முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்
ஒரு நாள் இரவு 9.00 மணிக்கு ராஜமார்த்தாண்டனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு சில நாட்கள் முன்பு அவர் ஈழத்து கவிஞர்கள் பற்றி ஒரு கல்லூரி கருத்தரங்கில் பேசிய உரை, பின் எங்கள் இருவருக்கும் பிடித்த, கனடாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழக் கவிஞர், திருமாவளவனின் ‘”இருள் யாழ்” என்னும் தலைப்பிலான அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பையும் எனக்கு அனுப்பியிருந்தார். முதலில் படித்த அவரது கட்டுரை, எப்போதும் போல், எனக்கு பிடித்திருந்தது. கவித்வத்தையும் அனுபவ உண்மையையும் மாத்திரமே பார்வைக்கு எடுத்துக்கொண்டு, மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது அது. “கிடைச்சதா? படிச்சீங்களா? என்று கேட்டார். சொன்னேன். “கவிதைத் தொகுப்பு?” என்று கேட்டார். “இல்லை, இன்னம் படிக்கவில்லை. கட்டுரைப் பேச்சு படிக்க சுலபமாக இருந்தது ரசமாகவும் இருந்தது. அதை முதலில் படித்துவிட்டேன். கவிதையை இனிமேல் தான் சாவகாசமாகப் படிக்கவேண்டும்.” என்றேன். “அதைத் தானே நீங்கள் முதலில் படித்திருக்கவேண்டும். படிச்சு சொல்லுங்க. அதைப் பத்தி நீங்க எழுதவும் வேணும். உங்க கிட்டேயிருந்து தானே நான் திருமாவளவனைத் தெரிஞ்சு கிட்டேன்.” என்றார். எனக்கு கஷ்டமாக இருந்தது. “கட்டாயம் எழுதறேன்.” என்றேன். “கொஞ்ச நாள்லே அங்கே வருவேன். வரப்போ சொல்றேன். சந்திக்கலாம்” என்றார். இப்படியே நிறைய பேசிக்கொண்டே இருந்தார். அன்று அவர் பேசிய குரலில் நிதானம் இல்லை. வாய் குழறியது. குடித்திருக்கிறார், இன்னம் போதை தெளியவில்லை என்று தெரிந்தது. இடையிடையே அவர் வீட்டிலிருந்து அவரைக் கண்டிக்கும் குரலும் கேட்டது. ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. “அதை விடுங்க. நீங்க எழுதணும்.” என்றார் மறுபடியும். “பிறகு பேசலாமே,” என்று சொல்லி பேச்சை வெட்டவும் மனது வரவில்லை. அவருடைய அந்த நிலையில், சூழலில் பேச்சைத் தொடர்வதும் கஷ்டமாக இருந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை நானே தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் தொலை பேசியை எடுப்பதாக இல்லை. கடிதமாக எழுதலாமா, என்று நினைத்தேன். எவ்வளவு எழுதுவது? பேசுவதே நல்லது, அதுதான் நியாயம் என்று மனதுக்குப் பட்டது. இதற்கிடையில் திடீரெனெ இந்த செய்தி. ஹரன் பிரசன்னா இனையத்தில் எழுதியிருந்ததிலிருந்து தான் எனக்குத் தெரிந்தது.
அவர் இறந்தது சாலையில், ஏதோ கன வாகனம் மோதி இறந்து விட்டார் என்று சொன்னார் பிரசன்னா.

ஒரு நல்ல நண்பரை, நல்ல ரசிக மனம் படைத்த மனிதரை, ஒரு சிறந்த கவிஞரை இழந்து விட்டேன். அவருக்குச் சொல்ல வேண்டியிருந்தது, அவருடன் உரையாட வேண்டிருந்தது, நிறைய இருந்தது. என் மனசுக்குள் அந்த சந்திப்பை, நீண்ட உரையாடலை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். சாவகாசமாக, எந்த இடையூறுமின்றி, அமைதியில், அவருக்குப் பிடித்த மாதிரியே நாலைந்து பெக் உள்ளே போக, அதுவும் வெகு சாவகாசத்தோடே தான் கொஞ்சம் கொஞ்சமாக.

ஆனால் அப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த மாதிரியான சாவகாசத்துக்கெல்லாம் அவர் ஆளில்லை, இந்த விஷயத்தில் மாத்திரம்.மற்றதெல்லாம் சாவகாசம் தான். இனி என்னவோ அது நடக்கப் போவதில்லை. அந்த ஏமாற்றத்தோடு ஒரு குற்ற உணர்வும் உள்ளே அரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
இதற்கு முன்னரும் அவர் சுந்தர ராமசாமி கவிதைகள் பற்றி எழுதிய புத்தகமும் எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு வருடம் இருக்கும். அது பற்றி நான் கட்டாயம் எழுதவேண்டும் என்று அவர் இரண்டொருமுறை தொலை பேசியில் வற்புறுத்தியுமிருந்தார்.

நான் எழுதவில்லை. எழுதவேண்டும் என்று தான் இருந்தேன். சுந்தர ராமசாமியிடம் அவருக்கு இருந்த மதிப்பும் நட்பும் எந்த நிலையிலும் பங்கப் படாத ஒன்று. கவிஞராக, எழுதாளராக, நண்பராக. அதேபோல ராஜமார்த்தாண்டன் மிக உயர்வாக மதித்த இன்னொரு கவிஞர் தர்மூ சிவராமூவின் (பிரமீளின் அன்றைய
பெயர்) குரோதம் மிகுந்த தாக்குதலால் கூட பாதிக்கப்படாத நட்பும் மதிப்பும் அவருக்கு சுந்தர ராமசாமி பேரில் இருந்தது. பின்னாட்களில் தர்மூ சிவராமுவிடம் காணப்பட்ட அற்பத்தனமான கோபங்களையும் பகைமையையும் அறிந்தும் அதை மீறி கவிஞராக தர்மூ சிவராமூவை அவர் மதித்தார். இதை ராஜமார்த்தாண்டனிடம் காணப்பட்ட சாத்வீகம் என்றும் சொல்லலாம். அததது அததன் இடத்தில் என்ற பக்குவ நிலையைக் குறிப்பதாகவும் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் தமிழ் எழுத்தாளர் உலகில் மிக மிக அரிதாகக் காணப்படும் குணம் இது. கவித்வ பிரக்ஞையும், வேறு எதுவும் தன்னைப் பாதிக்க விடாது தான் சிருஷ்டித்துக்கொண்ட உலகிலேயே ஒரு மோன நிலையில் வாழ்வதும் ஒரே இடத்தில் சங்கமித்துள்ள மாயம் என்று தான் சொல்லவேண்டும்.

இந்த மன நிலையை நான் அன்று புரிந்து கொண்டவன் இல்லை. கொல்லிப் பாவை இதழை அவர் பொறுப்பில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் தான் நான் ராஜமார்த்தாண்டனை அறிவேன் - 1970-களின் பிற்பாதியில் அப்போது தர்மூ சிவராமூவுக்கு அவர் முன்னர் பாராட்டிக்கொண்டிருந்த எல்லோரையும் இப்போது கொண்ட பகைமையில் அழித்தே தீர்வது என்ற முனைப்பில் இருந்த காலம் அது. இவ்வாறு எதிர் எதிர் முனைகளில் இருந்த எல்லோருக்கும் கொல்லிப் பாவையில் இடம் தரப்பட்டது. அப்போது தில்லியில் இருந்த நானும் சுந்தர ராமசாமியும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். “என்னய்யா இது? சிவராமூ எழுதுவதில் நியாயமான வாதம் இல்லை. வீண் பகைமைக் காய்ச்சல் தான் இருக்கிறது என்பது ராஜமார்த்தாண்டனுக்கு தெரியவில்லையா? என்று கேட்டேன் ஒரு முறை. “ராஜமார்த்தாண்டனுக்கு சிவராமூ என்றால் ஒரு soft corner. அது இருக்கத்தான் இருக்கும்.” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 1972-1973 லிருந்து இன்று வரை நாலைந்து முறை நான் நாகர்கோயில் சென்றிருந்த போதிலும், ராஜமார்த்தாண்டனைச் சந்தித்ததாக நினைவில் பதிவுகள் இல்லை. அவரை நான் நேரில் பார்த்துப் பேசியது 2000-ல் சென்னையில் தான் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்கு சில வருஷங்கள் முன்பு, சாஹித்ய அகாடமியின் ஹிந்தி இதழ் பாரதீய சம்காலீன் சாஹித்ய பத்திரிகைக்காக நவீன தமிழ்க் கவிதை சிறப்பு மலருக்கு கவிதைகள் தேர்வு செய்தபோது, ராஜமார்த்தாண்டனின் ‘அவனும் நானும்‘ கவிதையையும் சேர்த்திருந்தேன். அது எங்கேயிருந்தோ எடுத்தது. அவரது கவிதைத் தொகுப்பை நான் அறிந்தவனில்லை. ராஜமார்த்தாண்டனை கவிஞனாக அறிந்தவனும் இல்லை.அப்போது ராஜமார்த்தாண்டனை, தருமு சிவராமூவிடம் தான் கொண்ட அபிமானத்தையும் மீறி, சிவராமூவுக்கு என்னிடமிருந்த பகைமையையும் மீறி எனக்கு தன் பத்திரிகையில் இடம் கொடுத்த ஒரு அபூர்வ மனிதர் என்று தான் எனக்குத் தெரியும். கொல்லிப் பாவை அன்று நிறைய சச்சரவுகளுக்கு, சிவராமூவையும் மீறி, விரும்பி இடம் கொடுத்திருந்தது எனக்கு முக்கிய விஷயமாகப் பட்டது. பின் வந்த இடைப்பட்ட சில வருடங்களில் அந்த சச்சரவுகளின் சூடு தணிந்து அவையெல்லாம் சரித்திரமாக மனதில் பின் தங்கிய விஷயங்களாகியிருந்தன.

2000- ல் நான் சென்னைக்கு குடி மாறிய சில மாதங்களுக்குள் ஒரு ஜூன் மாத நாளில், தமிழினியின் புத்தக வெளியீட்டுக் கூட்டம் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது மிகுந்த சினேகபாவத்தோடு பேசிக்கொண்டிருந்தார். தமிழினி வெளியிட்ட புதுமைப் பித்தன் பற்றிய மூன்று புத்தகங்களில் ராஜமார்த்தாண்டன் எழுதியதும் ஒன்றாக இருந்தது. தினமணியில் அவர் வேலை செய்துகொண்டிருந்ததாகத் தெரிந்தது. நல்ல இடம் தான், மகாதேவன் போன்றவர்கள் எல்லாம் இருந்த இருக்கும் இடம் என்று அதைப் பற்றி எனக்குள் ஒரு பிம்பம் இருந்தது. அதைத் தொடர்ந்து பின் ஒரு நாளில் அவரது கவிதைத் தொகுப்பு என, ஒரு சிறிய கையேடு மாதிரி, 50 பைசாவுக்கும் 60 பைசாவுக்கும் லலிதா சகஸ்ரநாமம், விநாயக ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் விற்குமே இத்தினியூண்டு புத்தகம், அது ஒன்றை அனுப்பி வைத்தார். புத்தகம் தான் மினியாக இருந்ததே தவிர அது மிக அழகாக, மிகுந்த சிரத்தையோடு அச்சிடப்பட்டிருந்த, தொகுப்பு அது. இவையெல்லாவற்றையும் மீறி அது எனக்கு ஒரு மிகச் சிறந்த ஒரு கவிஞனை அறிமுகப் படுத்தும் கிட்டத்தட்ட 60 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. அது “கவிஞர் பிரமிள் நினைவாக”, சமர்ப்பிக்கப் பட்டதாகச் சொன்னது அந்தத் தொகுப்பு. எவ்வளவு தூரம் பிரமிள் என்ற ராஜமார்த்தாண்டத்தின் மனதில் இடம் பிடித்திருந்தார் என்பதை அது சொன்னது. ஆனால் அந்த தொகுப்பு பற்றி நான் எழுதியிருந்தேன். (புதுசும் கொஞ்சம் பழசுமாக - கவிதை பற்றி) கவிதை பற்றிய சிந்தனைகள், கவிதைகள் இரண்டிலும் ராஜமார்த்தாண்டன் போற்றும் பிரமிளும் ராஜமார்த்தாண்டனும் எதிர் எதிர் துருவங்களில் இருப்பதாகத் தான் சொல்லவேண்டும். பிரமிள் தன் கவிதைக்கான சிறப்புக்கள் என்று எதையெல்லாம்  பிடிவாதமாக அதன் உயிர்ப்பு அற்ற கட்டத்திலும் பற்றி இருந்தாரோ அதையெல்லாம் முற்றிலுமாகத் தவிர்த்த கவித்வம் ராஜமார்த்தாண்டனது. பிரமீளின் சரிவு அவருக்குத் தெரியாமலில்லை. இருப்பினும், ஒரு சிகரத்தை ஒரு காலத்தில் தொட்ட பிரமிளின் நினைவு மங்கவில்லை.

கொல்லிப்பாவையில் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய பரிமாறல்கள் இடம் பெற்றன. எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருந்தது. எல்லா பார்வைகளும் இடம் பெறவேண்டும் என்பது ராஜமார்த்தாண்டனது எண்ணம். அப்போது பலர் அதை விரும்பாததாகக் காட்டிக்கொண்டாலும், பின்னர் இன்னொருவர் ஆசிரியத்வத்தில் சர்ச்சைகள் இடம்பெறாத போது கொல்லிப்பாவை சப்பென்று ஆகிவிட்டதாகச் சொன்னார்கள். கொல்லிப்பாவை இதழ்கள் தொகுப்பு வரப்போவதாகவும் அதில் எனக்கும், சிவராமுவுக்கும், சுந்தர ராமசாமிக்கும் இடையே நடந்த சர்ச்சைகள் எல்லாம் தொகுப்பில் கட்டாயம் இடம் பெறும். அவை அடுத்த தலைமுரைக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும் என்று சொன்னார். அது போலவே இடப் பற்றாக் குறையில் மற்றவை தவிர்க்கப்பட்டாலும், சர்ச்சைகளை நீக்கிவிடவில்லை என்று சந்தோஷத்துடன் சொல்லியே ராஜமார்த்தாண்டன் கொல்லிப் பாவைத் தொகுப்பை எனக்குக் கொடுத்தார்.

ராஜமார்த்தாண்டனின் கவிக் குரல், அவருக்கேயானதாக அது போன்ற ஒன்று வேறு இடத்தில் கேட்காததாக இருந்தது. வெகு அமைதியான, படாடோபங்கள் அற்ற, இரைச்சலிடாத, அலங்காரங்களைத் தவிர்த்த, சாதாரண அன்றாடம் புழங்கும் வார்த்தைகளில் நம்மைச் சுற்றியுள்ள அனுபவங்களிலிருந்தே அதன் அழகையோ விசித்ரத்தையோ, கவித்வ அனுபவமாக நமக்குச் சொல்வதாக இருந்தது. அமைதியுடன் சீற்றமில்லாது ஒரு அகோரமான வாழ்க்கையைச் சொல்லமுடிந்து விடுகிறது அவரால்.

வழக்கத்துக்கு மாறாக இப்படியாயிற்று
தவழ்ந்து கொண்டிருந்தனர் மனிதர்கள்.

எதனாலிப்படி?

திகைத்து நிற்கையில்
கால்களை வாரிவிட்டது ஒரு கை
எல்லோரையும் போல் தவழ்ந்து செல்
அதட்டியது ஒரு குரல்
தவழத் தொடங்கினேன்

தொடக்கத்தில் தடுமாற்றம் தான்
பழகிப் போய்விட்டது இப்போது.

நிமிர்ந்து நின்றால் கைகள் காலைவாரிவிடும். இப்போது தவழ்ந்து செல்வது பழகிவிட்டது. நம்மைச் சுற்றி எந்தத் துறையிலும் வெற்றி பெறுபவர்கள் தவழ்ந்து செல்வதை இயல்பாக்கிக் கொண்டவர்கள்தான். கவிஞர் ஏதோ தமாஷாகச் சொல்கிறார் என்று தான் தோன்றும். ஆனால் ஒரு அசிங்கம் பிடித்த வாழ்வனுபத்தை எவ்வளவு அமைதியாக அடக்கிய எள்ளலுடன் சொல்லி விடுகிறார்.
நம்மைச் சுற்றி இருக்கும் தவழ்வதைப் பழகிக்கொண்டவர்களும் இதை மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். அவர்களைச் சொல்வதாக அவர்களுக்கு கோபம் வராது.

கலகக் காரனில்லை இப்போது
கோபக்காரனுமில்லை
கோஷங்கள் மறந்து போய்விட்டன
முகத்தில் ஒரு புன்னகையை
நிரந்தரமாக ஒட்டிக்கொண்டாயிற்று….
சாலைவிதிகளை மதித்தும் மிதித்தும்
விரைந்த அவன் வாகனம்
சாலையோரம்
செத்துக்கொண்டிருப்பவனைப் பார்த்து
மற்றவர்கள் போலவே கடந்து செல்கிறான்
எப்போதும் கனவில்
அன்றைய கலகக்காரனின் ஆவேசம்
ஏளனப் புன்னகையுடன் கடந்து போகும்
அக்கண அதிர்வுக்குப் பின்
யாவும் சகஜமாகும்

இது தான் நான் தொன்னூறுகளில் எங்கோ உதிரியாகப் படித்து பாரதீய சம்காலீன் சாஹித்ய தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்த அவனும் நானும் கவிதை. வெளி உலகத்தின் அகோரங்கள், அசிங்கங்கள் எதுவும் அவரது பார்வையில் பட்டு சகஜமாகிவிடவில்லை. அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை. உள்ளுக்குள் அடங்கிக் கிடக்கும். அவ்வப்போது நினைவில் புழுங்குமாக இருக்கும். மறைவதுமில்லை. ஆனால் அமைதியாக ஒரு ஏளனச் சிரிப்புடன் அவை கவிதையாக வெளிவரும். இந்த குணம் தான் ராஜமார்த்தாண்டனிடம் கடைசி நாள் வரை காணப்பட்டது.

பத்திரிகை நடத்திய போதும், பலருடன் நேரில் பழகிய போதும், அவர் எதையும் காணாதிருந்ததில்லை. மனத்தினுள் எவ்வளவு சஞ்சலங்கள் இருந்தாலும், உலகின் வெளிநடப்புகள் பல அவருக்கு எவ்வளவு கசந்திருந்தாலும், அந்தக் கசப்புகள் அவரைக் கோபப்படுத்தி வெடித்துச் சீறுவதில்லை. கசப்புகள் மனித உறவுகளைத் துண்டித்து விடுவதில்லை. உணர்ச்சியற்றவர் இல்லை. மதிப்புகள் அற்றவர் இல்லை. அவர் எதனாலும் பாதிக்கப் படாதவர் என்றும் இல்லை. எல்லாம் உள்ளுக்குள் அடங்கிக் கிடக்கும். அவை வெளிப்படும்போதும் மிகத் தீர்மானமாக, யாருடைய முகத்துக்கும் அஞ்சாது, எந்த இழப்பு பற்றியும் நினைப்பில்லாது, எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி வெளிப்படும்.

இந்த அனுபவங்களை, அவர் பழக நேர்ந்த இலக்கிய நண்பர்களை, (’இலக்கிய’ என்றும், ‘நண்பன்’ என்றும் சொல்வது ஒரு மரபு கருதியேதான், அர்த்தங்களுக்குப் போகவேண்டாம்) ஒருமைப் படுத்தி ஒரு கவிதை ஒன்று:

இயல்பு மறைத்து
இதமான ஒப்பனையுடன்
வித்தியாசமாய்க் காட்சி தருகிறாய்

நண்பனே

முகமறியா முகமூடிக் கும்பலில்
நிஜமே போலும் தான் உன்முகம்

எனினும்

உன்னுள் புதைந்திருக்கும்
பொறாமையின் அசிங்கங்கள்
குரூரங்கள் வக்கிரங்கள்
எவ்விதம் மறைத்தாய் அவற்றை

அம்முகம் வழியாய்
என்முகம் அறியவே
உன்னை நாடுகிறேன்

இதமான ஒப்பனை
முகத்துக்காக அன்று

இதையே பல ரூபங்களில், பல்வேறு மன நிலைகளில், அவ்வப்போதைய அனுபவக் கீறல்களுக்கேற்ப பல கவிதைகள் எழுதியுள்ளார், “நண்பனே, உன் கற்பனை மீசையைத் திருகி,/ நீ கொள்ளும் பரவசம்,/ எவ்விதம் நானறிவேன்” (விமர்சனம்), “தெருவிலுதிர்ந்த பூக்கள் தின்னும்,/ பன்றிகள் சில,/ அவசர அவசரமாக.”
(வாழ்க்கை), “இந்த மனித முகங்களில்,/
பொய்ம்மையற்ற/, இயல்பான/, புன்னகைகள் மலர்ந்தால்/, போதுமே/, ஏதேனும் ஒரு மலர் போல″(பாலை),

நீ ஒரு அயோக்கியன்,
நீ ஒரு சந்தப்பவாதி,
என்றெனக்குச்,
சான்றிதழ் வழங்கி விட்டாய்……
என்னை நானே’
இன்னும் தேடிக்கொண்டிருக்கையில்,
அவசரப் பட்டு விட்டாய்,…
சற்றே நிதானித்திருக்கலாம் நண்பனே,
என்னைப் போலவே” (கணிப்பு)

என்று இப்படி அவர் கவிதைகளில் நிறைய இடங்களைப் பார்க்கலாம். அவர் கசப்பு குரோதமாக, சீற்றமாக வெளிப்படவில்லை. இது இலக்கிய உலகில் மாத்திரம் இல்லை. பொதுவில் சொன்னது இலக்கியத்துக்கும், இலக்கியத்தில் சொன்னது பொதுவிலு மாக அர்த்தம் கொள்ளும். “எங்கள் மான்சன்” என்ற கவிதையில், “அணில்கள் உண்டு, ..எலிகள் பெருச்சாளிகள் உண்டு, .. எறும்புகள் உண்டு, ஈக்கள் உண்டு” என்று சொல்லிக்கொண்டே கடைசியில், “இவற்றுடன், மனிதரென்பாரும் உண்டு, எங்கள் எங்கள் மேன்சனில்” என்று முடிப்பார். கவனிக்கவும், “மனிதரும்” அல்ல. “மனிதரென்பாரும்”. கவிதை படிமங்களில், வர்ணனைகளில், அலங்காரங்களில், இல்லை. அனுபவத்தில், அதன் உக்கிரத்தில், அதன் தனித்வ பார்வை தான் என்பதை ராஜமார்த்தாண்டனின் எளிமையும், அதன் ஆழ்ந்த தனித்வமும் சாட்சியப்படுத்தும்.

நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்….

மனிதர்கள் மட்டும்
வேறு முகங்களுடன்

என்று ஒரு கவிதை. மனிதர்கள் முகங்கள் மாறுபடும் தான். ஆனால் இங்கு வேறு என்ற சொல், தனதல்லாத, பொய்யான என்ற அர்த்தம் கொள்கிறது.

காலடியில் மாலையிலும்
உடன் வரும் நெடிய நிழலை
உச்சிப் போதில்
ஒரு நாய்க்குட்டியெனக்
காலடியில்
பதுங்கி வரும் நிழலை
அறிவேன்

அறிந்திலேன் இன்றுவரை
நிழலின் நிஜத்தை

நிழலின் நிஜத்தை என்ற இரு சாதாரண சொற்கள் எங்கு நம்மை இட்டுச் செல்கின்றன? இது எப்படி சாத்தியமாயிற்று?.

ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும். பல இடங்களில் அவருக்கு மரங்களும், குழந்தைகளும், பூக்களுமே கவிதை தான். கவிதை பிறப்பதே இயல்பாக, ஒரு மரம் வளர்வது போல, பூக்கள் மலர்வது போல, ஒரு சிட்டுக் குருவியின் சிறகசைப்பைப் போலத் தான்.

முன்செல்லும் பெண்ணின்
தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

என்ற இருவரிகள் தரும் போதையை இன்றைய எந்த கவிஞனின் வரிகள் தரும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதற்கு ஈடான வரிகள் எனக்குத் தெரியவில்லை.

இத்தகைய ஒரு கவிமனத்தைத் தான், அவருடைய கவிதைத் தொகுப்பிலும், அவர் தொகுத்துள்ள கொங்கு தேர் வாழ்க்கை என்னும் இன்றைய தமிழ்க் கவிதைத் தொகுப்பிலும் புதுக்கவிதையின் வரலாறு பற்றிய புத்தகத்திலும் காண்போம். ராஜமார்த்தாண்டனின் எழுத்துக்கள் எதுவுமே, புத்தகமாக எழுதப் பெறலும் அவை வெளிவருதலும், அவரிடமும் அவரது ரசனையிலும் தமிழினி வசந்த குமாருக்கு இருந்த பிடிப்பினாலும், வெளிவரவேண்டும் என்ற ஆர்வத்தினாலுமே. வேறு எங்கு வெளிவந்திருக்கும் என்று தோன்றவில்லை.

மூன்றிலும் சமரசமற்ற, தன் பார்வையில் திடமான, எந்த விஸ்வரூபங்களுக்கும் ஆட்பட்டுவிடாத, ஆனால் அமைதியான ஒரு பார்வை மெல்லிய குரலில் வெளிப்படுகின்றன. 460 பக்கங்களில் 93 கவிஞர்களின் 893 கவிதைகள். இங்கு ராஜமார்த்தாண்டன் கவிதைகளாகக் கண்டவற்றைத் தான் காணலாம். சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர், கலைமாமணிகள், கவிக்கோக்கள், கவியர சுகள், 33வது பதிப்பை வெற்றிகரமாக வெளியிட்டவர்கள், தமிழே மேடையில் அமர்ந்திருக்கிறது என்று பாராட்டப்படுபவர்கள் யாரையும் இத்தொகுப்பில் காணமுடியாது. தமிழ் இலக்கிய உலகம் மறந்தவர்களை இங்கு காணலாம். ராஜமார்த்தாண்டன் தேடியது கவிதைகளை. கவிஞர்களை அல்ல. அவரது நிராகரிப்பிற்கும், அங்கீகரிப்பிற்குமான காரணங்களை அவரது புதுக்கவிதை வரலாற்றில் சொல்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் சில இடங்களில் மாற்றுக் கருத்துக்கள் தோன்றலாம். உதாரணமாக,

“வேலியினுள் விதைத்திருந்த, பண்பாட்டுப் பயிர்கள், காலடியில் துவம்சமாச்சு,” என்றும், “மனையாளின் கூரிய விழிகள், குத்திக் குதறின, மனச் சாட்சியை ஊடுருவி”, “ஐயோ, ஏணைக்குள் குழந்தை, இடிபடுவன மனைகள், பொடி படுவன சுவர்கள், முறிபடுவன பனைகள், ” என்று எழுதுகிற சு.வில்வரத்தினம் என்னும் ஈழக் கவிஞரின் கவிதை பற்றி ராஜமார்த்தாண்டனுடன் சாவகாசமாகப் பேச விரும்புவேன் தான். இன்னும் அனேகம் ஈழக்கவிஞரின் நீண்ட உரைநடை விவரணங்களாகி விடும், பி கடனங்களாகிவிடும் கவிதைகள் பற்றியும். “உண்மைதான். எல்லாமே அப்படியில்லை.” என்று அவர் சொன்னார். ஒரு சந்திப்பில். அது போல இன்னும் ஒரு சிலரின் பிந்தைய எழுத்து பற்றி. ஆனால், இத்தகைய தடுமாற்றங்கள் ஒரு விரிந்த பரப்பில் யாருக்கும் வரும் தான். ஆனால் அதே சமயம், “புதுக்கவிதையின் முன்னோடி” என்று க.நா.சு.வை எடுத்த உடனே அங்கீகரித்துவி ட்டு, “அலங்காரங்களை முற்றாகத் தவிர்த்து, அனுபவப் பார்வை மூலமாகக் கண்டறியும் உண்மை கருத்துருவமாகத் தங்கி விடு வதால் உரைநடையாகிவிடுகிறது” என்று க.நா.சு.வின் கவிதை முயற்சிகள் பற்றிச் சொல்லும் அதே சமயம், மிகச் சிறந்த கவிதைகளாக சில வந்துள்ளதையும் அவர் காணத் தவறவில்லை. அவற்றில் ஒன்றான, ‘தரிசனம்‘ என்ற கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இது முரண் போலத் தோன்றும். இப்படித்தான் எனக்கு இன்னும் சிலர் பற்றித் தோன்றியது. அதே போல, இன்னம் சில பேர்மறந்தவர், சில பேர் பிரபலமாகாதவர் கவிதைகளும் இதில் உள்ளன. கவிதைகளாகத் தேடிச் சேர்த்துள்ளார்.
கவிதை அன்றி வேறு எதையும் கருத்தில் கொள்ளாது எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல். இது சாதாரண பாராட்டு அல்ல.

ராஜ மார்த்தாண்டனின் இயல்பும் ஆளுமையும் அப்படிப் பட்டது. அவரே தன் கவிதைகளில் தன்னைப் பற்றி, தன் எதிர்பார்ப்புகள் பற்றி, தன் கனவுகள் பற்றி எழுதியுள்ளார்.

ஒரு பறவையின் பறத்தலென,
இயல்பாய்
ரம்மியமாய்
சலிப்பற்றதாய்
பிரம்மிப்பாய்,
புத்தம் புதிதாய்
ஜீவத்துடிப்புடன்
இருக்கவேண்டும்
கவிதை.

இப்படி யார் கவிதைக்கு இலக்கணம் கூறியிருக்கிறார்கள்? “எனக்கான மலர், எங்கோ மலர்ந்திருக்கிறது, எத்திசையில் என்பதறியேன், …….நம்பிக்கையுடன் தேடியலைகிறேன், அது வரை, குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பாய், மலர்ந்திருக்க வேண்டுமது.”

“இல்லாமல் போக, இப்போதும் மனமில்லை. நூறாண்டு வாழ்ந்துவிட்டபோதும்.
கொஞ்சம் நேசம், அனேகம் துரோகங்கள்,
……கொஞ்சம் செல்வம், அனேகம் கடன் சுமைகள்.

எனினும், பூக்களின் புன்னகை, மரங்களின் ஸ்னேகம், பறவைகளின் சங்கீதம்,

எனவே தான்….. (இல்லாமல் போக இப்போதும் மனமில்லை)

சலிப்பு என்று ஒரு கவிதை.

பெரிதினும் பெரிது கேள்
என்றான் பாரதி.

பெரிதொன்றும் வேண்டாமெனக்கு
சில லட்சங்கள் போதும்.’…….

இன்றிருப்பதோ நூறு ரூபாய்
இந்த மாலைப் பொழுதேனும்
இனிதாய் கழியட்டுமே………

இளநெருப்பாய் உள்புகுந்து
இறக்கை பொருத்தி
பெருவெளியில் மிதக்க வைக்கும்
பிராந்தியே
இதமளிக்கும் குளிர்பானமே
ருசியான பொரித்த மீனே!
புகையும் சிகரெட்டே
வாழ்க
நன்றி உரித்தாகுக.

நம்மில் பலருக்கு உமர் கய்யாமின் ருபாயத், ·பிட்ஜெரால்டின் மொழிபெயர்ப்பில் நினைவுக்கு வரும். அந்த உமரின் இடைவிளை கிராமத்து அவதாரம் தான் ராஜமார்த்தாண்டன்.

Here with a loaf of bread beneath the bough
A flask of wine, a book of verse and thou
Beside me singing in wilderness
And wilderness is Paradise enow

‘கொஞ்சம் நேசம்’, ‘அனேக துரோகங்கள்’ என்று வேறொரு முறை சொல்லியிருந்தாலும், ராஜமார்த்தாண்டனின், சொர்க்கம் இதோ:

வீட்டின் முன்னறை
நாற்காலியில் நான்.
ஜன்னல் வழியே உலகம்.

முருங்கை மரமொன்று
அருகே இரண்டு தென்னைகள்
கான்க்ரீட் கட்டடங்கள்
துல்லியமாய் நீல வானம்
சூரியப் பார்வையில் சிலிர்த்தன
யாவும்

முருங்கைக் கிளைகளில்
தோன்றி மறைந்து தோன்றி
விளையாடும் அணில்களிரண்டு
எங்கிருந்தோ வந்த காகம்
கிளையொன்றில் அமர்ந்தது
அங்குமிங்கும் அவசரமாய்ப் பார்த்து
சேதியொன்றை கரைந்துவிட்டுப்
பறந்தது மாயமாய்.

தெருவில்
எதிரெதிர் திசைகளில்
கடந்துபோகும் மனித முகங்கள்
அவ்வப்போது.

இந்தக் கோணத்தில்
இந்தக் கணத்தில்
உலகம் இனிது தான்

இந்த கவிஞர், மனிதர், ரசிகர், குரோதமற்று உலவிய இலக்கியவாதி இல்லை இப்போது. ராஜமார்த்தாண்டன் இறந்த மறு தினம் எனக்கு டோரண்டோவிலிருந்து திருமாவளவனிடமிருந்து தொலை பேசி வந்தது, நண்பர் மறைந்த இழப்பின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள.


ராஜமார்த்தாண்டன்
June 9th, 2009
ஜூன் ஏழாம்தேதி காலை ஆறுமணிக்கு வசந்தகுமார் சென்னையில் இருந்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் வந்துசேர்ந்தார். இரவெல்லாம் நல்ல மழை கொட்டிக்கொண்டிருந்தது. காலையிலும் மழை. நான் கார் வரச்சொல்லியிருந்தேன். வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பினோம். கிளம்பும்போதும் மழை. போகும்வழியிலேயே  அ.கா.பெருமாளை அவர் வீட்டில் இருந்து கூப்பிட்டுக்கொண்டோம்.

மழையிலேயே கன்யாகுமரி சாலையில்சென்றோம். சுசீந்திரத்தில் இருந்து மலர்மாலை வாங்கிக்கொணோம். சுசீந்திரம் கன்யாகுமரி சாலை மிக அழகானது. குளங்கள். நீர் நிறைந்து வழியும் ஓடைகள். மழைத்திரைக்கு அப்பால் ஓங்கிய மருத்துவாழ் மலை. ராஜமார்த்தாண்டன் அந்தமலைமீது சிறுவயதில் உச்சிவரை ஏறியதைப்பற்றி பலமுறை சொல்லியிருந்தார். மருத்துவாழ்மலையின் சிகரம் மிகச்செங்குத்தானது. சாகசக்காரர்கள் மட்டுமே ஏறமுடியும். சிறுவயதில் அண்ணாச்சி திடகாத்திரமானவர்.

கொட்டாரம் சந்திப்பில் திரும்பி சந்தையடி சாலையில் சென்று இடையன்விளை கிராமத்தை அடைந்தோம். ஏராளமான கார்கள். ஒருவேளை  அந்தக் கிராமத்தில் அப்படியொரு பெரும் மரியாதை எவருக்குமே கிடைத்திருக்காது. ராஜமார்த்தாண்டனை அவரது ஊரிலும் சரி குடும்பத்திலும் சரி சற்றே குறைத்துதான் மதிப்பிட்டிருந்தார்கள். அவரது பழக்கவழக்கங்கள்தான் காரணம். இலக்கியம் பற்றி அவர்களுக்கு தெரியாதே. அவர் புகழ்பெற்றவரும் அல்ல.  ஆனால் அவரது இரு பிள்ளைகளுக்கும் ஒரு தம்பிக்கும் அவரது இலக்கியம் பற்றி மதிப்பு இருந்தது

ராஜமார்த்தாண்டனின் மகள் திருமணத்துக்கு நாகர்கோயில் விஐபிகள் திரண்டுவந்ததும் அதன்பின் அவருக்கு நடந்த அறுபதாம் ஆண்டு நிறைவுவிழாவும் அவரைப்பற்றி உயிரெழுத்து வெளியிட்ட மலரும் எல்லாம் அவரை அவர்கள் கண்ணில் சட்டென்று வேறு ஒருவராகக் காட்டின என்று சொல்லலாம்.

சென்ற மார்ச் மாதம் இறுதியில் ராஜமார்த்தாண்டனின் மகன் திருமணம். அவர் நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் ஆசிரியர். அவர் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்ற வருத்தம் அண்ணாச்சிக்கு இருந்தது. ஆனால் அவர் கல்லூரியில் நன்றாகப் படித்துவேலைக்குப்போனதில் மனநிறைவு. கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு நானும் வேதசகாய குமாரும் நாஞ்சில்நாடனும் வந்திருந்தோம். அப்போதுதான் கடைசியாக இடையன் விளைக்கு வந்தேன்

அதன்முன்னர் பலமுறை நான் இடையன்விளைக்கு வந்திருக்கிறேன். முதல்முறையாக வந்தது அவரது தம்பி திருமணத்துக்கு. பதினைந்துவருடம் முன்பு. அண்ணாச்சி உடல்நிலை சரியில்லாமல் சென்னையில் இருந்து திரும்பிவந்து ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்து சற்றே குணமடைந்து ஊருக்குத் திரும்பியபோது வேதசகாயகுமாருடன் வந்தேன். தன் பிள்ளைகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை, செத்தால் மனசு ஆறாது என கண்ணீர் விட்டார்.

அண்ணாச்சி பிழைத்துக்கொண்டது அவரது சொந்த ஊரினாலும் மீனினாலும்தான். சென்னைதான் அவரைச் சீரழித்தது. மேன்ஷன் வாசம். தேடிவந்துகொண்டே இருக்கும் குடிகாரர்கள். சாப்பாடு இல்லாமை. ஊரில் மீனும் சோறும் அவரை தேற்றின.மேலும் அவர் காலச்சுவடில்செய்த வேலை அவரை மிக உற்சாகமாக வைத்திருந்தது. அவருக்கு கடைசி காலம் மிக மனநிறைவுடன் இருந்தது.

வேதசகாயகுமாரின் மகள் திருமணத்துக்கு மே 27 அன்று வசந்தகுமார் வந்திருந்தார். கல்யாணத்தன்று அண்ணாச்சியைப் பார்த்தேன். சென்ற ஐந்துவருடங்களில் அண்ணாச்சி உடல்நலம் தேறி பொலிவுடன் இருந்தார். முகத்தில் சிரிப்பு. புலித்தலைவர் பிரபாகரனின் மரணத்தில் கொஞ்சம் கலங்கினார் என்றார்.மற்றபடி எல்லாமே நிறைவாக முடிந்தது என்றார். பகல்முழுக்க விடுதி அறையில் நாஞ்சில்நாடன், குமரிமைந்தன், எட்வின்பிரகாஷ்,தேவதேவன், வசந்தகுமார் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கடைசியாக அப்போது பார்த்ததுதான் அண்ணாச்சியை.

உள்ளே சென்றோம். தமிழினி சார்பில் அ.கா.பெருமாள் அண்ணாச்சிக்கு மலர்மாலை வைத்தார். கூட்டத்தில் நாகர்கோயிலின் ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளும் இலக்கிய ஆர்வலர்களும் இருந்தார்கள். அண்ணாச்சிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கூட்டம் நடத்தியவரான  கொடிக்கால் சேக் அப்துல்லா,பொன்னீலன். கலையிலக்கிய பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோழர்கள். பேராசிரியர்கள்.

திருச்சியில் இருந்து கவிஞரும் காவலதிகாரியுமான சின்னச்சாமி உயிரெழுத்து ஆசிரியர் சுதீர்செந்தில், விமரிசகர் முருகேசபாண்டியன் ஆகி§யோர் வந்திருந்தார்கள். மதுரையில் இருந்து  தேவேந்திரபூபதியும் திரைநடிகரும் நாடக ஆர்வலருமான சண்முகராஜாவும் வந்திருந்தார்கள். கலாப்ரியா தென்காசியில் இருந்து வந்திருந்தார். சென்னையில் இருந்து தேவிபாரதி வந்திருந்தார். நாஞ்சில்நாடன் அவரது  இன்னொரு நண்பருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரவில்லை. சென்னையிலிருந்தமையால்  வேதசகாயகுமார் வரவில்லை.

அண்ணாச்சி 6 ஆம்தேதி காலை 11 மணிக்கு வழக்கம்போல காலச்சுவடு அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். சாலையைக் கடக்கும்போது ஏதோ கனத்த வாகனம் மெல்ல தட்டியிருக்கிறது. அந்த வண்டிக்கே அது தெரிந்திருக்குமோ தெரியவில்லை. சென்றுவிட்டது. அண்ணாச்சிக்கு சற்று காது மந்தம். உள்ளூர அடி. அங்கேயே விழுந்து இறந்திருக்கிறார். ஏராளமான குருதி வெளியேறியிருக்கிறது. அவர் கிடப்பதை அரைமணிநேரம் கழித்துதான்  அருகே ஜூஸ் விற்பவர்கள் கண்டிருக்கிறார்கள். உடனே காலச்சுவடுக்கு தகவல்சொல்லியிருக்கிறார்கள். கண்ணன் ஓடிவந்து பார்க்கும்போது ஏற்கனவே மரணம் நடந்துவிட்டது

உடனே அ.கா.பெருமாளுக்கு தகவல் சொன்னார் கண்ணன். பெருமாள் எனக்குச் சொன்னார். நான் அப்போது கணிப்பொறியில் இருந்தேன். செய்தியை போட்டுவிட்டு உடனே கிளம்பி மருத்துவமனைக்குச் சென்றேன். செல்லும்வழியிலேயே வசந்தகுமார் நாஞ்சில்நாடன் வேதசகாயகுமார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டே சென்றேன்.

ஆஸ்பத்திரியில் அண்ணாச்சி ஏற்கனவே பிணமாக அறிவிக்கப்பட்டு கிடந்தார். ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு பிரேதபரிசோதனைக்குக் கொண்டு சென்றார்கள். அண்ணாச்சியின் மருமகன் வந்துசேர்ந்தார். போலீஸ் வந்து வழக்கு பதிவுசெய்தார்கள். அண்ணாச்சியின் நண்பர்கள் மாறிமாறி ·போனில் அழைத்துக்கொண்டே இருந்தார்கள்.

மழைகொட்டிக்கொண்டெ இருந்தது. குடை இருந்தாலும் பாதி உடைகள் நனைந்துவிடன. எங்களூரில் சாவுக்கு மழைபெய்வது ஒரு நிறைவான விஷயம் என்ற நம்பிக்கை உண்டு. அண்ணாச்சியின் இந்துநாடார் குலவழக்கப்படி சொந்த நிலத்திலேயே புதைப்பது வழக்கம். ரயில்பாதை தாண்டி அவரது அப்பா அம்மா சமாதிகள் இருந்த தென்னந்தோப்புக்குள் அவர்களுக்கு அருகே அண்ணாச்சிக்கு குழி வெட்டப்பட்டிருந்தது. அங்கே அவரை அடக்கம்செய்தார்கள்.

நான் அண்னாச்சியை பார்க்கவேயில்லை. பொதுவாக நான் சடலங்களைப் பார்ப்பதில்லை. அவரது இனிய சிரிக்கும் முகம் என் மனதில் நிறைந்திருந்தால் போதும் என்று விட்டுவிட்டேன். அடக்கம் நடந்து முடிந்தபோது ஒவ்விருவராக கிளம்பினார்கள். நாங்கள் கிளம்பும்போது கொஞ்சநேரம் எங்காவது திறந்த வெளிக்குப் போகவேண்டும் போலிருந்தது. கன்யாகுமரிக்குச் சென்றோம்.

அலைகளே இல்லாத கடல். மழைக்காலத்துக்குரிய வெளிறிய நிறம். வசந்தகுமார் ”அவ்ளவுதான் ஜெயன்..ஒண்ணும் பெரிய விசயம் கெடையாது. மறந்துட்டு வாழ்க்கை போய்ட்டே இருக்கும்…”என்றார். நான் ஆம் என்றேன்.

மாலை வசந்தகுமார் ஏற்கனவே பதிவுசெய்திருந்த 5 மணிக்கு ரயிலில் கிளம்பினார். நெய்தல் கிருஷ்ணனும் காலச்சுவடும் இணைந்து அண்ணாச்சிக்கு ஒரு அஞ்சலிக்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். நான் அதற்குச் சென்றபோது பாதியாகிவிட்டிருந்தது. அ.கா.பெருமாள் பேசிக்கொண்டிருந்தார். அண்னாச்சியைப் பற்றிசில சொற்கள் சொன்னேன். நானே நினைத்துக்கொள்ளக்கூடிய சில சொற்கள். இன்னும் பலவருடங்களுக்கு.

ராஜமார்த்தாண்டன் 60- விழா
July 28th, 2008
விழா

இலக்கிய விமரிசகரும், சிற்றிதழாளரும், கவிதைவரலாற்றாசிரியருமான ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் நாகர்கோயில் ஆர்.ஓ.ஏ.கலையரங்கத்தில் 26-7-08 மாலை ஆறுமணிக்குத்தொடங்கியது. நாஞ்சில்நாடன் கோவையில் இருந்துவந்து வடிவீஸ்வரத்தில் அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்தார். நான் அலுவலகத்தில் இருந்து முன்னரே வந்து குளித்து உடைமாற்றி ஒரு ஆட்டோவில் ஏறி அவரது வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் இருவரும் அரங்குக்கு வந்தோம். அங்கு குளச்சல் மு யூசுப் போன்ற நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

ஆறுமணியளவில் மெல்ல மெல்ல கூட்டம்சேர ஆரம்பித்தது. நாகர்கோயிலின் இலக்கிய நண்பர்கள் பெரும்பாலானவர்கள் வந்தார்கள். ஏறத்தாழ அறுபதுபேர். ராஜமார்த்தாண்டன் தன் மனைவி மகனுடன் வந்தார். அவருக்கு இரு குழந்தைகள். மகள் அஜிதா திருமணமாகி சென்னையில் இருக்கிறாள். ஒரு குழந்தை இருக்கிறது. மகன் திருச்செங்கோடு கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.

நிகழ்ச்சிக்கு நாகர்கோயிலின் மூத்த அறிஞர்களில் ஒருவராகிய கொடிக்கால் அப்துல்லா தலைமை ஏற்றார். குமரிமாவட்ட உருவாக்கத்துக்கான போராட்டங்களிலும் பின்னர் இடதுசாரி இயக்கங்களிலும் ஈடுபட்டு சிறைசென்றவர் [அப்போது கொடிக்கால் செல்லப்பா] சுந்தர ராமசாமியின் நண்பர். 2001ல் ராஜமார்த்தாண்டனுக்கு அவரே ஒரு பாராட்டுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்.

அறிமுக உரை வாசித்த நெய்தல் கிருஷ்ணன் ராஜமார்த்தாண்டனுடனான அறிமுகம் சுந்தர ராமசாமி வழியாக உருவாயிற்று என்று நினைவுகூர்ந்தார். சார் என்று அழைக்கத்தொடங்கி மெல்ல மெல்ல ஓய் என்று அழைக்குமளவுக்கு நெருங்கி வந்த உறவு அது என்றார். விழாவை முனைவர் அ.கா.பெருமாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கொடிக்கால் தன் தலைமை உரையில் இங்கே கூடியிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வழியமைத்தது சுந்தர ராமசாமியின் ஆளுமையும் அவரது இல்லமும்தான் என்று சொல்லி அவரை இன்று நாம் நினைவுகூரவேண்டும் என்றார். ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கொடிக்கால் ‘புதுமைத்தாய்’ என்ற இதழை வெளியிட காலத்தில் அதில் அன்று மாணவராக இருந்த ராஜமார்த்தாண்டன் தன் ஆரம்பகால கவிதைகளை வெளியிட்டிருக்கிறார் என்று நினைவுகூர்ந்தார்.

மொழிபெயர்ப்பாளரும் பிரதிமேம்படுத்துநருமான எம்.எஸ். தன் வாழ்த்துரையில் நண்பனை பிறரிடம் புகழவேண்டும் என்ற விதி ஒன்று உள்ளது. அனேகமாக தினமும் சந்திக்கும் நண்பராக இருக்கும் ராஜமார்த்தாண்டன் மேல் தனக்கிருக்கும் மதிப்பையும் பிரியத்தையும் சொல்ல இந்த மேடை ஒரு வாய்ப்பளிக்கிறது, அதற்கான இந்த சந்தர்ப்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்

நாஞ்சில்நாடன், அவரும் ராஜமார்த்தாண்டனும் அ.கா.பெருமாளும் எம்.வேதசகாயகுமாரும் பேராசிரியர் ஆறுமுகம்பிள்ளையும் [ராஜேந்திரன்] தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஒருசாலை மாணாக்கர்கள் என்றார். ஆனால் ராஜமார்த்தாண்டனுடன் நட்பு ஏற்பட்டது ‘தலைமீழ் விகிதங்கள்’ நாவலுக்கு சுந்தர ராமசாமி காகங்கள் அமைப்பில் நடத்திய விமரிசனக்கூட்டத்தில்தான். அன்று பொதுவாக எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. மறுநாள் சுந்தர ராமசாமியிடம் ‘நீங்கள் கடுமையாக விமரிசிக்கும்போது வருத்தமாக இல்லை, ஆனால் இவர்கள் விமரிசிக்கும்போது இவர்களெல்லாம் யார் என்று தோன்றுகிறது’ என்று சொன்னார். சுந்தர ராமசாமி அவர்கள் நாஞ்சில்நாடனின் எழுத்தின் மீதும் அவர் மீதும் அவரைவிட அதிகமாக பற்றி வைத்திருக்கிறார்கள் என்றும் விமரிசனம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து எழுவதே என்றும் சொன்னார். அந்தக் கூட்டத்தில்தான் கறாரான விமரிசகராக ராஜமார்த்தாண்டன் அறிமுகமானார்

ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதழ்கள் நடத்தியிருக்கிறார். பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால் கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருக்கிறது.  சென்னையில் இருந்த காலகட்டங்களில் குடிப்பழக்கத்தால் உடல் நலம் நேரம் ஆகியவற்றை பெரிதும் இழந்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்னர் அவர் மிக அபாயகட்டத்தில் இருந்தார். அத்துடன் குடும்பகவலைகளும் அவரை வாட்டின. இப்போது உடல்நலம் சீரடைந்துள்ளது. குடும்பநிலை சிறப்பாக இருக்கிறது. இப்போது அவர் முகத்தில் உள்ள ‘தெளிச்சம்’ எப்போதும் இருந்தது இல்லை. இனி அவரிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகள் வரவேண்டும் என்றார்.  பூமிக்கு நிலவு 61 சதவீத முகத்தை மட்டுமே காட்டுகிறது, மீதி பகுதி காட்டப்படுவதேயில்லை. ராஜமார்த்தாண்டன் தன் முழுமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அது வெளிப்படவேண்டும் என்றார் நாஞ்சில்நாடன்.

சுரேஷ் குமார இந்திரஜித் ராஜமார்த்தாண்டன் மதுரையில் தினமணி  உதவியாசிரியராக வேலைபார்த்த நாட்களில்தான் தனக்கு அறிமுகமாகி குடும்ப நண்பராக ஆனார் என்றார். அப்போது யாத்ரா இதழை நடத்திக் கொண்டிருந்த ஜெயபால், மணி ஆகியோருடன் இணைந்து அவரை சந்திக்க நேர்ந்தது. ஒரேதெருவில் வசித்தோம். இலக்கிய விவாதம் செய்வோம். ஒரு கட்டத்தில் ஒரு இலக்கிய அமைப்பை  உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து சந்திப்பு என்ற நிகழ்ச்சியை  நடத்த ஆரம்பித்தோம். அப்போது இரு பதிப்பகங்கள் மட்டுமே இலக்கிய நூல்களை வெளியிட்டன. க்ரியா ஒருசிலரது நூல்களை மட்டுமே வெளியிடும். ஆகவே அன்று இலக்கிய வெளியீட்டகமாக அணுகக்கூடியதாக இருந்தது மீரா நடத்திய ‘அன்னம்’ மட்டுமே. அன்னத்தின் புத்தக விற்பனைநிலையம் ஒன்று மேலமாசி வீதியில் ஒரு மாடியில் இருந்தது.  அங்கே கூட்டங்களை நடத்தினோம்.

சுந்தர ராமசாமி பங்கேற்ற ஒருசந்திப்புக்கு அறைகொள்ளாத கூட்டம் வந்தது. அதைத்தொடர்ந்து காலச்சுவடு இதழுக்கு ஒரு  இதழ் அறிமுகக் கூட்டமும் நடத்தினோம். உடனே ராஜமார்த்தாண்டன் அவரே பிரமிள் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். நான் பிரமிளை அப்படித்தான் சந்தித்தேன். பிரமிளுக்கு போடப்பட்டிருந்த அறையில் நானும் என் நண்பர் ஒருவருமாகச் சென்றபோது அவர் கையில் டீ கோப்பையுடன் உலவிக் கொண்டிருந்தார். என்னை பொருட்படுத்தவேயில்லை. சற்றுநேரம் பொறுத்தபின் நானும் நண்பரும் அறையில் கிடந்த ஒரு செஸ் பலகையை எடுத்து வைத்து விளையாட ஆரம்பித்தோம். பிரமிள் சற்றுநேரம் கழித்து அதை கவனித்தார். அருகே வந்து அமர்ந்து ஆலோசனைகள் சொன்னார். அப்படி அவர் எங்கள் உலகில் நுழைந்தார்

பிரமிள் சுந்தர ராமசாமியையும் வெங்கட் சாமிநாதனையும் கடுமையாக வசைபாடுவார். ராஜமார்த்தாண்டன் அதை ஏற்பவர் அல்ல. ஆனால் மாற்றுக்கருத்து சொல்பவனை பிரமிள் வெறுத்து ஆவேசமாகத் திட்டுவார். நாம் கேட்கமட்டுமே செய்ய வேண்டும். ஆனால் ராஜமார்த்தாண்டன் தன் கருத்தை தெளிவாகச் சொல்லிவிட்டு மௌனமாக இருப்பார். பிரமிள் ஊசி ஏற்றியபடியே இருந்தாலும் அசர மாட்டார். கடைசிவரை இம்மூவருடனும் ஒரே நட்புடன் இருந்தார் ராஜமார்த்தாண்டன். அதுவே அவரது இயல்பு என்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.

கவிஞர் சுகுமாரன், நான் அண்ணாச்சி என்று அழைப்பது இருவரையே. ஒருவர் விக்ரமாதித்யன் இன்னொருவர் ராஜமார்த்தாண்டன். இருவரும் பல ஒற்றுமைகள் கொண்டவர்கள். முறைபப்டி தமிழ் கற்று மரபிலக்கிய அறிமுகம் கொண்டவர்கள். இருவருமே வேட்டியுடன் காணப்படுபவர்கள்.இருவருமே தாடி வைத்தவர்கள். இருவருமே குடிகாரர்கள். என் வளர்ச்சியில் இருவருக்கும் ஒரு பங்குண்டு. என் முதல் தொகுப்பை வெளியிட ஊக்கபப்டுத்தி பிழைநோக்கியும் அளித்தவர் விக்ரமாதித்யனே. என் முதல் தொகுப்புவந்ததும் அதைக் கவனித்து கொல்லிப்பாவையில் முதல் விமரிசனம் வெளியிட்டவர் ராஜ மார்த்தாண்டன்

கடந்த பலவருடங்களில் ராஜமார்த்தாண்டன் எனக்கு தொடர்ந்து இலக்கிய முக்கியத்துவம் அளித்துஎ ழுதியிருக்கிறார். ஆரம்பகால காலச்சுவடு இதழில் அவர் நம்பிக்கையூட்டும் மூன்று கவிஞர்கள் என நான் ராஜசுந்தரராஜன் சமயவேல் ஆகியோரைப்பற்றி முக்கியமான ஒரு கட்டுரையை எழுதினார். எங்களில் பிற இருவரும் அதிகமாக எழுதவில்லை. ஆனால் கவிதையை ஒரு வாழ்வுமையமாகக் கொள்ள எனக்குத்தூண்டுதலாக இருந்தது அந்தக் கட்டுரையே.

பலவருடங்களுக்கு முன் மா.தட்சிணாமூர்த்தி காமத்தை மையமாக்கி ‘திவ்யதரிசனம்’ என்ற கவிதைநூலை கொண்டுவந்தபோது சுந்தரராமசாமியிடம் நான் அந்நூலை விமரிசனம்செய்து பேசினேன். அப்போது ராஜமார்த்தாண்டன் அதை நியாயப்படுத்தினார். பிறகு கேள்விப்பட்டேன் அந்நூலை வெளியிட்டது மட்டுமல்ல அட்டைப்படம் வரைந்ததும் ராஜமார்த்தாண்டன் தான் என்று. ஓவியம் கவிதை இரண்டுக்குமே நல்லகாலமாக ராஜமார்த்தாண்டன் கவிதைவிமரிசனத்துக்கு வந்து சேர்ந்தார்.

ராஜமார்த்தாண்டன் என் கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறவர். ஆனால் அவ்வப்போது நாங்கள் கடுமையாக முரண்படுவதும் உண்டு. உதாரணமாக அவரது ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ பற்றி நான் காலச்சுவடு இதழில் கடுமையாக விமரிசனம் எழுதியிருந்தேன். அவர் அதிலேயே அதற்கு மறுப்பும் எழுதியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு விவாதம் கடும் மனக்கசப்பில் முடிவதே வழக்கம். ஆனால் இப்போது அவர் எனக்கு அண்ணாச்சிதான் என்றார் சுகுமாரன்.

விமரிசகரான ந.முருகேசபாண்டியன் மதுரையில் இருந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் தன்னுடைய குடும்ப நண்பராக இருந்தவர் என்றார். ஆனால் அதற்குமுன்னரே ராஜமார்த்தாண்டன்னை தெரியும் அவர் ஆய்வுமாணவராக இருந்த நாட்களில், 36 வருடம் முன்பு, கோகயம் என்ற சிற்றிதழை நடத்தினார். அதற்கு நானும் சமயவேலும் சந்தா செலுத்தினோம். ஒரு விமரிசகனாக நான் உருவாவதற்குக் காரணமே ராஜமார்த்தாண்டன்தான். நான் குற்றாலத்தில் அவரை சந்தித்தபோது சுரேஷ்குமார இந்திரஜித் கதைக¨ளைப்பற்றி அவருக்கு நான் எழுதிய நீண்டகடிதத்தை அவரிடம் சுரேஷ் காட்டினார். அதை ராஜமார்த்தாண்டன் வாங்கி பையில் வைத்துக் கொண்டார். அது தினமனி கதிரில் ஒரு மதிப்புரையாக வெளிவந்தது. அது எனக்களித்த தன்னம்பிக்கையினால்தான் நான் தொடர்ந்து எழுதினேன்.

ராஜமார்த்தாண்டன் தன் இலக்கிய நிலைபாடுகளைச் சொல்வதில்லை. அவருடையது ரசனை சார்ந்த விமரிசனம். அவ்விமரிசனத்துக்கு எதிரான ஒரு அலை தமிழில் எழுந்தபோதும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. எழுதுவது சிக்கலாக இருந்தால்தான் விமரிசனம் என்ற நிலை தமிழில் உருவானபோதும் அவர் பொருட்படுத்தவில்லை. தன் ரசனையிலும் வெளிப்பாட்டிலும் உறுதியாக இருந்தார் . அதுவே அவரது விமரிசன பங்களிப்பை உருவாக்கியது என்றார் முருகேச பாண்டியன்.

கடைசியாக நான் பேசினேன். ராஜமார்த்தாண்டனை ஒரு கவிதை விமரிசகராகவே முன்னிலைப்படுத்துவதாகச் சொன்னேன். அவரது ‘தமிழ் புதுக்கவிதை வரலாறு’ ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ ஆகியவை முக்கியமான நூல்கள். க.நா.சு வழிவந்த ரசனை விமரிசகர் ராஜமார்த்தாண்டன். தன் தேர்வுகளையும் ரசனையையும் மட்டும் சொல்லிவிட்டு ஆய்வையும் அலசலையும் நிகழ்த்துவதில் இருந்து விலவிநிற்கும் முறை இது. இவ்வகை ஆய்வு வெறும் சிபாரிசு என்று தோன்றலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த தேர்வுகள் முன்வைக்கப்படும்போது திட்டவட்டமான ஓர் அழகியல் கோணமும், அதன் பின்னால் உள்ள ஆளுமையும் தெளிவடைந்து வருகின்றன. அதுவும் முக்கியமான ஓர் இலக்கிய விமரிசன முறையே.

ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் விவாதமும்புரிந்திருக்கிறார். ஆனால் நான் கவிதை பற்றி என் முதல் நூலை எழுதியபோது [உள்ளுணர்வின் தடத்தில், தமிழினி] அவருக்குத்தான் அந்நூலை சமர்ப்பணம் செய்தேன். வாசகனாக எந்தவிதமான தடையும் தராமல் படைப்பின் முன் நிற்பது என்பதே ராஜமார்த்தாண்டன் முன்வைக்கும் விமரிசன முறையாகும் என்றேன்

ராஜமார்த்தாண்டன் தன் ஏற்புரையில் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்பதனால் தன்னை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார். விவசாயியாக இருந்த தன் தந்தை கடுமையான உழைப்பினால் தன்னை அறிவார்ந்த வேலைக்குப் போகச்செய்ததை நினைவுகூர்ந்தார். இலக்கிய அறிமுகம் செய்து ஆளாக்கியவர் பேராசிரியர் ஜேசுதாஸன். இலக்கிய ஆசானாக இருந்தவர்கள் பிரமிள்,சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் ஆகியோர். ஓர் இலக்கிய ஆளுமையாக அறிமுகமாகி நெருக்கமான முன்னோடியாக வழிநடத்தியவர் ஜெயகாந்தன்.

தினமணி வேலைக்கு உதவியவர்கள் விக்ரமாதித்யன், வண்ணநிலவன்,அசோகமித்திரன் ஆகியோர். இலக்கிய நண்பர்களாக நெடுங்காலம் விளங்கியவர்கள் கட்டைக்காடு ராஜகோபாலன், எம்.வேதசகாயகுமார் ஆகியோர். சென்னை நாகராஜ் மேன்ஷனில் நெடுங்காலம் தங்கிய நாட்களில் அங்கே இலக்கிய விவாதங்களை அனுமதித்தவர் உரிமையாளர் நாகராஜ். ஒரு எழுத்தாளனாக உருவாகி அறியபப்ட்டிருப்பதற்குக் காரணமானவர் பதிப்பாளர் ‘தமிழினி’ வசந்தகுமார் .அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

தன்னுடைய குடும்பத்தை குறிப்பிட்ட ராஜமார்த்தாண்டன் தன் குடும்பத்திற்கு உருப்படியாக எதுவுமே செய்யாதவராக தான் ஆகிவிட்டதை வருத்தமான குரலில் சொன்னார். தன் மனைவிக்கு தன் மேல் கடுமையான கோபங்களும் வருத்தங்களும் இருந்தால் அது நியாயமே. ஆனால் அவர் மீது தனக்கு நன்றியே உள்ளது. ஒரு தந்தையாக எதுவுமே செய்யாவிட்டாலும்கூட தன்மேல் அளவற்ற பிரியமும் மரியாதையும் வைத்திருக்கும் பிள்ளைகளும் நன்றிக்குரியவர்களே என்று சொன்னபோது கண்ணீர் மல்கினார்.
 
எட்டரை மணிக்கு விழா முடிந்தது. விழாவில் குமரிமாவட்டத்தின் சிறப்புப்பானமாகிய சுக்குப்பால் அளிக்கப்பட்டது.

உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்
August 5th, 2008
தமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை.

உள்ளே சுகுமாரன் எழுதிய ‘நண்பர் அண்ணாச்சி’ என்ற கட்டுரை முதலில் உள்ளது. ராஜமார்த்தாண்டன் தினமனியில் உதவியாசிரியராக இருந்த காலகட்டத்தில் மாலன், ஞாநி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து அளித்த ஊக்கத்தால் முக்கியமான மொழியாக்கங்களையும் கவிதைகளையும் தினமணி இதழில் கொண்டுவந்ததையும் சிறந்த பேட்டிகளை வெளியிட்டதையும் சுகுமாரன் நினைவுகூர்கிறார்.

‘ராஜமார்த்தாண்டனின் விமரிசனப்போக்குகள்’ என்ற கட்டுரையை ந.முருகேசபாண்டியன் எழுதியிருக்கிறார். மேலைநாட்டுத் திறனாய்வுப்போக்குகளை அப்படியே இலக்கியத்தில் போட்டுப்பார்க்கும் போக்கு கல்வித்துறையில் இருந்தது. அவர்கள் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை மேற்கோள்காட்டினார்கள். அப்போக்கு சிற்றிதழில் ஊடுருவி ·பூக்கோ போத்ரியா என்று மேற்கோள் காட்டும் போக்கு உருவானது. அது எதையுமே கோட்பாடாக்கும் முறைக்கு வழிவகுத்தது. அதற்கு எதிராக தன் ரசனையின் பலத்தில் நின்ற விமரிசகர் என்று ராஜமார்த்தாண்டனை அவர் வரையரைசெய்கிறார்

சுரேஷ்குமார இந்திரஜித் ‘ராஜமார்த்தாண்டன் 60 ‘ கட்டுரையில் ராஜமார்த்தாண்டனுக்கும் தனக்குமான நட்பையும் ராஜமார்த்தாண்டனின் அலைபாயும் ஆளுமையையும் நினைவுகூர்கிறார்.’ராஜமார்த்தாண்டன் ,வாழ்வும் கவிதையும்’ என்ற கட்டுரையில் இரத்தின கரிகாலன் விட்டேற்றியானனாஅளுமை கொண்ட ராஜமார்த்தாண்டன் தொடர்ந்து பறவைகளைப்பற்றி எழுதுவதில் உள்ள நுட்பத்தை சுட்டிககட்டி அவரது கவிதைகளை ஆராய்கிறார்.

சிபிச்செல்வன் ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்ற கட்டுரையில் நகரத்தில் வசித்தும் நகரத்துடன் ஒட்டாமல் அதை வேடிக்கை பார்க்கும் ஒரு கவிஞனின் குரலாக ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பேசுகின்றன என்று கண்டுகொள்கிறார். ‘நேர் கொண்ட அகம்’ என்ற கட்டுரையில் ‘காலச்சுவடு’ கண்ணன்  சுந்தர ராமசாமிக்கும் ராஜமார்த்தாண்டனுக்கும் இடையே இருந்த உறவையும் தனக்கும் அவருக்குமான நட்பையும் பற்றிச் சொல்கிறார்.

ஓசையின்றி செயல்பட்டுவந்த ஒரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்ட இம்மரியாதை முக்கியமானது. பாராட்டுக்குரியது.

தொடர்புக்கு

uyirezhutthu@gmail.com

கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
July 29th, 2008
மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம்.

என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான்  சமர்ப்பணம் செய்தேன். இந்த அவையில் அவரை வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

ராஜமார்த்தண்டன் கவிதைகள், பிற திறனாய்வுகள் எழுதியிருந்தபோதிலும் அவரை அடிப்படையில் ஒரு கவிதைவரலாற்றாசிரியராகவும் கவிதைத்திறனாய்வாளராகவுமே நான் மதிப்பிடுகிறேன். அவரது ‘தமிழ் புதுக்கவிதை வரலாறு’ ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ ஆகியவை முக்கியமான நூல்கள். ராஜமார்த்தாண்டனை கோட்பாடற்ற திறனாய்வாளர் என்று சொல்லலாம்.

வளரும் குழந்தைக்குச் சட்டை தைப்பது போன்றது இலக்கியப்படைப்புகளை கோட்பாடு சார்ந்து அணுகுவது. துல்லியமாக அளர்ந்து நேர்த்தியாக நாம் சட்டை தைக்கலாம். தைக்கும்போதே குழந்தை வளர்ந்து உருமாறிக் கொண்டிருக்கிறது. குழந்தை என்பதே ஒரு தொடர்நிகழ்வுதான். உண்மையில் குழந்தைமைதான் உள்ளது, குழந்தை என நாம் அதைத்தான் சொல்கிறோம். சட்டைகளை குழந்தைகள் ஒவ்வொருகணமும் மீறிச்செல்கின்றன. ஆகவேதான் கவிதைகள் பற்றிய பலநூறு கோட்பாடுகளை நாம் இப்போது காண்கிறோம். கவிதையை விளக்க அவை போதவில்லை என புதிய கோட்பாடுகளை தேடிச் செல்கிறோம்.

இலக்கியத்தின் மீது போடப்படும் கோட்பாடுகள் பலவகை. அரசியல் கருத்தியல்கள் சார்ந்து இலக்கியத்துக்கு உருவாக்கப்படும் கோட்பாடுகள் உண்டு.சமூகவியல், உளவியல், மொழியியல் போன்ற பிற அறிவுத்துறைகளின் கோட்பாடுகள் இலக்கியத்தின்மீது செயல்படுத்தப்படுவதுண்டு. பெரும்பாலான கோட்பாடுகள் இலக்கியத்தை இலக்கியமல்லாத அறிவுத்துறைகளுடன் உரையாடவைக்க முயல்கின்றன.

இக்கோட்பாடுகள் இலக்கியத்தை இறுக்குகின்றன, குறுக்குகின்றன என்ற எண்ணம் இலக்கியவாதிகளிடம் எப்போதுமே உண்டு. நம்முடைய படைப்பொன்று கோட்பாட்டு விமரிசனத்துக்கு ஆளாகும்போது எப்போதுமே நாம் துணுக்குறுகிறோம். பறந்து கொண்டிருப்பது ஊர்ந்துசெல்ல ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். ஆகவேதான் இலக்கியத்தை இலக்கியத்திற்குள் வைத்து மதிப்பிடும் அழகியல் விமரிசன முறைமைகள் உருவாயின. தொன்மையான இலக்கண விமரிசனமுறை ஒன்று  எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது. இன்றைய அழகியல் திறனாய்வுமுறை பிரிட்டிஷ் இலக்கிய விமரிசனத்தில் இருந்து உருவானது. அதை உருவாக்கியவர்கள் கூல்ரிட்ஜ், ஜான்ஸன் போன்ற இலக்கியவாதிகள்.

அழகியல் விமரிசனம் என்பது பெரிதும் அகவயமானது. இலக்கியம்போன்ற ஒரு படைப்புச் செயல்பாடு அது. மொழிவெளிப்பாட்டின் நுட்பத்தாலேயே நிலைநிற்பது. அதற்கு எதிரான புறவய அணுகுமுறை எப்போதும் இலக்கியத்தளத்தில் உண்டு.  முன்னர் தத்துவம் சார்ந்து புறவய அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் மொழியியல் சார்ந்து. ஆனால் எப்போதுமே அது இலக்கியத்தின் அடிப்படைகளைச் சார்ந்து அழகியல் விமரிசனமுறை வலுவாக இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அது வாசகனின் ரசனையை விமரிசகனின் ரசனை சந்திக்கும் ஒரு புள்ளியில் இயங்குகிறது.

இலக்கியத்தை இலக்கியத்திற்குள் வைத்து அணுகும் போக்கிலும் கோட்பாட்டு அணுகுமுறை உருவாகிறது. அதை அழகியல் கோட்பாடுகள் எனலாம். அழகியல் கருதுகோள்கள் இலக்கியத்தில் இயல்பாக உருவாகின்றன. அவற்றை ஒரு நிலையான அளவுகோலாகக் கொள்ளும்போது, அவற்றை வைத்து அனைத்தையும் புறவயமாக மதிப்பிட ஆரம்பிக்கும்போது அவை கோட்பாடுகளாக ஆகிவிடுகின்றன. இது நவீனத்துவம், இது பின் நவீனத்துவம், இது செவ்வியல், இது மீமெய்யியல் என்றெல்லாம் வகுத்து ஆராய முற்படும் விமரிசகன் அவற்றை கோட்பாடுகளாக ஆக்குகிறான். அந்த கோட்பாட்டு அளவுகோல்களுக்கு அப்பால்தான் இலக்கியப் படைப்பின் பெரும்பகுதி விரிந்துகிடக்கும்.  அவற்றை வெறும் அறிதல்முறைகளாக, கருவிகளாக காண்பவனே அழகியல் விமரிசகனாக முடியும்.

இந்த இருவகைக்கும் இருவரை உதாரணங்களாகச் சொல்ல முடியும். சி.சு.செல்லப்பா அழகியல் விமரிசனத்தை அழகியல்கோட்பாட்டு விமரிசனமாக மாற்றிக் கொண்டவர். அவருக்கு படைப்பை புரிந்துகொள்வதை விட வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் அதிகமிருந்தது. பொதுக்கூறுகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கொண்டு படைப்புகளை இன்னவகை என்று அடையாளப்படுத்தவே அவர் அலசல் விமரிசனத்தை கையாண்டார்.

மாறாக க.நா.சு இலக்கிய விமரிசனத்தை தன் ரசனையின் தளத்தில் மட்டுமே நிறுத்திக் கொண்டவர். அவருக்கும் இலக்கியக் கருதுகோள்களில் ஆர்வம் உண்டு. இந்தப்படைப்பில் ஒரு சர்-ரியலிசத்தன்மை உண்டு என்று சொல்வார், இது ஒரு சர்-ரியலிச படைப்பு என்று சொல்லமாட்டார். தன் ரசனையின் முடிவுகளை மட்டுமே முன்னிறுத்துவார். க.நா.சுவின் வழிவந்தவர் என்று சுந்தர ராமசாமியைச் சொல்லலாம். ராஜமார்த்தாண்டன்  அந்த மரபை முழுமையாகச் சார்ந்தவர். சுந்தர ராமசாமி தன் தேர்வுக்கான காரணங்களை விளக்க முயன்றார். ஆனால் அவருக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. தத்துவம் போன்ற பிற துறைகளில் விரிவான அறிமுகமும் இல்லை. ஆகவே அவை தன் மொழியின் நுண்ணிய சாத்தியங்களைக் கொண்டு தன் அகவய இயக்கத்தை விளக்க முயலும் யத்தனங்களாகவே நின்று விட்டன.

மாறாக ராஜமார்த்தாண்டன் தெளிவாக தன் ரசனையின் தேர்வுகளை மட்டுமே முன்வைக்கிறார் என்பதைக் காணலாம். அதற்கான காரண காரியங்களை விளக்க அவர் முனைவதில்லை. தன் தேர்வுகளை தீர்ப்புகளாக்க முனைவதில்லை. ஆகவே முழுக்க முழுக்க கோட்பாடற்ற ஒரு இடத்தில் நின்று அவர் தன் இலக்கிய விமரிசனத்தைச் செய்கிறார்.

ஒருவகையில் இது வெறும் பட்டியல், அல்லது ரசனைக்குறிப்பு, இலக்கிய விமரிசனம் அல்ல என்று சொல்லலாம். ஆனால் தமிழ் விமரிசகர்களில் நல்ல படைப்புகளை இனம்கண்டுகொண்டு முன்னிறுத்துவது, நல்ல படைப்புகளின் ஆத்மாவை வாசகனுக்கு உணர்த்துவது இரண்டிலும் க.நா.சுவுக்கு இணையாக எவருமே இல்லை என்பதையே இன்றைய வரலாறு காட்டுகிறது. அழகியல் விமரிசகரான சி.சு.செல்லப்பா ரசனை ரீதியாக பிழைகள் மலிந்தவராகவே தென்படுகிறார். அதேசமயம் நம் கோட்பாட்டு விமரிசகர்கள் முற்றிலும் ரசனைகெட்டவர்களாக, கனியிருப்ப தவறாமல் காய் கவர்பவர்களாக, இலக்கிய நிராகரிப்பாளர்களாக, ஏதாவது ஒரு புதிய கோட்பாட்டுக் கருவியை கண்டெடுத்து இலக்கியவாதிகளை சிறுமைப்படுத்துபவர்களாக மட்டுமே காணக்கிடைக்கிறார்கள். ரசனை விமரிசனம் மீது ஆழமான நம்பிக்கை¨யை நம்மில் உண்டுபண்ணுபவர்கள் இவர்களே.

சுந்தர ராமசாமி முன்பு ஒருமுறை நம் மரபில் இலக்கியவிமரிசனம் இல்லை என்று எழுதியிருந்தார். அதைப்பற்றி நான் அவரிடம் உரையாடியிருக்கிறேன். நம் மரபில் தொகுப்புமுறை உள்ளது. உரை மரபு உள்ளது. இரண்டும் நமக்குரிய விமரிசன முறைகளே. மேலைச்சிந்தனையிலும் இன்றைய இலக்கிய விமரிசனமுறை மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் உருவானதே. சொல்லப்போனால் பொருளியலாளர்களான ஜெ.எஸ்.மில் போன்றவர்கள் பொருளியல் கட்டுரைகளின் அறிவியல்தர்க்க முறை சார்ந்த உரைநடையில் இலக்கியத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் இன்றைய விமரிசன முறை உருவாகி வந்தது.

ஒரு ஒட்டுமொத்த மரபில் இருந்து நாநூறு பாட்டுகளை தேர்வுசெய்து அகநாநூறு என்றோ நற்றிணை என்றோ தொகுப்பவர்களின் பிரக்ஞையில் தெளிவான ரசனையும் அளவுகோலும் உள்ளது. அதை அவர்கள் பதிவுசெய்யாமலிருந்தாலும் இன்றும் நாம் அதை அந்நூல்கள் வழியாகவே தெளிவாகக் காணலாம். இன்று ராஜமார்த்தண்டன் செய்வதும் அத்தகைய ஒரு மறைமுக விமரிசனச் செயல்பாட்டையே. ஒருவர் தொடர்ச்சியாக தன் தேர்வுகளை மட்டும் முன்வைத்துவந்தால் ஒரு கட்டத்தில் அது திட்டவட்டமான ஒரு விமரிசன நிலைபாடாக மாறி விடுகிறது. துல்லியமான ரசனையை வெளிக்காட்டுவதாக அமைகிறது. அதன் பின்னால் உள்ள ஆளுமையைக் காட்டுகிறது.

அந்த ரசனையை அவர் விளக்க ஆரம்பித்தால் கோட்பாடுகளை நோக்கிச் செல்லக்கூடும். ஒரு கவிதையை அவர் ரசிப்பதை நியாயப்படுத்தினால் அதற்கு நேர்மாறான ஒரு கவிதையை அவர் ரசிக்கமுடியாமல் ஆகக்கூடும். அவரது சொந்த விளக்கங்களே அவரை கட்டுப்படுத்தக் கூடும். கையறுநிலையிலும் இயற்கை வருணனையை நிரப்பி வைக்கும் புறநாநூறு பாடல்களை தொகுத்த அதே மனம்தான் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ போன்ற ஒரு எளிமையான பாடலையும் உள்ளே சேர்த்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய தன்னிச்சையான தேர்வு சாத்தியமில்லாமல் ஆகக்கூடும்.

யோசித்துப்பாருங்கள் , அன்றைய தொகுப்பாளர் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அக்கவிதைகளைத் தொகுத்திருந்தால் அந்தக் காலமே வரலாற்றிலும் இல்லாமல் ஆகிவிட்ட இன்று அந்தக் கவிதைகள் எப்படி பொருள்பட்டிருக்கும்? ஒரு தலைமுறைக்குமேல் நீளும் இலக்கியக் கோட்பாடு என ஏதுமில்லை. இன்றைய சூழலில் பத்துவருடம்கூட கோட்பாடுகள் நீடிப்பதில்லை. ஆனால் இலக்கியப்படைப்புகள் சாதாரணமாக பல தலைமுறைகளைத் தாண்டிச் செல்லக்கூடியவை. பத்துவருடம் முன்பு இங்கே அமைப்புவாத கோட்பாடுகள், பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை குத்துமதிப்பாக புரிந்துகொண்டவர்கள் அவையே சிந்தனையின் கடைசிப்படி என்று உற்சாகக்குரல் எழுப்பினார்கள். இன்று அவை பழங்கதைகளாக ஆகிவிட்டிருக்கின்றன. புதிய கோட்பாடுகள் பேசப்படுகின்றன. அன்று அந்தக் கோட்பாடுகளைக் கொண்டு ஒரு இலக்கியத்தெரிவு மேற்கொண்டிருந்தால் இன்று என்ன பொருள் அவற்றுக்கு?

கோட்பாட்டு விமரிசனத்தை நான் நிராகரிக்கவில்லை. அதன் எல்லைகளைப் பற்றி மட்டுமே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு விமரிசனம் இலக்கியத்தின் ஒரு பகுதியை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது, கவனப்படுத்துகிறது. இலக்கியம் அதுமட்டுமல்ல என்ற போதத்துடன் அதை ஒருவர் கையாள்வார் என்றால் அது பயனுள்ள கருவியே ஆகும். ஆனால் இலக்கியம் ஆராய்ச்சிக்கு உரியதல்ல, ரசனைக்குரியது. ரசனை சார்ந்த அணுகுமுறையே இயல்பானதும் என்றுமுள்ளதுமாகும்.

ராஜமார்த்தாண்டன் தன்னை ஒரு வாசகனாக படைப்பின் முன் நிறுத்துகிறார். தன்னில் அவை உருவாக்கும் விளைவை கவனிக்கிறார். அதன் அடிப்படையில் தன் முடிவுகளை முன்வைக்கிறார். அவரது கொங்குத்தேர் வாழ்க்கை தொகுப்பில் பிரம்மராஜன், யவனிகாஸ்ரீராம் போன்ற சிலரை அவர் தவிர்த்து விட்டாரென்றும், அதைப்பற்றிக் கேட்டபோது அவர்கள் தன்னை கவரவில்லை என்று சொன்னாரென்றும் ந.முருகேசபாண்டியன் சொன்னார். இந்தபெயர்கள் இக்காலகட்டத்தை சார்ந்தவையாதலால் நமக்கு பெரிதாகத் தோன்றுகின்றன. இந்த ஆட்களை நாம் அறிவோம் என்பதனால். எழுபதுகளில் கனகதாரா என்பவர் எல்லா சிற்றிதழ்களிலும் எழுதித்தள்ளினார். அவரது கவிதைகளை ராஜமார்த்தண்டன் சேர்க்கவில்லை. அப்படி அவர் விட்டுவிட்ட ஐம்பது பேரை நான் சொல்லமுடியும்.

இப்படி விடப்பட்டவர்களின் கவிதைகளை மட்டும் கவனித்தால் அவற்றை ராஜமார்த்தண்டன் ஏன் விட்டுவிட்டார் என்பது தெளிவாகவே இருக்கிற்து. அவை பாசாங்கானவை. செயற்கையானவை. அரசியல் சார்ந்த பாசாங்குகள், மேடை சார்ந்த பாசாங்குகள் நம் கண்ணுக்கு உடனே தெரிகின்றன. அவற்றை ராஜமார்த்தண்டன் தவிர்க்கும்போது நாமும் ஒப்புக் கொள்கிறோம். சிற்றிதழ் சார்ந்த பாசாங்குகள் பல உண்டு. கலகக்காரன் என்ற பாசாங்கு. ‘சூப்பர்’ அறிவுஜீவி என்ற பாசாங்கு. பெண்ணியவாதி என்ற பாசாங்கு. தலித் புரட்சியாளன் என்றர பாசாங்கு. அவை நடுத்தர வற்கத்து எளிய மனிதர்களின் இயலாமையின் விளைவுகள் மட்டுமே. ஒரு புது கோட்பாடு இறக்குமதியாகும்போது உடனே அதற்கேற்ற பாசாங்குகளும் பிறக்கின்றன.நாற்பதுவருடங்களாக மிகமிக நுணுக்கமாக — ஒரு கலைக்களஞ்சியம் என்றே சொல்லிவிடக்கூடிய அளவுக்கு — தமிழ் கவிதையை கவனித்துவரும் ராஜமார்த்தண்டன் இதற்குள் எத்தனை பாசாங்குகள் வந்துசென்றதை பார்த்திருப்பார்? ஆகவே ஈவிரக்கமில்லாமல் ராஜமார்த்தண்டன் அவற்றை கழித்து விடுகிறார்.

மூளையை இலக்கியம் நோக்கி திருப்புவது ஒருவகை வாசிப்பு. கோட்பாட்டு விமரிசகர்கள் செய்வது அதையே. தமிழில் அம்மூளைகள் திறனற்றவை என்பதனால் அதன் பரிதாபகரமான விளைவுகளை நாம் கண்கூடாகக் காணவும் செய்கிறோம். ஆழ்மனதை படைப்புகளை நோக்கி திருப்புவதென்பது ராஜமார்த்தாண்டன் முன்வைக்கும் வாசிப்பு. அவரது இலக்கியச் செயல்பாடு என்பது இதுவே. தன்னை முழுமையாக, முன் நிபந்தனைகள் இல்லாமல், நிர்வாணமாக படைப்பு முன் நிறுத்துவது. அப்போது ஒன்று நிகழ்கிறது, எந்த ஆழ்மன எழுச்சி இலக்கியப்படைப்பை உருவாக்கியதோ அதே ஆழ்மன எழுச்சி வாசக தளத்திலும் நிகழ்கிறது. எந்நிலையிலும் முற்றிலும் புரிந்து வகுத்துவிட முடியாத பண்பாட்டு ஆழத்தில் படைப்பும் வாசகனும் உரையாடுகிறார்கள்.

ஆகவே ஒரு படைப்பு ஏன் தன்னைக் கவர்கிறது என்று ராஜமார்த்தண்டன் போன்றவர்களால் சொல்லிவிடமுடியாது. சொல்ல ஆரம்பிக்கும்போதே அது தவறாகவும் போதாமலும் ஆவதைத்தான் அவர்கள் உணர்கிறார்கள். புறவயமாகச் சொல்லத்தக்கதாக ராஜமார்த்தண்டன் உணர்வது அப்படைப்பு எழுதப்பட்ட சூழல், அதன் இலக்கிய வரலாற்று மரபு இரண்டைப்பற்றி மட்டுமே. அவர் அவற்றைப்பற்றி மட்டுமே விரிவாகப்பேசி அந்த தருணத்தில் தன் முடிவை முன்வைத்து நிறுத்திக் கொள்கிறார். தன் காலகட்டத்தின் வாசகப்பொதுமனத்தின் துல்லியமான பிரதிநிதியாக ஆவதே அவரது இலக்காக இருக்கிறது. அவர் வழியாக இக்காலகட்டத்தின் வாசக ஆழ்மனம் வெளிப்படுவதனாலேயே அவர் முக்கியமானவராக ஆகிறார்.

சமணத்துறவிகள் பிட்சை ஏற்கும்போது உணவை எந்த வித பாத்திரத்திலும் வாங்க மாட்டார்கள். இலையில்கூட பெற மாட்டார்கள்.வெறும் கையில் வாங்கி நேரடியாக உண்பார்கள். கவிதையை வெறும் இதயத்தால் வாங்கக்கூடிய விமரிசகராக நிற்கிறார் ராஜமார்த்தாண்டன்.

[26-7-08 அன்று நாகர்கோயிலில் நிகழ்ந்த ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபதுஇலக்கியக் கூட்டத்தில்'ஆற்றிய உரை]
--------------------

அண்ணாச்சி.1
June 13th, 2009
சுந்தர ராமசாமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். 1986 டிசம்பர் மாதம். மெல்லிய மழைச்சாரல் இருந்த அந்திநேரம். அப்போது இருவர் கேட்டை திறந்துகொண்டு உள்ளே வந்தார்கள். சுந்தர ராமசாமி எட்டிப்பார்த்தார். ”வாங்கோ” என்று என்னை அழைத்தார் ”ஒருத்தரை இண்டிரடியூஸ் பண்ணி வைக்கிறேன்…உங்களுக்கு அவரை ரொம்பப்பிடிக்கும்னு நெனைக்கறேன்…” நான் எழுந்தேன். சுந்தர ராமசாமி ”அவா ரெண்டுபேரும் உள்ள வரமாட்டாங்க.. யானைமேலே வராங்கன்னு நெனைக்கிறேன்”

நான் சிரித்துவிட்டேன். யானைமேல் அமர்ந்திருப்பவர்களின் அசைவு அவர்கள் உடலில் இருந்தது. சுந்தர ராமசாமி வீட்டுமுன்னால் அப்போது அலங்காரக்கொடி படரவிட்ட ஒரு பந்தல் இருந்தது. பந்தலில் அவர்கள் நின்றார்கள்.ஒருவன் மிக ஒல்லியான கரிய மனிதர். தாடி, நீளமான தலைமுடி. இன்னொருவர் குண்டான கனத்த முகம் கொண்டவர். கலைந்த கற்றைத்தலைமுடி ”நல்லாருக்கேளா?” என்றார் சுந்தர ராமசாமி ”எப்ப வந்தேள்?” கரியமனிதர் ”நான் நேத்தைக்கே வந்துட்டேன். ஒரு வேலையா போயிருந்தேன்….” என்றார். அப்போது அவர் வலது கையால் வாயைப்பொத்திக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு மடாதிபதியுடன் பேசுவது போல சற்று முன்னால் வளைந்து நின்று பேசினார். அதற்கான காரணம் புரிந்தது, இருவரிடமும் தூக்கலான படைச்சாராயம் மணத்தது. ”உக்காருங்கோ” என்றார் ராமசாமி. இருவரும் அந்தப்பந்தலின் சிமிண்ட் திண்ணைகளில் அமர்ந்தார்கள். எதிரே நாங்கள் அமர்ந்தோம்.

”இவர்தான் ராஜமார்த்தாண்டன்…அவரு ராஜகோபாலன்.”என்று சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தார் சுந்தர ராமசாமி. அவர்கள் இருவரும் அப்போது கொல்லிப்பாவை இதழை மீண்டும் கொண்டுவந்துகொண்டிருப்பதை அவர் சொல்லியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப்பின்னால் சுந்தர ராமசாமி பதிமூன்று கவிதைகளை  எழுதி ஒரேயடியாக அதில் பிரசுரித்து தமிழ் நவீன இலக்கியம் என்னும் வளையல்வட்டத்துக்குள் இருந்த நவீனக்கவிதை என்னும் மோதிரவட்டத்துக்குள் அலைகளை கிளப்பியிருந்தார்.

”இவர் ஜெயமோகன்…காஸர்கோட்டிலே இருக்கார். நல்லா எழுதிட்டுவரார்”என்றார் சுந்தர ராமசாமி. ராஜமார்த்தாண்டன் என்னைப்பார்த்து பிரியமாகப் புன்னகைசெய்தார். ராஜகோபாலன் என்னை பொருட்படுத்தவேயில்லை. அவர் உள்ளூர ததும்பும் போதையில் நிறைவுற்றிருந்தார். ”அம்மாண்டிவிளைக்கு காலைலேயே போய்ட்டேளா?” என்றார் சுந்தர ராமசாமி. ”இல்ல, ஒரு பத்து மணிக்கு…”என்றார் ராஜமார்த்தாண்டன் ‘ஒரு தப்பு நடந்துபோச்சு’ என்ற பாவனையில். ”வேலைல்லாம் எப்டி போகுது?” ”பரவால்லை சார்”

அதன்பின் சுந்தர ராமசாமி நாங்கள் ஏற்கனவே பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வந்து விட்டார், தகழி சிவசங்கரப்பிள்ளை பழுத்த லௌகீகவாதி. பழுத்த லௌகீகமும் உயர் கவித்துவம் ஆக முடியும். ஆழமான சரித்திரப்பிரக்ஞையும் விவேகமும் அதற்குத் தேவைப்பௌம். தகழியிடம்ஆவை இல்லை. அவரிடம் இருந்த சரித்திரப்பிரக்ஞ்ஞை என்பது அவரே அடைந்தது அல்ல. அது மார்க்ஸியத்தின் உருவாக்கம்தான்.

”நீங்க என்ன நெனைக்கிறேள்?”என்றார் சுந்தர ராமசாமி ராஜமார்த்தாண்டனிடம். குடிபோதையில் அவருக்கு என்ன புரிந்திருக்கக்கூடும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர் தீவிரமான முகபாவனையுடன்  ”எதுவா இருந்தாலும் நாமளே அனுபவிச்சு அறிஞ்சதா இருக்கணும் சார்…அது தப்பா இருந்தாக்கூட ஒண்ணுமில்லை” என்றார்

சுந்தர ராமசாமி உற்சாகத்துடன் ”அதைத்தான் நான் சொல்லிட்டிருக்கேன். சுயமான தரிசனம் இருந்தா அதோட வேல்யூவே வேற. அந்த தரிசனம் சரியா தப்பாங்கிற பேச்சே இலக்கியத்தில இல்லை. சொல்ரவன் அதுக்கு உண்மையா இருக்கானா இல்லையாங்கிறது மட்டும்தான் முக்கியம்”

ராஜமார்த்தாண்டன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். போதை இருப்பது போலவே தெரியவில்லை. கமலா மாமி உள்ளிருந்து வந்தார் ”ஆரு ராஜ மார்த்தாண்டனா? எப்டி இருக்கே?”  ராஜமார்த்தாண்டன் எழுந்து வாயைப்பொத்திக்கொண்டு ”ம்ம்” என்றார். மாமி ”சாப்பிடறேளா?”என்று சுந்தர ராமசாமியிடம் கேட்டார். ”அப்ப நாங்க கெளம்பறோம்” என்றார் ராஜமார்த்தாண்டன். ”எப்டி வந்தேள்?” ”பைக்கிலே” என்றார் ராஜமார்த்தாண்டன்.

அவர்கள் வெளியே போய் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ராஜகோபாலனின் பைக்கில் ஏறிக்கொண்டு கிளம்பிச்சென்றார்கள். நானும் சுந்தர ராமசாமியும் சாப்பிடுவதற்காக உள்ளே சென்றோம். நான் அவரது வீட்டுமாடியில்தான் அப்போது தங்கியிருந்தேன். ”அவர் சாப்பிட மாட்டாரா?” என்றேன். ”சாப்பிடுவார்…இப்ப லிக்கர் சாப்பிட்டிருக்கார். லிக்கர் சாப்பிட்டிருந்தா அவர் எந்த வீட்டுக்குள்ளயும் நுழைய மாட்டார்…லேடீஸ்ட்டே பேசமாட்டார். அதை மரியாதையா வச்சிருக்கார்” என்றார் சுந்தர ராமசாமி

சாப்பிடும்போது சுந்தர ராமசாமி ராஜமார்த்தாண்டனைப் பற்றிச் சொன்னார். ”ரொம்ப சின்சியரான ஆள். இந்த அளவுக்கு சின்சியரான ஆட்கள் எப்பவாவதுதான் லை·ப்லே பாக்க முடியும். ரொம்ப மென்மையானவர். யாரிட்டயும் எப்பவும் எந்த மனஸ்தாபமும் வச்சுகிட மாட்டார்…” ”மொத்தத்திலே ஒரு புனிதர் மாதிரி” என்றேன். ”நெஜம்மாவே அப்டித்தான்…இவரோட குருன்னா பேராசிரியர் ஜேசுதாசனைத்தான் சொல்லணும். அவரு இவரை உண்மையிலேயே ஒரு செயிண்டுன்னு நம்பினார்.. பெரிய ஆளா வந்திடுவார்னு சொல்லிடே இருந்தார். அப்றம்தான் இப்டி ஆயிட்டார்”

”ரொம்ப குடியா?” என்றேன்.”ரொம்ப…நிப்பாட்டத்தெரியாது…இப்பல்லாம் காலையிலேயே குடிச்சாத்தான் நடமாடவே முடியும்.  காலேஜ் டேய்ஸிலேயே ஆரம்பிச்சுட்டார். இவர மாதிரி தூய ஆத்மாக்கள் குடிக்க ஆரம்பிச்சா நிப்பாட்டுறது கஷ்டம். வயித்துல பல்லு உள்ள ஜென்மங்கள் ஒரு பெக்குன்னா ஒரு பெக்குலே நிப்பாட்டிக்கும். வயித்துக்குள்ள பல்லைகடிச்சுண்டு நிப்பாட்டிக்கும்னு நெனைக்கிறேன்” நான் சிரித்தேன்.

”எனக்கு ஆச்சரியம் என்னன்னா ராஜகோபாலனோட கேஸ்தான். ஒருவருஷம் முன்னாடி நானும் இவருமா திருவனந்தபுரம் போயிருந்தோம். நகுலனைப் பாத்தோம். மா.தட்சிணாமூர்த்தி கூட இருந்தார். அவா ரெண்டுபேரும் குடிக்கணும்னு சொன்னாங்க. ஒரு பாருக்குள்ளே நுழைஞ்சோம். இவர் கோழி மாதிரி நின்னுட்டு முழிச்சார். அவா இவரை பீர் குடிக்கச்சொன்னாங்க…வேணாம் வேணாம்னு பதறினார்…நான் இவரோட தைரியத்துக்காக ஒரு கப் வைன் குடிச்சேன். இவர் பீர் சாப்பிட்டார். அரை தம்ளர் குடிச்சிருப்பார். திரும்பி வரவரைக்கும் குமட்டிகிட்டே இருந்தார்…இப்ப பாத்தா இப்டி ஆயிட்டார்”

”ராஜமார்த்தாண்டன் குடிக்கிறது பெரிய ஆச்சரியம். அவரு ரொம்பபெரிய குடும்பத்தைச் சேந்தவர். அவங்கப்பா எடையன்விளை ஊரிலேயே பெரிய பணக்காரர். ஏகபப்ட்ட நிலம் வச்சிருக்கார். அந்தக்காலத்திலே மார்த்தாண்ட வர்மாவுக்கும் அவரோட பங்காளிகளுக்கும் சண்டை நடக்கிற சமயத்திலே பெரிய நாடார்பிரபுக்கள் எல்லாருமே பப்புத்தம்பி, ராமன் தம்பியைத்தான் ஆதரிச்சாங்க. சிலர்தான் மார்த்தாண்டவர்மாகூட நின்னாங்க. ஜெயிச்சு ராஜாவானதும் மார்த்தாண்ட வர்மா அவரை சப்போட் பண்ணின நாடார்பிரபுக்களுக்கு நெறைய லேண்ட்ஸ் குடுத்தார்… இன்னைக்கு வரை இவங்க கையிலே இருக்கிறது அந்த சொத்துதான்” என்றார் ராமசாமி.

”இவங்க ஊரிலே இவர் எங்க போனாலும் ஆட்கள் பணிவா எந்திரிச்சு நிப்பாங்க. இப்டி குடிக்கிறார்ங்கிறது அவங்களுக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கும். ரொம்ப ஸ்டேட்டஸ்லாம் பாக்கிற ஆளுங்க. அவங்க அப்பாவுக்கும் பெரிய ஹோப் இருந்தது இவர் மேலே. கடைசிக்காலத்திலே இவரை நெனைச்சு ரொம்ப கஷ்டப்பட்டார்” என்றார் ராமசாமி

”எப்டி இதை ஆரம்பிச்சார்?” ”தெரியல்லை. இவரோட குளோஸ் ·ப்ரண்டுதான் வேதசகாயகுமார். ஏதோ ஒரு லவ் அ·பயர் இருந்ததுன்னு சொன்னார். ஒரு மலையாளிப்பொண்ணு. நாயர். அதோட அண்ணாக்கூட இப்ப மலையாளத்திலே கதைகள்லாம் எழுதற ரைட்டர். அது விட்டுட்டு போய்ட்டுது. இவர் குடிக்க ஆரம்பிச்சார். ஒரு லவ் ·பெய்லியர் வந்தா குடிக்காலாமேன்னு காத்திட்டிருந்தார் போல… எல்லாம் சினிமா பாத்து கத்துண்டது. காதல் தோல்வின்னா உடனே கையிலே குப்பிய ஏந்திண்டு பாட ஆரம்பிச்சுடறாளே.. இவர் வேற சிவாஜியோட பரமரசிகர்…”

கைகழுவும்போது ராமசாமி சொன்னார் ”உங்க கவிதைகளை ராஜமார்த்தாண்டன் கிட்ட குடுக்கிறேன்…கொல்லிப்பாவையில போடலாமே” நான் தலையசைத்தேன். அந்தக்கவிதைபொதியில் ஒன்று கொல்லிப்பாவையில் பிரசுரமாகியது. ‘கைதி’ என்ற அக்கவிதையும் கணையாழியில் ‘நதி’ என்ற கதையும் ஒரேசமயம் வெளியாகின. அப்படித்தான் நான் நவீன இலக்கியத்துக்குள் நுழைந்தேன்

[மேலும்]


அண்ணாச்சி 2
June 14th, 2009
 ராஜமார்த்தாண்டன் சிறுவயதில் ஒருவகையான அழகுடன் இருப்பார் என்று சுந்தர ராமசாமி அடிக்கடி சொல்வதுண்டு. பின்பக்கம் தோள் வரை வளர்த்து விரித்துப்போட கருங்கூந்தல் உண்டு அவருக்கு. நல்ல நீளமான முகம். கருமையாகப் பளபளக்கும் சருமம். அவரது கண்கள் மிக அழகானவை. சிறுவயதில் ஒளிவிடும் நல்ல பல்வரிசையும் இருந்தது.
அத்துடன் புன்னகையை அழகாக ஆக்கும் முக்கியமான அம்சமும் அவரிடம் இருந்தது. அவருக்கு உண்மையிலேயே மனிதர்களைப் பிடிக்கும். அவரது மனிதநேயம் என்பது ஒரு கோட்பாடோ நம்பிக்கையோ நிலைபாடோ அல்ல. அவர் அனைவரையும் உண்மையிலேயே நேசித்தார். ஆகவே எவருடைய குறைகளும் அவர் கண்களுக்குப் படுவதில்லை. அந்த பிரியம் எப்போதும் அவர் கண்களில் வெளிப்படும்.

மென்¨மையாகக் கைகளைப் பற்றிக்கொண்டு ”எப்ப வந்தீங்க?” என்று கிட்டத்தட்ட ரகசியம் போல கேட்கும் அண்ணாச்சியின் குரலை அவரது மரணச்செய்தியுடன் இணைத்து தமிழகத்து எழுத்தாளர்களில் கணிசமானவர்கள் நினைவுகூர்ந்திருப்பார்கள். அவர்களில் பெரியவர் சிறியவர் பேதம் இல்லை. தன் தரப்பு மாற்றுத்தரப்பு என்ற மனநிலையும் இல்லை.
ராஜமார்த்தாண்டன் சொந்த ஊரே இடையன்விளைதான். அவரது அப்பா ஊரின் முக்கியமான நிலக்கிழார். அப்பகுதி நிலங்கள் மார்த்தாண்டவர்மா காலத்திலேயே விரிவான பாசன வசதி பெற்றுவிட்டிருந்தன. சுசீந்திரம் முதல் பறக்கை வழியாக மணக்குடி வரைசெல்லும் நன்னீர் காயலும் அதன் கிளைகளாக விரியும் கால்வாய்களும் பலநூறு குளங்களுமாக செழிப்பான நிலம் அது. தென்னையும் நெல்லும் முக்கியமான பயிர்கள்.

அண்ணாச்சி அவரது சொந்த வாழ்க்கையைப்பற்றிச் சொல்ல மிகவும் கூச்சப்படுபவர். நினைவுகளைச் சொல்லுதல் என்றே பேச்சே இல்லை. குடித்திருந்தால் மேலும் நிதானமடையும் தன்மை கொண்டவர். தமிழகத்தின் மாபெரும்குடிகாரர்களில் ஒருவர் என்று நான் என்ணும் அண்ணாசி ஒரு சொல்கூட உளறியதில்லை என்று சொன்னால் அது முழுக்கமுழுக்க உண்மை. அவரைப்பற்றிய தகவல்கள் அவரது நண்பர்கள் சொன்னவை. அவர் தற்செயலாக சொல்லியவை. ஆகவே அவை எப்போதும் முழுமையற்றவை.

அண்ணாச்சி உணர்ச்சிகரமானவராகவே எப்போதுமிருந்திருக்கிறார். உயர் அழுத்த மின்சாரம் ஓடும் மெல்லிய கம்பி போன்றவர். சிறிய விஷயத்தைக்கூட உணர்ச்சியால் மெல்ல நடுங்கும் குரலுடன் மெதுவாகவே  சொல்வார். அப்போது நம் கைகளை தன் கைகளில் பற்றிக்கொள்ள விரும்புவார்.டொரு தொடுகை கிடைத்ததும் அந்தவழியாக பாயந்துசெல்லும் மின்சாரம்போல மனம் சென்று படியும் விஷயங்களில் அப்படியே தன்னை கொட்டிக்கொள்வது அவரது இயல்பு

சிறுவயதில் அண்ணாச்சிக்கு சிவாஜி கணேசன் மீது அபாரமான ஈர்ப்பு இருந்திருக்கிறது. பல படங்களை மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார். சிவாஜியின் வசனமழையை அபப்டியே திருப்பிச் சொல்ல அவரால் முடியும். அண்ணாச்சிக்கு மிகவும் பிடித்தமான சிவாஜிபடம் ‘பிராப்தம்’. நான் அந்தப்படத்தைப் பார்த்ததில்லை. அதை எடுத்துத்தான் சாவித்ரி போண்டியானார் என்பார்கள். எப்படி அது அவருக்கு அவ்வளவு பிடித்தது தெரியவில்லை. சிவாஜி நடிக்காத படங்களில் ‘சுமைதாங்கி’ அவரைக் கவர்ந்த படம்.

சிவாஜி வழியாக ஸ்தாபன காங்கிரஸ் அரசியலில் அண்ணாச்சிக்கு ஆர்வம் ஏற்பட்டிருந்தது. அந்த மேடைகளில் அப்போது பேசவந்த ம.பொ.சிவஞான கிராமணி மீதும் பெரும் ஈடுபாடு. அவரது தமிழார்வம் அவ்வாறு உருவானதுதான். ஒரு கட்டத்தில் அவருக்கு குமரி அனந்தன் பிடித்த பேச்சாளராக, இளம்தலைவராக இருந்திருக்கிறார். அண்ணாச்சியை திராவிட அரசியல் கவர்ந்ததே இல்லை.

சிறுவயதில் அண்ணாச்சி முக்கியமான மாணவராக இருந்திருக்கிறார். அவர் படித்த அகஸ்தீஸ்வரம் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பில் அவரே முதலிடம் பெற்றார். கல்லூரி புகுமுகப்படிப்புக்காக நெல்லை ஜான்ஸ் கல்லூரிக்குச் சென்றபோது அகஸ்தீஸ்வரத்தின் முக்கியமான பெரும்பணக்காரரும் வந்து அவர்களுடன் சேர்ந்தே காத்திருந்தாராம். அண்ணாச்சிக்கு இடம் கிடைத்தது. குறைவான மதிப்பெண் பெற்ற தனவந்தரின் மகனுக்கு இடம் கிடைக்கவில்லை. அந்த ரோஷத்துடன் அவர் அகஸ்தீஸ்வரத்தில் ஒரு கல்லூரியை நிறுவினார். அண்ணாச்சி காரணமாக நிறுவப்பட்ட கல்லூரி இன்றும் அகஸ்தீஸ்வரத்தில் உள்ளது.

அண்ணாச்சி இளங்கலை வகுப்பில் கணிதம்தான் படித்தார். கும்பகோணத்தில் இளங்கலை பயிலும்போதே இலக்கிய ஆர்வம் மெல்ல தலைக்கு ஏறியது. அப்போது கும்பகோணத்தில் கரிச்சான்குஞ்சு இருந்தார். கரிச்சான்குஞ்சுவின் தொடர்பும் நூல்களும் அவருக்குக் கிடைத்தன. தன் இயல்புபப்டி அண்ணாச்சி தன்னை ஒட்டுமொத்தமாக புதுக்கவிதைமீது கொட்டிக்கொண்டார். பரிதாபகரமாக மதிப்பெண் வாங்கி இளங்கலையில் மேலே வர இலக்கியம் வழியமைத்தது. ”கணக்கெல்லாம் படிக்கிறதிலே அர்த்தமே இல்லை….அது வயித்துபிழைப்புக்கான படிப்பு. ஆத்மாவுக்கான படிப்பு இல்லை”

அதன்பின் முதுகலை படிப்பை தமிழிலக்கியம் எடுத்து படித்தார். பாலக்காடு அருகே உள்ள சிற்றூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறையில்தான் இடம் கிடைத்தது. இக்காலகட்டத்தில் இலக்கிய வெறி தலைக்கு ஏறிவிட்டிருந்தது. சொந்தச் செலவில் ஒரு சிற்றிதழை புதுக்கவிதைக்காக நடத்தினார். பெயரை அவரே மறந்துவிட்டிருந்தார். ஆச்சரியமான விஷயம் , பிற்காலத்தில் வானம்பாடி வகை கவிதைக்கு முமுமுதல் எதிரியாக விளங்கிய அண்ணாச்சி அப்போது வானம்பாடிக் கவிதைகளின் பாதிப்பில் அந்த இதழை நடத்தினார்

”அப்ப எனக்கெல்லாம் அப்துல்ரகுமான், சிற்பி இவங்கள்லாம்தான் ஆதர்சம். அப்பவே புதுமைப்பித்தன்லாம் படிச்சாச்சு. க.நா.சு சிற்றூருக்கு ஒரு தடவை வந்திருந்தபோது அவரிட்ட நெறைய விவாதிச்சோம். இருந்தாலும் வானம்பாடிக்கவிதைகள் பிடிச்சிருந்தது. ஏன்னா அவங்கள்லாம் தமிழ் பேராசிரியர்கள். நாமும் நம்மளை தமிழ் பேராசிரியர்னு நெனைச்சிட்டிருந்த காலம் அது” சிவாஜிபட ரசனையின் இன்னொரு பக்கம்தான் அது.

முதுகலை முடித்தபின் அண்ணாச்சி முனைவர் பட்டத்துக்காக திருவனந்தபுரம் பாளையத்தில் இருந்த பல்கலைக் கழகக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே பேராசிரியர் ஜேசுதாசனுக்கு மாணவரானார். எம்.வேதசகாயகுமார், கிருஷ்ணசாமி [சகாதேவன்] போன்றவர்கள் அவருடன் ஆய்வுசெய்த மாணவர்கள். திருவனந்தபுரம் பழைய தலைமைச்செயலகம் அருகே ஒரு அறை எடுத்துத் தங்கி ஆராய்ச்சிசெய்தார். இக்காலகட்டத்தில்தான் அவரது வாசிப்பும் ரசனையும் முதிர்ச்சி அடைந்தன.

அண்ணாச்சிமீது ஆழமான பாதிப்பைச் செலுத்திய ஆசிரியர் என்று பேராசிரியர் ஜேசுதாசனைச் சொல்ல வேண்டும். ”இலக்கியத்தில கருத்துக்கள்தான் முக்கியம்னு நெனைச்சிட்டிருந்தேன். ரசனைதான் முக்கியம்னு சார்தான் சொல்லிக்குடுத்தார்” என்றார் அண்ணாச்சி.  இலக்கியப்படைப்பு வாசகனின் கற்பனையுடன் மட்டுமே உரையாடுகிறது, கற்பனையை படைப்பை நோக்கி திறந்துகொள்வதே இலக்கிய வாசிப்பு, கற்பனையை தூண்டி ஓரு வாழ்க்கையை முழுமையாக வாழச்செய்வதே நல்ல இலக்கியம்– இந்த அடிப்படைகளை ஜேசுதாசன் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

”கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்று அதன் குத்தொக்க கூர்ந்த இடத்து–ன்னு திருக்குறளிலே வார எடத்தை சார் அற்புதமாச் சொல்லுவார். குத்தொக்கன்னு சொல்றப்ப ஒரு காட்சி தெரியுதுல்ல. கொக்கு கொம்பால மீனைக் கொத்தாது செங்குத்தாட்டு குத்தும்னு கொக்கை பாத்தவங்களுக்கு தெரியும். அந்த அளவு நுட்பமான ரசனையோட இருக்கு திருக்குறள்னு சார் சொல்லுவார். எங்கூரெல்லாம் ஏகப்பட்ட கொக்குகள் உள்ள எடம்.ஆனா அந்த நுட்பம் குறள் வழியாத்தான் கெடைச்சுது. ரெண்டு வார்த்தைகள் நடுவிலே அவ்ளவு வேறு பாடு இருக்கு…அந்த நுட்பத்தை உணர்ந்து எழுதினாத்தான் இலக்கியம். அதான் இலக்கிய ரசனைன்னு சார்கிட்டதான் படிச்சோம்”

திருவனந்தபுரம் பல்கலையில் புதுக்கவிதை தோற்றம் வளர்ச்சி குறித்து முனைவர் பட்ட ஆய்வேடுக்காக சேர்ந்திருந்தார் ராஜமார்த்தாண்டன். அவரது ஆய்வு வழிகாட்டி நவீன இலக்கிய ரசனை மிக்கவரும் சுந்தர ராமசாமி, நகுலன், அய்யப்பணிக்கர் முதலியோரின் நண்பருமான கு.நாச்சிமுத்து அவர்கள். ஆய்வின் ஆரம்பத்தில் ராஜமார்த்தாண்டன்னுக்கு புதுக்கவிதை பற்றி இருந்த அபிப்பிராயங்கள் ஒட்டுமொத்தமாக நடுவிலே மாற நேர்ந்தது. ஆய்வேடு அப்படியே பாதியில் நின்றது.

அக்காலத்தில் திருவனந்தபுரம் ஒரு முக்கியமான இலக்கிய மையம். பேராசிரியர் ஜேசுதாசன் பல்கலைகழகக் கல்லூரியின் தமிழ்த்துறையில் இருந்தார். அவரைத்தேடி சுந்தர ராமசாமி அடிக்கடி வருவார். அய்யப்ப பணிக்கர், ஜி.என்.பணிக்கர், வெட்டூர் ராமன்நாயர் போன்ற மலையாள எழுத்தாளர்கள் வருவார்கள். நகுலன் அவரது சைக்கிளை தள்ளிக்கொண்டு வருவார். நீல பத்மநாபன், ஆ.மாதவன், காசியபன், மா.தட்சிணாமூர்த்தி, சண்முக சுப்பையா போன்றவர்கள் வருவார்கள். அந்த சபைகளில் இருந்து அண்ணாச்சியின் பிற்கால ஆளுமை மெல்லமெல்ல திரள ஆரம்பித்தது.

இக்காலகட்டத்தில் தான் அண்ணாச்சிக்கு பிரமிள் அறிமுகம் ஆனார். சென்னையில் சி.சு.செல்லப்பாவின் வீட்டில் கொஞ்சநாள் தங்கியிருந்த பிரமிள் அங்கிருந்து டெல்லிசென்று வெங்கட் சாமிநாதன் வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்து ந.முத்துசாமி வீட்டிலும் பின்னர் சுந்தர ராமசாமி வீட்டிலும் தங்கியிருந்தார். தங்கும் வீடுகளில் பலவருடங்களைக் கழித்தபின்னர் அங்கே மனஸ்தாபம் கொண்டு கிளம்பி இன்னொருவர் வீட்டுக்குச் செல்வது பிரமிளின் பாணி. கடைசி சில மாதங்களில் அடுத்த கூடுக்கான ஏற்பாடுகளை ரகசியமாகச் செய்துகொண்டிருப்பார் என்றும் அது உறுதியான பின்னரே பிரச்சினைகளை ஆரம்பிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

பிரமிள் திருவனந்தபுரம் வந்து கிட்டத்தட்ட ஆறுமாதம் அண்ணாச்சியின் அறையில் தங்கியிருந்தார். தன்னுடன் இருப்பவரின் ஆளுமைக்குள் நுழைந்துவிடும் தீவிரம் பிரமிளுக்கு உண்டு. ஆனால் அண்ணாச்சியில் பிரமிளுடைய ஆளுமையின் பாதிப்பே இல்லை. கடைசிவரை அவர் பிரமிளின் நல்ல வாசகராகவும் நண்பராகவும் மட்டுமே இருந்தார். அண்ணாச்சிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு, பிரமிள் நெருங்கிப்பழகியவர்களில் அவரால் கட்டுரைகளில் வசைபாடப்படாத ஒரே நபர் அண்ணாச்சிதான்.

பிரமிள் கொஞ்சநாள் அண்ணாச்சியின் ஆதரவில் இடையன்விளையில் ஒரு சிறிய வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அண்ணாச்சியும் ஆய்வை பாதியில் விட்டுவிட்டு ஊரிலேயே இருந்தார். பிரமிளுக்கு ஊரிலேயே ஒரு சோதிடருக்கான மரியாதை உருவாக ஆரம்பித்தது. இங்கே இருந்த காலகட்டத்தைத்தான் பிரமிள் அவரது ‘ஆயி’ என்ற குறுநாவலில் சித்தரித்திருக்கிறார்

ஆனால் அவரது கிறுக்குகள் மெல்லமெல்ல பிற இடங்களைப்போலவே அங்கும் அவரை இருக்கவிடாமல்செய்தன. ஒரு கிராமத்துக்குழந்தையை கடுமையாகத் தாக்கி ஊராரால் பிரமிள் தாக்கபப்ட்டார் என்று சொன்னார்கள். ராஜமார்த்தாண்டனின் தந்தை காரணமாக அது சமாதானமாக ஆகியது என்றாலும் அண்ணாச்சிமேல் கடும் கோபத்துடன் பிரமிள் கிளம்பிச்சென்றார். வழக்கம்போல வசைக்கடிதமும் சோதிடம் சொன்ன வகையில் மிச்சபணம் செட்டில் செய்யும்படி மிரட்டலும் வந்தது.

ஆனால் அண்ணாச்சியை எவரும் ஒன்றும் செய்துவிடமுடியாது. அவர் கடைசிவரை பிரமிளுக்கு மிகவேண்டிய நண்பராகவே இருந்தார். அதேசமயம் சுந்தர ராமசாமியை திட்டவட்டமாக ஆதரிப்பவராகவும் இருந்தார். பிரமிள் எழுதிய பலவற்றை அவர்தான் வெளியிட்டார். சுந்தர ராமசாமி எழுதியதையும் அதே இதழில் வெளியிட்டார். பிரமிள் கொதிப்பார், கொந்தளிப்பார், வசைபாடுவார். அண்ணாச்சி குளிர்ந்து சிரித்து அமர்ந்திருப்பார். தண்ணீரை நெருப்பு என்ன செய்ய முடியும்?

ஆய்வுக் காலகட்டத்தில்தான் அண்ணாச்சி காதலில் விழுந்தார். ஐம்பது வயதிலும் அதைப்பற்றிப்பேசினால் அண்ணாச்சிக்கு முகம் சிவக்கும். வழக்கம்போல அதில் அப்படியே தன்னைக் கவிழ்த்துக்கொண்டார். அண்ணாச்சியை அந்தப்பெண் காதலித்ததில் ஆச்சரியமில்லை. வித்தியாசமான தோற்றமும் ஆளுமையும் கொண்ட ஆண்களை பெண்கள் சட்டென்று விரும்புவார்கள். கைவிட்டதிலும் ஆச்சரியமில்லை, அபப்டிப்பட்ட ஆண்களை பெண்கள் திருமணம் செய்துகொள்வதில்லை.

கேரளம் எப்போதுமே குடியின் நிலம். அண்ணாச்சி மெல்லமெல்ல குடியின் பிடிக்குள் விழுந்தது அப்போதுதான் என்பதை வேதசகாயகுமார் நினைவுகூர்ந்தார். அவருக்கென்று குடிநட்பு வட்டம் உருவாகியது. அண்ணாச்சியின் வழக்கபப்டி அவர் குடியில் தலைகுப்புறக்குதித்தார். ஒருநாள் வேதசகாயகுமாரிடம் கேட்டேன்”ஏன் அவர் உங்க கூட இருக்கிறப்பதானே குடிச்சார்? உங்களாலே ஒண்ணுமே செய்ய முடியலையா?” ”என்ன செய்ய? ராஜம் முதமுதலா குடிச்சதுக்கு ரெண்டாம் மாசம் முழுக்குடிகாரனாட்டு மாறியாச்சுல்லா? ஒரு வெக்கேசனுக்கு போயிட்டுவாரப்ப ஆளே மாறியிருந்தார்”

அங்கிருந்து ஆரம்பித்தது இன்னொரு வாழ்க்கை. அவர் முனைவர் பட்ட ஆய்வை முறித்தார். சீராக வாசிப்பதும் கட்டுக்குள் நின்று உழைப்பதும் சாத்தியமில்லாமல் ஆயின. தற்செயலாக தினமணியில் பிழைதிருத்துநராக வேலை கிடைத்தது. ஆகவே அவரது வாழ்க்கை அந்த நிலைகுலைவுக¨ளையும் தாண்டி நீடித்தது

[மேலும்]

அண்ணாச்சி – 3
June 15th, 2009
‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் குடிகாரன் குறிப்புகள் என்று ஒரு பகுதி வரும். கட்சியிலிருந்து நீக்கபப்ட்ட வீரபத்திரபிள்ளை குடிகாரனாகி தெருவில் இறப்பார். அவரது முழுமைபெறாத டைரி அது. அந்தக் குறிப்புகளைப் பற்றி அண்ணாச்சிஎன்ன சொல்கிறார் என்ற ஆர்வம் எனக்கிருந்தது. ஆனால் அவரிடம் கேட்கக்கூடாதென எண்ணியிருந்தேன். அண்ணாச்சி நாவலை வாசித்துவிட்டு குமுதத்தில் தமிழில் வெளிவந்த சிறந்த பத்து நாவல்களில் ஒன்று என்று சொல்லியிருந்தார்.

2002ல் அண்ணாச்சி  அவரது நாகராஜ் மேன்ஷன் அறையில் ஈரல்பாதிப்பால் நினைவிழந்து விழுந்து கிடந்தார். அவரை ஒருநாள்வரை எவருமே கவனிக்கவில்லை. தற்செயலாக கவனித்தவர்கள் தகவல் சொல்ல அவரது சென்னை நண்பர்கள் அவரை அங்கே மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவர் ஈரல் மோசமாகப்பாதிப்பு அடைந்திருக்கிறது என்றார்கள். உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அனேகமாகக் குறைவு என்று சொல்லப்பட்டது. அண்ணாச்சி மொத்தமே 32 கிலோ எடைதான் இருந்தார்.

அவரை ஜோ-டி-க்ரூசின் காரில்போட்டுக்கொண்டு வசந்தகுமாரும் இன்னும் சில நண்பர்களுமாக நாகர்கோயிலுக்கு கொண்டுவந்து சேர்த்தார்கள். இங்கே ஜெயசேகரன் மருத்துவமனையில் அவர் சேர்க்கபப்ட்டார். நம்பிக்கை இல்லாமலேயே செய்த மருத்துவம் பலித்து அண்ணாச்சி திடமாக எழுந்தார். அவரது உடலை சென்னை மருத்துவர்கள் தவறாகக் கணித்திருந்தார்கள். பாரம்பரியமாக திடகாத்திரமான உடலமைப்பும் வலுவான உள்ளுறுப்புகளும் கொண்ட விவசாயி அவர். சென்னையில் நார்க்காலியைத் தேய்க்கும் பாரம்பரியத்தில் வந்தவரல்ல

அண்ணாச்சி குணம்பெற்று வந்த காலகட்டத்தில் நான் அவரை அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பேன். ஒருமுறை பேசும்போது சட்டென்று பின் தொடரும் நிழலின் குரலைப்பற்றிச் சொன்னார். ”குடிகாரன் குறிப்புகளை வாசிக்கிறப்ப நான் அழுதிருக்கேன்….எனக்க கிட்ட பேசி என்னைய வச்சுதான் நீங்க அந்த விசயங்கள எழுதினதாட்டு தோணிச்சு” என்றார். குறிப்பாக குடிகாரனின் காலைநேரம் பற்றி எழுதப்பட்டிருந்த வரிகளை நினைவிலிருத்து அப்படியே சொன்னார். அந்தக் காலைநேரக் குற்றவுணர்ச்சியையும் தன்னிரக்கத்தையும் ஜெயிக்க வேண்டுமென்றால் கொஞ்சம் குடித்தே ஆகவேண்டும் என்ற வரியை.

அதில் குடிக்கும்போது நிகழும் மாற்றத்தைச் சொன்ன ஒரு படிமம் இருக்கும். ஒரு மிகப்பெரிய கற்சிலை கனத்துக் கனத்து பிரக்ஞ்ஞைக்குள் கிடக்கும். குடிக்கும்போது அது எடையிழந்து எடையிழந்து பின்னர் மெல்ல பறக்க ஆரம்பிக்கும். ”அந்த வரி ரொம்ப உண்மை. எனக்கு எனக்கு உள்ள  இருக்க ஞாபகங்கள்லாம் அப்டியே கொஞ்சம் கொஞ்சமாட்டு கரைஞ்சு போய் நான் மட்டும் பறந்திட்டிருக்கிறதாட்டு தோணும்” குடிக்கக் கூடாது என்ற பிரக்கினையை அங்கே அண்ணாச்சி எடுத்தார். எட்டுமாசம்வரை குடிக்காமல் இருந்தார். மீண்டும் குடிக்க ஆரம்பித்தார். கடைசிவரை அவரால் அதை முழுக்க விட முடியவில்லை.

அண்ணாச்சியை பெரும் குடிகாரர் ஆக்கி சீரழித்தது சென்னை. சென்னை திருவல்லிக்கேணியில் மேன்ஷன் எனப்படும் பழங்கலப் பெரிய பங்களா குடியிருப்பு ஒன்றில் அவர் தட்டியால் பாதியாக பிரிக்கபப்ட்டு உருவாக்கப்பட்ட ஓர் அறையில் குடியிருந்தார். நாகராஜ் மேன்ஷன் அறை இலக்கியவாதிகள் பலருக்கும் தெரிந்ததுதான். இரு கட்டில்கள் போடுவதற்கான இடம் மட்டுமே அதில் உண்டு. ஒரு கட்டில் நிறைய தூசு பிடித்த புத்தகங்கள். கட்டிலுக்குக் கீழேயும் புத்தகங்கள். ஒரு கட்டிலில் அண்ணாச்சி படுப்பார்.

யாரும் எந்நேரமும் எந்த தயக்கமும் இல்லாமல் வரக்கூடிய அறை அது. யாரிடமும்  அண்ணாச்சி சாவியைக் கொடுத்துவிடுவார். அந்த அறையில் திருடிக்கொள்ள எதுவுமே இல்லை. சென்னைக்கு வரும் இலக்கியவாதிகள், அவர்களின் நண்பர்கள், பொதுவாக குடிக்க இடம்தேடி அலையும் மனைவிக்குப் பயந்தவர்கள், போதை அடிமைகள் என பலர் அங்கே எந்நேரமும் இருப்பார்கள். விருந்தினருக்கு கட்டிலைக்கொடுத்துவிட்டு அண்ணாச்சி தரையில் படுத்துக்கொள்வார்.

எந்நேரமும் அங்கே ஒருவகை இலக்கிய விசாரம் நடந்துகொண்டிருக்கும். போதையில் கவிதை போன்ற நுட்பமான ஒரு விஷயத்தை ஆராய்வதென்பது எண்ணை தேய்த்துக்கொண்டு மல்யுத்தம் செய்வதுபோல வேடிக்கையான சமாச்சாரம். ஆளாளுக்கு அவரவருக்கு தோன்றியதைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.– விடிய விடிய.

திடீரென்று சண்டைகள். லோர்க்காவை எப்படி குறைசொல்லப்போயிற்று என்று ஒரு இளம்கவிஞர் மனமுடைந்து மார்பில் மடேர் மடேரேன்று அறைந்து கேவிக்கேவி அழுவார். அவரை பிறர் சமாதானப்படுத்துவார்கள். நெரூதாவைப் பழித்தவனை தாய்தடுத்தாலும் விடேன் என்று ஒருவர் போர்க்கோலம் பூண்டு எழுவார். மேலும் திரவத்தை அவரது கிண்ணத்தில் ஊற்றி உட்காரச்செய்வார்கள்.

அண்ணாச்சி மதுரையில் இருந்தபோது அங்கே அவருக்கு நல்ல நண்பர் குழு ஒன்று இருந்தது. அதற்கு முன்னர் கொஞ்ச காலம் நாகர்கோயிலில் இருந்தபோதும் நல்ல நட்புகள் இருந்தன. நாகர்கோயிலில் வேதசகாயகுமார், ‘சோபிதம் புக்ஸ்டால்’ சோபிதராஜ், கட்டைக்காடு ராஜகோபாலன், அ.கா.பெருமாள், சுசீந்திரம் மகாகணபதி , கவிஞர் உமாபதி போன்றவர்களின் நட்பு. சுந்தர ராமசாமியின் அழுத்தமான ஆளுமை. அவை அவரை கட்டுக்குள் வைத்திருந்தன. கொல்லிப்பாவை இதழ்களை அவர்கள் இணைந்து கொண்டுவந்தார்கள்.  அது அவரது வாழ்க்கையின் ஒரு பொற்காலம்.

கடைசிநாள் வரை ராஜமார்த்தாண்டன் அந்த நாட்களை தன் நெஞ்சில் இனிய நினைவாகப் போற்றி வந்தார். அவர் ஆர்வமாகப் பேச ஆரம்பிக்கும் ‘மலரும் நினைவுகள்’ கொல்லிப்பாவையுடன் தொடர்பானவை. கொல்லிப்பாவை காலகட்டத்தில்தான் அவர்  வேகத்துடன் எழுதவும்செய்தார். நகுலன்,சி மணி, பசுவய்யா போன்ற எழுத்து காலகட்டக் கவிஞர்களைப்பற்றி அவர் கொல்லிப்பாவை இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

இக்கட்டுரைகளின் வரலாற்று முக்கியத்துவம் மிக அதிகம். ஏனென்றால் எண்பதுகளின் தொடக்கத்தில் சிற்றிதழ் இயக்கம் என்பது மிக ஆர்வமாக நடந்து வந்தபோதிலும் மிகச்சிறிய வட்டத்துக்குள்தான் இருந்தது. கொல்லிப்பாவை 200 பிரதிகளே அச்சிடப்பட்டது. அதுவும் அவர்களின் நண்பரால் நடத்தப்பட்ட பாரதி அச்சகத்தில் முக்கால்பங்கு கடனுக்கு. அது ஒரு பத்திரிகை என்பதைவிட நண்பர்களுக்குள் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை என்பதே பொருத்தம். பாதி இதழ்கள் தபாலில் கொஞ்சம் கொஞ்சமாக பணம்சேர்த்து மாதம் முழுக்க ஒன்றிரண்டாக அனுப்பப்படும். மிச்ச இதழ்கள் நேரில் கொண்டுபோய் கொடுக்கப்படும்.

இந்த வட்டத்துக்கு வெளியே அன்று சீரிய இலக்கிய வாசிப்பே இல்லை. அது சுஜாதா,பாலகுமாரன், இந்துமதி,சிவசங்கரி போன்றவர்களின் கொடி பறந்த காலகட்டம். அவர்களே இலக்கியவாதிகள் என கல்வித்துறையும் ஊடகங்களும் நம்பிய காலம். பாலசந்தர்- பாரதிராஜா ஒப்பீடு, மணியன் -சாவி சண்டை, சுஜாதா-பாலகுமாரன் போட்டி ஆகியவைதான் தமிழ்ச்சமூகத்தின் கலாச்சாரக் கவலைகள்.

எண்பதுகளில் பாவை சந்திரன் புதுமைப்பித்தனின் ‘மனித யந்திரம்’ என்ற கதையை குங்குமம் இதழில் வெளியிட்டபோது ”இவர் தமிழில் கதைகள் எழுதிய பழைய எழுத்தாளர். சொந்தப்பெயர் சொ.விருத்தாசலம்’ என்று அறிமுகம் கொடுத்து பிரசுரிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. குமுதம் ராணி விகடன் ஆகியவற்றுக்கு மேல் குங்குமம் இதயம் சாவி ஆகியவை பரபரப்பாக விற்றன. தொடர்கதைகளின் பொற்காலம் என்று அதைச் சொல்லலாம்.

கொஞ்சம் மேலே வந்தால் முற்போக்கு இலக்கியம். அப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  இளவேனில் போன்றவர்கள் பிரிந்துசென்றமையால் கடுமையான விவாதங்களில் ஈடுபட்டிருந்தது. சோவியத் நூல்களை ஒட்டிய ஒரு இலக்கியச்சூழல் அது. அதை ஒட்டியதுபோல வானம்பாடி கவிதைகள். மு.மேத்தா, நா,காமராஜன், அப்துல் ரகுமான் ,சிற்பி , மீரா போன்றவர்களின் கவிதைகள் காதல்கடிதம் எழுதும் கல்லூரி இளைஞர்களுக்கு பிடித்தமானவையாக இருந்தன.

இச்சூழலில் எழுத்து புதுக்கவிதை முன்னோடிகள் எல்லாம் ஏதோ சோழர்கால கல்வெட்டில் தெரியும் மனிதர்கள் போல பின்னுக்குச் சென்றிருந்தார்கள். ஊதல்காற்றில் கைவிளக்கை அணையாமல் பொத்திக்கொண்டுபோவதுபோல சில சிற்றிதழ்கள் சீரிய  இலக்கியத்தின் தொடர்ச்சியை தக்க வைக்க முயன்றார்கள். கொல்லிப்பாவை அத்தகைய ஒரு முயற்சி. இந்தக்காலகட்ட சிற்றிதழ் இயக்கத்தின் முக்கியமான பங்களிப்பே இந்த தொடர்ச்சியை பாதுகாத்ததுதான் என்று நினைக்கிறேன். கொல்லிப்பாவையில் அண்ணாச்சி எழுத்து கவிஞர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் முக்கியத்துவம் அங்கேதான்.

நாகர்கோயில் அப்போதும் ஓர் இலக்கிய மையமாக இருந்தது. சுந்தர ராமசாமி ஒரு காரணம். ‘தெறிகள்’ இதழை நடத்திய உமாபதி அப்போது நாகர்கோயில் அருகே பணியாற்றினார். வெங்கட் சாமிநாதனின் ‘யாத்ரா’ இதழ் அ.கா.பெருமாள் அவர்களால் நாகர்கோயிலில் இருந்துதான் கொண்டுவரப்பட்டது. நல்ல இலக்கியத்துக்காக மட்டும் நடத்தப்பட்ட ஒரே புத்தகக் கடையான சோபிதம் நாகர்கோயிலில் இருந்தது. நகுலன், நீலபத்மநாபன் ஆ,மாதவன், மா.தட்சிணாமூர்த்தி போன்றவர்களின் பல நூல்களை நாகர்கோயில் ஜெயகுமாரி ஸ்டோர்ஸ் என்ர புத்தகக்கடை வெளியிட்டது.

சி.மணி, நகுலன் குறித்தெல்லாம் கொல்லிப்பாவையின் பழைய இதழ்கள் வழியாகவே நான் வாசித்தறிந்தேன். சமீபத்தில் கலைஞன் பதிப்பக வெளியீடாக அண்ணாச்சியே கொல்லிப்பாவையின் பழைய இதழ்களில் இருந்து ஒரு தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு நல்ல வரலாற்று ஆவணம் அந்நூல். அக்காலத்தில்தான் நாகர்கோயிலில் தன் வீட்டு மாடியில் காகங்கள் என்ற நண்பர் சந்திப்பை சுந்தர ராமசாமி நடத்தி வந்தார்.அதில்தான் அண்ணாச்சியின் பல கட்டுரைகள் முதலில் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

நாகர்கோயிலில் இருந்து அண்ணாச்சி மதுரைக்குச் சென்றபோதும் இலக்கியபோதையும் குடிபோதையும் ஏககாலத்தில் நீடித்தன. அங்கே சுரேஷ்குமார இந்திரஜித், ‘வைகை’ சிவராமன், சி.மோகன், முருகேசபாண்டியன் போன்றவர்களின் நட்பு உருவானது. சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சியை  அவர்கள் அங்கே நடத்தினார்கள். ராஜகோபாலன் நாகர்கோயிலில் இருந்து கொண்டுவந்த கொல்லிப்பாவை இதழில் தொடர்ந்து சில கட்டுரைகளை அண்ணாச்சி எழுதினார்.

அதன்பின் சென்னை. நான் அண்ணாச்சியைப்பார்க்கும்போது அவர் சென்னையில் இருந்தார். சென்னையில் அண்ணாச்சி முற்றாகக் கைவிடப்பட்ட மனிதர். சென்னையின் முக்கியமான இலக்கியக்குழுக்கள் கணையாழி, கசடதபற, தீபம்.  அவரால் எவற்றுடனும் இணைய முடியவில்லை. அவருக்கு எல்லாருடனும் தொடர்பிருந்தது. அவர் நடத்திய இதழ்கள் நின்றன. அண்ணாச்சி எழுதுவதை அனேகமாக நிறுத்திக்கொண்டார்.

இக்காலகட்டத்தில்தான் அவரது குடி மிதமிஞ்சி போயிற்று. காலையிலேயே குடிப்பார். பகல் முழுக்க சிறிய சிறிய அளவாக குடித்துக்கொண்டே இருப்பார். ரத்தத்தில் ஆல்ஹகால் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. வேட்டி சட்டையை ஒழுங்காக துவைப்பதில்லை. சட்டென்று உச்சிக்கு போதையேறும் பட்டைச்சாராயம்தான் அதிகமாகக் குடிப்பார் என்பதனால் விழுந்துவிடுவதும் உண்டு. உடம்பில் சிராய்ப்புகளும் உடைகளில் அழுக்கும் இருக்கும்.

நானும் அருண்மொழியும் ஒருமுறை அண்ணாச்சியுடன் பேசியபடியே சென்னைதெருவொன்றில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு நிமிசம் என்று சொல்லி அவர் சென்றார். ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்தார். அதற்குள் அவர் நன்றாகக் குடித்திருந்தது தெரிய வந்தது. நாகராஜ் மேன்ஷனின் அருகே ஒரு கடையில் சாராயத்தை விற்றார்கள். எந்நேரமும் அண்ணாச்சி இறங்கிச்சென்று குடிப்பார். காலையில் எழுந்ததுமே குடிப்பதற்காக கொஞ்சம் சாராயம் வாங்கி அறைக்குள் புத்தகங்கள் நடுவே பதுக்கி வைத்திருப்பார்.

கையில் குப்பியுடன் அண்ணாச்சியைத்தேடி வருபவர்கள் இருந்தார்கள்.  மாதக்கணக்கில் அவருடன் இலவசமாக தங்குபவர்களும் உண்டு. ஒருமுறை ஒரு கவிஞர் அவருடன் தங்கியிருந்தார். காலையில் நான் அண்ணாச்சியைப் பார்க்க போனபோது கவிஞர் அண்ணாச்சியை வசைபாடித்தள்ளிக்கொண்டிருந்தார். என்ன காரணம் என்றால் கையில் பணமில்லாமல் குடிக்கமுடியாமல் இருவரும் இருக்கும் நிலையில் அண்ணாச்சி மட்டும் ‘நைசாக’ சறுக்கிச் சென்று எங்கேயோ பத்து ரூபாய் தேற்றி ‘கட்டிங்’ அடித்துவிட்டு வந்து விட்டார். கவிஞர் தாயையும் தமக்கையையும் வசைபாடுவதைக் கேட்டுக்கொண்டு அண்ணாச்சி  குற்ற உனர்ச்சியுடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.

தினமணியில் அண்ணாச்சிக்கு அதிக வேலை இல்லை. அவர் ஒரு நாளிதழில் வேலைபார்த்த எழுத்தாளர். ஆனால் மிகமிகக் குறைவாகவே அவர் அவற்றில் எழுதியிருக்கிறார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி ஆகியோரை சில நல்ல பேட்டிகள் எடுத்திருக்கிறார். அதற்குக் காரணம் அவருக்கு அவர்களுடன் இருந்த நல்லுறவுதான். அவரது பொறுப்பில் தமிழ்மணி இருந்த குறுகிய காலத்தில் அதை இலக்கிய முக்கியத்துவத்துடன் நடத்த முயன்றிருக்கிறார். ஆனால் பொதுவாக தினமணியில் அவருக்கு பங்களிப்பே இல்லை என்றே சொல்லலாம்

அதற்குக் காரணம் அவரது குடிதான். அலுவலக நெறிகளைப் பேண முடியாதவராகவே அவர் இருந்தார். தினமணி கிட்டத்தட்ட அரசாங்க அலுவலகம் போன்றது என்பதனால்தான் அவர் அங்கே நீடிக்க முடிந்தது. அத்துடன் தினமணி ஆசிரியர்களாக இருந்த ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், இராம.சம்பந்தம் ஆகியோருக்கு  அவரது முக்கியத்துவம் தெரிந்திருந்தது. அத்துடன் அண்ணாச்சி தன் இடத்துக்காக போராடும் தன்மை கொண்டவர் அல்ல என்பதும் காரணம்.

அண்ணாச்சியின் சம்பளம் பிடித்தம்போக சொற்பமாகவே கையில் கிடைக்கும். அதை முதல்சிலநாட்களுக்குள் முடிந்த கடன்களை கட்ட செலவழித்துவிடுவார். பிறகு மாதம் முழுக்க கையில் பணமே இருக்காது. கடன் வாங்கியும் அன்பளிப்பாகவும் அன்றைய குடிக்கான பணத்தை திரட்டுவதிலேயே குறியாக இருப்பார். அலுவலகத்தில் பணம் கேட்டுக்கொண்டே இருப்பார் என்ற குற்றச்சாட்டு அவரது கௌரவத்தை பெரிதும் பாதித்தது. ஆனால் அவர் அன்றைய குடி என்பதற்கு மேலாக பணத்தை ஒரு பொருட்டாக நினைத்தவரே அல்ல. அவரது குடிக்கு மேல் எத்தனை பணம் அவர் கையில் இருந்தாலும் அது அனைவருக்கும் உரியதுதான்.

அவர் சென்னையில் ஒழுக்காகச் சாப்பிடுவதே இல்லை. நாகராஜ்மேன்ஷன் அருகே உள்ள டீக்கடையில் இரண்டு இட்டில் சாபிடுவார். மதியம் அலுவலகத்து கேண்டீனில் ஒரு தயிர்சாதம். இரவு மீண்டும் இரு இட்டிலி. குடிக்கும்போது பொட்டலம் இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கும் உப்பு காரம்போட்டு  வறுத்த பருப்பு வாங்கிக்கொள்வார். அதுகூட வாங்க பணம் இல்லாமல் வெறும் உப்புக்கல்லை நக்கிக்கொண்டு சாராயம் குடிப்பதும் உண்டு.

குடிதவிர வேறு எதுவுமே இல்லாத அண்ணாச்சியின் சென்னை வாழ்க்கையில் சிறிய இடைவெளியாக சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு வந்தது. அதில் முதல் இதழிலேயே நம்பிக்கை தரும் மூன்று இளம்கவிஞர்கள் என்று சுகுமார,சமயவேல்,ராஜசுந்தரராஜன் ஆகியோரைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். நல்ல கட்டுரை அது. தொடர்ந்து எழுதியிருக்கவும்கூடும். ஆனால் எட்டு இதழுடன் சுந்தர ராமசாமி இதழை நிறுத்திக்கொண்டார்.

ஒரு கட்டத்தில் புதுக்கவிதை தவிர எதையுமே அவர் படிக்காமலானார். கவிதைகளை மட்டும் படித்து குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்வார்.  இலக்கியவாதிகளின் மையமாக இருந்த அவரது அறை வெறும் குடிமையமாக ஆகியது. அக்காலகட்டத்தில்தான் நான் அடிக்கடி அவரது அறைக்குச் சென்று தங்குவது வழக்கமாக இருந்தது. தூசுப்படலத்தில் புத்தகநெரிசலுக்குள்  அவர் படுக்க அவரது உடலின் வியர்வையும் பிசுக்கும் பரவிய அவரது கட்டில்மெத்தை மேல் நான் படுத்துக்கொள்வேன். அவர் மீதான பிரியம் காரணமாக அந்த கட்டிலின் நெடியே எனக்கு மிக அந்தரங்கமாகப் பிடித்திருந்தது. என் மனதில் அண்ணாச்சி மிகமிக நெருக்கமான ஒரு உறவாக இருந்தார்.

நான் அண்ணாச்சியிடம் எனக்குபிடித்தது பிடிக்காததை பொழிந்து கொட்டுவேன். அப்போதெல்லாம் கருத்துக்களை பிளந்து பிளந்து போடுவது என் வழக்கம். அண்ணாச்சிக்கு சில இலக்கியவாதிகள் சில கருத்துக்கள் மீது திடமான பற்று இருந்தது. அது வெறும் பிரியமல்ல. அவரே வாசித்து உருவாக்கிக் கொண்ட இலக்கியக் கருத்துக்கள். அவற்றுக்கு இடையேயான முரண்பாடுகளை அவர் சிந்தித்து தெளிவுபடித்திக்கொண்டிருந்தார். நாம் அவரது கருத்துக்களை மாற்ற முடியாது. சுந்தர ராமசாமியும் பிரமிளுமே அவரது கருத்துக்களை மாற்ற முடியவில்லை.

அண்ணாச்சிக்கு புதுமைப்பித்தன் ஒரு பெரும் கலைச்சிகரம். அவரது படைப்புகள் பெரும்பாலும் வடிவ அமைதியும் ஒத்திசைவும் கொண்ட சிரந்த கலைப்படைப்புகள் என அவர் எண்ணினார். புதுமைப்பித்தனுக்குப் பின்னர் சுந்தர ராமசாமியை தமிழ் உரைநடையின் சாதனையாளர் என அவர் நினைத்தார். மிகக் கவனமாகச் சொற்களைச் சேர்த்துச் சொல்பவர் அவர். சிறுகதை நாவல் என சுந்தர ராமசாமியை தூக்கிப்பேசமாட்டார். சுந்தர ராமசாமியின் தமிழ் உரைநடையையே அவரது சாதனையாக அவர் எண்ணினார்.

அதேபோல தமிழ்க்கவிதையின் சாதனையாளராக அவர் பிரமிளை எண்ணினார். ஆனால் பிரமிளின் விமரிசனக் கருத்துக்கள், கதைகள் எதையுமே அவர் பொருட்படுத்தவில்லை. ஜெயகாந்தனை அவரது கம்பீரமான இலக்கிய ஆளுமைக்காக, பண்பாட்டில் அவர் ஊடுருவிய விதத்துக்காக அண்ணாச்சி போற்றினார்.  இவர்களுக்குப் பின் வந்த முக்கியமான ஓர் இலக்கிய நிகழ்வு என்னும் இடத்தை எனக்கு அவர் அளித்து எழுதியிருக்கிறார். ஆனல் என் நாவல்களையே அவர் முக்கியமாக எண்ணினார். என்னுடைய விமரிசனக் கருத்துக்களின் கோணத்தை அவர் பொதுவாக ஏற்கிறார். ஆனால் பெரும்பாலும் என்னுடைய கருத்துக்களை மறுத்தார்.

அண்ணாச்சி அவரது புதுமைப்பித்தனும் கயிற்ரரவும் ப சுவய்யா கவிதைகள் ஆய்வு போன்ற நூல்களில்  என்னுடைய கருத்துக்களை விரிவாக மறுப்பதற்கே அவர் அதிக பக்கங்களைச் செலவிட்டிருக்கிறார். வேடிக்கை என்னவென்றால் நான் என் கருத்துக்கள் பலவற்றை அவரிடம் பேசிப்பேசியே உருவாக்கினேன். அப்போதெல்லாம் அண்ணாச்சி பிரியமான புன்னகையுடன் சும்மா கேட்டுக்கொண்டிருந்தாரே ஒழிய ஒரு முறைகூட மறுத்து வாதாடியதில்லை. ஜெயகாந்தனைப்பற்றி சுந்தர ராமசாமியும் , சுந்தர ராமசாமியைப்பற்றி பிரமிளும் இதேபோல கடுமையான விமரிசனங்களை முன்வைக்கும்போதும் அண்ணாச்சி கண்களில் பிரியமான சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்திருப்பார். ஆனால் அவரது கருத்துக்கள் திடமானவை என்பதை அவர் எழுதும்போது அவர்கள் கண்டுகொண்டிருப்பார்கள்.

பிரமிள், ஜெயகாந்தன் ஆகியோரின் சில குணச்சிக்கல்களை அண்ணாச்சி ஒத்துக்கொள்வார். ஆனால் ஒருபோதும் சுந்தர ராமசாமியை குறைசொல்வதை ஏற்க மாட்டார். அவரைப் பொருத்தவரை சுந்தர ராமசாமி அப்பழுக்கற்ற முழுமையான ஆளுமை. அவரது ஆளுமையை அண்ணாச்சி வழிபட்டார். தன்னுடைய குறைகள் சிதறல்கள் தத்தளிப்புகள் எதுவுமே இல்லாத ஒருவராக, தான் அந்தரங்கமாக ஆக விரும்பும் தன் மறுபாதியாக அவரை அண்ணாச்சி எண்ணினார். அந்த வழிபாட்டுணர்வு கடைசி வரை அவரிடம் இருந்தது.

1994ல்  நான் அண்ணாச்சியின் அறைக்குச் சென்றேன். அன்று அவர் குடிக்கவில்லை. புதிய வெள்ளை ஆடைகள் அணிந்திருந்தார். என்ன விசேஷம் என்று கேட்டேன். அன்று அவரது  46 ஆவது பிறந்தநாள். காலையில் இருட்டிலேயே எழுந்து அமர்ந்திருக்கிறார். பலவகையான எண்ணங்கள். ஏக்கங்கள். எல்லாவற்றையும் விரலிடுக்கு வழியாகவே நழுவவிட்டுவிட்டோம் என்னும் உணர்வு. நெடுநேரம் அழுதிருக்கிறார். இனிமேல் புதிய ஒரு வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறார். குடிக்கக் கூடாது. நெடுநாள் கனவான புதுக்கவிதை வரலாறை எழுதி முடிக்கவேண்டும். அதற்காக புத்தகங்களை எடுத்து அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும்போதுதான் நான் வந்துசேர்ந்தேன்.

நான் அப்போது விஷ்ணுபுரம் எழுதிக்கொண்டிருந்தேன். கனவு என்பதே என்னை உற்சாகப்படுத்தும்.  நானும் அண்ணாச்சியும் ஆவேசமாக புதுக்கவிதை வரலாற்றைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். நான் அதற்கு ஒரு முன்வரைவை உருவாக்கினேன். எந்த கவிஞர்களைப்பற்றி விரிவாக எழுதுவது என்றெல்லாம் பேசினோம். நான் கிளம்பி செந்தூரம் ஜெகதீஷைப் பார்க்கச் சென்றேன்

ஆனால் அன்றும் அண்ணாச்சி குடித்தார். மாலையில் அவர் அறையில் அவர் இல்லை. இரவு வரை வரவில்லை. பிற்பாடு அவர் அந்நாளைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார்.

நிஜம்

நேற்றைப்போலவே
இன்றைப்போலவே
ஏதுமின்றி
கடந்துபோயிற்று
நாற்பத்தாறாவது ஆண்டும்

காலையிலும் மாலையிலும்
உடன்வரும் நெடிய நிழலை
உச்சிப்போதில்
நாய்க்குட்டியென
காலடியில்
பதுங்கிவரும் நிழலை
அறிவேன்

அறிந்திலேன் இதுவரை
நிழலின் நிஜத்தை

அண்ணாச்சியின் மனதில் அந்த ஏக்கம் நீடித்து வளர்ந்திருக்க வேண்டும். வீணாகப்போய்க்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு. ஒன்றும் செய்யாமலேயே வாழ்நாள் தீர்கிறது என்ற அச்சம். நாற்பது வயதில் அந்த உணர்வு வலுவாகவே உருவாகும்.  அது வாழ்நாளின் பாதி தாண்டியதை உணரும் பருவம். நாட்கள் குறைகின்றன என அலாரம் அடிக்கும் கட்டம். அண்ணாச்சி அவர் எழுதிய கவிதைகளை சேர்த்து ஒரு சிறு தொகுப்பாகக் கொண்டுவந்தார். ”அப்படியே நிற்கட்டும் அந்த மரம்” என்ற அந்த தொகுப்புக்கு அவருக்கு 1200 ரூபாய் செலவாகியது. அது அவருக்கு மிகப்பெரிய தொகை. ஊருக்கு அனுப்ப பணம் இல்லாமல் அந்தக் குற்ற உணர்வில்நாளெல்லாம் அழும் மனிதர் அவர்.

ஆனால் அவருக்கு அது தேவைப்பட்டது. ”நல்ல கவிதை கெடையாது. அது எனக்கும் தெரியும்.செரி நாம வந்ததுக்கு அடையாளமா ஒண்ணு இருக்கட்டுமே” என்று எனக்கு ஒரு பிரதி அளித்தார். அந்த நூலின் தலைப்பே அவரது ஏக்கத்தின் சின்னம்தான். எங்கும் அர்த்தமின்மையைக் கண்டு வெறுத்துப்போய் கோயிலுக்குச் சென்று அங்கே தெய்வத்தின் முகத்தில் அதே அர்த்தமற்ற வெறிப்பைக் கண்டு குரூர திருப்தியுடன் திரும்பிவருபவரைப்பற்றிய ஒரு கவிதை அதில் உண்டு. அது கிட்டத்தட்ட அண்ணாச்சியின் பிரகடனம்போல.

இந்தக் காலகட்டத்தில் அண்ணாச்சிக்கு தமிழினி தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்பைப் பற்றி என்னிடம் மிக மனம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.  இன்று அவரது பேரைச்சொல்லும் படைப்புகள் தமிழினி தொடர்பால்– கட்டாயத்தால் என்றே சொல்ல வேண்டும்–  உருவானவையே. ‘புதுமைப்பித்தனும் கயிற்றரவும்’ ,அண்ணாச்சியின் ரசனையைச் சொல்லும் பெருந்தொகுப்பான ‘கொங்குத்தேர் வாழ்க்கை’ அவரது நெடுநாள் கனவான ‘தமிழ்ப்புதுக்கவிதை வரலாறு’ மற்றும் அவரது கவிதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பான ‘ராஜமார்த்தாண்டன் கவிதைகள்’  தமிழினி வெளியீடாக வந்தன. இவற்றில் பெரும்பகுதியை அண்ணாச்சி தமிழினி அலுவலகத்தில் கட்டாயபப்டுத்தி உட்கார வைக்கப்பட்டு எழுதினார்

இலக்கியத்தின் அண்ணாச்சியின் பங்களிப்பு புதுக்கவிதை விமரிசகர்- வரலாற்ராசிரியர்- தொகுப்பாளர் என்னும் தளத்தில்தான். கொங்குத்தேர் வாழ்க்கை அவரது சாதனைதான். புதுக்கவிதைக்கு மேலும் விரிவான வரலாறு வரக்கூடும். அண்ணாச்சியே அபப்டி ஒன்றை எழுத்வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் முதல் முயற்சி அவர் எழுதியதுதான். அண்ணாச்சி முனைவர் பட்டத்திற்காக புதுக்கவிதையை பற்றி எழுதியிருந்தால் அது அவரோடு போயிருக்கும். விட்டுவிட்ட முயற்சி பல்லியின் அறுந்த வல் என வாழ்நாள் முழுக்க துடித்துக்கொண்டிருந்தது.
[மேலும் ]

அண்ணாச்சி 4
June 16th, 2009
ஜெயசேகரன் ஆஸ்பத்திரியில் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி சட்டென்று கண்ணீர் விட்டு அழுதார்.” எதையோ நம்பி என்னமோ செஞ்சாச்சு…குடும்பத்த காப்பாத்தல்ல. பிள்ளையளுக்கு ஒண்ணுமே செய்யல்ல. ஒரு நல்ல துணி எடுத்து குடுத்ததில்லை. நல்லா படிகக் வைக்கல்லை…ஒண்ணுமே செய்யாம போறேன்..” ஏற்கனவே பலமுறை கேட்ட அழுகைதான். ஆனால் அப்போது கிட்டத்தட்ட மரணப்படுக்கையில் கேட்டபோது வயிற்றைக் கலக்கியது.

பிழைத்துக்கொண்டபின் அவர் சென்னை செல்லவில்லை. விருப்ப ஓய்வு கொடுத்தார். கண் எதிரிலேயே அவர் மீண்டு வந்தார்.  புல் கருகிப்போயிருந்தாலும் ஒரே மழையில் மீள்வது போல என்று பட்டது. அவரை மீட்டது இரண்டு விஷயங்கள், ஒன்று காலச்சுவடில் அவர் பார்த்த வேலை. இரண்டு, மீன். காலச்சுவடில் அவர் அவருக்குப் பிடித்தமான எம்.எஸ் போன்றவர்களுடன் சேர்ந்து வேலைசெய்தார். அவர் விரும்பியது போலவே சிற்றிதழ் வேலை.

காலச்சுவடு இதழில் அவர் கௌரவமாக இருந்தார்.  மெய்ப்பு நோக்குவார். இதழுக்கு வரும் கவிதை கதைகளை வாசிப்பார். அங்குள்ள அனைவருடனும் அவருக்கு நல்ல உறவிருந்தது. அவர் சுந்தர ராமசாமியின் மகன் கண்ணனை ராமசாமியின் இடத்தில் வைத்திருந்தார். நெய்தல் கிருஷ்ணன் மட்டும்தான் அவர் ஒருமையில் அழைத்து வந்த நண்பர்.

ஆகவே அவர் பகலில் குடித்துவிட்டு காலச்சுவடுக்கு வரமுடியவில்லை. காலை பதினொரு மணிக்கு வீட்டில் சாப்பிட்டுவிட்டு வருவார். மதியம் அனேகமாக சாப்பிடுவதில்லை. மாலை அன்றைய குடிக்கு ஏதாவது திரட்டிவிட்டு ஊருக்குக் கிளம்பிச்செல்வார். வீட்டில் மீன்குழம்புடன் சோறு இருப்பதனால் அவர் வேறு எங்கும் தங்குவதில்லை. கொஞ்சமாக மது குடித்துவிட்டு ஊர் திரும்பி சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார். மீனும் சோறும் அவரது ஆரோக்கியத்தை மீட்டன. நான் அண்ணாச்சியை அவரது கடைசிக்காலத்தில் பார்த்தது போல அத்தனை திடமாகவும்  உற்சாகமாகவும் எப்போதுமே பார்த்தது இல்லை.

அண்ணாச்சியின் மனைவிபெயர் ரங்கம்மாள். மகள் அஜிதா. மகன் கிருஷ்ணபிரதீப். அவரது மனைவிக்கு அவர்மேல் தீராத மனவருத்தம் இருந்தது, அது இயல்பே. ஆனால் அவரது இரு பிள்ளைகளுக்கும் அண்ணாச்சி மேல் ஆழமான பிரியம் மட்டுமே இருந்தன. அவரது உடல்நிலை குறித்த  கவலையும் துக்கமும் இருந்ததே ஒழிய அவரது ஊதாரித்தனம் பொறுப்பின்மை ஆகியவை சார்ந்த சிறிய மனவருத்தம்கூட இல்லை. இது ஆச்சரியமான ஒன்றுதான். அதற்கான காரணம் அவர்களை பார்க்கும்போது தெரியும். இருவருமே அண்ணாச்சியின் சாயல் கொண்டவர்கள். அதே பிரியமான புன்னகை. அதே மனமும் இருக்கலாம்.

பையன் சரியாகப் படிக்கவில்லை என்ற எண்ணம் அண்ணாச்சிக்கு இருந்தது. சென்னையில் அதைப்பற்றி பலமுறை புலம்பியிருக்கிறார். ஆனால் அவன் கல்லூரியில் நன்றாகவே படித்து ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்பெற்று நாமக்கல்லில் ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். மகள் திருமணத்துக்காக அண்ணாச்சி கொஞ்ச நாள் கவலை கொண்டிருந்தார். ஆனால் அதுவும் அவருக்கு மிகச்சிறப்பாகவே அமைந்தது.  அண்ணாச்சியின் மகள் அழகாக இருப்பார்.

அவரது மகள் திருமண முதல்நாள் இடையன்விளைக்கு நானும்  வேத சகாய குமாரும் சென்றிருந்தோம். அண்ணாச்சி அன்று வாழை இலை வரவில்லை என்று நாகர்கோயில் சென்றுவிட்டார். பெண்ணை வாழ்த்தினோம்.  ராஜமார்த்தாண்டனின் கிராமத்து வீடு அக்காலத்து பெரிய வீடு. ஓடு வேய்ந்தது. மரத்தாலான மாடி உண்டு. நல்ல காற்றோட்டமான பெரிய மாடி அறைகள். அதில் சன்னலோரம் அண்ணாச்சி உட்கார்ந்து வாசிக்கும் அறை. ஒன்பது மணிக்குத்தான் அண்ணாச்சி வந்தார்.. மனநிறைவால் எங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு கண்கலங்கினார்.

”என்ன ராஜம் ·ப்ரீ ஆயாச்சு…இனிமே காசி ராமேசரம்னு உண்டா?” என்றார் வேதசகாயகுமார். ”…எல்லாம் இங்கதான்”என்று சிரித்தார். அவரது மகள் திருமணத்துக்குத் திரண்டு வந்த முக்கியமானவர்கள் அந்த சிற்றூருக்கு அவரது முக்கியத்துவத்தைக் காட்டினர் என்றால் மிகையல்ல. அண்னாச்சி ஊரில் உள்ள சல்லிப்பயல்கள் கூட சேர்ந்து குடிப்பவர் என்ற பிம்பம் இருந்தது. அவரது குடும்பத்துக்கேகூட அவருக்கு எவ்வளவு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது அப்போது தெரிந்திருக்கும்

நெய்தல் கிருஷ்ணன் அவருக்கு சென்ற வருடம் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார். நாகர்கோயில் ரோட்டரி கிளப்பில் நடந்த அந்த விழாவில் கொடிக்கால் அப்துல்லா தலைமை வகித்தார். நாஞ்சில்நாடன், சுரேஷ்குமார் இந்திரஜித், முருகேசபாண்டியன், சுகுமாரன் ஆகியோர் பேசினார்கள். நானும் பேசினேன். அண்ணாச்சி தன்னுடைய வாழ்க்கை தன் நண்பர்களால் எப்படி நிறைவும் பொருளும் கொண்டது என்று நெகிச்சியாகப் பேசினார்

கிளம்பும்போது அண்ணாச்சியின் மனைவி கிருஷ்ணனிடம்  ”எங்க குடும்பத்துக்கு பெரிய கௌரவம்சேத்துட்டீங்க” என்று சொன்னார். உயிரெழுத்து  அவரது படத்தை அட்டையில் போட்டு வெளியிட்ட மலரும் அவரது முக்கியத்துவத்தை அனைவருக்கும் காட்டியது.. பல வருடங்களாக அண்ணாச்சி தனக்கே தான் இழைத்துக்கொண்ட அநீதிகளில் இருந்து மெல்ல மெல்ல கரையேறினார் என்று சொல்லலாம்.

சென்ற ஏப்ரலில் அவரது மகனுக்கும் திருமணம். அதற்கு நானும் வேதசகாயகுமாரும் சென்றிருந்தோம்.  நாங்கள் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணாச்சி வந்தார். ”பிரகாசமா இருக்கீங்க அண்ணாச்சி” என்றேன். மகிழ்ச்சியாகச் சிரித்தார். அவரது வாழ்க்கையின் பொன்னாட்கள் அவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கான இன்பங்களை இயற்கை அதுவரை மறைத்து வைத்திருந்தது. ஆகவேதான் அவரை அது மீண்டெழச்செய்தது.

ஒரு மனிதராக ராஜமார்த்தாண்டன் தேடிய நண்பர்வட்டம் அத்தனை பெரியது. அவருக்கு பிடிக்காதவர்களோ அவரைப் பிடிக்காதவர்களோ இல்லை. அது அவரது ஆளுமையின் அடையாளம். ஒட்டுமொத்தமாக அண்ணாச்சியைப்பற்றி ஒரே ஒரு சொல் சொல்லவேண்டுமென்றால் ”பண்பாளர்” என்றே சொல்லவேண்டும். தமிழிலக்கிய உலகின் ஆகச்சிறந்த பண்பாளர் அவரே.  ஒருபோதும் ஒருசொல்கூட எவரையும் இகழ்ந்தோ புண்படுத்தியோ பேசியவர் அல்ல.  அந்தரங்கமாகக்கூட. ஏனென்றால் அத்தகைய சிந்தனைகளே அவரது மனதில் இல்லை.

அண்ணாச்சிக்கு பொறாமையோ மனக்கசப்புகளோ இருந்ததாக நான் அறிந்ததே இல்லை. அவரை வசைபாடினால்கூட ”அவரோட கருத்து அது” என்றே அவர் மென்மையாகச் சொல்வார். எனக்கும் சுந்தர ராமசாமிக்கும் இடையே கருத்துவேற்றுமை வந்ததில் அவருக்கு கடுமையான வருத்தம் இருந்தது. அதை மென்மையாக பலமுறை சொன்னார். பின்னர் விட்டுவிட்டார். அந்த கருத்துவேற்றுமை மோதலாக ஆனபோது அவர் சுந்தர ராமசாமியின் தரப்பில் நின்றார். எழுதினார். ஆனால் மென்மையாகவே என்னை மறுத்திருந்தார்.

ஒருமுறை சுந்தர ராமசாமி அ.மார்க்சைப் பற்றி கடுமையாக மறுத்துப்பேசிக்கொண்டிருந்தார். அவரது பங்களிப்பு முற்றிலும் எதிர்மறையானது என்று சொன்னார். அவர் பேசி முடித்தபின் ”நீங்க என்ன நெனைக்கிறேள்?” என்றார் . ராஜமார்த்தாண்டன் மென்மையாக அதை மறுத்தார். தமிழில் அ.மார்க்ஸ் ஒரு சொல்லாடலை உருவாக்கியிருக்கிறார் என்றார். ”இலக்கியத்தில உள்ள கருத்துக்களுக்கு இருக்கிற அதிகாரத்தைப்பத்தி அவருதான் சார் சொன்னார்” என்றார். அ.மார்க்ஸ் தமிழின் முக்கியமான ஒரு கருத்துத்தரப்பு என்றார். அவரது இலக்கியக்கொள்கைகளை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று மேலும் விளக்கினார்

அ.மார்க்ஸ் புதுமைப்பித்தனை சரமாரியாக விமரிசனம்செய்திருக்கிறார். ஓரளவு தனிப்பட்ட விமரிசனம் அது. அதில் அண்ணாச்சிக்கு வருத்தம் உண்டு, புதுமைப்பித்தன் அவருக்கு கடவுள் போல. ஆனால் அதற்காக அவர் அ.மார்சை மறுக்கமாட்டார். அதுவெ அண்ணாச்சியின் குணம். ஒருவேளை அ.மார்க்ஸ் அண்ணாச்சியையே போட்டு வறுத்து எடுதிருந்தாலும் அந்தக் கருத்து மாறாது.

அண்ணாச்சியின் ஆளுமையை இப்போது எண்ணும்போது ஆச்சரியமளிக்கும் சில விஷயங்கள் உள்ளன. அவர் கேரளத்தில் பலகாலம் வாழ்ந்தவர். ஆனால் அவருக்கு மலையாளமே தெரியாது. மலையாள இலக்கியம் ,சினிமா, பண்பாடு,அரசியல் எதைப்பற்றியும் ஆரம்ப அறிமுகம் கூட கிடையாது. அவர் கும்பகோணத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அவருக்கு கும்பகோணம் பற்றிய ஞாபகமே கிடையாது. அவர் சென்னையில் வாழ்ந்திருக்கிறார். சென்னையின் மொழி அவரில் ஒட்டவே இல்லை. அவர் கடைசிவரை அகஸ்தீஸ்ரம் வட்டார வழக்கையே பேசிக்கொண்டிருந்தார். ‘இனி’ என்பதை ‘எனி’ என்றுதான் சொல்வார்.

அண்ணாச்சி ஈழக்கவிதையின் பெரும்பகுதியை பொருட்படுத்தியதில்லை. ஈழ விடுதலைப்போராட்டம் சார்ந்த கவிதைகளை ‘கோசங்கள்’ என்று சொல்லி ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டார். கவிதையின் அடக்கமும் குறிப்புணர்த்தும் விதமும் அவர்களுக்கு கைவரவில்லை என்றே நினைத்தார். ஆகவே ஈழ வாசகர்களில் கணிசமானவர்களுக்கு அவரை பிடிக்கவில்லை.  அப்படியும் ஒருவகை கவிதைகள் இருக்கலாமே என்ரு நான் கேட்டிருக்கிறேன். ”மிகையாச்சொன்னா அதில உண்மை இல்லாம ஆயிடுதே” என்றார்

அதேசமயம் ஈழக்கவிதைகளில் முக்கியமானவற்றை பெரும்பாலும் அவர் அடையாளம் கண்டு அங்கீகரித்திருக்கிறார். அவரது பெருந்தொகையில் சு.வில்வரத்தினம் முதல் திருமாவளவன் வரை ஈழத்தின் முக்கியமான எல்லா கவிஞர்களும் உண்டு. பஹீமா ஜகான் போல யாரென்றே தெரியாதவர்களைக்கூட அவர் அடையாளம் கண்டு சேர்த்திருக்கிறார்.

ஆனால் போராட்டக்கவிதைகளை புறக்கணித்த அண்ணாச்சிக்கு ஈழப்போராட்டம் மீது அபாரமான ஈடுபாடு இருந்தது. விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டபோது மனம் கொதித்திருக்கிறார். பிரபாகரனின் மரணம்தான் கடைசியில் அவரை துன்பத்தில் ஆழ்த்திய நிகழ்ச்சியாக இருந்திருக்கிறது. நாலைந்து நாட்கள் அவர் எதுவுமே செய்யாமல் குடியில் மிதந்து கரைந்திருக்கிறார். இந்த முரண்பாடை நாம் அவரது ரசனையை வைத்தே புரிந்துகொள்ள முடியும்.

அண்ணாச்சி குடிகாரர். ஆகவே குடிகாரர்களுடன் அவருக்கு இயல்பான நட்பு சாத்தியமாகியது. ஆனால் அவர் குடியை ஒருபோதும் நியாயப்படுத்தியவரல்ல. அதில் கலகமோ புரட்சியோ இருப்பதாக அவர் சொல்லவில்லை. அது ஒரு பெரிய பலவீனம் என்றே அவர் நினைத்தார். ஒரு நோய் என்றே சொன்னார். குடிகாரர்களுடன் சேர்ந்து அவர் கலகங்களில் ஈடுபட்டதில்லை. குடித்துவிட்டு சற்றுகூட வரைமீறி நடந்ததில்லை. குடித்தபின் அத்தகைய நட்புகளை தவிர்த்துவிடுவார். சொல்லப்போனால் அவர் குடித்தபின் மிகமிக நிதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்.

அண்ணாச்சி பழந்தமிழிலக்கியத்தில் படிப்பு உள்ளவர். கம்பராமாயண ஈடுபாடு இருந்திருக்கிறது. ஆனால் அவர் நவீனகவிதையின் எல்லையை விட்டு அதிகமாக விலகிச்செல்லவில்லை. புதுமைப்பித்தன் தவிர பிற முன்னோடிகளை  அவர் கூர்ந்து வாசித்தது இல்லை. பின்னர் வந்த எழுத்துக்களில் கணிசமானவர்களை அவருக்கு பழக்கமில்லை. ஆனால் என்னுடைய படைப்புகளை மிகக்கூர்ந்து வாசித்திருக்கிறார். எல்லா சந்தர்ப்பங்களிலும் சொல்லியும் இருக்கிறார். அவரைக் கவர்ந்த என் முதல் படைப்பு ‘படுகை’தான். என்னை அதை வாசித்தபின் சந்தித்தபோது இரு கைகளையும் பற்றிக்கொண்டு கண்கள் மின்ன ”நல்லாருக்கு….” என்றார்.

அண்ணாச்சியின் உருவம் நெடுநாட்களுக்கு கண்களில் நீடிக்கும். மெலிந்த உடலுடன் நம் இருகைகளையும் பிடித்துக்கொண்டு ”பெறவு?” என்று கேட்கும் அன்பே உருவான முகம்.
[நிறைவு]

விமர்சகர் ராஜமார்த்தாண்டன் நினைவாக வழங்கப்படும் கவிதைவிருது இம்முறை தாணு பிச்சையாவின் ’உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ என்ற கவிதைத்தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. 2009 ஆம் வருடத்துக்கான விருது இது. கவிஞர்கள் சுகுமாரன், க.மோகரங்கன், இதழாளார் கவிதா முரளிதரன் ஆகியோர் நடுவர்களாக அமைந்து விருதைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ரூ 10000மும் விருது பத்திரமும் அடங்கிய இவ்விருது 2011 ஜனவரி 30 அன்று நாகர்கோயில் ஏ.பி.என் பிளாசா அரங்கில் காலை பத்துமணிக்கு நிகழும் விழாவில் அளிக்கப்படுகிறது. தேவதேவன் விருதை வழங்குகிறார்

தாணு பிச்சையாவுக்கு வாழ்த்துக்கள்

தாணுபிச்சையாவின் கவிதைகள்: உருகிப் படிமமாகி ஒளிரும் உலகம்

September 1st, 2009
”அறிவியல்புனைகதைகள் அறிவியல்ன் சோரக்குழந்தைகள், அவை அறிவியலும் அல்ல இலக்கியமும் அல்ல” என்றார் மலையாளக்கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா என்னிடம். நெடுநாள் அந்த எண்ணம் என் மனத்திலும் இருந்தது. ஏன் நாம் அறிவியலை இலக்கியமாக எழுதவேண்டும்? அதன் மேல் நீங்கள் அறிவியல் கேள்விகளைக் கேட்டால் ”அய்யய்யோ, நான் இலக்கியம், வெறும் கற்பனை” என்று அது சொல்லும். இலக்கியக்கேள்வி கேட்டால் ”இதெல்லாம் அறிவியல், சும்மா இரு” என்று அதட்டும்.

கொஞ்சநாள் கழித்து சுந்தர ராமசாமி குமரிமாவட்ட வரலாறு சார்ந்து ஒரு நாவலை எழுதிய எழுத்தாளர் பற்றிச் சொல்லும்போது ”வரலாற்று நாவல் என்று அவர் சொல்வது ஒரு ஹம்பக். வரலாற்றுத்தகவலை கேள்விகேட்டால் இலக்கியம் என்பார். இலக்கியத்தை கேள்விகேட்டால் வரலாறு என்பார்” என்றார். அப்போது எனக்கு ஒரு மணி அடித்தது.

இவர்களெல்லாம் ஒரு சுத்த இலக்கியத்தை கற்பனைசெய்கிறார்களா? இதையே சமூகவியல் மானுடவியல் சார்ந்தும் சொல்ல ஆரம்பித்தால் அப்புறம் இலக்கியம் எதைத்தான் பேசும்?

அதைச்சார்ந்து இன்னொரு விவாதம் அப்போது உருவானது. சென்னை சார்ந்த ஒரு இதழியல் எழுத்தாளர் வட்டார வழக்கு ஒரு ஹம்பக் என்று சொல்லி அதெல்லாம் வெறும் தகவல்கள் என்றார். அதைச்சார்ந்து நாஞ்சில்நாடன் கதைகளை பற்றி பேசும்போது கி ராஜநாராயணன் ‘தகவல்கள்தான் இலக்கியம். எதைச் சொல்லவேண்டும் சொல்லக்கூடாது எப்படிச்சொல்லவேண்டும் என்று தீர்மானிப்பதுதான் அதிலே உள்ள கலை’ என்று சொல்லி நாஞ்சில் அளிக்கும் விரிவான வேளாண்மைத்தகவல்கள்தான் அவரது இலக்கியத்தின் தனிச்சிறப்பு என்றார்.

ஆனால் அது கலைஞனின் பதில். விமரிசகனுக்கு மேலும் விளக்கம் தேவை. எதற்காக கலைஞன் தன் படைப்பில் தகவல்களை பயன்படுத்துகிறான்? தகவல்கள் இலக்கியத்தில் என்ன பங்களிப்பை ஆற்றுகின்றன? கலைக்களஞ்சியத்தை அள்ளி வைத்தால் நாவலாகுமா? ஆனால் மேலான நாவல்கள் எல்லாமே கலைக்களஞ்சியத்தன்மையும் கொண்டிருக்கின்றனவே. வெறும்தகவல்கள் எங்கே எப்படி இலக்கியத்தகவல்கள் ஆகின்றன?

எனக்கான விளக்கங்களை நான் என்னுடைய நாவல் வழியாகவே உருவாக்கிக்கொண்டேன். விஷ்ணுபுரம் ஒரு குட்டிக்கலைக்களஞ்சியம். ‘கலைக்களஞ்சிய நாவல்’ என்று சொல்லப்படும் வகைக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஆக்கம் அது. அதில் உள்ள தகவல்கள் என்னவாக ஆகின்றன?

முதலில் அவை தகவல்களுக்காக படைப்பில் இடம்பெறுவதில்லை. மிகமுக்கியமான ஒரு தகவல் விடுபட்டிருக்கும். சர்வசாதாரணமான ஒரு தகவல் விரிவடைந்திருக்கும். அங்கிருந்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு தகவல் வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக, விரிவான அர்த்தத்தில் குறியீடாக, நிற்கும்போது மட்டுமே அது இலக்கியத்தில் இயல்பான இடம் பெறுகிறது.

ஆம், தகவல்கள் என்பவை புற உலகில் இருந்து நாம் எடுத்துக்கொள்ளும் புலன்சார்பதிவுகள், மற்றும் அவற்றின் மீதான விளக்கங்கள். ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளும் தகவல் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை உணர்த்துவதாக இருக்கும்போது அது ஒரு குறியீடாகிறது. இலக்கியத்தின் மொழி குறியீடுகளால் ஆனது. ஓர் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை அலகென்பதே குறியீடுதான். அந்தக் குறி£டுகளை அது புறவுலகில் இருந்து எடுத்துக்கொள்கிறது. அவற்றைப்பயன்படுத்தி மொழிக்கு நிகரான ஒரு தனிமொழியை [ Metalanguage] அது உருவாக்கிக் கொண்டு அதனூடாக பேசுகிறது

இலக்கிய ஆக்கத்தில் உள்ள தகவல்கள் எல்லாம் ஆசிரியன் அறிந்தோ அறியாமலோ குறியீடுகள்தான். அவை அவற்றுக்கு மட்டுமாக நிலைகொள்ளவில்லை. அவை பிற எதையோ உணர்த்தி நிற்கின்றன. துயரம் கப்பிய மனத்துடன் அன்னா கரீனினா வந்திறங்கும் ரயிலும் ரயில் நிலையமும் தல்ஸ்தோயின் பார்வையில் துல்லியமாக வடிக்கப்படுகின்றன. அந்த தகவல்கள் மூலம் அந்த ரயில்நிலயம் அவளுடைய துயரம் படர்ந்த புற உலகமாக ஆகிறது.

அந்தக் குறியீடுகளை அப்படி வாசிக்க முடியாத நிலையில் இருந்துதான் ஏன் இந்த தகவல்கள் என்ற மனநிலையை ஆழமில்லாத வாசகன் அடைகிறான். நாஞ்சில்நாடனின் வயல்கள், ரயில்கள், ஆறுகள், சாப்பாட்டுப்பந்திகள் எல்லாமே மீண்டும் மீண்டும் நுட்பமாக அவரது அக உலகின் குறியீடுகளாக நிற்பதை அவரது ஆக்கங்களில் காணலாம்.இலக்கியம் அறிவியலில் இருந்து தன் புறத்தகவல்களை எடுத்துக்கொணால் அது அறிவியல்புனைகதை. வரலாற்றில் இருந்து எடுத்துக்கோண்டால் அது வரலாற்றுப்படைப்பு. எங்கிருந்தும் அது தன் புறவுலகை அள்ளிக்கொள்ளலாம்.

இவ்வாறு புற உலகம் கவிதைக்குள் குறியீடுகளாக வந்தமைவதென்பது ஒரு மொழிச்சூழலில் ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கவேண்டிய ஒரு செயல்பாடு. இதுவே கலையாக்கம் என்பது. அதற்கு கலைஞன் புறவுலகில் குழந்தையின் கண்களுடன் ஈடுபடுபவனாக இருக்க வேண்டும். அகத்தை புறத்தில் படிய வைப்பதும் புறத்தை அகமாக ஆக்கிக்காட்டுவதும்தான் சொல்லப்போனால் இலக்கியத்தின் கலை. கவிதை என்பது அது மட்டுமே

சங்க காலம் முதலே தமிழ்க் கவிதையில் நாம் காண்பது இதுவே. நிலம் ஓயாது கலையாக ஆகிக்கொண்டிருக்கிறது. நிலத்தின் நுண்ணிய தகவல்கள். சிட்டுக்குருவியின் நகம் தாழைமடலின் முள் போலிருக்கும் என்ற தகவல். அதுவே மீனின் பல் போலிருக்கும் என்ற அடுத்த தகவல். மழையில் பெய்யும் அருவி ஓடை நீர் நோக்கி நீண்ட வெள்ளிய மரவேர் போலிருக்கும் என்ற தகவல். சங்கக் கவிதையின் அழகே புற உலகச் சித்திரங்கள்தான். ஆழம் அச்சித்திரங்கள் அகத்தைக் காட்டுவன என்பதுதான். மிக அதிகமாக புற உலகச் சித்திரங்கள் சங்ககாலத்து அகத்துறைப் பாடல்களிலேயே உள்ளன என்பதைக் காணலாம்.

தமிழ் நவீனக் கவிதையின் மிகப்பெரிய பலவீனம் என்பது அது புற உலகத்தை முற்றாகப் புறக்கணித்து தன்னை ‘தூய’ அகத்தின் குரலாக முன்வைக்க ஆரம்பித்தது என்பதே. தமிழின் நவீனக்கவிதை நவீனத்துவக் கவிதையாகவே உருவானது. இருத்தலியம் அதன் தத்துவ ஆழமாக இருந்தது. தன்னுள் தான் சுருங்குதல் என்ற அம்சம் அதன் இயல்பு. ஆகவே அதில் புற உலகமே இருக்கவில்லை. புற உலகை அது திட்டமிட்டு நிராகரித்தது

ஆகவே மீண்டும் மீண்டும் அது தனகென்றே உள்ள குறைவான படிமங்கள் வழியாக பேச ஆரம்பித்தது. அறை அதன் முக்கியமான படிமம். அறைக்குள் தனித்திருக்கும் ஒருவன் என்பதே தமிழ் நவீனக்கவிதை நமக்களிக்கும் படிமம். ஓரளவுக்கு இயற்கையின் பரவசம் நோக்கி திரும்பியவர்கள் பிரமிள், அபி, கலாப்ரியா, தேவதேவன் போன்ற சிலரே. சமீபமாக முகுந்த் நாகராஜன்

இன்றும் இந்நிலையை நாம் நவீனக்கவிதைகளில் காணலாம். இங்கே  நடுத்தர வற்க வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்ட மிகஎளிமையான சில புறப்பொருட்களுடன் கவிதையின் படிம உலகம் முடிந்துவிடுகிறது. அதன்பின் இலக்கியத்தில் இருந்தே பெற்றுக்கொண்ட  ‘அந்த பறவை’ ‘வண்ணத்துப்பூச்சி’ போன்ற சில கவியிருவகங்கள் [metaphors]

இன்று தமிழில் கவிதைக்கிருக்கும் சலிப்பூட்டும் தேக்கநிலையை தாண்டிச்செல்வதற்கு அவசியமானது கதவுகளை திறந்து விடுவது என்று படுகிறது. புற உலகம் அதன் முடிவில்லாத காட்சிகளுடன் உள்ளே வரட்டும். அது கவிதைகளில் அழகையும் அர்த்தத்தையும் நிரப்பட்டும். தமிழில் இன்னமும் கவிதை சென்று தொடாத வாழ்க்கை பரந்து விரிந்து கிடக்கிறது. கொல்லனும் கணியனும் கவிதை எழுதிய மரபுள்ள நமக்கு கவிஞன் என்ற தனி தொழிலாளி  உருவாகியுள்ள இன்றைய நிலை மிக அன்னியமானது. எல்லா மக்களும் தங்கள் உலகை நம் கவிதையின் தனிமொழிக்குள் கொண்டு வந்து சேர்க்கட்டும்

சமீபத்தில் ஆச்சரியமான ஒரு கவிதைத்தொகுதி கண்ணுக்குப் பட்டது. அது ஒரு பொற்கொல்லரால் எழுதப்பட்டது. பொற்கொல்லரின் வாழ்க்கை பொன்னுடன் இணைந்தது. கலையையே அன்றாடச் செயலாகக் கொண்டது. மானுட வாழ்க்கைக்கு அதன் பங்களிப்பென்பது அதற்கு அழகுசேர்ப்பதுதான். மிக நுண்மையான அலகுகளுடன் மிக நுண்மையான பொருட்களுடன் சம்பந்தப்பட்டது.  அது கவிதைக்குள் கொண்டுவரும் புற உலகம் முற்றிலும் வித்தியாசமானது. தாணுபிச்சையா எழுதிய ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’

ஏற்கனவே தமிழில் ஒரு பொற்கொல்லர் எழுதியிருக்கிறார் – தேவதச்சன். ஆனால் அவர் எழுதியவை நவீனத்துவக் கவிதைகள். அவர் அபூர்வமான அழகுள்ள கவிதைகள் பலவற்றை எழுதியிருந்தாலும் புற உலகம் அற்ற தத்துவப்பரப்பு அவரது கவியுலகம். தாணு பிச்சையா என்ற இந்த பொற்கொல்லரின் கவிதைகளில் அவர் அன்றாடம் புழங்கும் பொன்னின் நுண்ணுலகம் எழுந்துவரும்போது அது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கிறது.

மினுக்கம்
=======

குச்சியைப்பிடித்து
எழுதத்தெரியாத பிராயத்தில்
ஊதுகுழலையும்
உலைக்குறடையும்
பற்றிப்பிடிக்கவைத்த தாத்தா
காய்ச்சவும்
உருக்கவும்
மின்னூதவும் என
பொன்னைப்பழக்கியதும்
தேடத்தொடங்கிற்று
காணும் யாவினுள்ளும்
மினுக்கத்தை

என்று தன்னை பற்றிய சுய உணர்வை அடைந்து எழுத ஆரம்பித்த கவிஞனின் இக்கவிதைகள் தமிழ்ப்புதுக்கவிதையின் பரப்பில் ஒரு முதிரா இளம்கவிஞனின் கால்வைப்புகளாகவே இருக்கின்றன. இவற்றின் சிறப்பு என்பதே இவற்றில் உள்ள இந்த புற உலகம் உருவாக்கும் வியப்புதான்.

கங்கினுள் கசடறுத்து
சுழன்றுருகும் பொன்னென
மினுங்கும் இந்த வேனற்பொழுது

என மிக இயல்பாக அந்த தனி அனுபவத்தை மொழிக்குள் நிகழ்த்த அவ்வப்போது தாணுபிச்சையாவால் முடிகிறது. தன் மொழி உலோகமொழி என்று இயல்பாக கவிதை கண்டுகொள்கிறது.

 
உலோக மொழி
============

வெற்றிலையைக் குதப்பியபடியே
வினைபுரியும் பொன்தச்சனின்
நீட்டிய கரத்தின்
சமிக்ஞை புரியாமல்
சுத்தியல் சாமணம்
படிச்செப்பு என
எதையெதையோ
எடுத்துக் கொடுத்து
தடுமாறிக் கொண்டிருந்த
காலம்
கனல் பொருதும்
பெரும்பகல்கள் பல கடந்து
எடுத்துத் தந்ததிதை
என்ற கவிதை முதல் வாசிப்பில் நேரடியான தகவல். ஆனால் அந்த பெரும் தச்சனுக்கு  எடுத்துக் கொடுத்து எடுத்துக்கொடுத்து கற்றுக்கொண்டதுதான் எல்லாருடைய மொழியும் என்ற புரிதலில் இருந்து வெகுவாக முன்னகர்கிறது இக்கவிதை. நகைகள் வழியாகவே வாழ்க்கையை அளக்க முயலும் இக்கவிதைகள் கவிதைக்குரிய வகையில் அபூர்வமான தாவலை அடைந்து மேலே செல்லும் இடங்களும் உள்ளன. மழைத்துளி போல உள்ள கல் வைத்த தொங்கட்டானுக்காக கேட்டுக் கேட்டுச் சோர்ந்து போனவளின் காதில் தூர்ந்து விடாதிருக்க மாட்டிய வேப்பங்குச்சி மழையில் நனைகையில்

ஒடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப்போலுள்ள
மழைத்துளிகளை

இந்த வரிகளில் சங்கக்கவிதையின் நுண்மையை தொடுகிறது தாணுபிச்சையாவின் கவிதை. சிறப்பான படிமம் என்பது அனைவராலும் காணமுடிகிற அபூர்வமான ஒரு காட்சி. ஒரு காட்சியாகவே பரவசத்தை அளிப்பது. குறியீடாக விரிகையில் அர்த்தங்களை அள்ளி வைப்பது. இயற்கையை நடிக்கிறது ஆபரணம். ஏதோ ஒரு மனவெளியில் ஆபரணத்தை நடிக்கிறது இயற்கை. கவிதை வாழ்க்கையை நடிக்கிறது, ஆனால் உச்சத்தில் வாழ்க்கை கவிதையை நடிக்கவும்கூடும்.
[ 'உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்' தாணு பிச்சையா திணை வெளியீடகம். 23, பகவதி லாட்ஜ், நாகர்கோயில். குமரிமாவட்டம். 629001 ]