்கிறான்.
அவர்கள் அவனுக்கு உடுக்க வேட்டியும் கொடுத்து சாப்பிட தேனீரும்
தருகிறார்கள். பனை ஓலை வழியாக தேனீர் ஊற்றப்படுகிறது பகடைக்கு.
அவர்களுக்கும் ஒரு பகடை சமம் இல்லை. ஆனாலும் அதை மீறிய மனிதாபிமானம்
அவர்களிடம் துளிர்கத்தான் செய்கிறது. சித்திரக்குடியில் அப்புச்சுப்பன்
எந்த தேவர் நாயக்கரிடமும் காணாத மனிதாபிமானம். முன்னர் வேறு ஒரு
சந்தர்ப்பத்தில் சொன்னதைத் தான் திரும்பச் சொல்லத் தோன்றுகிறது.
"மிருகத்தனம் ஜாதியின் குணமல்ல.
மனிதனின் குணம். ஜாதி இல்லாமலும் மிருகத்தனம் தனக்கு வேறு வடிகால்களைத்
தேடிக்கொள்ளும். ஜாதியை ஒழிக்கிறேன் என்ற கோஷ வடிகாலையும் அது
தேடிக்கொள்ளும்., இத்தலைமுறையில் நடப்பது போல. மனிதாபிமானம் உள்ள
மனிதிற்கு ஜாதி இருப்பதும் இல்லாமல் போவதும் ஒரு பொருட்டல்ல.
மிருகத்தனத்திற்கும் ஜாதி இருப்பதும் இல்லாததும் ஒரு பொருட்டல்ல.
எத்தடையையும் மீறி, மனிதாபிமானமும் சரி, மிருகத்தனமும் சரி தன்
வடிகால்களைத் தேடிக் கொள்ளும்."
கால மாற்றத்தில் நிலம்
படைத்தவர்கள் தம் நிலங்களை விற்றோ, குத்தகைக்குக் கொடுத்தோ
கிராமத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். நடராஜய்யரும் தன் நிலங்களை, அதில்
இதுகாறும் உழைத்துவந்த பள்ளக்குடிக் காரர்களிடம் ஒப்படைத்துவிட்டுப்
பட்டணம் போய்விடுகிறார். அவர் வருட முடிவில் வந்து தன் பங்கை வாங்கிக்
கொள்வார். சீனி, நடராஜய்யர் வீட்டிலிருந்து கொண்டே மேற்பார்வை செய்வான்.
அவர் பங்கு பிரித்துக் கொடுத்த அன்று அவர்கள் எல்லோரும் (பள்ளர்கள்)
அய்யர் வீட்டின் தாழ்வாரத்தில் அவர் முன் குந்தியிருக்க முடிகிறது. அவர்
வீட்டு தாழ்வாரத்தில் கோழி வளர்க்கமுடிகிறது. கிராமத்து மேல் ஜாதி மக்கள்
பள்ளர்களை ஒதுக்கி வைத்தபோது, அந்த வீட்டில் ஒர் கடை திறந்து நடத்த
முடிகிறது.; நடராஜ ஐயரின் மனைவி ராஜலட்சுமி அம்மாளின் படத்தை வைத்து
தெய்வமாக பூஜிக்கிறார்கள், சீனியும் அவன் தோழர்களும். ஏதோ விசாரணைக்காக
போலீஸ் அந்த வீட்டுக்குள் நுழையும்போது அவர்களைச் சீனி தடுத்து
விடுகிறான்." செத்தாலும் இங்கன சாவன ஒழிய பூட்ஸ் காலோட வீட்டுக்குள்ள
நுழைய விடமாட்டேன்" என்கிறான். "படியேறக் கால் கூசியது. பக்தனின் எல்லை
படிவாசல் தானே! பூசாரிக்குத்தான் தெரியும் கர்ப்பக்கிரஹத்தின் சூட்சுமம்.
சீனிக் கிழவன் பூசாரியானான். நடராஜ ஐயரின் வீடு கோயில். ஈசன், தேவி என
இரண்டு தெய்வங்கள். சீனிக் கிழவன் மெதுவாய் எட்டு வைத்து உள்ளே போனான்."
இது நடராஜ ஐயரின் நிலத்தில் வேலைசெய்த பள்ளர்களுக்கும் நடராஜ ஐயர்
தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவைச் சோல்கிறது. அய்யர் தம் நிலத்தை
அவரிடம் வேலை செய்த 80 பள்ளக் குடும்பங்களுக்கே பிரித்து விவசாயம் செய்து
கொள்ளச் சொல்லிப் போனது, மற்ற நில உடமைகளுக்குப் பிடிக்கவில்லை.
"முந்தியெல்லாம் கூப்ட்டா, கூப்ட்ட மாயந்த் தெரியாம நாய்க்கெணக்கா ஒடுன
பயக, இப்பப் பாரு எதுக்கு, என்ன வெசயம், ..இதெல்லாம் மப்பு ஏறுனதுக்கு
அடையாளம்ல். எல்லாத்துக்கும் காரணம் அந்த அய்யப்பய. அவன இங்கயே பூணுல
அத்திருந்தா வயக்காட்டப் பூராத்தையும் வித்திட்டுப் போயிருப்பான்.
அய்யர்னு கொஞ்சம் மரியாத காட்டப் போயி, வேண்டாத வேலையெல்லாம் பாத்திட்டுப்
போய்ட்டான். இப்ப இந்த பயக நம்மள மதிக்க மாட்டேங்கா"
இத்தகைய துவேஷம் காட்டாத மேல்
ஜாதி பண்ணைகளே அங்கு இல்லை. இதுவே பின்னால் திருட்டு அறுவடைக்கும்,
குடிசைகள் எரிவதற்கும், கொலைகள் பலவுக்கும், காரணமாகிறது. பள்ளர்கள்
எதிர்க்கவே கலவரம் மூள்கிறது. சித்திர குடியில் உள்ள ஜமீன், பண்ணைகளுக்கு
மட்டுமல்ல. கூகையைப் பற்றி எழுத வந்த தலித் சித்தாந்தி ஒருவருக்குக் கூட
இப்படி ஒரு நடராஜ ஐயர் தருமனிடமிருந்து வந்துள்ளது பிடிக்கவில்லை.
ஜமீனுக்கும் நாயக்கர், தேவர்கள் பண்ணைகளுக்குப் பதிலாக நடராஜ ஐயரும் ஒரு
கோரப்பற்கள் காட்டும் மிருகமாக படைத்திருந்தால் குதூகலப்பட்டிருப்பார்.
இவர்களில் மாதிரிக்கு ஒருவர் இவர் என, இவரது கருத்து: "நெருக்கடிகள்
வருகிற போது பொது நலத்தின் பெயரால் சுய நலத்தை மறைத்துக் கொண்டு
வினையாற்றி, அதன் வழி தங்களது முன்னேற்றம் அரசதிகாரத்தில் முதனிலைப் பங்கு
என நகர்வதில் இந்திய பிராமணர்கள் கவமாக இருந்துள்ளனர் என்பது வரலாறு. அந்த
வரலாற்றின் ஒரு கண்ணியாகவே இந்நாவலில் வரும் நடராசய்யர்
படைக்கப்பட்டுள்ளார்." அப்படித்தானா? இப்படித்தான் திரித்தல்கள்
வரலாற்றில் எழுதப்பட்டு வருகின்றன. பிராமணன் ஒருவன் ஈர மனதுடையவனாக
மனிதாபிமானம் உள்ளவனாக சொல்லப்படக் கூடாது. பிராமணனே எல்லாவற்றிற்கும் ஆணி
வேரானதால், கொடுமைக்காரன் எந்த இடைசாதிக்காரனாக இருந்தாலும், பிராமணனே
கொடுங்கோலனாக முன் வைக்கப்படவேண்டும். இரக்க மனதுள்ளவராக பிராமணர்களில்
ஒருவர் இருந்துவிட்டாலும் அது மறைக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில்
தலித்துகளும் நிலம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பது மறைக்கப்படுவது
போல.
எனக்கு இதெல்லாம் புதிய
செய்திகள். தூர்வையில் பார்த்த மாடத்தி மினுத்தான், கூகையில் காணும் நடராச
அய்யர், போன்றவர்கள் வரலாற்றில் இருந்திருக்கிறார்களா, கோபால கிருஷ்ண
பாரதியின் நந்தனாரும், ஐயர் ஆண்டையும் மூலப் பிரதிகளாக உருவாக்கப்பட்டு
நம் அடிமன ஆழம் வரை வேர் கொண்டுள்ளனர். சோ.தர்மனிடமே என் சந்தேகங்களைக்
கேட்டேன். 'அதெல்லாம் உண்மைதான் என்றும், 'எங்கள் ஊரில் இப்போது ஐயர்
நிலங்கள் என்று தான் சொல்வார்கள்" இதையெல்லாம் மறைக்கிறார்கள். மதுரை
வைத்திய நாத அய்யர் பற்றி எவன் இப்போது நினைத்துப் பார்க்கிறான்? அவர்
ஜாதியினரிடமிருந்தே எவ்வளவு எதிர்ப்பை சமாளிக்க வேண்டியிருந்தது,
அப்படியும் அந்தக் காலத்திலேயே சாதித்தது எவ்வளவு பெரிசு? இவர்கள்
மறைத்ததையெல்லாம், சொல்ல மறுப்பதையெல்லாம், இவர்கள் அழிக்க விரும்பும்
உண்மைகளையெல்லாம் தான் நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்." என்று அவர்
பதிலளித்தார், இரு வேறு சந்தர்ப்பங்களில், நேரிலும், தொலை பேசியிலும்.
அப்புச்சுப்பன் தலை மறைவாகப்
போகிறான். பேச்சியின் வீட்டுக்கு முன் இருந்த மரத்தில் ஏறி மறைந்து
கொள்கிறான். தேடி வந்த போலீஸ் மரத்தைச் சுற்றி வளைத்து டார்ச் அடித்துத்
தேடுகிறார்கள். மரத்தில் இருந்த கூடை அவர்களைத் தாக்கி விரட்டுகிறது.
அப்புச்சுப்பன் மரத்தின் மேல் இருக்கிறான் அவனை ஒன்றும் செய்யாத கூகை கீழே
இருந்து வளைத்த போலீஸை மாத்திரம் தாக்கும் மாயம் என்ன என்று தர்மனிடம்
கேட்டேன். இரவு நேரம். கூகைக்கு தன்னுடன் பழகிய ஆள் வேற்று ஆள் தெரியும்
அதான் விஷயம் என்றார். இதே போல தூர்வை நாவலிலும் தெய்வயானைப் பாட்டியைச்
சுற்றி, நாயின் குழைவுடன் நரி ஒன்று சுற்றி அலையும். பாட்டி வளர்த்த் நரி
அது. கஞ்சிக்கு குழைந்து நிற்கும் நரிக்கும் பாட்டிக்கும் இடையிலான
வக்கணைப் பேச்சுக்கள் மிக சுவாரஸ்யமாக் இருக்கும். இப்படி எத்தனையோ. நம்
ஒவ்வொருவரின் அனுபவக் குறுகலை மனதில் கொண்டால் போது. அதை மீறி நடப்பவை
மாயா ஜாலங்களாகத் தோன்றாது. வேண்டுமென்றே உண்மைகளை மறைக்க, அங்கீகரிக்க
மறுக்கும் சித்தாந்திகள், கட்சியாளர்கள் சமாச்சாரமே வேறு.
கூகை நாவல் நடப்பு வாழ்க்கை
என்னும் யதார்த்த தளத்தில் மட்டுமே தன் இருப்புக்கு எல்லை வகுத்துக் கொளள
வில்லை. கூகை ஒரு குறியீடாகி விட்ட பிறகு, குறியீட்டுத் தளத்திலும், சில
தருணங்களில் அமானுஷ்ய தளத்திலும் நாவல் ஊடாடுகிறது. தருமனின் மொழியும்
கவிதையோவென ஆங்காங்கே பல இடங்களில், உரு மாறுகிறது. சில இடங்களில்
அமானுஷ்யமாகவே இன்னமும் நமக்குத் தோன்றுகிறது. மற்ற எல்லா நிலங்களிலும்
வெட்டுக்கிளிகளும் புழுக்களும் பயிர்களைப் பாழ் செய்ய அய்யர் நிலத்தில்
மாத்திரம் பறவைகள் கொத்தி புழுக்களைத் தின்று பயிரைக் காக்கின்றன. சோ
தருமனிடம் ஜாதி பார்த்து துவேஷம் பிறப்பதில்லை. ஜாதியில் பிறக்காத மிருகத்
தனத்தைக் கண்டு சீற்றம் பொங்குகிறது.
தமிழ் சமூகத்தில், கோஷமாகிவிட்ட
பல 'புரட்சி'க் கருத்துக்களைச் சத்தமிட தைரியம் தேவை இல்லை.
இப்புரட்சியாளர்கள் வெள்ளத்தின் போக்கில் மிதப்பவர்கள். இதற்கு எதிராகக்
குரல் கொடுப்பதற்குத் தான் தைரியம் வேண்டும். அதில் இழப்புக்களும்,
உதாசீனமும், நிறைய எதிர்கொள்ள வேண்டியிருக்கும். புகழ்வதான தோற்றத்தில்
வரும் திருகல் விளக்கங்கள் தரும் அங்கீகாரமும் ஆபத்தானதும் பொயானதுமாகும்.
அதையும் தருமன் எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது.
நிலத்தில் கூலி விவசாயம்
செய்தவர்கள் இன்று நிலம் வரள, தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் கூலி வேலை
செய்ய தம் குஞ்சு குளுவான்களுடன் ஏறிச்செல்ல விடியும் முன்
பஸ்ஸ¤க்கு ஓடுகிறார்கள். காலம் மாறியுள்ளது. வதை படும் களம்
இவர்களுக்கு மாறியுள்ளது,. கூகை மற்றவர்கள் சொல்லாத உலகை தைரியத்துடன்
முன் வைக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
கருத்தும் பகைமையும்!
- வெங்கட் சாமிநாதன் -
ஐம்பதுக்களின் ஆரம்பத்தில்
எனக்குக் கிடைத்த முதல் கலை மனமும், இலக்கிய ருசியும் கொண்ட நண்பன், ஒரு
வங்காளி, மிருணால் காந்தி சக்ரவர்த்தி, எங்களிடையே இருந்த சுமார் ஆறு வருட
நட்பின் ஆழத்திற்கு வெகு சமீபத்தில் வரக்கூடிய ஒரு நட்பு எனக்கு
கிடைத்ததில்லை. அது அலுவலகத்தில் தான் ஒரு சிறு ஈகோ தகராறுடன் தொடங்கியது.
பின் அவன் தன் ஈகோவை மறந்து என்னுடன் நட்பு கொள்ள அதிக மணி காலம்
ஆகவில்லை. நெருக்கமான முதல் சம்பாஷணையை அவன் தொடங்கக் காரணமானது, அப்போது
நான் என் இருக்கையில் இருந்து கொண்டு படித்துக் கொண்டிருந்த புத்தகம்,
அல்டஸ் ஹக்ஸ்லியின் 'Ape and Essence'. இந்த நட்பின் தொடக்கமாக இருந்த
உரசலைப் பற்றி நான் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமயம் அவன் ஒரு
சம்பவத்தைக் கூறினான். சாந்தினிகேதனில் ரெவ். சி. எ·ப். ஆண்டிரூஸ்
படிப்பித்துக் கொண்டிருந்த காலம். சாந்தினிகேதனில் ஒரு நாள்
ரெவ்.ஆண்டிரூஸ் கையிலிருந்த புத்தகத்தில் கண் பதித்து நடந்த வாறே
படித்துக் கொண்டிருந்த போது, திடீரென ஒருவன் அவர் முன் எதிர்ப்பட்டு அவர்
தாடியை இறுகப் பிடித்து உலுக்கினானாம். திடுக்கிட்டுப் பார்த்த ரெவ்.
ஆண்டிரூஸ் அவனைக் கேட்டாராம். "யாரப்பா நீ? நான் உனக்கு எதுவும் நல்லது
செய்ததாக நினைவில்லையே அப்பா? உன்னை எனக்குத் தெரியவே தெரியாதே? பின் ஏன்
இந்த கோபம்?" என்றாராம். கேட்க இது வேடிக்கையாகத்தான் இருக்கும். சும்மா
தமாஷ¤க்காகக் கற்பித்துச் சொல்லப்பட்டது என்றும் தோன்றும். ஆனால்
இது ஒரு சில மனித மனோபாவங்களின் உண்மை.
பங்களாதேஷ் இந்தியாவுடன் இப்போது
கொண்டுள்ள பகைமை ஒரு உதாரணம். முப்பது வருடங்களுக்கு முன் இன்னொரு
முஸ்லீம் நாட்டின் கொடும்பிடியிலிருந்து விடுதலை பெற இந்தியா
உதவிவயிருக்கலாம். அது பழைய கதை. இன்று அது ஒரு கா·பிர் களின்
நாடு. என்ன இருந்தாலும் பாகிஸ்தான் தனக்கு பயம் தராத ஒரு சகோதர முஸ்லீம்
நாடு. ஆக, எந்த உறவின் ஆரம்பமும் எப்படி இருந்தது என்பதில் பிரச்சினை
இல்லை, உறவு கொள்பவர் இருவரின் மனோ பாவங்களைப் பொறுத்தது.
47-48 வருடங்களாகின்றன, நானும்
மிருணாலும் சந்தித்துக்கொள்ளவில்லையே தவிர, ஒருவருக்கொருவர் மிகவும் மனம்
கசியும் நினைவுகளுடனேயே இருக்கிறோம். சமீபத்தில் அத்தனை வருடங்களுக்குப்
பின் சந்தித்த தமிழ் நண்பர் அப்படித்தான் மிருணாலைப் பற்றி என்னிடம்
சொன்னார். இவை இரண்டு துருவ எல்லைகள். மறுபடியும் ரெவ். ஆண்டிரூஸ்
தாடிக்கு வந்த துர்கதிக்குத் திரும்புவோம்.
இன்னுமொன்று. ஜே;பி.எஸ் ஹால்டேன்
சூயஸ் பிரச்சினைக்குப் பிறகு கோபித்துக்கொண்டு இந்தியா வந்து தங்க
ஆரம்பித்தார். அப்போது அவர் கட்டுரைகள் கல்கத்தா பத்திரிகைகளில்
வெளிவரும். ஒரு கட்டுரையில், அவருடைய மனைவி ஒரு விஞ்ஞானிகள் கருத்தரங்கில்
தெரிவித்த கருத்துக்கள் கடும் கண்டனங்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது
என்றும், அன்று வீடு திரும்பிய திருமதி ஹால்டேன் அன்று அவர் கடும்
கண்டனத்துக்கு உள்ளானது கடைசியில் அவரையும் ஒரு விஞ்ஞானி என்று அவர்கள்
அங்கீகரிக்க வேண்டிவந்துவிட்டது என்று சொல்லி மிகவும் சந்தோஷப்பட்டார்"
என்று எழுதியிருந்தார். அது காறும் அவரது அங்கீகாரத்திற்காக, திருமதி
ஹால்டேன், பெண்ணீய வாதிகளிடம் முறையிடவில்லை. இதுவும் ஒரு கலாச்சாரம்.
நாம் கற்றுக்கொள்ளவேண்டிய கலாச்சாரம்.
இது தமாஷ¤க்கான கற்பனை
அல்ல என்பது நான் எழுத ஆரம்பத்திலிருந்து இன்று வரை எனக்கு பலமுறை என்
தமிழ் எழுத்தாள அன்பர்களில் பலர் ஆண்டிரூஸ் உண்மையைத் தான் அவர் வழியில்
சொல்லியிருக்கிறார் என்பதை எனக்கு நினைவுறுத்திய வண்ணமாக இருக்கிறார்கள்.
தில்லியில் எண்பதுகளில் என்னைப் பார்க்க விரும்புவதாகச் சொன்னவர்களிடம்
சில அன்பர்கள் " என்னத்துக்கு வீணா? அந்த ஆள் மேலேல்லே விழுந்து
பிடுங்குவான்?" என்று சொல்லித் தடுத்து விட்டதாக பின்னர் நேர்ந்த தற்செயல்
சந்திப்பில் சொன்னவர்கள் உண்டு. அப்படி யார் என்று சொன்னவர் என்று
கேட்டறிந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி அவர்கள் தம்
நண்பர்களைத் தடுத்தாட்கொள்ளும் வகையில் ஏதும் நிகழவில்லை. அப்படி ஏதும்
இந்த இடைத்தரகர்களை நான் பயமுறுத்தியதுமில்லை. அவர்களிடமில்லை,
மற்றவர்களிடம் காரசாரமாக கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்ததுண்டு. அது ஏன்
பகைமைக்கு இட்டுச் செல்லவேண்டும் என்பது எனக்குப் புரிந்ததில்லை. க.நா.சு
வோடு நிறைய நான் வாதிட்டிருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர் "அப்படியும்
சொல்லலாம்" என்பார். செல்லப்பாவோடும் தான். அவர் க.நா.சு. போல விட்டு விட
மாட்டார். ஆனால் இந்த காரசார விவாதங்கள் என்றுமே எங்களிடையே பகைமைக்கு
இட்டுச் சென்றதில்லை. கருத்துப் பரிமாற்றம் என்பது மிகவும் கொஞ்சப்
பேரிடம் தான் சாத்தியமாகியிருக்கிறது. 'சாமிநாதன் விஷயத்தை என்னிடம்
விட்டு விடு, அதிலெல்லாம் தலையிட வேண்டாம் " என்று க.நா.சு பதில் சொன்னது
என் காதில் விழுந்திருக்கிறது. "அவனோடு உங்களுக்கு என்ன பேச்சு? என்று
சொல்லப்பட்டிருக்க வேண்டும். இந்த மனோபாவம் தான் தமிழ் எழுத்தாள
சமூகத்தில் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியிருக்கிறது. தன்னைப் புகழ்
மறுக்கிறானா, வாதமிடுகிறானா, அப்போ அவன் தனக்கு எதிரிதான் என்ற மனோபாவம்.
சகஜமான, சினேக பூர்வமான கருத்துப் பரிமாற்றம் என்பது இங்கு
சாத்தியமில்லாது இருக்கிறது. ஒரு முறை வலம்புரி ஜான், க.நாசு.வின்
வீட்டில் அவரைச் சந்தித்து முன்னர் அவரைப்பற்றி தன் 'தாய்" பத்திரிகையில்
வசை என்று சொல்லும் தரத்தில் தாக்கியதற்கு மன்னிப்பு கோரியிருக்கிறார்.
க.நா.சு.வின் வழக்கமான பதில், '" அட சர்த்தான்யா, விடும்" என்பதுதான். இது
க.நா.சு.வோடு நெருக்கமாகப் பழகியவர்களுக்குத் தெரியும். கருத்துத்
தளத்துக்கு வளம் சேர்க்கும் ஆழமான கருத்துக்கள் தான் பயனுடையவை.
பரிமாறிக்கொள்ளும் இருவர் ஆளுமையையும் சிறப்பிப்பவை. க.நா.சு வை அறிந்து
கொள்ள முயலும் யாரும் இன்று வலம்புரி ஜான் என்ன எழுதியினார் என்று தேடிச்
செல்லப் போவதில்லை. கருத்துத் தளத்தில் வலம்புரி ஜான் இருந்ததே இல்லை. ஒரு
கட்டத்தில் ஒரு வட்டத்தில் பரபரப்பை உண்டாக்கியவர். அவ்வளவே.
தமிழ் நாட்டில் கருத்துக்கள்
பேணப்படுவதில்லை. கட்சிச் சார்புகள், வாசகப் பெருக்கங்கள், சாதி உணர்வுகள்
பேணப்படுகின்றன. தொடக்க காலத்தில், ஐம்பதுக்கள் அறுபதுக்களில், வாசகப்
பெருக்கம் ஒரு வாதமாக முன் வைக்கப்பட்டது. "என் எழுத்துக்களை
லட்சக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். ஒரு சிலரின்
முணுமுணுப்பை நான் பொருட்படுத்தப் போவதில்லை" என்பது பிரும்மாஸ்திரமாகக்
கருதப்பட்டது. அன்று அந்த பாக்கியத்தைப் பெற்றவர்கள் இன்று மறக்கப்பட்டு
விட்டார்கள். அடுத்த இருபது முப்பது வருடங்களுக்கு கட்சிச் சார்பு துணை
கொடுத்தது. முற்போக்கு என்று தன்னை அடையாளம் காட்டிவிட்டால் போதும்.
பிரசுரம் பெறுவது மிக சுலபம். பின் எழுதியதெல்லாம் பாராட்டப்படும்
முற்போக்கு எழுத்தாளர் சங்கங்கள் அனைத்தும் பாராட்டும். அதே போல
முற்போக்கு எழுத்தாளர் எவரையாவது நாம் அங்கீகரிக்காது போனால், வந்தது
வினை. அவர்கள் தயாராக வைத்திருக்கும் வசைகளை அத்தனையும் நம்மீது
வீசப்படும் தமிழ் நாட்டு முற்போக்குகள் அத்தனைபேரின் பகையையும் நாம்
சம்பாதித்ததாகும். சி.ஐ.ஏ ஏஜெண்ட் என்பார்கள். அமெரிக்க பணம் வருகிறது
என்பார்கள். பொய்க் குற்றச்சாட்டுக்களை கொஞ்சம் கூட தயக்கமில்லாமல்
வீசுவார்கள். எந்த சக முற்போக்கும் பொய் எனத் தெரிந்தும்
தடுக்கமட்டார்கள். இப்போதைய கட்டம் வெகுஜன ரசனையோ, முற்போக்கு கோஷங்களோ
செல்லுபடியாகாத கட்டம். இபோது அரசோச்சுவது, சாதிப் பற்றும் கும்பல்
மனோபாவமும். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒன்றொன்று. யாருடைய கருத்துமோ,
படைப்புமோ, செயல்பாடுகளோ பற்றிக் கவலை இல்லை. சாதி பார்க்கப்படுகிறது.
எந்த கும்பல் (clique) என்று பார்க்கப் படுகிறது.
முன்னர் வெகு ஜன ரசனையும்,
முற்போக்கும், திராவிட கட்சிக் கொள்கைகளும் சாதிக்காததை, இன்று தலித்
எழுத்தாளர்கள் சாதித்துக் காட்டுகின்றனர். அவர்களுக்கு வழி காட்டும்
சித்தாந்திகளோடு மோதிக்கொள்வதில்லையே தவிர வழிகாட்டப்படும்
சித்தாந்தங்களோடு தலித் எழுத்துக்களுக்கு ஏதும் உறவு இருப்பதில்லை. இதை
நான் சொல்லிக் காட்டுவதாலும், வேறு அடையாளங்களாலும், என் பாராட்டுக்களை
தலித் எழுத்தாளர்கள் பலர் மௌனமாக பெற்றுக்கொண்டாலும், அதை
வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். தனியாக என்னைச் சந்திக்கும்போது அவர்கள்
என்னிடம் சொல்வதை வெளித்தெரிய சொல்வதில்லை. தாடியைப் பிடித்து
உலுக்கவில்லை. எதிர்ப்பட்டால், ஒதுங்கிச் செல்கிறார்கள் என்று சொல்ல
வேண்டும். அவர்கள் கருணைக்கு என் நன்றி.
ஆனால், என்னால்
வழிகாட்டப்பட்டவர்களாக ஒரு காலத்தில் சொன்னவர்களுக்கு இன்று நான்
"அயோக்கியன்" ஆகியிருக்கிறேன். காரணம் நான் அவர்களுக்கு தொடர்ந்து
புஷ்பார்ச்சனை செய்யவில்லை. ஒரு சிலரின் இஷ்ட தெய்வத்தின் சன்னதிக்குச்
செல்லாததால் "ஞான சூன்யம்" ஆகியிருக்கிறேன். சொன்னவர்கள் இதற்கு பெண்ணீய
லேபிள் தந்து தனக்கு ஆதரவாக, கோரஸ் எழவில்லையே என்று குறைப் பட்டுக்
கொண்டிருக்கிறார்கள். முற்போக்குகள் போல பெண்ணீயம் யூனியனாக
செயல்படுவதில்லை. ரொம்ப செலெக்டிவ் அவர்கள்.
வெ.சாவிடம் முன்னர் இருந்த கோபம்
இப்போது இல்லை. குரல் மங்கி விட்டது என்று சொல்பவர்களில் ஒரு சாரார், தம்
முதல் புத்தகத்திற்கு என் பாராட்டுக்களைப் பெற்றவர்கள். அல்லது என்னிடம்
தாம் விரும்பும் அடையாளங்களைக் காணாதவர்கள். திறமை காட்டும் முதல் அடி
வைப்புக்கு என் ஆதரவு என்றுமே உண்டு. கன்றுக்குட்டியை யாரும் செக்கிழுக்க
வைப்பதில்லை. உழவு மாடாக்குவதில்லை. இது காறும் என் கோபங்கள் ராஜ பார்ட்
உடை அணிந்து கொண்டு ஆகாயம் நோக்கி மூக்கை உயர்த்துகிறவர்களை எதிர்த்துத்
தான். என் கோபத்தால் அவர்களுக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதில்லை. வாசகப்
பெருக்கம் குறைந்ததில்லை. பரிசுகளும் விருதுகளும் அவர்கள் தான்
பெறுகிறார்கள். ஒரு சில நண்பர்கள் என்னைக் கேலி செய்வதுண்டு. "என்னைத்
திட்டி எழுதுங்களேன், சாகித்ய அகாடமியோ, சங்கீத நாடக அகாடமியோ எனக்கு
பரிசு கொடுப்பார்கள்" என்று. என் கோபம் தணிந்துவிட்டது என்று
சொல்பவர்களைக் கேட்பேன், "உங்கள் புத்தகத்தைப் பாராட்டியது தவறு
என்கிறீர்களா? உம்மை செம்மட்டியை எடுத்து அடித்திருக்கவேண்டும்
என்கிறீர்களா? அப்படியானால் தான் நீங்கள் சொல்வதற்கு அர்த்தமும் பலமும்
இருக்கும்." என்று கேட்டால் ஒரு அசட்டுச் சிரிப்புத் தான் பதிலாகக்
கிடைக்கும். ஒரு வேடிக்கை. நான் கோபம் தணிந்து சாதுவான பிராணி ஆகிவிட்டேன்
என்று சொன்னவர் யாரும் தங்கள் கோபத்தை எங்கும் எதன் மீதும் காட்டியவர்கள்
இல்லை. ஒரு பத்திரிகை முதலாளி சொன்னதை, கட்சி சொன்னதை, தம் சாதி உணர்வு
சொல்வதை, தம் கும்பல் சொல்வதைச் செய்யும் ஏவல் பணியாளர்களாகவே
இருந்தவர்கள். பரிதாபத்துக்குரியவர்கள். அல்லது தம் கோபத்தை காற்றில்
கலந்து விடும் பேச்சுக்களில் பாதுகாப்பாகச் சொன்னவர்கள். தைரியமாக தம்
கருத்தை என்றும் எப்போதும் முன் வைக்காதவர்கள். They want me to draw
their chestnuts out of fire for them. இவர்கள் எட்ட இருந்து சுவைத்துச்
சாப்பிட நான் நெருப்பில் என் கைகளைச் சுட்டுக்கொள்ள வேண்டும் என்று
ஆசைப்படுகிறார்கள். சினிமா என்றால் என்ன என்று தெரியாத ஒருவரை விட்டு
என்னைத் தாக்கித் திருப்திப்பட்டுக்கொள்ளும் மலிவான யுக்தியைக் கையாள்பவர்
ஒருவர் தரமான சினிமா இதழ் நடத்துவதாகப் பெயர் பெற்ற ஒருவர். அவரது கட்சிக்
கருத்து வெளிப்பாடும், மறைமுகமான சாதி உணர்வும் இப்படித்தான்
வெளிப்படுகின்றன. பாராட்டு, திட்டு என்று இருவகைகளாகத் தான் புரிந்து
வைத்துக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் எழுத்தாளர் சமூகம். இந்த இரண்டு
வகைகளிலும் ஏதும் வாதமோ பார்வையோ இராது. இரண்டு வெற்று வார்த்தைகளே,
தி.க.சி. வல்லிக்கண்ணன் ரகம். இதையெல்லாம் பற்றிக் கவலைப் படாமல் என்
வழியில் நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.
ஆனால் ஆச்சரியம் தரும் வகையில்,
நான் தில்லிப் பத்திரிகைகளில் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் போதும்,
சாகித்ய அகாடமியில் சிலரிடமும், முற்றிலும் வேறு வகையான எதிர்கொள்ளலைப்
பெற்றிருக்கிறேன். மாற்றுப் பார்வைகளை, கருத்துக்களை வரவேற்கும்
மனோபாவத்தை எதிர்முனையில் இருந்தவர்களிடம் கண்டிருக்கிறேன். இது பற்றி
வேறு இடங்களில் முன்னதாகவே பிரஸ்தாபித்திருக்கிறேன். அவசியம் இருந்தால்
ஒழிய மறுமுறை திரும்பச் சொல்லவேண்டியதில்லை. சமீபத்தில் நிகழ்ந்த, நான்
சொல்லாத சிலவற்றைச் சொல்லவேண்டும். எனக்கு மிகவும் மன நெகிழ்வைத் தந்தவை
இவை.
எனக்கு 2003-ம் வருட இயல் விருது
தரப்பட்டதற்குக் காரணமானவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. கனடா
இலக்கியத் தோட்டத்துடன் சம்பந்தம் கொண்டிருந்த மகாலிங்கம் ஒருவர் தான்
எனக்குப் பழக்கமான பெயர். பழக்கம் 30 வருடங்களுக்கும் நிகழ்ந்தது. 'பூரணி'
இதழை எனக்கு வெ.சாமிநாத சர்மாவே நான் என்றெண்ணி அவர்) முகவரிக்கு அனுப்பி,
தொடர்பு கொண்டு, க.கைலாசபதி பற்றி நடையில் எழுதிய 'மார்க்ஸின்
கல்லறையிலிருந்து ஒரு குரல்" என்ற நீண்ட கட்டுரையைத் திரும்பப் பிரசுரம்
செய்வது பற்றி எனக்கு எழுதியது அவர். அவ்வளவே. பிறகு ஏதும் தொடர்பு
இருந்ததில்லை. அதற்குப் பிறகு டோரண்டோவில் தான் அவரைப் பார்க்கிறேன். வேறு
யாரையும் எனக்குத் தெரியாது. விருது அளிக்குமுன் பேசிய டோரண்டோ பல்கலைக்
கழக பேராசிரியர், மைக்கேல் டான்னொலி, சொன்ன வார்த்தைகளைச் சொல்ல வேண்டும்.
" நான் பரிசு அளிக்கவேண்டும் என்றார்கள். அதற்கு முன் யார் இந்த வெங்கட்
சாமிநாதன் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டாமா? என் மகனை கூகிளில்
இவரைப்பற்றி ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கச் சொன்னேன். "பாராட்டையோ,
கண்டனங்களையோ பற்றிக் கவலைப்படாமல், தனக்குப் பட்டதை தைரியமாக முன்
வைப்பவர்" என்று சொல்லியிருப்பதாகச் சொன்னான் என் மகன். "அட இது
நம்மாளைய்யா" (Hey, here is my kind of man!) என்று நான் சந்தோஷப்பட்டேன்"
என்றார். இந்த தேடலும், இந்த எதிர்வினையும் எத்தகைய கலாச்சாரம் அங்கு
பேணப்படுகிறது என்பதைச் சொல்கிறது, என்று நான் சந்தோஷப்பட்டேன்.
ஒரு நாள் திடீரென்று தொலைபேசி
அழைப்பு வந்தது. பாண்டிச்சேரி களம் அமைப்பினர், நாடகத் துறையைச் சேர்ந்த
இளைஞர்கள், எனக்கு நவீன நாடக சிற்பி என விருது அளிக்கவிருப்பதாகச் சொல்லி
பாண்டிச்சேரி அழைத்தனர். ஒரு பெரிய குழுவான அவர்களில் யாரையும் எனக்குத்
தெரியாது. என்னோடு விருது பெறுபவர்கள் கலை ராணியும், ராஜூவும். அவர்கள்
சரி. நான் எங்கு இங்கு வந்து சேர்ந்தேன்? ஒரு சிலவைத் தவிர நவீன நாடகம்
என்பது தமிழில் வெறும் கேலிக்கூத்து, பந்தா பண்ணும் விவகாரம் என்றெல்லவா
நான் சொல்லி வந்திருக்கிறேன். அப்படியிருக்க......தஞ்சையிலிருந்து
ராமானுஜம் பேசினார்: "அவர்கள் உற்சாகம் மிகுந்த இளைஞர்கள். உங்களிடம்
மரியாதை உண்டு. நானும் வருகிறேன். மறுக்காதீர்கள்" என்றார்.
பாண்டிச்சேரி போனால் அவர்கள்
என்னை பாண்டிச் சேரியில் கருத்தரங்கில், நாடக விழாக்களில்
பார்த்திருப்பதாகவும் பேசியிருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கு நினைவில்
இல்லை. களம் இளைஞர்கள் ஒரு பெரிய கூட்டம். விழாவுக்குச் சென்றபோது அங்கு
முன் வந்து என்னை மிக ஆர்வத்துடன் முக மலர்ச்சியுடன் வரவேற்றவர் எனக்கு
அறிமுகமில்லாதவர். மேடையில் என் பக்கத்திலிருந்த ராஜுவிடம் "அதோ அவர்
யார்? " என்று கேட்டதற்கு ராஜூ, "அவர் தான் வினோத், அவருடைய மாக்பெத்
நாடகத்தைப் பற்றி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், மிகக் கடுமையாகத் தாக்கி"
என்றார். திகைப்பும் ஆச்சரியமும் எனக்கு. கீழே பார்வையாளரின் முதல்
வரிசையில் உட்கார்ந்திருக்கும் வினொத், அவரைப் பற்றித்தான் பேசுகிறோம்
என்று யூகித்து, சிரித்துக்கொண்டிருக்கிறார். டெல்லி தேசீய நாடக மன்றம்
நடத்திய நாடக விழாவில், மிக மோசமான மாக்பெத் ஒன்று பார்த்ததும், அதை, "
ஷேக்ஸ்பியரை இவ்வளவு மோசமாக உலகில் வேறு யாரும் தயாரித்து இருக்கமுடியும்
என்று தோன்றவில்லை" என்றோ என்னவோ எழுதியிருந்தேன். அகில இந்திய மேடையில்
தமிழ் நாட்டிலிருந்து வந்த நாடகத்தை இப்படி தாக்கி எழுதப்பட்டிருந்தால்,
அந்த இயக்குனர் அதை சந்தோஷத்துடன் வரவேற்றா இருக்கமுடியும்? வினோதின்
முகத்தில் எந்த கசப்பையும் காணோம். "என்னிடம் உங்களுக்குக் கோபமே
இல்லையா?" என்று கேட்டேன். "உங்களுக்குப் பட்டதை எழுதியிருக்கிறீர்கள்?
அதற்கு நான் கோபிப்பானேன்?" என்றோ என்னவோ சொன்னார். எனக்கு விருது கொடுத்த
களம் குழுவில் அவர் ஒரு உறுப்பினர். அவர் எதிர்த்து ஒரு வார்த்தை
பேசவில்லை. மாறாக என்னிடம் மிகுந்த நட்புணர்வுடன் பழகினார். சென்னை வரை
காரில் அவரும் நானும் பேசிக்கொண்டே வந்தோம்.
அது போலத்தான் கருஞ்சுழி
ஆறுமுகமும். அவரது கருஞ்சுழி நாடகத்தை தில்லியில் பார்த்து, வட இந்திய
பத்திரிகைகள் அதற்கு உரிய மரியாதை கொடுக்காதது கண்டு, நான் அது பற்றி
Indian Express- ல் ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அது அவருக்கு மிகவும்
உதவியாக இருந்திருக்கிறது. கருஞ்சுழி ஆறுமுகம் என்றே அவர் அறியப்படும்
அளவுக்கு அது இந்தியா வெங்கும், உலகமெங்கும் எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு அவரது எந்த நாடகமும் எனக்குப் பிடித்ததில்லை. இருப்பினும்
அவருக்கு ஏமாற்றம் இருந்ததே ஒழிய, என்னிடம் அவர் பகைமை பாராட்டியது இல்லை.
ஆனால் அவரது நாடகங்கள், தயாரிப்புகள் எல்லாவற்றைப் பற்றியும் உயர்ந்த
அபிப்ராயம் கொண்டவர். "உங்களுக்கு சில விஷயங்கள் புரிவதில்லை" என்பது தான்
சிரித்துக் கொண்டே அவர் சொல்லும் பதில். நான் அவரைப் பாராட்டதற்காக,
"அயோக்கியன்" என்று கூச்சலிட்டதில்லை.
கலா ராணி விருது பெற்றவர்,
சந்திரா, நான் கடுமையாக நிராகரித்த பல நாடகங்களில் மையப் பாத்திரமாக
நடித்தவர், இவர்கள் பங்குபெற்ற எந்த நாடகத்தையும் பாராட்டும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்ததில்லை. ஆனால், இவர்கள் திறமையில் எனக்கு நிரம்ப
நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கையை இவர்கள் பங்கேற்பு எனக்குத்
தந்ததுண்டு. இவர்கள் என்னிடம் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்கள். நான்
பாராட்டவில்லையே என்று இவர்கள் என்னிடம் பகைமை கொண்டதில்லை.
நவீன நாடகச் சிற்பி விருது,
எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்த ஒன்று. அதன் பெயர் என்னவாக இருந்தாலும்.
'சிற்பி' என்ற பெயரில் தான், ஏதோ கழகக் கலாச்சார வாடை வீசுவதாகப்
படுகிறது. அது இப்போது தமிழ்க் கலாச்சாரமாகவே ஆகிவிட்டது. அனேகமாக, நாம்
ஒவ்வொருவருமே ஒரு சில வருடங்களில், எதெதற்கோ மன்னர்கள், சிற்பிகள்,
அரசுகள், ஞாயிறுகள், சுடர்கள், மேதைகளாகிவிடுவோமோ என்று தோன்றுகிறது.
போகட்டும். வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி தரப்பட்ட விருது இது. இது தான்
தமிழ்க் கலாச்சாரத்திற்கு விரோதமான செயல். பெறுவற்கு மிக உழைத்துப் பெற்ற
விருது அல்ல. உரிய விலை கொடுத்தும் பெற்றதல்ல. சிபாரிசுகள் தந்ததும் அல்ல.
எத்தனை பேர் இப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? ஆக, என் வழியில் நான்
இருந்துவிட்டுப் போகிறேன், மிச்சமிருக்கும் கொஞ்ச காலத்துக்கும்.
கௌரவிக்கத் தரப்பட்ட இந்த விருது
பல தரப்பட்ட தோற்றங்களைத் தரும் ஒரு வெண்கலச் சிலையாக, வந்து
சேர்ந்துள்ளது. ரொம்ப கனமானது. ஒன்றரை அடி உயரம், ஐந்து கிலோ எடையும்
கொண்டது, பீடத்தையும் சேர்த்து. பிரியமான இதை வைக்கும் இடம் தான்
தெரியவில்லை.
வெங்கட் சாமிநாதன்/5.9.06
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
என் வார்த்தைகள் சில, தொடங்கும்
முன்...
- வெங்கட் சாமிநாதன் -
'பாரபட்சமின்றி' என்னும்
மந்திர வாசகம் நம்மிடையே வெகு சகஜமாகப் புழங்கும் ஒன்று. இது தன்
குணமென்று சொல்லி ஒரு ஜரிகைத் தலைப்பாகையும் அங்கவஸ்திரமும் கொண்டு தம்மை
அலங்கரித்துக் கொள்வார்கள். "நான் பாரபட்சமற்றவன் என்று
சொல்லிக்கொள்ளவில்லை. பாரம் இருக்குமிடத்தில்தான் என் பட்சமும் இருக்கும்"
என்று க.நா.சு. சொல்வார். இப்படியான அதிரடியான உண்மைகளை அவரிடமிருந்து
நிறைய எதிர்பார்க்கலாம். உண்மை ஏன் அதிரடியாக இருக்கவேண்டும்?
அதிரடியாகத்தான் ஒரு சமூகத்தின் மேல் அது விழுகின்றதென்றால், அது
எப்படிப்பட்ட சமூகம்? நாம், தமிழர் இது பற்றி யோசிக்கவேண்டும்?
நானும் பாரபட்சமின்றி
இருப்பவனல்லன் தான். அதில் ஏதும் குணம் இல்லை. பாரம் இருக்குமிடத்தில் என்
பட்சமும் இருக்கும். ஈழத் தமிழரிடம் எனக்கு பட்சமுண்டு, வெகு காலமாகவே.
அனேகமாக, அது நான் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து என்று தான்
சொல்லவேண்டும். இதன் சாட்சியத்தை "தமிழ் நாடும் ஈழமும்" என்ற தலைப்பில்
நான் ஜனவரி, 1962 தேனருவி என்ற பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் காணலாம்.
அப்போதிருந்து இன்று வரை. இதை பலமுறை நான் வெளிப்படச் சொல்லியிருக்கிறேன்.
எழுதியுமிருக்கிறேன். "இந்த மனிதருக்கு ஈழத் தமிழ் எழுத்து பற்றி என்ன
தெரியும்? தெரியும் என்று காட்டிக்கொள்ள தன்னைத் தயார் செய்துகொண்டு
வந்திருக்கிறாரா?" என்று பரிட்சிக்கவே டோரண்டோவில் நடந்த கூட்டத்திற்கு
வந்ததாக ஒருவர் ஒரு கூட்டத்தினரின் பிரதிநிதியாக ஒரு வாக்குமூலம்
தந்துள்ளார். இம்மாதிரி மனிதர்களும் எந்த சமூகத்திலும் காணப்படுவார்கள்.
அவர்களிடம் காணும் பாரம் எதுவோ அதற்குத் தகுந்த பட்சம் என்னதாக இருக்கும்.
ஈழத்தவரிடம் எனக்கு பட்சம் உண்டு
என்றேன். அ.முத்துலிங்கம் போன்ற சல சலக்காத, துள்ளித் தளும்பாத அமைதியும்,
வெளிக்காட்டிக்கொள்ளாத ஆழமும், வீணையின் சன்ன இனிய ஒலி எழுப்பும் ஒரு
எழுத்தை நான் வேறு எங்கே காண்பது?. அந்த ஆழத்தை நான் என் அருகிலும்
காண்கிறேன். ஆனால் அதன் ஆழம் பயமுறுத்தும், பொறாமைத் தீயை எழுப்பும் ஆழம்.
புதுமைப் பித்தனுக்குப் பிறகு அத்தகைய கலை மேதமையை ஜெயமோகனிடம் மாத்திரமே
நான் காண்கிறேன். ஆனால் பெருமைக்குப் பதில் நம்மிடம் பொறாமைத் தீ
கங்குகளைத் தெறிக்கிறது. ஒவ்வொரு விசயத்திலும் பார்க்கலாம். வெற்றுச்
சவுடால்களும், வார்த்தை ஜாலங்களுமே நம் தலைமைகளில் பலரை, கண்ணகிக்குக்
கோவில் கட்ட பாறையைத் தாம் தான் கனக விஜயனின் தலைமேல் தூக்கி வைத்து
சந்தைக்கு மாட்டை ஓட்டி வருவது போல தமிழ் நாட்டுக்கு இட்டுவந்ததாகக்
கற்பனையில் ஆழச் செய்துள்ளது. மரீனா கடற்கரையில் வாளுயர்த்தி பாயும்
குதிரைமேல் தான் அமர்ந்திருக்கும் சிலை ஒன்றும் இத்தலைமைகளின் கனவில்
உண்டு. அதற்குத் தூபம் காட்டும் கட்சிக் கூட்டங்கள். இது நம்
பெரும்பான்மை. கடல் கடந்து அங்கு நான் சொன்ன கூட்டம் விதி விலக்கான
சிறுபான்மை. இது மனம் பேதலித்தவர்களாலேயே ஆன நாடு. அது அப்படிப்பட்ட
சிலரையும் கொண்ட சமூகம். அது தான் வித்தியாசம்.
நான் மிகைப்படுத்தவில்லை. கடந்த
25 வருடங்களாக உள்நாட்டுப் போரில் வீடுகளை இழந்து மக்களை இழந்து, வீட்டில்
அடுப்பு மூட்ட தீக்குச்சிகளை எண்ணிப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இரவு
நடமாட்டம் இல்லாத காரணத்தால் பிற்பகல் நேரத்தில் ஒரு நாற்சார் வீட்டில்
நாடகம் போடுகிறார்கள் ஈழத்து மக்கள். இங்கு மாக்ஸ் ம்யூல்லர் பவன் என்று
இடம் கொடுக்கும், எப்போது அந்த ·பவுண்டேசன் பணம் வரும், நாற்பது
பேரை அழைத்து ஒரு நாள் கூத்தாட என்று காத்திருப்பது முத்தமிழ் கண்ட தமிழ்
நாடு. டோரண்டோவின் பனிகொட்டும் காலை இருட்டில் வீடுகளுக்கு தினசரி
பத்திரிகை போட்டுவிட்டு, பகலிலும் இரவிலும் தொழிற்சாலை சென்று வேலை
பார்க்கும் மெக்கானிக்குக்கு கவிதை எழுத நேரமும் மனமும் கிடைக்கிறது.
அந்தக் கவிதை ·பாஸிச சக்திகளுக்கு எதிராக குரல் எழுப்புகிறது.
இங்கு ஆபாச சினிமா வசனம் எழுதி 'நான் பிழைக்கவேண்டாமா?' என்று நியாயம்
கற்பிக்கிறவர்களைக் கொண்டிருக்கிறது தமிழகம். இவர்கள் நமக்கு
'நட்சத்திரங்கள்" தம் மனச்சாட்சிக்கு எதிராகவே நியாயங்களையும் நாம்
கற்பித்துக் கொள்கிறோம்.
ஈழ மக்களிடையே அறுபதுகளில் தமிழ்
வாணனைப் போல கறுப்புக்கண்ணாடி அணிந்த தம் புகைப் படம் போட்ட பத்திரிகையில்
அதே டைப் கேள்வி பதில் சமாச்சாரங்களும் இருந்தன. இங்கு ஹிந்தி எதிர்ப்பு
நடந்த போது, அங்கும் ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி செய்ய ஒரு திராவிட
முன்னேற்ற கழகம் அந்நாளில் இருந்தது என்று கேள்விப்பட்டேன். பெரியார்
அங்கும் சென்று 'பாப்பான் ஒழிக' கூட்டங்கள் போட்டிருக்கிறார். ஒழிக்க
பாப்பான்கள் தான் அங்கு யாரும் இல்லை. இந்த வேடிக்கைகள் நடந்த நாடு தான்
இன்று குணம் மாறியுள்ளது. மொழிக்காக, தம் நாட்டுரிமைக்காக, சுதந்திர
வாழ்வுக்காக போராடுகிறது. நாடிழந்து புலம் பெயர்ந்தாலும் மொழியை இழக்கத்
தயாரில்லை அவர்கள். தமிழ் நாட்டில் தமிழ் பேசுவாரைத் தான் காணோம். உலகத்
தமிழ் நாடு நடந்தபோது நாம் அவமானப்படுத்திய ஐராவதம் மகாதேவனுக்கு அரங்க
நாயகம் அறக்கட்டளையின் முதல் பரிசை அம்மக்கள் அளிக்கிறார்கள். அவர்களும்
தமிழ் மக்கள் தாம். ஆனால் புலம் பெயர்ந்து விட்டார்கள். கணிணியில் தமிழ்
வாழ்கிறது அவர்களால். கணிணியில் தமிழ் பத்திரிகைகள் பெருக்கெடுத்துள்ளன
அவர்களால். முன்னோடிகள் அவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.
ஈழமக்களுடனும், கனடாவிலிருந்து
சிங்கப்பூர் மலேசியா வரை உள்ள தமிழ் மக்களோடும், அவர்கள் எழுத்துக்களோடும்
வாழ்க்கையோடும் பரிமாறல் கொள்ள வேண்டும். அது இப்போது சாத்தியமும்
தேவையும், என நான் நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் வாழும் தமிழ்
மக்களின் அன்றாட உறவாடல் வேற்று மொழிக்காரர்களுடன், கலாச்சாரத்துடன்
இருப்பதால் அதிலும் கொடுக்கலும் வாங்கலும் சாத்தியம், இருக்க வேண்டும்.
கருணாகர மூர்த்தி, திருமாவளவன், அ.முத்துலிங்கம், கலாமோகன், ஷோபாசக்தி,
சேரன் இப்படி பலருடைய எழுத்துக்களில் அந்த கலாச்சார மோதலும் ஒன்றிணைவும்
பதிவு செய்யப்படுகின்றன. தனித் தனித் தீவுகளாக நம்மை எண்ணிக்கொள்வது
கலாச்சார பாதுகாப்பாகாது. நம் தமிழகத் தமிழர்கள் இதுகாறும் பதிவு செய்யாத
சரித்திரத்தை தேவகாந்தன் பதிவு செய்கிறார். கௌரவிப்பதிலும்
சிறப்பிப்பதிலும் தமிழகம் காட்டாத நேர்மையை, அமெரிக்க விளக்கு
அமைப்பாளர்களும், கனடா இயல் விருது அமைப்பாளர்களும் தம் தேர்வில்
காட்டுகிறார்கள். அவர்கள் தமக்கே கிரீடம் சூட்டிக்கொள்வதில்லை. அவர்கள்
கௌரவித்தவர் எவரும் தகுதியற்றவர் இல்லை. இதையும் நாம் அவர்களிடமிருந்து
கற்றுக் கொள்ளலாம்.
இங்கு தொகுக்கப்பட்டுள்ள
எழுத்துக்கள் அனைத்தும் இத்தகைய ஒரு பாலமாக ஒரு பரிமாற்றமாக அமைகிறவை
தான். அவர்களும் எழுதுகிறர்கள், அவையும் சிறப்பானவை என்பதைச் சொல்வன.
அத்தோடு நம்மிடையே சிறப்பானவற்றையும் அவர்களுக்கு எடுத்துச் செல்லும்
பாலம் தான், பகிர்ந்து கொள்ளும் பரிமாற்றம் தான். இவற்றில் நாம் வெகுவாக
மதிக்கும் சில தமிழக கலைஞர்கள் இடம் பெறவில்லை. காரணம் நான் எடுத்துச்
செல்லவேண்டிய அவசியம் இல்லாதே அவர்கள் அங்கு பிரபலமானவர்கள் தாம். இதை
நான் தொடரும் உரையாடலின் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன். தமிழினியின்
மிகச் சிறப்பான வெளியீடுகளான, கொங்கு தேர் வாழ்க்கை இரண்டு பாகங்களையும்
தொகுத்த சிவகுமாரையோ ராஜமார்த்தாண்டனையோ, அல்லது அந்த தொகுப்பையோ புலம்
பெயர்ந்தவர்கள் அறியும் வாய்ப்பிருக்கும் என எனக்குத் தோன்றாததால் அவற்றை
அங்கு எடுத்துச் சென்றிருக்கிறேன். இது போலத்தான் என் தேர்வுகள்
இருந்திருக்கின்றன. இங்கிருந்து புத்தகங்களை மலேசியாவிலும் கனடாவிலும்,
ஐரோப்பாவிலும் விற்பதுடன் நம் அக்கறைகள் குறுகிவிடக்கூடாது. பரிமாற்றமும்
பெற்றதை உள்வாங்கி வளர்தலும் வேண்டும்.
வெளிவரவிருக்கும் கடல் கடந்து..
என்ற என் கட்டுரைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
ஆசை என்றொரு கவிஞர்!
- வெங்கட் சாமிநாதன் -
இடைவிடாத அணிலின் குரல்
தோட்டம் அணிலாக இருந்தது
அணிலைப் பார்க்கும் வரை
இந்த வரிகளைப் பார்த்ததுமே இது
கவிதை என்று உணர. வேறு அடையாளச் சான்றுகள் ஏதும் வேண்டியதில்லை. அணில்
கண்ணில் படாத வரை தோட்டம் தான் அணிலாக குரல் கொடுப்பதாகத் தோன்றும்.
சாதாரண நிகழ்வு தான். இப்படியெல்லாம் யோசித்ததில்லை. அப்படி
உணர்ந்திருந்தாலும் அதை கவிதை அனுபவமாக பதிவு செய்ததில்லை.
யாதொரு பிரயத்தனமுமின்றி
சட்டென்றொரு வெளியையும்
உனக்கென உருவாக்கிக் கொண்டாயே
எப்படி?
என்று ஒரு கேள்வியுடன் ஒரு
கவிதையைத் தொடங்குகிறார். யாரை? ஆதியும் அந்தமுமில்லாதவனென்று சொல்வோமே
அந்த ஆதியை. அந்த வெளி தான் கவிஞரின் வியப்பில் ஆழ்த்திவிடுக்கிறது.
உன் சிறு வெளியில்
நீ கொண்டிருப்பது
யாவருக்குமான பிரபஞ்சம்.
என்றும் வியக்கிறார். இந்த
கவிதையில் மாத்திரமில்லை, அனேக மாக இவருடைய கவிதை வெளியே 'சிறு
வெளி'யையும் பெரு வெளியான பிரபஞ்சத்தையும். ஒன்றினுள் ஒன்றை அடக்கியதாய்,
ஒன்றினிலிருந்து மற்றது வெளிப்படுவதான கணங்களில் தான் கவிஞரைப்
பெரும்பாலும் காண்கிறோம். அணிலின் குரல் தோட்டத்தின் குரலாவதும்,
தோட்டத்திலிருந்து அணில் வெளிப்பட்டு தோட்டம் பரந்து கவிந்து கொள்வதும்.
தோட்டம் அணிலின் குரலைத் தனக்காக்கிக் கொள்ளும் கணங்களே வியப்பின்
கணங்கள். கவிதை முடிகிறது இந்த மூன்று வரிகளில். அதே வியப்புடன்.
வியப்பை ஏற்படுத்துகிறது
இல்லாமல் போவது போல்
இல்லாமல் இருந்ததும்.
விடுபடல் என்ற கவிதையில் ஆகாயம்
ஆகாயம் என தன் அடையாளத்தைப் பெறுவது அந்த வெளியில் ஒரு சிறு பறவவையாவது
பறந்து சென்றால் தான். வானம் வானமாக இருந்ததற்கு எவ்விதத் தடையமுமில்லாமல்
போகிறது. பின் அது ஆகாயமில்லை. சூன்யம் தான்.
ஸ¥·பிகளும் ஜென்
துறவிகளும் தியானிக்கும் உலகும் வெளியும் இது என்று தோன்றுகிறது எனக்கு. .
கவிஞர் ஸ¥·பிகளையும் ஜென் ஞானிகளையும் ஆசை படித்துவிட்டுத்தான்
தன் கவிதைகளை எழுதுகிறாரா என்று கேட்டால், அவருக்கு இவர்களைத் தெரியுமா
என்பதே எனக்குத் தெரியாது. கவிஞரையும் நான் பார்த்தது கூட இல்லாத போது,
இக்கேள்விகளையெல்லாம் நான் எனக்குள் கேட்டுக் கொள்வதில்லை. எனக்குத்
தெரிந்தது இக்கவிதைகள் எனக்குச் சொல்வதன் மூலம் மானசீகமாக எனக்குத்
தெரியும் கவிஞரின் ஆளுமையும், அவரது அனுபவ உலகமும் தான்.
சக காத்திருப்பாளர்கள் என்று
கவிதையில் இறுதி யாத்திரை. பாடை எடுத்துக்கொண்டு போகும்போது சிக்னல் விழவே
காத்திருக்கிறார்கள். பக்கத்தில் அவரவர் வாகனங்களில் சிக்னலுக்காக
காத்திருப்போர். இறந்தவர் வீட்டார், மற்ற அன்னியர் எல்லோரும்
காத்திருக்கிறார்கள். பாடையும் காத்திருக்கிறது. இப்படி ஒரு காட்சியை நாம்
பார்த்திருந்தாலும் கவிஞருக்கு இந்த காட்சி தரும் அர்த்தத்தில் நாம்
பார்த்திருக்கவில்லை. உண்மையும் அது தான். எல்லோருமே காத்திருப்பவர்கள்
தாம். இன்று ஒருவர். மற்றவர்களும் 'சிக்னலுக்காக' காத்திருப்பவர்கள் தாம்.
நாங்கள் யாவரும்
காத்திருந்தோம்
பிணமொன்றின் கணத்தில்
சிக்னலுக்காக
ஆனால் அந்த நினைப்பு நமக்கும்
மற்றவர்களுக்கும் இல்லை.
எனக்கு நிறைய கவிதைகள்
பிடித்திருக்கின்றன. அவை எல்லாமே ஒரு அதைப்பை விட்டுச் செல்கின்றன.
ஒரு கவிதை பெரிய பொய், பெரிய
உண்மை பற்றிச் சொல்கிறது. 'பெரிய பொய் சக்தி வாய்ந்தது, பெரிய உண்மை
சக்தியற்றது', என்று சொல்லிச் செல்லும் அக்கவிதை இப்படியும் சொல்கிறது.
உண்மைதான். ஆனால் நாம் ஒப்புக்கொள்ள மறுப்பது. அரசும் மறுக்கும். நம்
தலைமைகளும் மறுக்கும்.
பெரிய உண்மை இருப்பிடம் ஏதுமற்றது
பெரிய பொய் உலகத்தையே
தன் காலுக்குக் கீழே கொண்டது.
இந்த உண்மை தமிழ்
நாட்டுக்குமட்டுமல்ல. உலகத்தில் அனேக இடங்களில் இது தான் உண்மை. செய்தித்
தாட்களின் தலைப்புச் செய்திகளில் தினம் தினம் சாட்சியம் பெரும் உண்மை.
இந்த கவிதையை அரசியல் தளத்திலும்
பொருள்படுவதாகக் கொண்டால், அந்த தளத்தில், கூடுதல் எண்ணிக்கை, முந்தி,
செய்தி, அமைதி, நாற்காலி போன்ற கவிதைகளும் இருக்கின்றன. ஒரு பரிகாசத்தோடு
தான் அரசியல் பார்க்கப்படுகிறது. அரசியல் கேலிக்கூத்தானால் வேறு என்ன
செய்வதாம். 'நாற்காலியை எதிர்த்தவன் கடைசியில் நாற்காலியில் குணங்கள் காணா
ஆரம்பித்து விடுகிறான்.
அவர்கள் தான்
கொண்டுவந்து போட்டார்கள்
நான் உட்காரவேண்டுமென்று
ஆசைப்பட்டார்கள்..
என்றவன்,
யோசித்துப் பாருங்கள்
நாற்காலி ஒன்றும்
அவ்வளவு மோசமான பொருள் அல்லவே.
என்று சமாதானமும் நியாயமும் பேச
ஆரம்பித்துவிடுவான். இது நமக்கு 50 வருட அரசியல் சரித்திரம்.
மிகப் பயங்கரமான எள்ளலை
குளம்படிகளின் சரித்திரம் என்ற கவிதையில் பார்க்கலாம்.
போரின் சித்திரத்தை
தெளிவாக உருவாக்க
குளம்படிகளைத் தவிர
வேறெதுவும் இல்லை
என்று தொடங்கும் ஒரு நீண்ட கவிதை
இப்படி முடிகிறது:
சரித்திரம் குளம்படிகளால்
எழுதப்பட்டு
காத்திருக்கிறது,
குளம்படிகளால் அழிக்கப்படவும்.
பெயரற்றவர்களின் புத்தகம்,
வேறொருவரின் கிழமை என்றும் சில கவிதைகள். சம்பந்தமில்லாத ஒரு இணைப்பினால்
தான் சிலவற்றின் இருப்பே உணரப்படுகிறது.
பெயரற்று வருகிறோம்
பெயர்களில் நுழைந்துகொள்கிறோம்
பெயர்களை விட்டுச் செல்கிறோம்
என்று தொடங்கும் கவிதை ஒரு பெரிய
விடம்பனத்தைப் பற்றிப் பேசுகின்றன. நம்மிடத்தை நம் பெயர்கள் தான்
ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பெயரற்றது இல்லாததாகிவிடுகிறது.
பெயர்களின்
மரங்களிடையே
பெயரற்ற வெளியில்
பறந்து செல்கின்றன
பெயரற்ற பறவைகள்.
இக்கவிதைகள் வாழ்வது உணர்வுகளின்,
காட்சி அனுபவங்களின் தியானங்களின் தளத்தில். அவற்றில் புதிய
பரிமாணங்களில், புதிய அர்த்தங்களில் நமக்கு நாம் பார்த்த காட்சிகளை நமக்கு
அறிமுகப்படுத்துகிறார், கவிஞர்.
கவிதை அனுபவங்களை மாத்திரமே
சொல்கிறது. படிமம், புதிய சொல்லாட்சி, வர்ணணை என்பது போன்ற அலங்காரங்கள்
ஏதுமற்று இக்கவிதைகள் தம்மை அடையாளப்படுத்திக்கொள்கின்றன. பார்வையில்,
அனுபவத்தில் ஆழமிருப்பின், எளிமையும் அழகாகவும், ஆழமாக உணரப்படும்.
மின்னல் வெட்டுத் தெறிப்புக்கு என்ன அலங்காரம் தேவை. அதுவே அனுபவமும்,
படிமமும் ஆகுமல்லவா. கடைசியாக ஒரு சின்ன கவிதை. இதைப் பற்றி நாம் நிறைய
யோசிக்கலாம். இந்த வரிகளை கவிதையாக்குவது எது என்று.
யாருமில்லாவிட்டாலும்
புகைப்படத்தில் இருக்கிறது
காலம்.
காலமும், பெருவெளியும் இவரது
கவிதைகளில் பிரதான்ய கவனம் பெறுகின்றன. அரசியலும் பரிகாசத்துடன்.
சித்து: (கவிதைகள்) ஆசை: க்ரியா,
H-18, Flat No சௌத் அவென்யு, திருவான்மியூர், சென்னை-41 ரூ 75
-------------------------------------------------------------------------------------------------
Frnakmccourt_a.jpg
teacherman_a.jpg
angelas_ashes.jpg
இலக்கியம்!
பூமியிலிருந்து தள்ளிவிடுவது!
- அ.முத்துலிங்கம் -
அந்த இளைஞனுக்கு வயது 19. அவன்
அயர்லாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு பெரும் கனவுகளோடு வருகிறான். அவனே
சொல்கிறான்,' என் ட்ரங்குப் பெட்டியில் ஒன்றுமில்லை. உடம்பில்
ஒன்றுமில்லை. மூளையிலும் ஒன்றுமில்லை. அப்படி இங்கே வந்து இறங்கினேன்.'
உண்மையில் அவனுடைய ட்ரங்குப் பெட்டியில் அவன் அயர்லாந்தில் தந்திசேவகனாக
வேலை செய்தபோது கிடைத்த சம்பளத்தில் பாதியை கொடுத்து வாங்கிய
பழைய சேக்ஸ்பியர் நூல் ஒன்று
இருந்தது.
அமெரிக்காவில் கூலி வேலைசெய்து
காசு சம்பாதிக்கிறான். எப்படியும் படிக்கவேண்டும் என்பதுதான் லட்சியம். பல
சிரமங்களுக்கு மத்தியில் நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து
படிக்கும்போது ஒரு சம்பவம் நடக்கிறது. விரிவுரையாளர், அவர்கள் வீட்டிலே
உள்ள ஒரு பொருள் பற்றி சிறு கட்டுரை எழுதிவரும்படி பணிக்கிறார். மற்ற
மாணவர்கள் டிவி, பேஸ்போல் மட்டை, கையுறை, கார் என்ற தலைப்புகளில்
எழுதியபோது
இவனால் ஒரேயொரு பொருளைப்
பற்றித்தான் சிந்திக்க முடிந்தது.
கட்டில்!
நான் சிறுவனாய் இருந்தபோது
என்னுடைய அம்மா, நானும் என்னுடைய மூன்று தம்பிகளும் படுத்து உறங்குவதற்கு
ஒரு கட்டில் வேண்டும் என்று தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு விண்ணப்பம்
செய்தார். அவர்கள் பழைய கட்டில் ஒன்றைத் தருவதாகச் சொன்னார்கள். என் அம்மா
புதுக் கட்டில்
கிடையாதா என்றார். அவர்கள் இல்லை
என்றார்கள். ஏதாவது வியாதி தொற்றிவிடும் என்று அம்மா பயந்தார் போலும்.
விடாப்பிடியாக இந்தக் கட்டிலில் ஒருவரும் சாகவில்லை என்று உறுதி
கூறமுடியுமா என்று கேட்டார். தொண்டு நிறுவனக்காரருக்கு கோபம்
வந்துவிட்டது. 'அம்மா, உங்களுக்கு வேண்டாமென்றால் தள்ளி நில்லுங்கோ.
மற்றவர்களைக் கவனிக்கவேண்டும்.'
அம்மா சரி சரி என்று வீட்டுக்குப்
போய் அவசர அவசரமாக கடைசித் தம்பியின் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு வந்தார்.
எங்களுக்கு தந்த மெத்தையில் குதிரை மயிர் நீட்டிக்கொண்டு நின்றது;
கட்டிலும் மூன்று பாகங்களாக பிரிந்து கிடந்தது. வண்டியில் வைத்து கட்டில்
துண்டுகளை வீதி
வழியாக தள்ளி வருவதற்கு
அம்மாவுக்கு வெட்கம். இரவிலே வரமுடியுமா என்று கேட்டார். தொண்டு
நிறுவனக்காரர் மறுத்துவிட்டார்.
மூன்று தடவை மேலும் கீழுமாக
அலைந்தோம். உடைந்த தள்ளுவண்டி வீதிகளில் கோணலாய்ப் போய் சிரமம் கொடுத்தது.
அதை இன்னும் மோசமாக்கியது மெத்தைக்கு கீழே இருந்து வந்த தம்பியின் அழுகை.
வீடு வந்ததும் மெத்தையை மேலே இழுத்துப் போக அப்பா உதவி செய்தார். ஆனால்
அவர் இரண்டு மைல் தூரத்தில் இருந்த தொண்டு நிறுவனத்துக்கு வர
மறுத்துவிட்டார். அவர் வடக்கு அயர்லாந்துக்காரர்; அவருக்கு கூச்சமாக
இருக்கும். அவருடைய ஊரில் கட்டில் கொண்டு வருவதற்கு வேறு வழிவகைகள்
இருக்கலாம்.
இந்தக் கட்டுரை அவருடைய
வாழ்க்கையை திசை திருப்பி விடுகிறது. விரிவுரையாளர் கட்டுரையை வகுப்பிலே
வாசித்துக் காட்டி சிலாகித்து பேசுகிறார். மாணவனுக்கு தன் தரித்திரத்தை
பகிரங்கப் படுத்தியதில் வெட்கம் இருந்தாலும் பெருமை பிடிபடவில்லை. முதல்
முறையாக அமெரிக்காவில் அவனுக்குள் நம்பிக்கை முளைக்கிறது.
பட்டப்படிப்பை முடித்துவிட்டு
வேலை தேடி அலைந்து, இறுதியில் ஆசிரியப் பணியை ஒப்புக் கொள்கிறார். இதுதான்
முதல் பள்ளிக்கூடம்; இதுதான் முதல் வகுப்பு. இங்கே மாணவர்கள் மிக மோசமாக
நடந்துகொள்வார்கள் என்று மட்டும் அவர் எச்சரிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் கண்ட காட்சிக்கு அவர்
தயாராக இருக்கவில்லை. வகுப்பிலே ஒருவராவது தன் ஆசனத்தில்
அமர்ந்திருக்கவில்லை. இவரையும் ஒருவரும் பொருட்படுத்தவில்லை. பெரும் சண்டை
அங்கே நடந்துகொண்டிருந்தது. கூரை உயரத்தில் பல பொருட்கள் பறந்தன.
பயிற்சிபெற்ற ஆசிரியரான இவர் வாயிலிருந்து வெளிப்பட்ட முதல் ஆசிரிய சத்தம்
'ஏய், ஏய்' என்பதுதான். ஆனால் சண்டை நிற்கவில்லை. மேலும்
உக்கிரமாகிறது. பறந்த பல பொருட்களில் ஒன்று இவர் முன்னே வந்து
விழுகிறது. சாண்ட்விச். இவர் சாவதானமாக அதைப் பிரித்து சாப்பிடுகிறார்.
உடனேயே சத்தம் அடங்கியது. எல்லோரும் திகைத்துப்போய் இவர் சாப்பிடுவதைப்
பார்க்கிறார்கள். சாண்ட்விச்சுக்கு சொந்தக்காரனுடைய வாயும்
திறந்திருக்கிறது. அந்த திறந்த வாய்க்குள் போகவேண்டிய சாண்ட்விச் இவருடைய
வாய்க்குள் போய் முடிகிறது.
சாண்ட்விச்சை சாப்பிட்டபோது தான்
படித்த கிராமத்துப் பள்ளிக்கூடத்தை நினைத்துக் கொண்டார். அங்கே அவருடைய
ஆசிரியர் தோடம்பழத்தைக் கொண்டுவந்து வகுப்பறையில் தோல் உரித்து
சாப்பிடுவார். மிக நல்ல மாணவனுக்கு அன்று அந்த தோல் பரிசாகக் கிடைக்கும்.
மாணவர்களுக்கிடையில் தினம் சண்டை நடக்கும், அந்த தோலை சாப்பிடுவதற்கு.
அந்த தோலிலும் பார்க்க இந்த சாண்ட்விச் ருசியாகவே இருந்தது.
தலைமையாசிரியர் முன்பு இவர்
நிற்கிறார். குற்றம், காலை ஒன்பது மணிக்கு வகுப்பில் மதிய உணவை
சாப்பிட்டது. அன்று முதல் நாள் என்றபடியால் இவர் மன்னிக்கப்படுகிறார்.
இரண்டாவது நாள். மாணவர்கள்,
பாடத்தை எப்படியாவது கடத்த வேண்டும் என்று இவரிடம் கேள்விமேல் கேள்வி
கேட்கிறார்கள்.
- நீங்கள் எங்கேயிருந்து
வருகிறீர்கள்?
- அயர்லாந்து.
- அங்கே என்ன இருக்கும்?
- ஆடுகள்.
- அயர்லாந்தில் அழகான பெண்கள்
இல்லையா?
- இருக்கிறார்கள்.
- அங்கே பெண்களுடன் நீங்கள்
வெளியே போவீர்களா?
- இல்லை, ஆடுகளுடன்.
இரண்டாம் நாளும் தலைமையாசிரியர்
முன் நிற்கிறார். 'எனக்கு முறைப்பாடு வந்திருக்கிறது, நீங்கள் ஆடுகளைப்
பற்றி தரக்குறைவாகப் பேசுகிறீர்கள் என்று.'
இரண்டு நாட்களில் இரண்டு
மன்னிப்புகள். இப்படி ஆரம்பித்த இவருடைய ஆசிரிய வாழ்க்கை நியூயோர்க்கில்
30 வருடங்கள் தொடர்கிறது. நாலு பள்ளிக்கூடங்களிலும், ஒரு கல்லூரியிலும்
கடமையாற்றிய தன் அனுபவத்தை ஒளிவு மறைவின்றி வாசகருடன் பகிர்ந்து
கொள்கிறார். இவர் எழுதிய புத்தகத்தின் பெயர் Teacher Man; ஆசிரியருடைய
பெயர் Frank McCourt.
அவர் பள்ளி ஆசிரியராக வேலை
பார்த்தபோது அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. சமுதாய அடுக்கில் ஆகக்
கீழ்மட்டத்தில் இருந்தார். அவருக்கு கிடைத்த கட்டளை மாணவர்களைக்
கட்டுப்பாட்டுக்குள் வைக்கவேண்டும். பயத்தைப் பரப்ப வேண்டும். பரீட்சை
வைக்க வேண்டும். விடைத்தாள்களை திருத்த வேண்டும். பாரங்களை
நிரப்பவேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள், நாளுக்கு ஐந்து பாடங்கள்.
முப்பது வருடங்கள். 12,000 மாணவர்கள்;
33,000 வகுப்புகள்.
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு
பெற்ற எட்டு வருடத்தில் அவர் Angela's Ashes என்ற புத்தகத்தை எழுதுகிறார்.
அப்போது அவருக்கு வயது 66. அதுவே அவருடைய முதல் புத்தகம். அது புலிட்சர்
பரிசை வென்றது. National Book Award ஐயும் பெற்றது. அதைத் தொடர்ந்து 'Tis
என்ற புத்தகத்தை எழுதுகிறார். இரண்டுமே சுயசரிதைப் புத்தகங்கள்.
திடீரென்று அவருக்கு உலகப் புகழ் கிடைக்கிறது. வெள்ளை மாளிகையில்
ஜனாதிபதியை சந்திக்கிறார். போப்பாண்டவரை சந்திக்கிறார். ரேடியோ,
பத்திரிகைகள், இலக்கிய இதழ்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரைப் பேட்டி
காணுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கும், நடிக நடிகையருக்கும்,
அரசியல்வாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொலைக்காட்சி இவரைப் பேட்டி காண்கிறது.
பள்ளிக்கூடப் பாடத்திட்டம் பற்றி இவரிடம் அபிப்பிராயம் கேட்கிறார்கள்.
நம்பமுடிகிறதா? கேவலம், ஒரு பள்ளி ஆசிரியரிடம் கேட்கிறார்கள்.
ஒரு முறை பிரிட்டிஷ் அரச
குடும்பத்தைச் சேர்ந்த கோமாட்டி Sarah Ferguson இவருடைய செவ்வியை பதிவு
செய்தார்.
-'நீங்கள்தான் நான் பேட்டிகாணும்
முதல் எழுத்தாளர்.'
-'நீங்கள்தான் என்னுடைய முதல்
கோமாட்டி.'
நியூயோர்க் உயர்நிலைப் பள்ளியில்
ஆசிரியராக கடமையாற்றும்போது இவர் அனுபவித்த வறுமை சிறுவயதில் அயர்லாந்தில்
அனுபவித்ததைவிட மோசமானதாக இருக்கிறது. அவர் இருந்த அறையில் ஆகக்குறைந்த
அடிப்படை வசதிகளே இருந்தன. சுடு தண்ணீர் கூடக் கிடையாது. கட்டணம்
செலுத்தாததால் ஒரு முறை மின்சாரத்தை வெட்டிவிடுகிறார்கள். குளிரில்
விறைத்து இறந்து போய்விடுவார் என்று பட்டது. இவரிடத்தில் மின்சாரத்தில்
வேலை செய்யும் போர்வை இருந்தது. கீழ்வீட்டு நண்பரிடம் கெஞ்சி, அவருடைய
மின்சார இணைப்பில் போர்வையை சூடாக்கி அதற்குள் படுத்துக் கொள்கிறார். பல
மாதங்கள் அப்படியே காலம் தள்ளிய பிறகுதான் மின்சாரக் கட்டணம் கட்டுகிறார்.
இன்னொரு முறை இவரிடம் கையில் 48
சதம்தான் இருக்கிறது. சாப்பிட்டால் ரயிலுக்கு காசு போதாது; ரயில் கட்டணம்
கொடுத்தால் பட்டினி கிடக்கவேண்டும். (புதுமைப் பித்தனுடைய 'கடவுளும்
கந்தசாமிப்பிள்ளையும்' கதையிலும் இப்படி ஓர் இடம் வரும்.) இவர் மூளையிலே
ஓர் எண்ணம் தோன்றுகிறது. மாணவர்களிடம் அவர்கள் படிக்கவேண்டிய புத்தகம்
ஒன்றை வாங்குவதற்காக பணம் சேகரித்து அந்தக் காசை ரயில் செலவுக்கும்,
உணவுக்கும் பயன்படுத்துகிறார். ஒரு வாரமாக இப்படி சமாளிக்கிறார். பிறகு
சம்பளம் கிடைத்ததும் மாணவர்களுக்கு புத்தகத்தை வாங்கிக் கொடுக்கிறார்.
அவருடைய மாணவர்கள் வாய் திறந்தால்
உலகத்து மூடத்தனத்தின் கூட்டுத் தொகை ஒரு படி கூடும் என்று சொல்கிறார்.
அவர்களைச் சமாளிப்பதற்கு சிறப்பான பயிற்சி தேவை. சக ஆசிரியர்களுக்கு
இப்படி ஆலோசனை வழங்குவார். 'வகுப்பிலே நீங்கள் படிப்பிக்கும்போது
உங்களுக்கு உதவி செய்ய ஒருவருமில்லை. ஒரு சக்திக்கு எதிராக வகுப்பிலே 125
சக்திகள். அவை எந்த நேரத்திலும் வெடிக்க தயாராக இருக்கும் குண்டுகள்.
அவர்கள் இளையவர்கள். அவர்களுடைய வேலை பெரியவர்களை இந்த பூமியில் இருந்து
தள்ளிவிடுவது. உங்கள் வேலை பூமியில் இருந்து விழாமல் தப்புவது.'
மக்கோர்ட் ஒரு பள்ளிக்கூடத்திலும்
நிலைப்பதில்லை. அடிக்கடி வேலையிலிருந்து நீக்கப்படுவார். வாயை
வைத்துக்கொண்டு சும்மா இருக்க அவருக்கு தெரியாது. அதிகாரிகளைக் கண்டாலும்
பிடிக்காது. பள்ளிக்கூடத்து விதிகளை உடைத்தபடியே இருப்பார். சீவார்ட்
உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கும்போது அவருடைய மனைவி கர்ப்பமாக
இருக்கிறார். ஆகவே வேலை போய்விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக
செயல்படுகிறார்.
இருந்தும் ஒருநாள்
தலைமையாசிரியருடன் மோதல் ஏற்படுகிறது.
'ஆ, மக்கோர்ட். உங்கள் மனைவி
கர்ப்பம் என்று அறிகிறேன்.'
'ஆமாம், கர்ப்பம்தான்.'
'ஆண் குழந்தையா, பெண் குழந்தையா
பிடிக்கும்?'
'எதுவாயிருந்தாலும் பரவாயில்லை.'
'பரவாயில்லையா? இரண்டுக்கும்
இடையில் வந்தால் என்ன செய்வீர்?'
'ஒன்றும் செய்யமாட்டேன். அதை
வளர்த்து தலைமையாசிரியர் ஆக்குவேன்.'
சொல்லவே தேவையில்லை. வெகு
சீக்கிரத்தில் மக்கோர்ட்டின் வேலை பறிபோய்விடுகிறது.
ஸ்டூவ்சென்ற் உயர்நிலைப்
பள்ளியில் படிப்பித்தபோதுதான் இவர் மிகவும் பிரபலமாகிறார். ஏனென்றால் இவர்
படிப்பிக்கும் முறையில் சித்திரவதை கிடையாது. மாணவர்கள் சுயமாக
சிந்திப்பதை ஊக்குவித்தபடியே இருப்பார். வீட்டு வேலைகளோ, பரீட்சைகளோ
எப்போதாவது ஒன்று இருக்கும். இங்கே இவருக்கு முழு சுதந்திரம்
கொடுத்திருந்தார்கள். இவருடைய வகுப்பிலே சேர மாணவர்களிடம் ஒரே போட்டி.
அவர்கள் தொகை நூற்றுக்கு மேலே போய்விடும். ஆசனங்கள் இல்லை. சிலர் ஜன்னல்
விளிம்பில் உட்கார்ந்துகொண்டு படிப்பார்கள்.
கற்பிக்கும்போது அலுப்பு
தரக்கூடாது என்று மக்கோர்ட் எப்போதும் புதிய வழிகளை புகுத்தியபடியே
இருப்பார். ஒரு நாள் மாணவர்களிடம் அவர்கள் வீட்டு சமையல் குறிப்புகளை
கொண்டுவரச் சொன்னார். சமையல் குறிப்புக்கும் இலக்கியத்துக்கும் என்ன
சம்பந்தம்? இவர் சமையல் குறிப்புகளில்
இருந்து புனைவு இலக்கியம் கற்றுக்
கொடுத்தார்.
இன்னொரு நாள் தனக்கு வந்த
மன்னிப்பு கடிதங்களை எல்லாம் சேகரித்தார். 'பதினாறு சக்கர ட்ரக் வண்டி
எங்கள் வீட்டுக் கூரையில் ஏறிவிட்டது.' 'மேல் வீட்டுக்காரரின் பைப்
உடைந்து கீழ் வீடு நிரம்பிவிட்டது.' 'ஆங்கில நோட்டுப் புத்தகம் ரயில்
வண்டியில் நூறு மைல் தூரம் போய்விட்டது.' மன்னிப்புக் கடிதம்
எழுதுவதில் மாணவர்களின் கற்பனையை எட்டாத உயரத்துக்கு தூக்கிவிடுவார்.
சோதனைக்கு அவர் தரும் தலைப்பு 'ஆதாம் மன்னிப்புக் கேட்டு கடவுளுக்கு
எழுதிய கடிதம்.'
குழந்தைகள் பாடலையும் விட்டு
வைக்கவில்லை. கவிதை ரசனை என்பதை அங்கேயிருந்து ஆரம்பித்தார். Little Bo
Peep தன்னுடைய ஆட்டைத் தொலைத்துவிட்டாள். பரவாயில்லை, ஆடுகளை சும்மா
விடுங்கள், அவை தானாகவே வீட்டுக்கு வரும். அவருடைய மாணவர்களுக்கும் அது
பொருந்தும். மாணவர்களை தொந்திரவு செய்யாதீர்கள். நெருக்காதீர்கள். போதிய
அவகாசம் கொடுத்தால், அவர்கள் தானாகவே சிந்தனையை வளர்த்துக்கொள்வார்கள்.
ஒரு நாள் ஒரு மாணவியின் தாயார்
இவரைப் பார்க்க வருகிறார். 'என் மகள் உங்கள் வகுப்பில் படிக்க
ஆசைப்படுகிறாள். நான் விதவை. அவளுக்காக என்னவும் செய்வேன். தயவு செய்து
ஓர் இடம் கொடுங்கள். வேண்டுமானால் ஓர் இரவு உங்களுடன் கழிக்க எனக்கு
சம்மதம்.' இப்படி பல சம்பவங்களை புத்தகம் முழுக்க சுவையுடன்
சொல்லிக்கொண்டே போகிறார்.
ஒரு பள்ளிக்கூட ஆசிரியரின்
முப்பது வருட வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்? இருக்கிறது.
ஆச்சரியம் என்னவென்றால் மக்கோர்ட்டால் சாதாரணமாக ஒரு வசனம் எழுதமுடியாது.
தேய் வழக்குகள், தேய்ந்த வார்த்தைகள் வராது. என்ன சொன்னாலும் அதை
புதுவிதமாக, மனதில் தைக்கும்படி சொல்லிவிடுகிறார்.
இன்னொரு காரணம் அவர் பெயரிலேயே
இருந்தது. Frank. எதையும் வெளிப்படையாகவே சொல்கிறார். ஒளிவு மறைவே
கிடையாது. சுயசரிதை எழுத்துக்கு இது மிகவும் முக்கியம். அவருடைய
உள்வாழ்க்கைக்கு எங்களை அழைத்துச் செல்லும்போது ஆரம்பத்திலேயே ஒருவித
அந்நியோன்யத்தன்மை கிடைத்து, அவர் சொல்லும் அனைத்தையும் நம்புகிறோம்.
அவரிடம் காணப்படும் நகைச்சுவை;
கூர்த்தமதி. உடனுக்குடன் அவர் கொடுக்கும் பதிலடிகள் நூல் முழுக்க
விரவியிருக்கும். எழுத்தில் எளிமை. இவருடைய மாணவர் ஒருவர் பெரிய பெரிய
வார்த்தைகளை எல்லாம் புகுத்தி கட்டுரை எழுதுவார். இவர் குறுக்காக வெட்டி
'எளிமை' என்று எழுதுவார். மாணவருக்கு கோபம் வரும். எத்தனை அகராதிகள்
பார்த்து, எத்தனை பெரிய வார்த்தைகளை அவர் இணைத்திருக்கிறார். அகராதியில்
ஒரு பெரிய வார்த்தை இருந்தால் அதை எப்படியும் அந்த மாணவர் தூக்கி
வசனத்தில் போட்டுவிடுவார்.
'எளிமையாக எழுது. ஒரு பெரிய
வார்த்தை இருந்தால் அது தன்பாட்டுக்கு இருந்துவிட்டு போகட்டும். உன்
எழுத்துக்கு பெரும் எதிரி செயற்கைத்தன்மை' என்று அவரை வழிப்படுத்துவார்.
மக்கோர்ட் இயற்கையாகவே நல்ல கதை
சொல்லி. எதைச் சொல்லவேண்டும், எந்த ஒழுங்கில் சொல்லவேண்டும் என்பது
அவருக்கு கைவந்தது. அவர் விவரிக்கும் சம்பவங்கள் சிரிக்கவைக்கும் அதே
சமயத்தில் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் அடிமனதைப் போய் தொட்டுவிடும்.
மக்கோர்ட்டுக்கு இப்போது வயது 75.
மூன்று புத்தகங்கள் எழுதிய களைப்பில் ஓய்வாக இருக்கிறார். விரைவில் நாவல்
ஒன்று எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார். சமீபத்தில் நிருபர் ஒருவர்
அவரைப் பேட்டி கண்டபோது அவரிடம் வெளிப்பட்ட எள்ளலும், நகைச்சுவையும்
எப்பொழுதும்போல் இன்றைக்கும் கூராகவே இருக்கிறது.
'உங்களுக்கு, நீங்கள் எழுதிய
Teacher Man புத்தகம் பிடித்திருக்கிறதா?
'பிடிக்கவில்லை. சுத்தமாகப்
பிடிக்கவில்லை. ஆனால் வெளியீட்டாளருக்கு பிடித்திருக்கிறது. எடிட்டருக்கு
பிடித்திருக்கிறது. வாசகருக்கும் பிடித்திருக்கிறது.'
'உங்களுக்கு பிடித்த
எழுத்தாளர்கள் யார்?
'சேக்ஸ்பியர், ஜேம்ஸ் ஜோய்ஸ்,
மார்க் ட்வெய்ன். ஆனால் நான் என் படுக்கைக்கு பக்கத்தில் வைத்திருப்பது
P.G.Wodehouse தான்.'
'உங்களுடைய Angela's Ashes
புத்தகத்தை உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் பாடப் புத்தகமாக
வைத்திருக்கிறார்கள், தெரியுமா?'
'நல்லது. தயவுசெய்து அவர்களிடம்
சொல்லுங்கள் அதில் பரீட்சை வைக்கவேண்டாம் என்று. அது ஒரு சித்திரவதை
ஆயுதம் அல்ல; மகிழ்ச்சியூட்டும்
புத்தகம்.'
'உங்கள் புத்தகத்தை மேலோட்டமாகப்
படிக்கக்கூடாது. நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதை அடி ஆழத்தில்
கண்டுபிடிக்கவேண்டும்.'
'அப்படியா! அதைக்
கண்டுபிடித்ததும் எனக்கும் சொல்லுங்கள்?'
ஒரு படைப்பு அதைப் படைத்தவரிலும்
பார்க்க உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். எந்தவொரு
படைப்பாளியைப் பார்க்கும்போதும் எனக்கு அப்படியான உணர்வுதான் தோன்றும்.
அவருடைய படைப்பு அவரை மிஞ்சியதாகவே இருக்கும். மிகச் சில படைப்பாளிகள்
தங்கள் படைப்புகளிலும் பார்க்க சிறந்த ஆளுமையுடன் காணப்படுவதும் உண்டு.
ஆனால் •பிராங்க் மக்கோர்ட்டைச் நான் சந்தித்த இரு தடவைகளும் அவர் இந்த
விதிகளுக்குள் அடங்கவில்லை. அபூர்வமான ஒருவராகவே காணப்பட்டார். அவருடைய
பேச்சு, அவர் எழுதிய புத்தகம் அளவுக்கு அதே சுவாரஸ்யத்துடன் இருந்தது.
கேள்விகளுக்கு பதில் அளித்தபோது சபை விழுந்து விழுந்து சிரித்தது. பதில்
நகைச்சுவையாக மட்டுமில்லை, அறிவை தூண்டிவிடுவதாகவும் இருந்தது.
அவரிடம் புத்தகத்தில் கையெழுத்து
வாங்கினேன். சேர்ந்து படம் பிடித்துக் கொண்டேன். முற்றிலும் வேற்று ஆளாக
இருந்தார். அவர் புத்தகங்களில் காணப்பட்ட கனிவும், நேசமும் அவரிடம் இல்லை.
முகத்தில் வெறுப்பும், சலிப்பும் மட்டுமே எஞ்சி இருந்தன. நான் சந்தித்த
மனிதர், அவருடைய புத்தகத்தை படிக்கும்போது என் மனதிலே நான் எழுப்பிய
உருவம் அல்ல.
பல சமயங்களில் எனக்குத் தோன்றும்
ஒரு எழுத்தைப் படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என்று. இனிமேல்
மக்கோர்ட்டை எங்கே கண்டாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில்
போவேன். இவர் புத்தகத்தை எங்கே கண்டாலும் உடனேயே வாங்குவேன்.
-------------------------------------------------------------------------------------------------
vallikkannan_d.jpg
இலக்கியம்!
வல்லிக்கண்ணன் நினைவில்...
-வெங்கட் சாமிநாதன்-
வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார்.
எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான்.
எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனித மனத்தின் இயல்பு அது. 85-86
வருடங்கள் வாழ்ந்த மனிதர், நம்மிடையே தம் இருப்பை, பரிச்சய உலகத்திலும்
இலக்கிய உலகத்திலும் உணர்த்திக் கொண்டே இருந்தவர். அதுவும் எவ்வளவு காலம்!
மூன்று தலைமுறைக்கும் மேல் நீண்டது அது. அவ்வளவு நீண்ட காலமும்
படிப்பதற்கும் எழுதுவற்கும் தான் என்று ஒரு தீர்மானத்தைத் தனக்குள் தன்
வாலிப வயதிலேயே கொண்டு அந்த பிடிவாதத்தையே ஒரு லக்ஷ¢யமாகப் பற்றி
வாழ்ந்து காட்டி விட்டவர்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்
தான். பார்க்கப் போனால் அவருக்கு பெரிய ஆசைகள், கனவுகளோடு வாழ்ந்தவர்
இல்லை. வாழ்க்கையில் அவர் கேட்டது, எதிர்பார்த்தது என்று பெரிதாக ஏதும்
இருந்ததாகத் தோன்றவில்லை. படிப்பதிலும் எழுதுவதிலுமே அவர் மகிழ்ச்சி
இருந்திருக்கிறது. பின் நண்பர்கள். அவர் யாரையும் அவராக விரோதித்துக்
கொண்டார் என்று சொல்லமுடியும் என்று தோன்றவில்லை.
திருநெல்வேலிக்காரர். அந்த
மண்ணுக்கே உரிய பேச்சும் கிண்டலும், யாரையும் எளிதில் வசப்படுத்திவிடும்.
அன்னியோன்ய உணர்வைத்தந்து விடும். கிண்டல் சிலரிடம் காலை வாறலாகக் கூடுதல்
நிறம் பெறும். வல்லிக்கண்ணன் அப்படியெல்லாம் கிண்டல் செய்ய மாட்டார் என்று
தான் நினைக்கிறேன். நான் அவரை ஒரு சில முறைகள், அதிகம் போனால் அரை
மணிநேரம் என்று சந்தித்துப் பேசியதுண்டு. அமைதியாக, மிக மெல்லிய குரலில்
புன்சிரிப்போடு தான் பேசியதாக என் நினைவு. அதில் கிண்டல் சற்றேனும்
கலந்திருக்கவில்லை. திருநெல்வேலிக்காரர் யார் எழுதினாலும், அந்த மண்ணின்
மணத்தோடு தன் இயல்பில் பாசாங்கும் வேஷமும் இல்லாமல் எழுதினால் அதில்
எனக்கு மிக பிரியமுண்டு. வல்லிக்கண்ணன் கதைகளும், சில திருநெல்வேலி
மனிதர்களைப் பற்றிய சொற்சித்திரங்களும் நான் படிக்கும் போது அவை ஜீவனும்
உயிர்ப்பும் உள்ள மனிதரை என் முன் திரையோட விடும். அவரது
மேடைப்பேச்சுக்கும் கட்டுரைகளுக்கும் நேர் எதிரான சமாசாரம். எப்படி இரு
நேர் எதிர் குணங்களை ஒரு மனிதருக்குள் திணித்து வைத்திருக்கிறான் அந்த
நெல்லைப்பன் என்று நினைக்கத் தோன்றும். இருமுறை அவர் மேடையில் பேசக்
கேட்டிருக்கிறேன். தில்லியில் ஒரு முறை. சென்னை வந்த புதிதில் ஒருமுறை.
எல்லாம் சாகித்ய அகாடமி உபயங்கள். எழுந்து நின்று ஏதோ மனப்பாடம் செய்து
ஒப்புவிப்பது போல வார்த்தைகள் ஒரு தடங்கல் இல்லாமல், வந்து
கொட்டிக்கொண்டிருந்தன. முகத்தில், குரலில் எவ்வித உணர்ச்சியும் இல்லாத
தகவல்களின் மழை. விவரங்கள் என்பதற்கு மேல் அந்தப் பேச்சுக்களில் ஏதும்
இல்லை. இது திருநெல்வேலி மண் இல்லை.
எழுத்து பிரசுரமாக சி.சு.
செல்லப்பா ஆண் சிங்கம் என்ற தலைப்பில் வல்லிக்கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு
ஒன்று வெளியிட்டிருந்தார். அறுபதுகளில் இடைப்பட்ட வருடங்கள் ஒன்றில் என்று
நினைப்பு. அந்தக் கதைகள் எனக்கு சுவாரசியமாக இருந்தன. அப்போது தில்லியில்
வெளிவந்துகொண்டிருந்த Thought பத்திரிகையில் ஆண்சிங்கம் பற்றி எழுதினேன்.
அதில் தான் படித்தேனோ அல்லது வேறு ஏதும் பத்திர்கையில் படித்தேனோ, சாந்தி,
சரஸ்வதி, தாமரை இப்படி ஏதோ ஒன்றில், 'பெரிய மனுஷி' என்று வல்லிக்கண்ணனின்
ஒரு கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் கதைகள் எப்பவுமே மிக
சுவாரஸ்யமானவை. எழுதியவர் திருநெல்வேலிச் சீமையைச் சேர்ந்தவர் என்று
ஒவ்வொரு வார்த்தையும் சொல்லும். எழுதிகிறவரின் சிரிக்கும் உதடுகளையும் கூட
மானசீகமாக அவ்வெழுத்தின் பின் பார்க்கலாம். அவர் நிறைய எழுதியிருக்கலாம்.
எழுதியும் இருக்கிறார் என்று தான் சொல்கிறார்கள். ஆரம்ப காலமாக அது இருக்க
வேண்டும். அதோடு சரஸ்வதி பத்திரிகையில் அவர் புத்தகங்களைப் பற்றி,
எழுத்தாளர்களோடு உரையாடியது பற்றியெல்லாம் ஒரிரண்டு பக்கங்கள் எழுதுவார்.
அதுவும் சுவாரஸ்யமாக இருக்கும். 'நான் ஏன் எழுதுகிறேன்" என்று சரஸ்வதி
நடந்த காலத்தில் நிறைய எழுத்தாளர்கள் கட்டுரை வாசித்தார்கள் பின்னர் அது
புத்தகமாகக் கூட எழுத்து பிரசுரமாக செல்லப்பா வெளியிட்டிருந்தார். அதில்
ஒரு குறிப்பு எனக்கு நினைவிலிருப்பது சுவாரஸ்யமானது: 'புதுமைப்பித்தனின்
ஒரு வரியில் கருவேப்பிலை கூட உயிர் பெற்றுவிடும். வல்லிக்கண்ணன் பக்கம்
பக்கமாக எழுதினால் கூட அதில் ஒன்றும் இருப்பதில்லை' என்று கிட்டத்தட்ட
இப்படித்தான் க.நா.சு வல்லிக்கண்ணன் பற்றி எழுதியிருக்கிறார் என்றும்
இருந்தாலும் நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் என்று வல்லிக்கண்ணன் ஒரு
இடத்தில் சொல்லியிருக்கிறார். எனக்கு வல்லிக்கண்ணன் அப்படி எழுதியிருந்தது
பிடித்திருந்தது.
வல்லிக்கண்ணனை வல்லிக்கண்ணனாக
நாம் பார்க்க முடிவது அவர் கதைகளில் தான் என்றாலும் அவர் அப்படி ஒன்றும்
நிறைய எழுதியிருக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை. கதை எழுதுவது, தன்
அனுபவங்களுக்கும் பார்த்துப் பழகிய வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும்
எழுத்தில் உயிர் தருவது ஒரு மகிழ்ச்சி தரும் காரியம் என்று தான்
நினைப்பேன். அதுவும் சம்பாஷணையிலும் வம்பளப்பிலும் கிண்டலிலும் பிரியமுள்ள
திருநெல்வேலிக் காரர்களுக்கு. இன்று நாம் நினைத்துப் பார்க்கும்போது அவரை
ஒரு விமர்சகராகத்தான் எல்லோர் மனதிலும் பதிந்திருக்கிறார் என்று தான்
தோன்றுகிறது. சுமார் நாற்பது ஐம்பது வயதுக்குட்பட்ட தலைமுறை
எழுத்தாளர்களின் ஒரு பெரிய கூட்டம் அவரைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்
படுத்திய பெரியவராகத் தான் பார்க்கிறது. அதைத் தான் அவரும்
செய்திருக்கிறார். ஆனால் அவருடைய பார்வை, மதிப்பீடு என்று எதுவும் நம்
மனதில் எழுவதில்லை. அப்படி ஏதும் பதிவாகவும் இல்லை. சொல்லும்படியாக புத்தக
வடிவில் கிடைப்பன அவர் எழுதியுள்ள பெரும்பாலும் தகவல்களை உள்ளடக்கிய
வரலாற்று நூல்கள் தாம். புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், சரஸ்வதி
வரலாறு, பின் சிறுபத்திரிகைகள் பற்றிய ஒரு வரலாறு எல்லாம் என் நினைவில்
இருப்பன. இதற்கு மேல் அவர் எதுவும் எழுதியிருக்கிறாரா என்பது தெரியவில்லை.
எல்லாவற்றிலும் ஆங்காங்கே சில குறிப்புகள் காணப்படுமே தவிர அவை எதுவும்
விமர்சன பூர்வமாக அவர் பார்வையில் மதிப்பீடு என்று சொல்லத்தக்கனவாக இல்லை.
இதற்கு அர்த்தம் அவருக்கு
மதிப்பீடுகள் கிடையாது, தரம் பற்றிய சிந்தனையே கிடையாது என்பதில்லை.
இருந்தது. கு.ப.ரா. புதுமைப்பித்தன், மணிக்கொடி கால மற்ற முன்னோடிகள்
எல்லோருடனும் பழகியவர். இளைய சகாவாக இருந்தவர். கிராம ஊழியனில் கு.ப.ரா.
வுடன் ஆசிரியப் பொறுப்பில் இருந்தவர். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூன்று
தலைமுறையினருடன் வாழ்ந்தவர். வெற்று ஆளாக இருக்க முடியாது. இருப்பினும்
அவர் கறாரான அபிப்ராயங்களைச் சொன்னவரில்லை. தன் உடன்பாட்டையோ மறுப்பையோ
கூட தெரியச் செய்தவரில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. வானம்பாடி
கவிதைகளைப் பற்றி ஒட்டு மொத்தமாகக் கடைசியில் சொல்லும்போது அவை வெற்று
வார்த்தை ஜாலங்கள், அலங்காரங்கள் என்று சொல்லியிருக்கிறார். சிவராமூ
கவிதைகளைப் பற்றியும் அவர் ஒரு மாதிரியான கண்டனம் செய்துள்ளார். அவரைச்
சிவராமூ சீண்டியதன் விளைவு அது.; அவர் கடைசியாக ஒட்டுமொத்தமாக
நிராகரித்தது என்பது என்னையும் சிவராமுவையும் தான். மிகுந்த கசப்பும்
கோபமுமாகத்தான் எங்கள் இருவரையும் பற்றி அவர் அபிப்ராயங்கள் கடைசியில்
இறுகிப் போயிருந்தன.
எங்கள் இருவர் மீதும் அவருக்குக்
கோபம் இருந்ததற்குக் காரணங்கள் இருந்தன. அறுபதுகளில் நான்
தில்லியிலிருந்து பலமுறை அவர் உதவியை நாடியிருக்கிறேன். பழைய தகவல்கள்
வேண்டி. அவர் உடனுக்குடன் பதில் தந்துள்ளார். அவை எனக்கு
உதவியாயிருந்துள்ளன. பத்துப் பதினைந்து பேர் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு
பத்திரிகை நடத்தலாம் என்று நினைத்து, அவரைப் பொறுப்பேற்கக் கேட்டேன்.
பத்திரிகை தன் காலில் நிற்கும்
வரை இலவசமாக எல்லாப் பொறுப்புக்களையும் தான் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார்.
அவருக்கு அவ்வப்போது உதவும் படி நான் கேட்டுக்கொண்ட ஒரு பெரிய எழுத்தாளர்,
தனக்கு மாதம் 300 ரூபாய் வேண்டும் என்று சொன்னார். இதுதான்
வல்லிக்கண்ணனுக்கும் இந்த பெரிய எழுத்தாளருக்கும் உள்ள வித்தியாசம் என்று
தெரிந்தது. அக்காலங்களில் என் மாத வருமானமே 300 ரூபாய்தான். எனவே அது
கைவிடப்பட்டு விட்டது. நடக்கவில்லை. சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்றில்
நான் பொறுப்பாக இருந்த யாத்ரா பற்றி சிறப்பாகவே எழுதியிருக்கிறார். ஆனால்
எனக்கும் சிவராமூவுக்கும் அவர் கண்ட குப்பைகளுக்கும் தராதரம் அற்று தன்
பாராட்டுக்களையும் ரசனையையும் வாரிக்கொட்டுவதையே வழக்கமாகக் கொண்டிருந்தது
எங்கள் இருவருக்கும் அறவே பிடித்ததில்லை. அதன் காரணம் எனக்குப் புரிந்ததே
இல்லை. புதிதாக எழுத வந்தவரிடம் ஏதும் சிறு பொறி தட்டினாலும் அதைக்
குறிப்பிட்டு உற்சாக மூட்டலாம். தவறில்லை. ஆனால் வல்லிக்கண்ணனிடம் எந்த
குப்பை போனாலும் அதற்குப் பாராட்டு வந்துவிடும். இது மூன்று தலைமுறை
இலக்கிய வாழ்வு வாழும் முதியவரிடமிருந்து, மணிக்கொடி கால
முன்னோடியிடமிருந்து எதிர் பார்க்கக்கூடிய ஒன்றல்ல.
அவருக்கு தராதரம் தெரியாது
என்றும் சொல்வதற்கில்லை. அவர் இந்தக் குப்பைக்காரர்களிடமிருந்து எதுவும்
எதிர்பார்த்தார் என்றும் சொல்வதற்கில்லை. எதையும் எதிர்பாராதவர். பகட்டும்
பீதாம்பரமும் அவர் பலவீங்களல்ல. மிக எளிய மனிதர். அவருக்கான தேவைகளும்
மிகக் குறைவு. சாகித்ய அகாடமி பரிசு அவரைத் தேடி வந்தது தான்.
மற்றவர்களைப் போல அவர் ஆள் பிடிக்கவில்லை. யார் வீட்டு வாசலிலும்
நிற்கவில்லை. யாரையும் பார்த்துப் பல்லிளிக்கவில்லை. விதி விலக்குகள் என
ஒரிருவர் இருக்கலாம் தான். ஆனால் தமிழ் மரபு இதுதான். தனக்கு மிக நெருங்கி
அன்னியோன்யமாக இருந்தவர்களைப் பற்றிக்கூட மிக அபூர்வமாக ஆனால் மீகக்
கடுமையாக விமர்சித்து இருக்கிறார். மணிக்கொடிக் காலத்தைத் தாண்டி
புதியவர்கள் எவரையும் படிப்பதில்லை. கண்டு கொள்வதில்லை என்று சி.சு.
செல்லப்பாவைப் பற்றி எழுதியிருக்கிறார். இது செல்லப்பாவைப் பற்றிய கடைசி
பத்து வருஷகாலத்திற்கு மாத்திரமான உண்மை. அந்த உண்மை வல்லிக்கண்ணனுக்கும்
பொருந்தும். எழுத்து பத்திரிகை நடத்தியவரை, புதுக்கவிதையைத் தமிழுக்குத்
தந்தவரைப்பற்றி அப்படிச் சொல்லக்கூடாது. ஆனால் வல்லிக்கண்ணன்
சொல்லியிருக்கிறார். செல்லப்பா அவரைச் சீண்டியவரில்லை, என்னையும்
சிவராமுவையும் போல. புதுக்கவிதை வரலாறு புத்தகம் போட்டு உடன் பணம் கொடுக்க
முடியாது, தாமதமாக பல வருஷங்கள் கழித்து செல்லப்பா பணம் கொடுக்கும் வரை
வல்லிக்கண்ணன் ஏதும் சொன்னவரில்லை. செல்லப்பா எழுத்துப் பிரசுரங்களை விற்க
ஒவ்வொரு கல்லூரியாக சைக்கிளில் செல்லப்பாவை இட்டுச் சென்றவர்
வல்லிக்கண்ணன். பின் ஏன் அப்படி எழுதினார்?
அதற்காக செல்லப்பா வல்லிக்கண்ணனை
விரோதித்துக் கொள்ளவில்லை. இதே வல்லிக்கண்ணன் தான் சாகித்திய அகாடமி
பரிசுக்கான் கடைசித் தேர்வுப் பட்டியலில் சுந்தர ராமசாமியும்
செல்லப்பாவும், இமையுமும் இருக்கும் போது இவர்களையெல்லாம் உதறி விட்டு
தி.க. சிவசங்கரனுக்கு பரிசு சிபாரிசு செய்தவர். மனித மனத்தின் இரகசிய
ஆழங்களை அவ்வளவு சுலபமாகவா கண்டறிந்து கொள்ள முடியும்?
தமிழிலேயே தலை சிறந்த படைப்பு
என்று நான் நினைக்கும் தி. ஜானகிராமனின் மோகமுள் பக்கம் பக்கமான வம்பளப்பு
என்றோ இல்லை கதையளப்பு என்றோ என்னவோ எழுதியிருக்கிறார்.
திருநெல்வேலிக்காரர் வம்பளப்பையும் கதையளப்பையும் கண்டனம் செய்கிறார்
என்றால் அதிசயம் இல்லையா அது?.
வல்லிக்கண்ணனிடமிருந்தே
வந்திருக்கக் கூடிய அவரிடமிருந்து வந்துவிட்ட ஒரு மிகப் பெரிய விஷயத்தைச்
சொல்லவேண்டும். வல்லிக்கண்ணன் தமிழக முற்போக்குகளுடன் மிக நெருங்கி
இருந்தவர். வல்லிக்கண்ணையும் தம்மவராக அவர்கள் கருதினார்கள். சரஸ்வதி ஒரு
இலக்கியப் பத்திரிகையாக, கட்சி சாராது தன்னை இருத்திக்கொண்டது கட்சிக்குப்
பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் சரஸ்வதி ஆசிரியர் அவர்களோடு சேர்ந்தவர் தான்
முற்போக்கு தான். இருப்பினும் சரஸ்வதிக்கு போட்டியாக தாமரை பத்திரிகையை
கட்சி துவங்கியது. சரஸ்வதி அச்சானது கட்சியைச் சேர்ந்த அச்சகத்தில்.
அந்தத் துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டு சரஸ்வதி அச்சாவதைத்
தாமதப்படுத்திக் கடைசியில் அது கடைமூடச் செய்தனர். இந்த உண்மை சரஸ்வதி
வரலாற்றில் வல்லிக்கண்ணனால் பதிவு செய்யப்படுகிறது.ம் இந்த உள்கட்சி
விவகாரம் வல்லிக்கண்ணன் வெளிக்கொணர்ந்திராவிட்டால் உலகம் அறிந்திராது.
சரஸ்வதியை மூடச் செயதவர் நாம் மரியாதை செய்யும் ஜீவா அவர்கள். இதை
வெளிக்கொணர்வதில் வல்லிக்கண்ணனுக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. வெகு
அதிசயமாக இந்தச் செய்கையால் வல்லிக்கண்ணன் யாருடைய கோபத்துக்கும்
ஆளாகவில்லை. இது எப்படி நிகழ்ந்தது?
1993-94 இந்தியா டுடே மலரில் அவர்
மிக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். எல்லாம் பொத்தம் பொதுவான
விமர்னங்கள். ஆனால் மிகக் கடுமையானவை: ' தமிழ் மொழியில், இலக்கியத்தில்
ஒரு மந்த குணம் நிலவுகிறது. அது தான் எண்பதுகளிலும் தொடர்கிறது'; 'புரியாத
விதத்தில், புதுமை என்ற பெயரில் எதை எதையோ எழுத வேண்டியது எனும் போக்கும்
இப்போது தலையெடுத்துள்ளது. இதை நான் - லீனியர் ரைட்டிங்' என்றும், 'போஸ்ட்
மாடர்னிஸம் என்றும் பெருமையாகச் சொல்கிறார்கள்;. 'இது அபத்தப் போக்கு
மட்டுமல்ல அராஜகப் போக்கும் கூட;....'இப்படி எழுதுகிறவர்கள்
எழுத்துக்களில் அழகும் இல்லை. கலையுமில்லை. அர்த்தமுமில்லை. செய்
நேர்த்தியுமில்லை. பைத்தியக்காரனத்தனம், போதைப் பிதற்றல்கள் என்று
சொல்லப்படவேண்டிய விதத்தில் தான் இருக்கின்றன இவ்வகையில் எழுதப்படும்
எழுத்துக்கள்."சமீப காலமாக, விரும்பத்தகாத வேறு அலைகளும் தமிழ் எழுத்து -
பத்திரிகை உலகத்தில் தலை தூக்கி விளையாடுகின்றன;. பிராமண எழுத்தாளர்,
பிராமணர் அல்லாத எழுத்தாலர், பண்டித மனோபாவம் உள்ளவர், தனித்தமிழ்
பற்றாளர், வட்டார வழக்கு மன்ப்பண்பை வளர்ப்பவர், சுத்த இலக்கியப்
போக்கினர், சமூகப் பார்வை உடைய முற்போக்கு இலக்கிய வாதிகள், அர்fஅசியல்
கட்சி சார்பு உடையவர்...... இப்படி பல அடிப்படையில் எழுத்துக்கள்
கவனிக்கப்பட்டு, அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுவதும் பிரசாரம்
செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது". கடுமையான வார்த்தைகள் தான். ஆனால் எந்த
ஒரு எழுத்தையும் எழுத்தாளரையும் இது குறிப்பிட்டுச் சொல்லாததால், யாரும்
இது தனக்கில்லை என்று மூக்கு உயர்த்தி ராஜ நடை போட முடிகிறது.
வல்லிக்கண்ணனுக்கு அன்பளிப்பாக வரும் புத்தகங்களில் இவ்வகை எழுத்தோ,
எழுத்தாளரோ இருப்பின் அவர் தன் கருத்தைச் சொல்லியிருக்கவேண்டும் அல்லவா?
அப்படி ஏதும் செய்தி நமக்குக் கசியவில்லை. அங்கும் தான் ரசித்து மகிழ்ந்த
செய்திக் கார்டு தான் போயிருக்கும். ஏன் இப்படி? நெல்லையப்பனுக்கே இந்த
ரகசியம் தெரிந்திருக்காது தான்.
வல்லிக்கண்ணனுக்கு பயம்
என்றில்லை. தராதரம் தெரியாது என்றில்லை. வெகு அபூர்வமாக, வேண்டாத
இடங்களில் அவர் தன் அபிப்ராயங்களைச் சொல்லியிருக்கிறார். செயலிலும்
காட்டியிருக்கிறார். அவருக்கும் கறாரான அபிப்ராயங்கள் உண்டு. ஆனால்
சொல்வதில்லை என்று தோன்றுகிறது. அப்படி அவர் சொல்லத் தேர்ந்தெடுக்கும்
இடங்கள் ஒரு சீரான பார்வையற்றதாகத் தோன்றும். மோகமுள்ளையும் சிவராமு
கவிதைகளையும் உதறித் தள்ளும் வல்லிக்கண்ணன் எப்படி வரும்
குப்பைகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் தரமுடிகிறது? ஏன் தன் பலமான
திருநெல்வேலி வாழ்க்கைப் புனைவுகளைப் பின்னொதுக்கி தன் உள்ளார்ந்த
ரசனைக்கு மாறாக, ரெடி மேட் பாராட்டுக் கார்டுகள் வழங்கும் காரியத்திலேயே,
தன் பிற்கால வாழ்க்கையைச் செலவிட்டார்? சிறப்பான ஒரு வல்லிக்கண்ணனை நாம்
இழந்து விட்டோம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதனும்
எந்தத் துறையில் தன் வாழ்க்கையைச் செலவிட்டாலும், தன்னில் சிறந்ததைத்
தான், தன் இயல்பான ஒன்றைத்தான் தரவேண்டும். அப்படித்தான் வாழவேண்டும்
என்று நான் நினைக்கிறேன். வல்லிக்கண்ணன் தன்னின் சிறந்ததை மறுத்துக்கொண்டு
விட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எளிமையே உருவான மனிதர், ஆசைகள்
ஏதுமற்றவர், தான் தீர்மானித்துக்கொண்ட லக்ஷ¢யத்திற்காக தன்னை
அர்ப்பணித்துக்கொண்டது போல வாழ்ந்தவர், ஏன் தன் இயல்பில் வாழவில்லை? ஏன்
தன்னின் சிறப்பானதைக் கொடுக்கவில்லை? தமிழ் நாட்டின் மற்ற பெரிய எந்தத்
துறைப் பிரமுகர்களையும் போல பணத்துக்கோ, பிராபல்யத்துக்கோ தானல்லாத வேஷம்
தரித்தவரில்லை வல்லிக்கண்ணன். வல்லிக்கண்ணனின் இழப்பு அது. நமது இழப்பும்
தான். எத்தனை பெரிய மனுஷிகள் அவர் தந்திருக்கக் கூடும்!
-------------------------------------------------------------------------------------------------
nagulan2.jpg
இலக்கியம்!
மூத்த எழுத்தாளர் நகுலன் மறைவு!
நகுலனின் நினைவில்!
- வெங்கட் சாமிநாதன் -
நகுலன் மறைந்துவிட்டார் என்று
எனக்குத் தகவல் வந்தது செல் தொலைபேசியில் குறுஞ்செய்தியாக. அனுப்பிய
உபகாரி யார் என்று தெரியாது. பின் ஒரு கவிஞர், திலகபாமாவிடமிருந்து செய்தி
வந்தது. மறு நாள் ஹிந்து பத்திரிகையில் நகுலனின் மறைவு பற்றி செய்தி
வந்திருந்தது. எந்த தமிழ் பத்திரிகையும் நகுலனின் மறைவு தமிழகத்திற்குத்
தரப்படவேண்டிய செய்தி எனக் கருதியதாக எனக்குத் தகவல் இல்லை. ஹிந்து
பத்திரிகைக்கு தமிழ் எழுத்தாளர் ஒரு பொருட்டாவது, அவர் சினிமாப் பாடல்கள்
எழுதுபவராக இருந்தால் தான் சாத்தியம். வாலியும், மு.மேத்தாவும்.
வைரமுத்துவும் தான் ஹிந்து பத்திரிகை அறிந்த தமிழ் எழுத்தாளர்கள்.
லா.ச.ராவைக்கூட ஹிந்து பத்திரிகைக்கு தெரியாது. லா.சு.ரங்கராஜன்
என்பவைத்தான் லா.ச.ரா என்று நினைத்துக் கொண்டிருக்கிறது.
இப்போது தமிழ் நாட்டுப்
பத்திரிகைகளுக்கு கனி மொழி கவிஞர் என்று தெரியத் தொடங்கியுள்ளது, கவிதை
சம்பந்தப்படாத அவரது மற்ற பொதுக்காரியங்களுக்காக, விழா நடத்துதல், திறப்பு
விழாக்கள் போன்றவைக்காக. அதாவது கட்சிப் பிரமுகரான பிறகு, அவரைக்
கவிஞராகக் கண்டுகொள்ளப் படுகிறார். கட்டாயம் கவிஞர் கனிமொழி என்று தான்
சொல்கிறது வழக்கமாகியுள்ளது. மலையாள பத்திரிகைகளில் நகுலன் மறைவு ஒரு
முக்கிய செய்தியாக விரிவாக பதிவாகியுள்ளதாக எனக்குச் சொன்னார்கள். கேரளம்
போல் நாமும் அது செல்லும் அதே தடத்தில் செல்லமுடியுமா என்ன? நமக்கென ஒரு
நீண்ட வரலாறும், பண்பாட்டுச் சிறப்புகளும் தனித்வமும் இல்லையா என்ன? ஒரு
கவிஞரை முதல்வராகக் கொண்டுள்ள நாடல்லவா தமிழ் நாடு! கேரளத்துக்கு, அல்லது
வேறு எந்த மாநிலத்துக்காவது இத்தகைய சிறப்பு உண்டா? ஆக, நம்
செயல்பாடுகளும் வேறு குணத்ததாகத் தான், நம் தமிழ் மணம் பரப்புவதாகத்தான்
இருக்க முடியும்.
சோகம் என்னவென்றால், நகுலன் தனது
எண்பத்தாறாவது வயதில், உடல் க்ஷ£ணமுற்று, இறந்த போது, சுமார் 45
வருட ஒரு நீண்ட காலம் தமிழில் கவிதை, விமர்சனம், நாவல், என்று பல
துறைகளில் தன் பெயர் பதித்து வந்துள்ளார். ஆங்கிலத்திலும் அவர் கவிதைத்
தொகுப்புகள் வந்துள்ளன. 60-களிலிருந்து பல கவிஞர்களுக்கும்,
எழுத்தாளர்களுக்கும் அவர்களின் ஆரம்ப காலங்களில் நகுலன் தந்த உற்சாகமும்
ஊக்குவிப்பும் ஆதரவாக, அங்கீகாரமாக பயன்பட்டுள்ளது. பதவி
உயர்வைக்கருத்தில் கொள்ளாது, திருவனந்த புரத்தில் கல்லூரி ஆசிரியராக
இருந்து கொண்டே, அந்த வட்டார எழுத்தாளர்களுக்கு மரியாதைக்குரிய மூத்தவராக
இருந்துள்ளார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர்
நிறைந்த படிப்பும் பாண்டித்யமும் பெற்றவர். பழந்தமிழ் இலக்கியங்களிலும்
நல்ல படிப்பும் ஞானமும் பெற்றவர். ஞானம் என்று நான் சொல்லும்போது பொருள்
அறிந்து தான் சொல்கிறேன். வெற்றுத் தகவல் சேகரிப்பு செய்து முனைவர் பட்டம்
பெற்றுள்ளோர் தமிழ் பல்கலைக் கழங்கங்களை நிரப்பியுள்ள சூழலில், ஞானம் என்ற
சொல்லை நகுலனின் பண்டைத் தமிழ் இலக்கியத் தேர்ச்சியின் சந்தர்ப்பத்தில்
உபயோகப்படுத்தித் தான் ஆகவேண்டும். அவர் கவிதைகளே இதைச் சாட்சியப்
படுத்தும். அவ்வகையில் அவர் கவிதைகள் அவர் ஆளுமையைச் சொல்லும் தனித்வம்
பெற்றவை.
நகுலன் அப்படி ஒன்றும் தமிழ்
எழுத்தாளர் சாதியைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட முடியாது. அவர் எழுத
ஆரம்பித்தது, எழுத்து பத்திரிகையில். எழுத்து பத்திரிகை இல்லையெனில் அவரை
நாம் அறிந்திருப்போமா என்பது சந்தேகத்துக்குரிய விஷயம். எழுத்து
இல்லையெனில் வேறொன்று என்று வாதிடலாம். அந்த வேறொன்றும், அது போன்ற
எத்தனையோ வேறொன்றுகள், எழுத்து பத்திரிகையின் பாதிப்பில் பிறந்தன தான்.
எழுத்துவின் பாதிப்பற்ற எந்த பத்திரிகையிலும் அவர் எழுதவில்லை. அவருக்கு
அவற்றில் இடமிருக்காது, என்னும்போது, எழுத்துவின் கண்டுபிடிப்பாகத்தான்
அவரைக் கொள்ள வேண்டும். என் ஞாபகத்தில் அவரது 'கொல்லிப் பாவை' கவிதை தான்
நகுலனை எனக்கு அறிமுகப்படுத்தியது. உரையாடல்கள், நாவல், விமரிசனம் என்று
அவர் பலவாறாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாலும், 'கொல்லிப்பாவை' நகுலன்
தன்னை சிறப்பாக ஒரு கவிஞராக வெளிப்படுப்படுத்திக் கொண்டுள்ளார் என்று
எனக்கு இன்றும் தோன்றுகிறது.
கவிதை தவிர மற்ற எல்லாவற்றிலும்,
விமர்சனம், கட்டுரைகள், நாவல்கள் போன்ற எல்லாவற்றிலும், நமக்குக்
கிடைப்பது, நகுலன் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள்,
அவர்களுடனான அவரது அவ்வப்போது மாறும் உறவுகள், கசப்புகள், மறைமுக
தாக்குதல்கள், கிண்டல்கள் போன்ற சமாச்சாரங்கள் நிறைந்திருக்கும்.
எழுத்துலகமும், எழுத்தாளர்களும் நகுலனும் தான் அவர் நாவல்களின் கதா
பாத்திரங்கள். பெயர்கள் கற்பனையேயானாலும், யாரைச் சொல்கிறார் என்று
படிப்பவர்க்கு நன்றாகவே தெரியும். தெரியாது போகும் அளவுக்கு அதை
மறைப்பதில் நகுலனுக்கு அக்கறை இல்லை. மறைமுகமாகத் தாக்கினாலும்,
தாக்கப்படுபவருக்கு அது தான் தான் என்று உறைக்காவிட்டால் அதில் என்ன
சுவாரஸ்யமிருக்க முடியும்? நகுலனின் ஒவ்வொரு நாவலைப் படிக்கும் போதும்,
நகுலனின் உறவுகள் மற்ற எழுத்தாளர்களோடு இருக்கும் அவ்வப்போதைய வெட்ப
தட்பங்களைச் சொல்லும். ஒரு நாவலில் கண்ட வெட்ப தட்பம் அடுத்த நாவலில்
தொடரும் என்பது நிச்சயமில்லை. உறவுகள் கெட்டிருக்கலாம். அல்லது சமாதானம்
அடைந்திருக்கலாம். கற்பனைப் பெயர்கள் மறைப்பதால், யாரும் இதில்
தப்புவதில்லை. இந்த விசித்திர உலகத்தைப் பற்றி நகுலனின் நாவல்கள்
விஸ்தாரமாகச் சொல்வதற்கு மேல், நீல பத்மனாபனின் தேரோடும் வீதியும்
('மறைந்து தாக்குதல், வத்தி வைத்தல் காரியங்களைச் செய்யும் கே.எச்.கே')
ஆவணப் படுத்தும். இன்னும் சிலரும் (நகுலன் நாவலில் வரும் ஹேமசந்திரன், நீல
பத்பனாபன் நாவலில் வரும் மதிரமூர்த்தி) நாவலாக அல்ல, கவிதை வடிவில்
நகுலனுக்கு பிரதி உபசாரம் செய்துள்ளனர். சுவாரஸ்யமான மனிதர் நகுலன். அவரது
இப்பரிமாணமும் சுவாரஸ்யமானது தான்.
எழுத்தாளர்களையே பாத்திரங்களாக
வைத்து நாவல் எழுதியவர்கள் உலகில் வேறு எங்கும் உண்டா? நகுலன் தான் அதைச்
செய்துள்ளார். இதன் காரணமாக அவரது நாவல்கள் பிரசுரம் பெறுவதில் சிரமம்
இருந்திருக்கிறது. பெரும்பாலும் அவர் தானே தான்
வெளியிடவேண்டியிருந்திருக்கிறது. இருப்பினும் அவர் சளைத்தவரில்லை.
தனிமையும் அதன் சோகமும் தான் அவர் எழுத்துக்கு பெரிய காரணிகள் என்று
சொல்லவேண்டும். இதற்கு சாட்சியம் அவர் எழுத்துக்களில் நீங்கா இடம் பெறும்
100 அல்லது 200 மிலி, பின் ஒரு கற்பனைப் பாவை, 'சுசீலா'. இரண்டும் அவரது
தனிமையின் சோகத்தைத் தணித்தவை. ஜெயதேவருக்கு சாருஷீலே, நகுலனுக்கு சுசீலா.
ஆனால் தமிழ் இலக்கிய உலகின்
விசித்திர குணம், நகுலன் தன் எழுத்துலக விவகாரங்களையே சம்பாஷணைகளாகவும்,
பாத்திரங்களாகவும் படைத்து தன்னைத் திருப்திப் படுத்திக்கொண்ட நாவல்களை,
தமிழுக்கே உரிய அ-யதார்த்தம் என்றும் நான்-லீனியர் எழுத்தென்றும், மந்திர
யதார்த்தம் என்றும், போஸ்ட் மாடர்னிஸம் என்றும் வரும் லேபிள்களில் ஒன்றை
நகுலனுக்கும் தந்து மகிழ்ந்துள்ளது. இது நகுலனைப் பாராட்டும் செயல் என்று
கொள்ளாமல், லேபிள் காரர்கள் தம் கூடாரத்துக்கு ஆள் சேர்க்கும் சமாசாரம்
என்று தான் கொள்ள வேண்டும். எம்.வி.வெங்கட் ராமின் காதுகள் மந்திர
யதார்த்த நாவலாகிப் போன கதை தான். கடைசிக் காலத்தில் ஏதோ ஆசைப் பட்டு
பொன்னாடை போர்த்தி விட்டுப் போகிறார்கள். அவர்கள் ஆசையைக் கெடுப்பானேன்
என்று நகுலன் எண்ணியிருக்கக் கூடும். 'நான் எதையோ நினைத்து எதையோ எழுதப்
போக, அதுக்கு இப்படி ஒரு பொன்னாடையா!' என்று அவர் நமுட்டுச் சிரிப்போடு
இருந்திருக்கக்கூடும். நகுலனின் நமுட்டுச் சிரிப்பு அவரது முத்திரை.
இப்படி ஒரு சித்திரம் பெற்றுள்ள
ஒரு மனிதர் எப்படி இலக்கியமே, இலக்கிய விசாரமே தன் வாழ்வின் ஒரே
லக்ஷ¢யமாகக் கொண்டு வாழ்ந்த க.நா.சு விரும்பி சந்திக்கும்
சம்பாஷிக்கும் மனிதராக இருந்திருக்கிறார் என்று யோசிக்கத் தோன்றும். ஒரு
நல்ல சம்பாஷணைக்காரரான க.நா.சு. 'தான் சம்பாஷிக்க விரும்பும் இரண்டு
பேர்கள் என மௌனியையும் நகுலனையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளார். எத்தகைய
பாராட்டு இது! நகுலனிடம் இந்த விஷமத்தனங்கள் எல்லாம் மீறிய பரிமாணங்களும்
இருக்க வேண்டும். அது தான் அவர் கவிதைகளை அவரது சிறப்பான இலக்கிய
வெளிப்பாடாக்கியிருக்கிறது என்றும் நினைக்கத் தோன்றுகிறது. 1960 எழுத்து
பத்திரிகையின் கொல்லிப் பாவையிலிருந்து தொடங்கி கடைசியாக அவர் எழுதிய
கவிதைகளில் எனக்குப் பிடித்த 'இவர்கள்' வரை அனேக நல்ல கவிதைகள் நகுலனை
முக்கிய கவிஞராக, தமிழ் கவிதைக்கு தன் வழியில் புதிய கவித்வ வடிவங்களை
நமக்குத் தந்துள்ளார். நம் பழைய யாப்பு வடிவங்கள் போலல்லாது, புதுக்
கவிதையில் ஒவ்வொரு நல்ல கவிதையும் தன்னில் ஒரு புது வடிவத்தைக்
கொண்டிருக்கும் என்பது என் கருத்து. அத்தோடு நகுலனின் சாரத்தையும் அது
சொல்லும். இந்த நகுலன், 1960 ஆக இருந்தாலும் சரி, கடைசி வருடங்களில்
தன்னில் தன் தனிமையில் முடங்கிக் கிடக்கும் நகுலனாலும் சரி, ஒருவரே தான்.
அவரின் சாரம் தான். முழுதையும் மேற்கோள் காட்ட முடியாது. ஒரு சில வரிகள்
போதும்.
காத்திருந்தேன் என்ற தலைப்பு
அதற்கு. இந்த தலைப்பை முக்கியமாக கவனிக்க வேண்டும்:
"மீண்டும் வீதியில் யாருமில்லை
வெறும் தனிமை
வெகு துலைவில்
வேகம் குறைந்து வரும்
டாக்ஸி என் வீடும் வரும் என்று
நம்பிக்கையின்
வேதனை தாங்கி,
நான் வாழ மனந்தூண்ட
நான் வறிதே வீற்றிருக்க
வந்த வண்டி
என் வீடு தாண்டிப் போகும்."
இந்த தனிமையும் காத்திருத்தலும்
தான் நகுலன். அவர் வாழ்ந்திருந்த 84 ஆண்டுகள் முழுமையுமான நகுலன். பின்
கடைசி வருடங்களில் எழுதிய கவிதைகளில் ஒன்று: தலைப்பு இவர்கள்:
"உதட்டளவில் பேசுகிறார்கள்.
மனமறிந்து
பொய் சொல்கிறார்கள். ஒரு கணத்தில்
சொன்னதை அடுத்த கணத்தில் மறந்து
விடுகிறார்கள். எதிரில் இருப்பவன்
பிரக்ஞையின்றி தங்களைப் பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறார்கள். வயிறு
காலியானாலும் வீடு நிறைய சாமான்
களை வாங்கி வைக்கிறார்கள். உடமை
கருதி செத்துக் கொண்டிருக்கும்
ஒருவன்
முன், "இவன் ஏன் இன்னும் சாகமாட்
டேன்" என்கிறான் என்று பொறுமை
இழந்து நிறகிறார்கள்.
எல்லாவற்றிலும்
அதிசயம் என்ன வென்றால் இவர்கள்
தங்களைப் போல் நல்லவர்கள் இல்லை
என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்
இவர்களுடன் தான் உறவுகளை
வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது
நாம் வாழும் உலகில் தான் இவர்களும்
வாழ்கிறார்கள். ..."
நகுலனது கவித்வ ஆளுமையின் சாரம்
இது. காத்திருப்பும், கசப்பும். எல்லாமே இப்படித்தான் இருக்கும்
என்றில்லை. தனிமை பேசும் கவிதைகள் ஆத்மார்த்தமானவை. சிறப்பானவை.
அவரது கவிதைகள் சிறக்கக் காரணம்,
அவரது வெளிப்பாடும் மொழியும் மிகச் சிக்கனமானவை. அனேக சமயங்களில் அவர்
சொல்லவந்தது முழுதையும் சொன்னதாக இராது. எங்கோ தத்துத் தாவுவது போலவும்,
சொல்ல மறந்து விட்டது போலவும், தோன்றும். நாவலில், விமர்சனங்களில் 'மனுஷன்
ஏன் இப்படி எழுதுகிறார்? என்று நம்மை நினைக்கத் தோன்றும் விட்டு விட்டுத்
தொடரும், தொடர் அறுந்து தாவும் சிந்தனை, கவிதையில் நமக்கு இட்டு
நிரப்பிக்கொள்ளும் இடை வெளிகளைத் தரும்.
நில்
போ
வா
வா
போ
நில்
போ
வா
நில்
நில் போ வா
என்று நவீன விருட்சத்திற்கு
எழுதிய கவிதை போல நிறைய உண்டு. என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று அழகிய
சிங்கர் நகுலனைக் கேட்டு திருப்பிவிட முடியாது. பின் நகுலனின் எதிர்வினை
எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இவ்வளவுக்கும் அவரது கடைசி
வருடங்களில் நகுலனது கவிதைகள் பெரும்பாலும் நவீன விருட்சத்தில் தான்
வெளிவந்த மாதிரித் தெரிகிறது.. வீம்புக்கு வினோத சூத்திரங்களை
உருவாக்குவார். ஒரு கவிஞர் (நல்ல கவிஞர் தான் அவர்) தாகூரை
காப்பியடிக்கிறார் என்று தெரிந்ததும், நகுலன் தரும் வாதம்:
இது;"மொழிபெயர்ப்பு (மொழிபெயர்ப்பு என்றால்) 1:1 அல்ல" என்று வாதிப்பார்.
இந்த பிரம்ம சூத்திரத்திற்கு யார் பாஷ்யம் எழுதுவது?. விஷமத்தனம் என்று
தோன்றும். இது தான் நகுலனின் முழுமை என்பதல்ல.
பொதுவாக, தத்துவார்த்தமாக
இலக்கியம் பற்றி, கவிதை பற்றி பேசும் போது, நகுலன் மிக சிறப்பாகவும்,
ஆழமாகவும், உண்மையாகவும் பேசிவிடுகிறார்: இந்த கவியுள்ளம் தான் அவர்
கவிதைகளை சிறப்பான சிருஷ்டியாக்கிவிடுகின்றன என்று தோன்றுகிறது: ஒரு சில
வரிகள் மாத்திரமே.
"கவிதை எழுப்பும் பரவச நிலையை
வார்த்தைகளிலிருந்து பிரிக்க முடியாதென்றால், கவிதையின்
வார்த்தைகள் நமது உப-போத
மண்டலத்தில் ரீங்கரிப்பதற்கு ஒரு காரணம் ஓசை."
"என் அனுபவத்தில் எந்த உயர்
கவிதையிலும் உச்ச கட்டம் என்பதில் ஓர் அபூர்வ எளிமை,
ஆழம், தெளிவு இருக்கின்றன.
"அடிப்படையாக இரு விஷயங்கள்
-அனுபவம் - உருவம் (வெளிப்பாடு மூலம் எழுவது). எங்கு
அனுபவம் வெளிப்பாடு -
மூர்த்தண்யம் அடைகிறதோ அங்கு இலக்கியம் பிறக்கிறது"
பின் ராஜாராவின் வார்த்தைகளை
நினைவு படுத்துகிறார் ஒர் இடத்தில்.
"இலக்கியம் நிசப்தத்தின்
அடிப்படையில் பிறந்து சப்தம் மூலம் உருவாகி மீண்டும் நிசப்தத்தில்
லயிப்பது."
இவற்றின் சாட்சியங்களை நகுலனின்
கவிதைகள் பெரும்பாலானவற்றில் காணலாம். விமர்சன வாக்கியங்களில் ஆங்காங்கே
காணலாம்.அந்த நகுலனைத் தான் க.நா.சு தான் விரும்பிய நகுலனுடனான்
சம்பாஷணைகளில் கண்டாரோ என்னவோ. நகுலனது நாவல்களிலோ, அவரது விஷம
வேடிக்கைகளிலோ நிச்சயமாக இல்லை. இருந்தாலும், அவரது ஆரம்ப வருடங்களில்
அவருக்குப் பிடித்த கவிஞர்களை அவர் உற்சாகப்படுத்தி ஆதரவளித்தார்.
அவரிடமிருந்து இவர்கள் பெற்றது நிறைய. ஆனால், இப்படி
கொடுப்பவர்களுக்கெல்லாம் எப்போதும் நேர்வது போல, அவர் உற்சாகப்படுத்தி
அங்கீகரித்தவர்கள் எவரிடமிருந்தும் நகுலன் பெற்றது ஏதும் இல்லை. அது மிக
வருந்தத் தக்க விஷயம். ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் வேறு எப்படி நடந்து
கொள்வார்களாம்? ஏது சாட்சியம்? அதே சமயம் நகுலன் விடாப்ப்பிடியாக
தொடர்ந்து முன் வைத்த ஷண்முக சுப்பையா மறைந்த பிறகு அவர் போன இடம்
தெரியவில்லை.
அறுபதுகளில், நகுலன்
குரு§க்ஷத்திரம் என்று ஒரு இலக்கியத் தொகுதியை வெளியிட்டார். தம்
செலவிலேயே. வேறு யார் வெளியிடுவார்கள் தமிழ் நாட்டில்? அதில் அன்று அவர்
தான் முக்கியமானவர்களாகக் கருதியவர்களின் படைப்புக்களைத் தொகுத்துள்ளார்.
அப்போது க.நா.சு எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது. "தமிழ் நாட்டில்
இரண்டு முக்கிய நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. 'சென்னையில் நடந்த உலகத் தமிழ்
மாநாடு ஒன்று. இது மிகுந்த கோலாகலத்தோடு ஆடம்பரமாக நிகழ்ந்தது. மற்றது,
நகுலனின் 'குரு§க்ஷத்திரம்' தொகுப்பு. வெகு அமைதியாக, அனேகர்
கவனத்திற்கு வராது நிகழ்ந்தது. இருப்பினும், தமிழுக்கு உருப்படியாக ஏதோ
செய்தது என்றால் அது நகுலனின் 'குரு§க்ஷத்திரம்' தான்," என்று
எழுதினார்.
இப்போதும், சுமார் ஐம்பது வருட
காலம் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கவிதைக்கும் வளம் ஊட்டிய 86
வயது மனிதரை நாம் இழந்து விட்டதை பற்றி தமிழ் இலக்கிய உலகம், பத்திரிகை
உலகம் கண்டு கொள்ள வில்லை. தமிழகம் செய்யத் தவறியதை, எங்கோ அமெரிக்காவில்
வாழும் தமிழர்கள் தான் 'விளக்கு' பரிசு தந்து கௌரவித்தார்கள்.
மலையாளத்தவர்கள் கூட தம்மிடையே வாழ்ந்த தமிழனுக்கு 'குமரன் ஆசான்' பரிசு
கொடுத்தார்கள் என்று நினைவு எனக்கு .என் நினைவு சரிதானா? இதெல்லாம்
செய்வார்கள். தண்ணீர் தான் தரமாட்டார்கள்.
-------------------------------------------------------------------------------------------------
mahindra_india_a.jpg
META_dark-horse-1.jpg
META_dark-horse-2.jpg
META_CHEKOVKIDUNIYA.jpg
META_nati-binodini.jpg
META_cotton-56-polyster-84.jpg
META_TU.jpg
இலக்கியம் / கலை!
தில்லியில் ஒரு நாடக விழா!
- வெங்கட் சாமிநாதன் -
Mahindra's Excellence in Theatre
Awards சுருக்கமாக (META) மெடா வுக்கான தேர்வுகள் நடத்த விருப்பதாகவும்
அதையொட்டி இந்தியாவின் எல்லா பிராந்தீயங்களிலிருந்தும் மொழிகளிலிருந்தும்
வரவிருக்கும் நாடகங்களிலிருந்து கடைசிப் பரிசுப் போட்டிக்கு பத்து
நாடகங்களைத் தேர்ந்தெடுக்கும் முதல் கட்ட தேர்வுக் குழுவில் நீங்கள் பங்கு
பெறவேண்டும் என்ற அழைப்பு மின்னஞ்சலாக வந்த போதுதான் இப்படி ஒரு அகில
இந்திய நாடகப் போட்டியும் தேர்வும் நடக்கிறது என்று எனக்குத் தெரிய
வந்தது. 2007-ம் வருடம் நடக்க விருந்த இந்தப் போட்டி இரண்டாவதாகும்.
இந்த மெடா ஒன்று மட்டுமே இவர்களது
செயல்பாடாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிந்து கொண்டேன். Teamwork என்ற
அமைப்பின் கீழ் இந்த மெடா மட்டுமல்ல, இது போன்று பல விழாக்கள் உலகம்
முழுதும் இவர்கள் நடத்திவருகிறார்கள். ஜெய்பூர், எடின்பரோ, ஹாங்காங்,
லண்டன், மாட்ரிட், வாஷிங்டன், நியூயார்க், மெல்போர்ன் என்று 13 இடங்களில்
விழக்கள் நடத்திவருகிறார்கள் மெல்போர்னில் 2006 வருட காமன்வெல்த்
விளையாட்டுக்களை ஒட்டி நடந்த ஆசிய ·பில்ம் விழா உட்பட. இவர்களின்
செயல்பாடுகள் இன்னும் பல கலைத் துறைகளில் விரிகின்றன என்று நான் அங்கு
தேர்வுக்குழுவில் பங்கு பெறச் சென்றபின் அறிந்து கொண்டேன்.
போன வருடம் இது மிக சிறப்பாக
பெரும் வரவேற்போடு நடந்ததாக மெடா பொறுப்பாளர்கள் சொல்லி எனக்குத்
தெரிந்தது. போன வருடம் நடந்த விழாவுக்கான தேர்வில் பரிசுக்கான நாடகங்களைத்
தேர்வு செய்தவர்கள், இலா அருண், எம்.கே.ரைனா, ஷாபனா ஆஜ்மி, எம்.எஸ்.சத்யூ,
ஷ்யாமானந்த ஜலான், ஸா·பர் ஹாய் ஆகியோர். இவர்களில் ஸா·பர்
ஹாய் தான் புதியவர், யார் என்று தெரியவில்லை. இலா அருண் பாடகி. ஷ்யாமானந்த
ஜலான் கல்கத்தாவில் ஹிந்தி நாடகங்கள் நடத்துபவர். தேர்ந்தெடுக்கப்படும்
நாடகத்திற்கு ரூபாய் ஒரு லக்ஷமும், சிறந்த நாடகப் பிரதிக்கு ருபாய் 75,000
மும் பரிசு என்று சொன்னார்கள். இம்முறை, சிறந்த நாடகம் சிறந்த நாடகப்
பிரதி எவை எனத் தேர்ந்தெடுக்கும் கடைசி கட்ட தேர்வுக் குழுவில், ஷ்யாம்
பெனெகல், ஜாய் மைக்கேல் (தில்லியில் ஆரம்ப காலத்திலிருந்து ஆங்கிலத் தில்
நாடகங்கள் மேடையேற்றியவர்யவராக எனக்குத் தெரியும்), அனீதா ரத்னம், இவர்
டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர், சென்னையில் சமீப காலமாக the Other
Festival-ஐ மிகச் சிறப்பாக நடத்தி வருபவர், நாட்டிய கலைஞர், மிக
முக்கியமாக, இவரது ஆதரவில் தான் செ. ராமானுஜம் மூலம் திருக்குறுங்குடி
ஆலயத்தில் கைசிகி நாடகம் திரும்ப புனர் ஜீவிதம் பெற்று வருகிறது), அமோல்
பலேகர், மகேஷ் எல்குஞ்ச்வர் ஆகியோர் உள்ளனர் என்று தெரிந்து கொண்டேன்.
இவ்வளவு பரந்த அளவில் தேர்வும்,
இவ்வளவு பெரிய பரிசுத் தொகையும் நாடகத்திற்கென்று வேறு எதுவும் இருப்பதாக
எனக்குத் தெரியவில்லை. இருப்பினும் இவ்வளவு பெரிய மெடா பரிசு பற்றி போன
வருடமோ, இந்த வருடம் நடக்கவிருப்பது பற்றியோ ஏதும் செய்தி என் காதுகளுக்கு
எட்டவில்லை. பரிதாபமாகச் சீரழியும் நம் சாகித்திய அகாடமி தமிழ் பரிசு
பற்றியும், கோவில் சுண்டல் மாதிரி வினியோகிக்கப் படும் கலைமாமணி விருதுகள்
பற்றியும் நடக்கும் கொண்டாட்டங்கள், களேபரங்களை எண்ணிப் பார்த்துக்
கொண்டேன். இந்த விவரங்களையெல்லாம், இவர்கள் தேர்வுக்குழுவில் நான் பங்கு
கொள்ள சம்மதம் கேட்டு மெடா என்னைத் தொடர்பு கொண்டபோது நான் அவர்களைக்
கேட்டுத் தெரிந்து கொண்ட செய்திகள். வேறு எங்கும் எந்த தகவல் சாதனத்திலும்
கிடைக்காத செய்திகள். ஒரு பெரும் வர்த்தக நிறுவனம் நிறைய பணத்தைக் கொட்டி
ஆர்வத்துடன் ஒர் ஒழுங்கு முறையோடு தேர்வு செய்து கொடுக்கும் பரிசு பற்றி
எந்த செய்தியும் பரவலாக தெரியவில்லை. ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இருந்தாலும், என் நடமாட்டங்கள் எவ்வளவு குறைபட்டிருந்தாலும், தில்லி
யாயிற்றே, நாடகங்களாயிற்றே, சம்மதம் தெரிவித்தேன்.
என்னோடு இன்னும் நால்வர் தேர்வுக்
குழுவில் இருந்தார்கள். டாக்டர் ஜெய்தேவ் தனேஜா, தில்லி பல்கலைக்கழக
பேராசிரியர், ஓய்வு பெற்றவர், நாடகங்கள் பற்றி நிறைய புத்தகங்கள்
எழுதியுள்ளவர், அனுஜா சர்மா, பஞ்சாபிப் பெண், ஆனால், பங்களூராவில்
வசிப்பவர், ஆர்ட் டைரக்டர், நாடக விமர்சகர். தீபா கெஹ்லோட், மும்பை வாசி,
நாடகம், சினிமா என்று பல முனைகளில் ஈடுபாடு கொண்டவர். பின்னர் ஐந்தாவதாக
இருந்திருக்க வேண்டியவர், பேராசிரியர் ஆனந்த் லால், கல்கத்தா வாசி. Oxford
Book of Theatre Companion-ன் தொகுப்பாசிரியாக அவர் எனக்கு எற்கனவே
அறிமுகமானவர். ஆனால் அவர் பங்கு கொள்ளவில்லை. தான் சம்பந்தப்பட்ட நாடகம்
ஒன்று தேர்வுக்கு வருவதால், தான் தேர்வுக்குழுவில் பங்கு கொள்வது முறையல்ல
என்று ஒதுங்கிக் கொண்டவர். இன்றைய நம் தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும்
எதிராகச் செயல் பட்டுள்ளார் இந்த பேராசிரியர். எந்தத் தமிழ் பேராசிரியர்,
இலக்கியவாதி இப்படி ஒரு காரணத்தைச் சொல்லி கிடைத்த வாய்ப்பை உதறுவார்?
சாகித்திய அகாடமியின் முதல் தமிழ் பரிசை, தமிழ் ஆலோசனைக் குழுவின் தலைவர்,
டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளைக்கே அவரது பாரதி இன்கவித் திரட்டு க்குத்
தரப்பட்டது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ என்னவோ. தமிழ் பரிசின் முதல்
பிள்ளையார் சுழியே இப்படித்தான் சுழிக்கப்பட்டது. ஏனெனில் இது
சேதுப்பிள்ளை அவர்களோடு நிற்கவில்லை. அதன் பிறகு அவரது வழித்தடத்திலேயே
பின் வந்த சாகித்ய அகாடமியின் ஆலோசனிக் குழு உறுப்பினர்களே முறை வைத்து
பரிசை தாமே வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். ஆக அதன் இன்று வரைய ஜாதக
விசேஷங்கள் எல்லொருக்கும் தெரியும்.
சமரசம் எதற்கும் ஒத்து வராதவன்,
பிடிவாதக் காரன் என்றே அந்த நிறுவனத்திற்கு முன்னதாகவே நான்
அறிமுகப்படுத்தப்பட்டிருந்தேன். அந்த நிறுவனம் இதை எப்படி
அர்த்தப்படுத்திக்கொண்டதோ, அல்லது முதல் கட்டத் தேர்வுக் குழுவின்
சகாக்களும் தான் இதற்கு என்ன பொருள் கொண்டனரோ நான் அறியேன். தமிழ்
நாட்டில் இந்த மாதிரி அறிமுகப்படுத்தப்படும் ஆளுக்கு எந்த இடத்திலும்
நிராகரிப்பே முன் நிற்கும். நமக்கு அடி பணியாதவன் என்ற காரணத்திற்காகத்
தான் நிராகரிப்பு என்பது சொல்லப்படாது, 'மேட்டுக்குடி மனப்பான்மை',
'பார்ப்பனீய சிந்தனை' என்று இப்படி தயாராக இருக்கும் லேபிள்களில்
ஒன்றிரண்டு வீசப்படும். முடிந்தது கதை; பின் நிராகரிப்பிற்கான காரணங்களோ
வாதங்களோ தேவையே இல்லை. இது தமிழ்ப் பண்பு. மரபாகிவிட்ட, வேரூன்றிய
தமிழ்ப் பண்பு.
ஆனால் தேர்வுக்குழுவில் நான்
சந்தித்த சகாக்களும் சரி, ஆறு நாட்கள் காலை 10 மணியிலிருந்து இரவு எட்டு
மணி வரை தொடர்ந்து நாடகங்களைப் பரிசீலிப்பதும், விவாதிப்பதுமாகக் கடந்த
நேரங்கள், ஒவ்வொரு கணமும் நட்புணர்வுடனும், சீரிய கருத்துப்
பரிமாறல்களும், அனுபவ பரிவர்த்தனைகளும் நிறைந்த கணங்கள். சில சமயம்
அவர்கள் என்னைக் கேட்ட கேள்விகள் என்னைத் தலை குனிய வைத்தன. என்ன பதில்
சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. "ஆமாம், இதென்ன மேடையில் மைக்? மைக்
இல்லாமல் பேசமுடியாதா உங்களுக்கு? எல்லோரும் மைக் இருக்கும் இடத்திற்கு
நகர்ந்து சபையைப் பார்த்து உரக்கப் பேசுவானேன்?" இதற்கு நான் என்ன பதில்
சொல்லட்டும்? அபத்தமும் அசட்டுத் தனமுமான ஒரு வழக்கத்தை நான் எப்படி
ஆதரித்து பேசமுடியும்! 1961 லிருந்து நான் வட நாட்டு நகரங்களில் நாடகங்கள்
பார்த்து வருகிறேன். நம் அரும் பெரும் தமிழ் நாட்டைத் தவிர இந்த உயரிய
உத்தியும் பாரம்பரியமும் வேறு எங்கும் காணக்கிடைக்காது. எவ்வளவு காலம்
பின்னோக்கிப் போகமுடியும் என்று பார்த்தால், தில்லி AIFACS ஹாலில்,
பஹ¤ரூபி யின் புதூல் கேலா (இப்சனின் 'Doll's House') நினைவுக்கு
வருகிறது. சம்பு மித்ராவும் த்ருப்தி மித்ராவும் விளையாட்டும் சீண்டலுமாக
அன்னியோன்னிய தம்பதிகளாக காணும் காட்சி. அவர்கள் யதார்த்த வாழ்வின்
மேலெழாத குரலிலேயே அவர்கள் பேச்சு இருக்கும். மேடையின் குரல் அல்ல.
வீட்டினுள் கேட்கப்படும் அடங்கிய குரல். அது பால்கனியில் இருக்கும்
எனக்குத் தெளிவாகக் கேட்கும். மைக் இல்லை. யாரிடம் சொல்வது? யார்
கேட்பார்கள்? 40-50 வருடங்களாக இதே கண்றாவிக் கூத்து தொடர்கிறது, எனக்குத்
தெரிந்து. "எனக்குப் புரியாத விஷயங்களில் இது ஒன்று" என்று சொல்லிச்
சிரித்தால் அவர்களும் சேர்ந்து சிரிப்பதோடு பிரச்னை தீர்கிறது.
எதற்காகச் சொல்கிறேன் என்றால்,
நாங்கள் எல்லோரும் ஒரு அடிப்படையான ரசனை என்ற தளத்தில் கலை உணர்வு என்ற
தளத்தில், ஒன்று பட்டவர்களாக இருந்தோம். நாடக பூர்வமான விவாதங்கள்
கருத்தொற்றுமை சாத்தியமாயிற்று. கருத்து வேறு பட்ட இடங்களில்,
அப்படிப்பட்ட இடங்கள் இருந்தன தான், மூன்று பேருக்கு நாலாமவர் விட்டுக்
கொடுத்தல் இயல்பாயிற்று, ஏனெனில் அவை சின்ன விவரங்களைச் சார்ந்தனவாக
இருந்தன.
நல்ல அனுபவம் தந்த மகிழ்ச்சிகரமான
நாட்கள். சுமார் 70 நாடகங்கள் பார்வைக்கு வந்திருந்தன. என் கணக்கு கொஞ்சம்
குறைவாக இருக்கலாம். கிட்டத்தட்ட எண்பது என்றும் சொல்லப்பட்டது.
வெகு சுலபமாக ஏக மனதாக
ஒதுக்கப்பட்ட நாடகங்கள் நிறையவே இருந்தன. எந்த அபத்தத்தையும் வைத்துக்
கொண்டு வீம்புக்குச் செய்யப்பட்ட விவாதங்கள் ஏதும் இருக்கவில்லை. நம்மவர்
களுக்கு கேட்க ஆச்சரியமாக இருக்கும். தமிழ் நாட்டு நிலைக்கு மாறாக,
கன்னடத்திலும், வங்காளியிலும் ஒரு வளமான நாடக இயக்கம் இருந்து வருகிறது.
தமிழை விட மலையாளத்தில் பாரம்பரிய நாடக மரபுகள் இன்றும் காப்பாற்றப்பட்டு
வருகின்றன. ஆயினும், இந்த மொழிகளிலிருந்து போட்டிக்குத் தகுதியான
நாடகங்கள் வரவில்லை. என் ஞாபகத்தில் நின்ற ஒரு நல்ல நாடகம், மாக்பெத்
மலையாளத்தில். ஆனால் இறுதித் தேர்வில் அது பின் தங்கிவிட்டது. வேடிக்கையாக
இருக்கும். வங்காள நாடகம் ஒன்று எங்கள் பார்வைக்காக மாத்திரம் என்று, அது
வெகு தாமதமாக, நாங்கள் பரிசீலணையில் ஈடுபட்டிருக்கும்போது வந்தது,
'தண்ணீர், தண்ணீர்' வங்காள மொழியில். மிக முக்கியமான, மக்களின்
உயிராதாரமான பிரச்சினை பற்றியது, அரசியல் வாதிகளின் சுரணையற்ற
பந்தாட்டத்தில் நீடித்து ஜீவிக்கும் பிரசினை தான். ஆனால் நாடகமாக, பின்னர்
சினிமாவாக அது என்னை கவரவில்லை. அதிலும் சினிமாவில் அது படு மோசம். ஏதோ
பரிசெல்லாம் பெற்றது தான். இயக்குனர் திலகத்தின் கைவரிசை தான். ஆனால்
வங்காளியில் அது மொழிபெயர்க்கப்பட்டு மேடையேற்றப்படுவதன் உந்துதல் என்னவாக
இருக்கும்! வங்காளத்தில் ஏது தண்ணீர் பஞ்சம். அங்கு வெள்ளம் தான் மக்களின்
பகைவன். அது எத்த்தகைய பாதிப்பை வங்காளிகளுக்குத் தரும்? ஆனால், ஆச்சரியம்
எனக்கு அவர்கள் மேடையேற்றம் பிடித்திருந்தது. மிக உருக்கமான சித்தரிப்பு,
மிக எளிமையான உயிரோட்டம் மிகுந்த மேடையேற்றம். மக்கள் கூட்டம் கூட்டமாக
மேடையில் தோன்றும் போது அது எவ்வளவு நம்பகமாக, லாவகமாக
கையாளப்பட்டிருந்தது. நான் சொன்னேன். "வங்காளிகளுக்கு தண்ணீர் பஞ்சம்
பற்றி எவ்வளவு அனுபவம் இருக்குமோ தெரியாது. ஆனாலும், இதை எங்கள் தமிழ்
நாடக சினிமா அசல்களைவிட பல மடங்கு உயர்வாக நான் மதிக்கிறேன்.
வங்காளிகளுக்கு இத்தகைய பிரசினைகளை கையாள்வதிலும் மேடையேற்றத்திலும் ஒரு
நீண்ட மரபு IPTA (Indian Peoples' Theatre Association) காலத்திலிருந்து
உண்டு. அது அவர்களுக்கு கை கொடுத்திருக்கிறது." என்றேன். "ஆமாம் நொபன்னா
விலிருந்து " என்றார் டாக்டர் தனேஜா. அவர் விஷயம் அறிந்தவர். ரசனையும்
கொண்டவர். உடனே புரிந்து விட்டது.
நாம் அறிந்த, ஹிந்து வில்
சங்கீதம் பற்றியும், சர்வதேச சினிமா, இலக்கியம் பற்றி எழுதும் கௌரி ராம்
நாராயணின் ஆங்கில நாடகம் Dark Horse போட்டியிலிருந்தது. இது முன்னரே போன
வருடம் தேசீய நாடகப் பள்ளி நடத்திய ரங்க் மஹோத்சவத்தில் பங்கு கொண்டு அது
பற்றி நான் எழுதியிருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் காலமான அருண்
கொலாட்கர் என்ற மராத்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியவர் பற்றி
தான் முன்னர் பேட்டி கண்டபோது பதிவு செய்திருந்த குறிப்புகளைக் கொண்டு
திரும்ப கவிஞரையும் அவர் உலகையும், அவர் உலகை உருவாக்கிய மராட்டி
சரித்திரத்தையும் அனுபவங்களியும் நினைவு கூறும் சித்திரம் ஒன்று. சத்யஜித்
ரே, ம்ருணால் சென் படங்களில் நடித்திருந்த த்ரித்திமான் சட்டர்ஜி அருண்
கொலாட்கராக நடித்திருந்தார். அவர் உருவாக்கித் தந்த கொலாட்கர்
சித்திரமும், சவிதா நரசிம்ஹன் பாடும், மீரா, துக்காராம் பாடல்களும்,
அனுபவிக்க வேண்டிய விஷயங்கள். கடைசித் தேர்வில், இந்த நாடகம் சிறந்த ஒலிப்
பதிவுக்கான பரிசைப் பெற்றது. கௌரி ராம் நாராயண் தேர்வுக் குழுவினரால்
சிறப்பாகக் குறிப்பிடப்படும் (Special Mention) கௌரவத்தையும் பெற்றார்.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம், தென்
பிராந்தியத்திலேயே எது மிக மோசமான நாடகப் பங்களிப்பைத் தருகிறது என்று
நான் கருதுகிறேனோ அந்த பிராந்தீயத்திலிருந்துதான் இரண்டு நாடகங்கள்
சிபாரிசு பெற்றன. ஒன்று கௌரி ராம்நாராயணனது ஆங்கிலமாகப் போயிற்று.
அடுத்தது, புதுச் சேரி ஆறுமுகத்தின் பேய்த் தேர். மறுபடியும் ஆறுமுகம்
தத்துவ விசாரங்களிலும் வான சாஸ்திரத்திலும் தனக்குள்ள ஈடுப்பாட்டைத் தான்
நாடகமாக்கினார். கருஞ்சுழிக்குப் பிறகு மறுபடியும் தத்துவ விசாரம்.
மாணிக்க வாசகர் குரல் மறுபடியும் கேட்டது. ஒரு நீண்ட கவிதையையே தன்
நாடகத்திற்கான பின் குரலாக்கினார். அது எவ்வளவு பேருக்கு புரியுமோ, நான்
எவ்வளவு புரியவைக்க முடியும் என்ற என் கவலைகளுக்கு இடம் வைக்காமல்,
மேடையில் இடை விடாது நீண்ட நேரம் சுழலும் கோளங்கள், உருவாகி, ஒன்று
பலவாகி, பின் மறையும் கோளங்கள் தேர்வுக்குழுவின் அங்கீரத்தை விவாதத்திற்கு
இடமின்றி பெற வைத்தது. ஆறுமுகத்தின் தத்துவ விசாரமும், அதனால் தூண்டப்பட்ட
டாக்டர் ரவீந்திரனின் ஓளி ஜாலங்களும் கடைசித் தேர்வுக்கு பேய்த்தேர்
நாடகத்தை இட்டுச் சென்றன. நான்கு மொழிகளைக் கொண்ட தென்
பிராந்தியத்திலிருந்து கடைசிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே
தமிழ் நாடகம், பேய்த்தேர் தான். தமிழை விட கன்னடமும் மலையாளமும் இன்று
நாடகத் துறையில் முன்னிற்கின்றன. இருப்பினும் பேய்த்தேர் தான் கடைசிப்
போட்டிக்குத் தேர்வு பெற்று விழாவில் பங்கு பெற தில்லி சென்றதென்றால் அது
முனைவர்கள் ஆறுமுகத்திற்கும் ரவீந்திரனுக்கும் பெருமை தான். அதற்கும் மேல்
செல்ல முடியாது போனதற்கு அதிகம் வருந்த வேண்டியதில்லை என்று எனக்குத்
தோன்றுகிறது.
அடுத்து என்னை மிகவும் கவர்ந்த
எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்த செகாவ் கி துனியா
(செகாவின் உலகம்) என்னும் ஆறு செகாவ் கதைகள் நாடகமாக்கப்பட்டதைச்
சொல்லவேண்டும். எனக்கு பல ஆச்சரியங்கள் இதில் மிகச் சிறந்த நடிப்புத்
திறன்களை இதில் பார்க்க முடிந்தது. முதலாவதாக அமிதாப் ஸ்ரீவாஸ்தவா. இவர்
தேசீய நாடகப்பள்ளியின் நடிப்புக்கலை மாணவர் தான் என்றாலும் அவர் நடித்து
என் மனத்தில் பதிந்த நாடகம் எதுவும் இல்லை. ப்ரெக்டின் நாடகம் ஒன்றிற்காக,
அர்த்துரோ உரியின் எழுச்சியும் வீழ்ச்சியும் - ஹிட்லரைக் கேலி செய்யும்
நாடகம் - அதை மேடையேற்றியவர் நம்மூர் நவாப் ராஜமாணிக்கம் ஸ்டைலில் (ஸ்ரீ
விஷ்ணு திருப்பாற்கடலில் எழுந்தருளுவார். அவன் தலைக்குப்பின் மின் விளக்கு
சுழலும் ஆதிசேசன் மடியில் படுத்தவாறு மேடையின் கீழிலிருந்து அவர்
மேலெழுவார்). ஒரு ட்ராக்டரையே மேடைக்கு கொணர்ந்தவர். தமாஷாக இருக்கும்.
ஆனால் இந்த செகாவ் கதைத் தொகுப்பில் பல கதைகளில் பல வேடங்களில் வருவார்.
அவர் நடிப்பு பிரமிக்க வைத்தது. அதை நினைத்து நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
ஒரு கதையில் பாங்கின் அதிகாரி அவர். ஒரு முதிய ஸ்திரி தன்
துக்கத்தையெல்லாம் அவரிடம் சொல்லி நச்செரிப்பாள். அவள் மனம் பேதலித்தவள்.
இவள் நச்செரிப்பு தொடரும். அவர் பாங்கு இதில் அவளுக்கு உதவ முடியாது
என்பதைப் புரிய வைக்க படாத பாடு படுவார். இரண்டு பேரின் நடிப்பும்
அரங்கத்தையே ஆட வைத்து விட்டது. அந்த பைத்தியக்கார ஸ்திரீ யாக நடித்த
நூதன் சூர்யா தேசிய நாடகப் பள்ளியில் பயின்றவர் தான், முப்பது
வருடங்களுக்கு முன். சிறந்த துணை நடிகை என பரிசு பெற்றதும், உணர்ச்சி
வசப்பட்டு அழுகையின் முனைக்கு வந்து விட்டார். இத்தகைய நடிப்புத் திறன்
பெற்றவர்கள் எல்லாம் எங்கோ மூலையில் ஒதுக்கப்பட்டு விடுகிறார்கள். எல்லாம்
வேடிக்கையான கதைகள் மிகச் சிறப்பாக நடிக்கப்பட்டன. ஒரு தந்தை தன் மகனின்
தன் வாலிபப்பருவத்தை உணரச் செய்ய ஒரு தாசியின் துணையை நாடுகிறார்.
கடைசியில் மகன் இன்னும் வாலிபனாகாது தன் அசட்டு வட்டத்திலேயே இருந்து
விடுகிறான். இப்போது ஓய்வு பெற்றிருக்கும் கடற்படை வீரன் ஒருவன்,
பிழைப்புக்காக வருவோர் போவோரிடம் பணம் கொடுத்தால் கடலில் மூழ்கிக்
காட்டுவதாகச் சொல்கிறான். இன்னொரு கதையில் ஒரு கணவனையே தூதனாக்கி அவன்
மனைவியைக் கவரும் தன் தொழில் சாமர்த்தியத்தைக் காட்டுகிறான். இப்படி
எல்லாம் தமாஷான கதைகள் மிகச்சிறப்பாக நாடகமாக்கப்பட்டு நடிக்கப்பட்டு
விடுகின்றன.
இப்சனின் பீர் கிண்ட் அதன் நாடக
மேடை சலனங்களுக்காகவும், ஒரு கால கட்ட உடை அலங்காரத் தயாரிப்புக்காகவும்
நல்ல முயற்சியாகப் பட்டது. ஆனால், அது நாடகமாக்கலில் அனாவசியமாக வளவளவென
வளர்த்தப்பட்டது. ஒரு அளவுக்கு நல்ல நடிப்பு என்று தோன்றியது கூட அலுக்க
வைத்துவிடுகிறது. சொல்வதற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதும் இல்லை
யெனில்.
வினோதினி (1863-1941) 19-ம்
நூற்றாண்டில் கிரீஷ் சந்திர கோஷ் வங்க நாடகத்திற்கு புத்துயிர் கொடுத்து
அதற்கு ஒரு வளமான சரித்திரம் படைத்துக் கொண்டிருந்த காலத்தில், கிரீஷ்
சந்திர கோஷின் தூண்டுதலாலும் தந்த ஆதரவினாலும் வங்க நாடக மேடைக்கு வந்த
ஒரு நடிகை. அதற்கு முன் அவர் வறுமையின் காரணமாக சமூக
பெருந்தனக்காரர்களுக்கு வைப்பாட்டியாக இருந்தவர். தன் வறுமையிலிருந்து மீள
தாசியாகிப் போன அவமானத்திலிருந்து மீள, தன் திறமைகளைக் கொண்டு கௌரவமும்
புகழும் தரும் நாடக மேடைக்கு வந்த பிறகும், எதிலிருந்தும் முழுதும் மீளும்
வகை காணாது அல்லாடிய துயரமும், புகழும் அவமானமும் மிக்க வாழ்க்கையை தன்
வயோதிகத்தில் திரும்பிப் பார்க்கிறார் வினோதினி. அவரது நீண்ட துயரமும்
அவலமும் மிக்க வாழ்க்கையின் பல கட்டங்களையும் மன நிலைகளையும் பிரதிநித்வப்
படுத்தும் ஐந்து வினோதினிகளை மேடையில் உலவ விடுகிறார்கள் நடி வினோதினி
நாடகத்தை உருவாக்கிய நாடகப் பிரதி ஆசிரியையும், இயக்குனர் அமால் அல்லானா
வும். ஐந்து வினோதினிகளும் பல நிலைகளைப் பிரதிபலித்தாலும், தன் கதையைச்
சொல்லும், எழுதும் வினோதினி தன் வயோதிகத்தில் தன் நினைவுகளைச் சொல்லும்
வினோதினி. ஐவரும் ஐந்து மன நிலைகளும் ஒருவருக்கொருவர்
அளவளாவிக்கொள்கின்றனர், மோதிக் கொள்கின்றனர், நிறை செய்துகொள்வதும்
அவர்கள் தான். வினோதினியின் கலைத் திறனில் ஆர்வம் கொண்டு உற்சாகப் படுத்தி
ஆதரவாக இருந்தாலும், அவளது மனப் போராட்டங்களை அவளே தான்
தீர்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார். ஆண்களே பெண்வேடங்களைத் தரித்த
கட்டத்திலிருந்து பெண்கள் நாடக மேடை ஏற வழி அமைத்துக்கொடுத்த கட்டம் அது.
19- நூற்றாண்டு பிற்பகுதி. அந்த காலத்தில் வினோதினி கதா நாயகியாக பங்கு
கொண்ட நாடகங்களிலிருந்து அந்த ஆரம்ப காலத்தில் வங்க நாடக மேடையின்
நாடகங்களைப் பார்த்து அதன் ஈடுபாடுகளின் தரத்தை அறியலாம்: பங்கிம்
சந்திரரின் மிருணாலினி, மைக்கேல் மது சூதன் தத்தின் மேகநாத் வதம், சைதன்ய
லீலா முதலியவை அவற்றுள் அடங்கும். இது 19-ம் நூற்றாண்டு
மத்திமத்திலிருந்து கடைசிவரையான கால கட்டத்தில். அதற்கு பல தலைமுறைகள்
பின் தொடங்கும் நம் தமிழ் நாடகமும் தன் ஆரம்ப காலங்களில் எத்தகைய கதைகளை
நாடகமாக்கியது என்று நாம் சற்று யோசிக்கலாம். உடன் நினைவுக்கு வருவன சில
மாதிரிக்கு: பவளக்கொடி, நல்ல தங்காள், வள்ளி திருமணம், போன்றவை. அவை
எதுவும் இலக்கிய அல்லது நாடக இலக்கிய அந்தஸ்து பெறத் தக்கவை தானா என்றும்
நாம் யோசிக்கலாம். இன்னும் ஒன்று. நடிகை வினோதினியின் சிறப்பை பலர்
சொல்லக்கேட்டு, ஸ்ரீ ராமக்ரிஷ்ண பரமஹம்ஸரே வினோதினியின் நாடகம் பார்க்க
வந்து, அவரைப் பாராட்டி ஆசீர்வதித்தார். இப்படி நாம் யாரையாவது
உயர்த்தியிருக்கிறோமா, அல்லது இந்த உயர்வுக்கு யாராவது
தகுதியடைந்திருக்கிறார்களா என்று நாம் யோசித்தேன். நம் வரலாறுகள் நம் சமூக
மதிப்புகளால் வர்ணம் தீட்டப்பட்டவை. எதை உண்மை என்று எடுத்துக்கொள்வது.
அவர்கள் தான் தகுதியற்றவர்களா அல்லது நாம் அவர்களை தகுதியற்றவர்களாக உதறி
எறிந்தோமா?
நாடகப் பிரதி, வினோதினியே தன்
அந்திம காலத்தில் தன் வாழ்க்கைப் போராட்டங்களையும் நினைவுகளையும் எழுதி
வைத்துள்ள ஆமார் கொதா (என் கதை) வைத் தழுவி எழுதப்பட்டது. இதற்கு முன்
மராட்டிய நாடகத்திலிருந்தும் சினிமாவிலிருந்தும் தெரியப்பட்ட ஹம்ஸா
வாடேகர் என்ற நடிகையும் தன் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியிருக்கிறார். ஹம்சா
வாடேகரும் வினோதினி பட்ட அல்லல்களையே தன் வாழ்க்கையிலும் பட்டிருக்கிறார்.
அந்த காலத்தில் எல்லோருக்கும் இதே கதி தான் போலும். அதைத் தான் ஷ்யாம்
பெனெகல் பூமிகா என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார். மராத்தியில் சுய
சரிதம் ஒரு வளமான பகுதி. நமக்கு சுயசரிதைகள் ஒத்து வருவதில்லை. அப்படி
எழுதப்படுபவை மு. கருணாநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ரகத்தில் தான்
இருக்கும் பெரும்பாலும். சரி விஷயத்திற்கு வருவோம்.
அமல் அல்லானா என்றாலே அந்தப்
பெயர் எந்த நாடகத்திற்கும் அவர் தரும் பிரும்மாண்ட தயாரிப்பை பிரகட னப்
படுத்தும். மேடை முழுதிலுமே கண்ணாடி போன்ற பளபளத்துப் பிரதிபலிக்கும் தளம்
நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஆடை அலங்காரங்களும் காலத்தைச் சொல்லும். சில
பாட்டுக்கள் பழங்காலத்துக்கு இட்டுச் சென்றன. நான் விரும்பியது, 19-ம்
நூற்றாண்டின் இடைக்காலத்திய வங்க நாடக மேடையையும், வங்கத்தையும் நினைவு
படுத்தும் ஒரு தயாரிப்பை. அது எனக்குக் கிடைக்கவில்லை. அது அமல் அல்லானா
போன்ற செல்வாக்கு மிக்கவர்க்கு சாத்தியமே. ஆனால் அவர் தன் பிரும்மாண்ட
கற்பனைகளைச் செயல்படுத்தி பிரமிக்க வைக்க விரும்புவதாகத் தோன்றுகிறது. நம்
தமிழ் சினிமாக்களில் கிராமக்கதையாக இருந்தாலும், நடன காட்சிகளுக்கு ஆர்ட்
டைரக்ஷன் என்று சொல்லிச் செய்யும் 'அடி ஆத்தே என்னாமாத்தான் செஞ்சாங்களோ,
என்னா செட்டு! என்னா செட்டு!' சமாச்சாரமாகத் தான் எனக்குப் பட்டது. நடி
வினோதினி சிறந்த உடை அலங்காரத்திற்கும் சிறந்த ஓளி அமைப்பிற்குமான
பரிசுகளையும், சிறந்த நடிப்பிற்கான பரிசுகளை ஐந்து வினோதினிகளும்
பெற்றார்கள்.
பலி ஔர் சம்பு (பலியும்
சம்புவும்) என்ற நாடகம் மும்பையிலிருந்து வந்த ஹிந்தி நாடகம். இரண்டு
வயோதிகர்கள் ஒரு முதியவர் இல்லத்தில் தம் முதுமைக்காலத்தைக் கழிக்க
வந்தவர்களிடையே எழும் அன்றாட சிக்கல்கள் சின்னச் சின்ன சண்டைகள், இரண்டரை
மணி நேரம் எப்படிக் கழிந்ததென்றே தெரியாது நாடகத்தில் மனம் ஆழச் செய்யும்
நடிப்பு. இருவர் மோதலுக்கும் காரணம் ஒருவர் கடந்த காலத்தின் மகோன்னதம்
கழிந்துவிட்டதன் ஆதங்கத்தைக் கோபமாக வளர்த்துக் கொள்பவர். மற்றவர் இதற்கு
நேர் எதிர். இருவருமே தனித்து இருக்க வந்துவிட்டவர்கள். சுதீர் பாண்டே,
குமுத் மிஸ்ரா இருவருமே நெடுங்காலமாக, நாடகத்திலும், தொலைக்காட்சிகளிலும்
நடித்து அனுபவம் மிக்கவர்கள். வெற்றுப் பெருமையும், கிண்டலும், சீண்டலும்,
கோபமும், பின் சமாதானமுமாக மேடையில் ரகளை செய்யும் சின்னச் சின்ன
சம்பாஷணைகள். இதில் ஒருவருக்கு, சுதீர் பாண்டேக்கு அவரது சிறந்த
நடிப்பிற்கான பரிசைப் பெற்றார். தான் மிகுந்த பாசம் வைத்திருந்த பெண்ணை
அவள் காதல் கல்யாணத்திற்குப் பிறகு இழந்து விட்டவர். பெண் இறந்த துக்கம்.
தனித்து விடப்பட்டவர் மரணத்துக்குப் பின்னும் ஏமாற்றப்படுபவார் என்பதை
அவர் அறிய மாட்டார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு
அசாம் படும் அவதி சொல்லிச் சாத்தியமில்லை. வைஷ்ணவம் பரவலாக வேரூன்றிய மண்
அது. அபலைகளான மக்களுக்கு ஆதரவளிக்கும் சாத்ராக்கள். பாரம்பரிய வழக்கங்கள்
இன்னமும் தொடர்கின்றன. சிறு வயதில் கணவனை இழந்த துர்கா ஒரு சாத்ராவில்
தஞ்சமடைகிறாள். அந்த பிராமண விதவையின் ஆசைகள் இனி வெகு சிலவே. கணவனின்
அஸ்தியை கங்கையில் கரைக்கவேண்டும். தலையை மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்.
கணவன் வீட்டார் அழைப்பை எதிர் பார்த்துக்கொண்டு சாத்ராவில் தன் நாட்களைக்
கழிக்கிறாள் துர்கா. சாத்ராவில் வாழும் இன்னொரு விதவை ஹோரு கோகானி. தன்
கணவன் விட்டுப் போன நிலத்தை பார்த்துக்கொள்ள அவள் நம்பியிருப்பவன்
போதைக்கு ஆளானவன். ஹோருவை முடிந்த அளவு ஏமாற்றுகிறவன்.
அது கம்யூனிஸ்டுகள் தலையெடுக்கும்
காலம். சாத்ராவில் வாழும் பிராமண விதவைகளை ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு
உதவுவது சாஸ்திரங்கள். விதவைகளுக்கு சாஸ்திரங்களில் பெரும் நம்பிக்கை.
மதிப்புகளும், சமூகமும் வெகு
வேகமாக மாறிவரும் ஒரு கால கட்டத்தில், பழமையில் நம்பிக்கை கொண்டு வாழும்
சாதாரண எளிய மக்கள் தான் அவதிப் படுகிறார்கள். தர்மங்களில்
நம்பிக்கையற்றவர்கள் மாறி வரும் சமூகத்திலும் எப்படியோ பிழைத்து
விடுகிறார்கள். தான் நடக்கும் மண் தன் காலடி பட்டு தீட்டுப்
பட்டுவிடக்கூடாது என்று தன் பாதங்களில் வெற்றிலை சுற்றிக் கட்டிக்கொண்டு
நடக்கும் பிராமண விதவை, தன் லக்ஷ¢யமே கங்கை சென்று கணவன் அஸ்தியைக்
கரைத்து தலை மொட்டை அடித்துக் கொள்வது தான் என்று எண்ணும் ஒரு இளம் பிராமண
விதவை, மதிப்புகள் மாறி வரும் சமூகத்தில் எப்படி நிம்மதியாக தன்
வாழ்க்கையைக் கழிக்கமுடியும்? சாத்ராக்களும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்க
முடிவதில்லை.
மிகவும் மனதை நெகிழவைக்கும் இந்த
அபேக்ஷா என்னும் நாடகத்தை எழுதியவரும் இயக்குனருமான பஹரூல் இஸ்லாம் தேசீய
நாடகப் பள்ளியின் பழம் மாணவர். இவர் நாடகப் பயிற்சி நடத்திக்
கொண்டிருக்கும் போதெல்லாம் தூரத்திலிருந்து தனிமையில் மௌனமாகப்
பார்த்துக்கொண்டிருந்த 'அம்மா' வின் தனிமை வாட்டும் சோகம்தான் இந்த
நாடகத்திற்கு வித்தும் கருவும் அளித்தது என்கிறார், பஹரூல் இஸ்லாம்.
'அம்மா' என்று பஹரூல் இஸ்லாம் குறிப்பிடுவது சாத்ரா ஒன்றில் அடைக்கலம்
புகுந்த ஏதோ ஒரு பிராமண விதவையாகத் தான் இருக்கும் என்று நான் ஊகித்துக்
கொள்கிறேன். வைஷ்ணவமும் சாத்ராக்களும் கொண்டுள்ள சம்பிரதாயங்களையும்
மதிப்புகளையும் வாழ்முறைகளையும் இவ்வளவு பரிவோடும் மனிதாபிமானத்தோடும் தன்
நாடகத்தில் பதிவு செய்து அது மேடையேற்றவும் பஹ்ரூல் இஸ்லாமுக்கு
சாத்தியமாகியிருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மிக எளிய அதே சமயம்
மிக சக்தி வாய்ந்த மேடையேற்றம். துர்காவாக நடித்த பாகீரதியும், ஹோரு
கோகர்ணியாக நடித்த ·பெரோஸா பேகமும் மிக உருக்கமாக நடித்திருந்தனர்.
அவர்களில் ஒருவருக்கு சிறந்த துணை நடிகைக்கான பரிசு கிடைத்தது.
காட்டன் 56, போலியெஸ்டர் 84 என்ற
தலைப்பே வேடிக்கையாக இல்லியா? தலைப்பு தான் வேடிக்கை. இந்த வேடிக்கைத்
தலைப்புக் கொண்ட நாடகம் ஒரு மனித அவலம் பணப் பேராசை கொண்ட முதலாளிகளாலும்
அவர்களுக்குத் துணைபோகும் அரசியல் வாதிகளாலும் தொடர்ந்து நிகழ்த்தப்
படுவதைச் சொல்கிறது. பம்பாய் பஞ்சாலைகள் நிறைந்த நகரம். தொழில்
வளர்ச்சியும் நாகரீக மாற்றங்களும், பஞ்சாடைகள் போய் போலியெஸ்டர் சந்தையை,
மக்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு, பஞ்சாலைகள் மூடப்பட்டு
தொழிலாளர்களுக்கு கணிசமான ரொக்கப்பணத்தைக் கொடுத்து (அதை அவர்கள் ஆசையுடன்
வாங்கிக் கொண்டார்கள்) வேலையிலிருந்து நீக்கி, பஞ்சாலைகள் இருந்த இடம்
மனைகளாக பல கோடி மடங்கு அதிக விலையில் விற்கப்பட்டு லாபம்
சம்பாதிக்கப்பட்டது. வெகு சீக்கிரம், மோசம் போனபிறகு தான், தாங்கள்
ஏமாறியது தொழிலாளர்களுக்குத் தெரிந்தது. தொழில் வளர்ச்சியா?, நகர
வளர்ச்சியா? அல்லது எளிய மக்களை வஞ்சித்து ஏமாற்றிய செயலா? பம்பாய்
தொழிலாளர் வசித்த கிரண்காவ்(ன்) பகுதியனரின் வாழ்க்கையின் சோகத்தைச்
சொல்கிறது இந்த நாடகம் அந்த வாழ்க்கையை கள ஆராய்வு செய்து நாடகமாக்கித்
தந்தவர் நாடகாசிரியரும் இயக்குனருமான ராமு ராமனாதன். கிரன்காவ்(ன்) தெரு
முனையில் நாடகம். பாட்டும் ஆட்டமும், பாரம்பரிய கதை சொல்லலுமாக இக்கதை
மேடையில் விரிகிறது. மராத்தி தான் ஆனாலும் வெகு சுவாரஸ்யமாக கதை
சொல்லப்படுகிறது. எரியும் பிரச்சினை, கவர்ச்சிகரமான வார்த்தைகளால் மூடி
மறைக்கப்படும் பிரச்சினை நாடகமாகிறது. விழாவில் இந்நாடகம் பல பரிசுகளைப்
பெற்றது. சிறந்த நாடகம், சிறந்த நாடகப் பிரதி பரிசுகளோடு, இதில் பாடி, கதை
சொல்லி, பாத்திரமாகவும் நாடகம் முழுதும் பிரபாவித்த நாகேஷ் போஸ்லேக்கு
சிறந்த நடிகர் பரிசும் கிடைத்தது. ராமு ராமனாதனுக்கு சிறந்த நாடகாசிரியர்
பரிசு.
கடைசியாக 'து' என்னும் நாடகத்தைப்
பற்றிச் சொல்லி முடித்து விடவேண்டும். 'து' என்றால் நீ என்று பொருள். இந்த
'நீ' தமிழ் அகப்பாடல்களில், பக்திப் பாடல்களில் வரும் 'நீ'
எனக்கொள்ளவேண்டும். மராத்தி நாடகம். ரூமியின் கவிதைகளைக் கொண்டே ஒரு
நாடகம். மகா ராஷ்டிராவில் மராத்தியில் ரூமி ஏதும் அப்படி ஒன்றும்
அறியப்பட்டவரில்லை. பஞ்சாப், உத்தரபிரதேசம், பீஹார் என்றால் சரி. ஆனால்
துகாராமும் ஞானேஸ்வரும் வாழ்ந்த மகாராஷ்டிர மண்ணில்? காதல் கவிதைகள். அந்த
காதல் மனித பாசத்திலிருந்து மேலெழுந்து தன்னை மறந்து வேறு ஒரு பொருளுக்கு
இட்டுச் செல்லும் காதல். நம் தமிழ் அகப்பாடல்கள், பின்னர் பக்திப்
பாடல்களுக்கு வழி வகுத்தது போல. இந்த நாடகத்தைப் பற்றி முக்கியமாகச் சொல்ல
வேண்டியது தமிழில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. The most
undramatic drama; என்றும் a very enjoyable theatrical experience
என்றும் சொல்ல வேண்டும். நாடகீய குணங்கள் ஏதும் அற்ற நாடகம்,. மிகுந்த
ரசானுபவம் தந்த நாடகம் என்று சொல்லலாமா?
ஒரு இளம் பெண். ஒரு வாலிபன்.
காதல் தமக்கு இன்பம் தருவதால் காதலிப்பவர்கள். தம்மை அழித்துக்கொண்டு
காதலிப்பவர்கள் அல்ல. காதல் என்னும் எண்ணத்தைக் காதலிப்பதால் உண்மைக்
காதல் தெரியாது போகிறது. தன் மீது கொண்ட காதலே காதல் என்ற நினைப்பும்
உண்மைக் காதலை மறைக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். அரசன் தன்னை அந்தப்
பெண் காதலிக்கவேண்டும் என்று விரும்புகிறான். அவனும் உண்மைக் காதலை
அறியாதவன் தான். அவனும் அந்த பெண்ணை இழந்து விடுகிறான். ஒவ்வொருவரும்
அவரவர் எதை தம் சந்தோஷம் என்று நினைக்கிறார்களோ அதைத் துறந்தால்தான்
உண்மைக் காதலை அடைவார்கள். ஒரு ·பக்கீர் எதிர்ப்படுகிறான். அவன்
விடுதலை பெற்றவன். ஞான ஒளியில் பிரகாசிப்பவன். அவனுடைய உள்ளத்தை
அறிந்தவர்கள் விடுதலை பெறுகிறார்கள். உண்மைக் காதல் என்னவென்று
அறிகிறார்கள். தம்மின் 'தான்'-ஐ அழித்துக் கொள்கிறார்கள்.
இப்படி சுமார் ஐம்பது ரூமியின்
கவிதைகளைக் கோர்த்து ஒவ்வொரு கவிதைத் தொகுப்பின் உணர்வு நிலைகளை
நிகழ்வுகளாக்கி நடிக்கப்படுகிறது, 'து'. மெல்லிய உணர்வுகளின்
வெளிப்பாடுகள். கோப தாபங்கள், உணர்ச்சிக் கொப்பளிப்புகள், சீற்றங்கள்,
ஆரவாரக் கொண்டாட்டங்கள் ஏதும் இல்லை. சன்ன ஒலியில் காற்றில் மிதந்து வரும்
சங்கீத இழைகள் போல, ஒரு அனுபவம்.
இந்தியாவின் எல்லா
மூலைகளிலிருந்து, எல்லா மொழிகளிலிருந்தும், எத்தனையோ வாழ்க்கை, கலாச்சார
வேறுபாடுகள் கொண்டு நாடகங்கள் எத்தனையோ வண்ணங்களில் மேடையேறுகின்றன.
அவற்றின் நல்ல மாதிரிகள் சிலவற்றைக் காணமுடிந்தது ஒரு சந்தோஷம் தரும்
அனுபவம்.
வெங்கட் சாமிநாதன்/7.4.07
-------------------------------------------------------------------------------------------------
இலக்கியம்!
விதி விலக்கான சில ஆச்சரிய
நிகழ்வுகள்
- வெங்கட் சாமிநாதன் -
தமிழ் நாட்டில் சொல்லும்
வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தத்தைக் காணமுடியாது போய் வருகிறது.
வார்த்தைகளே அர்த்தமிழந்து போயுள்ளன. மொழி செத்துப் போனதற்குக் காரணம்,
மொழியின் குற்றமில்லை. மொழிக்கு அதன் அர்த்தத்தை நாம் கொடுப்பதில்லை. அரசு
என்று சொன்னால் அது மக்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும், வளப்படுத்தும்
முன்னெடுத்துச் செல்லும் ஒன்றாக நினைப்போம் ஆனால் அரசே நாட்டின்
வளத்தையெல்லாம் திட்டமிட்டு அழித்து வரும் சக்தியாக மாறியுள்ளது. சட்டக்
கல்லூரி என்றால் அங்கு சட்டம் கற்பிக்கும் இடம் என்று நினைக்கிறோம் ஆனால்
அது மாணவர்களே ஒருவரை ஒருவர் கொலை வெறியோடு தாக்குமிடமாகக் காண்கிறோம்.
சமூக நீதி என்கிறார்கள். அங்கு தான் ஒவ்வொரு ஜாதியும் அதன் எண்ணற்ற
கிளைகளும் இனம் காணப்பட்டு, அதன் வளர்ச்சிக்கு வழி வகை செய்ய கட்சிகளும்
தொடங்கி ஒவ்வொரு ஜாதிக்கும் சலுகைகள் பெற்று, சீரும் சிறப்புமாக ஜாதிகள்
வளர்க்கப் படுகின்றன. காவல் துறை சாதாரண மக்களுக்குக் காவலாக துணையாக
இருக்கும், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால்,
அவர்கள் காவல் காப்பது குண்டர்களையும், குற்றவாளிகளையும்ம் தான். அவர்கள்
தாம் வகிக்கும் பதவிகளைப் பயன்படுத்தி சட்டம் மீறிய செயல்களில்
ஈடுபடுபவதைத்தான் காவல் காக்கிறது. சாதாரண மக்களாகிய நாம் ஏதும் ஆபத்தில்
பாதுகாப்பு வேண்டி, அல்லது ஏதும் புகார் சொல்ல காவல் துறையை அணுகிணால்,
நம் ஜாதகம் சரியாக இருந்தால் நம் புகார் உதாசீனப்படுத்தப்படும், நாம் நல்ல
படியாக வீடு திரும்பலாம். நம் வேளை கெட்டிருந்தால், நம்மீதே ஏதேனும் பொய்
வழக்கைச் சுமத்தி நம்மை உள்ளே தள்ளி அடைப்பார்கள். பெரிய இடத்து
சொந்தக்காரர்கள் வீட்டு வேலைக்காரியேகூட ஒரு காவல் அதிகாரியைக் கன்னத்தில்
அறைந்து விடலாம். காவல் துறை மௌனமாகிவிடும். பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்
படுகின்றன. யாரும் கேட்பதில்லை. அரசே பின் அதற்கு அங்கீகாரம் கொடுத்து
விடுகிறது. அந்த இடம் மட்டுமல்ல. அந்தக் குடிசைக்கு இலவச தொலைக்காட்சிப்
பெட்டி, இலவச மின்சாரம், இலவச வேட்டி சட்டை ஒரு ரூபாய்க்கு அரிசி, ..ஆக
அரசு என்பது இலவசமாக எதையும் வாரி வழங்கும் ஒரு அதிகார மையம் என்று
அர்த்தம் செய்து கொள்ளப்பட்டுவிட்டது. வருடக் கணக்காக ரோடு என்று ஒரு
காலத்தில் இருந்த இடங்கள் குண்டும் குழியுமாக, சாக்கடை நீர் வழிந்தோட
காட்சி தருகின்றன. பகுத்தறிவை தமிழ் நாட்டுக்குப் போதிப்பவர்கள் தேர்தலில்
வெற்றி பெற வேண்டுதலுடன் தங்கள் ஊர் அம்மன் கோயிலில் பிரார்த்தனை
செய்கிறார்கள். தங்கள் கட்சிக்கு வாக்கு அளிக்க நாலாயிரம் ஐயாயிரம் பணமும்
கொடுத்து மீனாட்சி அம்மன் பேரில், சூடம் கொளுத்தி அல்லது பால்செம்பு மேல்
கை வைத்து சத்தியம் செய்து தரக் கட்டாயப்படுத்துகிறார்கள். "தங்கள்
பொன்னான வாக்குகளை" தமக்கு அளிக்க மறுத்தால், மண்டை உடையும். வீடு
நாசமாகும். ஜனநாயகத்துக்கு இந்தமாதிரி அர்த்தங்கள் தான் இருப்பதையும் நாம்
தமிழ் நாட்டில் கற்று வருகிறோம்.
சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி
இருந்தால் வாழ்வது எப்படி? எப்படியானால் என்ன? வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறோம். இந்த அர்த்த மீறல்களே மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், அது
தானே விதியாகிறது. ஆனால் மனித வாழ்க்கையில் ஆச்சரியங்களும் அவ்வப்போது
நிகழ்ந்து விடுகின்றன தான். அதைக் கண்டு நாம் உடனே மனம் மகிழ்ந்து
விடக்கூடாது. அவை விதி விலக்குகள். விதி விலக்குகளுக்கு தர்க்க ரீதியாக
ஏதும் விளக்கங்கள் காணமுடியாது. வளமுறை என, நியதி இது தான் என ஒன்று
இருந்தால் அதில் சில விதி விலக்குகள் நேர்ந்தே தீரும் என்பது தான் தர்க்க
விதி. அவை எப்போதாவது அபூர்வமாகத் தான் நிகழும் என்பதும் விதி.
தமிழ் இலக்கியப் படைப்புக்களில்
சிறந்தது எனத் தான் கருதும் ஒரு நூலுக்கு சாகித்ய அகாடமி வருடாவருடம்
பரிசளித்து வருகிறது. 1956 -லிருந்தோ என்னவோ சரியாக நினைவில் இல்லை. அந்த
இலக்கியப் பரிசு ஆரம்பத்திலிருந்து இலக்கியத்துக்காகவும் இல்லை. அது
பரிசாகவும் இருக்கவில்லை. அளிக்கப்படுவது தான் பரிசு. தானே எல்லா
முயற்சிகளையும் செய்து எடுத்துக் கொள்வது எப்படி பரிசாகும்? ஏதோ ஒரு
எழுத்துக்குத் தான் அது போய்ச் சேர்வது தான் விதியாக இருந்ததே அல்லாது
இலக்கியத்துக்கு தரப்பட்டது விதி விலக்காகத் தான் இருந்து வருகிறது.
ஒவ்வொரு வருஷமும் 70-80 பேருக்கு கோயில் சுண்டல் மாதிரி கலைமாமணி விருது
வினியோகிக்கப்பட்டால், அது எப்படி விருது ஆகும்?. பெறுபவர் எப்படி
கலைமாமணி ஆவர்? இந்த டிஸம்பர்- ஜனவரி மாதம் சென்னையில் சங்கீத
விழாக்காலம். சென்னையில் கிட்டத்தட்ட 700 சபாக்கள் இருப்பதாகச்
சொல்கிறார்கள். போன வருஷம் ஹிந்து பத்திரிகையில் இந்த சங்கீத பருவத்தின்
போது ஒவ்வொரு சபாவும் தினம் தினம் கொடுத்து கௌரவிக்கும் பட்டங்களும்
விருதுகளும் ஏதோ பிட் நோட்டீஸ் வினியோகிப்பது போல் இருந்தது. இந்த முப்பது
நாட்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
அந்தப் பட்டங்களின் பெயர்களும் வேடிக்கையாக இருந்தன. (சங்கீத கலா நிபுணர்,
நாத ரத்னா, சங்கீத மாமணி, தமிழ் இசைப்புரவலர்), இப்படி எத்தனை சொல்லிக்
கொண்டே போவது?. ஏதோ ஒரு பட்டம் வேண்டும், கொடுக்கவேண்டும். அதற்கு
அர்த்தம் இருக்க வேண்டியதில்லை. பெறுபவருக்கும் சந்தோஷம் தான். அந்த
சந்தோஷம் ஒரு நாளைக்குத் தான். பிறகு அது எல்லோராலும் மறக்கப்பட்டு
விடும். ஜி.என்.பி. செம்மங்குடி, அரியக்குடி, மகாராஜபுரம் என்று தான்
பெயர் நிலைக்கிறது. இந்தப் பட்டங்களை யார் கண்டார்கள்? இருப்பினும்,
இந்தப் பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது. சிலருக்கு தங்கள் பெயர்களால்
தெரியவருதல் அவமானமாக இருக்கிறது. பட்டங்களே போதும் என்று இருக்கிறார்கள்.
பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டால் அவர்களுக்கு கோபம் வரும்.
ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.
இந்தப் பட்டங்களும் விருதுகளும் இல்லாமலே சங்கீதத்தில் தம் பெயரை
நிலைநாட்டிக்கொண்டவர்களுக்குத் தான் தரப்படுகிறது. ஆதலால் அவர்கள்
பெயர்கள் நிற்கின்றன. பட்டங்கள் உதிர்ந்து விடுகின்றன. ஆனால்
இலக்கியத்துறையில், விருதுகள், பரிசுகள் பெருமபாலும் வாங்கப்பட்டவையே
அல்லாது வழங்கப்பட்டவை அல்ல ஆதலால், தகுதி பற்றி பேசவேண்டியதில்லை. இது
அனேகமாக எல்லாப் பரிசுகளுக்கும் பொருந்தும். சாகித்ய அகாடமி மாத்திரமல்ல,
தமிழ் வளர்ச்சிக் கழகம், அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு போன்று
தமிழ் நாட்டு பரிசுகள் விருதுகள் அனைத்துக்கும் பொருந்தும். இது அறுபது
வருடங்களாகத் தொடர்ந்து வருவதால் இதுவே பரிசு வழங்கலின் விதியும் ஆகி,
இதுவே இன்றைய தமிழ் இலக்கிய மரபும் ஆகிவிட்டது. பின் விதி விலக்குகளும்
மரபு மீறலும் எப்போதாவது தவறி நிகழும் தானே.
அப்படி தவறி நிகழ்ந்தது தமிழ்
நாட்டில் அல்ல. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் நிகழ்கிறது. இது எப்படி
நிகழ்கிறது, என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா வாழ்
தமிழர் சிலர் சேர்ந்து வாழ்நாள் சாதனையாளர்கள் எனத் தேர்ந்த தமிழ்
எழுத்தாளர்களுக்கு அளிக்கும் விளக்கு பரிசு அது தொடங்கப்பட்ட
வருடத்திலிருந்து இன்று வரை அதற்கான இலக்கியத் தகுதி பெற்றவர்களுக்கே
கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு முறை கூட அது தவறியதில்லை. தகுதி
பெற்றவர்கள் என்பதற்கும் மேலாக, அவர்கள் தமிழ் நாட்டு இலக்கிய உலகம்,
பல்கலைக் கழகங்கள் மதிக்காதவர்களும், உதாசீனப்படுத்தப் பட்டவர்களும் ஆவர்.
விளக்கு பரிசு தொடக்கத்தில் அளிக்கப் பெற்ற சி.சு.செல்லப்பாவிலிருந்து
இந்த வருடம் அப்பரிசைப் பெற்றுள்ள எஸ் வைதீஸ்வரன் வரை. (சி.சு.செல்லப்பா,
சி.மணி, ஞானக் கூத்தன், எஸ்.ராமானுஜம், பூமணி, நகுலன்........)
செல்லப்பாவை நாடி தமிழக, அகாடமி பரிசு வந்த போதிலும் தான் அந்தப்
பரிசுகளைப் பெறுவது தனக்கு அவமானம் என்று அதை உதறியவர் செல்லப்பா. எஸ்
வைதீஸ்வரன், புதுக்கவிதையின் பிறப்பிலிருந்து கவிதை எழுதி வரும் முன்னோடி.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று. தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்ற
ஆதங்கம் அவருக்கு இருக்கும் தான். இருபது வயதில் ஒரு புதிய கவிதை மரபு
முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்டு, இப்போது அவரது 70 வயதிலும் அவரைப்
பற்றி யாரும் பேசவில்லை, அவரை கௌரவிக்கவில்லை என்றால் ஆதங்கம் இராதா என்ன?
இப்போதாவது அவர் மனம் சமாதானம் அடைந்திருக்கும். அவரையும் கவிஞர் என்றும்,
அவரது பங்களிப்பும் அங்கீகரிப்பிற்கும் கௌரவிப்பிற்கும் உரியது என்றும்
கண்டு கொண்டது விளக்கு பரிசுக்கு பொறுப்பானவர்கள் தாம். இன்னொரு தமிழ்
பண்பாட்டு மரபு மீறல், விளக்கு பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க
நியமிக்கப்பட்ட குழுவினர் யாரும் இதுகாறும், பரிசைத் தாமே முறை வைத்து
எடுத்துக் கொள்ளவில்லை. இதற்காகவே நாம் இவர்களைப் பாராட்ட வேண்டும்.
இவர்களும் தமிழ் இலக்கிய உலத்திலிருந்து பெறப்பட்டவர்கள் தாம். இது எப்படி
நிகழ்கிறது?
ஒரு மரபு ஆரம்பத்திலிருந்து
ஸ்தாபிதமான பிறகு, அதை மீற பின் வருபவர்கள் யாரும் எண்ணினாலும் அது
வெட்கக் கேடான செயலாகிப் போகும். சாகித்ய அகாடமி பரிசோ, ஆரம்பத்திலிருந்தே
வேறு ஒரு மரபைத் தான் தொடங்கி வைத்தது. தமிழ் ஆலோசனைக் குழுவின்
தலைவருக்கே சாகித்ய அகாடமியின் முதல் இலக்கியப் பரிசு போய்ச் சேர்ந்தது.
அதுவும் 50 வருஷ பழமையாகிப் போன மரபு. மீறுவது கஷ்டம் தான்.
மறுபடியும் ஒரு வெளிநாடு வாழ்
தமிழர்களின் மரபு மீறிய செயல்பாடு. கனடா வாழ் தமிழர்கள் தொடங்கி வைத்துள்ள
இயல் விருது. கனடா இலக்கியத் தோட்டமும், டோரண்டோ பல்கலைக் கழகத்தின்
தெற்காசிய ஆராய்ச்சி மையமும் சேர்ந்து வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான இயல்
விருது. இதுவும் அது தொடங்கப்பட்ட 2003-ம் ஆண்டிலிருந்து இன்று வரை. இதன்
இவ்விருது பெற்ற சாதனையாளர்கள் சுந்தர ராமசாமியிருந்து இவ்வருடம் பரிசு
பெற்றுள்ள அம்பை வரை. இடையில், கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், தாஸிஸியஸ்,
ஜார்ஜ் எல்.ஹார்ட், எஸ். பத்மனாபன் ஐயர், லக்ஷ்மி ஹோர்ம்ஸ்ட்ராங்) என
இவர்கள் எல்லோரும் தமிழ் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்கள். அதன்
எல்லைகளை விஸ்தரித்தவர்கள். மற்றவர் பயணிக்காத பாதையில் சென்று புதிய தடம்
அமைத்தவர்கள். மிக குறிப்பாகவும் முக்கியமாகவும், தமிழ் இலக்கிய உலகம்
மதிக்காதவர்கள். அங்கீகரிக்காதவர்கள். அம்பை, எனக்குத் தெரிந்த இன்றைய
அம்பை 1970களிலிருந்து எழுதி வருபவர். பெண்ணுக்கான தனித்வத்தை, ஆணின்
நிழலாக அல்ல, வலியுறுத்தியவர். பெண்மையை மறுப்பவர் அல்ல. 1970-க்கும்
முன்னாலேயே எழுதத் தொடங்கியவர் தான். கலைமகள் பரிசும் தன் நாவல் அந்தி
மாலைக்குப் பெற்றவர். தன் அந்த ஆரம்ப எழுத்துக்களை மறுக்கும் வலிமை
அவருக்கு இருந்தது. சிறகுகள் முறியும் தொடங்கி நான்கு சிறுகதைத்
தொகுதிகள், Purple Sea என்ற தலைப்பில் அவரது கதைகள் ஆங்கிலத்திலும், பெண்
எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்தையும் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்று
ஆங்கிலத்தில் (Face Behind the Mask). இந்திய பரப்பில் பல்வேறு துறைகளில்
தம் ஆளுமையைப் பதிப்பித்த சாதனையாளர்கள் பலர் தம் வாய்மொழியாகவே தம்
பயணத்தைப் பற்றிய உரையாடல் தொகுப்புகள் இரண்டு பயணப்படாத பாதைகள், சொல்லாத
கதைகள் என வெளிவந்திருக்கின்றன. Sparrow என்ற அவரது நிறுவனம், பெண்கள்
நிலையையும் அவர்களின் சாதனைகளைப் பற்றியுமான செய்திகளைத்
தொகுத்துவருகிறது. பெணகளின் உரிமை பற்றிக் கதைகள் எழுதுவது மட்டுமல்ல,
பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் அவர்களது நிலை பற்றியும் சாதனைகள்
பற்றியுமான சேகரிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் அம்பை. 40 வருட
கால ஈடுபாடு பற்றிய தெரிவோ, அங்கீகாரமோ தமிழ் நாட்டிலிருந்து அவருக்குக்
கிடைத்ததில்லை. ஆச்சரியப்படுவதற்கில்லை. டோரண்டோவிலிருக்கும்
தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து அங்கீகாரமும்
பாராட்டும் 2008=ம் வருடத்திய இயல் விருதாக அம்பையை நாடி வந்துள்ளது.
ஆனால் ஆச்சரியப்பட வைக்கும்
நிகழ்வுகள் இங்கும் நிகழ் ஆரம்பித்துள்ளன. பல்கலைக் கழகமோ, சாகித்ய
அகாடமியோ மாறிவிடவில்லை. இரு சினிமா இயக்குனர்கள், ஜெர்ரி, ஜேடி
தொடங்கியுள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை யின் சாரல் என்ற பெயரில் ஒரு
இலக்கிய விருது, தொடக்கத்திலேயே திலீப் குமாருக்கு வழங்கியுள்ளது. திலீப்
குமார் எழுதிக் குவிப்பவரும் இல்லை. பிரபலமும் இல்லை. தொடர்ந்து
எழுதுபவரும் இல்லை. தனக்கு எழுதத் தோன்றிய போது அவ்வப்போது எழுதுபவர்.
சமீப காலத்தில் அவ்வளவாக எழுதவில்லையாதலால், இலக்கிய வட்டத்துக்குள்ளேயே
கூட அவர் பெயரை எவ்வளவு பேர் நினைவு கொள்வார்கள் என்பது தெரியாது. எந்தக்
குழுவோடும், அரசியல் சக்திகளோடும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டவர்
இல்லை. தனிக் கட்டை. அவரது சிறுகதைகள் என இரு தொகுப்புகளே வந்துள்ளன.
பரபரப்பூட்டும் எழுத்தும் இல்லை. தமிழ் நாட்டில் வாழும் குஜராத்தி
குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழில் எழுதியுள்ளது கடந்த இருபத்தைந்து வருட
காலத்தில் மிகக் கொஞ்சம் என்றே சொல்லவேண்டும். எனினும் தமிழ் நாட்டில்
வாழும் குஜராத்தி மக்களின் வாழ்க்கை அவர் கதைகளில் பதிவாகியுள்ளது. அதுவே
தான் என்று சொல்லக் கூடாது. அவரைச் சுற்றிய வாழ்க்கை அது. மிகக் குறைவாக
எழுதிய போதிலும் அவரது எழுத்தின் தனித்வமும், அவரது இலக்கிய ஆளுமையும்
அவரை மறந்து விடாது குறிப்பாக எடுத்துச் சொல்லத்தக்கவை. ஆரவாரமற்ற,
ஜொலிப்புகள், சோதனைகள் என ஏதும் அற்ற, அமைதியும், அதே சமயம் வாழ்க்கைச்
சிக்கல்களின் முரண் நகையும் கொண்ட எழுத்து அவரது. தமிழ் நாட்டில் வாழும்
ஒரு இலக்கியப் பரிசுத் தேர்வுக் குழு சாரல் விருதுக்கு அவரது பெயரைச்
சலித்து எடுத்திருப்பது, ஒரு ஆச்சரியமான நிகழ்வு ஆகும். ஐம்பது அறுபது
வருட காலம் பேணிய தமிழ்ப்பண்புக்கு விரோதமான மரபு மீறிய செயலாகும். இது
எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு விளக்கத் தெரியாது. சில ஆச்சரியங்கள்
இப்படி நிகழ்ந்து விடுகின்றன.
இதையெல்லாம் ஒன்றுமில்லை என்று
சொல்லத்தக்க ஒரு நிகழ்வு தமிழக முதல்வர், சென்னை புத்தகக் காட்சி
நடைபெறும் சந்தர்ப்பத்தில் வழங்கும், கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது.
தமிழ் நாடு அரசோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, அல்லது பல்கலைக் கழகங்கள் போன்ற
நிறுவனங்களோ நினைத்தும் பார்க்காத ஐவருக்கு இவ்விருது இவ்வருடம்
வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் ஒருவரான ந.முத்துசாமி, இன்றைய தமிழின்
சிறந்த சிறுகதையாளர். அதோடு தெருக்கூத்திலும், நவீன நாடகத்திலும் அவர்
முழு மூச்சாக ஆழ்ந்து விட்ட காலத்திலிருந்து அதிகம் சிறுகதை எழுதுவதில்
கவனம் செலுத்தாதவர். அதனாலேயே அவர் சிறந்த சிறுகதைக்காரர் என்பது நம்மில்
பலருக்கு மறந்து வருகிறது. அவரும் அது பற்றிக் கவலைப் பட்டதாகத்
தெரியவில்லை. ந.முத்துசாமியின் நவீன நாடக முயற்சிகளில் எனக்கு ஈர்ப்பு
இல்லாது போனாலும், அவர் அதில் ஆழ்ந்த நம்பிக்கையோடும், தீவிர
முயற்சியோடும் கடந்த முப்பது வருடங்களாக தன்னை ஆழ்த்திக்கொண்டுள்ளார்.
தான் நம்பியதில் வாழ்க்கையைச் செலவிடுவது என்பது பெரிய விஷயம். அவரது
கூத்துப்பட்டறை தன்னை ஒரு தனித்வம் கொண்ட ஸ்தாபனமாக நிறுவிக்கொண்டு
விட்டது. அதிலிருந்து பயிற்சி பெற்றுள்ள பசுபதி போன்றவர்கள் தமிழ்
சினிமாவில் கூட தம் தனித்வத்தை பதித்துள்ளார்கள். அவரது தீவிர தொடர்ந்த
செயல்பாட்டினால் இப்போது நவீன நாடகத்தைத் தவிர வேறு எதுவும் இங்கு
செல்லுபடியாவ தில்லை. நவீன நாடகமும் அப்படி ஒன்றும் பெரிய சாதனைகளை முன்
வைத்துவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. எல்லோரும் நவீன நாடக சங்கீர்த்தனம்
தான் செய்கிறார்கள். இப்படி எல்லோரையும் தன் வழிக்கு வரச்செய்து
'கோவிந்தா' போடச் செய்துள்ளது முத்துசாமியின் சாதனை தான். அது எதாகிலும்
ந.முத்துசாமியின் தீவிரமும் நம்பிக்கையும் தொடர்ந்த செயல்பாடும் மதிக்கத்
தக்கவை. அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அவரது நவீன நாடக
பங்களிப்புக்காகத் தான் என நான் நினைக்கிறேன்.
அடுத்து புதுக்கவிதையின் தொடக்க
காலத்திலிருந்து ஒரு முன்னோடியாக விளங்கிய கவிஞர் சி.மணி. என்ன காரணத்தாலோ
ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரிடமிருந்து கவிதை எதுவும் வரவில்லை. ஆரம்ப
காலத்தில் நிறைய எழுதியவர். யாப்பறிந்த புதுக்கவிதைக்காரர். உடன் வாழும்
சமூகத்தை, மதிப்புகளை எள்ளி நகையாடின அவர் கவிதைகள். அன்றாடம்
பத்திரிகையின் முதல் பக்கத்தில் பெயர் வந்துகொண்டே இருத்தல் தான்
வாழ்வதற்கு அடையாளம் என்பது அரசியலில் மாத்திரமில்லை, தமிழ் இலக்கிய
சமூகத்திலும் செல்லுபடியாகும் மதிப்பு. தொடர்ந்து எழுதிக்கொண்டே
இராவிட்டால் மறக்கப்படுவார்கள். அப்படி மறக்கப்பட்டவர் சி.மணி.
கன்·பூசியஸ¤க்கும் முந்தி வாழ்ந்த சீன ஞானி லாவோ
ட்ஸ¤வின் தாவோ தே ஜிங் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளது
குறிப்பிடவேண்டிய கவித்வ செயல். ஆனால் இவையெல்லாம் இன்றைய தமிழ் இலக்கிய
சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பவை அல்ல. பரபரப்பு இல்லாதது எதையும் தமிழ்
இலக்கிய சமூகம் கண்டு கொள்ளாது. அந்த சி.மணியை, தினம் தினம் தன் இருப்பை
நமக்கு நினைவு படுத்திக்கொண்டிராத சி.மணியை, கலைஞர் பொற்கிழிக்கு
தேர்ந்தது பெரிய விஷயம் தான். தமிழ் மரபு மீறிய செயல்தான்.
மூன்றாவதாக விருது பெறுபவர் எஸ்.
முத்தையா. சென்னையைப் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தொடர்ந்து ஹிந்து
பத்திரிகையில் எழுதி வருபவர். நான் வெறுப்புற்று ஹிந்து பத்திரிகை
வாங்குவதை நிறுத்திய பிறகு நான் இழந்து நிற்பது எஸ். முத்தையாவின்
பத்திகளைத் தான். தமிழ் நாட்டில் நம் பாரம்பரியத்தைப் பற்றிய அக்கறை இல்லை
என்று சொல்லத்தான் வேண்டும். யாரிடம் அக்கறை இருக்க வேண்டுமோ அவர்களிடமே
இல்லை. நம் சரித்திர சின்னங்கள், பாரம்பரிய சொத்துக்கள் அழிந்து கொண்டு
வருகின்றன. நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.
சென்னையிலேயே பல அழிந்து கொண்டு வருகின்றன. அவற்றின் இடத்தில் பகாசுர
காங்கிரீட் கட்டிடங்கள் எழுப்புவது முன்னேற்றம் என்ற நினைப்பில் செயல்
பட்டுக்கொண்டிருக்கிறோம். இன்னிலையில் எஸ்.. முத்தையாவின் குரல் யாரும்
கேட்காத கானகக் குரல் தான். அவர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒரு முரண் நகை தான். நான் தான் சொன்னேனே
என்னென்னவெல்லாமோ தர்க்கத்தால் விளக்கமுடியாதவை நடந்து விடுகின்றன.
ஆச்சரியம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமக்கு மகிழ்ச்சி தரும்
நிகழ்வுதான், பாராட்டப்படவேண்டிய தேர்வு தான். போன வருடம் விருது
வழங்கப்பட்டது ஆன்ற தமிழ் மரபை ஒட்டித்தானாமே. சொன்னார்கள்.
கேள்விப்பட்டேன். இப்படி நிகழவில்லையே. ஆக, அடுத்த முறை தேர்வுக் குழு
மாறும்போது ஆச்சரியங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.
நான்காவதாக விருது பெறும் கிரீஷ்
கர்னாட், கன்னட நாடகாசிரியர். துக்ளக் தொடங்கி அவர் எழுதிய நாடகங்கள்
இந்திய நாடக உலகில் ஒரு புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. தொடர்ந்து
எழுதி வருபவர், மிகப் புகழ் பெற்றவர் தன் நாடகங்களுக்கான கருவை சரித்திரம்
புராணம், myth என பலவற்றிலிருந்து எடுத்தாலும் நாம் தமிழர் கொண்டாடும்
நவீன நாடகம் எழுதுபவர் இல்லை. அவர் பெற்றுள்ள விருதுகளுக்கும் இந்திய
பரப்பு முழுதிலும் அவரது தாக்கத்திற்கும் அளவில்லை. ஆக, அவர் கலைஞர்
பொற்கிழிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமான விஷயம் தான்.
உரியவரல்ல என்பதல்ல. பொற்கிழி விருதின் தேர்வுத் தளம் இந்தியப்
பரப்பளவுக்கு விரிகிறதோ என்னவோ. ஒரு வேளை ஒரு வேற்று மொழிக்கும் ஒரு
விருது என்று ஒதுக்கப்பட்டுள்ளதோ என்னவோ.
ஐந்தாம் விருது ஆர். சூடாமணி
அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து
எழுதி வருகிறார். பெண்கள் உலகம். அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர்
கதைகளிலும் நாவல்களிலும் விரியும். சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன
உளைச்சல்கள். நான் படித்தவரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள்
அறியார்கள் என்று நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும்
இருந்தன. அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய
பெண்ணியம் ஆட்சி செய்யும் காலத்தில் ஆர் சூடாமணியைப் பற்றி என்ன கவலை?
அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை
நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம் தான்.
எனக்கு ஆச்சரியம் தராத, தமிழ்
மரபு மீறப்படாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி, முடிக்கவேண்டும். நிறைய
ஆச்சரியங்களை எதிர்கொள்ளும் தினவு நம்மிடம் இல்லை. தமிழ் தெலுங்கு,
ப்ராகிருதம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய எல்லா மொழிகளிலும் நிறைந்த
பாண்டித்யமும் அறிவும் பெற்றிருந்த பன்மொழிப் புலவர் என்று அறியப்பட்ட
மு.க.ஜகன்னாத ராஜா தந்து 76-வது வயதில் போன மாதம் மறைந்து விட்டார்.
தெலுங்கு, ப்ராகிருதம், ஸமஸ்கிருதம் மலையாளம், கன்னடம் ஆகிய
மொழிகளிலிருந்து நிறைய பண்டைய நூலகளை அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தனது 75-76 வயது காலத்தில் அவர் இப்பல மொழிகள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு
மொழிபெயர்த்துள்ள நூலகள் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேல் இருக்கும். இவற்றின்
எண்ணிக்கையிலும், சிறப்பிலும் இந்த தொடர்ந்த செயல்பாடு மகத்தான பங்களிப்பு
என்று சொல்ல வேண்டும். ஆனால் அவரது வாழ்நாள் சாதனை எத்தகைய தாக்கத்தையும்
தமிழ் இலக்கிய உலகில் நிகழ்த்தவில்லை. காதா சப்த சதி, முகத மாலா, சுமதி
சதகம், கன்யா சுல்கம், வஜ்ஜாலக்கம் என அவர் தமிழுக்கு மொழிபெயர்த்த
காவியங்கள் நிறைய. பௌத்த, சமண தத்துவ நூல்களும் நிறைய
மொழிபெயர்த்துள்ளார். பாரதி கவிதைகள், திருக்குறள், முத்தொள்ளாயிரம் புற
நானூறு போன்ற பல தமிழிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு
மொழிபெயர்த்துள்ளார். எல்லாமாக கிட்டத்தட்ட 50-60 நூல்கள் இருக்கும்.
இவரைப் போல பல மொழிகளை அறிந்து மொழிபரிமாற்றம் செய்துள்ளவர்கள், ஒரு
பாலமாகத் திகழ்ந்தவர்கள் தமிழில் இல்லை. இவரது மொழிபெயர்ப்புக்காக சாகித்ய
அகாடமியின் மொழி பெயர்ப்புப் பரிசுகளும் வாய்ப்புக்களும் கிடைத்தனதான்.
ஆனால் தமிழ் இலக்கிய உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு ஆதரவு
அளித்தது, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திர தேசத்திலிருந்து குடி
பெயர்ந்து கடைசியாக ராஜபாளையத்தில் வசித்து வரும் ராஜூ க்கள் சமூகம் தான்,
"நம்ம சமூகத்தில் இப்படி நிறைய படித்தவர், நிறைய எழுதுகிறவர் இருப்பது
நமக்குப் பெருமை, அவரை ஆதரிக்க வேண்டும்" என்று பெருமைப் பட்டு
ஆதரித்தார்கள். தமிழ் இலக்கிய சமூகத்திற்கு அவரைத் தெரியாது. கன்யா
சுல்கத்தையும், வஜ்ஜாலக்கத்தையும் மொழிபெயர்த்தால் அது எப்படி கவனம்
பெறும்?. அதில் என்ன பரபரப்பும் கவர்ச்சியும் இருக்கக் கூடும். இதில் தான்
எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லாது போய்விட்டது. விதி விலக்குகள் சில
விதியாகிவிடாது.
/12.1.09
கோயில் என்னும் அற்புதம்
- வெங்கட் சாமிநாதன் -
அற்புதக் கோயில்கள் என்று
சொல்கிறார் கே ஆர். ஸ்ரீனிவாசரகவன். தவறில்லை. அவர் கண்ட கோயில்களின்
அற்புதங்களைச் சொல்கிறார் அவர். ஆனால் கோயிலே ஒரு அற்புதமாகத் தான்
எனக்குத் தோன்றுகிறது. கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்.
அந்தந்த நாட்டு மதங்களைச் சார்ந்து அங்குள்ள கோயில்களை மசூதி என்றும்,
சர்ச் என்றும், விஹார் என்றும் சினகாக் என்றும் அழைக்கிறார்கள்.
இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும்
கோயில் கள் இருக்கின்றன தான். எல்லாம் பவித்திரமான இடங்கள் தான். ஆனால்
தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம்
மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும். அதிலும் தமிழ் நாட்டின் கோயில்கள் நம்
மனதில், நம் வாழ்க்கையில், தமிழ் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளதற்கு
இணையாக வேறு எதையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். அதைத் தான்
கோயிலே ஒரு அற்புதம் என்று சொன்னேன்.
கோயில் எல்லோருக்கும் வழிபடும்
இடமாக உள்ளது, உலகம் முழுதிலும். பிரார்த்தனை செய்யும் இடமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் ஆண்டவனை நி¨னைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு
சென்று நம்மை இழக்கும் இடமாக, நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இடமாகவும்
உள்ளது. இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப்போக்கும் வழிமுறையும் நம் மனதை
செயல்களை அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்ளும் இடமாகவும் இருந்துவருகிறது.
பெருமாலான கோயில்கள், அதாவது வழிபாட்டு இடங்கள் கட்டிடக் கலை உன்னதத்தை
உணர்த்தும் சின்னமாகவும் இருக்கிறது. வானை முட்டும் கோபுரங்கள், மினார்கள்
நம் மண்ணுலக அன்றாட வாழ்க்கைப் பிணைப்புகளிலிருந்துகொண்டும் அல்லது
அவற்றிலிருந்து விடுபட்டும் வானை நோக்கி நம் பார்வையை இட்டுச் செல்லும்
சின்னமாகவும் திகழ்கின்றன. பரந்து விரிந்து மண்ணையும், நெடிது உயர்ந்து
விண்ணையும் இணைக்கும் தத்துவத்தை படிமமாக்குவது கோயில். மண்ணில் கால்
பதித்து விண்ணை லட்சியமாகக் காட்டுவது கோயில். கோயிலின் உள்ளே கால்
வைத்ததுமே அதன் பிரம்மாண்டம் நம்மை ஆட்கொள்ளும். நம் அகங்காரத்தை
அழிக்கும். இப்பிரபஞ்சத்துள் நம் சிற்றுருவை நினைவு படுத்தும். உலகம்
முழுதுக்கும் இவை பொதுவான விஷய சிதங்கள்.
ஆனால் தென்னகக் கோயில்கள்
அவற்றின் ஆயிரம் இரண்டாயிரம் என நீளும் வாழும் சரித்திரைத்தைப் பறை
சாற்றும். வாழும் சரித்திரம் என்றேன். அழிந்து அல்லது அழிக்கப்பட்டு
பின்னர் மீண்டும் புணரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்று நினைவுகள் கொண்ட
கோயில்கள் பல இந்தியாவில் உண்டு. இன்றும் நாம் காணும் சோமநாதபுர கோயிலோ
காசி விஸ்வநாதர் ஆலயமோ அவற்றின் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்தவை அல்ல.
ஆனால் காஞ்சி கோயில்களோ, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோ அவற்றின் தொடக்க
கால உருவை இன்னும் தம்முள் கொண்டவை. அவை 1500- 2000 ஆயிரம் கால நீட்சியின்
சின்னங்களை, சாட்சியங்கள் தம்முள் கொண்டவை. பூதத்தாழ்வாரும் சுந்தரரும்
வழிபட்ட கோயில்கள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றன. ராஜகோபுரத்தின் வழியாக
உள்ளே பல பிரகாரங்களை, மண்டபங்களைத் தாண்டி கற்பக்கிரஹம் வரையிலான நம் சில
நூறு காலடித் தடங்கள், இன்றிலிருந்து பல சரித்திர காலகட்டங்களைக் கடந்து
தமிழ் நாகரீகத்தின் வரலாற்றுத் தொடக்கத்தைத் தொடும் நீண்ட பயணத்தின்
தடங்களை நமக்கு வழியில் பல சான்றுகளோடு உணர்த்தும். கோயில் பிரகாரச்
சுற்றுச் சுவர் கல்வெட்டுக்கள் கோயிலின் அவ்வக்கால நிர்மாண, நிர்வாக
சரித்திரத்தைச் சொல்லும் ஆவணங்களாகும்.
தமிழ் வாழ்க்கையே கோயிலை மையமாகக்
கொண்டதுதான். கோயில் தமிழனுக்கு வாழ்வளித்தது. அவன் கலைகளுக்கு ஊட்டம்
கொடுத்து வளமும் வாழ்வும் கொடுத்தது கோயில். சங்கீதமும் நாட்டியமும்
ஓவியமும், சிற்பமும் வளர்ந்தது அங்கு.தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி
படைக்கக் காரணமாக இருந்தது கோயில். தமிழ் நாட்டுக் கோயில்களிலிருந்து
பிறந்த பக்தி இயக்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம்
முழுதுக்குமான கலை, இலக்கிய,மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்துள்ளது.
அந்த ஆதர்சத்தின் நீட்சியை காரைக்கால் அம்மையாரிலிருந்து,
பூதத்தாழ்வாரிலிருந்து தொடங்கி, இங்கு பாரதி வரையும், வங்கத்தில் தாகூர்
வரையும் காணலாம். தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும்
பிறப்பித்தவை இக்கோயில்கள் தாம். ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் தாம்
நடைப்யணம் கொண்டு தரிசித்த பெருமாணை, அவன் வதியும் கோயிலையும், ஊரையும்
பாடிக் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பும் தந்து, தமிழுக்கு இலக்கிய வளமும்
தந்து, கலைகளை வாழச் செய்த போன்ற ஒரு மரபும் சரித்திரமும் உலகில் வேறு
எங்கு காணப்படுகிறது?. தமிழ் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அதற்குக்
குணமும் வழிமுறையும் தந்த சரித்திரம் கொண்டவை நம் கோயில்கள். நம்
கோயில்கள் கட்டிடகக் கலை வளர்ச்சியைச் சொல்லும் நிதர்சன ஆவணம். சிற்பக்
கலைக் கூடம். ஒவியக் கலைக் கூடம். தஞ்சை பெரிய கோவிலிலிருந்து காஞ்சி
மாவட்ட ஏதோ ஒரு கிராமத்து துர்க்கை அம்மன் கோயில் வரை கோயில்கள் பக்திக்கு
மாத்திரம் உறைவிடமாக இல்லை. நாடகத்தையும் ஆடல் பாடல்களையும்
கூத்துக்களையும் நாட்டுப் புற கலை வடிவங்களையும் வளர்த்தன. ஒரு ஊரின்
மையமாக இருந்து கொண்டு அந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையையே
நிர்ணயிக்கும் ஒன்றாக, ஒரு நாகரீகமாக அது இருந்துள்ளது. தென்னிந்திய
மனதுக்கு, இன்னும் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மனதுக்கு கோயில் என்ற
பதம், சப்தம், படிமம், எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு அனுபவமாக
இருக்கிறது. வரலாறு, அர்ப்பணம், பிரார்த்தனை, இலக்கியம், கலைகள்,
தத்துவம், வாழ்க்கை முறை, தெய்வம், மீட்சி என அத்தனையும் தன்னுள் கொண்ட,
ஒன்றிணைந்த ஒரு அனுபவம். கோயில் வேறு எங்கும் இத்தனை அர்த்தங்களை,
அனுபவங்களைத் தரும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கோயிலே ஒரு அற்புதம் என்று
தான் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் தமிழ் வாழ்க்கை இப்போது
இந்த அடையாளங்களையெல்லாம் இழந்து வருகிறது. இன்னமும் சரியாகச் சொல்லப்
போனால், முனைந்து அழிக்கப்பட்டு வருகிறது. கோயில் என்னும் அற்புதம் தன் பல
திறத்த, பல வண்ண அடையாளங்கள் ஒவ்வொன்றாய் இழ்ந்து வருகிறது. அந்த அழிவின்
வேகமும் அளவும் குணமும் இடத்துக்கு இடம் வேறுபட்டுக் காணப்பட்டாலும்,
ஒவ்வொரு கோவிலிலும் அழிவு என்பது ஒரு நிச்சயத்துடன் படிப்படியாக நிகழ்ந்து
வருகிறது. நிகழ்த்தப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள்
அபகரிக்கப்பட்டுவிட்டன.கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள்
அசுத்தப்படுத்தப்படுகின்றன. கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிகின்றன.
பராமரிப்பு காணும் இடங்களில் அதன் வரலாற்று அடையாளங்கள், அதன் புனிதத்வம்
அழிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு கலையுணர்வும் வரலாற்று
உணர்வும் கொண்ட சமூகத்தில், தமிழ் நாட்டின் ஒவ்வொரு கோவிலும் அதன்
முழுமையில், அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்த இரண்டும்
இன்றைய சமூகத்தில் வரண்டுவிட்டன. ஒரு போலியான பகுத்தறிவின் தாக்கத்தில்,
கலையுணர்வும் வரலாற்றுணர்வும் அற்ற பகுத்தறிவு அது, அழிவு தான்
நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோயிலைப் பற்றிம் அதன்
எல்லா அம்சங்களையும் விவரிக்கும் முழுமையான ஆவணமாவது கிடைக்கச்
செய்யவேண்டும்.
கே.ஆர். ஸ்ரீனிவாச ராகவன்
அற்புதக் கோயில்கள் என்று பதினான்கு கோயில்கள் பற்றி அவற்றில் தான் கண்ட
சிறப்பம்சங்களை, சொல்லிச் செல்கிறார். இவற்றில் சிதம்பரம் போன்ற
புகழ்பெற்ற ஸ்தலமும் உண்டு. திருமங்கலக் குடி போன்ற அவ்வளவாக தெரியவராத
ஸ்தலமும் உண்டு. கோயில் தரும் அர்த்தங்கள், அனுபவங்கள் பலவற்றைச்
சொன்னேன். கோயில் ஒவ்வொருவருக்கும் கொடுக்க ஒன்று அல்லது பல அர்த்தங்களும்
அனுபவங்களும் கொண்டது. எல்லாமே முக்கியமானவை தான் சிறப்பானவை தான்.
சிதம்பரம் கோயிலைப் பற்றி நிறையச்
சொல்கிறார். அதன் வரலாற்றுத் தொடக்கத்தையும், கோயிலை ஒட்டிய சரித்திர,
இலக்கிய நிகழ்வுகளையும் கோயிலின் கட்டிட, சிற்பச் சிறப்புகளைத் தொகுத்துச்
சொல்லும் போது, நமக்கே வியப்பாக இருக்கும். புராணக் கதைகளும் சுவாரஸ்யம்
தருகின்றன. மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் திருவாசகத்தை எழுதிச்சென்றது,
சேந்தன் அமுதனார் இறைவன் வேண்ட திருப்பல்லாண்டு பாடியது, ராஜராஜன்
கட்டளையின் பேரில் நம்பியாண்டார் நம்பி தேவாரப் பாடல்களைக் கண்டெடுத்தது,
சேக்கிழார் பெரியபுராணம் பாடியது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
"குவித்த புருவமும், கொவ்வைச் செவ்வாய் குமிண் சிரிப்பும்......,"
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...." போன்ற உன்னத கவிதைகள் பிறந்த விடம்
என்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். கோயில் முழுதையும் சுற்றி
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும்
விவரிக்கிறார். சிதம்பரத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருப்பதால் நிறையச்
சொல்கிறார்.
ஆனால் ஸ்ரீனிவாசராகவனுக்கு கோயில்
மிக முக்கியமாக ஒரு வழிபாட்டுத் தலம். மனிதன் தன் வாழ்வின் வேதனையைத்
தீர்க்க தெய்வத்திடம் முறையிட்டு வேண்டிக்கொள்ளும் இடம். மனித ஜீவனில்
வேதனைகளுக்கு ஏமாற்றங்களுக்கு குறையுண்டா? சில சமயங்களில் ரொம்ப சின்ன
விஷயங்கள் கூட கிட்டாதவையங்கள் ஆகிவிடுகின்றன. எவ்வளவோ பெரிய தலைகள்
உதவியும் கூட சாதாரண காரியங்கள் கூட நடப்பதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில்
முறையிட்டுக்கொள்ள தன் வேதனையைச் சொல்ல ஒரு பெரிய சக்தி வேண்டும். தெய்வ
நம்பிக்கை அதைத்தான் தருகிறது. வேதனைகள், ஏமாற்றங்களிடையேயும் ஒரு
நம்பிக்கை பெற்று நிம்மதி கொள்ளமுடிய வேண்டும். வறுமையிலேயே தியாகராஜர்
தன் ஜீவனை முடித்துக்கொண்டவர். "ப்ரோசேவாரெவரே ரகுபதீ நினுவினா?" என்றும்
"ஏமி நேரமு நன்னு ப்ரோவ எந்த பாரமு.?." என்று எந்நாளும்
முறையிட்டுக்கொண்டேதான் இருந்தார். ராமர் கேட்பார், காப்பாற்றுவார் என்ற
பல மான நம்பிக்கையிலேயே அவர் ஜீவன் கழிந்துவிட்டது. அந்த நம்பிக்கை
அவருக்கு பலம் தந்தது. வறுமை நீங்கவில்லை தான். ராமர் கேட்கவில்லை தான்.
வறுமை அவருக்கு வேதனை தரவில்லை. நாமெல்லாம் எளிய ஜீவன்கள். நமக்கு
முறையிட, நம்பிக்கை தர ஒரு தெய்வம் வேண்டும். தெய்வ நம்பிக்கை நமக்கு
நிம்மதியான வாழ்வு தரும்.
ஸ்ரீனிவாசராகவன் ஒவ்வொரு
கோவிலுக்கும் நம்மை இட்டுச் செல்வது பிரதான்யமாக பிரார்த்தனைக்கும்
குறைகள் நீங்க வேண்டுதல் செய்துகொள்ளவும் தான். சிதம்பரத்தை விட்டு
விடுவோம் திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருக்கருகாவூர், திருநல்லூர்,
திருநீலக்குடி, திருக்கடவூர், திருவானைக்கா, திருப்புறம்பியம், சிக்கல்,
ஸ்ரீவாஞ்சியம், திருச்சேறை, நாச்சியார் கோயில், திருமணஞ்சேர் என்று அவர்
இட்டுச் செல்லும் ஸ்தலங்களில் நாச்சியார் கோயில் திருக்கடவூர் போன்றவற்றை
நம்மில் பலர் கேட்டிருக்கலாம். மற்றவை எல்லாம் எங்கிருக்கின்றன என்பதே
தெரியாது. அவற்றின் விசேஷங்களும் தெரியாது பலருக்கு. வேளக்குடி கிருஷ்ணன்
தினம் கண்ணன் பேருரையோடு எல்லா திவ்ய தேசங்களுக்கும் இட்டுச் செல்கிறார்.
அவர் நமக்குச் சொல்லும் பெயர்கள் பல ஆழ்வார்கள் காலத்திய பெயர்கள். இன்று
அவற்றின் பெயரோ அவை எங்கு இருக்கின்றன என்பதோ தெரியாது. ஸ்ரீனிவாசராகவன்
ஒவ்வொரு கோவிலும் இருக்கும் ஊருக்குச் செல்லும் ரயில், பஸ் வசதிகள்,
செல்லவேண்டிய தூரம், ஸ்தல விருக்ஷம் எது, பாடல் பெற்ற ஸ்தலமானால், பாடியது
யார், என்ன பாடல், அந்த ஊரின் கோயிலின் விசேஷங்கள் அபிஷேக ஆராதனைகள்
நடக்கும் நேரம், என்னென்ன குறைகளுக்கு என்னென்ன பரிகாரங்கள், அதற்கான
செலவு விவரங்கள். முன்னதாகவே ஏற்பாடுகள் செய்துகொள்ள, அல்லது
வரமுடியாதவர்கள் தம்மிருப்பிடத்தில் இருந்தே விசேஷ பூஜைகள் செய்துகொள்ள
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி, தொலைபேசி, பின் செலவு விவரங்கள் அனைத்தையும்
ஒவ்வொரு கோவிலுக்குமாக தந்துள்ளார்.
உதாரணமாக, திருக்கருகாவூர்
கருகாத்த நாயகி கோயில் - (சுருக்கமாக) தஞ்சை ஜில்லா, பாபநாசம் அருகில் -
கும்பகோணம் சென்று திருகருகாவூர் செல்வது எளிது -புத்திர தோஷம் நீங்க,
குழந்தைப்பேறு பெற,. சுகப்பிரசவம் அமைய பிரத்யேக வழிபாடுகள் -வியாழக்கிழமை
தோறும் நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும். நேரில் வரமுடியாதவர்கள் ரூபாய் 40
அனுப்பினால் நெய் தீபம் ஏற்றி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அன்னையில்
பாதத்தில் வைத்து மந்திரிக்கப்படும் நெய்யை தினம் அருந்தினால் கருத்
தரிக்கும். பார்சல் மூலம் இந்த நெய்யைப் பெற கட்டணம் ரூ 75. குழந்தைப்
பேறு பெற்றபின் குழந்தையைத் தங்கத் தட்டில் இட்டு பிரார்த்தனையை நிறைவேற்ற
கட்டணம் ரூ 555 இப்படி பல்வேறு கட்டணங்கள்: காலை 5.30 முதல் பகல் 12.30
வரை, பின்னர் மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை வழிபாட்டுக்காக கோவில்
திறந்திருக்கும்.... இத்யாதி, இத்யாதி.
திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம்,
தக்ஷகன், ஆதிசேஷன், கார்க்கோடகம் போன்ற நாகராஜாக்கள் பூஜித்ததால்,
திருநாகேஸ்வரம் என்று பெயர் பெற்றது. நாக தோஷம், ராகு தோஷம் கடுமையாக
இருந்தால் பரிகாரம் செய்வதற்கான இடம். என்று சொல்லும் ஆசிரியர்,
ராகுவுக்கு அப்படி என்ன தனிச் சிறப்பு என்று ஒரு கேள்வியைக்
கேட்டுக்கொண்டு, "ஜாதகக்கட்டத்தில் ராகுவிற்கு என்று தனி வீடு (ராசி)
எதுவும் கிடையாது என்று ஆரம்பித்து ஜாதக சாஸ்திரத்தை விரிவாக எடுத்துச்
சொல்கிறார். அதோடு அற்புதக் கோயில் என்றாரே, அந்த அற்புதம் என்னவென்று
சொல்லவேண்டாமா? ஸிம்ஹி தேவியுடன் எழுந்தருளியுள்ள ராகு பகவானுக்கு மற்ற
அபிஷேகங்களுடன் பால் அபிஷேகம் நடக்கிறது. தலையிலிருந்து வழிந்து கழுத்தை
அடியும்போது, பால் நீல நிறம் அடைகிறது. ஏன்? பக்தர்களின் தோஷங்களை தான்
ஏற்றுக்கொள்வதாலா என்றும் கேட்டுக்கொள்கிறார், ஆசிரியர். இப்படி
அற்புதங்கள் காணும் இடங்களில் அந்த அற்புதங்களையும் விவரிக்கிறார்.
கோயிலின் அர்த்தங்கள் அதன்
பயன்பாடுகள், தரும் அனுபவங்கள் என நிறையச் சொன்னேன். நம்மில் பலருக்கு
கோயில் தெய்வத்தின் இருப்பிடமாதலால் முதன்மையாக வழிபாட்டுக்கான,
வேண்டுதலுக்கான, நம் குறைகளை முறையிடுவதற்கான இடம். வாழ்க்கையில் நிம்மதி
பெற அது மிக முக்கியம் ஸ்ரீனிவாச ராகவனின் புத்தகம் அற்புதக் கோயில்கள்
அதை மிக பயன்படுமுறையில் நிறைவேற்றுகிறது. அத்தோடு கோயிலில் காணும்
சிற்பங்கள், இலக்கியத்தில் பெற்ற சிறப்பு போன்ற இன்னும் பல விஷயங்களையும்
தருகிறார்.
அற்புதக் கோயில்கள்: கே.ஆர்.
ஸ்ரீனிவாசராகவன், வரம், New Horizon Media Pvt Ltd., 33/15 Eldams Road,
Alwarpet, Chennai-18
-------------------------------------------------------------------------------------------------
விதி விலக்கான சில ஆச்சரிய
நிகழ்வுகள்
- வெங்கட் சாமிநாதன் -
தமிழ் நாட்டில் சொல்லும்
வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தத்தைக் காணமுடியாது போய் வருகிறது.
வார்த்தைகளே அர்த்தமிழந்து போயுள்ளன. மொழி செத்துப் போனதற்குக் காரணம்,
மொழியின் குற்றமில்லை. மொழிக்கு அதன் அர்த்தத்தை நாம் கொடுப்பதில்லை. அரசு
என்று சொன்னால் அது மக்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தும், வளப்படுத்தும்
முன்னெடுத்துச் செல்லும் ஒன்றாக நினைப்போம் ஆனால் அரசே நாட்டின்
வளத்தையெல்லாம் திட்டமிட்டு அழித்து வரும் சக்தியாக மாறியுள்ளது. சட்டக்
கல்லூரி என்றால் அங்கு சட்டம் கற்பிக்கும் இடம் என்று நினைக்கிறோம் ஆனால்
அது மாணவர்களே ஒருவரை ஒருவர் கொலை வெறியோடு தாக்குமிடமாகக் காண்கிறோம்.
சமூக நீதி என்கிறார்கள். அங்கு தான் ஒவ்வொரு ஜாதியும் அதன் எண்ணற்ற
கிளைகளும் இனம் காணப்பட்டு, அதன் வளர்ச்சிக்கு வழி வகை செய்ய கட்சிகளும்
தொடங்கி ஒவ்வொரு ஜாதிக்கும் சலுகைகள் பெற்று, சீரும் சிறப்புமாக ஜாதிகள்
வளர்க்கப் படுகின்றன. காவல் துறை சாதாரண மக்களுக்குக் காவலாக துணையாக
இருக்கும், சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் என்று எண்ணுகிறோம். ஆனால்,
அவர்கள் காவல் காப்பது குண்டர்களையும், குற்றவாளிகளையும்ம் தான். அவர்கள்
தாம் வகிக்கும் பதவிகளைப் பயன்படுத்தி சட்டம் மீறிய செயல்களில்
ஈடுபடுபவதைத்தான் காவல் காக்கிறது. சாதாரண மக்களாகிய நாம் ஏதும் ஆபத்தில்
பாதுகாப்பு வேண்டி, அல்லது ஏதும் புகார் சொல்ல காவல் துறையை அணுகிணால்,
நம் ஜாதகம் சரியாக இருந்தால் நம் புகார் உதாசீனப்படுத்தப்படும், நாம் நல்ல
படியாக வீடு திரும்பலாம். நம் வேளை கெட்டிருந்தால், நம்மீதே ஏதேனும் பொய்
வழக்கைச் சுமத்தி நம்மை உள்ளே தள்ளி அடைப்பார்கள். பெரிய இடத்து
சொந்தக்காரர்கள் வீட்டு வேலைக்காரியேகூட ஒரு காவல் அதிகாரியைக் கன்னத்தில்
அறைந்து விடலாம். காவல் துறை மௌனமாகிவிடும். பொது இடங்கள் ஆக்கிரமிக்கப்
படுகின்றன. யாரும் கேட்பதில்லை. அரசே பின் அதற்கு அங்கீகாரம் கொடுத்து
விடுகிறது. அந்த இடம் மட்டுமல்ல. அந்தக் குடிசைக்கு இலவச தொலைக்காட்சிப்
பெட்டி, இலவச மின்சாரம், இலவச வேட்டி சட்டை ஒரு ரூபாய்க்கு அரிசி, ..ஆக
அரசு என்பது இலவசமாக எதையும் வாரி வழங்கும் ஒரு அதிகார மையம் என்று
அர்த்தம் செய்து கொள்ளப்பட்டுவிட்டது. வருடக் கணக்காக ரோடு என்று ஒரு
காலத்தில் இருந்த இடங்கள் குண்டும் குழியுமாக, சாக்கடை நீர் வழிந்தோட
காட்சி தருகின்றன. பகுத்தறிவை தமிழ் நாட்டுக்குப் போதிப்பவர்கள் தேர்தலில்
வெற்றி பெற வேண்டுதலுடன் தங்கள் ஊர் அம்மன் கோயிலில் பிரார்த்தனை
செய்கிறார்கள். தங்கள் கட்சிக்கு வாக்கு அளிக்க நாலாயிரம் ஐயாயிரம் பணமும்
கொடுத்து மீனாட்சி அம்மன் பேரில், சூடம் கொளுத்தி அல்லது பால்செம்பு மேல்
கை வைத்து சத்தியம் செய்து தரக் கட்டாயப்படுத்துகிறார்கள். "தங்கள்
பொன்னான வாக்குகளை" தமக்கு அளிக்க மறுத்தால், மண்டை உடையும். வீடு
நாசமாகும். ஜனநாயகத்துக்கு இந்தமாதிரி அர்த்தங்கள் தான் இருப்பதையும் நாம்
தமிழ் நாட்டில் கற்று வருகிறோம்.
சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி
இருந்தால் வாழ்வது எப்படி? எப்படியானால் என்ன? வாழ்ந்து கொண்டு தான்
இருக்கிறோம். இந்த அர்த்த மீறல்களே மீண்டும் மீண்டும் நிகழ்ந்தால், அது
தானே விதியாகிறது. ஆனால் மனித வாழ்க்கையில் ஆச்சரியங்களும் அவ்வப்போது
நிகழ்ந்து விடுகின்றன தான். அதைக் கண்டு நாம் உடனே மனம் மகிழ்ந்து
விடக்கூடாது. அவை விதி விலக்குகள். விதி விலக்குகளுக்கு தர்க்க ரீதியாக
ஏதும் விளக்கங்கள் காணமுடியாது. வளமுறை என, நியதி இது தான் என ஒன்று
இருந்தால் அதில் சில விதி விலக்குகள் நேர்ந்தே தீரும் என்பது தான் தர்க்க
விதி. அவை எப்போதாவது அபூர்வமாகத் தான் நிகழும் என்பதும் விதி.
தமிழ் இலக்கியப் படைப்புக்களில்
சிறந்தது எனத் தான் கருதும் ஒரு நூலுக்கு சாகித்ய அகாடமி வருடாவருடம்
பரிசளித்து வருகிறது. 1956 -லிருந்தோ என்னவோ சரியாக நினைவில் இல்லை. அந்த
இலக்கியப் பரிசு ஆரம்பத்திலிருந்து இலக்கியத்துக்காகவும் இல்லை. அது
பரிசாகவும் இருக்கவில்லை. அளிக்கப்படுவது தான் பரிசு. தானே எல்லா
முயற்சிகளையும் செய்து எடுத்துக் கொள்வது எப்படி பரிசாகும்? ஏதோ ஒரு
எழுத்துக்குத் தான் அது போய்ச் சேர்வது தான் விதியாக இருந்ததே அல்லாது
இலக்கியத்துக்கு தரப்பட்டது விதி விலக்காகத் தான் இருந்து வருகிறது.
ஒவ்வொரு வருஷமும் 70-80 பேருக்கு கோயில் சுண்டல் மாதிரி கலைமாமணி விருது
வினியோகிக்கப்பட்டால், அது எப்படி விருது ஆகும்?. பெறுபவர் எப்படி
கலைமாமணி ஆவர்? இந்த டிஸம்பர்- ஜனவரி மாதம் சென்னையில் சங்கீத
விழாக்காலம். சென்னையில் கிட்டத்தட்ட 700 சபாக்கள் இருப்பதாகச்
சொல்கிறார்கள். போன வருஷம் ஹிந்து பத்திரிகையில் இந்த சங்கீத பருவத்தின்
போது ஒவ்வொரு சபாவும் தினம் தினம் கொடுத்து கௌரவிக்கும் பட்டங்களும்
விருதுகளும் ஏதோ பிட் நோட்டீஸ் வினியோகிப்பது போல் இருந்தது. இந்த முப்பது
நாட்களில் 200-க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.
அந்தப் பட்டங்களின் பெயர்களும் வேடிக்கையாக இருந்தன. (சங்கீத கலா நிபுணர்,
நாத ரத்னா, சங்கீத மாமணி, தமிழ் இசைப்புரவலர்), இப்படி எத்தனை சொல்லிக்
கொண்டே போவது?. ஏதோ ஒரு பட்டம் வேண்டும், கொடுக்கவேண்டும். அதற்கு
அர்த்தம் இருக்க வேண்டியதில்லை. பெறுபவருக்கும் சந்தோஷம் தான். அந்த
சந்தோஷம் ஒரு நாளைக்குத் தான். பிறகு அது எல்லோராலும் மறக்கப்பட்டு
விடும். ஜி.என்.பி. செம்மங்குடி, அரியக்குடி, மகாராஜபுரம் என்று தான்
பெயர் நிலைக்கிறது. இந்தப் பட்டங்களை யார் கண்டார்கள்? இருப்பினும்,
இந்தப் பைத்தியக்காரத்தனம் தொடர்கிறது. சிலருக்கு தங்கள் பெயர்களால்
தெரியவருதல் அவமானமாக இருக்கிறது. பட்டங்களே போதும் என்று இருக்கிறார்கள்.
பெயரைச் சொல்லிக் குறிப்பிட்டால் அவர்களுக்கு கோபம் வரும்.
ஒரு விஷயம் கவனிக்க வேண்டும்.
இந்தப் பட்டங்களும் விருதுகளும் இல்லாமலே சங்கீதத்தில் தம் பெயரை
நிலைநாட்டிக்கொண்டவர்களுக்குத் தான் தரப்படுகிறது. ஆதலால் அவர்கள்
பெயர்கள் நிற்கின்றன. பட்டங்கள் உதிர்ந்து விடுகின்றன. ஆனால்
இலக்கியத்துறையில், விருதுகள், பரிசுகள் பெருமபாலும் வாங்கப்பட்டவையே
அல்லாது வழங்கப்பட்டவை அல்ல ஆதலால், தகுதி பற்றி பேசவேண்டியதில்லை. இது
அனேகமாக எல்லாப் பரிசுகளுக்கும் பொருந்தும். சாகித்ய அகாடமி மாத்திரமல்ல,
தமிழ் வளர்ச்சிக் கழகம், அண்ணாமலை செட்டியார் இலக்கியப் பரிசு போன்று
தமிழ் நாட்டு பரிசுகள் விருதுகள் அனைத்துக்கும் பொருந்தும். இது அறுபது
வருடங்களாகத் தொடர்ந்து வருவதால் இதுவே பரிசு வழங்கலின் விதியும் ஆகி,
இதுவே இன்றைய தமிழ் இலக்கிய மரபும் ஆகிவிட்டது. பின் விதி விலக்குகளும்
மரபு மீறலும் எப்போதாவது தவறி நிகழும் தானே.
அப்படி தவறி நிகழ்ந்தது தமிழ்
நாட்டில் அல்ல. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் நிகழ்கிறது. இது எப்படி
நிகழ்கிறது, என்று எனக்கு விளக்கத் தெரியவில்லை. ஆனால், அமெரிக்கா வாழ்
தமிழர் சிலர் சேர்ந்து வாழ்நாள் சாதனையாளர்கள் எனத் தேர்ந்த தமிழ்
எழுத்தாளர்களுக்கு அளிக்கும் விளக்கு பரிசு அது தொடங்கப்பட்ட
வருடத்திலிருந்து இன்று வரை அதற்கான இலக்கியத் தகுதி பெற்றவர்களுக்கே
கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு முறை கூட அது தவறியதில்லை. தகுதி
பெற்றவர்கள் என்பதற்கும் மேலாக, அவர்கள் தமிழ் நாட்டு இலக்கிய உலகம்,
பல்கலைக் கழகங்கள் மதிக்காதவர்களும், உதாசீனப்படுத்தப் பட்டவர்களும் ஆவர்.
விளக்கு பரிசு தொடக்கத்தில் அளிக்கப் பெற்ற சி.சு.செல்லப்பாவிலிருந்து
இந்த வருடம் அப்பரிசைப் பெற்றுள்ள எஸ் வைதீஸ்வரன் வரை. (சி.சு.செல்லப்பா,
சி.மணி, ஞானக் கூத்தன், எஸ்.ராமானுஜம், பூமணி, நகுலன்........)
செல்லப்பாவை நாடி தமிழக, அகாடமி பரிசு வந்த போதிலும் தான் அந்தப்
பரிசுகளைப் பெறுவது தனக்கு அவமானம் என்று அதை உதறியவர் செல்லப்பா. எஸ்
வைதீஸ்வரன், புதுக்கவிதையின் பிறப்பிலிருந்து கவிதை எழுதி வரும் முன்னோடி.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று. தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லையே என்ற
ஆதங்கம் அவருக்கு இருக்கும் தான். இருபது வயதில் ஒரு புதிய கவிதை மரபு
முன்னோடிகளில் ஒருவராக அறியப்பட்டு, இப்போது அவரது 70 வயதிலும் அவரைப்
பற்றி யாரும் பேசவில்லை, அவரை கௌரவிக்கவில்லை என்றால் ஆதங்கம் இராதா என்ன?
இப்போதாவது அவர் மனம் சமாதானம் அடைந்திருக்கும். அவரையும் கவிஞர் என்றும்,
அவரது பங்களிப்பும் அங்கீகரிப்பிற்கும் கௌரவிப்பிற்கும் உரியது என்றும்
கண்டு கொண்டது விளக்கு பரிசுக்கு பொறுப்பானவர்கள் தாம். இன்னொரு தமிழ்
பண்பாட்டு மரபு மீறல், விளக்கு பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க
நியமிக்கப்பட்ட குழுவினர் யாரும் இதுகாறும், பரிசைத் தாமே முறை வைத்து
எடுத்துக் கொள்ளவில்லை. இதற்காகவே நாம் இவர்களைப் பாராட்ட வேண்டும்.
இவர்களும் தமிழ் இலக்கிய உலத்திலிருந்து பெறப்பட்டவர்கள் தாம். இது எப்படி
நிகழ்கிறது?
ஒரு மரபு ஆரம்பத்திலிருந்து
ஸ்தாபிதமான பிறகு, அதை மீற பின் வருபவர்கள் யாரும் எண்ணினாலும் அது
வெட்கக் கேடான செயலாகிப் போகும். சாகித்ய அகாடமி பரிசோ, ஆரம்பத்திலிருந்தே
வேறு ஒரு மரபைத் தான் தொடங்கி வைத்தது. தமிழ் ஆலோசனைக் குழுவின்
தலைவருக்கே சாகித்ய அகாடமியின் முதல் இலக்கியப் பரிசு போய்ச் சேர்ந்தது.
அதுவும் 50 வருஷ பழமையாகிப் போன மரபு. மீறுவது கஷ்டம் தான்.
மறுபடியும் ஒரு வெளிநாடு வாழ்
தமிழர்களின் மரபு மீறிய செயல்பாடு. கனடா வாழ் தமிழர்கள் தொடங்கி வைத்துள்ள
இயல் விருது. கனடா இலக்கியத் தோட்டமும், டோரண்டோ பல்கலைக் கழகத்தின்
தெற்காசிய ஆராய்ச்சி மையமும் சேர்ந்து வழங்கும் வாழ்நாள் சாதனைக்கான இயல்
விருது. இதுவும் அது தொடங்கப்பட்ட 2003-ம் ஆண்டிலிருந்து இன்று வரை. இதன்
இவ்விருது பெற்ற சாதனையாளர்கள் சுந்தர ராமசாமியிருந்து இவ்வருடம் பரிசு
பெற்றுள்ள அம்பை வரை. இடையில், கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், தாஸிஸியஸ்,
ஜார்ஜ் எல்.ஹார்ட், எஸ். பத்மனாபன் ஐயர், லக்ஷ்மி ஹோர்ம்ஸ்ட்ராங்) என
இவர்கள் எல்லோரும் தமிழ் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தவர்கள். அதன்
எல்லைகளை விஸ்தரித்தவர்கள். மற்றவர் பயணிக்காத பாதையில் சென்று புதிய தடம்
அமைத்தவர்கள். மிக குறிப்பாகவும் முக்கியமாகவும், தமிழ் இலக்கிய உலகம்
மதிக்காதவர்கள். அங்கீகரிக்காதவர்கள். அம்பை, எனக்குத் தெரிந்த இன்றைய
அம்பை 1970களிலிருந்து எழுதி வருபவர். பெண்ணுக்கான தனித்வத்தை, ஆணின்
நிழலாக அல்ல, வலியுறுத்தியவர். பெண்மையை மறுப்பவர் அல்ல. 1970-க்கும்
முன்னாலேயே எழுதத் தொடங்கியவர் தான். கலைமகள் பரிசும் தன் நாவல் அந்தி
மாலைக்குப் பெற்றவர். தன் அந்த ஆரம்ப எழுத்துக்களை மறுக்கும் வலிமை
அவருக்கு இருந்தது. சிறகுகள் முறியும் தொடங்கி நான்கு சிறுகதைத்
தொகுதிகள், Purple Sea என்ற தலைப்பில் அவரது கதைகள் ஆங்கிலத்திலும், பெண்
எழுத்தாளர்களையும் அவர்கள் எழுத்தையும் பற்றிய ஆராய்ச்சி நூல் ஒன்று
ஆங்கிலத்தில் (Face Behind the Mask). இந்திய பரப்பில் பல்வேறு துறைகளில்
தம் ஆளுமையைப் பதிப்பித்த சாதனையாளர்கள் பலர் தம் வாய்மொழியாகவே தம்
பயணத்தைப் பற்றிய உரையாடல் தொகுப்புகள் இரண்டு பயணப்படாத பாதைகள், சொல்லாத
கதைகள் என வெளிவந்திருக்கின்றன. Sparrow என்ற அவரது நிறுவனம், பெண்கள்
நிலையையும் அவர்களின் சாதனைகளைப் பற்றியுமான செய்திகளைத்
தொகுத்துவருகிறது. பெணகளின் உரிமை பற்றிக் கதைகள் எழுதுவது மட்டுமல்ல,
பல்வேறு தளங்களிலும், துறைகளிலும் அவர்களது நிலை பற்றியும் சாதனைகள்
பற்றியுமான சேகரிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார் அம்பை. 40 வருட
கால ஈடுபாடு பற்றிய தெரிவோ, அங்கீகாரமோ தமிழ் நாட்டிலிருந்து அவருக்குக்
கிடைத்ததில்லை. ஆச்சரியப்படுவதற்கில்லை. டோரண்டோவிலிருக்கும்
தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அவர்களிடமிருந்து அங்கீகாரமும்
பாராட்டும் 2008=ம் வருடத்திய இயல் விருதாக அம்பையை நாடி வந்துள்ளது.
ஆனால் ஆச்சரியப்பட வைக்கும்
நிகழ்வுகள் இங்கும் நிகழ் ஆரம்பித்துள்ளன. பல்கலைக் கழகமோ, சாகித்ய
அகாடமியோ மாறிவிடவில்லை. இரு சினிமா இயக்குனர்கள், ஜெர்ரி, ஜேடி
தொடங்கியுள்ள ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை யின் சாரல் என்ற பெயரில் ஒரு
இலக்கிய விருது, தொடக்கத்திலேயே திலீப் குமாருக்கு வழங்கியுள்ளது. திலீப்
குமார் எழுதிக் குவிப்பவரும் இல்லை. பிரபலமும் இல்லை. தொடர்ந்து
எழுதுபவரும் இல்லை. தனக்கு எழுதத் தோன்றிய போது அவ்வப்போது எழுதுபவர்.
சமீப காலத்தில் அவ்வளவாக எழுதவில்லையாதலால், இலக்கிய வட்டத்துக்குள்ளேயே
கூட அவர் பெயரை எவ்வளவு பேர் நினைவு கொள்வார்கள் என்பது தெரியாது. எந்தக்
குழுவோடும், அரசியல் சக்திகளோடும் தன்னை ஐக்கியப் படுத்திக்கொண்டவர்
இல்லை. தனிக் கட்டை. அவரது சிறுகதைகள் என இரு தொகுப்புகளே வந்துள்ளன.
பரபரப்பூட்டும் எழுத்தும் இல்லை. தமிழ் நாட்டில் வாழும் குஜராத்தி
குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழில் எழுதியுள்ளது கடந்த இருபத்தைந்து வருட
காலத்தில் மிகக் கொஞ்சம் என்றே சொல்லவேண்டும். எனினும் தமிழ் நாட்டில்
வாழும் குஜராத்தி மக்களின் வாழ்க்கை அவர் கதைகளில் பதிவாகியுள்ளது. அதுவே
தான் என்று சொல்லக் கூடாது. அவரைச் சுற்றிய வாழ்க்கை அது. மிகக் குறைவாக
எழுதிய போதிலும் அவரது எழுத்தின் தனித்வமும், அவரது இலக்கிய ஆளுமையும்
அவரை மறந்து விடாது குறிப்பாக எடுத்துச் சொல்லத்தக்கவை. ஆரவாரமற்ற,
ஜொலிப்புகள், சோதனைகள் என ஏதும் அற்ற, அமைதியும், அதே சமயம் வாழ்க்கைச்
சிக்கல்களின் முரண் நகையும் கொண்ட எழுத்து அவரது. தமிழ் நாட்டில் வாழும்
ஒரு இலக்கியப் பரிசுத் தேர்வுக் குழு சாரல் விருதுக்கு அவரது பெயரைச்
சலித்து எடுத்திருப்பது, ஒரு ஆச்சரியமான நிகழ்வு ஆகும். ஐம்பது அறுபது
வருட காலம் பேணிய தமிழ்ப்பண்புக்கு விரோதமான மரபு மீறிய செயலாகும். இது
எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு விளக்கத் தெரியாது. சில ஆச்சரியங்கள்
இப்படி நிகழ்ந்து விடுகின்றன.
இதையெல்லாம் ஒன்றுமில்லை என்று
சொல்லத்தக்க ஒரு நிகழ்வு தமிழக முதல்வர், சென்னை புத்தகக் காட்சி
நடைபெறும் சந்தர்ப்பத்தில் வழங்கும், கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது.
தமிழ் நாடு அரசோ, தமிழ் அரசியல் கட்சிகளோ, அல்லது பல்கலைக் கழகங்கள் போன்ற
நிறுவனங்களோ நினைத்தும் பார்க்காத ஐவருக்கு இவ்விருது இவ்வருடம்
வழங்கப்பட்டுள்ளது. அவர்களுள் ஒருவரான ந.முத்துசாமி, இன்றைய தமிழின்
சிறந்த சிறுகதையாளர். அதோடு தெருக்கூத்திலும், நவீன நாடகத்திலும் அவர்
முழு மூச்சாக ஆழ்ந்து விட்ட காலத்திலிருந்து அதிகம் சிறுகதை எழுதுவதில்
கவனம் செலுத்தாதவர். அதனாலேயே அவர் சிறந்த சிறுகதைக்காரர் என்பது நம்மில்
பலருக்கு மறந்து வருகிறது. அவரும் அது பற்றிக் கவலைப் பட்டதாகத்
தெரியவில்லை. ந.முத்துசாமியின் நவீன நாடக முயற்சிகளில் எனக்கு ஈர்ப்பு
இல்லாது போனாலும், அவர் அதில் ஆழ்ந்த நம்பிக்கையோடும், தீவிர
முயற்சியோடும் கடந்த முப்பது வருடங்களாக தன்னை ஆழ்த்திக்கொண்டுள்ளார்.
தான் நம்பியதில் வாழ்க்கையைச் செலவிடுவது என்பது பெரிய விஷயம். அவரது
கூத்துப்பட்டறை தன்னை ஒரு தனித்வம் கொண்ட ஸ்தாபனமாக நிறுவிக்கொண்டு
விட்டது. அதிலிருந்து பயிற்சி பெற்றுள்ள பசுபதி போன்றவர்கள் தமிழ்
சினிமாவில் கூட தம் தனித்வத்தை பதித்துள்ளார்கள். அவரது தீவிர தொடர்ந்த
செயல்பாட்டினால் இப்போது நவீன நாடகத்தைத் தவிர வேறு எதுவும் இங்கு
செல்லுபடியாவ தில்லை. நவீன நாடகமும் அப்படி ஒன்றும் பெரிய சாதனைகளை முன்
வைத்துவிட்டது என்றும் சொல்வதற்கில்லை. எல்லோரும் நவீன நாடக சங்கீர்த்தனம்
தான் செய்கிறார்கள். இப்படி எல்லோரையும் தன் வழிக்கு வரச்செய்து
'கோவிந்தா' போடச் செய்துள்ளது முத்துசாமியின் சாதனை தான். அது எதாகிலும்
ந.முத்துசாமியின் தீவிரமும் நம்பிக்கையும் தொடர்ந்த செயல்பாடும் மதிக்கத்
தக்கவை. அவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அவரது நவீன நாடக
பங்களிப்புக்காகத் தான் என நான் நினைக்கிறேன்.
அடுத்து புதுக்கவிதையின் தொடக்க
காலத்திலிருந்து ஒரு முன்னோடியாக விளங்கிய கவிஞர் சி.மணி. என்ன காரணத்தாலோ
ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரிடமிருந்து கவிதை எதுவும் வரவில்லை. ஆரம்ப
காலத்தில் நிறைய எழுதியவர். யாப்பறிந்த புதுக்கவிதைக்காரர். உடன் வாழும்
சமூகத்தை, மதிப்புகளை எள்ளி நகையாடின அவர் கவிதைகள். அன்றாடம்
பத்திரிகையின் முதல் பக்கத்தில் பெயர் வந்துகொண்டே இருத்தல் தான்
வாழ்வதற்கு அடையாளம் என்பது அரசியலில் மாத்திரமில்லை, தமிழ் இலக்கிய
சமூகத்திலும் செல்லுபடியாகும் மதிப்பு. தொடர்ந்து எழுதிக்கொண்டே
இராவிட்டால் மறக்கப்படுவார்கள். அப்படி மறக்கப்பட்டவர் சி.மணி.
கன்·பூசியஸ¤க்கும் முந்தி வாழ்ந்த சீன ஞானி லாவோ
ட்ஸ¤வின் தாவோ தே ஜிங் கவிதைகளை மொழிபெயர்த்துள்ளது
குறிப்பிடவேண்டிய கவித்வ செயல். ஆனால் இவையெல்லாம் இன்றைய தமிழ் இலக்கிய
சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பவை அல்ல. பரபரப்பு இல்லாதது எதையும் தமிழ்
இலக்கிய சமூகம் கண்டு கொள்ளாது. அந்த சி.மணியை, தினம் தினம் தன் இருப்பை
நமக்கு நினைவு படுத்திக்கொண்டிராத சி.மணியை, கலைஞர் பொற்கிழிக்கு
தேர்ந்தது பெரிய விஷயம் தான். தமிழ் மரபு மீறிய செயல்தான்.
மூன்றாவதாக விருது பெறுபவர் எஸ்.
முத்தையா. சென்னையைப் பற்றி, நம் பாரம்பரியம் பற்றி தொடர்ந்து ஹிந்து
பத்திரிகையில் எழுதி வருபவர். நான் வெறுப்புற்று ஹிந்து பத்திரிகை
வாங்குவதை நிறுத்திய பிறகு நான் இழந்து நிற்பது எஸ். முத்தையாவின்
பத்திகளைத் தான். தமிழ் நாட்டில் நம் பாரம்பரியத்தைப் பற்றிய அக்கறை இல்லை
என்று சொல்லத்தான் வேண்டும். யாரிடம் அக்கறை இருக்க வேண்டுமோ அவர்களிடமே
இல்லை. நம் சரித்திர சின்னங்கள், பாரம்பரிய சொத்துக்கள் அழிந்து கொண்டு
வருகின்றன. நாம் அழித்துக் கொண்டு வருகிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.
சென்னையிலேயே பல அழிந்து கொண்டு வருகின்றன. அவற்றின் இடத்தில் பகாசுர
காங்கிரீட் கட்டிடங்கள் எழுப்புவது முன்னேற்றம் என்ற நினைப்பில் செயல்
பட்டுக்கொண்டிருக்கிறோம். இன்னிலையில் எஸ்.. முத்தையாவின் குரல் யாரும்
கேட்காத கானகக் குரல் தான். அவர் கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருதுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒரு முரண் நகை தான். நான் தான் சொன்னேனே
என்னென்னவெல்லாமோ தர்க்கத்தால் விளக்கமுடியாதவை நடந்து விடுகின்றன.
ஆச்சரியம் தரும் நிகழ்வு என்றாலும், இது நமக்கு மகிழ்ச்சி தரும்
நிகழ்வுதான், பாராட்டப்படவேண்டிய தேர்வு தான். போன வருடம் விருது
வழங்கப்பட்டது ஆன்ற தமிழ் மரபை ஒட்டித்தானாமே. சொன்னார்கள்.
கேள்விப்பட்டேன். இப்படி நிகழவில்லையே. ஆக, அடுத்த முறை தேர்வுக் குழு
மாறும்போது ஆச்சரியங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.
நான்காவதாக விருது பெறும் கிரீஷ்
கர்னாட், கன்னட நாடகாசிரியர். துக்ளக் தொடங்கி அவர் எழுதிய நாடகங்கள்
இந்திய நாடக உலகில் ஒரு புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தன. தொடர்ந்து
எழுதி வருபவர், மிகப் புகழ் பெற்றவர் தன் நாடகங்களுக்கான கருவை சரித்திரம்
புராணம், myth என பலவற்றிலிருந்து எடுத்தாலும் நாம் தமிழர் கொண்டாடும்
நவீன நாடகம் எழுதுபவர் இல்லை. அவர் பெற்றுள்ள விருதுகளுக்கும் இந்திய
பரப்பு முழுதிலும் அவரது தாக்கத்திற்கும் அளவில்லை. ஆக, அவர் கலைஞர்
பொற்கிழிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமான விஷயம் தான்.
உரியவரல்ல என்பதல்ல. பொற்கிழி விருதின் தேர்வுத் தளம் இந்தியப்
பரப்பளவுக்கு விரிகிறதோ என்னவோ. ஒரு வேளை ஒரு வேற்று மொழிக்கும் ஒரு
விருது என்று ஒதுக்கப்பட்டுள்ளதோ என்னவோ.
ஐந்தாம் விருது ஆர். சூடாமணி
அவர்களுக்கு. அவரும் கடந்து நூற்றாண்டு ஐம்பதுகளின் பிற்பாதியிலிருந்து
எழுதி வருகிறார். பெண்கள் உலகம். அதுவும் அடைபட்ட பெண்கள் உலகம் தான் அவர்
கதைகளிலும் நாவல்களிலும் விரியும். சம்பிரதாய உலகத்தின் சம்பிரதாய மன
உளைச்சல்கள். நான் படித்தவரை, வீட்டுச் சுவரைத் தாண்டி அவர் பெண்கள்
அறியார்கள் என்று நினைக்கிறேன். அதற்கும் காரணங்களும் நிர்ப்பந்தங்களும்
இருந்தன. அவரையும் சாகித்ய அகாடமியோ யாருமோ தெரிந்திருக்கவில்லை. இப்போதைய
பெண்ணியம் ஆட்சி செய்யும் காலத்தில் ஆர் சூடாமணியைப் பற்றி என்ன கவலை?
அவரையும் மறந்தாயிற்று. ஆனால் கலைஞர் பொற்கிழி தேர்வுக் குழுவினர் அவரை
நினைவில் வைத்திருக்கிறார்களே. ஆச்சரியம் தான்.
எனக்கு ஆச்சரியம் தராத, தமிழ்
மரபு மீறப்படாத ஒரு நிகழ்ச்சியைச் சொல்லி, முடிக்கவேண்டும். நிறைய
ஆச்சரியங்களை எதிர்கொள்ளும் தினவு நம்மிடம் இல்லை. தமிழ் தெலுங்கு,
ப்ராகிருதம், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய எல்லா மொழிகளிலும் நிறைந்த
பாண்டித்யமும் அறிவும் பெற்றிருந்த பன்மொழிப் புலவர் என்று அறியப்பட்ட
மு.க.ஜகன்னாத ராஜா தந்து 76-வது வயதில் போன மாதம் மறைந்து விட்டார்.
தெலுங்கு, ப்ராகிருதம், ஸமஸ்கிருதம் மலையாளம், கன்னடம் ஆகிய
மொழிகளிலிருந்து நிறைய பண்டைய நூலகளை அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
தனது 75-76 வயது காலத்தில் அவர் இப்பல மொழிகள் ஒன்றிலிருந்து மற்றதுக்கு
மொழிபெயர்த்துள்ள நூலகள் கிட்டத்தட்ட அறுபதுக்கு மேல் இருக்கும். இவற்றின்
எண்ணிக்கையிலும், சிறப்பிலும் இந்த தொடர்ந்த செயல்பாடு மகத்தான பங்களிப்பு
என்று சொல்ல வேண்டும். ஆனால் அவரது வாழ்நாள் சாதனை எத்தகைய தாக்கத்தையும்
தமிழ் இலக்கிய உலகில் நிகழ்த்தவில்லை. காதா சப்த சதி, முகத மாலா, சுமதி
சதகம், கன்யா சுல்கம், வஜ்ஜாலக்கம் என அவர் தமிழுக்கு மொழிபெயர்த்த
காவியங்கள் நிறைய. பௌத்த, சமண தத்துவ நூல்களும் நிறைய
மொழிபெயர்த்துள்ளார். பாரதி கவிதைகள், திருக்குறள், முத்தொள்ளாயிரம் புற
நானூறு போன்ற பல தமிழிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு
மொழிபெயர்த்துள்ளார். எல்லாமாக கிட்டத்தட்ட 50-60 நூல்கள் இருக்கும்.
இவரைப் போல பல மொழிகளை அறிந்து மொழிபரிமாற்றம் செய்துள்ளவர்கள், ஒரு
பாலமாகத் திகழ்ந்தவர்கள் தமிழில் இல்லை. இவரது மொழிபெயர்ப்புக்காக சாகித்ய
அகாடமியின் மொழி பெயர்ப்புப் பரிசுகளும் வாய்ப்புக்களும் கிடைத்தனதான்.
ஆனால் தமிழ் இலக்கிய உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு ஆதரவு
அளித்தது, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திர தேசத்திலிருந்து குடி
பெயர்ந்து கடைசியாக ராஜபாளையத்தில் வசித்து வரும் ராஜூ க்கள் சமூகம் தான்,
"நம்ம சமூகத்தில் இப்படி நிறைய படித்தவர், நிறைய எழுதுகிறவர் இருப்பது
நமக்குப் பெருமை, அவரை ஆதரிக்க வேண்டும்" என்று பெருமைப் பட்டு
ஆதரித்தார்கள். தமிழ் இலக்கிய சமூகத்திற்கு அவரைத் தெரியாது. கன்யா
சுல்கத்தையும், வஜ்ஜாலக்கத்தையும் மொழிபெயர்த்தால் அது எப்படி கவனம்
பெறும்?. அதில் என்ன பரபரப்பும் கவர்ச்சியும் இருக்கக் கூடும். இதில் தான்
எனக்கு ஆச்சரியம் ஏதும் இல்லாது போய்விட்டது. விதி விலக்குகள் சில
விதியாகிவிடாது.
/12.1.09
கோயில் என்னும் அற்புதம்
- வெங்கட் சாமிநாதன் -
அற்புதக் கோயில்கள் என்று
சொல்கிறார் கே ஆர். ஸ்ரீனிவாசரகவன். தவறில்லை. அவர் கண்ட கோயில்களின்
அற்புதங்களைச் சொல்கிறார் அவர். ஆனால் கோயிலே ஒரு அற்புதமாகத் தான்
எனக்குத் தோன்றுகிறது. கோயில்கள் எங்கும் எந்த நாட்டிலும் உண்டு தான்.
அந்தந்த நாட்டு மதங்களைச் சார்ந்து அங்குள்ள கோயில்களை மசூதி என்றும்,
சர்ச் என்றும், விஹார் என்றும் சினகாக் என்றும் அழைக்கிறார்கள்.
இந்தியாவிலும் மற்ற மாநிலங்களில் இந்துக்கள் தெய்வங்களை வணங்கச் செல்லும்
கோயில் கள் இருக்கின்றன தான். எல்லாம் பவித்திரமான இடங்கள் தான். ஆனால்
தென்னாட்டில் கோயில்கள் மக்கள் வாழ்வில் கொண்டுள்ள இடம் அவற்றின் தாக்கம்
மிக ஆழமானதும் பரவலானதும் ஆகும். அதிலும் தமிழ் நாட்டின் கோயில்கள் நம்
மனதில், நம் வாழ்க்கையில், தமிழ் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளதற்கு
இணையாக வேறு எதையும் சொல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். அதைத் தான்
கோயிலே ஒரு அற்புதம் என்று சொன்னேன்.
கோயில் எல்லோருக்கும் வழிபடும்
இடமாக உள்ளது, உலகம் முழுதிலும். பிரார்த்தனை செய்யும் இடமாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் ஆண்டவனை நி¨னைந்து கொள்ளும் இடமாக உள்ளது. அங்கு
சென்று நம்மை இழக்கும் இடமாக, நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இடமாகவும்
உள்ளது. இம்மாதிரியான சிந்தனைகளும் எண்ணப்போக்கும் வழிமுறையும் நம் மனதை
செயல்களை அவ்வப்போது சுத்திகரித்துக் கொள்ளும் இடமாகவும் இருந்துவருகிறது.
பெருமாலான கோயில்கள், அதாவது வழிபாட்டு இடங்கள் கட்டிடக் கலை உன்னதத்தை
உணர்த்தும் சின்னமாகவும் இருக்கிறது. வானை முட்டும் கோபுரங்கள், மினார்கள்
நம் மண்ணுலக அன்றாட வாழ்க்கைப் பிணைப்புகளிலிருந்துகொண்டும் அல்லது
அவற்றிலிருந்து விடுபட்டும் வானை நோக்கி நம் பார்வையை இட்டுச் செல்லும்
சின்னமாகவும் திகழ்கின்றன. பரந்து விரிந்து மண்ணையும், நெடிது உயர்ந்து
விண்ணையும் இணைக்கும் தத்துவத்தை படிமமாக்குவது கோயில். மண்ணில் கால்
பதித்து விண்ணை லட்சியமாகக் காட்டுவது கோயில். கோயிலின் உள்ளே கால்
வைத்ததுமே அதன் பிரம்மாண்டம் நம்மை ஆட்கொள்ளும். நம் அகங்காரத்தை
அழிக்கும். இப்பிரபஞ்சத்துள் நம் சிற்றுருவை நினைவு படுத்தும். உலகம்
முழுதுக்கும் இவை பொதுவான விஷய சிதங்கள்.
ஆனால் தென்னகக் கோயில்கள்
அவற்றின் ஆயிரம் இரண்டாயிரம் என நீளும் வாழும் சரித்திரைத்தைப் பறை
சாற்றும். வாழும் சரித்திரம் என்றேன். அழிந்து அல்லது அழிக்கப்பட்டு
பின்னர் மீண்டும் புணரமைக்கப்பட்ட நீண்ட வரலாற்று நினைவுகள் கொண்ட
கோயில்கள் பல இந்தியாவில் உண்டு. இன்றும் நாம் காணும் சோமநாதபுர கோயிலோ
காசி விஸ்வநாதர் ஆலயமோ அவற்றின் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்தவை அல்ல.
ஆனால் காஞ்சி கோயில்களோ, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலோ அவற்றின் தொடக்க
கால உருவை இன்னும் தம்முள் கொண்டவை. அவை 1500- 2000 ஆயிரம் கால நீட்சியின்
சின்னங்களை, சாட்சியங்கள் தம்முள் கொண்டவை. பூதத்தாழ்வாரும் சுந்தரரும்
வழிபட்ட கோயில்கள் இன்றும் நம்மிடையே வாழ்கின்றன. ராஜகோபுரத்தின் வழியாக
உள்ளே பல பிரகாரங்களை, மண்டபங்களைத் தாண்டி கற்பக்கிரஹம் வரையிலான நம் சில
நூறு காலடித் தடங்கள், இன்றிலிருந்து பல சரித்திர காலகட்டங்களைக் கடந்து
தமிழ் நாகரீகத்தின் வரலாற்றுத் தொடக்கத்தைத் தொடும் நீண்ட பயணத்தின்
தடங்களை நமக்கு வழியில் பல சான்றுகளோடு உணர்த்தும். கோயில் பிரகாரச்
சுற்றுச் சுவர் கல்வெட்டுக்கள் கோயிலின் அவ்வக்கால நிர்மாண, நிர்வாக
சரித்திரத்தைச் சொல்லும் ஆவணங்களாகும்.
தமிழ் வாழ்க்கையே கோயிலை மையமாகக்
கொண்டதுதான். கோயில் தமிழனுக்கு வாழ்வளித்தது. அவன் கலைகளுக்கு ஊட்டம்
கொடுத்து வளமும் வாழ்வும் கொடுத்தது கோயில். சங்கீதமும் நாட்டியமும்
ஓவியமும், சிற்பமும் வளர்ந்தது அங்கு.தமிழ் இலக்கியத்தின் பெரும் பகுதி
படைக்கக் காரணமாக இருந்தது கோயில். தமிழ் நாட்டுக் கோயில்களிலிருந்து
பிறந்த பக்தி இயக்கம் தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணைக்கண்டம்
முழுதுக்குமான கலை, இலக்கிய,மொழி வளர்ச்சிக்கு ஆதர்சமாக இருந்துள்ளது.
அந்த ஆதர்சத்தின் நீட்சியை காரைக்கால் அம்மையாரிலிருந்து,
பூதத்தாழ்வாரிலிருந்து தொடங்கி, இங்கு பாரதி வரையும், வங்கத்தில் தாகூர்
வரையும் காணலாம். தேவாரத்தையும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும்
பிறப்பித்தவை இக்கோயில்கள் தாம். ஆழ்வார்களும் சைவப் பெரியார்களும் தாம்
நடைப்யணம் கொண்டு தரிசித்த பெருமாணை, அவன் வதியும் கோயிலையும், ஊரையும்
பாடிக் கோயிலுக்கு வரலாற்றுச் சிறப்பும் தந்து, தமிழுக்கு இலக்கிய வளமும்
தந்து, கலைகளை வாழச் செய்த போன்ற ஒரு மரபும் சரித்திரமும் உலகில் வேறு
எங்கு காணப்படுகிறது?. தமிழ் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அதற்குக்
குணமும் வழிமுறையும் தந்த சரித்திரம் கொண்டவை நம் கோயில்கள். நம்
கோயில்கள் கட்டிடகக் கலை வளர்ச்சியைச் சொல்லும் நிதர்சன ஆவணம். சிற்பக்
கலைக் கூடம். ஒவியக் கலைக் கூடம். தஞ்சை பெரிய கோவிலிலிருந்து காஞ்சி
மாவட்ட ஏதோ ஒரு கிராமத்து துர்க்கை அம்மன் கோயில் வரை கோயில்கள் பக்திக்கு
மாத்திரம் உறைவிடமாக இல்லை. நாடகத்தையும் ஆடல் பாடல்களையும்
கூத்துக்களையும் நாட்டுப் புற கலை வடிவங்களையும் வளர்த்தன. ஒரு ஊரின்
மையமாக இருந்து கொண்டு அந்த சமூகத்தின் மக்களின் வாழ்க்கையையே
நிர்ணயிக்கும் ஒன்றாக, ஒரு நாகரீகமாக அது இருந்துள்ளது. தென்னிந்திய
மனதுக்கு, இன்னும் குறிப்பாகவும் சிறப்பாகவும் தமிழ் மனதுக்கு கோயில் என்ற
பதம், சப்தம், படிமம், எண்ணற்ற அர்த்தங்களைக் கொடுக்கும் ஒரு அனுபவமாக
இருக்கிறது. வரலாறு, அர்ப்பணம், பிரார்த்தனை, இலக்கியம், கலைகள்,
தத்துவம், வாழ்க்கை முறை, தெய்வம், மீட்சி என அத்தனையும் தன்னுள் கொண்ட,
ஒன்றிணைந்த ஒரு அனுபவம். கோயில் வேறு எங்கும் இத்தனை அர்த்தங்களை,
அனுபவங்களைத் தரும் ஒன்றாக இருக்கவில்லை. எனவே, கோயிலே ஒரு அற்புதம் என்று
தான் எனக்குத் தோன்றுகிறது.
ஆனால் தமிழ் வாழ்க்கை இப்போது
இந்த அடையாளங்களையெல்லாம் இழந்து வருகிறது. இன்னமும் சரியாகச் சொல்லப்
போனால், முனைந்து அழிக்கப்பட்டு வருகிறது. கோயில் என்னும் அற்புதம் தன் பல
திறத்த, பல வண்ண அடையாளங்கள் ஒவ்வொன்றாய் இழ்ந்து வருகிறது. அந்த அழிவின்
வேகமும் அளவும் குணமும் இடத்துக்கு இடம் வேறுபட்டுக் காணப்பட்டாலும்,
ஒவ்வொரு கோவிலிலும் அழிவு என்பது ஒரு நிச்சயத்துடன் படிப்படியாக நிகழ்ந்து
வருகிறது. நிகழ்த்தப்பட்டு வருகிறது. கோயில் நிலங்கள்
அபகரிக்கப்பட்டுவிட்டன.கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள்
அசுத்தப்படுத்தப்படுகின்றன. கோயில்கள் பராமரிப்பு இன்றி அழிகின்றன.
பராமரிப்பு காணும் இடங்களில் அதன் வரலாற்று அடையாளங்கள், அதன் புனிதத்வம்
அழிக்கப்பட்டு வருகின்றன.
ஒரு கலையுணர்வும் வரலாற்று
உணர்வும் கொண்ட சமூகத்தில், தமிழ் நாட்டின் ஒவ்வொரு கோவிலும் அதன்
முழுமையில், அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டு வரும். ஆனால் இந்த இரண்டும்
இன்றைய சமூகத்தில் வரண்டுவிட்டன. ஒரு போலியான பகுத்தறிவின் தாக்கத்தில்,
கலையுணர்வும் வரலாற்றுணர்வும் அற்ற பகுத்தறிவு அது, அழிவு தான்
நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோயிலைப் பற்றிம் அதன்
எல்லா அம்சங்களையும் விவரிக்கும் முழுமையான ஆவணமாவது கிடைக்கச்
செய்யவேண்டும்.
கே.ஆர். ஸ்ரீனிவாச ராகவன்
அற்புதக் கோயில்கள் என்று பதினான்கு கோயில்கள் பற்றி அவற்றில் தான் கண்ட
சிறப்பம்சங்களை, சொல்லிச் செல்கிறார். இவற்றில் சிதம்பரம் போன்ற
புகழ்பெற்ற ஸ்தலமும் உண்டு. திருமங்கலக் குடி போன்ற அவ்வளவாக தெரியவராத
ஸ்தலமும் உண்டு. கோயில் தரும் அர்த்தங்கள், அனுபவங்கள் பலவற்றைச்
சொன்னேன். கோயில் ஒவ்வொருவருக்கும் கொடுக்க ஒன்று அல்லது பல அர்த்தங்களும்
அனுபவங்களும் கொண்டது. எல்லாமே முக்கியமானவை தான் சிறப்பானவை தான்.
சிதம்பரம் கோயிலைப் பற்றி நிறையச்
சொல்கிறார். அதன் வரலாற்றுத் தொடக்கத்தையும், கோயிலை ஒட்டிய சரித்திர,
இலக்கிய நிகழ்வுகளையும் கோயிலின் கட்டிட, சிற்பச் சிறப்புகளைத் தொகுத்துச்
சொல்லும் போது, நமக்கே வியப்பாக இருக்கும். புராணக் கதைகளும் சுவாரஸ்யம்
தருகின்றன. மாணிக்கவாசகர் சொல்ல இறைவன் திருவாசகத்தை எழுதிச்சென்றது,
சேந்தன் அமுதனார் இறைவன் வேண்ட திருப்பல்லாண்டு பாடியது, ராஜராஜன்
கட்டளையின் பேரில் நம்பியாண்டார் நம்பி தேவாரப் பாடல்களைக் கண்டெடுத்தது,
சேக்கிழார் பெரியபுராணம் பாடியது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
"குவித்த புருவமும், கொவ்வைச் செவ்வாய் குமிண் சிரிப்பும்......,"
"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...." போன்ற உன்னத கவிதைகள் பிறந்த விடம்
என்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். கோயில் முழுதையும் சுற்றி
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களையும், சிற்ப வேலைப்பாடுகளையும்
விவரிக்கிறார். சிதம்பரத்தைப் பற்றிச் சொல்ல நிறைய இருப்பதால் நிறையச்
சொல்கிறார்.
ஆனால் ஸ்ரீனிவாசராகவனுக்கு கோயில்
மிக முக்கியமாக ஒரு வழிபாட்டுத் தலம். மனிதன் தன் வாழ்வின் வேதனையைத்
தீர்க்க தெய்வத்திடம் முறையிட்டு வேண்டிக்கொள்ளும் இடம். மனித ஜீவனில்
வேதனைகளுக்கு ஏமாற்றங்களுக்கு குறையுண்டா? சில சமயங்களில் ரொம்ப சின்ன
விஷயங்கள் கூட கிட்டாதவையங்கள் ஆகிவிடுகின்றன. எவ்வளவோ பெரிய தலைகள்
உதவியும் கூட சாதாரண காரியங்கள் கூட நடப்பதில்லை. அப்படிப்பட்ட சமயங்களில்
முறையிட்டுக்கொள்ள தன் வேதனையைச் சொல்ல ஒரு பெரிய சக்தி வேண்டும். தெய்வ
நம்பிக்கை அதைத்தான் தருகிறது. வேதனைகள், ஏமாற்றங்களிடையேயும் ஒரு
நம்பிக்கை பெற்று நிம்மதி கொள்ளமுடிய வேண்டும். வறுமையிலேயே தியாகராஜர்
தன் ஜீவனை முடித்துக்கொண்டவர். "ப்ரோசேவாரெவரே ரகுபதீ நினுவினா?" என்றும்
"ஏமி நேரமு நன்னு ப்ரோவ எந்த பாரமு.?." என்று எந்நாளும்
முறையிட்டுக்கொண்டேதான் இருந்தார். ராமர் கேட்பார், காப்பாற்றுவார் என்ற
பல மான நம்பிக்கையிலேயே அவர் ஜீவன் கழிந்துவிட்டது. அந்த நம்பிக்கை
அவருக்கு பலம் தந்தது. வறுமை நீங்கவில்லை தான். ராமர் கேட்கவில்லை தான்.
வறுமை அவருக்கு வேதனை தரவில்லை. நாமெல்லாம் எளிய ஜீவன்கள். நமக்கு
முறையிட, நம்பிக்கை தர ஒரு தெய்வம் வேண்டும். தெய்வ நம்பிக்கை நமக்கு
நிம்மதியான வாழ்வு தரும்.
ஸ்ரீனிவாசராகவன் ஒவ்வொரு
கோவிலுக்கும் நம்மை இட்டுச் செல்வது பிரதான்யமாக பிரார்த்தனைக்கும்
குறைகள் நீங்க வேண்டுதல் செய்துகொள்ளவும் தான். சிதம்பரத்தை விட்டு
விடுவோம் திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருக்கருகாவூர், திருநல்லூர்,
திருநீலக்குடி, திருக்கடவூர், திருவானைக்கா, திருப்புறம்பியம், சிக்கல்,
ஸ்ரீவாஞ்சியம், திருச்சேறை, நாச்சியார் கோயில், திருமணஞ்சேர் என்று அவர்
இட்டுச் செல்லும் ஸ்தலங்களில் நாச்சியார் கோயில் திருக்கடவூர் போன்றவற்றை
நம்மில் பலர் கேட்டிருக்கலாம். மற்றவை எல்லாம் எங்கிருக்கின்றன என்பதே
தெரியாது. அவற்றின் விசேஷங்களும் தெரியாது பலருக்கு. வேளக்குடி கிருஷ்ணன்
தினம் கண்ணன் பேருரையோடு எல்லா திவ்ய தேசங்களுக்கும் இட்டுச் செல்கிறார்.
அவர் நமக்குச் சொல்லும் பெயர்கள் பல ஆழ்வார்கள் காலத்திய பெயர்கள். இன்று
அவற்றின் பெயரோ அவை எங்கு இருக்கின்றன என்பதோ தெரியாது. ஸ்ரீனிவாசராகவன்
ஒவ்வொரு கோவிலும் இருக்கும் ஊருக்குச் செல்லும் ரயில், பஸ் வசதிகள்,
செல்லவேண்டிய தூரம், ஸ்தல விருக்ஷம் எது, பாடல் பெற்ற ஸ்தலமானால், பாடியது
யார், என்ன பாடல், அந்த ஊரின் கோயிலின் விசேஷங்கள் அபிஷேக ஆராதனைகள்
நடக்கும் நேரம், என்னென்ன குறைகளுக்கு என்னென்ன பரிகாரங்கள், அதற்கான
செலவு விவரங்கள். முன்னதாகவே ஏற்பாடுகள் செய்துகொள்ள, அல்லது
வரமுடியாதவர்கள் தம்மிருப்பிடத்தில் இருந்தே விசேஷ பூஜைகள் செய்துகொள்ள
தொடர்புகொள்ளவேண்டிய முகவரி, தொலைபேசி, பின் செலவு விவரங்கள் அனைத்தையும்
ஒவ்வொரு கோவிலுக்குமாக தந்துள்ளார்.
உதாரணமாக, திருக்கருகாவூர்
கருகாத்த நாயகி கோயில் - (சுருக்கமாக) தஞ்சை ஜில்லா, பாபநாசம் அருகில் -
கும்பகோணம் சென்று திருகருகாவூர் செல்வது எளிது -புத்திர தோஷம் நீங்க,
குழந்தைப்பேறு பெற,. சுகப்பிரசவம் அமைய பிரத்யேக வழிபாடுகள் -வியாழக்கிழமை
தோறும் நெய்தீபம் ஏற்றி வழிபடவேண்டும். நேரில் வரமுடியாதவர்கள் ரூபாய் 40
அனுப்பினால் நெய் தீபம் ஏற்றி பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். அன்னையில்
பாதத்தில் வைத்து மந்திரிக்கப்படும் நெய்யை தினம் அருந்தினால் கருத்
தரிக்கும். பார்சல் மூலம் இந்த நெய்யைப் பெற கட்டணம் ரூ 75. குழந்தைப்
பேறு பெற்றபின் குழந்தையைத் தங்கத் தட்டில் இட்டு பிரார்த்தனையை நிறைவேற்ற
கட்டணம் ரூ 555 இப்படி பல்வேறு கட்டணங்கள்: காலை 5.30 முதல் பகல் 12.30
வரை, பின்னர் மாலை 4.00 முதல் இரவு 8.00 வரை வழிபாட்டுக்காக கோவில்
திறந்திருக்கும்.... இத்யாதி, இத்யாதி.
திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம்,
தக்ஷகன், ஆதிசேஷன், கார்க்கோடகம் போன்ற நாகராஜாக்கள் பூஜித்ததால்,
திருநாகேஸ்வரம் என்று பெயர் பெற்றது. நாக தோஷம், ராகு தோஷம் கடுமையாக
இருந்தால் பரிகாரம் செய்வதற்கான இடம். என்று சொல்லும் ஆசிரியர்,
ராகுவுக்கு அப்படி என்ன தனிச் சிறப்பு என்று ஒரு கேள்வியைக்
கேட்டுக்கொண்டு, "ஜாதகக்கட்டத்தில் ராகுவிற்கு என்று தனி வீடு (ராசி)
எதுவும் கிடையாது என்று ஆரம்பித்து ஜாதக சாஸ்திரத்தை விரிவாக எடுத்துச்
சொல்கிறார். அதோடு அற்புதக் கோயில் என்றாரே, அந்த அற்புதம் என்னவென்று
சொல்லவேண்டாமா? ஸிம்ஹி தேவியுடன் எழுந்தருளியுள்ள ராகு பகவானுக்கு மற்ற
அபிஷேகங்களுடன் பால் அபிஷேகம் நடக்கிறது. தலையிலிருந்து வழிந்து கழுத்தை
அடியும்போது, பால் நீல நிறம் அடைகிறது. ஏன்? பக்தர்களின் தோஷங்களை தான்
ஏற்றுக்கொள்வதாலா என்றும் கேட்டுக்கொள்கிறார், ஆசிரியர். இப்படி
அற்புதங்கள் காணும் இடங்களில் அந்த அற்புதங்களையும் விவரிக்கிறார்.
கோயிலின் அர்த்தங்கள் அதன்
பயன்பாடுகள், தரும் அனுபவங்கள் என நிறையச் சொன்னேன். நம்மில் பலருக்கு
கோயில் தெய்வத்தின் இருப்பிடமாதலால் முதன்மையாக வழிபாட்டுக்கான,
வேண்டுதலுக்கான, நம் குறைகளை முறையிடுவதற்கான இடம். வாழ்க்கையில் நிம்மதி
பெற அது மிக முக்கியம் ஸ்ரீனிவாச ராகவனின் புத்தகம் அற்புதக் கோயில்கள்
அதை மிக பயன்படுமுறையில் நிறைவேற்றுகிறது. அத்தோடு கோயிலில் காணும்
சிற்பங்கள், இலக்கியத்தில் பெற்ற சிறப்பு போன்ற இன்னும் பல விஷயங்களையும்
தருகிறார்.
அற்புதக் கோயில்கள்: கே.ஆர்.
ஸ்ரீனிவாசராகவன், வரம், New Horizon Media Pvt Ltd., 33/15 Eldams Road,
Alwarpet, Chennai-18
-------------------------------------------------------------------------------------------------
தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்
வெங்கட் சாமிநாதன்
காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
மாறிக்கொண்டும் இருக்கிறது. நேற்றைய தமிழகம் இன்றில்லை. அப்படியிருக்க
ஐம்பது வருடங்களுக்கு முந்திய தமிழகத்தை இன்று காணமுடியுமா என்ன? தமிழகமே
மாறிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள்தான் மாறாமல் இருப்பார்களா? இதில்
வாதம் செய்ய, வன்மையாக மாறுபட ஏதும் இல்லை என்று தான் தோன்றும்.
நான் எழுத ஆரம்பித்தது 1960-ல்.
எழுத்துஎன்ற பத்திரிகையில். சி.சு.செல்லப்பா ஏதோ சுதந்திரமாக எழுத இடம்
கொடுக்கிறாரே என்று எழுதினேன். அன்று எழுதியதை நான் வேறு எங்கும்
சொல்லியிருக்கமுடியாது. எழுதியதும் பதிவானதும் 1960-ல் தானே ஒழிய,
எழுதப்பட்டு பதிவான என் பார்வையும் எண்ணங்களும் நான் பதிவு செய்த தமிழ்
அனுபவங்களும் பழையவை. 1960-க்கும் முந்தியவை. எவ்வளவு முந்தியவையானால்
என்ன? அன்று நான் அப்படிச் சொன்னது தான் என்ன?
அன்று, இலக்கியம், சிந்தனை,
ஓவியம், சினிமா, நாடகம், என்று இப்படி பல துறைகளிலும் தமிழகத்தில் காணும்
வரட்சியைச் சொல்லி கடைசியாக எழுதினேன்:
"ஒரு கால் மற்றவர்களுடனும்,
அவர்கள் காலத்தில் தான் வாழ்கிறோம் என்ற நினைப்பை ஊட்ட அவர்களைப் போன்ற
வேஷத்தை நாமும் தரிக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு அளிக்க நம்மிடம் ஏதும்
இல்லை. உலகத்திற்கு நமது என்று அளிக்க நாம் ஏதாவது படைக்கப் போகிறோமா?
நமது பொருளாதார நிலையை நாம் உயர்த்திக்கொள்ளலாம். ஒரு பலம் வாய்ந்த
சமுதாயமாக நாம் ஆகலாம். ஆனால், கலை உணர்வு கொண்ட சமுதாயமாக, புதிய
சிந்தனைப் பாதைகளைத் தோற்றுவிக்கும் சமுதாயமாக நாம் என்றுமே
வாழப்போகிறோமா? இக்குணங்கள் நம்மிடம் என்றோ அழிந்து விட்டன."
(எழுத்து: ஜூலை- ஆகஸ்ட், 1960)
பாலையும் வாழையும்: பக்கம் 38-39)
47 வருடங்களுக்கு முன் எழுதிய
இந்த பயங்கர ஆருடம் இன்று எழுதியது போல் நம்மை முறைத்துப் பார்க்கும்
நிதர்சனமாக இருப்பது நமக்கு சந்தோஷம் அளிக்கும் விஷயம் இல்லை. எனக்கும்
சந்தோஷம் தரவில்லை தான். 40 வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. நிச்சயமாக
அன்றைய தமிழகம் இல்லை இன்று. பார்க்கும் போது கண்களுக்கு எவ்வளவோ
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் நாட்டின் மொத்த வருமானம்
அதிகரித்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியும் பெருகியுள்ளது. ஆனால் இயற்கை
வளங்கள் அத்தனையும் என்னவோ பெருமளவு சுரண்டப்பட்டு வந்துள்ளது. வனங்கள்
அழிக்கப்பட்டு வருகின்றன. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. நீர்
நிலைகள் வெகு வேகமாக அழிந்து காரைக் கட்டிடங்களாகி வருகின்றன. இவையெல்லாம்
ஈடு செய்யப்படாத இழப்புகள். இயற்கையின் நாசம் இந்த சுரண்டல். இந்த
சுரண்டல் தொடரவும் செய்கிறது. இனி எவ்வளவு காலம் இந்த சுரண்டல் நீடிக்குமோ
தெரியாது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசு ஏழைகளைச்
சுரண்டுகிறது. படித்தவர்களில் தமிழ் பேசுவோரைக் காண்பது அரிதாகி வருகிறது.
47 வருட மாற்றங்கள் தான் இவை. மாற்றங்கள் மாற்றங்கள் தான். செல்வத்தில்
கொழிக்கும் தமிழர்கள், தமிழர் நிறுவனங்கள், செல்வம் ஈட்டித் தரும் அரசியல்
எல்லாம் மாற்றங்கள் தான். ஆனால் நான் இந்த பொருள் வளத்தையும் தொழில்
வளர்ச்சியையும் அன்றும் மறுக்கவில்லை. இன்றும் மறுக்கவில்லை. இந்த
மாற்றங்கள், இந்த வளர்ச்சி, உழைப்பைப் பொறுத்தது. கல்வியைப் பொறுத்தது.
ஆனால் ஒரு நுண்ணிய தளத்தில் தமிழன் மாறவில்லை என்பது மட்டுமல்ல. இன்னும்
மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். அல்லது தன்னைத்
தள்ளிக்கொண்டுள்ளான். கல்வி கற்ற தமிழன், சமூகத்தின் தன்னை உயர்த்திக்
கொண்ட தமிழன், செல்வத்தில் வளம் பெற்றுள்ள தமிழன், அதிகார பலம் கொண்டுள்ள
தமிழன் தன் உள்ளார்ந்த ஆளுமையில், தன் ஆழ்ந்த உணர்வுகளில் ஒரு
பாமரனாகத்தான், மூர்க்கனாத்தான் மாறியிருக்கிறான்.
அரசியலும் சினிமாவும் தமிழ்
வாழ்க்கையை அசுரத்தனமாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. அரசியலும் சினிமாவும்
பிரிக்கமுடியாது பிரிந்துள்ள ஆனால் ஒட்டிக்கொண்டு வாழும்
இரட்டைப்பிறவிகள். இன்றைய அரசியல் சினிமாத்தனமாக மாறியுள்ளது. தமிழ்
சினிமாவின் பகட்டும் ஆடம்பரமும், உள்ளீடற்ற வெறுமையும் அரசியலாகியுள்ளது.
இன்றைய சினிமாவோ, தான் வளர்த்துள்ள அரசியலையே லட்சியமாகக் கொண்டு தானும்
வளர்கிறது. இரண்டிற்கும் தமிழ் நாடும் தமிழ் மக்களும் தான் இரை.
ஒரு காலத்தில் சினிமாக்காரர்கள்
கூத்தாடிகள் என சமூகத்தால் பழிக்கப்பட்டனர். அந்தக் கூத்தாடிகள்
தமிழுக்குத் தந்தவற்றில் நாம் கலையைக் காணமுடியும். இன்றும் தான். இன்று
யாரும் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாருமே கலைஞர்களாகத் தான்
கொண்டாடப்படுகிறார்கள். கூத்தாடிகள் என்ற பெயர்தான் போயிற்று. ஆனால்
இவர்கள்தான் உண்மையில் கூத்தாடிகள். இருப்பினும் தமிழ் சமூகத்தையே
ஆட்டிவைக்கின்றனர். அரசியல் வாதிகள் அவர்கள் தயவை நாடுகின்றனர். அத்தகைய
அவர்களது இன்றைய நிலையில் தான் அவர்கள் கலைஞர்களாக இல்லை.. ஒரு காலத்தில்
சின்ன ஊர்களில், விழாக்காலங்களில், சந்தைகளில், பொருட்காட்சி மைதானத்தில்,
ரெக்கார்டு டான்ஸ் என்ற ஒரு ஆபாசம் அங்கம் பெற்றிருந்தது. அதைப்
பார்த்துக் குதூகலிக்கும் ஒரு பாமர ஆசை சமூகத்தில் ஒரு சிலருக்கு
இருக்கும். ஆனால் சொல்ல வெட்கப்படுவார்கள். இருட்டில் கூட்டத்தில் சென்று
பார்ப்பார்கள். அங்கு தெரிந்தவர்கள் இருந்துவிட்டால் ஒரு அசட்டு இளிப்பு
இருவர் முகத்திலும் வெளிப்படும். ஆனால் அந்த ரிகார்ட் டான்ஸ் இன்று
சினிமாவில், ஒரு படத்திற்கு வெற்றி தரும் விஷயமாகிவிட்டது. ஒவ்வொரு
தொலைக்காட்சியிலும் தினமும் இரண்டு மூன்று முறை இந்த ரெகார்டு டான்ஸ் பல
வேறு பெயர்களில், இடம்பெறும். அரசியல் தலைவர்கள் பாராட்டு விழாக்களில்,
இந்த ரெகார்டு டான்ஸ் கலைஞர்கள் மணிக்கணக்கில் அரசியல் தலைவர்களை
மகிழ்விக்கிறார்கள். பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் இவற்றை
மிகுந்த முகக் களிப்போடு கண்கொட்டாது பார்த்து மகிழ்கின்றனர். 'ஆபாசம்
அவரவர் பார்வையில் தான்' என்று இது நியாயப் படுத்தப்படுகிறது. கலையாகப்
பார்க்கும் கண்கள் கலைக் கண்கள் தான். அக்கண்களுக்கு இவை கலை தான். 40-50
வருடங்களுக்கு முன் ரகசியமாக இருட்டில் ஒரு பாமரன் கண்டு களித்தது, இன்று
நாட்டின் தலைவர்களே கண்டு மகிழும் கலையாகியுள்ளது. 50 வருடங்களுக்கு முன்
ஒரு அரசியல் தலைவருக்கு முன் இது நடந்திருக்கும் என நினைத்தும் பார்க்க
முடியாது.
மகாத்மா காந்தியின் நினைவு தினத்
தன்று இரண்டு நிமிடங்கள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றன. சாலை போக்குவரத்து
கூடத் தான். போக்கு வரத்து காவலர் இதை நினைவூட்டு அட்டையைக் காட்டி போக்கு
வரத்தை நிறுத்தியிருந்த புகைப்படத்தை பத்திரிகையில் பார்த்தேன். மெரீனா
கடற்கரையில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. புகைப்படத்தில் அவர்கள்
முன் பளபளவென தங்கபூச்சு ஜொலிக்க நின்றிருப்பது சிவாஜி கணேசன் சிலை. எங்கோ
தூரத்தில் புகைப்படத்தின் மூலையில் காணப்பட்டது மகாத்மாவின் சிலை.
சலனமற்று நின்ற வண்டிகளும் மனிதர்களும் மரியாதை செலுத்தியது என்னவோ
மகாத்மாவின் பெயரைச் சொல்லித்தான். ஆனால் அம்மரியாதையைப் பெற்றது
அவர்களுக்கு எதிரே நின்ற சிவாஜி சிலையாகத்தான் அப்புகைப்படத்தில்
தெரிந்தது. பழைய பாண்டங்கள் நம் வீட்டில் பத்திரமாக இருக்கும் தான். ஆனால்
அவை இடம் பெற்றிருப்பது பரணில். மகாத்மா இன்னும் அங்கே மரீனாவில் தான்
இருக்கிறார். ஆனால் தோற்றத்தில் ஒரு மூலையில்.
நான் ஏதோ இல்லாததைக்
கற்பித்துக்கொள்வதாக நினைக்க வேண்டாம். சில நாட்கள் முன், ஒரு தொலைக்
காட்சியில் ஒரு காட்சி. இந்த நாட்டின் பிரதம மந்திரி மேடையில் நின்று
கொண்டிருக்கிறார். காட்சி நடத்துபவர் பேசிக்கொண்டிருப்பது, கொண்டாடுவது
ரஜனி காந்தை. ரஜனி காந்திடம் தொலைக்காட்சி முதலாளி பேசி, பின்னர்
குழுமியிருக்கும் சினிமா நடிகர்கள் கேள்விகள் கேட்டு சிரித்து
மகிழ்கிறார்கள். பிரதம மந்திரி அலட்சியப்படுத்தப்பட்ட மனிதராக
இவற்றையெல்லாம் பார்த்து நின்று கொண்டே யிருக்கிறார். எந்த நாட்டில் ஒரு
பிரதம மந்திரி இப்படி அவமானப் படுத்தப் படுவார் என்று யோசிக்கிறேன்.
யாரும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. சினிமாவும், அதில்
தன் வாழ்வைக் காணும் தொலைக்காட்சியும் தான் இங்கு கதாநாயகர்கள்.
இப்படித்தான் எல்லாமே இடம்
மாறியுள்ளன. நான் அன்று நினைக்காதவாறு ஒவியமும் சிற்பமும் இங்கு இந்த
ஐம்பது ஆண்டுகளில் துளிர் விட்டுள்ளன. அதிகாரங்களும், அரசியலும் அதை
அலட்சியம் செய்ததால். சங்கீதம் அதன் மரபின் தொன்மை, செழுமை காரணமாக,
மரபாகவே ஜீவித்து வருகிறது. இலக்கியத்தில் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இது
காறும் பேசப்படாத வாழ்க்கைகளும் மனிதர்களும், அவர்கள் மொழியும்
இலக்கியத்துள் வந்துள்ளன. ஆனால் கவிஞர்களும் எழுத்தாளர்களும் அதிகார
பீடங்களுக்கும் சினிமாக் கவர்ச்சிக்கும் தம்மை இழப்பதை விரும்புகிறார்கள்.
இழக்கமாட்டோமா என்று ஏங்குகிறார்கள். இழந்தவர்கள் பெருமிதம் கொள்கிறர்கள்.
கலைஞர்கள் அரசுக்கு விரும்பி அடைப்பக்காரராவது தமிழ் நாட்டில் தான்
சாத்தியம்.
கலைஞனுக்கும் எழுத்தாளனுக்கும்
வேண்டிய சுயகௌரவம், அகங்காரம், அற்றவர்களாகவே இருப்பது இவர்களுக்குப்
பிடிக்கிறது. 'நானும் பிழைக்க வேண்டாமா?" என்ற கேள்வி எல்லாவற்றுக்கும்
பதில் அளித்துவிடுவதாக நினைக்கிறார்கள். பொதுவாகப் பார்க்கும் போது
கவிஞனின், எழுத்தாளனின் க்ஷ£ணம் இன்றைய தமிழ் நாட்டில் மிகப்
பரிதாபமானது. அவன் தன் ஆளுமையை சினிமாவுக்கும், அரசியலுக்கும் இழந்து
நிற்கிறான். கலைஞனின் இடம் தேடி, தான் சென்று, அதிகாரம் சென்று அவனைக்
கௌரவிக்க வேண்டும். இன்று கலைஞன் அதிகார பீடம் நோக்கிச் சென்று தலை வணங்கி
ஆசி பெற்று வருகிறான்.
"உன்னை நம்பியா நான் தமிழை
ஓதினேன்?" என்று 12-ம் நூற்றாண்டில் ஒரு தமிழ்க் கவி, கம்பன் செறுக்குடன்
அரசனுக்கு பதிலிறுத்தான். கௌரவத்துடன் பிழைக்க இங்கு என்ன வழியுண்டு?
என்று போன நூற்றாண்டு நாற்பதுகளில் ஒரு புதுமைப் பித்தன் கேட்டான்.
"எனக்கு விருது வழங்கும் உன் தகுதி என்ன?" என்று ஒரு விலாயத் அலி கான்
தான் கேட்க முடிந்திருக்கிறது. தமிழ் நாட்டில் எல்லா சினிமாக் காரர்களும்
'சார்' தான்.
உலகிற்கு தமிழ் நாடு தந்தது என்ன?
தனது என்று கர்வம் கொள்வது என்ன? தமிழ் நாட்டின் தகவல் தொழில் நுட்ப
பொறியாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று தம்
இருப்பை ஸ்தாபித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல டாக்டர்கள் உண்டு. மற்ற
பல்வேறு துறையினரும் உண்டு. அவர்கள் வேலை தேடிச்சென்றவர்கள். அல்லது வேலை
தேடிப் பிழைக்க விரட்டப்பட்டவர்கள். இருப்பினும் அவர்கள் அவ்வத் துறை
வல்லுனர்களாக தமக்குப் பெருமை தேடிக்கொண்டவர்கள். நிறையப் படித்தவர்கள்.
அவர்களுக்குக் கிடைப்பது சன் டிவி. சன் டிவி தான் கிடைக்கிறது என்பதனால்
அதைச் சொன்னேன் ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே ஒரே பாமர ரகம் தான்.
அதை சகித்துக்கொள்ள ஒரு உணர்வு மரத்த நிலை இருந்தால் தான் சாத்தியம். அதை
அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களில் பலரை தமிழ் மணம் போன்ற வலைப் பதிவு
திரட்டிகளில் இணையங்களில், அவரவர் தனித்த வலைப் பதிவுகளில், அவர்களது
பின்னூட்டங்களில், பார்க்கலாம். இவ்வளவு படித்தவர்கள் எப்படி இப்படி ஒரு
மூர்க்கத்தனமாக, பாஸிஸ மனத்தினராக இருக்கிறார்கள், அயல் மண்ணிலும், தம்
சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள்
என்பது ஆச்சரியமாக இருக்கும். டை கட்டிய, டாலரும் யூரோவும் சம்பாதிக்கும்
மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே
அறியாதவர்கள். இவர்கள் ஒரு அபூர்வ கலைவை. B.Tech. M.Tech பட்டம்,
டாலர்/யூரோ சம்பாத்தியம், பென்ஸ் கார், ஆனால் நம்மூர் பேட்டை ரவுடி
பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு
பாலாபிஷேகம் செய்யும் ரசனை, இவை எல்லாம் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு
அபூர்வ கலவை.! எப்படி சாத்தியம் ஆயிற்று? நான் 1960-ல் சொன்ன வார்த்தைகளை
நினைவுப் படுத்திக் கொள்ளலாம். செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான்
தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து
விடாது.
காரணம், ஒரு சமூகம் முழுமையின்
ஆரோக்கிய கலை பிரக்ஞையையும் வளத்தையும் பொறுத்தது, அதன் வழி செழுமை பெறும்
கலை இலக்கியத்துறை வளங்கள்.
அவ்வப்போது நான் எதிர்கொண்டவற்றை,
நான் உணர்ந்த வாறு எழுதியுள்ளேன். இவற்றில் எனக்கு மகிழ்ச்சி தந்தவையும்
உண்டு தான். ஏன் இப்படி? என்று கேள்வி எழுப்பியவையும் உண்டு.
அம்மகிழ்வுகளையும் கேள்விகளையும் பின் வரும் பக்கங்களில் காணலாம்.
யாரையும் மகிழ்விக்கவேண்டும் என்ற முன் தீர்மானங்கள் இல்லை. யாரையும்
வருத்தும் முன் தீர்மானங்களும் இல்லை. இவை என்னைப் பற்றிய உண்மையையும்,
நான் எதிர்கொண்டவற்றைப் பற்றிய உண்மையையும், சொல்லும். என்னளவுக்கு இவை
உண்மைகள். அதிகாரம் காரணமாக, செல்வாக்கு காரணமாக, ஸ்தாபனம் பெற்றுவிட்டதன்
காரணமாக, என் மனதுக்குப் பட்டதைச் சொல்வதற்கு நான் தயங்கியதில்லை. இத்தகைய
எதிர்வினைகள் தமிழ் சமூகத்தில் நடைமுறையாக, மரபாக ஆகியிருக்கவேண்டும். ஆக
வில்லை. ஆவதில் பலருக்கு இழப்புகள் உண்டு.
எனி இந்தியன் பதிப்பகம்
வெளியிட்டுள்ள தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் : புத்தகதிற்கான முன்னுரை
வெங்கட் சாமிநாதன்/1.2.08
-------------------------------------------------------------------------------------------------
இந்திய இலக்கியம்: வாழ்க்கைக்
கூறுகளும் பண்பும்
வெங்கட் சாமிநாதன்
"தொல்காப்பியருக்கு அர்த்த
சாஸ்திரமும், நாட்டிய சாஸ்திரமும் பரிச்சயமாக வெகு காலம்
தேவையாயிருக்கவில்லை. ஹாலாவின் காதாசப்தசதி தமிழ் பேசும் நாட்டை
வந்தடைந்தது மட்டுமல்லாமல் கஷ்மீரு க்கும் அது பயணம் செய்து
ஆனந்தவர்த்தனருக்கு அவர் தம் த்வனி சித்தாந்தத்தை விளக்க உதாரணங் களைத்
தந்ததுதவியது. தென்னாட்டிலிருந்து பாகவத புராணம் மிதிலைக்குச் சென்று
வித்யாபதியின் கைகளுக்கு வந்தடைய அவர் அதை பனை ஒலைச் சுவடிகளில் பிரதி
செய்தார். அறிவார்த்த தாகம் கொண்டிருந்த நம் அக்கால முன்னோர்களின்
பயணங்கள் இந்த மாதிரியான கொடுக்கல் வாங்கல்களுக்கு பெருமளவில் உதவியாக
இருந்திருக்கின்றன என்பது என்னவோ உண்மை. சாரங்க தேவரின் பெற்றோர்கள்
காஷ்மீரை விட்டு நீங்கி மத்திய இந்தியாவுக்கு வந்து வாழத்
தொடங்கியிராவிட்டால், இப்போது கர்நாடக சங்கீதத்திற்கே வேதமாகக்
கருதப்படும் சங்கீத ரத்னாகரம் ஒரு வேளை எழுதப்பட்டிராது.
ஆந்திராவிலிருந்து வல்லபாச்சாரியார் மதுராவிற்கும் வாரணாசிக்கும் சென்று
வாழத்தொடங்கியிராவிட்டால் இன்று ஹிந்தி இலக்கித்யத்தின் பொக்கிஷமாகக்
கருதப்படும் சுர் ஸாகர் இயற்றப்பட்டிராது தான். இப்படி எண்ணற்ற
உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்று இந்தியாவின் ஒவ்வொரு
மொழிப்பிரதேசமும் தன்னைச் சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறதென்றால் அது ஒரு
பிறழ்ச்சி தான். மொழி புரிதலுக்கான ஒரு சாதனம் மாத்திரமே ஆகியுள்ளது.
இன்றைய இந்தியாவின் வரலாற்றைச் உருவாக்கு வோர் வெறும் மலையாகக் கிடக்கும்
ஒன்றை (விந்திய மலைத் தொடர்) தாண்டிச் செல்லமுடியாத ஒரு பெரும் தடையாக
ஆக்கிவிட்டிருக்கின்றனர். நடுவில் இருக்கும் அது இரு பக்கங்களின் பார்வையை
மறைப்பது போல உயர வளர்ந்து கொண்டே போவது போல் இருக்கிறது. ஆனால் சாஸ்த்ரீய
கலைகள் என்னவோ அத்தடையையும் மீறி தம் பரஸ்பர தொடர்பையும் தாக்கத்தையும்
விடாது தொடர்ந்து வளர்த்துக்கொண்டு தான் இருந்திருக்கின்றன."
(K.S ஸ்ரீனிவாசன், Ethos of
Indian Literature p.128)
ஜவஹர்லால் நேரு
·பவுண்டேஷனின் நிதி உதவயுடன் எழுதப்பட்டுள்ள ஸ்ரீனிவாசனின்
புத்தகம், இரண்டாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்திய இலக்கியங்களின்
மூலம் வெளிப்படும் இந்திய உள்மனதின் குணமென்ன, அது உருவாகப் பின்னிருந்து
ஊக்கும் சக்திகள் என்ன, அது தன் மொழி வேற்றுமைகளை யெல்லாம் கடந்து ஒருமை
கொள்ள வைக்கும் அதன் சாரம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஒரு புதிய
பார்வையை முன் வைக்கிறது. வேதங்கள், அல்லது ராமாயணம், மஹாபாரதம் போன்ற
இதிகாச காப்பியங்கள் தொடங்கி நம்மில் எத்தனையோ கிளிப்பிள்ளைப் பாடமாக
சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி திணிக்கப்பட்டு
வந்திருப்பதற்கெல்லாம் முற்றிலும் மாறாக, ஒரு புதிய பார்வை, நம்பிக்கை
தோன்ற, திறம்பட நிறைய ஆதாரங்களோடும் வாதங்களோடும் முன் வைக்கப்பட்டுள்ளது
இந்த புத்தகத்தில். ராமாயணம் மகாபாரதம் போன்ற மூல ஆதாரங்களை நாம்
முற்றிலுமாக ஒதுக்கிவிடமுடியாது தான். ஏனெனில் அவற்றிலும் உண்மை உண்டு.
ஆனால், அவை மட்டுமே உண்மை என்பதில்லை. அது பின்னப்பட்டது. இன்னம்
சொல்லப்படவேண்டியதும் உள்ளன. மிக முக்கியமாகக் கவனிக்கப்படவேண்டியது
என்னவெண்றால், இதுகாறும் நம்மிடமிருந்து மறைந்திருந்த ஒரு புதிய பார்வையை
ஸ்ரீனிவாசன் நம் முன் வைக்கிறார்.அந்தப் பார்வை, எல்லா இந்திய மொழிகளிலும்
எழுதப்பட்டுள்ள இலக்கியங்கள் எல்லாவற்றையும் இந்திய இலக்கியம் என
ஒருமைப்பட்ட ஒரு இலக்கிய பாரம்பரியத்தை விளக்குவது மட்டுமல்லாமல்,
இந்தியப் பரப்பின் ஒவியம், சங்கீதம், சிற்பம், நாட்டியம் என எல்லா கலைப்
படைப்புக்களுக்குமான இந்திய அழகியலையும் விளக்குமுகமாக அந்தப் பார்வை
விரிவு கொள்கிறது.
இது காறும் நமக்கு வழக்கமாகத்
திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுள்ள பார்வையில், வேதங்களிலும்
இதிகாசங்களிலும் பரவலாகக் காணும் பலமான சாரம், ஹிந்து மதக் கூறுகளும் அதன்
அறம் சார்ந்த பண்புகளும் ஆகும். ஆனால் ஸ்ரீனிவாசன் கூறும் சாரமும் பண்பும்
, இதிகாசங்களிலும் காவியங்களிலும் மட்டுமல்ல எல்லா இந்திய மொழிகளின்
இலக்கியங்களிலும் பரவலாகக் காணப்படும் ஒன்று. அது அவை அனைத்திலும்
உள்ளோடும் சரடுமாகும். இந்தியாவின் கலைகளிம் தான். அது மட்டுமல்ல. மதச்
சார்பற்ற படைப்புகளிலும். கிறிஸ்து சகாப்தத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளில்
ஜைனர்களும் பௌத்தர்களும் படைத்தவற்றிலும் இக்கூறுகள் காணப்படும். பின்னர்
வந்த முஸ்லீம் சூ·பி ஞானிகள் விட்டுச் சென்றவற்றிலும். இந்திய
துணைக்கண்டத்தின் கவிஞர்களின் கவிதைகளிலும் கூட. நேற்றைய ரவீந்திரநாத்
தாகூர் வரை என்று சொல்லவேண்டும். எனவே, நமக்குப் பழக்கமான, கோஷங்கள்,
கிளிப்பிள்ளைப் பாடங்கள், எதையும் குறிப்பிட்டுச் சொல்லாத பொதுப்படையான
சொல்லாடல்கள் எல்லாவற்றையும் நாம் ஒதுக்கி விடலாம். ஆகையால் ஸ்ரீனிவாசன்
சொல்ல வருவதை முதலில் பொறுமையுடன் காது கொடுத்துக் கேட்பது, பண்பும்
அறிவார்த்த செயலுமாகும்.
இதன் மகத்தான ஆரம்பம், கி.மு
மூன்றாம் நூற்றாண்டில் மகத நாடு 12 வருடகாலம் நீடித்த பஞ்சம் ஒன்றினால்
பீடிக்கப்பட்ட போது, பத்ரபாஹ¥ என்னும் ஜைன முனிவர் மகத நாட்டு மன்னும்
தன் சீடனுமான சந்திர குப்த மௌர்யனோடு மகத நாட்டை வீட்டு நீங்கி மேற்கொண்ட
நீண்ட தெற்கு நோக்கிய பயணத்தில் கடைசியாக இந்நாளைய மைசூர் ராஜ்யத்தில்
உள்ள சந்திரகிரி என்னுமிடத்திற்கு வந்து அங்கு ஒரு மடத்தை
ஸ்தாபித்ததிலிருந்து தொடங்குகிறது. அவர் மேற்கொண்ட இந்த தெற்கு நோக்கிய
பயணத்தின் பாதை தான் வரலாற்றுச் சிறப்பு மிக்க தக்ஷ¢ணபாதம் ஆயிற்று.
அதன் பின் தான் இந்தியாவின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே துவங்கிய
இருவழி வணிக பரிமாற்றத்திற்கும் வழி பிறந்தது. வணிகம் மாத்திரமல்ல, இந்த
தக்ஷ¢ணபாதம் வழிதான் ஜைன பௌத்த முனிவர்கள் தெற்கு நோக்கி தம் மதப்
பிரசாரத்தையும் தொடங்கினர். அவர்கள் எங்கு சென்றாலும், தாங்கள் சென்ற
நாட்டையும், மக்களையும் நெருங்கி அறிந்ததோடு அவர்கள் பேசும் மொழியையும்
கற்றார்கள். இந்த செயல்பாடும் வழிமுறையும், அவர்கள் மதம் அவர்களுக்கு
விதித்துள்ள ஜனபாத பரிக்க்ஷ¡வாகும். அவர்களுக்கு விந்திய மலைத்
தொடர் ஒரு தடையாக இருக்கவில்லை. இம்மலைத் தொடர் அதன் இருபாலும் இருக்கும்
நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தடையாக இருந்தது என்று
சொல்லப்பட்டதும் ஆனதும் சமீப காலத்தில் தான்.
கி.பி. 10-ம் நூற்றாண்டு வரை
இந்திய துணைக்கண்டத்தின் பரப்பு முழுதிலும் வியாபித்திருந்த முக்கிய
மொழிகள், சமஸ்கிருதம், பிராகிருதம், பின் தமிழ் ஆகிய மூன்றும் தான்.
சமஸ்கிருதமோ வடக்கே சமூகத்தின் மேலதட்டு மக்களும் கற்றோரும் மாத்திரம்
கையாண்ட மொழியாகத் தன்னைக் குறுக்கிக் கொண்டிருந்தது. தமிழும்
பிராகிருதமும் தான் சாதாரண மக்களும் ஒருவருக்கொருவருடனான தொடர்பு
மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் விளங்கின. ஜைனர்களும் பௌத்தர்களும்
கையாண்ட மொழி தெற்கே தமிழும் வடக்கே பிராகிருதமுமாக இருந்தது. தெற்குக்
கோடியில் காணும் அசோகனின் கல்வெட்டுக்கள் கூட ஒன்று பிராகிருதத்தில்
அல்லது தமிழ் ப்ராஹ்மியில் இருந்தன.
பிராகிருதத்தில் மலர்ந்த முதல்
இலக்கியம் ஹாலா என்னும் சதவாஹன அரசன் (கி.பி. 20-24) தொகுத்த காதா சப்த
சதி என்னும் கவிதைத் தொகுப்பாகும். கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து பல
நூற்றாண்டுகள் கால நீட்சியில் பிறந்த சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டது
வெகுகாலம் பின்னர் தான். இதுகாறும் கவனிக்கப்படாத ஆனால் சிறப்பாகக்
குறிப்பிடவேண்டிய சில விசேஷ கூறுகள் இவ்விரண்டு தொகுப்புகளிலும் பொதுவாகக்
காணப்படுகின்றன.
இந்தக் கவிதைகள் எல்லாமே சாதாரண
மக்களின் காதல் வாழ்க்கையைத் தான் சொல்கின்றன. அவர்கள் வியாபாரிகளாகவோ,
வேடுவர்களாகவோ, பயணிகளாகவோ இப்படி ஏதோவாகதான் இருப்பார்கள். வெகு அரிதாகவே
கடவுளைப் பற்றியதாகவோ அல்லது அரசனைப் பற்றியதாகவோ இருக்கும். இவை அவன்,
அவள் பின் தோழி ஒருத்தி இவர்களிடையே நடக்கும் உரையாடலாக இருக்கும். ஆனால்
அவர்கள் பெயர்கள் எங்கும் குறிப்பிடப்படுவதில்லை. காதல் நிறைவேறியதன்
மகிழ்ச்சி, அல்லது தோல்வியுற்றதன் துக்கம், ஏமாற்றம், காத்திருப்பதன்
தவிப்பு, அல்லது தன் காதல் மறுக்கப்பட்டதன் சோகம், அல்லது காதலர்
இரகசியமாக சந்தித்துக்கொள்ள ஒரு இடத்தைக் குறித்தல், இப்படியாக விஷயங்கள்
வெகு நளினத்துடன், அழகுடன் எல்லாவற்றையும் வார்த்தைகளில் கொட்டி விடாமல்
குறைந்த வார்த்தைகளில், குறிப்புணர்த்தும் மொழியில் இக்கவிதைகள்
வெளிப்படுத்தும்.
காதல் உணர்வு மேலிடுகையில்,
காடென்ன, இருளென்ன, வன விலங்குகள் தானென்ன, எந்த ஆபத்தும் ஒரு பொருட்டாகத்
தோன்றுவதில்லை.
"இன்றுயான் நடுநிசி இருட்டிலந்தச்
செல்வனைக் காணச் செல்லவேண்டும்"
என்றவள் கண்ணிமை இறுக மூடி
இல்லந் தனில் நடை மெல்லப்
பயின்றாள். -- (காதா சப்த சதி - 349: சுசரிதன்)
நற்றிணையில் நல்லாவூர் கிழாரின்
படல் ஒன்று. தலைவிக்கு தோழி சொல்வதாக உள்ள பாட்டு. இந்த கொடிய இரவில்
தலைவன் வராதிருத்தலே நன்று என்று சொல்கிறாள் தோழி.
கானமும் கம்மென்றன்றே: வானமும்
வரை கிழிபன்ன மை இருள் பரப்பி,
பல் குரல் எழிலி பாடு ஒவாதே;
மஞ்சு தவழ இறும்பில் களிறு வலம்
படுத்த
வெஞ்சின உழுவைப் பேழ்வாய் ஏற்றை
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது
துஞ்சுதியோ- இல, தூவிலாட்டி!
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம்
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று
அவர்
வாரார் ஆயினோ நன்றே; சாரல்
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும்,
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை
இல் நெஞ்சே?
தனக்கும் தன் தலைவனுக்கும் இடையே
தனிமையில் நடந்ததையெல்லாம் கேட்டிருந்த கிளி, வருவார் போவாருக்கெல்லாம்
அந்தக் கதையைச் சொல்வதைக் கண்டு நாணமுறுகிறாள் தலைவி:
படுக்கையறையின் பக்கலிலிருந்து
கூண்டினிற் பூவையைக் கொண்டேன்
செல்லாய்?
இரவில் யாங்கள் இயம்பிய மறைமொழி
உலகமறிய உரைகின்றதுவே ( காதா
சப்தசதி - 452. ஹாலா)
நாச்சியார் திருமொழியில்
ஆண்டாளுக்கும் தன் கிளியிடம் அதே கோபம் தான்.
கூட்டிலிருந்து கிளி எப்போதும்
கோவிந்தா! கோவிந்தா! என்றழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பானாகில்
உலகளந்தான்! என்று உயரக்கூவும்
நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்
நன்மை இழந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து
தோன்றும் துவாரகாபுரிக் கென்னை உயர்த்திடுமின். (தொடரும்)
வெங்கட் சாமிநாதன்
23.8.08
-------------------------------------------------------------
இந்திய இலக்கியம் - வாழ்க்கைக்
கூறுகளும் பண்பும் - (2)
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60810094&format=print&edition_id=20081009
வெங்கட் சாமிநாதன்
தமிழின் சங்கப் பாடல்களில் பெரும்
எண்ணிக்கையில் உள்ள அகப்பாடல்களுக்கும், பிராகிருத மொழியில் உள்ள காதா
சப்த சதிக்கும் இடையே பொதுவான அம்சங்கள் பல உள்ளன. (சங்கம் என்ற
சொல்லுக்கே மூலாதாரம் பௌத்தமும் ஜைனமும் தான்.) மொழி வேறாயினும் இரண்டு
தொகுப்புக்களின் பாடல்களும் சாதாரண மக்களின் காதல் வாழ்க்கையைப் பற்றியே
பேசுகின்றன. இரண்டு இலக்கியங்களுமே நன்கு வளர்ந்துள்ள இலக்கிய மரபுகளைத்
தம்முள் கொண்டுள்ளன. இவை பேசும் கருப்பொருள், சொல்முறை, கவிதைக்கூறுகள்,
வாழ்க்கை அம்சங்கள் போன்றவையும் இரண்டிலும் பொதுவாகக் காணப்படுகின்றன.
மலரைத் தேடி அலையும் வண்டுகள், மழைப் பருவம், பயணத்தில் இருக்கும் மக்கள்
இவற்றைக் குறிக்கும் உவமைகளும் குறியீடுகளும் கூட தமிழ், பிராகிருத மொழி
கவிஞர்களை ஒற்றுமைப்படுத்துகின்றன.
அனேக கவிஞர்களின் பெயர்களில் கூட
ஒற்றுமை காணப்படுவதைக் குறிப்பிடவேண்டும். இவை தமிழ்ப் பெயர்கள் அல்ல.
ஜைனப் பெயர்கள்.( உதாரணமாக, கபிலர், வன்மீகியார், கேசவனார், கருவூர்
பவுத்திரனார்.....) ஒரு வேளை தமிழ் நாட்டுக்கு வந்த ஜைனர்கள், அவர்கள்
பேணும் ஜனபாத பரிக்ஷா விதிக்கும் கடமையாக, தமிழ் கற்றுத் தேர்ந்து தமிழ்
கவிதை இலக்கியத்துக்கும் தம் பங்களிப்பு செய்தார்களோ. (உதாரணமாக,
தாமோதரனார், உருத்திரனார், நாகனார், கேசவனார், மல்லனார், சல்லியம்
குமாரனார், பூதனார்..... ) தமிழ் அகப்பாடல்களில் காணும் நிறைய கவிஞர்களின்
பெயர்கள் காதாசப்த சதியில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை ஜைன பௌத்த
பெயர்கள் தாம். சிலருடைய பெயர்களோடு அவர்களின் கோத்திரங்களின் பெயர்களும்
பின்னொட்டாகச் சேர்க்கப்பட்டுள்ளன .(உதாரணமாக, காசிபன் கீரனார், வாதுளி
நற்சேந்தனார், கோசிகன் கண்ணனார், கௌனியன் பூதத்தனார் ....) கோத்திரத்தின்
பெயரை தம் பெயரோடு இணைத்துக்கொள்ளும் வழக்கம் அன்றைய தமிழ் வாழ்க்கையில்
இருந்ததில்லை. இதிலிருந்து பெறப்படும் செய்தி, தமிழ் நாட்டுக்கு வந்த ஜைன
முனிவர்கள் தமிழ் கற்றது மட்டுமல்லாமல், தம் இலக்கிய மரபுகளையும்
தமிழுக்குச் சேர்த்தனர், தமிழ் இலக்கியத்துக்கும் கணிசமான
பங்காற்றியிருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தில், அதாவது
கிட்டத்தட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை, வடமொழியான சமஸ்கிருத
இலக்கியமே கூட, தன் கவிதையில் இம்மாதிரியான இலக்கியக் கூறுகளை, கவிதை
மரபுகளைத் தன்னுள் கொண்டிருக்கவில்லை. அன்று வரைய சமஸ்கிருத மொழிக் கவிதை,
எளிமையானது, வர்ணனைகள் கொண்டது, தீவிர கதை சொல்லும் பாங்கிலானது அவற்றில்
சொல்லாமற் சொல்லும் தொனியோ, குறியீட்டு மரபுகளோ இருந்ததில்லை.
எனவே, பரதமுனி தன் நாட்டிய
சாஸ்திரத்தை இயற்றிய போது, அவரது புகழ் பெற்ற ரசங்கள் பற்றிய
சித்தாந்தத்தை உருவாக்க அவருக்கு உதவியிருக்கக்கூடியது பிராகிருத மொழியின்
காதா சப்த சதியில் காணும் கவிதைக் கூறுகளும், மரபுகளுமே அன்றி, சமஸ்கிருத
மொழியின் கவிதைகள் அல்ல. ஏனெனில், அக்கால கட்டத்தில் சமஸ்கிருத கவிதை
காதல் உலகைப் பற்றிப் பேசத் தொடங்கவில்லை. பரதமுனி பரவசத்தோடு
குறிப்பிடும் நகக் குறிகள், பற்குறிகள், சிவனின் காதல் விளையாட்டுக்கள்,
எட்டு வகை நாயகிகள் எல்லாம் அக்கால கட்டத்து சமஸ்கிருத கவிதையிலிருந்து
பெறப்பட்டிருக்கமுடியாது. அந்த வகை காதல் வாழ்க்கை உலகம் பிராகிருத
கவிதைகளிலிருந்து தான், குறிப்பாக காதா சப்த சதியிலிருந்து தான்
வெளிப்படத் தொடங்கியது. காதல் வாழ்க்கையில் இத்தகைய கவிக்கூறுகள் முதன்
முதலில் சமஸ்கிருத கவிதை இலக்கியத்தில் காணத் தொடங்கியது காளிதாஸனின்
காவியங்களிலிருந்து தான். காளிதாசன் காதா சப்த சதியின் காலத்துக்குப் பின்
வந்தவன் தான். திரும்பவும், காஷ்மீரத்திலிருந்து வந்த ஆனந்த வர்த்தனர் தன்
த்வன்யலோகம் நூலில், சிறப்பித்துப் பேசியுள்ளதும், எல்லா உயர் கவிதைக்குமே
ஆத்மா என்றே சொல்லத்தகுந்த த்வனி என்ற சித்தாந்தமே காதா சப்த சதியை
ஆதாரித்துத் தான் எழுந்துள்ளது.
பிராகிருதத்தைத் தவிர, இந்திய
துணைக்கண்டத்தில் இத்தகைய உலகம் விரிவது தமிழில் காணும் அகப்பாடல்களில்
தான். இவற்றுக்கு ஆதரிசமாகவும் இருந்தது மட்டுமல்லாமல், ஒரு வேளை தாமும்
தம் பங்களிப்பைத் தந்துள்ளவர் ஜைனர்கள். தமிழ் மொழியின் முதல் இலக்கண
நூலான தொல்காப்பியத்தை இயற்றியதும், ஒரு ஜைனர் தான். அவர் சங்க காலக்
கவிதைகளுக்கும் மட்டும் அல்ல, சங்கக் கவிதைகளுக்கு முன்னோடியோ அல்லது
உடன்நிகழ் காலத்ததோ ஆன காதா சப்த சதிக்கும் மட்டும் கடன் பட்டவர் அல்ல.
(இவை இரண்டிலும் காணும் வாழ்க்கைக் கூறுகளும், கவிதைக் கலைக் கூறுகளும்
பொதுமைத்தானவை.) பரதரின் நாட்டிய சாஸ்திரம், கௌடில்யரின் அர்த்த
சாஸ்திரம், பின் ஜைனர்கள் இயற்றிய மாபுராணம், பூத புராணம் போன்றவையும்
அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றன. தொல்காப்பியர், பிராகிருத இலக்கியம்
வளர்த்துள்ள ஹியதி என்றும் பரமாதா சித்தாந்தங்களுக்கு இணையாக உள்ளுறை,
இறைச்சி என்னும் சித்தாந்தங்களை முன் வைக்கிறார், ஜைனர்களின் விதி, துறவு
போன்ற சித்தாந்தங்களிலும் நம்பிக்கை உடையவர். அதேபோல ஜைனர்கள் நம்புவது
போலவே இல்லற இன்பமும், களவொழுக்க இன்பமும் கடைசியில் துறவுக்கு இட்டுச்
செல்ல வேண்டும் என்றும் நம்புகிறார். இறையனார் களவியல் உரை இயற்றிய
இன்னொரு இலக்கண ஆசிரியரான நக்கீரரும், தொல்காப்பியரைப் பின்பற்றி
களவொழுக்கமும் காம உணர்வுகளும் உத்தரகுருவுக்கு மனித ஜீவனை இட்டுச்
செல்லும் பாதைகள் தாம் என்று அவற்றைச் சிறப்பித்து நியாயப் படுத்துகிறார்.
உத்தர குரு கந்தர்வர்கள் வாழுமிடம். ஜைனர்கள் அடைய விரும்பி, கொண்டாடும்
ஸ்வர்க்க பூமி. ஜைனர்கள் பார்வையில் துறவு நிலை கசப்பானது தான். அக்கசப்பு
மருந்துக்கு பூசப்பட்ட இனிப்பு தான் காமம் என்று காமத்திற்கு நியாயம்
கற்பிக்கின்றனர்.
காதா சப்த சதி பேசும் காதல்
உணர்வு நிறைந்த உலகை ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் சமஸ்கிருத கவிதை
எடுத்தாளத் தொடங்குகிறது. இதற்கு முன்னாலேயே காளிதாசனின் சாகுந்தலம்,
குமார சம்பவம் போன்ற காவியங்களும் காதல் உலகைச் சித்தரிப்பவை தான்.
இருந்தாலும், காதா சப்த சதி போன்றே சமஸ்கிருதத்திலும் அமரு சதகம் என்றொரு
தொகுப்பிலிருந்து தான் சமஸ்கிருத கவிதை காதல் உணர்வுகளை பிரதிபலிக்க
ஆரம்பிக்கிறது.
உதாரணமாக, பிராகிருதத்திலும்,
தமிழிலும் காணப்பட்ட காதல் வாழ்க்கைக் காட்சிகளுக்கும், கூறுகளுக்கும்
இணையாக கீழ்க்கண்ட சமஸ்கிருத கவிதைகளைச் சொல்லலாம்.
"இனி எப்போது சந்திப்போம்?"
யாரும் அறியாது?
(கேட்பது தலைவன்)
"அவள் பதில் பேச இயலவில்லை
அவர்களைச் சுற்றி இருந்தனர்
எண்ணற்றவர். அவனை ஏறிட்டு நோக்கி
தன் கையிலிருந்த தாமரை இதழ்களை
குவித்து மௌனித்திருந்தாள்"
(இரவில் என்று
குறிப்புணர்த்தப்படுகிறது) (261. தண்டியின் காவ்ய தர்சனம்)
இன்னொன்று: யாரும் அறியாது
காதலனைக் காணச் செல்வதாக எண்ணிச் சென்றால் நிலவு பார்த்து விட்டதே என்று
சலித்துக் கொள்ளும் காதலி
சலங்கைகளும் உறங்கி விட்டன
அயலாரும் உறங்கி விட்டனர்
வெளியே மெத்தென காலெடுத்து
வைத்தேன்
காஷ்மீரத்துப் பாவையின் ஸ்தனம்
போல்
ஒளிவீசிப் பார்த்திருக்கும்
இப்பாதகன்
சந்திரனும் (834. சுபாஷித
ரத்னகோசம்)
இதே சலிப்பை வெளியிட்டு
அலுத்துக்கொள்ளும் தலைவி ஒருத்தியை சில நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழில்
நாம் பார்த்து விட்டோம்.
கருங் கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும் புல்கிக் குருளையின்
தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடு வெண்ணிலவே (நெடு
வெண்ணிலவினார் - குறுந்தொகை 47)
இதே உணர்வுகளை பிராகிருத காதா
சப்தசதியிலும் வெளியிடுகிறாள் இரவில் தன் காதலனைத் தேடிச் செல்லும் ஒரு
மங்கை
முன்பொரு நாள்
ராகு கொய்தானே
இம்மூடன் தலையை
திருந்துவானில்லை.
பகைவன் இவன்
காதல் கன்னியருக்கு.
கொண்டு செல்லட்டும்
இப்பாவி தலையை
இன்னொரு முறை (515. காதா சப்தசதி)
ஆனால் இவ்வகப்பாடல்களின் மரபு
காதா சப்தசதி மூலம் சமஸ்கிருத கவிதைக்கு வந்து சேர்ந்த ஏழாம் நூற்றாண்டின்
காலகட்டத்தில், சுதந்திரமான இம்மரபு தமிழில் இலக்கணச் சட்டகங்களாக
ஆக்கப்பட்டுவிட்டன. கவிஞனின் இயல்பான கவித்வ வெளிப்பாடு, இலக்கணமாக
விதிக்கப்பட்டு விடவே அவை கவிஞர்களால் மீறப்படவேண்டியவைகளாகிவிட்டன.
அன்னிய மதப் போதகர்களும் துறவிகளும் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள்
அதிகாரம் மக்களிடையே விரோத உணர்வைத் தூண்டின. இதன் காரணமாக, ஹிந்து மதம்
புணருத்தாரணம் பெற்று மக்களிடையே திரும்ப செல்வாக்கு பெறத் தொடங்கியது.
தெய்வம் தூர நின்று வரம் அளிக்கும் ஒன்றாக அல்லாது ஒவ்வொரு தனி மனிதனும்
தனக்கு மிக நெருங்கிய ஒருவனாகக் காணப்படத்தொடங்கியது.
அகப்பாடல்களிலிருந்து பரிணாமம் பெற்ற பார்வையாக கடவுள் காதலனாக
கற்பிக்கப்படுதல் மதுர பக்தி எனப்பட்டது. மன்னனின், கொடை வள்ளல்களின்
புகழ் பாடும் புறப்பாடல்களிலிருந்து பெற்ற பரிணாமம் தான் கடவுளுக்குத்
தன்னை அடிமையாக பாவிக்கும் தாஸ்ய பக்தி எனப்பட்டது. அகப்பாடலகளில் தலைவனக்
குறிக்கும் பெயர் சொல்லப்படாத 'அவன்' தான், பக்திப் பாடல்களில்
தெய்வத்தைக் குறிக்கும் 'அவன்' ஆக பரிணாமம் அடைந்தது. அதே போல தலைவனின்
காதலுக்கு ஏங்கும் தலைவியைக் குறிக்கும் 'அவள்" கடவுளின் அருளுக்கு
ஏங்கும் பக்தன் தன்னைப் பெண்பாலாகக் கற்பித்துக் கொண்டு 'அவள்' ஆகிறான்,.
தலைவனுக்கும் தலைவிக்கு இடையே தூது செல்லும் அகப்பாடற் 'சகி'யின் இடத்தை
பக்தனைக் கடவுளின் பாதங்களுக்கு இட்டுச் செல்லும் ஆசார்யன்
எடுத்துக்கொள்கிறான். பெரும்பாலும், கண்ணனோ, முருகனோ, சிவனோ ஆன 'அவனுடன்'
கவிஞனும் பக்தனுமான 'அவள்' நேராகவே பேசிவிடுகிறான். இடையே சகி வருவதில்லை
பெரும்பாலும்.
உதாரணத்திற்கு திருமங்கை
ஆழ்வாரின் ஒரு பாசுரத்தைப் பார்க்கலாம்
தஞ்சம் இவர்க்கென் வளையும் நில்லா:
நெஞ்சமும் தம்மதே, சிந்தித்தேற்கு
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி,
வாய்திறந் தொன்று பணித்ததுண்டு
நஞ்ச முடைத்திவர் நோக்கும்
நோக்கம்;
நானிவர் தம்மை யறிய மாட்டேன்
அஞ்சுவன் மற்றிவர் ஆர்கொல்? என்ன:
அட்டபுயகரத் தேன் என்றாரே. (
பெரிய திருமொழி, திரிபுரம் - 1126 )
அகப்பாடலகளில் குறிப்பிடப்படும்
அதே 'அவன்'-ம் 'அவள்'-ம் தான். தன் காதலனுக்காக ஏங்கும் தலைவியின் கைகளில்
நில்லாது நழுவும் அதே வளையல்கள் தான். இவர்களையும் இந்த கைகளில் தங்காது
நழுவி விழும் வளையல்களையும் முன்னர் காதா சப்தசதியிலும் அகப்பாடல்களிலும்
பார்த்தோம். இங்கு காதலுக்கு ஏங்கித் தவிக்கும் 'அவள்' இடத்தில் இருப்பது
கவிஞன். கவிஞன் தன்னை 'அவள்'-ஆக கற்பித்துக்கொள்வது மட்டுமல்லாமல், தனக்கு
திருமங்கை என்று பெண்பால் பெயரையும் சூட்டிக் கொள்கிறான்.
வெங்கட் சாமிநாதன் (தொடரும்)
--------------
http://www.thinnai.com/?module=displaystory&story_id=60810161&format=print
இந்திய இலக்கியம் : வாழ்க்கைக்
கூறுகளும் பண்பும் (3)
வெங்கட் சாமிநாதன்
தமிழ்க் கவிதை வரலாற்றில் பக்தி
இயக்கம் பல நூற்றாண்டுகளுக்கு நீடித்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டு பாகவத
புராணமும் 12ம் நூற்றாண்டு ராமானுஜாச்சாரியரும் பக்தி இயக்கத்தின்
உச்சமும் முடிவெல்லையுமாகும். இன்றைய ஆந்திராவிலிருந்து வல்லபாச்சாரியார்
பிருந்தாவனம் சென்று க்ருஷ்ண பக்தியைப் பரப்பினார். கிருஷ்ணனை எங்கோ எட்டி
இருந்து கொண்டு அருள் பாலிப்பவனாக அல்ல, ஒவ்வொரு பக்தனுமே தனக்கு
நெருக்கமான உணரும் தெய்வமாகக் கொண்டாடச் செய்தார். பாகவத புராணம் அவர்
சென்றவிட மெல்லாம் பரவியது. ஜைனர்கள் தாம் போகுமிடமெல்லாம் செய்த ஜனபாத
பரிக்ஷா போல, கிருஷ்ணனுடன் ஒவ்வொரு பக்தனும் தன் மொழியிலேயேதான் பேசவும்
பாடவும் கூடுமே அல்லாது, தனக்கு அன்னியமான பண்டித மொழியான சமஸ்கிருதத்தில்
அந்த நெருக்க உணர்வு பெறுவது சாத்தியமில்லை என்று வல்லபாச்சாரியார்
சொல்லத் தொடங்கினார். இதன் காரணமாக குஜராத்திலிருந்து தொடங்கி ராஜஸ்தானம்,
ஒரிஸ்ஸா அஸாம் என வட இந்தியா முழுதும் மக்கள் தாம் பேசும் மொழியிலேயே
கிருஷ்ணனை ஆடிப்பாடி பக்தி செய்தனர்.
ஒன்றை இந்த இடத்தில் நாம்
நினைவில் கொள்வது நல்லது. குழந்தையாக கிருஷ்ணன் வெண்ணை திருடியது போன்ற
விஷம விளையாட்டுக்களோ, குளித்துக் கொண்டிருக்கும் கோபிகைகளின் ஆடைகளைத்
திருடி ஒளிந்துகொண்டது போன்ற சம்பவங்களோ மஹா பாரதத்திலும் சரி,
விஷ்ணுபுராணத்திலும் சரி காணப்படாத கதைகள். அவை காணப்படுவது
வல்லபாச்சாரியார் பிருந்தாவனத்துக்குத் தன்னுடன் எடுத்துச் சென்ற பாகவத
புராணத்தில் தான் முதன் முதலாகச் சொல்லப்பட்டவை. பாகவத புராணத்துக்கும்
பின் சென்று இக்கதைகளின் பிறப்பிடத்தைக் காணவேண்டுமானால், அதை தமிழில்
பெரியாழ்வாரின் பாசுரங்களில் தான் காணவேண்டும். வட இந்தியாவில் இன்று எந்த
கதக் நாட்டியத்திலும் இன்றியமையாது இடம் பெறும் வெண்ணை திருடிய கண்ணனின்
கதையை கதக் நாட்டியக்காரனுக்குத் தந்தது எட்டாம் நூற்றாண்டுத் தமிழ்க்
கவிஞன் பெரியாழ்வார். அவருக்குத் தான் அந்த கதக் நாட்டியக் கலைஞன் தன்
முதல் வந்தனத்தைச் சொல்லவேண்டும். இந்தக் கதையோ, பால்ய சேஷ்டைகளே உருவான
கண்ணனைக் கற்பனை செய்து உலகுக்குத் தந்த பெரியாழ்வாரோ இல்லாது கதக் என்ற
நாட்டியமும் இல்லை. கதக் நாட்டியக்காரணின் பிழைப்பும் இல்லை.
இக்கிருஷ்ண பக்தி இயக்கத்தின்
காரணமாக, சமஸ்கிருதம் பெற்றிருந்த இடத்தை வட இந்தியா முழுதும் ஆங்காங்கு
மக்கள் பேசும் மொழிகள் பிடித்துக்கொண்டன. வளர்ச்சியும் இலக்கிய வளமும்
அற்று வெறும் பேச்சு மொழியாக இருந்த அனேக மொழிகள் இலக்கிச் செழுமை பெற்ற
மொழிகளாக வளர்ச்சி அடையக் காரணமாக இருந்தது பக்தி இயக்கம் தான்.
இந்திய மொழிகளில் இதிகாசங்கள்
தோன்றிய வரலாற்றைப் பார்த்தோமானால், அவ்வரலாறு பக்தி இயக்கத்தின் பரவலை
ஒட்டியே நிகழ்ந்துள்ளதைப் பார்க்கலாம். எல்லா வட இந்திய மொழிகளிலும்
இதிகாசங்கள் மொழிபெயர்க்கப்பட்டு எல்லா தரப்பு மக்களிடையேயும் பரவியது 13-
ம் நூற்றாண்டுக்குப் பின் தான். இதற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே,
இராமாயணமும் மகாபாரதமும் தமிழில் உருவாகி தமிழர்களுக்கு அறிமுகமாகிவிட்டன.
மற்ற தென்னிந்திய மொழிகளும் கூட வட இந்திய மொழிகளைச் சில நூற்றாண்டுகளாவது
முந்திக்கொண்டன. கிறிஸ்து சகாப்தத்தின் ஆறாம் நூற்றாண்டிலிருந்து
தென்னிந்தியாவில் தொடங்கி விட்ட இந்த பக்தி இயக்கம் தான் இந்திய
இதிகாசங்களையும் புராணங்களையும் இந்தியா முழுதும் பரவச் செய்து மக்களிடையே
பிராபல்யமாக்கியதும், வட இந்திய மொழிகளில் இலக்கியம் தோன்றி செழிக்கச்
செய்ததும் ஆகும் - மீராவிலிருந்து ரவீந்திரநாத் தாகூர் வரை. தாகூருக்கு
முன் மாதிரியாக இருந்தது வித்யாபதியின் பதாவளி. வித்யாபதியின் பதாவளிக்கு
ஊற்றுக்கண்ணாக இருந்தது பாகவத புராணம். பாகவத புராணத்துக்கு ஊற்றுக் கண்
ஆழ்வார்கள் பாசுரம். ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு முன்னோடியாக இருந்தது சங்க
காலத்து அகப் பாடல்கள். காதா சப்த சதி, அகப்பாடல்கள், ஆழ்வார்களின்
பாசுரங்கள், பாகவத புராணம், வித்யாபதியின் பதாவளி என்று இரண்டாம்
நூற்றாண்டிலிருந்து ஊற்றெடுத்து பாயும் இலக்கிய பிரவாஹத்தை நேற்றைய தாகூர்
வரை தொடர்ந்து பார்க்கும்போது இவை அவ்வளவிலும் தொடர்ந்து நாம் காணும் ஓர்
மாறாத சித்திரம், தாகம் தொண்டை வரண்டு ஒரு கிணற்றினடியில் நின்று கை
குவித்து தண்ணீர் கேட்டு நிற்கும் நீண்ட தூர பயணி, அவனுக்கு நீர் வார்த்து
தாகத்தைத் தீர்க்கும் பெண் ஒருத்தி.
தாகூருக்கு நோபெல் பரிசு
கிடைத்ததென்றால், இந்திய இலக்கியத்தில் தொடர்ந்து பெருகும் இம்மரபைத்தான்
உலகமே அங்கீகரித்திருக்கிறது என்று சொல்லவேண்டும் என்பது ஸ்ரீனிவாசனின்
கருத்து.
ஸ்ரீனிவாசன் தன் புத்தகத்தில்,
இலக்கியம் மட்டுமல்லாது, சிற்பம், ஓவியம், சங்கீதம், நாட்டியம் போன்ற பிற
கலைத்துறைகளையும் கலை வடிவங்களையும் கூட ஆராய்கிறார். அவை அவ்வளவிலும்
ஊடாடும் இழையாக இருப்பது காதா சப்த சதியிலிருந்து தொடங்கிக் காணும் இக்
கலைப் பண்பும் வாழ்க்கைக் கூறும் தான்.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால்,
சாஞ்சியில் காணும் தோரண வாயில் தூணில் காணும் தோரண சலபஞ்சிகா, காதா சபத
சதி கவிதை ஒன்றில் பேசப்படும் பெண்ணின் சிலை வடிவம் தான்.
"எதிர்பார்த் துனக்காய் என்றும்
முன்றில்
தன்னில் நின்று மின்னிளங்கொடியாள்
வாடிய தோரண மாலை போல
பாடழிந்திருக்கும் பார்வை
மெலிந்தே." (காதா சப்தசதி: பாலித்தகன் - 362)
(இங்கு காதா சப்தசதியிலிருந்து
தரப்பட்டுள்ள கவிதைகளின் மொழிபெயர்ப்புகள் அனைத்தும் மு.க.ஜகந்நாத ராஜா
மொழி
பெயர்த்தவை)
திரும்பவும் ஸ்ரீனிவாசன்
சொல்கிறார்: "ஆரம்பத்திலிருந்தே தமிழிலும் பிராகிருதத்திலும் கவிதை
காதலைக் கொண்டாடி வந்திருக்கிறது. இந்தியக் கலைகள் அத்தனையும் இக்கவிதைகள்
தந்த பாரம்பரியக் கொடை என்பது அங்கீகரிக்கப்பட்டால் ஒழிய, இச்சிலையின்
கைகளில் தவழும் நளினம், காதல் உணர்வை வெளிப்படுத்த அவள் உதடுகளில் தவழும்
புன்சிரிப்பு, அல்லது இன்னமும் நுண்ணியதொரு அடையாளமாக தொடர்ந்து வரும்
நகக்குறி இவற்றையெல்லாம் வேறு எப்படித்தான் விளக்குவது? இந்த சாட்சியங்கள்
எல்லாமே இவற்றைச் செதுக்கி உருவாக்கிய சிற்பிகளுக்குக் கிடைத்த ஆதர்சம்
பிராகிருத கவிதைகளில் தான் வேர்கொண்டிருந்திருக்கிறது என்பதில்
சந்தேகமில்லை."
நமது கோயில்களில் காணப்படும்
காமச் சுவை நிறைந்த சிற்பங்கள் பற்றி எத்தனையோ புத்திசாலித்தனமாகவும்,
சாமர்த்தியமாகவும் பல விளக்கங்கள் வலிந்து புனையப்பட்டு நமக்குத்
தரப்பட்டு வந்துள்ளன. அவற்றில் சில எங்கிருந்தோ வலிந்து வெகுவாகக்
கஷ்டப்பட்டு கொண்டுவந்து திணிக்கப்பட்டவையாகவும் உள்ளன. உண்மையில், இவற்றை
ஜைனர்கள் தம் தைவர்த்த சூத்திரத்தில் உருவாக்கியுள்ள சக்கரையில்
தோய்க்கப்பட்ட கசப்பு மருந்தெனவும், முதற்கட்டமாக காமவிழைவிலிருந்து
அறத்திற்கும், பின் அறத்திலிருந்து தார்மீக சிந்தனைக்குமான பயணம் என்றும்
தான் கொள்ளவேண்டும். காதா சப்த சதிப் பாடல்கள், தமிழின்
அகத்துறைப்பாடல்கள் அனைத்திலும் பரவலாகக் காண்ப்படும் பல்வேறு வகைப்பட்ட
காதல் உணர்வு வெளிப்பாடுகள் நமக்கு உணர்த்துவது ஜைனர்கள் நியாயப்படுத்தும்
இக்கருத்தோட்டத்தைத் தாம்.
நாயகி, அவள் தோழி பின் காதல்
வயப்பட்ட நாயகியின் மெய்ப்பாடுகள் ஆகியவை பற்றியே பேசும் காதா சப்த சதிக்
கவிதைகள் தான் ராஜஸ்தானி பஷோலி, காங்க்ரா ஓவியங்களுக்கு மூலாதாரம். மழை,
மேகங்கள், மயில், பூத்துக் குலுங்கும் மாமரங்கள், மல்லிகை, நாரை, கிளி,
போன்ற காதல் வெளிப்பாட்டுக்குத் துணை புரியும் அம்சங்கள் எல்லாம் காதா
சப்த சதியில் நாம் முன்னரே கண்டவை தான் இந்த ஒவியங்களிலும் இடம்
பெற்றுள்ளன.
திரும்பவும் தமிழ் அகத்துறைப்
பாடல்களும் காதா சப்த சதியும் உருவாக்கித் தந்த தோழி, தலைவி, பின் அவள்
காதலைச் சொல்லும் மெய்ப்பாடுகள் எல்லாம் தான் பின்னர் பரத முனியால் அவரது
நாட்டிய சாஸ்திரத்தின் ஆடல் விதிகளாகியுள்ளன. அவற்றை 13-ம் நூற்றாண்டு
ஜயதேவரின் 'யாஹி மாதவா, யாஹி கேசவ' பாடலில் மாத்திரம் அல்ல, இன்றைய கதக்
நாட்டியக் கலைஞர் ஆடும் பாடலான, பிந்தாதி¢ன்னுடைய ' காஹே கோ மோரே கர்
ஆயே" - ("நீர் ஏன் என் வீடு தேடி வந்தீர்?" என்று பரத்தை ஒருத்தியின்
வீட்டு க்குப் போன தலைவனைக் கடிந்து கொள்கிறாள் நாயகி) - என்ற பாடலிலும்
காணலாம் இதே 'கண்டித நாயிகா'-வைத் தான் நாம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னரே தமிழில் கலித்தொகைப் பாடலில் சந்தித்திருக்கிறோம்.
"நில், ஆங்கு நில், ஆங்கு;
இவர்தரல் எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல்
செல்வாய், இல் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி, நின், ஆங்கே, நின்
சேவடி சிவப்ப
செறிந்து ஓளிர் வெண்
பல்லாய்!....... 95.(30) - நீ கண்ட சிவல் போர் - மருதக்கலி - கலித்தொகை)
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மகத
நாட்டை விட்டு நீங்கி மதுரையை நோக்கி வரத் தொடங்கிய ஜைன முனிவர்கள் தான்
இத் தொடர்புக்குக் ஆதி காரணமானவர்கள். அவர்களுக்குத் தமிழ் நாடு மிகக்
கடன்பட்டுள்ளது. ஆனாலோ, முதலில் ஆழ்வார்களாலும் நாயன்மார்களாலும் தமிழ்
நாட்டில் தோற்றுவிக்கப்பட்ட பக்தி இயக்கம் தான், பின் இந்திய துணைக்கண்டம்
முழுதும் பரவுவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. பின் வந்த
நூற்றாண்டுகளில் ஜைன முனிவர்களிடமிருந்து அன்று பெற்ற கடனை பக்தி இயக்கம்
பல மடங்கு திருப்பிக் கொடுத்துவிட்டது.
ஸ்ரீனிவாசனின் புத்தகம் சமீப
வருஷங்களில் நமக்குக் கிடைத்துள்ள, நாம் அறிந்திராத பல புதிய விஷயங்களைச்
சொல்லும், மிகவும் பயன் தரும் புத்தகமாகும். இப்போதுள்ளதை விட ஒரு
ஆரோக்கியமான சூழலில் இப்புத்தகம் முதலில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டு
வெளிவந்திருக்க வேண்டும். இந்தியாவின் முக்கிய நடப்புகள் எல்லாமே கங்கைச்
சமவெளியிலிருந்து பிறப்பவை தான் என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு அது ஒரு
புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கும். மாறாக, கங்கைச் சமவெளிக்கு வெளியே
உள்ள இடங்களில் நடந்து ள்ளவை தான், வரலாற்றின் இரண்டு ஆயிரம் ஆண்டு
களுக்கும் மேலாக இந்தியா கண்டுள்ள கலாச்சாரச் செழுமைக்கும் அதன் ஒருமைப்
பாட்டிற்கும் காரணமாகியுள்ளன என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வகை
செய்திருக்கும்.
அதற்கும் முன்னால், திரும்பவும்,
இப்புத்தகத்தை, ஸ்ரீனிவாசன் முதலில் தமிழில்தான் எழுதியிருக்கவேண்டும்.
அவர் தமிழரான காரணத்தால். அப்போது தமிழகக் கல்வியாளர்களாலும் அரசியல்
வாதிகளாலும் கடந்த அறுபது எழுபது ஆண்டுகளாகப் பிராசாரப்படுத்தப்பட்டு
தமிழ் மக்களின் மீது மிகத் தீவிரமாக திணிக்கப்பட்டு வந்துள்ளவை பலவும்
கட்டுக்கதைகள் என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கும். இத்தொடர்ந்த
பிரசாரத்தால் இக்கட்டுக் கதைகள் மறுக்கமுடியாத வரலாற்று உண்மைகள் போல
மக்களின் கூட்டுப் பிரக்ஞையில் ஆழப் பதிக்கப்பட்டுள்ளன.
உண்மையில் ஸ்ரீனிவாசன் தன்
புத்தகத்தில் ஒரு ஒருங்கிணைந்த கோட்பாடாக பல துறைகளிலிருந்து பெற்ற
சாட்சியங்களை முன்வைத்துள்ள விஷயங்கள் பார்வைகள், பல துண்டு துண்டாக
இங்கொன்றும் அங்கொன்றுமாக முன்னரே தமிழறிஞர்களாலும் வரலாற்று
ஆசிரியர்களாலும் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.
ஆனால், இப்படிப்பட்ட பார்வைகளும்
விஷயங்களும் உண்மையே ஆனபோதிலும் தமிழ் நாட்டின் பெருந்தகைகளுக்கு
உவப்பானவையாக இருந்ததில்லை. இப்படிக் கசப்பான உண்மைகளைச் சொன்ன
காரணத்தினாலேயே, வையாபுரிப்பிள்ளை என்னும் தமிழறிஞர் குறுகிய தமிழ்ப்
பற்றை வளர்த்துக் கொண்ட கல்வியாளர்களிடமிருந்தே நிறைய வசைகளையும்
அடிகளையும் வாங்கிக்கொள்ள நேர்ந்திருக்கிறது. ஆனால் அதன் பின் எத்தனையோ
ஆண்டுகள் கடந்துவிட்ட இன்றோ, வெறியாகிவிட்ட அத் தமிழ் பற்று அதன்
குணத்திலும் அளவிலும் இன்னமும் பயங்கரமாக்த்தான் வளர்ந்திருக்கிறது.
வெங்கட் சாமிநாதன்/2.9.08
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------